Sunday, March 20, 2016

எம்ஜிஆர் 100 | 25 - திரையுலகில் முடிசூடா மன்னர்! ..... தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

எம்ஜிஆர் 100 | 25 - திரையுலகில் முடிசூடா மன்னர்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. எப்போதுமே எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட்டவர் அல்ல. திரையுலகில் முடிசூடா மன்னராக இருந்தபோதும் சரி; அரசியலில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதும் சரி, அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை இருந்தபோதிலும் எதிர் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தவர் அவர். அதை விட முக்கியம், தனது கருத்தை செயல்படுத்துவதில் தானே முதலில் நிற்பார்.

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட பிறகு, அதிமுக கொடியிலேயே தனது தலைவரான அண்ணாவின் உருவத்தை பொறித்தார். 1976-ம் ஆண்டு கட்சியினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எம்.ஜி.ஆர். வெளி யிட்டார். அதிமுகவின் ‘தென்னகம்’ நாளிதழில் அந்த அறிவிப்பு வெளி யானது. ‘எனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள் அண்ணா உருவம் பொறித்த நமது கட்சியின் கொடியை பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. ‘பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்று கட்சியினருக்கு எம்.ஜி.ஆர். கூறியிருந்தாரே தவிர, அது கட்டாயம் என்று அதில் சொல்லவில்லை.

‘‘ஒருவரை ஒருவர் முன்பின் தெரியா விட்டாலும், கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொள்வதன் மூலம் அதைப் பார்த்ததும் ‘இவர் நம்ம ஆள்’ என்று அடையாளம் கண்டுகொண்டு கட்சியினரிடையே ஒற்றுமை மனப் பான்மை ஏற்படும், ஒருங்கிணைந்து செயல்பட உதவும்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். இதை ஏற்று லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொண்டனர்.

எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்புக்கு கட்சியிலேயே எதிர்ப்பும் எழுந்தது. படத் தயாரிப்பாளரான கோவை செழியன், விருதுநகர் சீனிவாசன் போன்றவர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘‘கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். இதை ஏற்பவர்கள் செய்யலாம். பச்சை குத்திக் கொள் ளாதவர்கள் அண்ணாவின் கொள் கையை விரும்பாதவர்கள் என்றோ, கட்சியில் இருக்க தகுதியில்லாதவர்கள் என்றோ கூற முடியாது’’ என்று எம்.ஜி.ஆர். விளக்கம் அளித்தார்.

இப்படி, மாற்றுக் கருத்துக்களுக்கும் ஜனநாயகரீதியில் எம்.ஜி.ஆர். மதிப்பு அளித்தார் என்பது மட்டுமல்ல; கட்சியையும் தன்னையும் கடுமையாக விமர்சித்ததால் நீக்கப்பட்ட கோவை செழியன் போன்றவர்கள் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார். தனது வழக்கமான இயல்புப்படி, தன்னை விமர்சித்தவர்களுக்கும் பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகள் கொடுத்தார்.

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம். ‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கோ, என் குடும்பத்துக்கோ அல்ல’ என்று எம்.ஜி.ஆர். எப்போதுமே செயல்பட்டதில்லை. கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியான உடனே அதை செயல்படுத்திய முதல் நபர் எம்.ஜி.ஆரேதான். சென்னை மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்துக்கு (இப்போது அந்த இடம்தான் நினைவு இல்லமாக உள்ளது) பச்சை குத்துபவரை வரவழைத்து தனது கையில் பச்சை குத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

இதில் சுவாரசியமான ஒரு விஷயம், அதிமுகவில் சேர்ந்து பிறகு கட்சி மாறிய நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் கையில் கடைசி வரை பச்சை குத்தப்பட்ட அதிமுக கொடி இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகர் விஜயகுமார் கையிலும் அந்தப் பச்சை உள்ளது.

எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படத்தின் பல காட்சிகள் கர்நாடக மாநிலம் கலசபுரா என்ற இடத் தில் படமாக்கப்பட்டன. அங்கு கதைக்கு ஏற்றபடி பாழடைந்த கட்டிடம் போல ‘செட்’ போட வேண்டும். இரண்டு, மூன்று முறை அமைத்தும் பலத்த காற்று அடித்து ‘செட்’ வீணாகிவிட்டது. காற்று சுழன்றடிக்காத இடமாக பார்த்து ‘செட் ’அமைக்குபடி எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார். காற்று அடிக்காத பகுதியாக பார்த்த இடம் ஒரு குன்று பகுதி. அந்த இடத்தில் ‘செட்’ போட வேண்டும் என்றால் அங்கு பொருட்கள் வந்து சேர ஆகும் செலவும் அதிகமாகும். எம்.ஜி.ஆர். ஆலோசித்தார்.

அந்த ஊர் மக்களின் பிரதான தொழில் கல் உடைப்பது. அங்குள்ள மக்களையும் படப்பிடிப்புக்கு வந்த தொழிலாளர்களையும் கொண்டே சிறு குன்றை உடைக்கச் செய்து, பெருங் கற்களை கொண்டு பலமான காற்றடித்தா லும் அசைக்க முடியாதபடி, பாழடைந்த வீடு போன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இதில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!

படப்பிடிப்புக்குக் குறைந்த செலவில் ‘செட்’ தயாரானது. குன்று உடைக்கப்பட்டதால் குன்றை சுற்றி ஊருக்கு வராமல் நேர்வழியில் செல்ல மக்களுக்கு பாதை கிடைத்தது. முக்கியமாக, கல் உடைப்பதன் மூலம் ஊர் மக்களுக்கு ஒரு மாதத்துக்கு வேலை கிடைத்தது.

அப்போது, நெகிழச் செய்யும் ஒரு சம்பவம். குன்றை உடைக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பலர் தடுத்தும், ‘‘விரைவில் வேலை ஆக வேண்டும், எல்லாரும் சேர்ந்து செய்தால்தான் முடியும்’’ என்று கூறி மக்களுடன் சேர்ந்து தானும் கல் உடைத்தார்.

தான் சொன்னதற்கு, தானே முன்னுதாரணமாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

- தொடரும்...

கூட்டங்களில் எம்.ஜி.ஆர். பேசும்போது ‘‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே’’ என்று கூறி மக்களின் ஆரவாரத்துக் கிடையேதான் பேச்சைத் தொடங்குவார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத் தால் சிகிச்சை பெற்றபோது, எம்.ஜி.ஆருக்கு ஏராளமான ரத்தம் செலுத்தப்பட்டது.

‘‘எனக்கு ரத்தம் அளித் தவர்கள் யார் என்று தெரி யாது; ரத்தம் கொடுத்தவர் களுக்கே கூட அது எனக்குத் தான் அளிக்கப்பட்டது என்று தெரிந்திருக்காது. யார், யார் ரத்தம் என் உடலில் கலந்திருக்கிறதோ? அத னால்தான் ‘ரத்தத்தின் ரத்த மான’ என்று குறிப்பிடு கிறேன்’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்.

ஸ்வேதா: நரிக்குறவர் சமூகத்தின் முதல் பொறியாளர் ,,,, க.சே.ரமணி பிரபா தேவி

குழந்தைகளுடன் ஸ்வேதா | படம்: ஆர்.ரவீந்திரன்.

தமிழ்நாட்டில் நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து வந்திருக்கும், முதல் பொறியியல் பட்டதாரி ஸ்வேதா. பட்டம் தனக்கு அளித்திருக்கும் பெருமையையும், கொடுத்திருக்கும் கடமையையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய பரபரப்பில் இருக்கிறார். அவர் கடந்து வந்த வழிகளைப் பற்றி அவரின் வார்த்தைகளோடு இணைந்து பயணிக்கலாமா?

"நான் படித்தது பெண்கள் பள்ளி என்பதால், பள்ளியில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. அங்கே தோழிகள் எல்லோருமே என்னை தங்கம், செல்லம் என்றுதான் கூப்பிடுவார்கள். கல்லூரியில்தான் மிகவும் பயந்தேன். தனியாகச் செல்லக் கூட பயந்த காலங்கள் அவை. கல்லூரி முடியும்போது, என் இனப் பெயரைப் பகிரங்கமாகச் சொல்லிக் கூப்பிட்டிருக்கிறார்கள். இன்றைக்கு ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று நினைத்து ஒவ்வொரு நாளும் பயந்து கொண்டிருந்தேன். கல்லூரிப் பேருந்தில் வீட்டுக்கு வரும்போது ஒரு நிறுத்தம் முன்னாலேயே இறங்கி விடலாமா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.

எங்களின் சமுதாயத்தை முன்னேற்றப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம், என் அம்மா, அப்பாவிடம் இருந்துதான் வந்தது. நரிக்குறவ இனத்தை முன்னேற்றும் முயற்சியில் ஈடுபடுபவர், எதற்காக பொறியியல் படிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அப்போது படிப்பைத் தேர்ந்தெடுப்பது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருந்தது. என் பெற்றோருக்கு, அவரின் மகள் படித்து நல்ல நிலைமைக்கு வந்து, எங்கள் இனத்துக்கே வழிகாட்ட வேண்டும் என்று ஆசை. அதனால் அப்போது பிரபலமாக இருந்த பொறியியல் படிப்பில், கணிப்பொறியியலில் சேர்த்தனர். படிப்பை முடித்த பிறகு வேலையைவிட, எங்கள் இனத்துக்காகப் போராட வேண்டியது அவசியம் என்று உணர்ந்திருக்கிறேன்.

பெற்றோர்கள் கொஞ்சமாவது படித்திருந்ததால்தான், கல்வியின் முக்கியத்துவம் அவர்களுக்கு புரிந்தது. திருச்சியை அடுத்த தேவராயனேரியில் 26 வருடங்களாக அவர்கள், நரிக்குறவர் கல்வி மற்றும் நல சங்கத்தை நடத்தி வருகின்றனர். அரசு உதவியுடன், ஆரம்பப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறோம். இதுவரை சுமார், 3000 மாணவர்கள் படிப்பை முடித்துச் சென்றிருக்கிறார்கள்.

சொந்தக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?

பள்ளியை நடத்துவதற்கே அவர்களிடம் பெரிய எதிர்ப்பு இருந்தது. 'என் பிள்ளையை வைத்து சம்பாதிக்கப் பார்க்கிறாயா?' என்றெல்லாம் என் அம்மாவைப் பார்த்துச் சொன்னார்கள். 'பெண்களைப் படிக்க வைத்தால் கெட்டுப் போய்விடுவார்கள்' என்று பயந்தார்கள். ஆனால் நிலை இப்போது மாற ஆரம்பித்திருக்கிறது.

நரிக்குறவர்களின் நிலை

பெரும்பாலான நரிக்குறவர்களின் நிலை இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. குழந்தைத் திருமணங்கள் ஓரளவுக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றன. பிள்ளைகள் குறைந்தபட்ச ஆரம்பக் கல்வியையாவது முடிக்கிறார்கள்.

ஊசி, பாசி விற்றல் ஆகிய பாரம்பரியத் தொழில் குறித்து

எங்கள் இனத்தில் யாரும் மற்றவர்களை சார்ந்து வாழ மாட்டார்கள். எங்கள் இனம் மலைப்பகுதியில் வாழ்ந்ததால், அந்த முரட்டுத்தனம் இன்னும் முழுமையாகப் போகாமல் இருக்கிறது. இதனால் யாரையும் சாராத, சுய தொழில்களை ஊக்குவிக்கிறோம். அவை குறித்த கருத்தரங்குகளும், கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன.

பொதுத் தேர்தல்

எங்களின் நிலையைப் புரிந்து உதவும் ஒரு கட்சிக்காகக் காத்திருக்கிறோம். மந்திரிகள், மக்கள் நலப் பணிகளுக்கும், தங்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல நடந்துகொள்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடத்தில் இருக்கும் எங்கள் இனத்தை, பழங்குடியினர் இனத்தில் சேர்க்கக் கோரி தொடர்ந்து போராடி வருகிறோம்.

எதிர்காலத் திட்டம்

நரிக்குறவர்கள் இடையே கல்வியின்மை இல்லை என்ற நிலை வரவேண்டும். கல்வி கற்றால்தான் அடிப்படை சுகாதாரத்தையும், நாகரிகத்தையும் அவர்களால் கற்றுக் கொள்ள முடியும். அதுவரை நானும், என்னுடைய பெற்றோர்களும் அவர்களுக்காக உழைத்துக்கொண்டுதான் இருப்போம்!"

கம்பீரமாக விடை கொடுக்கிறார் நரிக்குறவப் பெண், இல்லை பட்டதாரிப்பெண் ஸ்வேதா!

மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகளை இனி மறைக்கத் தேவையில்லை: ராஜேஷ் லக்கானி

மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகளை இனி மறைக்கத் தேவையில்லை: ராஜேஷ் லக்கானி


மறைந்த தலைவர்களின் சிலைகள், தமிழறிஞர்களின் சிலைகளை இனிமேல் மறைக்கத் தேவையில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராஜேஷ் லக்கானி இன்ரு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகள் தேர்தல் விதிப்படி மறைக்கப்பட்டு வந்தன. இதுநாள் வரை காமராஜர், அண்ணா,எம்.ஜி.ஆர் சிலைகள் மறைக்கப்பட்டு வந்தன.

இனி மறைந்த தலைவர்களின் சிலைகள், தமிழறிஞர்களின் சிலைகளை இனிமேல் மறைக்கத் தேவையில்லை.

சந்தேகம் இருப்பின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டு விளக்கம் பெறலாம்' என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்
.

பெண் எனும் பகடைக்காய்: குறுநில மன்னர்களும் பூஞ்சைக் காளான்களும் .... பா. ஜீவசுந்தரி

Return to frontpage

மலரினும் மெல்லிது காமம். மலரைவிட மென்மையான காதலைக் கைக்கொண்டு, காதலொருவனைக் கைப்பிடித்து அவன் காரியங்கள் யாவற்றுக்கும் கை கொடுத்து வாழ நினைத்த இளம் பெண் குருத்து, இன்று சிதைக்கப்பட்டு நிற்கிறது. கண்ணெதிரில் துள்ளத் துடிக்கத் தன் துணையை, ஆருயிரை பலி கடாவாக்கிவிட்டோமே என்ற குற்ற உணர்வுக்கு அந்தப் பெண்ணை ஆளாக்குகிறது சாதியச் சமூகம். காட்சி ஊடகத்தின் வழி பார்த்த நமக்கே பதறுகிறது என்றால், அந்தப் பெண்ணின் துயரத்தையும், வேதனையையும் சொற்களில் அடக்கிவிட இயலுமா? வாழ்நாள் முழுதும் நரக வேதனையல்லவா? வாழ வேண்டிய ஒரு இளைஞன் பலர் பார்க்க நடு வீதியில் துண்டாடப்படுகிறான். ஆயிரம் கற்பனைக் கோட்டைகளுடன் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க நினைத்த அவர்களுக்கு வாழ்நாள் முழுதும் துயரத்தையும் மரணத்தையும் பரிசாக அளித்திருக்கிறது சாதி. மகளின் நிலை அந்தத் தந்தைக்கு இப்போது மன மகிழ்ச்சியைக் கொடுத்துவிட்டதா? அல்லது சாதியின் பெருமைதான் நிலைநாட்டப்பட்டுவிட்டதா? பெற்ற மகளின் மன மகிழ்ச்சியைவிட மேலானதா அந்தச் சாதி? சாதியின் பெயரைச் சொல்லிச் சொல்லிக் கும்மாளமிடும் கூட்டத்துக்கும் மனிதம் கடந்தவர்களுக்கும் வேண்டுமானால் அது மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். ஆனால், பெரும்பான்மை மனித மனங்களுக்கு அது கடக்க முடியாத துன்ப நதி.

குறுநில மன்னர்களா? ஜனநாயக ஆட்சி முறையா?

தங்கள் இனம் பெருக வேண்டும், அதில் கலப்பு நிகழ்ந்துவிடக் கூடாது, அந்த இனப்பெருக்கத்தைக் கொண்டு, பெரும்பான்மைச் சமூகமாக, தங்கள் பகுதியில் குறுநில மன்னர்களைப் போலத் தங்கள் வம்சம் ஆட்சி செலுத்த வேண்டும் என்ற மனநிலையின் வெளிப்பாடாகவே இவற்றைக் கூர்ந்து நோக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் நான்கு திசைகளிலும் இருக்கும் மாவட்டங்கள்தோறும் வீங்கிப் பெருத்திருக்கும் சாதியின் ஆதிக்கமும், அதன் வீச்சும், கொக்கரிக்கும் முழக்கங்களும் அதைத்தான் பறைசாற்றுகின்றன.

பூஞ்சை மனதும் பூஞ்சைக் காளான்களும்

அந்தந்தச் சாதியைச் சார்ந்த பெண்கள் படித்தவர்களாக இருந்தபோதும், சுய சிந்தனைகளும் செயல்பாடுகளும் அற்றவர்களாக, தலையாட்டி பொம்மைகளாக இருப்பதையே சாதிய ஆண் சமூகம் விரும்புகிறது. பெண்களைப் படிக்க வைப்பதையும்கூட, அவர்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்பதையும் தாண்டி, வேலை செய்வதற்கும், பொருளாதார நலன், பலன் கருதியுமே அதில் கவனம் குவிக்கிறது. கோணலாகிப் போன தங்கள் ஆதிக்கச் சிந்தனைகளால் பெண்ணைக் கட்டிப்போட நினைக்கிறது. பூஞ்சைக் காளான்களாக மனமெங்கும் படர்ந்து கிடக்கும் சாதியச் சிந்தனை, தரங்கெட்ட சொற்களாக அதை வெளிப்படுத்துகிறது.

ஜீன்ஸுக்கும், கூலிங் கிளாஸுக்கும் மயங்கி ஆணின் பின்னால் திரிபவர்களா பெண்கள்? விளம்பரங்களும்கூட இதே உத்தியைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. சாதாரண எளிய வீட்டு உபயோகப் பொருட்களைக் காண்பித்துப் பெண்ணை ஒரு ஆணால் கட்டிப் போட்டுவிட முடியுமா? இல்லை தன்வசப்படுத்திவிடத்தான் முடியுமா? முடியும் என்கின்றன அவை. அவ்வளவு பூஞ்சையானதா பெண் மனது?

இந்தியா முழுமையுமே பல மாநிலங்களில் சாதியின் கோர முகம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்கு பலியாவது தலித் மக்களும், பெண்களும்தான். இருவரும் விளிம்பு நிலையில்தான் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ‘சாதி மதங்களைப் பாரோம்’ என்று பாரதி பாடிச் சென்ற அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் காற்றில் கரைந்து போனதன் மாயம் என்ன? பாப்பாவுக்குச் சொல்லப்பட்டவை, அவர்கள் வளர்ந்த பின் மறந்து போனதோ?

குடும்பமும் பாலியல் வன்புணர்வும்

டெல்லி மாணவி நிர்பயா பாலியல் வழக்கின் பலனாக அளிக்கப்பட்ட ஜே.எஸ். வர்மா கமிஷன் பரிந்துரைகள், பெண்களைப் பொறுத்தவரை இருளில் கிடைத்த ஒரு கைவிளக்கு என்றே கொள்ளலாம். அதன் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பல சட்டங்களிலும் பலவிதமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று கணவனே என்றாலும் மனைவியின் சம்மதம் இன்றி அவளைப் பாலியல் வன்புணர்வு செய்வதும் கிரிமினல் குற்றமே என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதை அமல்படுத்தினால் குடும்ப அமைப்பில் விரிசல் ஏற்படும்; குடும்ப உறவு முறைகள் சிதறிப் போகும் என்று நாடாளுமன்றக் குழு அறிக்கை சுட்டுகிறது.

ஆண் விருப்பும் பெண் வெறுப்பும்

பெண்ணின் உடல் நிலை, மனநிலை எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் விருப்பம் மட்டுமே முதன்மையாகக் கொண்டு நிகழ்த்தப்படும் பாலியல் வன்புணர்வுகள் பற்றி, உலக நாடுகளின் பெண்கள் பலரும் தெரிவித்திருக்கும் கருத்துகள் அதிர வைப்பவை. இந்தியா உட்பட தென் கிழக்காசிய நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளில் உள்ள

பத்தாயிரம் ஆண்களிடம் ஐக்கிய நாடுகள் சபை நடத்திய கணக்கெடுப்பு, அவர்களின் பெண் பற்றிய பார்வையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ஆண் – பெண் உறவில் பெண்ணின் சம்மதம் தேவையற்றது, கட்டாயப்படுத்தி, பெண்ணின் விருப்பமின்றி, அவளைத் துன்புறுத்தி உறவு கொள்வது தங்களின் உரிமை என்று 70 முதல் 80 சதவீத ஆண் சிங்கங்களிடமிருந்து பதில் கிடைத்திருக்கிறது. அதில் பலரும் தங்கள் கோபத்தைத் தீர்த்துக்கொள்ள, மனைவியைத் தண்டிக்க அல்லது தங்களின் சந்தோஷம் மட்டுமே முதன்மையாக என்று பலவிதமாகக் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

திருமணம் முடிந்த அன்றே, தங்கள் வெறியைத் தீர்த்துக்கொள்ளும் முனைப்புடன் ‘காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தாற் போல்’ செயல்படும் ஆண்களின் ‘வீரம்’ கண்டு பெண் அஞ்சாமல் இருக்க முடியுமா? இதுவே தொடர்கதையானால் இல்வாழ்க்கை இனிமையாகத்தான் இருக்க முடியுமா? பெண்ணின் விருப்பம் இங்கு முதன்மை இல்லையா? இதைக் காரணமாக்கியே இன்று விவாகரத்து வழக்குகளும் தொடரப்படுகின்றன. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் மலரினும் மெல்லிது காமம் என்பது இங்கு பெரும் கேள்விக்குறியாக நம் முன் நிற்கிறது.

ஜனநாயகமாகட்டும் குடும்ப அமைப்பு

குடும்ப அமைப்பு என்பதன் பெயரில்தான் பெண் மீதான அத்தனை வன்முறைகளும் பாதுகாப்பாக நான்கு சுவர்களுக்குள் இங்கு நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குடும்ப அமைப்பு மிகவும் அவசியம். அதைச் சிதைக்க வேண்டுமென்று பெண்ணியவாதிகள் யாரும் குரலெழுப்பவில்லை. ஆனால், குடும்ப அமைப்புக்குள் ஜனநாயகம் வேண்டும் என்பதைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. ஜனநாயகம் இல்லாததே ஆணவக் கொலைகளுக்கும்கூட ஒரு காரணம் என்றும் சொல்லலாம். எந்த வன்முறையையும் தீர்த்துவிடலாம், ஆனால் குடும்ப வன்முறைக்குத் தீர்வு? அனைவர் கருத்துக்கும், விருப்பத்துக்கும் மதிப்பளிக்கத் தொடங்கினாலே, குடும்பத்துக்குள் நிகழும் வன்முறைகள் குறைந்துவிடாதா என்ற நப்பாசைதான் இதை வலியுறுத்தக் காரணம்.

பெண் மீது செலுத்தப்படும் அனைத்துத் தரப்பு வன்முறைகள் பற்றி எத்தனை முறை பேசினாலும், மீண்டும் மீண்டும் அதிரவைக்கின்றன அத்தனை நடப்புகளும். ஏன் தொடர்ச்சியாகப் பெண்ணைக் குறி வைத்து அடிக்கிறார்கள்? இந்தக் கேள்வியை அனைவரும் கேட்டுக்கொண்டே இருங்கள். அப்போதுதான் தீர்வும் தெளிவும் கிட்டும்.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: asixjeeko@gmail.com

தேர்தலில் சீட் வாங்கும் ஆசையில் ரூ.1 கோடி வரை பறிகொடுத்த அதிமுகவினர் .... எல்.மோகன்


THE HINDU TAMIL

தேர்தலில் எம்எல்ஏ சீட்டுக்காக ரூ. 25 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை பணம் கொடுத்து ஏமாந்த கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் வாங்க கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. கூட்டணி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், வரும் 23-ம் தேதி பங்குனி உத்திரத்துக்கு முன், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய தொகுதிகளை தற்போது கைவசம் வைத்துள்ள அதிமுக, வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவது என்ற முடிவில் உறுதியாக உள்ளது. இதற்காக மக்கள் செல்வாக்கு மிக்க புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பணம் பரிமாற்றம்

இதற்கிடையே எம்எல்ஏவாகி விடலாம் என கனவு கண்ட அதிமுகவினர் பலர், முக்கிய அமைச்சர்கள் இருவரின் இடைத்தரகராக செயல்பட்ட மாவட்ட நிர்வாகி ஒருவர் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இரு மாதங்களுக்கு முன்பே கொடுத்துள்ளனர். தற்போது கட்சி தலைமை அவர்களை ஓரம்கட்டியுள்ள நிலையில், மாவட்டம் வாரியாக அவர்களின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரகசிய ஆய்வு

திருநெல்வேலி வரை இந்த நடவடிக்கை பாய்ந்துள்ள நிலை யில், இனி குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மீது தான் நடவடி க்கை இருக்கும் என தெரிகிறது. இதற்காக கட்சி தலைமையின் விசுவாசமானவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரகசியமாக முகா மிட்டு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

இங்குள்ள அதிமுக நிர்வாகிகளின் நடவடிக்கை, கட்சி யினரிடையே பிரிவினையை தூண்டுவோர், சுய நலத்துக்காக கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவோர் குறித்த தகவல்களை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் மூலம், முழு அறிக்கையை இவர்கள் பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து தான் அதிமுக தலைமை தற்போது குமரி மாவட்டம் பக்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பாவம் முன்னாள் எம்எல்ஏ

முக்கிய அமைச்சர்கள் ஓரம்கட்டப் படுவர் என்பதை கனவிலும் நினைக்காத நிலையில், அவர்களிடம் சீட்டுக்காக பணம் கொடுத்து ஏமாந்த அதிமுகவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இவர்களில் முதல் இடத்தில் இருப்பது, திமுகவில் எம்எல்ஏவாக இருந்து தற்போது அதிமுக வில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்தான்.

கிறிஸ்தவ நாடார் இனத்தைச் சேர்ந்த இவர், தனக்குள்ள மக்கள் பலத்தை பயன்படுத்தி எப்படியாவது ஜெயித்துவிடுவேன்.. என முக்கிய நிர்வாகியின் பின்னால் ஓராண்டுக்கும் மேலாக அலைந்து, சீட்டுக்காக காய் நகர்த்தியுள்ளார். முடிவில் நாகர்கோவில் தொகுதியை தனக்கு பெற்று தந்துவிடுமாறு கூறி, ரூ.1 கோடி வரை பணம் கொடுத்துள்ளார்.

ஒரு ரூபாயை இழந்தால் கூட, தூக்கம் கலைந்து புலம்பும் தன்மை கொண்ட அந்த முன்னாள் எம்எல்ஏ, இப்போது நிலைமை தலைகீழானதை பார்த்து பெரும் அதிர்ச்சியில் உள்ளார். பணம் இழந்த சோகத்தில் அவர் அடிக்கடி மயங்கி விழுவதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் பரிதாபமாக உள்ளது.

பேரிடியில் பேராசிரியர்

இதுபோல், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட சீட் வாங்கிவிடவேண்டும் என்ற ஆசையில், அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய ஒருவர், தனது தென்னந்தோப்பு மற்றும் சொத்துக் களை விற்று ரூ. 50 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை இழந்த அதிர்ச்சியில் இருந்து அவர் இன்னும் மீளவேயில்லை.

குளச்சல் தொகுதிக்கு சீட் வாங்குவதற்காக மீனவ பிரதிநிதி ஒருவர் ரூ. 25 லட்சம், விளவங் கோடு அல்லது பத்மநாபபுரம் தொகுதியைக் கேட்டு களியக் காவிளை பகுதியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ரூ. 40 லட்சம், தக்கலை பகுதியைச் சேர்ந்த நிர்வாகி ரூ. 35 லட்சம், கிள்ளியூர் ஒன்றியத்தைச் சேர்ந்த நிர்வாகி ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளனர்.

கல்லூரி அதிபர்

பத்மநாபபுரமோ, குளச்சலோ ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி அதிபர் ஒருவர் ரூ. 1 கோடியை அள்ளிக் கொடுத்துள்ளார். நிதி நிறுவனம் நடத்திவரும் நிர்வாகியோ ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளார். இவர்கள் பெரும்பாலும் 3-ம் இடத்தில் இருந்த வரை நம்பி பணம் கொடுத்தவர்கள். அவர் கட்சியில் ஓரம்கட்டப்பட்டதை எதிர்பார்க்காத இவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதற்கு இடைத்தரகராக செயல்பட்ட குமரி மாவட்ட முக்கிய புள்ளியிடம், கொடுத்த பணத்தில் பாதியையாவது திரும்ப வாங்கிக் கொடுக்குமாறும், அதன் பிறகு அரசியலும் வேண்டாம்.. கட்சியும் வேண்டாம்.. என்ற விரக்தியில் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சீட்டுக்காக பணம் வாங்கிக் கொடுக்க இடைத்தரகராக செயல்பட்ட அந்த முக்கிய நிர்வாகி மீது, அதிமுக தலைமையின் நடவடிக்கை எப்போதும் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், குமரி அதிமுக வட்டாரம் பெரும் பதற்றத்தில் இருக்கிறது.

சீட்டுக்காக பணம் வாங்கிக் கொடுக்க இடைத்தரகராக செயல்பட்ட அந்த முக்கிய நிர்வாகி மீது, அதிமுக தலைமையின் நடவடிக்கை எப்போதும் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவுசல்யாவின் மேற்படிப்பு செலவை ஏற்கும் இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

THE HINDU TAMIL

கவுசல்யாவின் மேற்படிப்பு செலவு முழுவதையும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஏற்றுக்கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான தங்கவேல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு கடந்த 13-ம் தேதி, கலப்புத் திருமண தம்பதி சங்கர், அவரது மனைவி கவுசல்யா ஆகியோரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த சங்கர் மருத்து வமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாய மடைந்த கவுசல்யா, கோவை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சைக்குப் பிறகு படிக்க விரும்புவதாகவும், படிக்க உதவி செய்யுங்கள் என்றும் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய ஆய்வாளர் சந்திரபிரபாவிடம் கூறினார்.

இந்நிலையில், கவுசல்யாவின் மேற்படிப்பு செலவு முழுவதையும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஏற்றுக்கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவுசல்யாவை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

டாக்டர் மாத்ருபூதம்.

[19:58, 20/3/2016] Appa: ஆன்மிகத்தையும் அறிவுபூர்வமான விஷயங்களையும் நகைச்சுவையோடு சொன்னவர் தென்கச்சி என்றால், பாலுணர்வு விஷயங்களை நகைச்சுவையோடு சொன்னவர் டாக்டர் மாத்ருபூதம். ‘என்னிடம் வருகிற நோயாளிகளை மனநல வைத்தியம் பார்த்து நல்லபடியாக மாற்றிவிடுவதால் என்னைச் சிலர் “மாத்தற பூதம்” என்பார்கள்; நிறைய மாத்திரைகள் கொடுப்பதால் இன்னும் சிலர் என்னை ” மாத்திரை பூதம்” என்பார்கள். அப்படிச் சொன்னால் உடனே நான் ” உங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, நோய் குணமாகிவிடும் என்று சொல்லி ஏமாத்தற பூதம் நான் இல்லை என்பேன்” என்று ஜோக்கடிப்பார்.

மருத்துவக் கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே அவருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம். ஒருமுறை அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது கல்லூரி நாள்களில் நடந்த நகைச்சுவையான சம்பவம் ஒன்றைக் கூறினார்.

வகுப்பில் ஒரு பேராசிரியர். எக்ஸ்-ரே ஃபிலிம் ஒன்றைக் காட்டி ஏதோ விளக்கிக் கொண்டிருந்தாராம். திடீரென்று கரண்ட் கட்.

பேராசிரியர் பாடத்தை நிறுத்தவில்லை. ஜன்னலுக்கு அருகில் எக்ஸ்-ரே ஃபிலிமைப் பிடித்துக்கொண்டு பாடத்தைத் தொடர்ந்து நடத்தினார். இடையில் திடீரென்று அவர் “ஓ! ரங்கநாதன் கார் வாங்கிட்டார்போல இருக்கே!” என்றதும் மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மாணவர் மாத்ருபூதம் சட்டென்று ” சார்! அதெல்லாம்கூடவா எக்ஸ்-ரேல தெரியும்? ” என்று கேட்க, வகுப்பில் சிரிப்பலை அடங்க வெகுநேரமானது.

விஷயம் என்னவென்றால், இந்தப் பேராசிரியர் ஜன்னல் அருகில் வைத்து எக்ஸ்-ரேவைப் பார்த்துக்கொண்டிருந்த சமயம், அங்கே சக பேராசிரியரான ரங்கநாதன் காரை ஓட்டிக்கொண்டு போயிருக்கிறார். அதை அவர் எதார்த்தமாகச் சொல்ல, மாணவர் மாத்ருபூதம் அதைக் காமெடியாக்கிவிட்டார்.

ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் இப்படி நிறைய டாக்டர் ஜோக்ஸ் சொல்லுவார் மாத்ருபூதம். சில சாம்பிள்கள்:

ஒரு டாக்டரிடம் நோயாளி : “டாக்டர்! நீங்க எமதர்மனைவிடப் பெரிய ஆள்! அவர் உயிரைமட்டும்தான் எடுப்பார்! நீங்க உயிரோட என் சொத்தையும் சேர்த்து எடுத்துக்கறீங்க!”

ஒரு டாக்டர் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று தன் கிளினிக்கில் ஓர் எலும்புக்கூட்டை மாட்டி வைத்திருந்தார். ஆனால் சீக்கிரமே அதை அப்புறப்படுத்திவிட்டார். காரணம், டாக்டரின் கிளினிக்கில் இருப்பது அவருடைய முதல் பேஷண்ட்டின் எலும்புக்கூடு என்று யாரோ வதந்தி பரப்பியதுதான்.

மனிதர்களே! மாட்டைப்போல உழையுங்கள்; நாயைப்போலச் சாப்பிடுங்கள்; பூனைபோலத் தூங்குங்கள்; முயலைப்போல ஓடுங்கள்; வருடத்துக்கு ஒருமுறை கால்நடை மருத்துவரிடம் செல்லுங்கள்!

ஒருவரது நாய்க்கு உடம்பு சரியில்லை. கால்நடை மருத்துவரிடம் கொண்டுவந்தார். நாயைப் பரிசோதித்த டாக்டர் “நாய் செத்துப் போய்விட்டது” என்றார். நாயின் எஜமானர் நம்பவில்லை. உடனே டாக்டர் அடுத்த அறைக்குப்போய் ஒரு பூனையைக் கொண்டுவந்தார். நாயின் முகத்துக்கு அருகே விட்டார். “பூனை வாசனை தெரிந்தால் நாய் உடனே குரைக்க ஆரம்பித்துவிடும்! உங்க நாய் சும்மா இருக்கிறது; இப்போதாவது நாய் செத்துவிட்டது என்பதை நம்புகிறீர்களா?” என்றார்.

சோகமான நாயின் சொந்தக்காரர் புறப்பட்டார். அவரிடம் 200 ரூபாய் ஃபீஸ் கேட்டார் டாக்டர்.

“நாய் செத்துப்போனதாகச் சொன்னதற்கு 200 ரூபாயா?” என்று அவர் கேட்க, டாக்டரது பதில்: ”என் கன்சல்டேஷன் 100 ரூபாய். பூனையை வெச்சுப் பண்ணின cat scan சார்ஜ் 100 ரூபாய்.”

டாக்டர் மாத்ருபூதத்தின் “புதிரா? புனிதமா?” என்ற நிகழ்ச்சி தமிழ் சேனல்களில் ஒரு புது முயற்சியாக இருந்தது. பாலுணர்வு குறித்த சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி அது. விஜய் டி.வி.யில் ஒளிபரப்பானது. ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவே அந்த நிகழ்ச்சி ரொம்பப் பிரபலமாகிவிட்டது.

இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாத்ருபூதம் நன்றாகப் பாடுவார். ”புதிரா? புனிதமா” நிகழ்ச்சியில்கூட இடையிடையே பழைய தமிழ் சினிமாப் பாடல்களையும் கர்நாடக இசைக் கீர்த்தனைகளையும்கூட அவர் பாடியதுண்டு.

நடிகர் – எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர் டாக்டர் மாத்ருபூதத்துக்கு ஒரு பட்டம் கொடுத்தார். என்ன பட்டம் தெரியுமா?

தமிழ்நாட்டின் வயாக்ரா!
[20:13, 20/3/2016] Appa: புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. “சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்று மனைவி கேட்க, “அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.

(டாக்டர் மாத்ருபூதம் அவர்களின் புன்னகைப் பூக்கள் என்ற  புத்தகத்திலிருந்து)

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...