Wednesday, March 23, 2016

'ரூ. 10 லட்சம் கொடுக்கறேன்னு சொல்லியும் கேக்கலை!'- கவுசல்யாவின் தந்தை வாக்குமூலம்!

'ரூ. 10 லட்சம் கொடுக்கறேன்னு சொல்லியும் கேக்கலை!'- கவுசல்யாவின் தந்தை வாக்குமூலம்!


கோவை: "சங்கருக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறதா சொல்லியும், அவன் என் பொண்ணை விட மறுத்துட்டான். என் பொண்ணும் என் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கு அப்புறம்தான் ரெண்டு பேரையும் கொலை செய்ய முடிவு செஞ்சேன்," என போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் கெளசல்யாவின் தந்தை சின்னசாமி.
உடுமலையில் காதலித்து கலப்பு திருமணம் திருமணம் செய்து கொண்ட சங்கர் - கெளசல்யா தம்பதியினர், கடந்த 13-ம் தேதியன்று பஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி வீழ்த்தப்பட்டனர். இதில் கணவர் சங்கர் பரிதாபமாக இறந்தார். கவுசல்யா படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனது தந்தை, தாய், மாமாதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என கவுசல்யா போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து  14-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த கெளசல்யாவின் தந்தை சின்னசாமியை கைது செய்தனர் போலீசார்.
7 நாட்களுக்கு பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னசாமியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தான்தான் இந்த கொலையை செய்ய சொன்னதாக சின்னசாமி ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

"எனது மகள் கீழ் ஜாதியைச் சேர்ந்த பையனை கல்யாணம் பண்ணிகிட்டது எனக்கு ரொம்ப அவமானமா போச்சு. என் பொண்ணு மேல எனக்கு ரொம்ப பாசம் ஜாஸ்தி. எப்படியாவது வந்துடுனு கெஞ்சி பாத்தேன். மிரட்டியும் பாத்தேன். கவுசல்யாவோட அம்மாவ விட்டு கூட மிரட்டி பார்த்தேன். எதுவும் நடக்கலை. அந்த பையனுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறேன். நீ வாங்கிட்டு போயிடு என் பொண்ணை என்கிட்ட விட்டுடுனு சொன்னேன். அவனும் கேக்கலை. ரெண்டு பேரும் பிடிவாதமா இருந்தாங்க. 

இன்னொரு பக்கம் எனக்கு என் சொந்த பந்தங்க கிட்ட ரொம்ப கேவலமா போச்சு. எங்கே போனாலும் என்னை அவமானப்படுத்துனாங்க. அதனாலதான் இந்த முடிவுக்கு வந்தேன். ஜெகதீசன்கிட்ட இதைப்பத்தி சொன்னேன். என் பொண்ணை கூப்பிட்டு வா. வரலைனு சொன்னா அவளையும் கொன்னுடுனு சொன்னேன்." என சின்னசாமி கூறியதாக விவரிக்கின்றனர் போலீசார்.
இதற்கிடையே பல்லடம் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜரான கவுசல்யா, நடந்தவை குறித்து ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதால் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் கெளசல்யாவின் தாயார், மாமா உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேற்கூறிய திருமணங்களை நாடக காதல் என்றும், பணம் பறிக்கும் முயற்சி என்றும் சில சாதி அமைப்புகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பல லட்சம் பணம் கொடுப்பதாக சொல்லியும், சங்கர் மறுத்ததாக கெளசல்யாவின் தந்தை அளித்துள்ள வாக்குமூலம் முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.

- ச.ஜெ.ரவி

தலப்பாகட்டி பிரியாணி கடையின் மனிதநேயம்...!' -நெகிழும் 'செப்டிக் டேங்க்' தொழிலாளி

தலப்பாகட்டி பிரியாணி கடையின் மனிதநேயம்...!' -நெகிழும் 'செப்டிக் டேங்க்' தொழிலாளி

vikatan.com
னவரி 19-ம் தேதி காரப்பாக்கம், தலப்பாகட்டி பிரியாணி கடையில் நடந்த கழிவுநீர்த் தொட்டி சுத்திகரிப்பு பணியின்போது நான்கு பேர் பலியான சம்பவத்தை அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது. இதில், உயிர் பிழைத்த ஒரே நபர் விஜயகுமார் என்ற தொழிலாளிதான். எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போய்ப் படுத்த படுக்கையாக இருக்கும் விஜயகுமாரை நேரில் சந்தித்து உதவிக்கரம் நீட்டியுள்ளது தலப்பாகட்டி நிர்வாகம்.
நுரையீரலில் ஓட்டை விழுந்து, மூச்சு விடுவதற்குக்கூட சிரமப்பட்ட நிலையில் படுக்கையில் கிடக்கிறார் விஜயகுமார். தலப்பாகட்டி பிரியாணி கடையில் நடந்த சம்பவம், அவரது வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது.
சென்னை, கண்ணகி நகர் குடியிருப்பில் வசித்து வரும் விஜயகுமாரை சந்திக்கச் சென்றேன். ஏற்கனவே, நடந்த ஒரு விபத்தில் கைவிரல் அனைத்தையும் இழந்த மாற்றுத் திறனாளி இவர். கட்டிலில் படுத்துக் கொண்டே நம்மை வரவேற்றார்.
" என் மனைவி அடையாறுல ஒரு வீட்டுல வேலைக்குப் போயிட்டு இருந்தா. என்னால நடக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னதும், என்னை கவனிச்சிட்டு இருக்கா. ஒரு பையன். ஒரு புள்ளை. ரெண்டு பேரும் ஸ்கூலுக்குப் போயிட்டு இருக்காங்க. எல்.பி ரோடு பக்கத்துல இருக்கற மரக் கடையில வேலை பார்த்துட்டு இருந்தேன். திடீர்னு ஒருநாள் மரம் அறுக்கும்போது என் வலது கைவிரல் நாலும் மிஷின்ல சிக்கிடுச்சு. கை மூளியாப் போச்சு. அப்புறம் என்னைக் காதலிச்ச அம்முவைக் கல்யாணம் பண்ணிகிட்டேன். எதாவது வேலை செஞ்சு பொழைச்சே ஆக வேண்டிய கட்டாயம். மெட்ரோ வாட்டர் போர்டு கழிவுநீர் சுத்தம் பண்ற லாரியில கிளீனரா வேலைக்குப் போயிட்டு இருந்தேன். சாக்கடைக்குள்ள இறங்கி சுத்தம் பண்றதுதான் முழு நேர வேலை. ஒருநாளைக்கு 300 ரூபாய் கிடைக்கும். அடிக்கடி, தனியார் ஓட்டல், ஆஸ்பத்திரியில இருக்கற செப்டிக் டேங்குகளை கிளீன் பண்ற வேலைக்குப் போவேன்.

அப்படித்தான், என்னோட வேலை பார்த்த குமார், அவர் அண்ணன் சரவணன், முருகன்னு மூணு பேரும் தலப்பாகட்டி ஓட்டல் செப்டிக் டேங்க்கை கிளீன் பண்ணக் கூட்டிட்டுப் போனாங்க. அந்த செப்டிக் டேங்க் பதினைந்து அடி நீளம், பத்து அடி ஆழத்துல இருந்துச்சு. ஒரே ஒரு மேன் ஹோல்தான் இருந்துச்சு. வேற பாதையே இல்லை. சரியான இருட்டு. டேங்க்ல இருந்த பத்தாயிரம் லிட்டர் கழிவுத்தண்ணியை லாரியில நிரப்பி அனுப்பினோம். ஒரு கையால கயித்தைப் பிடிச்சு தொங்கிட்டே ரெண்டு காலாலயும் செப்டிக் டேங்க் சுவத்தை சுத்தம் பண்ணிட்டு இருந்தேன். அதுக்குள்ள கயிறு கட்டிட்டு சரவணனும், குமாரும், முருகனும் உள்ள இறங்கிட்டாங்க. சாக்கடைத் தண்ணியை காலால கிளறிட்டே இருந்தாங்க. உள்ள இருந்து முட்டை வடிவத்துல இருந்து கேஸ் வெடிக்க ஆரம்பிச்சது. நாத்தம் தாங்க முடியாம உள்ள விழுந்துட்டேன். அஞ்சு நாள் கழிச்சுத்தான் முழிச்சுப் பார்த்தேன். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில வச்சிருந்தாங்க. இனிமேல் ஏதாவது வெயிட்டான பொருளைத் தூக்குனா ஆயுசு அவ்வளவுதான்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. அதே இடத்துல என்னோட வந்த நாலு பேரும் உள்ள விழுந்து செத்துப் போயிட்டாங்கன்னு தகவல் சொன்னாங்க. அவங்க குடும்பத்துக்கு பத்து லட்ச ரூபாயை தலப்பாகட்டிகாரங்க கொடுத்தாங்க. எனக்கு எதாவது உதவி செய்தால் நல்லாயிருக்கும்னு விகடன்ல சொன்னேன். அதுல வந்த செய்தியைப் பார்த்துட்டு தலப்பாகட்டி ஓனர் என்னைப் பார்க்க வந்தார் " எனச் சொல்ல,

அடுத்துப் பேசினார் அவரது மனைவி அம்மு, " எங்களுக்கு ரேஷன் கார்டுகூட இல்லை. சோத்துக்குக் கஷ்டப்படறோம்னு விகடன்ல செய்தி வந்த மறுநாள் ஓட்டல்காரங்க வந்தாங்க. ' உங்க குடும்பத்துக்கு இப்படியொரு நிலை வந்திருக்குன்னு செய்தியைப் பார்த்துத்தான் தெரிஞ்சுகிட்டோம். எங்ககிட்ட வந்து சொல்லியிருந்தா, கண்டிப்பாக உதவி செஞ்சிருப்போம்'னு சொல்லிட்டு, என் பொண்ணு, பையன் பேர்ல ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் பிக்சட் டெபாசிட்டும், என் பேர்ல அம்பதாயிரத்துக்கு டெபாசிட்டும் பண்ணிட்டு பத்திரத்தைக் கொடுத்தாங்க. இப்படி திடீர்னு வந்து உதவி பண்ணுவாங்கன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. எங்க தலையெழுத்து இவ்வளவுதான்னு அழுதுட்டு இருந்தோம். தனியார் முதலாளிகள்னா, எதுவும் பண்ண மாட்டாங்கன்னு தப்பா நினைச்சுட்டோம். அவ்வளவு அணுசரனையாக பேசினாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்குங்க" என்றார் நெகிழ்ச்சியான குரலில்.
ஊரெல்லாம் கடை பரப்பி பிரியாணி வாசத்தை மணக்கச் செய்யும் தலப்பாகட்டி நிர்வாகம், ஒரு தொழிலாளியின் வாழ்விலும் வசந்தத்தைப் பரப்பியதை வரவேற்போம்.

-ஆ.விஜயானந்த்
படங்கள்: தி.ஹரிகரன்

எம்ஜிஆர் 100 | 26 - படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி!

எம்ஜிஆர் 100 | 26 - படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி!

THE HINDU TAMIL

M.G.R. ஒரு காரியத்தில் இறங்கினார் என்றால் என்ன இடையூறு வந்தாலும் அதை முடிக்காமல் விடமாட்டார். அதற்கு மிகப் பெரிய உதாரணம் அவர் முதன் முதலில் தயாரித்து, இயக்கி, நடித்து பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படமான ‘நாடோடி மன்னன்’.

‘மலைக்கள்ளன்', ‘அலிபாபாவும் 40 திருடர்களும்', ‘மதுரை வீரன்', ‘தாய்க்குப் பின் தாரம்' என்று வெற்றிப் படிகளில் ஏறி புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக பல் வேறு படவாய்ப்புக்கள் காத்திருந்தன. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தனது முழு கவனத்தையும் ‘நாடோடி மன்னன்’ படம் எடுப்பதில் திருப்பினார் எம்.ஜி.ஆர்.! அது ஏன் என்பதற்கான விளக்கமும் கொடுத்தார்.

‘‘நான் சொந்தத்தில் ‘நாடோடி மன்னன்’ படத்தை ஏன் ஆரம்பித்தேன்? எனக்காக எத்தனையோ படங்கள் காத்திருக்கும் நேரத்தில் அதில் நடித்து முடித் தாலே வாழ்க்கைக்கு தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாம். ஆனால், ‘நாடோடி மன்னன்’ ஒரு பரி சோதனை முயற்சி. என் விருப்பப்படி செய்து அதற்கு மக்களின் பதில் என்ன? என்று எதிர்பார்க்கிறேன்’’ என்றார் எம்.ஜி.ஆர்.

‘நாடோடி மன்னன்’ படத்துக்கான கனவு 20 வயதிலேயே எம்.ஜி.ஆரின் மனதில் கருக்கொண்டது. படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொல் கத்தா சென்ற எம்.ஜி.ஆர்., அங்கு ‘இஃப் ஐ வேர் கிங்’ என்ற படத்தைப் பார்த்தார். இந்தப் படமே எம்.ஜி.ஆர். மனதில் விதை யாய் விழுந்து விருட்சமாக வளர்ந்தது. அதன் விளைவுதான் ‘நாடோடி மன்னன்.’

படத்துக்காக பணத்தை பணம் என்று பார்க்காமல் எம்.ஜி.ஆர். செலவழித்தார். சில நேரங்களில் அவரது அண் ணன் சக்ரபாணியே கவலைப்படும் அள வுக்கு கடன் வாங்கி செலவு செய்தார். காட்சி களின் பிரம் மாண்டத்துக்கு மட்டுமல்ல; படத்தில் பணி யாற்றும் நடிகர்களுக் கும் தொழிலாளர் களுக்கும் தாராள மான சம்பளமும் வழங்கப்பட்டது.

படப்பிடிப்பு குழுவினர் விரும்புவதை சாப்பிடுவதற் காக படப்பிடிப் பின்போது மினி ஓட்டலையை எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்து விட்டார். அந்தக் காலத்தில் பணக்காரர் கள் மட்டுமே குடிக்கும் ‘ஓவல்டின்’ என்ற பானம் பெரிய அண்டாக்களில் வைக்கப்பட் டது. முதன்முதலாக பல தொழிலாளர்கள் ‘ஓவல்டின்’ குடித்ததே அப்போதுதான்.

படம் முடிந்த பிறகு ‘‘வெற்றியோ, தோல்வியோ அது மக்கள் தீர்ப்பைப் பொறுத்தது. படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி’’ என்று சர்வ சாதாரணமாக சொன்னார் எம்.ஜி.ஆர்.

மக்கள் எம்.ஜி.ஆரை மன்னனாக்கி னர். அதுவரை வெளியான படங்களை வசூலில் புரட்டிப் போட்டு அமோக வெற்றி பெற்றது ‘நாடோடி மன்னன்’. 19 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து எம்.ஜி.ஆர். நிஜமாகவே முடிசூடியதற்கு கால்கோள் நடத்தியது ‘நாடோடி மன்னன்’.

மதுரையில் பல லட்சம் மக்கள் முன் னிலையில் நடந்த வெற்றி விழாவைத் தொடர்ந்து சென்னையிலும் 30.11.1958ல் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் பேரறிஞர் அண்ணா தலைமையில் வெற்றி விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு வீரவாளை அண்ணா பரிசளித்தார்.

இந்தக் கூட்டத்தில்தான், ‘‘மரத்தில் பழுத்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலரும் எதிர்பார்த்திருக்க, நல்லவேளையாக அந்தக் கனி என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆரை பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வது போலாகும்’’ என்று அண்ணா பேசினார்.

‘நாடோடி மன்னன்’ பற்றி குறிப்பிடும் போது நடிகை பானுமதி பற்றி சொல்லி யாக வேண்டும். நடிப்பு, தயாரிப்பு, இசை, இயக்கம் என்ற பன்முகத்திறமை கொண்டவர் பானுமதி. ‘மலைக்கள்ளன்’, ‘மதுரை வீரன்’ என்று ஏற்கெனவே வெற்றி பெற்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கு பானுமதியே ஜோடி. ‘நாடோடி மன்னன்’ படத்திலும் அவரையே நாயகியாக நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் செய்தார்.

பானுமதி அந்தக் காலத்திலேயே சுதந்திரமாக செயல்படும் நடிகை. எம்.ஜி.ஆரும் அப்படியே. தான் விரும்பு கிறபடி காட்சிகள் வரும்வரை எம்.ஜி.ஆர். விடமாட்டார். அதனால்தான் இன்றும் அவர் படங்களை ரசிக்க முடிகிறது. எம்.ஜி.ஆர். மீண்டும் மீண்டும் காட்சி களை எடுப்பது பானுமதிக்கு பிடிக்கவில்லை. ‘‘எடுத்த காட்சிகளையே எத்தனை முறை எடுப்பீங்க?’’ என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்டார்.

சக நடிகையின் ஒத்துழைப்பு இப்படி இருக்கும்போது கோபம் வந்தாலும், எம்.ஜி.ஆர். அமைதியாகவே பதில் சொன்னார், ‘‘படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி, இயக்குநரும் நான்தான். என் இயக்கத்தில் நடிக்க விருப்பம் இருந்தால் நடிங்க. இல்லைன்னா விட்டுடுங்க.’’ இதைத் தொடர்ந்து, படத்தில் இருந்து விலகிக் கொண்டார் பானுமதி. பிறகு, அவர் இறப்பது போல காட்சிகள் மாற்றப்பட்டு நடிகை சரோஜா தேவியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவரின் திறமையை எம்.ஜி.ஆர். மதிப்பார். படத்தில் இருந்து பாதியில் விலகினாலும் சென்னையில் நடந்த வெற்றி விழாவுக்கு பானுமதியையும் பெருந்தன்மையுடன் அழைத்து, அவருக் கும் விருது வழங்கினார் எம்.ஜி.ஆர்.

அதன் பின்னரும், எம்.ஜி.ஆர். - பானுமதி நடிப்பில் ‘ராஜா தேசிங்கு’, ‘கலை அரசி’, ‘காஞ்சித் தலைவன்’ ஆகிய படங்கள் வெளியாயின.

பன்முகத் திறமை மிக்க பானுமதிக்கு தமிழக அரசின் சார்பில் அதுவரை ‘கலைமாமணி’ பட்டம் வழங்கப்படாததை அறிந்த எம்.ஜி.ஆர், தான் முதல்வராக இருந்தபோது ‘கலைமாமணி’ விருதை பானுமதிக்கு வழங்கி கவுரவித்தார்.

எம்.ஜி.ஆர். நல்ல இசை ஞானம் உடை யவர். ‘நாடோடி மன்னன்’ படப்பிடிப்பின் போது ஒருநாள், இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடுவுடன் பாடல் களுக்கான இசையமைப்பு பற்றி எம்.ஜி.ஆர். ஆலோசித்துக் கொண்டிருந் தார். அப்போது, ‘‘நீங்கள் இசையமைப் பில் எல்லாம் தலையிட வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டார் பானுமதி. இசை பற்றி எம்.ஜி.ஆருக்கு பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்காது என்ற எண்ணம் பானுமதிக்கு.

எம்.ஜி.ஆருக்கு நினைவாற்றல் அபா ரம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எதை யும் மறக்க மாட்டார். பானுமதி கேட்ட கேள்விக்கு, 27 ஆண்டுகளுக்குப் பின் முதல்வராக இருந்தபோது செயல்வடி வில் அவருக்கு பதிலளித்தார் எம்.ஜி.ஆர்.

தமிழக அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக பானுமதியை எம்.ஜி.ஆர். நியமித்தார். பின்னர், அந்த பதவியின் அந்தஸ்து மேம்படுத்தப்பட்டு இயக்குநர் மற்றும் முதல்வராக பானுமதி பதவி வகித்தார். 2005-ம் ஆண்டு பானுமதி மறைந்த தினம், எம்.ஜி.ஆர். நினைவு நாளான டிசம்பர் 24-ம் தேதி.

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்ட 33 திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. எந்த கருப்பு வெள்ளை படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. பெங்களூரிலும், இலங்கையிலும் தலா ஒரு திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் வெள்ளி விழா படம் என்பதோடு, ரூ.1 கோடி வசூல் செய்த முதல் தமிழ்படம் என்ற பெருமை பெற்றது ‘மதுரை வீரன்.’

- தொடரும்...

மதிப்பெண் மனஅழுத்தம்!

மதிப்பெண் மனஅழுத்தம்!
By ஆசிரியர்
First Published : 18 March 2016 12:40 AM IST
மார்ச் 14-ஆம் தேதி நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பிளஸ்2 கணிதத் தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்; பெற்றோர்கள் மனக்கொதிப்பில் இருக்கிறார்கள்; புகார்கள் குவிந்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும்போது, அதிக கரிசனம் காட்டப்படும் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்திருப்பது ஓரளவு ஆறுதல் தந்தாலும், இந்த வினாத் தாள் மூலம் மாணவர்கள் அடைந்திருக்கும் மனஅழுத்தம் நீங்கியபாடில்லை.

மாணவர்களின் கண்ணீர் போதாதென்று, அரசியல்வாதிகளும் சேர்ந்து கொண்டுவிட்டனர். இந்த கணிதத் தேர்வு வினாத்தாள் பாட்னாவில் முன்னதாகவே வெளியாகிவிட்டதாகவும், கட்செவிஅஞ்சலில் (வாட்ஸ்ஆப்) அனைவருக்கும் கிடைத்ததாகவும், தென்னிந்திய மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டார்கள் என்பதாகவும் மக்களவையில் உறுப்பினர்கள் ஆவேசமாகப் பேசியுள்ளனர். மத்திய அரசும் இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

இருப்பினும், சி.பி.எஸ்.இ. கல்வி நிர்வாகம் இதை மறுத்துள்ளது. கட்செவிஅஞ்சலில் வெளியானதாகக் கூறப்படும் வினாத்தாளில் இடம்பெற்றிருந்த இரண்டு கேள்விகள் மட்டுமே, மார்ச் 14-ஆம் தேதி தேர்வுக்கான கேள்வித்தாளுடன் ஒத்திருப்பதாகவும், இது தற்செயலானது என்பதோடு, இந்தக் கேள்விகள் பிளஸ்2 மாணவர்களின் கணிதப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பவை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற பொறியியல் கல்லூரிகளில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சேர்வதற்கு கணித மதிப்பெண் ஒரு தடையாக இருக்கப்போவதில்லை. ஏனெனில், இந்த மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெறுவதன் மூலம் அங்கே இடம் பெற்றுவிட முடியும்.

ஆனால், சி.பி.எஸ்.இ. பயிலும் எல்லா மாணவர்களுக்கும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி.களில் இடம் கிடைத்துவிடுவதில்லை. சி.பி.எஸ்.இ. மாணவர்களில் பலரும், குறிப்பாக தமிழகத்திலேயே உயர்கல்வியைத் தொடர்கின்றனர். "கட்-ஆஃப்' மதிப்பெண் அடைவதில் கணித மதிப்பெண் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கணித மதிப்பெண் குறையக் குறைய அவர்கள் "கட்-ஆஃப்' மதிப்பெண்ணில் பின்தங்கி, கலந்தாய்வில் கடைசியாக இடம்பெறுவர். ஆகவேதான், பொறியியல் படிப்பு வாய்ப்பு அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. மாணவர்களும் பெற்றோரும் கவலைப்படுகின்றனர்.

இதுபோல ஒரு கடினமான வினாத்தாள் தமிழகக் கல்வித் துறை நடத்தும் பிளஸ்2 தேர்வில் இடம்பெற்றிருந்தால் என்னவாகியிருக்கும்? பெற்றோரும் மாணவர்களும் தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தியிருப்பார்கள்; அரசியல் கட்சிகளும் சேர்ந்து கொண்டிருக்கும்; மறுதேர்வு நடத்தும்படி செய்திருப்பார்கள். ஆனால், சி.பி.எஸ்.இ. மீண்டும் இத்தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பது சந்தேகமே.

கணிதத் தேர்வினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தம், அடுத்துவரும் தேர்வுகளை எதிர்கொள்வதில் ஏற்பட்டுள்ள மனத்தடைகள் என யாவற்றையும் பார்க்கும்போது, தற்போதைய கல்வி முறை கேள்விக்குரியதாகிறது. இரண்டு ஆண்டுகள் கல்வி பயிலும் ஒரு மாணவரின் வெற்றித் தோல்வியை ஒரேயொரு பாடத்தின் வினாத்தாள் மூலம் தீர்மானிப்பது சரியான முறையல்ல.

வளரிளம் பருவத்தை எட்டும் மாணவர்களின் ஆர்வம், உள்ளார்ந்த இலக்கு, விருப்பம் எல்லாமும் மாறுகிறது. சில மாணவர்கள் கணிதத்தில் புலிகளாக மாறுகிறார்கள். சிலர் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் புலமைப் பெறுகிறார்கள். இவர்களுக்கு ஏதாவது ஒரு பாடம் ஈர்ப்பில்லாமல் போய்விடுகிறது. அந்த ஒரு பாடத்தில் மட்டும் அவர்கள் சரியாக தேர்ச்சி பெறுவதில்லை. ஒரு பாடத்தில் ஒரு மாணவரால் சிறப்பாக எழுதி தேர்ச்சி பெற முடியவில்லை என்றால், அவர் தோல்வியுற்றவராகக் கருதுவதை இன்னமும் எத்தனைக் காலத்துக்குத் தொடரப் போகிறோம்? மேலைநாடுகளில் மாணவர்கள் அவரவருக்கு விருப்பான பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

தமிழகத்தைப் பொருத்தவரை, கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருப்பது கணிதமும் ஆங்கிலமும்தான். தற்போதைய கல்விமுறைப்படி 10-ஆம் வகுப்பு வரை கணிதம், ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும். மேனிலைப் பள்ளியில்தான் ஒரு மாணவர் கணிதம், அறிவியல் அல்லாத பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யும் வசதி உள்ளது. அங்கும்கூட, ஆங்கிலத்திலிருந்து தப்பித்தல் சாத்தியமில்லை. இத்தகைய கல்விமுறை மாணவர்களை வடிகட்ட உதவுமே தவிர, மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் ஊக்குவிப்பதாக அமையாது.

எட்டாம் வகுப்புவரை மாணவர்கள் கல்வியை எளிமையாகவும், விளையாட்டாகவும், மதிப்பெண்கள் குறித்த கவலையில்லாமலும் பயின்று முடிக்க வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகளை அவர்களே தேர்வு செய்துகொள்ள வாய்ப்பு தர வேண்டும். அவர்கள் விரும்பித் தேர்வு செய்யும் பாடங்களில் ஒவ்வோர் ஆண்டும் நுட்பமான, கடினமானப் பகுதிகளைப் புகுத்திக்கொண்டே போகும்போது, விருப்பமான பாடம் என்பதால் அவர்களும் அதை எளிமையாகக் கடந்து வருவார்கள்.

எல்லாரும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும்தான். ஆனால், சிறந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. பள்ளியில் படித்தவற்றை ஒருவர் மறந்த பின்னர் மிச்சமாக இருப்பதுதான் கல்வி (Education is what remains after one has forgotten what one has learned in school)  - என்கிறார் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நம் பள்ளிக் கல்வியின் மிச்சம் எது? மதிப்பெண் மட்டும்தானா?

நமது கல்வி முறையில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மதிப்பெண் மாயையிலிருந்தும் மனஅழுத்தத்திலிருந்தும் மாணவர்களைக் காப்பாற்ற முடியும்.

ஓட்டு போட்டால் குலுக்கலில் பரிசு:கேரளாவில் தேர்தல் கமிஷன் அதிரடி

ஓட்டு போட்டால் குலுக்கலில் பரிசு:கேரளாவில் தேர்தல் கமிஷன் அதிரடி
DINAMALAR

பத்தனம்திட்டா : கேரளாவில், ஓட்டுப்பதிவு குறைவதை தடுக்கும் வகையிலும், வாக்காளர்களிடையே ஓட்டு போடும் ஆர்வத்தை துாண்டும் வகையிலும், குலுக்கல் நடத்தி பரிசு வழங்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
வாக்காளர்களை கவருவதற்காக, அரசியல் கட்சிகள், இலவச பொருட்கள், அன்பளிப்பு, பணம் கொடுத்து வருகின்றன. இப்போது, வாக்காளர்களை வழிக்கு கொண்டு வர, தேர்தல் கமிஷனும், பரிசுத் திட்டத்தில் இறங்கியுள்ளது. படித்தவர்கள் அதிகம் வசிக்கும் கேரள மாநிலத்தில் தான் இந்த கூத்து. இங்குள்ள பத்தினம்திட்டா மாவட்டம், அதிக அளவு மலைப்பகுதி நிறைந்த இடமாகும். தேர்தலில் ஓட்டு போட இங்குள்ள வாக்காளர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை.

மாநில அளவில், 75 சதவீத ஓட்டுகள் பதிவாகும் நிலையில், இங்கு, 65 சதவீதத்தை தாண்டுவதே பெரும்பாடாக உள்ளது. அதுவும், மலைப்பகுதியைச் சேர்ந்த, 100 ஓட்டுச்சாவடிகளில் மிக மிக குறைந்த அளவு ஓட்டுகள் தான் பதிவாகின்றன. இதையடுத்து, மே மாதம், 16ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், ஓட்டுப்பதிவு சதவீதத்தை எப்படியும் அதிகரித்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன், கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஹரிகிஷோர் களமிறங்கியுள்ளார்.

மிக குறைவாக ஓட்டுப்பதிவாகும் ஓட்டுச்சாவடிகள் மீது, சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அங்குள்ள வாக்காளர்களை ஈர்க்கும் விதத்தில், அதிரடி திட்டம் ஒன்றையும் கலெக்டர் அறிவித்துள்ளார். அதன்படி, அங்கு, ஓட்டு போடும், வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட எண் உடைய, அட்டை வழங்கப்பட உள்ளது. 'தேர்தலுக்கு பின், குலுக்கல் நடத்தி, வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்' என்றும், கலெக்டர் அறிவித்துள்ளார்.

குறள் இனிது: கூலிக்கு மாரடிக்கிறவனை வச்சிக்கிட்டு...

குறள் இனிது: கூலிக்கு மாரடிக்கிறவனை வச்சிக்கிட்டு...

சோம.வீரப்பன்

சுமார் 35 வருடங்களுக்கு முன்பு பிபிஎஃப்-ல் பணம் செலுத்துவதற்காக நாகபுரி ஸ்டேட் பாங்கின் பிரதான கிளைக்குச் சென்றிருந்தேன். பழமையான கட்டிடம், உயர்ந்த தூண்கள். மிகப்பெரிய ஹாலில் வரிசையாகக் கவுண்டர்கள். எக்கச்சக்கக் கூட்டம். 41டிகிரி வெயிலின் எரிச்சல், ஒன்றும் புரியவில்லை. யாரைக் கேட்டாலும் முறைப்பார்கள்; அல்லது விசாரணைக் கவுண்டரில் கேளுங்கள் என்பார்கள்.

பிரச்சினை என்னவென்றால் விசாரணைக் கவுண்டர் இருக்குமிடமும் யாருக்கும் தெரியவில்லை. நான் சோர்ந்து போய் கிட்டத்தட்ட மயங்கிய நிலையில் இருந்த பொழுது, சேமிப்புக் கவுண்டரில் இருந்த இளம்பெண் ஒருவர் என்ன வேண்டுமென ஆதரவாய்க் கேட்டார். நான் சொன்னதும் ‘நீங்கள் 53 ஆம் நம்பர் கவுண்டருக்குச் செல்லுங்கள். அது பின்னால் உள்ள கட்டிடத்தில் பெரிய கடிகாரம் மாட்டி இருக்கும் தூணுக்கு அருகில் உள்ளது' என இந்தியில் கூறினார். நான் மகிழ்ச்சியுடன் நடக்கத் தொடங்கியதும் பின்னால் ஒடி வந்து ‘இந்தப் பக்கம் குறுக்கு வழி உள்ளது, சீக்கிரம் போய் விடலாம்' என்றும் கைகாட்டினார்!

செய்யும் வேலையைச் சிரத்தையுடனும் மகிழ்ச்சியுடனும் செய்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களை வேலையில் வைத்து இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் தரையைத் துடைக்கும் தொழிலாளியிடம் கமல்ஹாசன் சொல்வாரே அதுபோல, ஒவ்வொரு வேலையும் முக்கியமானதே. இதையே தான் மார்ட்டின் லூதர்கிங்கும் ‘நீங்கள் தெருவைக் கூட்டும் வேலையைச் செய்தால் கூட, ஏதோ மைக்கேல் ஆஞ்சலோ ஓவியம் தீட்டுவது போலப் பெருமையுடன் செய்யுங்கள்' என்கிறார்.

பற்று இல்லாதவனை பணிக்குத் தேர்வு செய்யக்கூடாது; அப்படிப்பட்டவன் பழிக்கும் அஞ்ச மாட்டான் என்கிறது குறள்.இல்லையா பின்னே?எடுத்த வேலை ஒழுங்காக முடிந்தால் மகிழ்ச்சி அடைபவன்தானே அது சரியாய் நடக்காவிட்டால் வரும் கெட்ட பெயருக்கும் பயப்படுவான்? காலையில் எழுந்தவுடன் அலுவலகம் சென்று இதைச் செய்ய வேண்டும் அவரைப் பார்க்க வேண்டும் என்று உற்சாகமாய் உத்வேகத்துடன் இருப்பவர்கள் அவர்கள்!

செய்யும் பணியில் திருப்தி (job satisfaction) என்பது இல்லாவிட்டால், அதைப் போன்றக் கொடுமையான தண்டனை வேறு இல்லை! எனவே வேலைக்குத் தேர்வு செய்யும் பொழுது எம் கடன் பணிசெய்து கிடப்பதே எனும் எண்ணம் உண்டா என்றும் பார்ப்பது நன்று!

எந்த ஒரு வேலையையும் சிறப்பாக, செவ்வனே செய்வதில் உள்ள ஆத்ம திருப்திக்கு ஈடு இணை இல்லையே. உங்கள் உழைப்பின் உண்மையான ஊதியம் அதுவே. சற்றே சிந்தித்துப் பாருங்கள். அந்த ஆனந்தத்தை வேறு யாராலும் கொடுக்க முடியாது; உங்களிடமிருந்து யாராலும் அதைப் பறிக்கவும் முடியாது!

இக்குறளை பந்த பாசம் இல்லாதவனை வேலைக்கு எடுக்கக் கூடாதெனக் கூறுவதாகவும் பொருள் கொள்ளலாம்.உண்மை தானே, கார் ஓட்டுநர்களில் சிலர் தம் மனைவி மக்கள் புகைப்படத்தை காரில் கண்ணில் தெரியும்படி வைத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் வண்டியை கவனமாக ஓட்டுவதாக சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஷிமோகா ஆர்டிஓவில் இதை விதியாகவே ஆக்க நினைக்கிறார்களாம்!

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி (குறள் 506)

தொடர்புக்கு - somaiah.veerappan@gmail.com

வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?

வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?
DINAMALAR

சென்னை;'வங்கிகள், நாளை முதல், மார்ச், 31 வரை இயங்காது' என, வெளியான தகவலுக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சீனிவாசன் கூறியதாவது:மார்ச், 24 - ஹோலி பண்டிகை; 25 - புனித வெள்ளி; 26 - நான்காவது சனிக்கிழமை; 27 - ஞாயிற்றுக்கிழமை. இதனால், நான்கு நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில், ஹோலி பண்டிகைக்கு விடுமுறை இல்லை என்பதால், 24ல், இங்கு வங்கிகள் இயங்கும்.

பொதுத்துறையைச் சேர்ந்த, ஐ.டி.பி.ஐ., வங்கியை, தனியார் மயமாக்கும் மத்திய அரசின் செயலை கண்டித்து, மார்ச், 28ல், ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தம், ஐ.டி.பி.ஐ., வங்கியில் மட்டும் நடக்கும் என்பதால், மற்ற வங்கிகள், 28ல் வழக்கம் போல இயங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TODAY 21.12.2025