Thursday, March 24, 2016

கவுசல்யாக்களின் கதி என்ன? ....பாரதி ஆனந்த்



சாதி மாறித் திருமணம் செய்து கொண்டதற்காகத் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட இளவரசனை மறந்துவிட்டோம்... படுகொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் பற்றிய விவாதங்கள் ஓய்ந்துவிட்டன.. இப்போது பரப்பபாகப் பேசப்படும் சங்கர் கொலையும் காலத்தினால் கட்டாயம் அழிந்துவிடும்.

ஆனால், இந்தச் சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சாதியின் பிடியில் கருகிய திவ்யா, ஸ்வாதி, கவுசல்யாவின் எதிர்காலத்தைப் பற்றி நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? இன்று இவர்களது நிலைமை என்ன? வறட்டு சாதி கவுரவத்தினால் தலைக்கேறிய ஆணவத்துக்கு இரையானதைத் தவிர இவர்கள் அடைந்த பலன் என்ன?

இளவரசன் தற்கொலைக்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் இந்தச் சமூகத்தில் சுதந்திரமாக வலம்வருகின்றனர். கோகுல்ராஜ் கொலையில் சம்பந்தப்பட்ட யுவராஜ் போலீஸுக்கே சவால்விடும் அளவுக்குச் செய்த அலப்பறைகளை யாரும் மறந்திருக்க முடியாது. சங்கரைக் கொலை செய்தவர்கள் சலனமில்லாமல் சாவியை மாட்டி வண்டியைச் செலுத்தியபோது தெரிந்த சாதி வெறி இன்னும் சில நாட்களாவது மனசாட்சி உள்ளவர்களின் நினைவுகளில் நிற்கும்.

சாதிப் பெருமையை, குலப் பெருமையைக் காக்க வேண்டிய நிர்பந்தம் பெண்கள் மீது இச்சமூகத்தால் திணிக்கப்பட்டிருக்கிறது.

உயர்கல்வி, வேலை நிமித்தமாகச் சொந்த ஊரை விட்டு நகரங்களுக்குச் செல்லும் பெண் பிள்ளைகளுக்குக் குடும்பப் பெரியவர்கள் திருநீறு இட்டு ஆசீர்வதிக்கும்போது, ‘நம் குடும்ப கவுரவத்தை நீதான் அம்மா காப்பாற்ற வேண்டும்’ என்றே ஆசீர்வதிப்பார்கள். அதன் பின்னால் உள்ள அரசியல் சாதி மாறி திருமணம் என்பதைக் கனவிலும் நினைத்துவிடாதே என்பதே. அதையும் மீறி காதல் செய்ததாலேயே இன்று சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகிறார்கள் சில பெண்கள்.

இன்று தனி மரமாக நிற்கும் கவுசல்யாவின் ஒற்றைக் கோரிக்கை, தன் படிப்பைத் தொடர வேண்டும் என்பதுதான். இளவரசன் தற்கொலைக்குப் பின் தனக்கு மனநல ஆலோசனை வழங்கிய மருத்துவர்களிடம் திவ்யா தெரிவித்ததும் படிப்பைத் தொடர வேண்டும் என்ற விருப்பத்தையே.

‘படிப்பைத் தொடர உதவுங்கள்’ என கவுசல்யா முன்வைத்த வேண்டுகோளுக்கு சமூக ஊடகங்களில் வெளியான கருத்துகள் அதிர்ச்சி தருகின்றன. படிக்கும்போது காதலில் விழுந்ததற்காகக் கிடைத்த தண்டனையை அனுபவியுங்கள், உங்கள் நிலை மற்றவர்களுக்கு ஒரு பாடம் போன்ற கருத்துகளே பகிரப்படுகின்றன. வீட்டில் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு இருக்கும் என்ற பயத்திலேயே அவசரமான திருமண பந்தத்துக்கு திவ்யாவும் கவுசல்யாவும் தள்ளப்பட்டனர். ஒருவேளை அவர்கள் காதலுக்கு அவர்கள் வீடுகளில் அங்கீகாரம் இருந்திருந்தால் படிப்பை முடித்துவிட்டுத் திருமணத்தைப் பற்றி யோசித்திருப்பார்கள். எந்தத் திருமணம் தங்களைப் பிரிக்காது என நினைத்தார்களோ அதே திருமணம்தான் அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கிறது.

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் ஆகியோரைக் கொன்று தாகம் தீர்த்துக் கொண்ட சாதி வெறி திவ்யாவையும், கவுசல்யாவையும் அவர்கள் பாதையில் விட்டுவைக்குமா? சமூகத்தை நோக்கிக் கரம் நீட்டியிருக்கும் திவ்யா, கவுசல்யாக்களுக்கு நாம் செய்யப்போவது என்ன? இதற்கான பதிலில்தான் அவர்கள் வாழ்வும் எதிர்காலமும் அடங்கியிருக்கின்றன.

எம்ஜிஆர் 100 | 28 - ‘இந்தியாவின் ஹிதேகி தகஹாஷி’!

‘சிரித்துவாழ வேண்டும்’ பட பூஜையில் எம்.ஜி.ஆரை வரவேற்கிறார் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனின் மகனும் படத்தின் இயக்குநருமான எஸ்.பாலசுப்ரமணியன்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. தனக்கு கெடுதல் செய்தவர்களுக்கு கூட நன்மை செய்யும் எண்ணம் கொண்டவர். அப்படிப்பட்டவர், தனக்கு உதவி செய்தவருக்கு நன்மை செய்யாமல் விடுவாரா? அப்படி எம்.ஜி.ஆருக்கு உதவி செய்ததோடு, அவரால் உயரத்துக்குச் சென்றவர்களில் முக்கியமானவர் மணியன்.

ஆனந்த விகடன் பத்திரிகையில் பணியாற்றி வந்த மணியன், 1968-ம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி ஒரு கட்டுரை வேண்டி எம்.ஜி.ஆரை அணுகினார். அந்த நட்பு தொடர்ந்தது. வெளிநாடுகளுக்கு சென்று வந்து பயணக் கட்டுரைகளை ஆனந்த விகடனில் எழுதிக் கொண்டிருந்தார் மணியன். அந்த அனுபவத்தால் வெளிநாடுகளில் அவருக்கு தொடர்புகள் உண்டு. அந்த சமயத்தில்தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.

வெளிநாடுகளில் படம் எடுப்பதற்காக எம்.ஜி.ஆர். செல்வாரா? மாட்டாரா? ஏறத் தாழ ஒன்றரை மாதம் எப்படி எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் இருக்க முடியும்? இங்கு எவ்வளவு படங்கள் நடிக்க வேண்டியுள் ளது? அரசியல் வேறு இருக்கிறது; எம்.ஜி.ஆர். போகமாட்டார் என்று சந்தேகங்கள், வதந்திகள் றெக்கை கட்டி பறந்த நிலையில், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக வெளிநாட்டுக்கு பறக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்து விட்டார்.

1970-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி, ரசிகர்கள், பொதுமக்கள், திரையுலகினர் வாழ்த்துக்களுடன் எம்.ஜி.ஆர். ஜப்பா னுக்குப் புறப்பட்டுவிட்டார். இங்கே பல்வேறு பணிகள் இருந்தாலும் இனி யும் தாமதிக்காமல் உடனே புறப்பட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்ததற்கு முக்கிய காரணம் எக்ஸ்போ 70 கண்காட்சி. செப்டம்பர் 15-ம் தேதி யுடன் அந்த மகத்தான கண்காட்சி முடியப் போகிறது என்று செய்தி வந்தது. அதற் குள் அங்கு சென்று காட்சிகளை படமாக்கி தமிழக மக்களின் கண்களுக்கு விருந் தாக்க வேண்டும் என்ற துடிப்புதான் எம்.ஜி.ஆரை புறப்பட வைத்தது.

எக்ஸ்போ -70 கண்காட்சி உட்பட, கீழ்திசை நாடுகளில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்புகள் நடப்பதற்கு உதவியவர் மணியன். தனது குழுவின ரோடு செப்டம்பர் 5-ம் தேதி டோக்கியோ நகரின் ஹனீதா விமான நிலையம் சென்று இறங்கினார் எம்.ஜி.ஆர்.! அவரை வரவேற்க ஏராளமான தமிழர்கள் திரண்டிருந்தனர். அவர்களோடு ஜப்பா னின் தேசிய உடையான ‘கிமோனோ’ அணிந்த பெண்கள் கையில் மாலையுடன் எம்.ஜி.ஆரை வரவேற்க காத்திருந்தனர்.. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் ‘பன்சாயி...’ பாடலின் ஆரம்பத்தில் நடிகை சந்திரகலா வித்தியாசமான உடை அணிந்திருப்பாரே? அதுதான் ‘கிமோனோ'.

டோக்கியோவில் எம்.ஜி.ஆரை பார்த் தவர்களுக்கு வியப்பு. தனது வழக்கமான தொப்பி, கண்ணாடி, வேட்டி, சட்டையுட னேயே டோக்கியோவில் எம்.ஜி.ஆர். கால் பதித்தார். வரவேற்பை ஏற்றுக் கொண்டு டோக்கியோவின் பிரபல இம்பீரியல் ஓட்டலில் இரவு ஒரு மணிக்கு தான் சென்று தங்கினார் எம்.ஜி.ஆர்.

அசதி, சோம்பல், நீண்ட ஓய்வு இதெல் லாம் எம்.ஜி.ஆர். அறியாத ஒன்று. இரவு ஒரு மணிக்கு ஓட்டலுக்கு சென்று படுத் தாலும் மறுநாள் அதிகாலையிலேயே எம்.ஜி.ஆர். தயாராகிவிட்டார். செப்டம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. எக்ஸ்போ கண்காட்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. எட்டு லட்சம் பேர் உள்ளே போய் விட்டார்கள். இனிமேல் உள்ளே வர இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது. கண்காட்சிக்கு உள்ளே செல்லும் நுழைவாயில்கள் மூடப்பட்டன.

முக்கியமான அதி காரிகளை சந்தித்து கண்காட்சிக்கு உள்ளே செல்ல அனுமதி பெற்றுத் தந்தார் மணியன். அதிகாரிகளி டம் ‘இந்தோகா ஹிதேகி தகஹாஷி’ என்று ஜப்பானிய மொழி யில் ஒரு அஸ்திரத்தை வீசினார் மணியன். உடனே அனுமதி கிடைத்தது. ஜப்பானில் மக்களால் விரும்பப்படும் புகழ் பெற்ற நடிகரின் பெயர் ஹிதேகி தகஹாஷி. ‘இந்தியாவின் ஹிதேகி தகஹாஷி’ என்று எம்.ஜி.ஆர். பற்றி மணியன் கூறியது தான் அனுமதிக்கு காரணம்.

மணியனால் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு இன்னொரு பெரும் புதையலும் கிடைத் தது. ஆனந்த விகடன் இதழில் ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர். தனது வாழ்க்கை வரலாற்றை எழுதக் காரணமாக இருந்த வர் மணியன். வெளிநாடு களில் படப்பிடிப்பு நடத்த தனக்கு உதவி செய்த மணிய னுக்கு, பதிலுக்கு உதவ முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.

ஒருநாள் மாலை. சென்னை தியாக ராய நகரில் மணியன் வீட்டு வாசலில் எம்.ஜி.ஆரின் கார் சென்று நிற்கிறது. திடீரென தனது வீட்டுக்கே வந்துவிட்ட எம்.ஜி.ஆரை பார்த்து மணியனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அந்த பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்கு முன்பே, அவருக்கு அடுத்த இன்ப அதிர்ச் சியை எம்.ஜி.ஆர். அளித்தார். ‘‘வித்வான் லட்சுமணனுடன் சேர்ந்து படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்குங்கள், நான் நடிக்கிறேன்’’ என்றார் எம்.ஜி.ஆர்.

பேப்பரும் பேனாவும் கேட்டு வாங்கி, தனது கையாலேயே படக் கம்பெனியின் பெயரை யும் எழுதினார். அப்போது எம்.ஜி.ஆரால் உதய மானதுதான் ‘உதயம் புரொடக் ஷன்ஸ்’ பட நிறு வனம். அந்நிறுவனம் தயாரித்த முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயவீணை’. பின்னர், படத் தயாரிப்பாளராக மட்டுமின்றி, பத்திரிகை அதிபராகவும் உயர்ந்தார் மணியன்.

‘இதயவீணை’ படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. திமுகவின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், கட்சி நிர்வாகிகளின் சொத்து விவரம் கேட்டதையடுத்து, 1972-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி திமுகவில் இருந்து நீக்கப் பட்டார். அதுவரை புரட்சி நடிகராக இருந்தவர் புரட்சித் தலைவரானார். அப்போது, ‘இதயவீணை’ படப்பிடிப்பில் இருந்தார்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட விஷ யத்தைக் கேள்விப்பட்டு, பாயசம் கொண்டு வரச் சொல்லி எல்லாருக்கும் கொடுத்து, தானும் குடித்துவிட்டு, ‘‘இப் போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்றார். படத்தில் கார் விபத்து காட்சி ஒன்று வரும். அன்று அந்தக் காட்சியை எம்.ஜி.ஆர். சிறப்பாக எடுத்து முடித்தார்.

‘இதயவீணை’ படம் முதலில் 1972 அக்டோபர் 6-ம் தேதி வெளிவருவதாக விளம்பரம் வந்தது. இடையில் அரசியல் பரபரப்புகள் காரணமாக படம் ‘ரிலீஸ்’ தள்ளிப் போய் அக்டோபர் 20-ம் தேதி படம் வெளியானது. இடைப்பட்ட நாட் களில் அப்போதைய சூழலுக்கேற்ப அரசியல் பொடிவைத்து எழுதப் பட்ட பாடல் காட்சியைப் படமாக்கி, பொருத்தமான இடத்தில் படத் தில் சேர்த்தார் எம்.ஜி.ஆர்.

திரையில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் போது, ரசிகர்களின் அலப்பறையால் தியேட்டரே ஆடிய அந்தப் பாடல்:

‘ஒரு வாலும் இல்லே, நாலு காலும் இல்லே; சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே....’

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

‘இதயவீணை’ படத்தை தொடர்ந்து ‘உதயம் புரொடக் ஷன்ஸ்' நிறுவனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘பல்லாண்டு வாழ்க’ ஆகிய படங் களையும் மணியன் தயாரித்தார். இந்த மூன்று படங்களுமே 100 நாட் கள் ஓடி அமோக வெற்றி பெற்றன.

- தொடரும்...

மல்லையாவை பிடியுங்கள் பிறகு எங்களிடம் அபராதம் கேளுங்கள்..: பயணியின் பதிலடியால் ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி

மல்லையாவை பிடியுங்கள் பிறகு எங்களிடம் அபராதம் கேளுங்கள்..: பயணியின் பதிலடியால் ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி

Return to frontpage

தெற்கு மும்பையின் புலேஷ்வர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்லதா பன்சாலி. இரு குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை, மகாலஷ்மி ரயில் நிலையத்தில் இருந்து இறங்கிய

போது டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்டுள்ளார். அப் போது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததை ஒப்புக் கொண்ட பன்சாலி, இதற்காக ரூ.260 அபராதம் செலுத்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித் துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிக்கெட் பரிசோதகர் அங்கிருந்த ரயில்வே போலீஸார் மூலம் அவரை கைது செய்ய முயன்றார்.

இதனால் ஆவேசமடைந்த பன்சாலி, ‘‘வங்கி கடன் ரூ.9,000 கோடியை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள். அதன் பிறகு என்னை கைது செய்யுங்கள்’’ என தெரிவித்தார்.

இதனால் ரயில்வே போலீஸார், அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கிருந்த ரயில்வே பெண் போலீஸ் அவருக்காக அபராத தொகை செலுத்தவும் முன் வந்தார். எனினும் அதை ஏற்காத பன்சாலி சுமார் 12 மணி நேரம் வரை ரயில்வே அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தார்.

‘சாமான்ய மக்களை துன் புறுத்துவதை விட்டு விட்டு, மல்லையா போன்றவர்களை கைது செய்யுங்கள். எதற்காக அவர்களிடம் மட்டும் மென்மை யான போக்கை கடைபிடிக்கிறீர் கள்’ என தொடர்ந்து கேள்வி எழுப்பி யுள்ளார்.

இதனால் திகைத்த அதிகாரி கள் பன்சாலியின் கணவரை வர வழைத்தனர். ஆனால் அவரையும் அபராதம் செலுத்த விடாமல் பன்சாலி நீதிமன்றத்துக்கு சென்று தனது தவறை ஒப்புக் கொண்டார். அத்துடன் அபராதத் துக்கு பதில் 7 நாட்கள் சிறை வாசத்தையும் தேர்ந்தெடுத்தார்.

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று



1923 - மார்ச் 24 : 'கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்; உள்ளம் உருகுதையா, நான் ஆணையிட்டால், யாருக்காக, அமைதியான நதியினிலே ஓடம்...' உட்பட, தமிழக நெஞ்சங்களை உருக்கும் பாடல்களைப் பாடி, நம் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்திருப்பவர், டி.எம்.சவுந்தரராஜன். தன் குடும்பப் பெயரான, தொகுளுவா மற்றும் தந்தை பெயரான மீனாட்சி அய்யங்காருடன் இணைந்தே, டி.எம்.சவுந்தரராஜன் என்றழைக்கப்பட்டார். வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம் மற்றும் கிராமிய மணம் கமழும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2,500க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், நாகேஷ் உட்பட நடிகர்களின் முகத்தை, தன் குரலின் மூலம், ரசிகர்களின் மனக்கண்ணில் நிலை நிறுத்தும் ஆற்றல் பெற்றவர். 2013, மே 25ம் தேதி இறந்தார். பத்மஸ்ரீ டி.எம்.சவுந்தரராஜன், பிறந்த நாள் இன்று!

வெளிநாட்டு மாணவர்களை கண்காணிக்கிறது மத்திய அரசு!



வெளிநாட்டு மாணவர்களை கண்காணிக்கிறது மத்திய அரசு!
DINAMALAR

புதுடில்லி : வெளிநாட்டு மாணவர்களின் வருகை குறித்து 24 மணி நேரத்துக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பல்கலை.,களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டிலிருந்த கல்வி கற்க இந்தியா வரும் மாணவர்களின் விவரங்களை, பல்கலைகளும், கல்வி நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள், மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதேபோல், ஹோட்டல்கள், விடுதிகள், மருத்துவமனைகளுக்கு வரும் வெளிநாட்டினர் குறித்து 24 மணி நேரத்தில் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆவணப்புத்தகத்தில் வெளிநாட்டினரின் பெயர், அவர்களின் நாடு, இந்தியா வந்ததன் நோக்கம், இந்தியாவில் அவர்கள் தங்க திட்டமிட்டிருக்கும் நாட்கள், இங்கு அவர்கள் சந்திக்கும் நபர்களின் விவரங்களைச் சேகரித்து பராமரிக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, 1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பொருந்தாது என்று தனது அறிவிப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ரஷ்யாவில் கழிவறை கழுவ வைத்து கொடுமை; மருத்துவ மாணவர்கள் புகார் மார்ச் 23,2016,12:41 IST


ரஷ்யாவில் கழிவறை கழுவ வைத்து கொடுமை; மருத்துவ மாணவர்கள் புகார்
மார்ச் 23,2016,12:41 IST
DINAMALAR





மருத்துவம் படிக்க வைப்பதாக கூறி, ரஷ்யாவில் கழிவறை கழுவ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்.

கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், தேனி, தஞ்சாவூர், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களை சேர்ந்த, எட்டு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம், ஒரு புகார் மனு அளித்தனர்.


கோவை ஆர்.எஸ்.புரத்தில், ஆதாம் டிரஸ்ட் - ஆல்பா கன்சல்டன்சி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தினர், பிளஸ் 2 முடித்த மாணவர்களை, ரஷ்யாவில் குறைந்த செலவில் மருத்துவம் படிக்க வைப்பதாக விளம்பரப்படுத்தினர். கடந்தாண்டு நிறுவனத்தை அணுகினோம். அப்போதுஅட்மிஷன் செய்ய, 25 ஆயிரம் ரூபாய் கட்ட அறிவுறுத்தினர்.

ஒரு ஆண்டு உதவித் தொகையாக, 4 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், நல்ல அரசு கல்லூரியில் சீட் வாங்கி தருவதாகவும், இரண்டாம் ஆண்டு வங்கி கடன் பெற வழிவகை செய்வதாகவும் தெரிவித்தனர். இதை நம்பி, அட்மிஷன் தொகையை செலுத்தினோம். பின், அவர்களது அறிவுறுத்தலின்படி, வங்கி கணக்கில் 75 ஆயிரம் ரூபாய் செலுத்தினோம்.

ரஷ்யா கிளம்பும் ஒருநாள் முன், 1.86 லட்சம் ரூபாய் கட்ட சொல்லி வாங்கினர். இதன்பின், கடந்தாண்டு ரஷ்யா செயின்ட் பீட்டர்ஸ் பார்க் ஸ்டேட் மெடிக்கல் பல்கலையில் சேர்ப்பதாக சொல்லி ஒரு மட்டமான டியூஷன் சென்டரில் சேர்த்து விட்டனர். அங்கு 2 மணி நேரம் வகுப்பு நடத்திவிட்டு, ஒரு மருத்துவமனையில் கழிவறை கழுவவைத்தனர்; அறையை சுத்தம் செய்ய வைத்தனர்.

பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு மிரட்டினர். அங்கு தங்கியிருந்த தமிழக மக்கள் வாயிலாக, இந்திய தூதரகத்தை அணுகி, புகார் அளித்து, தப்பி வந்தோம். எங்களை போன்று பலரிடம், மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்த ஆல்பா கன்சல்டன்சியை சேர்ந்த எஸ்தர் அனிதா, ஜான்பிரிட்டோ, காமராஜ், ஆன்டனி, ஜெனிபர் ஆகியோர் மீது,நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து கேட்க, ஆதாம் டிரஸ்ட்-ஆல்பா கல்சல்டன்சி நிறுவனத்தினரை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும், போனை எடுக்கவில்லை.

40 பேர் சிக்கியுள்ளனர்

தப்பி வந்த மாணவர்கள் கூறுகையில், எங்களை போல் ரஷ்யாவில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளனர். இவர்களையும் ஆல்பா கன்சல்டன்சி நிறுவனம்தான் அனுப்பி வைத்துள்ளது. அங்கு மருத்துவமனையில் கொடுமைப்படுத்தி வருகின்றனர். அவர்களை மீட்டு, ஆல்பா கன்சல்டன்சி நிறுவனத்தினர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

நாம் எந்தக் கட்சி?



சொல் வேந்தர் சுகி சிவம்


. நாம் எந்தக் கட்சி?

வாழ்க்கையில் வெற்றி பெறும் கலையை முழுக்க முழுக்க இன்னொருவர் கற்றுத் தந்துவிட முடியாது. நாமாகத்தான் கற்க வேண்டும். உள்வாங்க வேண்டும். பத்து மாணவர்களுக்கு ஆசிரியர் ஒரே மாதிரித்தான் பாடம் நடத்துவார். அதிகமாக உள்வாங்கும் திறன் உடையவன் முதல் மதிப்பெண் பெறுகிறான். மழை சமமாகப் பெய்தாலும் களிமண் நீரை உள்ளே விடாது. மணல் முழுக்க உள்ளே உறிஞ்சும். செம்மண்ணும் மணலும் கலந்த பூமி அதிகம் உள்வாங்கிக் கொஞ்சம் வெளியே நிறுத்தும். தாவரங்கள் செம்மண் பூமியில் தளதளவென்று வளருகின்றன.

சுயமாக முன்னுக்கு வந்த கலைஞர்கள், வணிகர்கள், தொழிலதிபர்களைப் பார்த்து, ""நீங்கள் முன்னுக்கு வந்த டெக்னிக்கைச் சொல்லிக் கொடுங்கள்'' என்றால் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்களைச் சுயநலவாதி, கர்வி, தான் மட்டும் முன்னேற ஆசை என்று உலகம் வாரி வைகிறது. சொல்லித் தரக்கூடாது என்ற எண்ணம் அல்ல. இது சொல்லித் தரமுடியாதது என்பது ஏன் பலருக்குப் புரிவதில்லை? பரபரப்பில்லாமல் சிந்தித்தால் இந்த உண்மை உங்களுக்குப் புரியவரும்.

நடிப்புக் கல்லூரியில் நடிப்பைப் படிப்பாக முடித்த எவரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விஞ்சியது இல்லை. என்ன புரிகிறது? ஒன்றைச் சொல்லிக் கொடுப்பதைவிடக் கற்றுக் கொள்வதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. சிவாஜி கணேசன் கல்லூரியில் நடிப்பைக் கற்கவில்லை. ஆனால் உலகம் முழுவதிலும் இருந்து நடிப்பைக் கற்றுக் கொண்டார். சொல்லிக் கொடுப்பதில் வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் கற்றுக் கொள்வதில் வேறுபாடு இருக்க முடியும். தனித்தன்மை சுடர்விட முடியும். இதனைப் புரிந்து கொள்ளாமல் சிலர், புகழ்பெற்றவர்கள் வெற்றி ரகசியங்களை மறைத்து வைப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இது பிழை.

இன்னொரு செய்தி. புகழ் பெற்ற நகைச்சுவை நடிகரின் வீட்டைத் தேடிப்போய் ஒருவர் தம்மை முன்னேற்றி விடும்படிக் கேட்டிருக்கிறார். நடிகர் மவுனமாகவே இருந்ததும், ""நான் கண்டிப்பா பெரிய ஆளா வருவேன். நீங்க சில டெக்னிக் கத்துக் குடுத்து வாய்ப்பும் வாங்கிக் குடுத்தா நான் நிச்சயம் பெரிய நடிகனா ஆக முடியும்... மத்தவங்களை வளர்க்கணும்னு உங்களுக்குக் கடமை இருக்கு'' என்று பாடம் நடத்தியிருக்கிறார்.

""இதோபார்... இப்படி எந்த இடத்திலும் போய் நான் நிற்காததால்தான் பெரிய நடிகனாக இருக்கிறேன்'' என்று கூறிவிட்டு, படார் என்று கதவைச் சாத்திக்கொண்டு போய்விட்டார். போனவர் அப்ùஸட். நடிகரை மண்டைக் கனம் பிடித்தவர் என்று வசை பாடுகிறார். உண்மை அது அல்ல. நிறையக் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் எதையும் சொல்லித் தர முடியாது. பிறரைக் குற்றம் சாட்ட வேண்டாம். நமது அக்கறையை அதிகப்படுத்த வேண்டும்.

"சமைத்துப்பார்' என்கிற புத்தகத்தைப் படித்துச் செய்த சமையலைவிட அருமையாகச் சமைக்கிற அம்மணிகள் ஆயிரம் ஆயிரம் இருக்கிறார்கள். அவர்கள் குழம்பு கொதிக்கும் போதே, "உப்பு கம்மி... புளி அதிகம்' என்று ரிப்போர்ட் கொடுப்பார்கள். இது அனுபவம் மட்டுமல்ல... பழக்கம் மட்டும் காரணம் அல்ல. மனம் விழித்த நிலை. விவரிக்க முடியாத சக்தியான மனம் பூரணமாக விழித்திருந்தால் நுட்பமான பல கலைகளைக் கற்றுக் கொள்ளும்.

தூக்கத்தில் இருந்து உடல் விழித்தால் போதாது. மனதும் விழிக்க வேண்டும். வீட்டு ஜன்னலை விரியத் திறந்தால் போதாது. மூளையின் சாளரங்களை மூச்சுக் காற்றால் திறக்க வேண்டும். அப்போதுதான் நிறைய நிறைய உள்வாங்க முடியும். "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்ற பொன் மொழி கோடி கோடி பெறும். சொல்லிக் கொடுக்கப்பட்ட செய்திகளை மட்டும் நம்பி ஒருவர் அறிவாளி ஆகிவிட முடியாது.

ஹெலன் கெல்லர் என்ற பெண்மணி கண்ணில்லாதவர். கண்ணில்லாத போதும் கல்வி கற்பது எப்படி என்று அவர் ஆசிரியர் ஆனி சல்லிவன் கற்றுக் கொடுத்தார். ஆனால் ஆசிரியர் கற்றுக் கொடுக்காத ஆற்றலை ஹெலன் கெல்லர் சுயமாகப் பெற்றார். அதுதான் அவரை உலகின் ஆச்சரியப் பொருளாக்கியது.

விழிப்புலன் இல்லாத அவர் தொட்டுத் தொட்டு ஒவ்வொரு பொருளையும் உணர்ந்து பெயர் குறிக்கும் வித்தையை அவரது ஆசிரியர் கற்றுக் கொடுத்தார். ஹெலன் கெல்லர் ஒரு படி மேலே போய் ஒரு பொருளைத் தொட்டுவிட்டு அதன் நிறம் இன்னது என்று சொல்லத் தொடங்கினார். இது ஆசிரியர் சொல்லித் தராதது. விழிப்படைந்த மனம் அவர் விரல் நுனியில் பூரணமாய் நின்றதால் கண்களின் வேலையைக் கைகளே செய்தன. பள்ளி, கல்லூரிகளில் படித்துவிட்டால் படிப்பே முடிந்துவிட்டதாகப் பலர் கருதுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் எதையும் பூரணமாகக் கற்றுத் தர முடியாது. வேண்டுமானால் எப்படிக் கற்க வேண்டும் என்கிற தொடக்கத்தைச் சொல்லித் தரலாம். "கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த படிப்பும் எத்தனை நாள் வரும்?' என்ற கிராமத்துக் கவிதையை உணருங்கள். உயர்வது நிச்சயம்.

ஆசார்ய ரஜனீஷ் இதை விளக்க ஒரு கதை சொல்வதுண்டு. ஒரு மகாராஜா மகன் மிக மக்காய் இருந்தான். பவர் உள்ள பல குடும்பங்களில் "மக்கு மகன்' பிரச்சினை எப்போதும் உண்டு. அவனுக்கு ஆட்சியைக் கொடுக்க மக்கள் விரும்பவில்லை. மூத்தவர் சபை எதிர்த்தது. "என்ன செய்யலாம்' என்று அரசர் கவலைப்பட்டார். வெளிநாட்டில் திறமையான கலாசாலையில் மகனைச் சேர்த்துவிட்டால் அவர்கள் எப்படியும் அறிவாளி ஆக்கிவிடுவார்கள் என்று மகாராஜா முடிவு செய்தார். அங்கு பல துறைகள் இருந்தன. உயர்தரமான அந்தக் கலாசாலையில் ஐந்து ஆண்டுகள் தங்கிப் படித்துவிட்டு இளவரசன் திரும்பிவந்தான்.

அவனது நடை, உடை, பாவனைகள் மாறியிருந்தன. பளிச்சென்று உடையணியப் பழகியிருந்தான். அழகாக நடப்பது, கைகுலுக்குவது, மரியாதையாய்ப் பேசுவது என்று நிறைய மாற்றங்கள். மகாராஜவுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. முதியோர் சபையில் மகனை நிறுத்தி அவர்கள் அனுமதியுடன், அறிவாளியாக்கப்பட்ட மகனை அரசனாக்க நினைத்தார். பலரும் அவனை அறிவாளி என்றே ஒப்புக் கொண்டனர். பல்கலைக் கழகத்தின் சாதனையைப் பாராட்டினர்.

ஒரு கிழவர் மட்டும் இளவரசனைச் சோதிக்க நினைத்தார். ""என்ன படித்தாய்?'' என்றார். ""நிறைய நிறைய... சோதிடம் கூட முறையாகக் கற்றுத் தந்தார்கள். நீங்கள் சோதிடத்தில் கேள்வி கேட்டால்கூடச் சொல்வேன்'' என்றான். கிழவர் மோதிரத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு, ""இது என்ன?'' என்றார். இளவரசன் யோசித்தான். ஒரு காகிதத்தை எடுத்து ஏதோ கணக்குப் போட்டான். அப்படி இப்படி தலையை ஆட்டிக் கொண்டான். ""உங்கள் கையில் உள்ளது வட்டமானது. ஒளியுடையது'' என்று விடை சொன்னான். கிழவருக்கு உள்ளூர சந்தோஷம். இருந்தாலும், ""அடையாளங்களைச் சொல்லுகிறாயே ஒழிய அது இன்ன தென்று சொல்லக்கூடாதா?'' என்றார். ""அது எங்கள் பாடத் திட்டத்தில் இல்லை'' என்றான் இளவரசன். ""யூகித்துச் சொல்'' என்றார் கிழவர். உடனே இளவரசன் ""பாடத் திட்டத்தில் இல்லையென்றாலும் என் பொது அறிவை வைத்துச் சொல்லிவிடுவேன்... அது ஒரு வண்டிச் சக்கரம்'' என்றான்.

மடப்பயல்... சர்வகலாசாலை சொல்லிக் கொடுத்ததைச் சரியாகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டிச்சக்கரத்தை எவனும் உள்ளங்கையில் ஒளித்து வைக்க முடியாது என்ற சின்ன விஷயம்கூட அந்த மடையனுக்குத் தெரியவில்லை.

YOU CAN EDUCATE FOOLS; BUT YOU CAN NOT MAKE THEM WISE என்பது சத்தியம். முட்டாளைப் படிப்பாளியாக்க முடியும். ஆனால் அறிவாளியாக்க முடியாது. அதனால்தான் கீதையில், ""புத்திமான்களுக்குள் நான் புத்தி'' என்கிறான் கண்ணன். புத்தியில்லாத புத்திமான்கள் அநேகம் பேர். "செவன்த் சென்ஸ்' பெறப் பலர் தியானம் செய்கிறார்கள். "காமன் சென்ஸ்' இல்லாவிட்டால் இவர்களை என்ன செய்ய..? படிக்காத மேதைகளும் உண்டு; படித்த முட்டாள்களும் உண்டு. நாம் எந்தக் கட்சி..? கண்டுபிடித்தால் வெற்றி நிச்சயம்

NEWS TODAY 23.12.2025