Friday, May 13, 2016

எம்ஜிஆர் 100 | 64

எம்ஜிஆர் 100 | 64: மக்களின் அடிமை நான்!

மதுரையில் நடந்த விழாவில் தடுப்பைத் தாண்டி மேடையின் நுனிக்கு வந்து, மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார் முதல்வர் எம்.ஜி.ஆர்.
M.G.R. எப்போதும் மக்களோடு மக்களாகவே இருந்தார். தமிழகத்தின் முதல்வர் என்ற உயர்ந்த பதவியில் இருந்தபோதும் தன்னை மக்களிடமிருந்து அப்பாற்பட்டவராக அவர் நினைத்ததோ, செயல்பட்டதோ இல்லை.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா. முதல்வர் என்ற முறையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக, சென்னை மாம்பலத்தில், இப்போது நினைவு இல்லமாக உள்ள தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அண்ணா மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவர் கதிரேசனை காரை நிறுத்தும்படி எம்.ஜி.ஆர். பதற்றத்துடன் கூறினார். அவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். முதல்வருடன் வந்த வாகனங்களும் நின்றுவிட்டன.

காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர். ஓட்டமும் நடையுமாக சென்றார். என்னவென்று புரியாமல் அதிகாரிகளும் உதவியாளர்களும் அவரை வேகமாகப் பின்தொடர்ந்தனர். சாலையில் காரை நிறுத்தி எம்.ஜி.ஆர். இறங்கிச் செல்வதைப் பார்த்ததும் ஆங்காங்கே வாகனங்களில் சென்றவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டனர். பொதுமக்களும் கூடியதால் அந்த இடமே பரபரப்பானது. அடுத்த சில விநாடிகளில் எம்.ஜி.ஆர். எதற்காக அப்படி வேகமாக சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

சாலையோரத்துக்கு எம்.ஜி.ஆர். வேகமாக சென்றார். அங்கு காக்காய் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை,கால்களை உதறியபடி வாயில் நுரைதள்ள ஒருவர் போராடிக் கொண் டிருந்தார். அந்த நபரை மடியில் கிடத்திக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவரது கையை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்தினார். சற்று துடிப்பு அடங்கிய நிலையில், தனது உதவியாளர்களை அழைத்தார். அந்த நபரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு பின்னர், காரில் ஏறி புறப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு மிகுந்த காலை நேரத்தில் ஏராள மானோர் செல்கின்றனர். அவர்கள் யாருமே வலிப்பு நோயால் துடிக்கும் நபரை கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஒரு மனிதன் துடிப் பதை பொறுக்காமல் முதல்வரே காரில் இருந்து இறங்கி வந்து அவரை ஆசுவாசப்படுத்தியதுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மனிதநேயத்தை நேரில் பார்த்த ஆயிரக் கணக்கானோர் வியந்தனர்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார். தெற்குமாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. பெண்கள் உட்பட சிலர், மேடையில் இருந்த எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக கையில் மனுக்களு டன் ஓரமாக நின்றனர். காவல்துறையினர் அவர் களை போகச் சொல்லியும் மறுத்தனர். ‘‘மனுக் களை எங்களிடம் கொடுங்கள். முதல்வரிடம் நாங்கள் கொடுத்துவிடுகிறோம்’’ என்று போலீஸாரும் அதிகாரிகளும் சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. ‘‘எம்.ஜி.ஆரிடம் தான் கொடுப்போம்’’ என்று உறுதியாகக் கூறினர்.

மேடைக்கு கீழே ஓரமாக நடந்த இந்த சலசலப்பை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். அதிகாரிகளிடம் விவரம் கேட்டார். ‘‘உங்களிடம் தான் மனு கொடுப்போம் என்று கூறுகின்றனர்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த கனமே சற்றும் தயங்காமல், ‘‘அதனால் என்ன? அவர்கள் விருப்பப்படி நானே வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சொன்ன எம்.ஜி.ஆர்., யாரும் எதிர்பாராத வகையில், ஐந்து அடிக்கு மேல் உயரமாக இருந்த மேடையில் அமைக் கப்பட்டிருந்த தடுப்பை கண்ணிமைக்கும் நேரத்தில் தாண்டினார். தடுப்புக் கம்பியை ஒரு கையால் பிடித்தபடி, குறுகலான மேடையின் நுனியில் குத்திட்டு அமர்ந்தபடி மக்களிடம் இருந்து மனுக்களை குனிந்து பெற்றுக் கொண்டார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதற்காக மேடையில் தடுப்புக் கம்பியை தாண்டி வந்து மனுக்களை எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண் டதைப் பார்த்த பொதுமக்கள் ‘புரட்சித் தலைவர் வாழ்க’ என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினர்; மனுக்கள் கொடுத்தவர்கள் உட்பட.

‘படகோட்டி’ படத்தில் ஒரு காட்சி. இரு மீனவ குப்பங்களுக்கிடையே பகை நிலவும். ஒரு குப்பத்தின் தலைவரான எம்.ஜி.ஆரும் எதிரி குப்பத்தைச் சேர்ந்த தலைவரின் மகளான நடிகை சரோஜா தேவியும் காதலிப்பார்கள். இதற்கு எம்.ஜி.ஆரின் குப்பத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவர்கள் விருப்பப்படி தனது காதலை தியாகம் செய்ய எம்.ஜி.ஆர். முடிவு செய்வார்.

அதனால் வருத்தப்படும் சரோஜா தேவி, ‘‘எனது காதல் கருக வேண்டியதுதானா?’’ என்று கேட் பார். அதற்கு எம்.ஜி.ஆர். இப்படி பதிலளிப்பார்…

‘‘நான் தனிமனிதனல்ல. மக்களுக்கு கட்டுப் பட்டவன். நான் தலைவன் அல்ல. தலைவன் என்ற பெயரில் மக்களின் அடிமை நான்.’’

அப்படி, மக்களின் அடிமையாக தன்னைக் கருதி சேவை செய்ததால்தான் எம்.ஜி.ஆர். ‘மக்கள் திலகம்’!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

எம்.ஜி.ஆருக்கு ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் ‘கல்கண்டு’ பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன். ஒருமுறை தமிழ்வாணன் இப்படிக் கூறினார்: ‘‘ஒரு குழந்தை முன் பத்து நடிகர்களின் படங்களை போட்டால் அது எம்.ஜி.ஆர். படத்தைத்தான் எடுக்கும். ஏனென்றால், அவரது சிரிப்பில் உண்மை இருக்கிறது!’’

Thursday, May 12, 2016

எம்ஜிஆர் 100 | 63: சொன்னதையும் சொல்லாததையும் செய்தவர். ஆனால்...

அழுதபடி குறைகளை கூறும் மூதாட்டியை எம்.ஜி.ஆர். தேற்றுகிறார்.


எம்ஜிஆர் 100 | 63: சொன்னதையும் சொல்லாததையும் செய்தவர். ஆனால்...


M.G.R. பிறர் கஷ்டப்படுவதை காண சகிக்காதவர். அவர் கண் முன்னால் யாரும் துன்பப்படுவதைப் பார்த்தால், அவர்கள் கேட்காவிட்டாலும் உடனடியாக உதவி செய்வார். தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி; அரசு மூலம் திட்டங்களை செயல்படுத்தி உதவி செய்ய வேண்டும் என்றாலும் அதற்காக மத்திய அரசிடம் உரத்துக் குரல் கொடுக்கவும் தயங்க மாட்டார்.

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, 1980 ஜனவரி மாதம் கர்நாடகாவில் குண்டு ராவ் முதல்வரானார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்றே தன்னை அறிவித்துக் கொண்டவர். பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று எம்.ஜி.ஆரை அழைத்துக் கொண்டே இருந்தார். ஒருமுறை குண்டுராவின் பிறந்த நாளன்று பெங்களூருக்கு சென்று அவரை வாழ்த்த எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

அதற்காக தனது TMX 4777 எண் கொண்ட அம்பாசிடர் காரில் மனைவி ஜானகி அம்மை யார் மற்றும் ஜானகி அம்மாளின் சகோதரர் மகள் லதா ஆகியோருடன் ஒருநாள் மதியம் பெங்களூர் புறப்பட்டார். பின்னால் ஒரு வேனில் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றனர்.

பெங்களூர் சென்று அங்குள்ள ‘வெஸ்ட் எண்ட்’ ஓட்டலில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை 9 மணிக்கு குண்டுராவின் வீட்டுக் குச் சென்ற எம்.ஜி.ஆர்., அவருக்கு பரிசளித்து வாழ்த்தினார். அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார் குண்டுராவ். எம்.ஜி.ஆருக்கும் உடன் வந்தவர்களுக்கும் விருந்தளிக்கப்பட்டது. சாப்பிட்டுவிட்டு, காரில் எம்.ஜி.ஆர். சென்னைக்கு புறப்பட்டார்.

இப்போது போலவே அப்போதும் சுட்டெரிக் கும் கோடைகாலம். உச்சி வெயில் நேரத்தில் ஓசூர் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் ஒரு மூதாட்டியும் பத்து வயது சிறுமியும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறு காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்தனர். பத்து தப்படி ஓட்டமும் நடையுமாக செல்வதும் பிறகு, வெயிலுக்காக ஓரமாக ஒதுங்கி நின்று மீண்டும் நடப்பதுமாக இருந்தனர். அவர்களை தூரத்தில் வரும்போதே காரில் இருந்து எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். அவர்கள் அருகில் கார் வந்ததும் டிரைவரை நிறுத்தச் சொன்னார். முன் சீட்டில் அமர்ந்திருந்த உதவியாளரைவிட்டு அந்த மூதாட்டியை விசாரிக்கச் சொன்னார்.

காரில் இருந்து இறங்கி விசாரித்த உதவியாளரிடம் அந்த மூதாட்டி, ‘‘தூரத்தில் இருந்து புல்லை அறுத்துக் கட்டி தலையில் சுமந்துபோய் விற்றால் தலைச்சுமைக்கு ஒரு ரூபாய் கிடைக்கும். வெயிலுக்கு கால் சுடுதுய்யா. அதான் நின்று நின்று செல்கிறோம்’’ என்றார். அவர் கூறியதை எம்.ஜி.ஆரிடம் உதவியாளர் தெரிவித்தார். இதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., காரில் இருந்த ஜானகி அம்மையார், அவரது உறவினர் லதா ஆகியோர் அணிந்திருந்த செருப்புகளை கழற்றச் சொன்னார். அதோடு, தன் பையில் இருந்த கணிசமான பணத்தையும் உதவியாளரிடம் கொடுத்து மூதாட்டியிடமும் சிறுமியிடமும் கொடுக்கச் சொன்னார். அதை பெற்றுக்கொண்ட மூதாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்போது, காரின் கருப்புக் கண்ணாடியை இறக்கிவிட்டு மூதாட்டியை எம்.ஜி.ஆர். வணங் கினார். அவரை பார்த்த பிறகுதான் தனக்கு உதவி செய்தது எம்.ஜி.ஆர். என்றே அந்த மூதாட்டிக்குத் தெரிந்தது. நன்றி கூட தெரிவிக்காமல் பிரமை பிடித்தவர்கள் போல மூதாட்டியும் சிறுமியும் பார்த்துக் கொண்டிருக்க, சிரித்தபடியே எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.

எம்.ஜி.ஆர். மீது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். இலங்கைத் தமிழர் நலன் கருதி ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக சென்னையில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் எம்.ஜி.ஆரை ராஜீவ் காந்தி மிகவும் புகழ்ந்தார். எம்.ஜி.ஆர். பேசிக் கொண்டிருக்கும்போது ராஜீவ் எழுந்துவந்து ‘மைக்’கை சரி செய்தார். மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேரமானது. அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது மதிப்பு வைத்திருந்தார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமரை சந்திக்க எம்.ஜி.ஆர். டெல்லி சென்றார். தமிழக அரசு அதிகாரிகளை அழைத்து, ‘‘எல்லா பள்ளி பிள்ளைகளுக்கும் சீருடை வழங்க பிரதமரிடம் மாநில அரசின் சார்பில் நிதி கேட்கலாம் என்று இருக்கிறேன். எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிட்டு வாருங்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதிகாரிகள் கணக்கிட்டு 120 கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தியுடனான சந்திப்பின்போது, எம்.ஜி.ஆரின் மற்ற எல்லாக் கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார். சீருடைத் திட்டத்துக்கு மானியம் வழங்குவதை மட்டும் ஏற்கவில்லை. ‘‘பின்னர் பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ‘‘தமிழ்நாட்டுக்கு மானியமே வேண்டாம்’’ என்று எழுந்துவிட்டார்.

பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த எம்.ஜி.ஆரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆர்.கே.தவான் தொடர்பு கொண்டு, ‘‘மாலையில் வேண்டுமானால் நீங்கள் மீண்டும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ராஜீவை மீண்டும் சந்திக்க புறப்படும் முன் அதிகாரிகளிடம், ‘‘பிரதமர் நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் பார்ப்போம். இல்லாவிட்டால் தமிழக அரசின் நிதி நெருக்கடியை மக்களிடம் சொல்லி, வீட்டுக்கு கொஞ்சம் பணம் வாங்கி நாமே சீருடைத் திட்டத்தை செயல்படுத்துவோம்’’ என்றார் எம்.ஜி.ஆர்.!

ஆனால், அதற்கு அவசியம் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அன்பு, மதிப்பு காரணமாக மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்க ராஜீவ் காந்தி சம்மதித்துவிட்டார். ‘‘சிறுவயதில் ஒருவேளை சோற்றுக்கும் ஒரு ஜோடி துணிக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். அதனால்தான் சத்துணவோடு சீருடையும் கொடுக்க விரும்புகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

இந்த திட்டங்களையெல்லாம் தேர்தல் அறிக் கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை. எம்.ஜி.ஆர். சொன்னதை செய்தார்; சொல்லாத தையும் செய்தார். இவற்றைவிட முக்கியமாக...

செய்ததை சொல்ல மாட்டார்!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்


முதல்வராக இருந்தபோது பாட்டாளி மக்கள், ஏழைகள் ஆகியோரின் நலனுக்கு எம்.ஜி.ஆர். முன்னுரிமை கொடுப்பார். ஓசூர் அருகே மூதாட்டியும் சிறுமியும் வெயிலில் தவிப்பதை பார்த்ததாலோ என்னவோ, கல்லிலும் முள்ளிலும் வேகாத வெயிலிலும் வெறும் காலுடன் நடந்து கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஏழைகளுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். செயல்படுத்தினார்!

Wednesday, May 11, 2016

பரோட்டா பார்சலுக்குள் பணம் பட்டுவாடா : அரசியல் கட்சிகள் அதிரடி


ChennaiOnline

சென்னை,மே 10 (டி.என்.எஸ்) வரும் மே 16ஆம் தேதி தமிழக சட்டபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெட்பாளர்கள் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அதைவிடவும் அதிரடியான முறையில் சில அரசியல் கட்சிகள் வேட்பாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் பகுதியில் மதிய வேளைகளில் மக்களுக்கு பரோட்டா வாங்கிக் கொடுக்கும் கட்சி நிர்வாகிகள், அந்த புரோட்டா பார்சலுக்குள் ஆயிரம் ரூபாய் நோட்டையும் வைத்து கொடுக்கிறார்களாம்.

இதுமட்டும் இன்றி, இட்லி பார்சல், இனிப்பு பார்சல் உள்ளிட்ட உணவுப் பொருட்களோடு தான் தற்போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறதாம்.

தேர்தல் கமிஷன் அதிரடி: ரூ.92 கோடி பறிமுதல்


DINAMALAR 

சென்னை:தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில், 92 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:ஒவ்வொரு தொகுதியிலும், 20 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுக்கள், 12ம் தேதி முதல், பறக்கும் படையாக செயல்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது,

ஒருநாள் முன்னதாக, 11ம் தேதியேகளமிறங்க உள்ளனர்.
ஓட்டுச்சீட்டுஒவ்வொரு தொகுதியிலும், மூன்று, 'ஷிப்ட்'களாக, 24 மணி நேரமும், 25 பறக்கும் படையினர், ரோந்து வந்தபடி இருப்பர். பாதுகாப்புக்கு, 300 கம்பெனி
துணை ராணுவ வீரர்கள்வந்துள்ளனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
வேலுார் மாவட்டத்தில், ஒரு தொகுதியில், வேட்பாளர் புகைப்படத்தை மாற்றி அச்சிட்டதால், அங்கு புது ஓட்டுச்சீட்டு அச்சிடப்படுகிறது. தமிழகம் முழுவதும், 190 இடங்களில், வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில், 26 கோடி ரூபாய் சிக்கியது.

பறக்கும் படை,நிலை கண்காணிப்புக்குழு, வருமானவரித் துறை நடத்திய சோதனையில் இதுவரை, 92 கோடி ரூபாய் சிக்கி உள்ளது. தொடர்ந்து முக்கிய தலைவர்கள் வீடுகளிலும், சோதனை நடந்து வருகிறது.2 பெண்கள் கைதுசென்னை நந்தனத்தில், எஸ்.என்.ஜே.,


டிஸ்ட்லரீஸ் நிறுவனத்தில், 3.52 கோடி ரூபாய்; புழுதிவாக்கம், அ.தி.மு.க., கவுன்சிலர் வீட்டில், 42 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.முதன்முறையாக, சென்னை அண்ணா நகரில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த, இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

553 கோடீஸ்வரர்கள் போட்டி; 283 பேர் மீது கிரிமினல் வழக்கு - தமிழக வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆய்வு அமைப்பு தகவல்

Return to frontpage
புதுச்சேரியில் 96 கோடீஸ்வர வேட்பாளர்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 553 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். 283 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது என்று தனியார் தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘அசோசியேஷன் ஆப் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ்’ (ஏடிஆர்) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்களின் பின்னணியை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் குறித்து ஏடிஆர் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 3,776 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் பெரிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் 1,107 பேர். இதில் 997 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ளோம். 110 பேரின் பிரமாணப் பத்திரங்கள் தெளிவாக இல்லை.

வசந்தகுமார் முதலிடம்

தமிழக தேர்தலில் மொத்தம் 553 கோடீஸ்வரர்கள் போட்டியிடு கின்றனர். இதில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு ரூ.337 கோடிக்கு சொத்துகள் உள்ளன. அவருக்கு அடுத்து சென்னை அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு ரூ.170 கோடிக்கு சொத்துகள் உள்ளன.

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா 3-வது இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.113 கோடி.

கட்சிவாரியாக அதிமுக 156, திமுக 133, பாமக 72, பாஜக 64, தேமுதிக 57, காங்கிரஸ் 32, வேட்பாளர்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்துகளை வைத் துள்ள கோடீஸ்வரர்கள் ஆவர். ஒட்டுமொத்தமாக மதிப்பிடும் போது பெரிய கட்சிகளின் வேட்பாளர் களது சராசரி சொத்து மதிப்பு ரூ.4.35 கோடியாக உள்ளது.

திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் கருப்பன், திருக்கோவி லூர் பாஜக வேட்பாளர் தண்டபாணி ஆகியோர் தங்களுக்கு எவ்வித சொத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மொத்த வேட்பாளர்களில் 114 வேட்பாளர்கள் பான் எண் விவரங்களை தெரிவிக்கவில்லை. 284 பேர் வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை.

283 பேர் மீது கிரிமினல் வழக்கு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 283 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 157 பேர் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 5 பேர் மீது கொலை வழக்கும் 30 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது.

கட்சிவாரியாக திமுக 68, பாமக 66, அதிமுக 47, தேமுதிக 41, காங்கிரஸ் 10, பாஜக 26, மார்க்சிஸ்ட் 8 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

சுமார் 28 தொகுதிகளில் மூன் றுக்கும் மேற்பட்ட குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கல்வித் தகுதி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 454 பேர் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்ப தாகவும் 488 பேர் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருப்ப தாகவும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்.

6 வேட்பாளர்கள் தாங்கள் படிக்கத் தெரிந்தவர்கள் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். 6 பேர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

வயது விவரம்

வேட்பாளர்களில் 537 பேர் 25 வயது முதல் 50 வயதுக்கு உட் பட்டவர்கள். 458 பேர் 51 வயது முதல் 80 வயதுக்கு உட்பட்டவர் கள். 2 பேர் 80 வயதுக்கு மேற் பட்டவர்கள்.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட 997 வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் 96 பேர் மட்டுமே உள்ளனர்.

புதுச்சேரி நிலவரம்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர் தலில் மொத்தம் 344 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 343 வேட்பாளர்களின் பின்னணியை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 343 வேட்பாளர்களில் 96 பேர் கோடீஸ்வரர்கள். கட்சி வாரியாக என்ஆர் காங்கிரஸ் 21, காங்கிரஸ் 18, பாஜக 8, அதிமுக 18, பாமக 5 மற்றும் 16 சுயேச்சை கோடீஸ்வர வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.49 கோடி.

94 வேட்பாளர்கள் பான் எண் விவரங்களை தெரிவிக்கவில்லை. 204 பேர் வருமான வரி கணக்கு விவரங்களை அளிக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக 68 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. கட்சி வாரியாக பாஜக 8, என்ஆர் காங்கிரஸ் 8, காங்கிரஸ் 6, அதிமுக 6, பாமக 6, நாம் தமிழர் கட்சி 3 மற்றும் 11 சுயேச்சை வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

189 வேட்பாளர்கள் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 111 பேர் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருப்பதாக கூறியுள்ளனர்.

8 பேர் படிக்கத் தெரிந்தவர்கள் என்றும் 8 பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

25 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட 221 வேட்பாளர்களும் 51 வயது முதல் 80 வயதுக்கு உட்பட்ட 122 வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் உள்ளனர். ஒட்டுமொத்த வேட்பாளர்களில் 22 பேர் பெண்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் மறுப்பு

இணையதள செய்திப் பிரிவு
Return to frontpage
பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த (ஒப்படைக்க) பிரிட்டன் மறுத்துவிட்டது. தங்கள் நாட்டின் சட்ட நடைமுறைகளை மேற்கோள்காட்டி, இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறது பிரிட்டன்.

பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத மல்லையா தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். அவரது பாஸ்போர்ட்டை இந்தியா முடக்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையாவை, நாடு கடத்தக் (தங்களிடம் ஒப்படைக்க) கோரி பிரிட்டன் அரசுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது.

'விஜய் மல்லையாவுக்கு எதிராக, கிரேட்டர் மும்பையில் உள்ள நீதிமன்றம் ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்துள்ளதாக அமலாக்கத் துறை எங்கள் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மல்லையாவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்த வேண்டி உள்ளது. எனவே, அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டன் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்திய வெளியுறவுத் துறை விளக்கியிருந்தது.

இந்த நிலையில், தங்கள் நாட்டின் சட்ட நடைமுறைகளை மேற்கோள் காட்டி, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது என்று பிரிட்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் வெளியிட்ட தகவல்:

'குடியேற்றச் சட்டம் 1971-ன் படி, தங்கள் நாட்டில் ஒருவர் தங்குவதற்கு செல்லுபடியாகத்தக்க பாஸ்போர்ட் அவசியமில்லை. அதாவது, தங்கள் நாட்டுக்குள் நுழையும்போதும், அங்கிருந்து வெளிநாட்டுக்குச் செல்லும்போதும் காட்டப்படும் பாஸ்போர்ட்டில் உள்ள காலாவதியாகும் காலம் வரை பிரிட்டனில் ஒருவர் தங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், மல்லையா மீதான குற்றச்சாட்டுகளின் தன்மையை பிரிட்டன் அரசு புரிந்துகொள்கிறது. அதையொட்டி, சட்ட ரீதியிலான ஒத்துழைப்பு வழங்க பிரிட்டன் தயாராக இருக்கிறது. மேலும், நாடு கடத்தல் தொடர்பான இந்தியாவின் கோரிக்கை குறித்து சட்ட ரீதியிலாக பரிசீலித்து வருவதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது' என்று அவர் தகவல் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் பணத்தைத் திரும்பப் பெற தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கடந்த மார்ச் 2 ம் தேதி டெல்லியிலிருந்து பிரிட்டனுக்குச் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

'போடுவோம் ஓட்டு.. வாங்கமாட்டோம் நோட்டு'- தமிழகம் முழுவதும் 1.60 கோடி பேர் உறுதிமொழி ஏற்பு

Return to frontpage

ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என தமிழகம் முழுவதும் 1.60 கோடி வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 16-ம் தேதி நடக்கிறது.முந்தைய தேர்தல்களில் ஓட்டுக்கு அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்டதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து இந்தத் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. அதேநேரத்தில், பணம் வாங்கக் கூடாது என வாக்காளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இதற்காக இளைஞர் குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என பெற்றோரை வற்புறுத்துமாறு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு கோடி வாக்காளர்கள் ‘ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்’ என்ற உறுதிமொழி ஏற்கச் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத் தில், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் தேர்தல் பிரிவு ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உறுதி மொழி ஏற்றனர். தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஒவ்வொரு துறையின் செயலாளர் கள், துறை பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றனர். மாநிலம் முழு வதும் மத்திய, மாநில அரசு அலு வலகங்கள், தனியார் நிறுவனங் கள், கல்லூரிகள், ரயில் நிலையங் கள், பேருந்து நிலையங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொகுதிகள்தோறும் வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஏற்பாட்டின் பேரில் குறைந்தபட்சம் 100 வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்றனர். இவை தொடர்பான புகைப்படங்கள் தேர்தல் துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி, அரிமா சங்கங்களிலும் அவற்றின் உறுப் பினர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இது தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் 2.34 கோடி வாக்காளர்களை உறுதிமொழி ஏற்கச் செய்ய வேண்டும் என்பது எங்கள் இலக்கு. 1.60 கோடி பேர் உறுதிமொழி ஏற்றுள்ளனர்’’ என்றார்.

சென்னை மாநகராட்சி

சென்னை மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் பி.சந்தரமோகன் தலைமையில், ‘100 சதவீதம் வாக்களிப்போம்’, ‘போடுவோம் ஓட்டு.. வாங்க மாட்டோம் நோட்டு’ என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், 1,560 மாநகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...