Friday, June 3, 2016

மதுரா கலவர பலி 24 ஆக அதிகரிப்பு: 124 பேர் கைது

PTI 3.6.2016


உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும்போது ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.

கலவரத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் சிகிச்சைப் பலனின்றி இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரித்தது. பலியானவர்களில் 22 பேர் போராட்டக்காரர்கள், இருவர் போலீஸார்.

மதுரா சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு மதுரா நகர பிராந்திய ஆணையருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு போலீஸ் டிஜிபி ஜவேத் அகமது, உள்துறை முதன்மைச் செயலாளர் தெபாசிஷ் பாண்டா ஆகியோர் விரைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச டிஜிபி ஜாவேத் அகமது கூறும்போது, "மதுரா கலவரம் தொடர்பாக 124 பேரை கைது செய்துள்ளோம். முக்கிய குற்றவாளி ராமிருக்‌ஷ் யாதவை தேடி வருகிறோம். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவுள்ளோம்" என்றார்.

நடந்த சம்பவம் குறித்து போலீஸ் (சட்டம் - ஒழுங்கு) ஐ.ஜி. ஹெச்.ஆர்.சர்மா கூறும்போது, "மதுரா நகரின் ஜவஹர் பாக் பகுதியில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்து. அதனையடுத்து சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அங்கிருந்த 3000-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் ஆசாத் பாரத் விதிக் விசாரிக் கிராந்தி சத்யாகிரஹி (Azad Bharat Vidhik Vaicharik Kranti Satyagrahi) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறிது நேரத்தில் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

முதலில் போலீஸார் தடுப்புகளாலும், கண்ணீர் புகை குண்டுகளாலும் கலவரக்காரர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால், கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மதுரா நகர எஸ்.பி. முகுல் துவிவேதி, ஃபரா காவல் நிலைய அதிகாரி சந்தோஷ்குமார் ஆகியோர் என அடையாளம் தெரியவந்துள்ளது. 20-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்துள்ளனர்" என்றார்.

முதல்வர் இரங்கல்:

மதுரா கலவரத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த போலீஸாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.20 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார். கலவரப் பகுதிக்கு கூடுதல் போலீஸ் படையை அனுப்ப உத்தரவிட்டுள்ளதோடு குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தியுள்ளார்.

கலவரத்தின் பின்னணி என்ன?

ஜவஹர் பாக் பகுதி உத்தரப் பிரதேச மாநில அரசின் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடம். 100 ஏக்கருக்கும் மேல் நிலப்பரப்பு கொண்ட பகுதி. இப்பகுதியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தர்ணா போர்வையில் ஆக்கரமித்தனர் ஆசாத் பாரத் விதிக் விசாரிக் கிராந்தி சத்யாகிரஹி அமைப்பினர். இவர்கள் பாபா ஜெய் குருதியோ பிரிவில் இருந்து பிரிந்தவர்களாவர். இவர்களது பிரதான கோரிக்கைகள் குடியரசுத் தலைவர், பிரதமர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள இந்திய ரூபாய்க்கு பதிலாக ஆசாத் ஹிந்த் பவுஜ் என்ற பெயரில் பணத்தை அச்சிட வேண்டும். ஒரு ரூபாய் விலையில் 60 லிட்டர் டீசல், 40 லிட்டர் பெட்ரோல் வழங்க வேண்டும் போன்றவையாகும். இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து அவ்வப்போது சில போராட்டங்களை நடத்துகின்றனர். இரண்டு ஆண்டுகளாக அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசு நிலத்தில் இருந்து ஆக்கரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையிலேயே ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸார் ஜவஹர் பாக் வந்துள்ளனர்.

எம்ஜிஆர் 100 | 77 - நரிக்குறவர்கள் அன்பு


‘இதயக்கனி’ படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரை ஒரு இளைஞர் முத்தமிடுகிறார். மற்றொரு இளைஞர் மெய்மறந்து எம்.ஜி.ஆரை வணங்குகிறார்.

எம்ஜிஆர் 100 | 77 - நரிக்குறவர்கள் அன்பு


M.G.R. மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர். இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. அந்த அளவுக்கு ரசிகர்களையும் சாதாரண மக்களையும் எம்.ஜி.ஆர். நேசித்தார். சில நேரங்களில் அவர்கள் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்வார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் முகத் துவார பகுதியில் எடுக்கப்பட்டன. அது வரை எந்தப் படங்களிலும் இடம்பெறாத அபூர்வ லொகேஷன் அது. அதேநேரம், மனித நடமாட்டத்தை அதிகம் பார்க்க முடியாத, மீனவர்களேகூட அப்போது போக அஞ்சிய இடம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து அங்கும் மக்கள் வந்துவிட்டனர்.

அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர். மாறு வேடத்தில் இருப்பார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர் கள் எம்.ஜி.ஆரை காண வேண்டும் என்ற ஆவலில் தண்ணீரில் குதித்து நீந்தி அவர் இருந்த இடத்துக்கு வந்துவிட்டனர். அந்த இளைஞர்களை அழைத்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் நலம் விசாரித்தார். அப் போது, ஒரு இளைஞர் எதிர்பாராமல் எம்.ஜி.ஆரை கட்டிக்கொண்டு முத்தமிட்டார். கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் அந்த இளைஞரின் அன்பை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார்.

அந்தப் புகைப்படம்தான் எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்துகிறது! எம்.ஜி.ஆரை முத்தமிடும் இளைஞரின் முகமே தெரியவில்லை. அந்த அளவுக்கு அன்பின் வெளிப்பாடாய் ஆழமாக தன் முத்தத்தை பதிக்கிறார். அருகில் நிற்கும் இளைஞர் எம்.ஜி.ஆரைப் பார்த்த பரவசததில் கும்பிட்ட கையை கீழிறக்காமல் சிரித்தபடி அவரை பார்த்துக் கொண்டே நிற்கிறார். நீரில் நீந்தி வந்த தன் அடையாளமாக அவர் அணிந்துள்ள டிராயர் தண்ணீரில் நனைந்து உடலோடு ஒட்டியுள்ளது. முத்தமிடும் ரசிகரை அணைத்தபடி அவரது அன்பு மழையில் திளைக்கும் எம்.ஜி.ஆரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம். அன்பு மனங்களின் சந்திப்பு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி; பார்ப்பவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து சமீபத்தில்தான், நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நரிக்குற வர் இன மக்கள் மீது எம்.ஜி.ஆர். மிகுந்த அன்பு கொண்டவர். ‘ஒளி விளக்கு’ படத் தில் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க…’ பாடலில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நரிக்குறவர்கள் வேடத்தில் ஆடிப் பாடுவர்.

அந்தப் பாடலின்போது நடனத்தில் எம்.ஜி.ஆர். கலக்கியிருப்பார். தியேட்ட ரில் ஆடாதவர்கள் குறைவு. அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக நரிக்குறவர் இன மக்களை வரவழைத்து, அவர்களை ஆடச் சொல்லி கவனித்து எம்.ஜி.ஆர். பயிற்சி எடுத்துக் கொண்டார். ‘நவரத் தினம்’ படத்தில் ‘குருவிக்கார மச்சானே…’ பாடல் காட்சியிலும் எம்.ஜி.ஆரின் மூவ்மென்ட்ஸ் அற்புதமாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். கொண்டாடிய ஒரே பண்டிகை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை. அன்றைய தினம், கட்டுக் கட்டாக பணத்தை வைத்துக் கொண்டு, தன்னைக் காண வருவோருக்கெல்லாம் கைக்கு வரும் பணத்தைக் கொடுத்து மகிழ்வார். ஒருமுறை பொங்கல் நாளில் ஏராளமான நரிக்குறவர்கள் எம்.ஜி.ஆரை காண, அவரது ராமாவரம் தோட்டத்துக்கு வந்தனர். எம்.ஜி.ஆரை கண்டதும் உற்சாகக் கூச்சலிட்டனர். அவர் களை அருகே வருமாறு அழைத்த எம்.ஜி.ஆர்., கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள், அவர் எவ்வளவோ தடுத்தும் அவரது காலில் விழுந்து வணங்கினர்.

நரிக்குறவர் இன மக்களை எந்தவித பேதமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களது குழந்தைகளை வாங்கிக் கொஞ்சினார். சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் தங்கள் மீது அவர் காட்டிய பாசத்தையும் அன்பையும் பார்த்து வந்தவர்கள் கண்கலங்கினர்.

வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்துவிட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரண மாகக் கூறினார். இதன் தொடர்ச்சி யாக மறுநாள் நடந்ததுதான் வேடிக்கை.

முதல்நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட் டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். படப்பிடிப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல்நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் சபதம் நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார். ‘‘என்ன சபதம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு, ‘‘உங் களை யாரும் தொடமுடியாதுன்னு எங்க கூட்டத்தினர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.

அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு புறப்பட்டார்.

மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளின் போதும் எம்.ஜி.ஆர். முதல்வராக வில்லை. தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் ‘ஹீரோ’வாக இருந்தார். என்றாலும் புகழ்மிக்க ஒரு நடிகரிடம் ரசிகர்களும் மக் களும் இந்த அளவுக்கு உரிமை எடுத்துக் கொள்ள முடியுமா? முதல்வரான பிறகும் அவரது இந்த எளிமையாக பழகும் குணம் மாறவில்லை என்பதுதான் எம்.ஜி.ஆரின் தனிச்சிறப்பு.

‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் பாடல் இது:

‘உலகமெனும் நாடக மேடையில்

நானொரு நடிகன்;

உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன்!’




பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது நடந்த உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேனை அவர் பிச்சாவரம் அழைத்துச் சென்று இயற்கை காட்சிகளைக் காட்டினார். ‘இவ்வளவு அழகிய இடத்தை சுற்றுலாத் தலமாக மாற்றலாமே?’ என்று அண்ணா விரும்பினார். பின்னர், எம்.ஜி.ஆர். முதல்வரானபின் பிச்சாவரம் சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டது.

குவைத்தில் இன்ஜினீயர்களுக்கு வேலை: தமிழக அரசு நிறுவனம் அறிவிப்பு

இந்திய தொலைத்தொடர்புத்துறையின் குவைத் திட்டப்பணிகளுக்கு இன்ஜினீயர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக தமிழக அரசின் நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.சமயமூர்த்தி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''இந்திய தொலைத்தொடர்புத்துறையின் குவைத் திட்டப்பணிகளுக்கு இன்ஜினீயர்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு பிஇ, பிடெக் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பட்டதாரிகள், சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டு பணிஅனுபவம் அவசியம். வயது 30-க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.56 ஆயிரம்.
மேலும், சிவில் மேற்பார்வையாளர் பணிக்கு டிப்ளமா தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு சம்பளம் ரூ.30,200 வழங்கப்படும். பிளஸ் 2 அல்லது டிப்ளமா தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணிஅனுபவம் உள்ளவர்கள் பைபர் ஸ்பைலைசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது 22 முதல் 50-க்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.26,800.
டிப்ளமா தேர்ச்சி பெற்றவர்கள் சிவில் ஆட்டோகாட் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.24,500. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு அனுபவத்துடன் குவைத் நாட்டின் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் கனரக வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.16,750. மேலும், எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் தொலைத்தொடர்புத்துறையில் 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் லேபர் பணிக்கு தேவைப்படுகிறார்கள். சம்பளம் ரூ.15,600. கூடுதல் விவரங்களை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 3 ஆண்டு பணி ஒப்பந்த அடிப்படையில் தகுதி மற்றும் அனுபவத்துக்கு ஏற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம், இலவச மருத்துவம், மருத்துவக் காப்பீடு, மிகைநேர பணி ஊதியம் (ஓ.டி) மற்றும் குவைத் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.
30 மாதங்கள் செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு உரிய தகுதி இருப்பின் தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்ரும் ஒரு புகைப்படத்தை omcresum@gmail.com என்ற இ-மெயில் மூலமாக அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய 044-22505886, 22502267 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 1, 2016

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது


THE HINDU TAMIL

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வு முன்பு இன்று நடைபெற இருக்கிறது. அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்தால் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படும் என தெரிகிறது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிற‌து. கர்நாடகா அரசு மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, ஆச்சார்யா மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நாகேஸ்வர ராவ், சேகர் நாப்டே உள்ளிட்டோர் தங்கள் தரப்பு இறுதி வாதங் களை கடந்த மாதமே நிறைவு செய்தனர்.

இதையடுத்து ஆச்சார்யா இறுதியாக ஜெயலலிதா தரப்பு முன் வைத்த வாதங்களுக்கு பதிலளித்து வந்தார்.

இவரது இறுதி தொகுப்பு மற்றும் பதில் வாதம் இன்னும் நிறைவடையவில்லை. எனவே கடந்த 12-ம் தேதி “இவ்வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் ஜூன் 1-ம் தேதி கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரித்து முடித்து விடலாம். அன்றைய தினம் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆச்சார்யா 2 மணி நேரமும், மற்றொரு மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஒரு மணி நேரமும் மட்டுமே தங்கள‌து வாதத்தை முன்வைக்க வேண்டும்.

இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தர‌ப்பும், தனியார் நிறுவனங்கள் தரப்பும் தங்களின் இறுதி தொகுப்பு மற்றும் பதில் வாதத்தை அடுத்த சில மணி நேரத்தில் முன் வைக்க வேண்டும்” எனக் காலக்கெடு விதித்து விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

தீர்ப்பு தேதி வாய்ப்பில்லை

இதன்படி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வின் முன்பாக நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே நீதிபதிகள் அனைத்து தரப்பும் தங்களது இறுதி வாதங்களை இன்றே முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். எனவே இன்றுடன் இவ்வழக்கின் அனைத்துக்கட்ட விசாரணையும், வாதங்களும் நிறைவடைந்தால் தீர்ப்பு ஒத்திவைக்கப்படலாம். ஆனால் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வாய்ப்பில்லை.

ஏனென்றால் மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் மட்டுமே விசாரணை முடிந்த பிறகு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கப்படும் தேதியை அறிவித்து வழக்கை ஒத்தி வைப்பார்கள். உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைப்பார்கள்.

அதேபோல கீழமை நீதி மன்றங்களில் இருப்பது போல தீர்ப்பை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க வேண்டும் என்ற விதிமுறையும் உச்ச நீதிமன்றத்தில் இல்லை. எனவே நீதிபதிகள் தங்களுக்கு வசதியான நாளில் தீர்ப்பு வழங்குவார்கள் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

சிரிக்க வைத்த என்னை அழ வைக்கின்றனர்: வாட்ஸ்அப் வதந்தியால் நடிகர் செந்தில் வேதனை

THE HINDU

எல்லோரையும் சிரிக்க வைத்த நான் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரப்பி அழ வைக்கின்றனர் என நடிகர் செந்தில் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திருச்சியில் நடிகர் செந்தில் அதிமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்போது அவர் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் மூலம் தக வல் பரவியது. அதிர்ச்சி அடைந்த அவர், தான் நலமுடன் இருப்பதாக அப்போது தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் நடிகர் செந்தில் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது. இதனால் கடும் மன உளைச்சலடைந்த அவர் நேற்று மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங் களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளேன். அதிமுகவில் தலைமைக் கழக பேச்சாளராகவும் இருக்கிறேன். தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன் நான் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது. இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு வந்தேன். அப்போது நான் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப் மூலம் மீண்டும் தகவல் பரவுவதாகக் கேள்விப்பட்டேன். வாட்ஸ்அப் மூலம் இந்த தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

திமுகவினர்தான் காரணம்

நடிகர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, நான் எல்லோரையும் சிரிக்க வைத்து பழக்கப்பட்டவன். ஆனால், இப்போது நான் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக என்னை அழ வைக்கின்றனர். இதன் பின்னணியில் திமுகவினர்தான் இருப்பதாக சந்தேகிக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்காக நான் பிரச்சாரம் செய்ததால், தற்போது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் திமுகவினர்தான் நான் இறந்துவிட்டதாக தகவல் பரப்புகின்றனர் என்றார்.

எம்ஜிஆர் 100 | 76 - கொடுத்தது கோடிகள்!


எம்ஜிஆர் 100 | 76 - கொடுத்தது கோடிகள்!

‘நாடோடி மன்னன்’ படத்தில் இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். தோன்றும் காட்சி.
M.G.R. உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,

அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங் களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.

கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவ ருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத் தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண் பர்களிடம் உதவி கேட்டார் கோபால கிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவ ருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல் லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.

அப்போது, வாஹினி ஸ்டுடியோவில் ‘பட்டிக்காட்டு பொன்னையா’ படப்பிடிப் பில் எம்.ஜி.ஆர். இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்,, சோகத் துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண் டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்.

கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலை மையை எம்.ஜி.ஆர். தெரிந்துகொண் டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசு வாசப்படுத்திக் கொண்டு, தனது நிலை மையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.

அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை?’’ என்று அவரை அன்போடு கடிந்து கொண் டார். ‘‘வாடகை பாக்கி எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘மூவாயிரம் ரூபாய்’’ என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முக வரியை கொடுத்துவிட்டு போகச்சொன் னார். எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.

‘எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து, சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.

அவரது நம்பிக்கை வீண்போக வில்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரின் உதவி யாளர்கள். தன்னைப் பற்றி அவர்கள் விசா ரிப்பதை அறிந்து, ஓடோடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாக பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை உதவியாளர்கள் கொடுத்தனர்.

‘‘இதில் பத்தாயிரம் ரூபாய் இருக் கிறது. வாடகை பாக்கியான மூவாயிரம் ரூபாய் போக மீதிப் பணத்தை உங் களையே வைத்துக்கொள்ளச் சொன் னார்’’ என்று கோபாலகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தெரி வித்தனர். நன்றிப் பெருக்கில் மழை யுடன் போட்டியிட்டபடி, கோபால கிருஷ்ணனின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் கொட்டியது. பின்னர், அவ ருக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தன. இது எம்.ஜி.ஆரின் உதவிதான் என்று தெரிந்து கொண்டார் கோபாலகிருஷ்ணன்.

இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால், அன்றிரவு வெகுநேரம் வரை எம்.ஜி.ஆர். சாப்பிடாமல் இருந்தார். தனது உதவியாளர்கள் திரும்பி வந்து, ‘‘கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துவிட்டோம்” என்று தெரிவித்த பிறகுதான் சாப்பிடச் சென்றார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘அரச கட்டளை’ படம், பல மாற்றங்கள் செய்யப்பட்டு, துப் பாக்கிச் சூடு சம்பவத்தால் எம்.ஜி.ஆர். பல மாதங்கள் நடிக்க முடியாமல் இருந்து, பின்னர், 1967-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தல் முடிந்து தாமதமாக வெளியானது. படத்தில், ‘‘அண்ணா... அண்ணா... என்று நாங்கள் அழைக்கும் காலம் போய் மன்னா... மன்னா... என்று அழைக்கும் காலம் வரப்போகிறது’’ என்ற வசனம் இடம்பெறும். அதாவது, பேர றிஞர் அண்ணா விரைவில் முதல் அமைச் சர் ஆவார் என்பதை விளக்குவதுபோல வசனம். ஆனால், படம் வந்தபோது அண்ணா முதல்வராகவே ஆகிவிட்டார்.

இந்தப் படத்தில், கவிஞர் வாலி எழுதி, பி.சுசீலாவின் இனிமையான குரலில் ‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன், என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்…’ என்ற அருமையான பாடல் உண்டு. படத்தில் ஜெயலலிதா பாடுவது போல காட்சி. எம்.ஜி.ஆரின் ஈகை குணத்தைப் புகழும் பின்வரும் வரிகள் வரும்போது, தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் கூரையைப் பிளக்கும்.

‘அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை

அந்த வாசலில் காவல்கள் இல்லை

அவன் கொடுத்தது எத்தனை கோடி

அந்தக் கோமகன் திருமுகம் வாழி…வாழி!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்


‘அரச கட்டளை’ படத்தை எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ர பாணியின் மகன் ராமமூர்த்தி தயா ரித்தார். சக்ரபாணி இயக்கினார். பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன் என எம்.ஜி.ஆர். பட முக்கிய வில்லன் கள் எல்லோரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

Tuesday, May 31, 2016

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

vikatan.com

இன்றைய டாக் ஆஃப் தி டவுன் என்ஜினியரிங். பெரும்பான்மையான +2 முடித்த மாணவர்களின் விருப்பமான கோர்ஸ் பட்டியலில் என்ஜினியரிங் இல்லை. 4 வருடங்களுக்கு முன் என்ஜினியரிங்கில் வாய்ப்பு கிடைக்காதா என்று மாணவர்கள் நினைத்தது மாறி, இப்போது என்ஜினியரிங் என்றால் தெறித்து ஓடுகிறார்கள். என்ஜினியரி்ங்கை ஏன் வெறுக்கிறோம் என்று தெரியாமலேயே மாணவர்கள் வெறுக்கிறார்கள். பெற்றோர்களும், ' ஏன் தங்கள் பிள்ளைகள் என்ஜினியரிங் படிக்க வேண்டும்?' என்பதை தெரிந்துகொள்ளாமலேயே பிடித்து தள்ளுகின்றனர்.

என்ஜினியரிங் படிப்பின் தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை பார்க்கலாம்.


என்ஜினியரிங் மோகம் எப்படி உருவானது?

1990 களுக்கு பிறகு உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய மூன்று 'மயமாக்கல்'களும் சராசரி இந்தியனின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்தன. குறிப்பாக ஆட்டோ மொபைல் மற்றும் ஐடி துறைகள் அபரிதமாக பெருகின. இதற்கு இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பது ஒரு காரணமாக இருந்தாலும் மற்றொரு காரணம் 'சீப் லேபர்'.

'சீப் லேபர்' என்றால் என்ன?

இதற்கு அர்த்தம் தெரிந்தால் டென்ஷன் ஆகிவிடுவீர்கள். சராசரியாக ஒரு 'மனித' மணி நேரத்துக்கு (Manhour) அமெரிக்க பிரஜைகளுக்கு சுமார் 170 டாலரில் இருந்து 280 டாலர் வரை சம்பளம் கொடுக்கவேண்டும். இது இந்திய மதிப்பில் 10,000 ரூபாயில் இருந்து 16,800 ரூபாய் வரை (இது ஒரு மணி நேர வேலைக்கு). ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை என்றால் கணக்கு போட்டுப் பாருங்கள். ஆனால் அதே வேலையை செய்ய, கல்லூரியில் டாப் ரேங்க் பெற்ற திறமைசாலியான இந்திய என்ஜினியர்களுக்கு 30 டாலர்கள் கொடுத்து வேலை வாங்குகிறார்கள். அப்படியானால் 170 டாலரில் 30 டாலர்கள் போனால் முதலாளியின் பாக்கெட்டிற்கு போவது 150 டாலர் (ஒரு மணி நேரத்துக்கு). இதுவே சுமார் 10,000 தொழிலாளிகள் கொண்ட பெரிய நிறுவனங்களின் மாத வருமானம் என்னவாக இருக்கும் என்பதை உங்கள் கணிதத் திறனிடமே விட்டுவிடுகிறோம்.

சரி பணம் குறைவாக இருந்தால் என்ன, என்ஜினியரிங்குக்கு வேலை இருக்கிறதே?

'வேலை இருக்கு...ஆனால் இல்லை' என்ற ‘தெளிவான பதில்’தான் இதற்கு விடை. இங்கு 2 விஷயங்களை உற்று நோக்க வேண்டி இருக்கிறது

1) என்ஜினியர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள், அவர்களை எப்படி பயன்படுத்துகிறது என்பதை கண்ணை துடைத்து பார்க்க வேண்டும். ஐடி சம்பந்தமான வேலைகளை 'பிராஜக்ட் கான்ட்ராக்ட்' எடுக்கிறார்கள். Analysis, Design, Development, Implementation and Evaluation என்ற ஐடி படிநிலைகளில், உடலுக்கு அதிக வேலை இருப்பதும், அதிக மனித ஆற்றல் தேவைப்படுவதும் நான்காவதாக செய்யப்படும் implementation-க்குதான். இங்கே implementation என்பது கிட்டத்தட்ட கொத்தனார் வேலைக்கு சமம். செங்கல்லை எடுக்க வேண்டியது, அதை அடுக்க வேண்டியது, சிமெண்ட் பூசவேண்டியது, மறுபடியும் செங்கல், சிமெண்ட்... அதாவது ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வது (Repeatable jobs). ஐடி கம்பெனிகளில் coding, testing எல்லாம் இந்த வகையை சேர்ந்தவைதான். ஆனால் என்ஜினியரிங் அறிவு தேவைப்படுவதோ மற்ற 4 படி நிலைகளுக்குத்தான். பெரும்பாலும் யாரோ ஒருவர் உருவாக்கிய பிராஜெக்டில் மாற்றங்களை மட்டும் சேர்க்கின்றனர். என்ஜினியர்கள் என்ற பெயரை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தரலாம். ஆனால் என்ஜினியர்களின் திறமையை இங்கு முழுமையாக பயன்படுத்துவது இல்லை.



2) இரண்டாவது சிக்கல் ஆட்டோமேஷன். பெரும்பாலான தொழிற்சாலைகளை இன்று ரோபோக்கள்தான் இயக்குகின்றன. என்ஜினியர்களின் இடத்தை இவை ஆக்கிரமித்து விட்டன. ஒரு கார் கம்பெனியில் 5000 பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், 4500 பேர் இந்த அசெம்ப்ளி வேலையைத்தான் செய்வார்கள். இந்த அசெம்ப்ளி வேலைக்கு குறைந்த சம்பளத்தில், டிப்ளமோ அல்லது சில இடங்களில் +2 மாணவர்களையும் வேலைக்கு எடுக்கிறார்கள். இங்கு என்ஜினியர்களுக்கான தேவை மிகக் குறைவு. அதிலும் அந்நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்ததோ அங்குள்ள என்ஜினியர்கள்தான் இங்கு முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். எனவே மிகத் திறன் வாய்ந்த, சில எண்ணிக்கையிலான என்ஜினியர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள். அரசு பெரும் முயற்சி செய்து, பல பன்னாட்டு தொழிற்சாலைகளை இந்தியாவில் உருவாக்கச் செய்தால் கூட, ஆண்டுக்கு 2 லட்சம் என்ஜினியர்களை இவற்றில் பணியமர்த்த முடியுமா என்பது சந்தேகம்தான்.



திறன் வாய்ந்த என்ஜினியர்களை கல்லூரிகள் உருவாகின்றனவா?

எப்படி முடியும்? டாப் கல்லூரிகளில் மட்டுமே தகுதி வாய்ந்த ஆசிரியர்களை காண முடிகிறது. மற்ற கல்லூரிகளில் பி.இ படித்துவிட்டு வேறெங்கும் வேலை கிடைக்காததால், ஆசிரியர்களாக அடைக்கலம் தேடுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். இவர்களிடம் பயிலும் மாணவர்கள் எத்தகைய திறனைப் பெற முடியும் என்பது கேள்விக்குறியே.

'100% பி்ளேஸ்மென்ட்' என்ற வார்த்தையை பெரிதாக போட்டுவிட்டு, ‘நோக்கி’ என்ற வார்த்தையை கண்ணுக்கு தெரியாதபடி அச்சிட்டு பேனர்கள் வைத்தும், 'கல்வி வழிகாட்டி' நிகழ்ச்சிகளை நடத்தி விளம்பரம் செய்தும் 'சீட்' நிரப்புவதில் அக்கறை கட்டும் கல்லூரிகள், மாணவர் திறன் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் எந்த ஒரு முன்னறிவும் இல்லாமல் இன்டர்வியூவுக்கு செல்லும் மாணவர்கள், வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.

இந்த காரணங்களை எல்லாம் நீங்கள் கருத்தில் கொண்டிருந்தீர்கள் என்றால், நீங்கள் பொறியியல் படிப்பை வெறுப்பது நியாயமானதுதான்.



அப்படியனால் என்ஜினியரிங்க் படிக்கக் கூடாதா...?

எந்த படிப்பும் மோசமானது அல்ல. இன்றைக்கும் பொறியாளர்கள் தேவைப்படும் பல நிறுவனங்கள் உள்ளன. ஒரு நாட்டை செதுக்குவது பொறியாளர்கள்தான். தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் என்று மட்டும் இல்லாமல் வங்கி, மருத்துவம், சமூக உள்கட்டமைப்பு போன்ற சேவை பிரிவுகளிலும் பொறியாளர்களுக்கான தேவை உள்ளது.

என்ஜினியர்களுக்கென்று சில தனித் திறன்கள் இருக்கும். அவர்களுடய பகுப்பாய்வு மற்றும் காரணி அறிவு ( Analysis and Reasoning) அணுகும் திறன் ( Approachability), எண்கணித திறமை ( Numerical Ability), தர்க்க திறமை ( Logical) போன்ற திறன்கள்தான் மற்ற துறை மாணவர்களுக்கும் பொறியியல் மாணவர்களுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கும். இத்திறன் கொண்ட மாணவர்களை அள்ளிக்கொண்டு செல்ல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.

அதையும்தாண்டி இந்தியாவின் தற்போதைய புதிய ட்ரெண்ட், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள். ஒரு சின்ன ரூமில் 4 லேப்டாப்களை வைத்துக் கொண்டு, இரவு பகல் பாராமல் உழைக்கத் தயாராக இருக்கும் மாடர்ன் இந்திய இளைஞர்களுக்கான களம் இது. திறமைசாலிகளை வேலைக்கு எடுக்கும் அளவுக்கான 'நிதி பலம்' ஸ்டார்ட் அப்களிடம் இருக்காது. இங்கு உங்கள் திறன்தான் முதலீடு. இங்கு ஊழியரும் நீங்களே... சி.இ.ஓவும் நீங்களே. இந்தியா முழுவதும் புதுமையான பிஸ்னஸ் ஐடியாக்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் பட்டதாரிகள். பெரியப் பெரிய நிறுவனங்களால் செயல்படுத்த முடியாத விஷயங்களை, இந்த என்ஜினியர்கள் அசால்ட்டாக செய்து காட்டுகின்றனர். அதனால்தான் பன்னாட்டு நிறுவனங்களும், தொழிலதிபர்களும் இவர்கள் மீது முதலீட்டை கொட்டுகின்றனர்.



பல லட்சம் சம்பளத்துக்கு வேலை கொடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இருந்த போதும் அவற்றை உதறிவிட்டு, குறைந்த சம்பளத்துக்கு 30% ஐ.ஐ.டி மாணவர்கள் இந்திய ஸ்டார்ட் அப்களில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர். காரணம், ஸ்டார்ட்அப்களில் நீங்கள்தான் படைப்பாளி. உங்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை. சொந்த முயற்சியில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுடைய முழு திறனையும் பயன்படுத்த முடியும். திறனை வளர்த்துக் கொள்ளவும் முடியும். உங்கள் உழைப்புக்கான முழு கிரெடிட்ஸ் உங்களுக்கே. இவ்வளவையும் மீறி, 'நான் ஒரு படைப்பாளி' என்ற கர்வம் உங்களுக்கு கிடைக்கும். இந்த கர்வம், உங்களை மேலே தள்ளிக் கொண்டே இருக்கும். ஏனெனில் என்ஜினியர்கள் நல்ல படைப்பாளிகள், அடுத்தவரின் கீழ் வேலை செய்ய பிடிக்காதவர்கள். எனவே தொழில் முனைவோராக விரும்புபவர்களுக்கு ஸ்டார்ட்அப்கள் கை கொடுக்கும்.

மேலே கூறியவற்றை புரிந்து கொண்டு, மிகுந்த ஆர்வத்தோடு பொறியியல் படிக்க முடிவெடுத்தீர்களானால் ஆல் தி பெஸ்ட்.

- ஆரா ( மனிதவள மேம்பாட்டு வல்லுநர்), ரெ.சு.வெங்கடேஷ்

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...