Friday, June 3, 2016

எம்ஜிஆர் 100 | 78 - எடுத்துக்கொண்ட கடமைக்கே முதலிடம்!

மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படப்பிடிப்பை தொடங்கி வைக்க வந்த எம்.ஜி.ஆரை கைகுலுக்கி வரவேற்கிறார் இன்று 93-வது பிறந்தநாள் காணும் கருணாநிதி.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. அரசியலில் வெற்றி பெற்றதற்கு அவர் ஒரு சினிமா நடிகர் என்பது மட்டுமே காரணம் அல்ல. அதுதான் காரணம் என்றால் அரசியலில் ஈடுபட்ட நடிகர்கள் எல்லோருமே வெற்றி பெற்றிருக்க வேண்டுமே? அரசியலில் மற்ற நடிகர்களுக்கு கிடைக்காத வெற்றியும் புகழும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே கிடைத்ததற்கு காரணம், அவரது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு. தாங்க முடியாத துக்கத்தைக்கூட மறைத்துக் கொண்டு அரசியலில் உழைத்தவர் அவர்.

1962-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல். அதற்கு முந் தைய தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட திமுக பதி னைந்து தொகுதிகளில் வென்றது. எனவே, இந்தத் தேர்தலில் காங்கிரசின் வியூகம் பலமானதாக இருந்தது. காஞ்சி புரத்தில் பேரறிஞர் அண்ணாவை எதிர்த்து பஸ் முதலாளி நடேச முதலியார் களமிறக்கப்பட்டார். 1957-ம் ஆண்டு தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, இம்முறை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டார்.

தமிழகம் முழுவதும் திமுகவை ஆதரித்து இரவு பகல் பார்க்காமல் எம்.ஜி.ஆர். தீவிர பிரசாரம் மேற்கொண் டார். இப்போது இருப்பதைப் போல இரவு பத்து மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும் என்ற தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு எல்லாம் அப்போது கிடை யாது. தேர்தல் நேரங்களில் ஒரு இடத் துக்கு மாலையில் எம்.ஜி.ஆர். பிரசாரத் துக்கு வருவதாக அறிவிக்கப்படும். வழிநெடுக மக்களின் வரவேற்பால் கூட்டத்துக்கு வர தாமதமாகி, அதிகாலையில் எம்.ஜி.ஆர். வந்த நிகழ்ச்சிகள் உண்டு. அதுவரையில் கூட்டம் கலையாமல் இருக்கும்.

எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதி காசநோயால் பல ஆண்டு களாக பாதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. அந்தச் சூழலிலும், திமுகவுக்காக எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்து கொண்டிருந்தார். குறிப்பாக, தஞ்சாவூர் தொகுதியில் தனது நண்பரான கருணாநிதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையான பிரசாரம் மேற்கொண்டார். ஒரே நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களில் பேசினார்.

தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர். வேனில் பிரசாரம் மேற்கொண்ட போது, வயல்களில் வேலை செய்த விவசாயிகள், பெண்கள் அவரைப் பார்த்து ஓடி வந்தனர். அவர் களிடம் எம்.ஜி.ஆர். நலம் விசாரித்து விட்டு, ‘‘யாருக்கு ஓட்டுப் போடுவீங்க?’’ என்று கேட்டதற்கு, ‘‘ஐயாவுக்குத்தான் ஓட்டு போடுவோம்’’ என்று பதிலளித்தனர். எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். செல்லும் வழிகளில் எல்லாம் ‘‘ஐயாவுக் குத்தான் எங்கள் ஓட்டு’’ என்று மக்கள் கூறவே, அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஏனென்றால், எம்.ஜி.ஆரை கிராமப் புறங்களில் வயதில் சிறியவர்கள் ‘தலைவரே’ என்றும் ‘அண்ணே’ என்றும் அழைப்பார்கள். முதியவர்களும் பெண்களும் ‘சாமி’ எனவும் ‘மகராசா’ என்றும்தான் அழைப்பார்கள். ‘இது என்ன புதிதாக ஐயா என்று அழைக்கிறார்களே?’ என்று எம்.ஜி.ஆருக்கு சந்தேகம். மீண்டும் ஒரு இடத்தில் மக்களை சந் தித்தபோது, ‘‘ஐயாவுக்கு ஓட்டு’’ என்று சொன்னவர்களிடம் ‘‘யாரை சொல்கிறீர் கள்?’’ என்று கேட்ட எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி. மக்களால் குறிப்பிடப்பட்ட அந்த ‘ஐயா’… பரிசுத்த நாடார்!

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே புதுஆற்றின் கரை ஓரத்திலிருந்து சிறிது தூரம் சென்றால் ‘யாகப்பா டாக்கீஸ்’ வரும். அந்த தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ உட்பட அவரது பல படங்கள் வெளியாகி நூறு நாட்கள் ஓடியுள்ளன. யாகப்ப நாடார் என்ற செல்வந்தரின் பெயரால் அமைந்திருந் தது அந்த திரையரங்கம். இப்போது அந்த தியேட்டர் மூடப்பட்டுவிட்டது. யாகப்ப நாடாரின் மகன்தான் பரிசுத்த நாடார். செல்வாக்கான குடும்பம். அவர்தான் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர். அவரை ‘ஐயா’ என்று மக்கள் அழைப்பது வழக்கம். அவருக்கு ஆதரவாகத்தான் எம்.ஜி.ஆர். ஓட்டு கேட்க வந்துள்ளார் என்று கிராம மக்கள் நினைத்தனர்.

சுதாரித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., அதன்பிறகு வழியில் மக்களை சந்திக் கும்போது, ‘‘நான் திமுக வேட்பாளர் கருணாநிதிக்கு ஓட்டு கேட்டு வந்திருக் கிறேன். நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும்’’ என்று வலியுறுத்திக் கூறினார். கடும் போட்டி யில் அந்தத் தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு எம்.ஜி.ஆரின் தீவிர பிரசாரம் முக்கிய காரணமாக இருந்தது என்று சொன்னால் மிகையல்ல. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூரில் காங்கிரஸுக்கு, குறிப்பாக பரிசுத்த நாடாருக்கு இருந்த செல்வாக்கு அப்படிப்பட்டது.

தஞ்சாவூரில் தேர்தல் பிரசாரத்தின் போது வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தார். அவரது வேனைத் தொடர்ந்து பின்னாலேயே வேகமாக வந்து கொண்டிருந்தது ஒரு கார். அரசியல் விரோதிகள் தாக்க வருகிறார் களோ என்று எம்.ஜி.ஆருடன் இருந்தவர் களுக்கு சந்தேகம். இருந்தாலும் ‘‘என்னதான் நடக்கிறது பார்ப்போம். காரை நிறுத்து’’ என்று டிரைவரிடம் எம்.ஜி.ஆர். கூறினார்.

எந்த நிலைமை வந்தாலும் சந்திக்க எம்.ஜி.ஆரும் உடனிருந்தவர்களும் தயாரானபோது, பின்னால் வேகமாக வந்து நின்ற காரிலிருந்து இறங்கியவர் நடிகர் கே.கண்ணன்! பதற்றத்துடன் இறங்கிய அவர் இடிபோன்ற செய்தியை சொன்னார். சென்னையில் எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி இறந்துவிட்டார் என்ற செய்திதான் அது. கண்கலங்கிய எம்.ஜி.ஆரிடம் இருந்து சில நிமிடங்கள் பேச்சே இல்லை. அப்படியே உடைந்துபோய் உட்கார்ந்துவிட்டார்.

தயங்கியபடியே அவரிடம், ‘‘சென் னைக்கு திரும்பலாம்’’ என்று சொன்ன உதவியாளர்களிடம், ‘‘இல்லை. இன்று இரவு பிரசார பொதுக்கூட்டம் இருக் கிறது. நான் போகவில்லை என்றால் கட்சியினரும் மக்களும் ஏமாந்துவிடுவார்கள். பொதுக்கூட்டம் முடிந்தபின் அப்படியே கிளம்பிவிடலாம்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதன் படியே இரவில் கூட்டத்தில் பேசி விட்டு பதினொரு மணிக்கு மேல் சென்னை புறப்பட்டார். கூட் டத்தில் பேசி முடிக்கும்வரை தனது மனைவி இறந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!

பொது வாழ்க்கை என்று வந்து விட்ட பிறகு... குடும்பம், உறவு, பிரிவுகளைவிட, எடுத்துக் கொண்ட கடமைக்கே முதலிடம் என்பதை, இதைவிடத் தெளிவாக எப்படி ஒரு தலைவர் உலகத்துக்குக் காட்ட முடியும்?



1967 மற்றும் 71-ம் ஆண்டுகளில் பரங்கிமலை தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டப்பேரவைக்கு எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972-ம் ஆண்டு பரங்கிமலை தொகுதி எம்எல்ஏ-வாக எம்.ஜி.ஆர். இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினருக்கான அடையாள அட்டை.

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்


1962-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிடவில்லை. தமிழகம் முழுவதும் திமுகவுக்காக பிரசாரம் செய்தார். அந்தத் தேர்தலில் திமுக 50 இடங் களில் வென்றது. எம்.ஜி.ஆரின் உழைப்பை பாராட்டி அவருக்கு எம்.எல்.சி. பதவி அளித்து மகிழ்ந்தார் பேரறிஞர் அண்ணா!

கூடுதல் எம்பிபிஎஸ் சீட்டுகள் இந்த முறையும் இல்லை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடரும் ஏமாற்றம்

THE HINDU TAMIL

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு ஆண்டும் எம்பிபிஎஸ் சீட்டுகள் எண்ணிக்கை 250 ஆக அதிகரிக்கப்படாததால், 150 சீட்டுகளுக்கே மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவர்களும், பெற்றோர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கடந்த 1954-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்க இங்கு 150 சீட்டுகள் உள்ளன. ஆரம்பகாலத்தில், இக்கல்லூரியில் 183 எம்பிபிஎஸ் சீட்டுகள் வரை இருந்துள்ளன. அதன்பின் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக எம்பிபிஎஸ் சீட்டுகள் எண்ணிக்கை குறைந்து, கடந்த ஆண்டு 155 சீட்டாக இருந்தது. இந்த ஆண்டு மேலும் 5 சீட்டுகள் குறைந்து 150 சீட்டுகளில் வந்து நிற்கிறது. நடப்பாண்டு இந்த மருத்துவக் கல்லூரியில் கடந்த 26-ம் தேதி முதல் எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. நேற்று வரை 1,454 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வரும் 6-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட்டு கள் எண்ணிக்கையை 150-ல் இருந்து 250 ஆக அதிகரிக்க மருத்துவமனை நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆனால், அதற்கான கட்டமைப்பு வசதிகள் மருத்துவமனையிலும், மருத்துவக் கல்லூரியிலும் இல்லை என இந்திய மருத்துவக் கவுன்சில் கூறி ஆய்வுக்கே வராமல் இருந்தது.

இந்நிலையில் சில மாதங் களுக்கு முன், 250 சீட்டுகள் நடப்பாண்டில் அதிகரிக்கப் படுவ தற்கான ஒப்புதல் வழங்கி, இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வுக்கு வருவதாகக் கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில் மதுரை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த பவள விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வரும் கல்வி ஆண்டு முதல் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரி க்கப்படும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

அமைச்சர் அளித்த வாக்கு றுதியால் எம்பிபிஎஸ் சீட்டுகள் எண்ணிக்கை நடப்பாண்டு அதிக ரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் குழு எம்பி பிஎஸ் சீட்டுகள் எண்ணிக்கை அதிகரிப் பதற்கான ஆய்வுக்கே கடைசி வரை வரவில்லை. அதனால், நட்பபாண்டும் 150 எம்பிபிஎஸ் சீட்டுகளுக்கே மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால் வழக்கம்போல் ஏமா ற்றம் தொடர்கிறது.

இதுகுறித்து மருத்துவக் கல் லூரி பேராசிரியர்கள் கூறியது: தமிழகத்திலேயே அதிகளவு நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருந்தபோதிலும் இங்கு போது மான விரிவுரைக் கூடங்கள், ஆய்வுக் கூடங்கள் இல்லை. பேராசிரியர்கள் பற்றாக்குறை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை இல்லை.

மருத்து வமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தற்போதுதான் தமிழக அரசு மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து அதிகப்படியான நிதிகளை ஒதுக்கி வருகிறது. இப்பணிகள் முடிய இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அதனால், கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்படும்பட்சத்திலேயே கூடுதல் எம்பிபிஎஸ் சீட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றனர்.

மருத்துவக் கல்லூரி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஒவ் வொரு ஆண்டும் அடுத்த ஆண்டு முதல் கூடுதல் எம்பிபிஎஸ் சீட்டுகள் கிடைக்கும் என நம்பிக்கை அளிக்கப் படுகிறது.

ஆனால், கடைசியில் ஏமாற்றமே கிடைக்கிறது. தற்போது கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணி நிறைவடையும் நிலையில் இருக்கிறது. அடுத்த ஆண்டு கூடுதல் சீட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

மதுரா கலவர பலி 24 ஆக அதிகரிப்பு: 124 பேர் கைது

PTI 3.6.2016


உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும்போது ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.

கலவரத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் சிகிச்சைப் பலனின்றி இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரித்தது. பலியானவர்களில் 22 பேர் போராட்டக்காரர்கள், இருவர் போலீஸார்.

மதுரா சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு மதுரா நகர பிராந்திய ஆணையருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு போலீஸ் டிஜிபி ஜவேத் அகமது, உள்துறை முதன்மைச் செயலாளர் தெபாசிஷ் பாண்டா ஆகியோர் விரைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச டிஜிபி ஜாவேத் அகமது கூறும்போது, "மதுரா கலவரம் தொடர்பாக 124 பேரை கைது செய்துள்ளோம். முக்கிய குற்றவாளி ராமிருக்‌ஷ் யாதவை தேடி வருகிறோம். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவுள்ளோம்" என்றார்.

நடந்த சம்பவம் குறித்து போலீஸ் (சட்டம் - ஒழுங்கு) ஐ.ஜி. ஹெச்.ஆர்.சர்மா கூறும்போது, "மதுரா நகரின் ஜவஹர் பாக் பகுதியில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்து. அதனையடுத்து சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அங்கிருந்த 3000-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் ஆசாத் பாரத் விதிக் விசாரிக் கிராந்தி சத்யாகிரஹி (Azad Bharat Vidhik Vaicharik Kranti Satyagrahi) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறிது நேரத்தில் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

முதலில் போலீஸார் தடுப்புகளாலும், கண்ணீர் புகை குண்டுகளாலும் கலவரக்காரர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால், கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மதுரா நகர எஸ்.பி. முகுல் துவிவேதி, ஃபரா காவல் நிலைய அதிகாரி சந்தோஷ்குமார் ஆகியோர் என அடையாளம் தெரியவந்துள்ளது. 20-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்துள்ளனர்" என்றார்.

முதல்வர் இரங்கல்:

மதுரா கலவரத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த போலீஸாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.20 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார். கலவரப் பகுதிக்கு கூடுதல் போலீஸ் படையை அனுப்ப உத்தரவிட்டுள்ளதோடு குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தியுள்ளார்.

கலவரத்தின் பின்னணி என்ன?

ஜவஹர் பாக் பகுதி உத்தரப் பிரதேச மாநில அரசின் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடம். 100 ஏக்கருக்கும் மேல் நிலப்பரப்பு கொண்ட பகுதி. இப்பகுதியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தர்ணா போர்வையில் ஆக்கரமித்தனர் ஆசாத் பாரத் விதிக் விசாரிக் கிராந்தி சத்யாகிரஹி அமைப்பினர். இவர்கள் பாபா ஜெய் குருதியோ பிரிவில் இருந்து பிரிந்தவர்களாவர். இவர்களது பிரதான கோரிக்கைகள் குடியரசுத் தலைவர், பிரதமர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள இந்திய ரூபாய்க்கு பதிலாக ஆசாத் ஹிந்த் பவுஜ் என்ற பெயரில் பணத்தை அச்சிட வேண்டும். ஒரு ரூபாய் விலையில் 60 லிட்டர் டீசல், 40 லிட்டர் பெட்ரோல் வழங்க வேண்டும் போன்றவையாகும். இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து அவ்வப்போது சில போராட்டங்களை நடத்துகின்றனர். இரண்டு ஆண்டுகளாக அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசு நிலத்தில் இருந்து ஆக்கரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையிலேயே ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸார் ஜவஹர் பாக் வந்துள்ளனர்.

எம்ஜிஆர் 100 | 77 - நரிக்குறவர்கள் அன்பு


‘இதயக்கனி’ படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரை ஒரு இளைஞர் முத்தமிடுகிறார். மற்றொரு இளைஞர் மெய்மறந்து எம்.ஜி.ஆரை வணங்குகிறார்.

எம்ஜிஆர் 100 | 77 - நரிக்குறவர்கள் அன்பு


M.G.R. மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர். இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. அந்த அளவுக்கு ரசிகர்களையும் சாதாரண மக்களையும் எம்.ஜி.ஆர். நேசித்தார். சில நேரங்களில் அவர்கள் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்வார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் முகத் துவார பகுதியில் எடுக்கப்பட்டன. அது வரை எந்தப் படங்களிலும் இடம்பெறாத அபூர்வ லொகேஷன் அது. அதேநேரம், மனித நடமாட்டத்தை அதிகம் பார்க்க முடியாத, மீனவர்களேகூட அப்போது போக அஞ்சிய இடம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து அங்கும் மக்கள் வந்துவிட்டனர்.

அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர். மாறு வேடத்தில் இருப்பார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர் கள் எம்.ஜி.ஆரை காண வேண்டும் என்ற ஆவலில் தண்ணீரில் குதித்து நீந்தி அவர் இருந்த இடத்துக்கு வந்துவிட்டனர். அந்த இளைஞர்களை அழைத்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் நலம் விசாரித்தார். அப் போது, ஒரு இளைஞர் எதிர்பாராமல் எம்.ஜி.ஆரை கட்டிக்கொண்டு முத்தமிட்டார். கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் அந்த இளைஞரின் அன்பை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார்.

அந்தப் புகைப்படம்தான் எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்துகிறது! எம்.ஜி.ஆரை முத்தமிடும் இளைஞரின் முகமே தெரியவில்லை. அந்த அளவுக்கு அன்பின் வெளிப்பாடாய் ஆழமாக தன் முத்தத்தை பதிக்கிறார். அருகில் நிற்கும் இளைஞர் எம்.ஜி.ஆரைப் பார்த்த பரவசததில் கும்பிட்ட கையை கீழிறக்காமல் சிரித்தபடி அவரை பார்த்துக் கொண்டே நிற்கிறார். நீரில் நீந்தி வந்த தன் அடையாளமாக அவர் அணிந்துள்ள டிராயர் தண்ணீரில் நனைந்து உடலோடு ஒட்டியுள்ளது. முத்தமிடும் ரசிகரை அணைத்தபடி அவரது அன்பு மழையில் திளைக்கும் எம்.ஜி.ஆரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம். அன்பு மனங்களின் சந்திப்பு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி; பார்ப்பவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து சமீபத்தில்தான், நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நரிக்குற வர் இன மக்கள் மீது எம்.ஜி.ஆர். மிகுந்த அன்பு கொண்டவர். ‘ஒளி விளக்கு’ படத் தில் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க…’ பாடலில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நரிக்குறவர்கள் வேடத்தில் ஆடிப் பாடுவர்.

அந்தப் பாடலின்போது நடனத்தில் எம்.ஜி.ஆர். கலக்கியிருப்பார். தியேட்ட ரில் ஆடாதவர்கள் குறைவு. அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக நரிக்குறவர் இன மக்களை வரவழைத்து, அவர்களை ஆடச் சொல்லி கவனித்து எம்.ஜி.ஆர். பயிற்சி எடுத்துக் கொண்டார். ‘நவரத் தினம்’ படத்தில் ‘குருவிக்கார மச்சானே…’ பாடல் காட்சியிலும் எம்.ஜி.ஆரின் மூவ்மென்ட்ஸ் அற்புதமாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். கொண்டாடிய ஒரே பண்டிகை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை. அன்றைய தினம், கட்டுக் கட்டாக பணத்தை வைத்துக் கொண்டு, தன்னைக் காண வருவோருக்கெல்லாம் கைக்கு வரும் பணத்தைக் கொடுத்து மகிழ்வார். ஒருமுறை பொங்கல் நாளில் ஏராளமான நரிக்குறவர்கள் எம்.ஜி.ஆரை காண, அவரது ராமாவரம் தோட்டத்துக்கு வந்தனர். எம்.ஜி.ஆரை கண்டதும் உற்சாகக் கூச்சலிட்டனர். அவர் களை அருகே வருமாறு அழைத்த எம்.ஜி.ஆர்., கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள், அவர் எவ்வளவோ தடுத்தும் அவரது காலில் விழுந்து வணங்கினர்.

நரிக்குறவர் இன மக்களை எந்தவித பேதமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களது குழந்தைகளை வாங்கிக் கொஞ்சினார். சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் தங்கள் மீது அவர் காட்டிய பாசத்தையும் அன்பையும் பார்த்து வந்தவர்கள் கண்கலங்கினர்.

வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்துவிட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரண மாகக் கூறினார். இதன் தொடர்ச்சி யாக மறுநாள் நடந்ததுதான் வேடிக்கை.

முதல்நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட் டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். படப்பிடிப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல்நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் சபதம் நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார். ‘‘என்ன சபதம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு, ‘‘உங் களை யாரும் தொடமுடியாதுன்னு எங்க கூட்டத்தினர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.

அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு புறப்பட்டார்.

மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளின் போதும் எம்.ஜி.ஆர். முதல்வராக வில்லை. தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் ‘ஹீரோ’வாக இருந்தார். என்றாலும் புகழ்மிக்க ஒரு நடிகரிடம் ரசிகர்களும் மக் களும் இந்த அளவுக்கு உரிமை எடுத்துக் கொள்ள முடியுமா? முதல்வரான பிறகும் அவரது இந்த எளிமையாக பழகும் குணம் மாறவில்லை என்பதுதான் எம்.ஜி.ஆரின் தனிச்சிறப்பு.

‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் பாடல் இது:

‘உலகமெனும் நாடக மேடையில்

நானொரு நடிகன்;

உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன்!’




பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது நடந்த உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேனை அவர் பிச்சாவரம் அழைத்துச் சென்று இயற்கை காட்சிகளைக் காட்டினார். ‘இவ்வளவு அழகிய இடத்தை சுற்றுலாத் தலமாக மாற்றலாமே?’ என்று அண்ணா விரும்பினார். பின்னர், எம்.ஜி.ஆர். முதல்வரானபின் பிச்சாவரம் சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டது.

குவைத்தில் இன்ஜினீயர்களுக்கு வேலை: தமிழக அரசு நிறுவனம் அறிவிப்பு

இந்திய தொலைத்தொடர்புத்துறையின் குவைத் திட்டப்பணிகளுக்கு இன்ஜினீயர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக தமிழக அரசின் நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.சமயமூர்த்தி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''இந்திய தொலைத்தொடர்புத்துறையின் குவைத் திட்டப்பணிகளுக்கு இன்ஜினீயர்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு பிஇ, பிடெக் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பட்டதாரிகள், சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டு பணிஅனுபவம் அவசியம். வயது 30-க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.56 ஆயிரம்.
மேலும், சிவில் மேற்பார்வையாளர் பணிக்கு டிப்ளமா தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு சம்பளம் ரூ.30,200 வழங்கப்படும். பிளஸ் 2 அல்லது டிப்ளமா தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணிஅனுபவம் உள்ளவர்கள் பைபர் ஸ்பைலைசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது 22 முதல் 50-க்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.26,800.
டிப்ளமா தேர்ச்சி பெற்றவர்கள் சிவில் ஆட்டோகாட் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.24,500. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு அனுபவத்துடன் குவைத் நாட்டின் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் கனரக வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.16,750. மேலும், எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் தொலைத்தொடர்புத்துறையில் 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் லேபர் பணிக்கு தேவைப்படுகிறார்கள். சம்பளம் ரூ.15,600. கூடுதல் விவரங்களை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 3 ஆண்டு பணி ஒப்பந்த அடிப்படையில் தகுதி மற்றும் அனுபவத்துக்கு ஏற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம், இலவச மருத்துவம், மருத்துவக் காப்பீடு, மிகைநேர பணி ஊதியம் (ஓ.டி) மற்றும் குவைத் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.
30 மாதங்கள் செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு உரிய தகுதி இருப்பின் தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்ரும் ஒரு புகைப்படத்தை omcresum@gmail.com என்ற இ-மெயில் மூலமாக அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய 044-22505886, 22502267 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 1, 2016

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது


THE HINDU TAMIL

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வு முன்பு இன்று நடைபெற இருக்கிறது. அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்தால் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படும் என தெரிகிறது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிற‌து. கர்நாடகா அரசு மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, ஆச்சார்யா மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நாகேஸ்வர ராவ், சேகர் நாப்டே உள்ளிட்டோர் தங்கள் தரப்பு இறுதி வாதங் களை கடந்த மாதமே நிறைவு செய்தனர்.

இதையடுத்து ஆச்சார்யா இறுதியாக ஜெயலலிதா தரப்பு முன் வைத்த வாதங்களுக்கு பதிலளித்து வந்தார்.

இவரது இறுதி தொகுப்பு மற்றும் பதில் வாதம் இன்னும் நிறைவடையவில்லை. எனவே கடந்த 12-ம் தேதி “இவ்வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் ஜூன் 1-ம் தேதி கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரித்து முடித்து விடலாம். அன்றைய தினம் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆச்சார்யா 2 மணி நேரமும், மற்றொரு மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஒரு மணி நேரமும் மட்டுமே தங்கள‌து வாதத்தை முன்வைக்க வேண்டும்.

இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தர‌ப்பும், தனியார் நிறுவனங்கள் தரப்பும் தங்களின் இறுதி தொகுப்பு மற்றும் பதில் வாதத்தை அடுத்த சில மணி நேரத்தில் முன் வைக்க வேண்டும்” எனக் காலக்கெடு விதித்து விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

தீர்ப்பு தேதி வாய்ப்பில்லை

இதன்படி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வின் முன்பாக நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே நீதிபதிகள் அனைத்து தரப்பும் தங்களது இறுதி வாதங்களை இன்றே முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். எனவே இன்றுடன் இவ்வழக்கின் அனைத்துக்கட்ட விசாரணையும், வாதங்களும் நிறைவடைந்தால் தீர்ப்பு ஒத்திவைக்கப்படலாம். ஆனால் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வாய்ப்பில்லை.

ஏனென்றால் மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் மட்டுமே விசாரணை முடிந்த பிறகு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கப்படும் தேதியை அறிவித்து வழக்கை ஒத்தி வைப்பார்கள். உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைப்பார்கள்.

அதேபோல கீழமை நீதி மன்றங்களில் இருப்பது போல தீர்ப்பை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க வேண்டும் என்ற விதிமுறையும் உச்ச நீதிமன்றத்தில் இல்லை. எனவே நீதிபதிகள் தங்களுக்கு வசதியான நாளில் தீர்ப்பு வழங்குவார்கள் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

சிரிக்க வைத்த என்னை அழ வைக்கின்றனர்: வாட்ஸ்அப் வதந்தியால் நடிகர் செந்தில் வேதனை

THE HINDU

எல்லோரையும் சிரிக்க வைத்த நான் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரப்பி அழ வைக்கின்றனர் என நடிகர் செந்தில் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திருச்சியில் நடிகர் செந்தில் அதிமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்போது அவர் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் மூலம் தக வல் பரவியது. அதிர்ச்சி அடைந்த அவர், தான் நலமுடன் இருப்பதாக அப்போது தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் நடிகர் செந்தில் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது. இதனால் கடும் மன உளைச்சலடைந்த அவர் நேற்று மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங் களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளேன். அதிமுகவில் தலைமைக் கழக பேச்சாளராகவும் இருக்கிறேன். தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன் நான் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது. இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு வந்தேன். அப்போது நான் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப் மூலம் மீண்டும் தகவல் பரவுவதாகக் கேள்விப்பட்டேன். வாட்ஸ்அப் மூலம் இந்த தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

திமுகவினர்தான் காரணம்

நடிகர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, நான் எல்லோரையும் சிரிக்க வைத்து பழக்கப்பட்டவன். ஆனால், இப்போது நான் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக என்னை அழ வைக்கின்றனர். இதன் பின்னணியில் திமுகவினர்தான் இருப்பதாக சந்தேகிக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்காக நான் பிரச்சாரம் செய்ததால், தற்போது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் திமுகவினர்தான் நான் இறந்துவிட்டதாக தகவல் பரப்புகின்றனர் என்றார்.

NEWS TODAY 21.12.2025