Thursday, July 14, 2016

எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை


மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 7 பேருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 7 பேருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

ஆயுள் தண்டனை பெற்றுள்ள 7 பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2008ல் நடந்த இந்த கொலை சம்பவத்தில் விஜயன் மனைவி சுதாவின் தங்கை பானு, தமிழக காவல்துறையை சேர்ந்த காவலர் கருணா, கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், கார்த்தி, தினேஷ்குமார், சாலமன், வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயசந்திரன் பிறப்பித்துள்ள இன்றைய தீர்ப்பில், நூற்றுக்கணக்கான சாட்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவர்கள் குற்றவாளிகள் என்பது தெளிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதியன்று சென்னை கோட்டூர்புரம் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டார்.

அந்த தாக்குதலில் விஜயன் மரணமுற்றத்தை அடுத்து, சென்னை கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர்அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகே துரிதப்படுத்தப்பட்டது.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன், தனது மூன்றாவது மனைவியான வி.என் ஜானகியின் சகோதரரின் குழந்தைகளான லதா, கீதா, சுதா, பானு ஆகிய நால்வரையும் வளர்ப்பு குழந்தைகளாக வளர்த்தார்.

இவர்களில் சுதாவின் கணவர் கே. விஜயகுமார் என்ற விஜயன். இவர் 2008ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி சென்னை நந்தனத்தில் சிலரால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கை காவல்துறையின் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) விசாரித்துவந்தது.

இந்த வழக்கில் சுதாவின் சொந்தத் தங்கையான பானு என்பவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது. இவர்களது தம்பியான திலீபன் நடத்திய பள்ளிக்கூடத்தை யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக பானுவுக்கும் திலீபனுக்கும் பிரச்சனைகள் இருந்தன.

இதில் திலீபனுக்கு ஆதரவாக விஜயன் இருந்ததால், அவரை கொல்ல பானு திட்டமிட்டார் என்றும் போலீஸ் கான்ஸ்டபிளான கருணா என்பவரது உதவியோடு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் சிபிசிஐடி கூறியது.

இதற்காக நான்கு லட்ச ரூபாய் கருணாவுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் நான்கு பேரை கூலிக்கு அமர்த்தினார்.

விஜயன் காரில் வரும்போது அந்தக் கார் மீது மற்றொரு வாகனத்தை மோதச் செய்து, அவரை காரை விட்டு வெளியேறச் செய்து இரும்பு பைப்பால் அடித்து கொன்றனர் என சிபிசிஐடி குற்றம்சாட்டியது.

இந்த வழக்கில் பானு, கருணா, பானுவின் தோழி புவனா உள்பட 8 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இதில் புவனா வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். மீதமிருக்கும் ஏழு பேர் மீது வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் 79 சாட்சிகள் சாட்சியமளித்தனர்.

மிரட்டிய 'ஓலா' ஓட்டுநர்....எஸ்.பூர்வஜா

'கழுத்தை அறுத்து விடுவேன்'- சென்னையில் பெண் பயணியை மிரட்டிய 'ஓலா' ஓட்டுநர்


சென்னை இன்னும் பாதுகாப்பான நகரமாகவே இருக்கிறதா என்ற கேள்வியை தினமும் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் வலுவாக்கிக் கொண்டே இருக்கின்றன. இந்தச் சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையைச் சேர்ந்த பதிப்பாளர் விலாசினி ரமணிக்கு நேர்ந்த சம்பவம் பெண்கள் பாதுகாப்பு மீதான அச்ச உணர்வை அதிகரிக்கும் வகையில் இருக்கிறது.

நடந்தது என்ன?

சென்னை திருவான்மியூரில் இருந்து வளசரவாக்கத்துக்கு கடந்த ஞாயிறு இரவு ஓலா கேப் ஒன்றில் பயணித்திருக்கிறார் விலாசினி. ஓட்டுநர் காரை அதிவேகமாக இயக்கவே இரண்டு முறை விலாசினி அவரிடம் மித வேகத்தில் செல்லுமாறு கோரியுள்ளார். ஆனாலும் அதற்கு செவி சாய்க்காமல் அதி வேகத்திலேயே அவர் செல்ல மீண்டும் கோரிக்கை வைத்திருக்கிறார் விலாசினி. ஆனால், இந்த முறை பதில் கடுமையாக இருந்திருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் இத்தனை ரைட் போக வேண்டியுள்ளது. பிடிக்கவில்லை என்றால் காரில் இருந்து இறங்கவும் என ஒருமையில் திட்டியிருக்கிறார்.

திகைத்துப் போன விலாசினி காரில் இருந்து இறங்கிவிட்டார். அண்ணா பல்கலைக்கழகம் அருகே அவர் நின்றிருக்க அந்த கார் ஓட்டுநரும் அங்கேயே நின்றிருக்கிறார். சிறிது நேரத்தில் அவ்வழியாக ஒரு ஆட்டோ வர அதில் விலாசினி ஏற முற்பட்டபோது அந்த கார் டிரைவர் அருகில் வந்து ஆபாசமாக திட்டியதோடு கையை முறுக்கிக் கொண்டு கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டியிருக்கிறார். அவசர அவசரமாக ஆட்டோவில் ஏறிச் சென்ற விலாசினி வழியில் எங்காவது போலீஸ் ரோந்து வாகனம் இருக்கிறதா எனத் தேடிக் கொண்டே சென்றிருக்கிறார். ஆனால், ஒரு ரோந்து வாகனம்கூட கண்ணில் படவில்லை.

கடைசியாக ராமபுரத்தில் ஒரு அவுட்போஸ்ட்டில் சில போலீஸாரைப் பாரத்துள்ளார். அவர்களிடம் நடந்ததைக் கூற அவர்கள் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சொல்லியுள்ளனர். ஆனால், நந்தம்பாக்கத்திலோ இது எங்கள் சரகத்துக்கு உட்பட்டதல்ல நீங்கள் கிண்டி காவல் நிலையத்துக்கே செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். மீண்டும் கிண்டி செல்ல விலாசினி தயங்கவே ஒரு போலீஸ்காரருடன் வளசரவாக்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விலாசினி எழுப்பும் கேள்வி:

இரவு 10 மணிக்கு மேல் எனக்கு ஆபத்து இருக்கிறது என நான் கூறியும் என்னை ஏன் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் அலைக்கழித்தார்கள். எனது புகாரை போலீஸார் உடனடியாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டாமா? ஏற்கெனவே அந்த ஓட்டுநர் என்னை பின் தொடரலாம் என்ற அச்சத்தில் இருந்த என்னை நந்தம்பாக்கம் செல்லுங்கள்.. கிண்டி செல்லுங்கள் என ஏன் கூற வேண்டும்?

இவ்வாறாக விலாசினி ரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக வலைதளத்தில் ஆதரவு:

நடந்தவற்றையெல்லாம் விரிவாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கியிருக்கிறார் விலாசினி. அந்த நிலைத்தகவல் அதிகமாக பகிரப்பட்டது. கமெண்ட் பகுதியில் பலரும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஓலா தெரிவித்த 'வருத்தம்'

ஓலா நிறுவனத்துக்கு விலாசினியின் நண்பர் புகார் அளிக்க அதன் அடிப்படையில் ஓலா அலுவலகத்தில் இருந்து ஒரு பிரதிநிதி விலாசினியை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர்கள் தெரிவித்த 'வருத்தம்' பெயரளவில் மட்டுமே இருந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த ஓட்டுநர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு, "அந்த ஓட்டுநரை ஒருவார காலத்துக்கு நன்நடத்தை வகுப்புக்கு அனுப்புவோம். பின்னர் அவர் மீண்டும் கார் ஓட்டுவார்" எனத் தெரிவித்துள்ளனர்.

ஒரு பெண்ணை இழிவாகப் பேசி கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய நபருக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டாமா என்பதே விலாசினியின் வாதம்.

காவல்துறை உறுதி:

இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் புகாரை உடனடியாக போலீஸ் பதிவு செய்யாதது குறித்து விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், புகார் அளிக்க வருபவர்களை அங்குமிங்கும் அழைக்கழிப்பது தடுக்கப்படும். புகார் பதிவு குறித்து போதிய அறிவுரை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tuesday, July 12, 2016

THE HINDU TAMIL

தமிழகத்தில் அடுத்தகட்டமாக 1,000 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு முடிவு: வட்டாட்சியர்கள் தலைமையில் ஆய்வு தொடங்கியது


படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத் தப்படும் என்ற முதல்வரின் அறிவிப் பின்படி தமிழகத்தில் அடுத்தகட்டமாக 1,000 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப் படுகின்றன. அதற்கான ஆய்வுப்பணியை வட்டாட்சியர்கள் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஓராண்டாக வலுத்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தலின்போது, இது முக்கிய பிரச்சினையாக பேசப்பட்டது. பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக, மக்கள் நலக் கூட்டணி, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்தன. அதிமுகவோ, படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில், தேர்த லில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்தது. முதல்வராக 6-வது முறை பொறுப் பேற்ற ஜெயலலிதா, தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றும் வண்ணம், முதல் கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப் படும் என்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் காலை 10 மணிக்கு பதிலாக 12 மணியாக மாற்றப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்புகள் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக 1,000 டாஸ்மாக் கடைகளை மூட அரசு முடிவு செய்துள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆய்வு களில் தமிழகத்தின் அனைத்து வட்டாட்சி யர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் அடுத்த கட்டமாக 1,000 டாஸ் மாக் கடைகளை மூட வேண்டும் என்று முடி வெடுக்கப்பட்டுள்ளது. மூடவேண்டிய கடை களை கணக்கெடுக்கும் பணிகளை வட்டாட்சியர்கள் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவின்பேரில் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட வட்டாட் சியர், நில அளவையர், ஆட்சியர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு வட்டத் திலும் உள்ள அனைத்து கடைகளுக்கும் செல்லும் இந்தக் குழுவினர், டாஸ்மாக் கடை எந்த இடத்தில் உள்ளது, அந்தக் கடையின் அருகே வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையம் உள்ளதா என்று ஆய்வு செய்கின்றனர். அருகில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையம் ஆகியன இருந்தால், அவற்றுக்கும் டாஸ்மாக் கடைக்கும் எவ்வளவு தூரம் என்பதை அளந்து கொள்கின்றனர்.

இதுமட்டுமன்றி, அதிகம் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் டாஸ் மாக் கடைகளின் பட்டியலையும் காவல் துறை ஒத்துழைப்போடு கேட்டுப் பெறவுள்ளனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியருக்கு வட்டாட்சி யர்கள் ஆய்வறிக்கை அனுப்புவார்கள். அவை டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கு அனுப் பப்படும். அந்த அறிக்கை யின்படி, அடுத்தகட்ட மாக சுமார் 1,000 டாஸ்மாக் கடைகள் வரை மூடப்படும். இந்த கடைகள் அதிகபட்சம் 2 மாதங்களுக்குள் மூடப்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கெனவே மூடப்பட்ட 500 மதுக்கடைகள், வருவாயை கணக்கில் கொண்டு, மக்களின் விருப்பத்தைக் கேட்காமல் மூடப்பட்டதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது அதிகாரிகள் நேரடியாக கடைகளுக்குச் சென்று ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் 6,800 ஆக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை, தற்போது 6,300 ஆக குறைந்துள்ளது. மேலும், 1,000 கடைகள் மூடப்பட்டால், டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 5,300 ஆக குறையும்.

சிறைக் கதவை உடைத்துக் கொண்டு வெளியேறி மாரடைப்பு ஏற்பட்ட காவலரின் உயிரைக் காப்பாற்றிய கைதிகள்

THE HINDU TAMIL

அமெரிக்காவில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள், கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மாரடைப்பு ஏற்பட்ட சிறைக் காவலரின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.

டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறையில் கைவிலங்கிடப்பட்ட 8 கைதிகள் அடைக்கப்பட்டிருந் தனர். அங்கு பணியில் ஈடுபட்டி ருந்த ஒரே ஒரு காவலர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நிலைகுலைந்துள்ளார்.

இதைப் பார்த்த கைதிகள் உதவி கோரி சத்தம் போட்டனர். ஆனால் அப்பகுதியில் யாரும் இல்லை. இதனிடையே, கைதி களில் ஒருவர் கதவை உடைத்தார். இதையடுத்து 8 கைதிகளும் வெளியே வந்து நிலைகுலைந்த காவலரை பரிசோதித்தபோது அவருக்கு நாடித் துடிப்பு இல்லாததை உணர்ந்தனர்.

பின்னர் கைதிகள் உதவி கோரி கதவைத் தட்டியவாறு மீண்டும் கூச்சல் போட்டனர். இந்த அலறல் சத்தத்தைக் கேட்ட அதிகாரிகள் அங்கு ஓடி வந்து, கைதிகளை அறையில் வைத்து பூட்டிவிட்டு அவசர மருத்துவ சேவைப் பிரிவை அழைத்தனர்.

இதனிடையே, மூச்சடைத்துப் போன பாதுகாவலரின் உயிரைக் காப்பாற்ற முதலுதவி செய்தனர். அதற்குள் விரைந்து வந்த மருத்துவர்கள் அதிர்வுக் கரு வியைக் கொண்டு அவருக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இதைய டுத்து காவலரின் இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியது.

சிறைக் கைதிகள் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து உதவியதால் காவலரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது என்று கேப்டன் மார்க் அர்னெட் தெரிவித்துள்ளார். ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக கைதி கள் கதவை உடைத்துக் கொண்டு வெளியேறினர். இந்த சம்பவத் துக்குப் பிறகு அந்த சிறையின் கதவுகள் உடைக்க முடியாதபடி பலப்படுத்தப்பட்டன.

குறள் இனிது: மறந்து போனால்... நற்பெயரும் போகும்!

THE HINDU TAMIL

பொச்சாப்பு எனும் வார்த்தைக்குப் பொருள் சொல்லுங்க பார்ப்போம். தமிழ் வார்த்தைதான். என்ன, இப்ப அதிகம் உபயோகப்படுத்துவது இல்லை.கவலைப்படாதீங்க. நான் கேட்ட பலபேருக்கும் இது தெரியலை!

அது என்னன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னால், procrastination எனும் ஆங்கில வார்த்தைக்காவது பொருள் சொல்லுங்களேன். இதுவும் சிலருக்குக் கடினமாக இருக்குதோ?

இது வேறு ஒன்றும் இல்லைங்க. எந்த வேலையைக் கொடுத்தாலும் உடனே செய்யாமல் அப்புறம் பார்த்துக்கலாம் என்று தள்ளிப்போடுவது.

என்னுடன் சிலகாலத்துக்கு முன்பு ஒரு நண்பர் வங்கியில் அதிகாரியாகப் பணி செய்து வந்தார். நமது வழக்கப்படி அவரை குமார் என அழைப்போம்.

குமாரின் பிரச்சினை என்னவென்றால் எந்த வேலையைக் கொடுத்தாலும் உடனே சுறுசுறுப்பாகத் தொடங்க மாட்டார்.

நல்ல பெரிய வாடிக்கையாளர்கள் 50 பேரைத் தேர்வு செய்து வைப்புநிதி கேட்டுக் கடிதம் எழுதுவோம், அதில் 10 பேரை நேரிலும் சந்திப்போம் என முடிவு செய்து இவரிடம் பணியை ஒப்படைத்தால் வரும் சனிக்கிழமை ஆரம்பிப்போம் என்பார்.

சனிக்கிழமை அன்று குமார் காணாமல் போய்விடுவார். கண்டுபிடித்துக் கேட்டால் அவருக்கு எல்லாவற்றையும் முதலிலிருந்து சொல்லி ஞாபகப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

`ஒரு எளிய வேலை கடினமாகத் தெரிய வேண்டுமானால் அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வாருங்கள்' என்றார் ஒலின் மில்லர்!

குமாரை நம்பி எதிலும் இறங்கி விட முடியாது. காலை 6.30 மணிக்கு விமான நிலையம் போய் மேலதிகாரியை அழைத்து வாப்பா என்றால் சரி என்பார். ஆனால் முன்னதாகவே சென்று காத்துக் கொண்டிருக்க மாட்டார். போகிறேன் என்று சொன்னோமே, தவறாமல் ஞாபகப்படுத்தத் தேவையில்லாமல் போய் விட வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி இருக்காது.

இவர் நேரத்துக்கு போகாமல், பின்னர் எங்கள் மேல் கோபத்தைக் காட்டியது தனிக்கதை! 'நீங்கள் தாமதிக்கலாம், நேரம் தாமதிக்காதே' என்று பெஞ்சமின் பிராங்க்ளின் சொன்னது எவ்வளவு உண்மை!

குமாருக்கு அறிவோ ஆற்றலோ குறைவல்ல. ஆனால் பணியில் முனைப்பு (seriousness) கிடையாது. இதனால் அவரிடம் படிப்பும் பலவருட அனுபவமும் இருந்தும் யாரும் எந்த வேலையையும் நம்பிக் கொடுக்க மாட்டார்கள்.

எந்த ஒரு பணியாளருக்கும், ஏன் எந்த ஒரு மனிதருக்கும் தேவை கடமை தவறாமை. அத்துடன் காரியத்தைத் தள்ளிப் போடாத குணம். அவர் செய்கிறேன் என்று சொல்லிவிட்டார் என்றால் செய்துவிடுவார் என்று எண்ணும்படியான நம்பகத்தன்மை.

மனிதவள அறிஞர்களைக் கேட்டால் ‘மறதி என்று ஒன்றும் இல்லை. கவனக்குறைவைத் தான் அப்படிச் சொல்லிச் சிலர் சமாளிக்கிறார்கள்' என்கிறார்கள்.

தினமும் பிச்சை எடுத்துச் சாப்பிடுபவனுக்கு மந்த புத்தி வந்துவிடும். அதைப் போலவே கடமையை மறப்பவர்களுக்கு, தாம் மேற்கொண்ட பணியை முனைப்புடன் செய்யாமல் தள்ளிப் போடும் பொச்சாப்புக் குணம் உடையவர்களுக்குப் பெயர் கெட்டுப் போகும் என்கிறார் வள்ளுவர்.

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்பக்கொன்று ஆங்கு (குறள் 532)

somaiah.veerappan@gmail.com

Wednesday, July 6, 2016

போலீஸ் தரப்பில் பெரிய பெரிய ஓட்டை

போலீஸ் தரப்பில் பெரிய பெரிய ஓட்டை... ராம்குமார்தான் குற்றவாளி என்பதை எப்படி நம்புவது? By: Sutha Published: Wednesday, July 6, 2016, 11:35 [IST]

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/how-come-police-decide-ramkumar-is-the-killer-asks-his-advocate-257490.html

சென்னை: சுவாதியைப் படு கொலை செய்தது ராம்குமார்தான் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க போலீஸ் தரப்பு பெரும்பாடு பட வேண்டி வரும் என்று தெரிகிறது. காரணம், அத்தனை ஓட்டைகள் உள்ளன. சாதாரண மனிதர்களுக்கே ஏராளமான சந்தேகங்கள், கேள்விகள் கிளம்பி வருகின்றன என்றால் கோர்ட்டில் எப்படியெல்லாம் கேட்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. ஆனால் இதையெல்லாம் காவல்துறை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதிலும் குழப்பமே நிலவுகிறது. ராம்குமார் கைது முதல் அவரை சிறையில் அடைத்தது வரை ஏகப்பட்ட குழப்பங்கள் காணப்படுகின்றன. இதை அவரது வக்கீலே எழுப்பியும் உள்ளார். அவர் கேட்கும் பல கேள்விகளுக்கு விடை இல்லை.


யாரைக் காப்பாற்ற முயற்சி? நிச்சயமாக ராம்குமார் இந்தக் கொலையைச் செய்யவில்லை. அவசர கதியில் அவரைப் பிடித்து வழக்கில் கோர்த்து விட்டுள்ளனர் என்று சொல்கிறார் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி. யாரையோ காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும் அவர் அடித்துச் சொல்கிறார்.

யாரைக் காப்பாற்ற முயற்சி? நிச்சயமாக ராம்குமார் இந்தக் கொலையைச் செய்யவில்லை. அவசர கதியில் அவரைப் பிடித்து வழக்கில் கோர்த்து விட்டுள்ளனர் என்று சொல்கிறார் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி. யாரையோ காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும் அவர் அடித்துச் சொல்கிறார்.

தனது நண்பர்கள்தான் போட்டு விடு என்று கூறியதாகவும், அதன்படியே கொலை செய்ததாகவும் ராம்குமார் கூறியுள்ளதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால் யார் அந்த நண்பர்கள் என்பது குறித்து போலீஸ் தரப்பில் விசாரணையே நடத்தப்படவில்லை. அந்த நண்பர்களின் பெயர் என்ன என்பதையும் போலீஸார் தெரிவிக்கவில்லை.

உண்மையில் ராம்குமாரை சிலர் கருவியாக பயன்படுத்தியுள்ளனர். அவர்களுக்காகவே ராம்குமாரை பலிகடாவாக்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற ஒரு தரப்பு முயற்சிப்பதாகவே தெரிகிறது. இது போலீஸாருக்கும் தெரியும் என்றே தோன்றுகிறது என்றும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கேட்கிறார்.


ராம்குமாரைக் கைது செய்யச் சென்றபோது தற்கொலைக்கு அவர் முயன்றதாக போலீஸ் கூறுகிறது. உண்மையில் ராம்குமாருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் இருந்திருந்தால் அதை அவர் எப்போதே செய்திருக்கலாமே.. போலீஸார் வந்து பிடிக்கும் வரை ஏன் அவர் காத்திருக்க வேண்டும். இதுவும் இடிக்கிறது.


போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனே பகிரங்கமாக ராம்குமார்தான் குற்றவாளி என்று ஊடகங்களைக் கூப்பிட்டுக் கூறுகிறார். வழக்கு விசாரணை முடியாமல், தீர்ப்பு வராத நிலையில் எப்படி அந்த முடிவுக்கு அவர் வந்தார். அப்படிச் சொல்லச் சொல்லியது யார்.


போலீஸ் தரப்பில் குற்றவாளி குறித்த படங்கள் தொடர்பாக பல குழப்பங்கள் உள்ளன. போலீஸ் வெளியிட்ட படங்களிலேயே முரண்பாடுகள் காணப்பட்டன. அதை விட முக்கியமாக அந்த நபரும், கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரும் ஒருவர்தான் என்று தடயவியல் துறை இதுவரை அறிக்கை தரவில்லை என்பது முக்கியமானது.


சுவாதியின் பெற்றோர் அமானுஷ்யமான அமைதி காக்கின்றனர். அவர்களை பேச விடாமல் சிலர் தடுப்பதாக தெரிகிறது. அது ஏன். அவர்களைப் பேச விடாமல் தடுப்பது எது என்று பல குழப்பங்கள் இந்த வழக்கில் உள்ளன. இதற்கெல்லாம் போலீஸ் தரப்பில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கூறுகிறார் கிருஷ்ணமூர்த்தி.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/how-come-police-decide-ramkumar-is-the-killer-asks-his-advocate-257490.html#slide203064

பார்வை

பார்வை: வினுப்பிரியாக்கள் பிழைத்திருப்பதே குற்றமா?


கொலை செய்வதைவிடக் கொடூரமானது அமைதிகாப்பது. ஒரு பெண்ணைப் படுகொலை செய்வதற்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை அவளை அவளே படுகொலை செய்துகொள்ளத் தூண்டுவது. அப்படித் தூண்டப்பட்டுத் தன்னையே மாய்த்துக்கொண்டிருக்கிறார் சேலம் வினுப்பிரியா. முகநூலில் பதிவிட்டிருந்த வினுப்பிரியாவின் புகைப்படத்தை யாரோ ஒருவர் மார்ஃபிங் செய்து அநாகரிகமாக வெளியிட, அவமானம் தாங்காமல் தன்னைத் தானே கொலை செய்துகொண்டார் வினுப்பிரியா.

வினுப்பிரியாவின் மரணத்துக்கு அவரது புகைப்படத்தை அநாகரிகமாக வெளியிட்ட நபர் மட்டும்தான் காரணமா? அதுபோன்ற படங்களைத் தேடித்தேடிப் பார்க்கிறவர்களுக்கும், பகிர்கிறவர்களுக்கும் இதில் பங்கு இல்லையா? இப்படி அவமானத்துக்குள்ளாகும் பெண்ணைத் தரக்குறைவாகப் பார்க்கும் சமூகம் இதில் சம்பந்தப்படவில்லையா? பொதுவெளியில் பகிரப்படும் தகவல்களால் ஏற்படுகிற நெருக்கடிகளைச் சமாளிக்கும் மனோதிடத்தை நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தந்திருக்கிறோமா?

இதுபோன்ற சம்பவங்களின்போது குடும்பம் பாதுகாப்பு அரணாகச் செயல்படுகிறதா? முதலில் பெற்றோருக்குப் போதிய விழிப்புணர்வு இருக்கிறதா? பாதிக்கப்படும் பெண்ணைக் குறித்து இந்தச் சமூகம் முன்வைக்கும் சித்திரம் நாகரிகமானதா? அந்தப் பெண் மீது வீசப்படும் அவதூறுகளும் பழிச்சொற்களும் அவளுடைய நட்பு வட்டத்தையும் உறவு வட்டத்தையும் சிதைக்காதா? மக்களிடையே சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு இருக்கிறதா? சைபர் குற்றப் பிரிவில் தரப்படும் புகார்களுக்கு விரைந்து தீர்வு காணப்படுகிறதா? வினுப்பிரியாவின் மரணம் இப்படிப் பல்வேறு கேள்விகளை விட்டுச் சென்றிருக்கிறது.

வெளிப்படும் வக்கிரம்

உலகமயமாக்கலும், தொழில்நுட்ப வளர்ச்சியும் நல்லது கெட்டது அனைத்தையும் நம் உள்ளங்கைக்குள்ளேயே கொண்டுவந்துவிடுகின்றன. அவற்றில் வக்கிரம் நிறைந்த குப்பைகள் அதிகம். விவசாயம் பொய்த்துப்போன கிராமங்களில்கூட இன்று ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி செழிப்புடன் இருக்கிறது. இணையப் பயன்பாடு அதிகரித்த பின் இணையவழி நடக்கும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது.

ஒவ்வொரு குற்றத்திலும் ஒரு பெண்ணின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவளது எதிர்காலம் சிதைக்கப்படுகிறது. அவளது வாழ்வு மரணத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. பெண்ணின் உடல் புனிதமானதாகவும் பெண்ணின் செயல்கள் அனைத்தும் நம் பண்பாட்டின், பாரம்பரியத்தின் அடையாளமாகவும் பிரகடனப்படுத்தப்படுகிற சமூகத்தில் அந்த உடலை வைத்தே ஒரு பெண்ணைச் சாய்ப்பது ஆணுக்கு எளிதாகிறது. அவளது நடத்தை சார்ந்த குற்றச்சாட்டை வைத்தாலே போதும்,

அவள் முடங்கிப்போக. அப்படியும் முடங்கவில்லையெனில் இருக்கவே இருக்கின்றன அநாகரிகச் செயல்பாடுகள். வெட்டு, கொலை, அமிலவீச்சு ஆகியவற்றைவிட ஒரு பெண்ணின் அந்தரங்கத்தைக் கடைவிரிப்பது ஆண்களுக்கு மிக எளிதாக இருக்கிறது. நம் சமூகச் சூழலில் அது பெண்களுக்கு மரணத்தைவிடக் கொடுமையான தண்டனையாகவும் அமைகிறது.

இணைந்து போராட வேண்டும்

“நம் சமூக அமைப்பில் இருக்கிற குறைபாடு இது” என்கிறார் இளந்தமிழகம் அமைப்பைச் சேர்ந்த பரிமளா. “பஸ்ஸில் ஒருவன் தன்னை உரசினால், அதை வெளியே சொல்லக்கூடத் தயங்குகிற பெண்கள் அதிகம். காரணம் பெண்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள்.

பெண்களுக்கு நம் சமூகத்தில் எந்த உரிமையும் இல்லை. படிக்கும் படிப்பு, அணியும் உடை, வாழ்க்கைத்துணை என்று சகலமும் அடுத்தவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவனை வேண்டாம் என்று நிராகரிக்கக்கூட ஒரு பெண்ணுக்கு நம் சமூகத்தில் உரிமையில்லை” என்று சொல்லும் பரிமளா, பெண்ணின் மீது திணிக்கப்படும் ஒழுக்கக் கோட்பாடுகளையும் சமூகக் கட்டுகளையும் எதிர்த்துப் பெண்கள் கேள்வி கேட்க வேண்டும் என்கிறார்.

“இது யாரோ ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் இது நேரலாம். பெண்ணின் அங்கம் கொஞ்சம் வெளிப்பட்டாலே அவளது ஒழுக்கம் கெட்டுவிட்டது என்று சமூகம் வகுத்துவைத்திருக்கிறது. இதற்கு எதிராகப் பெண்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். தவறு செய்கிறவர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்” என்கிறார் அவர்.

தற்கொலை தீர்வல்ல

தற்காலிகப் பிரச்சினைக்காக மரணம் என்னும் நிரந்தர முடிவை நோக்கிச் செல்வது தவறு என்று சுட்டிக்காட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவ நிபுணர் லக்ஷ்மி விஜயகுமார். சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தின் நிறுவனரான இவர், ஒரு பெண் தன் மீது வைக்கும் நம்பிக்கையே தற்கொலை எண்ணத்தைத் தடுக்கும் என்கிறார்.

“ஒவ்வொரு பெண்ணும் தன் மீது மரியாதையும் நம்பிக்கையும் வைக்கணும். நாம் செய்யாத தவறுக்காக, நாம் ஏன் சாக வேண்டும் என்ற தெளிவு வேண்டும். வாழ்வில் எந்தச் சிக்கலும் இல்லாதபோது துணிச்சலுடன் இருப்பதைவிட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும்போதுதான் துணிச்சலுடன் இருக்க வேண்டும்.

வெளியே சொல்ல முடியாத பிரச்சினையாக இருந்தால் நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம். பிறகு பெற்றோரிடம் சொல்ல வேண்டும். பகிர்ந்துகொள்கிறபோது பிரச்சினை பாதியாகிவிடும்” என்று சொல்லும் லக்ஷ்மி விஜயகுமார், இது போன்ற குற்றங்கள் அதிகரிக்க ஊடகங்களும் முக்கியக் காரணம் என்கிறார்.

“எந்தத் திரைப்படமாக இருந்தாலும் அதில் பெண் என்பவள், ஆண் அனுபவிக்க வேண்டிய ஒரு பண்டமாகவே காட்சிப்படுத்தப்படுகிறாள். பெண்ணின் விருப்பு, வெறுப்புக்கு அங்கே இடமில்லை. ஒருவனை வேண்டாம் என்று மறுக்கும் உரிமையும் அவளுக்கு இல்லை. ஆரம்பத்தில் மறுக்கிற பெண்ணையும் எப்படியாவது மசியவைப்பதுதான் ஆண்மை என்று கேவலமாகச் சித்தரிக்கப்படுகிறது. இதைப் பார்த்து வளர்கிற ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்தச் சிந்தனைதானே இருக்கும்? அனைவருக்கும் சமூகப் பொறுப்பு வேண்டும்” என்று சொல்கிறார் அவர்.

எப்படி வளர்க்கிறோம் பிள்ளைகளை?

சமீபகாலமாக இள வயதுத் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகச் சொல்லும் உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன், “பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனோபலத்துடன் குழந்தைகளை வளர்க்கிறோமா?” என்று கேட்கிறார்.

“படிப்பு, மதிப்பெண் எல்லாமே இரண்டாம்பட்சம்தான். சிக்கல்களை, பிரச்சினைகளை எதிர்கொள்கிற பக்கு வத்தைச் சொல்லித் தருவதுதான் முக்கியம். ஃபேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி தங்கள் படங்களை மாற்றுகிறவர்களும் எத்தனை லைக்ஸ் விழுந்திருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருப்பவர்களும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். தன் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் இப்படிச் சமூக ஊடகங்களின் அங்கீகாரத்தை எதிர்பார்க்க மாட்டார்கள்” என்று சொல்லும் பிருந்தா ஜெயராமன், ஒரு பிரச்சினை வெடிக்கும்போது அந்த நேரத்தில் குரல்கொடுத்துவிட்டு அடங்கிப் போவதைவிட அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்வரை களத்தில் நிற்க வேண்டும் என்கிறார்.

“புகார் கொடுத்ததுமே விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம். ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பும் கடமையும் அவசியம். சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் அவற்றின் முடிவு குறித்து காவல்துறை சமூகப் பொறுப்புடன் தானே முன்வந்து அறிவித்தால் பொதுமக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்” என்கிறார் பிருந்தா ஜெயராமன்.

வினுப்பிரியாவின் தற்கொலை மட்டுமல்ல, சுவாதியின் படுகொலை, ராயப்பேட்டையைச் சேர்ந்த மூன்று பெண்களின் கொலை என்று சமூகத்தில் நடக்கிற கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கிற பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் ஆர்வமாக இருக்கிறோமா? குறைந்தபட்சம் நம் கண்ணெதிரில் நடக்கிற குற்றத்தையாவது தட்டிக் கேட்டிருக்கிறோமா? ஒரு பெண்ணைப் பற்றிய அவதூறு செய்தி வந்ததும் அதை அடுத்தவருக்கு ஃபார்வேர்ட் செய்யாமல் இருந்திருக்கிறோமா?

குற்றத்தைத் தடுக்க முடியவில்லை என்றால் அதை காவல்துறைக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோமா? பெண்களை சக மனுஷியாக, உயிரும் உணர்வும் கொண்ட ஒரு பிறவியாக நினைக்கவாவது முயற்சித்திருக்கிறோமா? நம் வீட்டு ஆண் குழந்தைகளுக்குப் பெண்களை மதிக்கச் சொல்லித் தந்திருக்கிறோமா? இவற்றுக்கான பதில்களில்தான் வினுப்பிரியாக்கள் பிழைத்திருப்பதும் அடங்கியிருக்கிறது.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...