Monday, August 1, 2016

மனைவி சம்பாத்தியம்.. மகிழ்ச்சியான வாழ்க்கை.

DAILY THANTHI

திருமணத்திற்கு தயாராகி பெண் தேடும் இளைஞர்களில் ஒரு பகுதியினர், தங்களுக்கு வேலைக்குப் போகும் பெண் தேவை என்று சொல்கிறார்கள். அவர்கள் அப்படி எதிர்பார்க்கும் அளவுக்கு இன்று பொருளாதார தேவை முக்கியமானதாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

ஆண்கள் எதிர்பார்ப்பதுபோன்று அவர்களுக்கு வேலைக்குப் போகும் மணப்பெண்கள் கிடைக்கிறார்கள். கல்யாணம் நல்லபடியாக நடக்கிறது. இரண்டு சம்பளமும் வீட்டிற்கு வருகிறது. ஆனால் அதன் மூலம் நிம்மதி கிடைக்கிறதா?

இரண்டு சம்பளம் மகிழ்ச்சியை கொடுப்பதற்கு பதில் பல வீடுகளில் கவலையை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையை வளப்படுத்துவதற்கு பதிலாக, பிரச்சினையை ஏற்படுத்தி குடும்பத்தையே போர்க்களமாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

பெண்களின் நிர்வாகத் திறமையின் மீது ஆண்களுக்கு எப்போதும் சந்தேகம் இருக்கும். பெண்கள் வீண் செலவு செய்கிறார்கள் என்ற நினைப்பும் அவர்கள் மனதில் இருந்துகொண்டிருக்கும். திருமணத்திற்கு பின்பு மனைவி தனது முழு சம்பளத்தையும் தன்னிடம் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பெரும்பாலான ஆண்களிடம் இருக்கும். ஆனால் அதுவரை சுதந்திரமாக செலவழித்த மனைவிக்கோ அது பெரிய எரிச்சலை உருவாக்கும். தான் செய்யும் ஒவ்வொரு செலவையும் கணவரிடம் சொல்லிக்கொண்டிருக்க, சம்பாதிக்கும் மனைவிகள் விரும்புவதில்லை. அப்படி சொல்ல வில்லை என்றால், மனைவி செய்யும் ஒவ்வொரு செலவும் தண்டச் செலவு என்று விமர்சிக்கும் போக்கு கணவரிடம் உருவாகும்.

குறிப்பாக அழகு நிலையம் செல்வது, அழகு சாதனைப் பொருட்கள் வாங்குவது, ஆடை அணிகலன்கள் வாங்குவது, தன் தோழிகளுடன் வெளியிடங்களுக்குச் செல்வது, தன்வழி உறவினர்களுக்கு செலவழிப்பது இவை எல்லாம் ஆண்கள் விரும்பாத செலவுகள் என்ற பட்டியலில் இருந்துகொண்டிருக்கிறது.

கணவரிடம் தனது சம்பளத்தை அப்படியே தர விரும்பாத மனைவிகள் பலவிதமான கேள்விகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. பலவித சந்தேக வளையங்களுக்குள் சிக்கித்தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

மனைவியின் பணம் எப்படி செலவாகிறது, என்ற கேள்வி கணவருக்கு ஏற்பட்டால் அவர் உடனே அந்த கேள்வியை கேட்டுவிடுவதில்லை. கேள்வியை கேட்டு, பதிலைப் பெறாமல் கசப்பை மனதில் வளர்த்துக்கொண்டு மனைவி மீது நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருப்பார்கள். காலப்போக்கில் அது காரணமில்லாமல் வளர்ந்து, ஒருநாள் பூதாகர மாக வெடிக்கும். அப்போது குடும்பம் தடுமாறிப்போகும். இதனால் நடக்கும் விவாகரத்துகள் ஏராளம். புத்திசாலிகளாக தங்களை நினைத்துக்கொண்டிருக்கும் பலர் இந்த பிரச்சினைக்கு முறையான தீர்வு காணமுடியாமல் பிரிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மனைவியின் வருமானத்தை கணவர் பெறுவதும், அதை குடும்பத்தின் தேவைக்காக செலவிடுவதும் தவறல்ல. ஆனால் அளவுக்கு மீறி அவர்களது சுதந்திரத்தில் தலையிடுவதுதான் தவறு. பெண்கள் அவர்களது தேவைகளை அவர்களே நிறைவேற்றிக்கொள்வது நல்லதுதான் என நினைத்து அமைதியாக இருப்பதுதான் ஆண்களுக்கு அழகு.

அவர்களுடைய அடிப்படை உரிமைகளில் தலையிடாமல், அவர் களது சம்பளத்தை அவர்களே கையாள அனுமதிப்பது கணவன், மனைவி இருவருக்குமே நல்லது. பெண்களும் பண விஷயங்களில் கணவரின் ஆலோசனைகளை பெறுவது மிக சிறந்தது.

பெண்கள் செலவுகளில் அதிக அக்கறைகாட்டாமல், சேமிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. அவர்களுக்கென்று தனி சேமிப்பு இருக்கவேண்டும். பெண்களால் எல்லா காலமும், எல்லாவிதமான வேலைகளையும் செய்துகொண்டிருக்க முடியாது. அவர்களது வேலைக்கு இடையூறு வரலாம். வேலைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகலாம். அப்போது எல்லா தேவைகளுக்கும் கணவரிடம் எதிர்பார்க்கும் நிலை உருவாகிவிடக்கூடாது.

அதுவரை தனது வருமானத்தில் தாராளமாக செலவு செய்துவிட்டு, அதன் பின்பு கணவரிடம் எதிர்பார்ப்பது ஒருவித மனஅழுத்தத்தை உருவாக்கத்தான் செய்யும். அதுமட்டுமல்ல கணவரது வருமானம் திடீரென்று தடைபட்டுபோனால்கூட அதை சமாளிக்க மனைவி சேமிப்பது அவசியமானதாக இருக்கிறது.

சில கூட்டுக்குடும்பங்களில் அனைவரின் சம்பளமும் வீட்டின் மூத்த நபரிடம் ஒப்படைக்கப்படுகிறது. பின்பு அவரவர் தேவைக்கு பணம் பெற்றுக்கொள்ளும் நிர்வாக நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அத்தகைய குடும்பங்களில் சம்பாதிக்கும் பெண்களுக்கு எதிர்காலத்தை பற்றிய கவலை ஏற்படுகிறது. தான் சம்பாதிக்கும் பணம் தனக்கு தேவைப்படும்போது கைகொடுக்காமல் போய்விடுமோ? என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படுவது இயல்புதான். அவர்களது அச்சத்தை போக்கி, அவர்களது எதிர்காலத்திற்கு உத்தரவாதம் தரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு முன்பு தனது சம்பளத்தை எல்லாம் தனது தாயாரிடம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு தனது மாமியாரிடம் அவ்வளவு மன ஈடுபாட்டோடு கொடுப்பதில்லை. அதற்கு காரணம், பிறந்த வீட்டார் மேலிருக்கும் நம்பிக்கை புகுந்த வீட்டினர் மேல் உருவாகாமல் இருப்பதே! அந்த நம்பிக்கையை தந்து பெண்களை அன்னியோன்யமாக உறவாடச் செய்வது புகுந்த வீட்டாரின் கடமை.

நம் உழைப்பு மதிக்கப்படுகிறது. நமது வருமானம் சேமிக்கப்படுகிறது. நமது எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது என்ற எண்ணம் வந்தால்தான் பெண்கள் மகிழ்ச்சியாக பணிக்கு செல்வார்கள். மகிழ்ச்சியாக குடும்பத்தையும் கவனிப்பார்கள். இல்லாவிட்டால் வேலையையும், குடும்பத்தையும் அவர்கள் பாரமாக நினைக்கத் தொடங்கிவிடுவார்கள்.

Sunday, July 31, 2016

இன்ஜி., கல்லூரிகள் நாளை திறப்பு : 'பேஸ்புக், வாட்ஸ் ஆப் சாட்டிங்'குக்கு தடை


தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகள் நாளை திறக்கப்படுகின்றன. கல்லுாரி வளாகத்தில் சமூக வலைதளங்களில், 'சாட்டிங்' செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவ, மாணவியருக்கும், அவர்களது பெற்றோருக்கும், நடத்தப்பட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், பின் வரும் விதிகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
டி-ஷர்ட், பெர்முடாஸ் மற்றும் அரை டிரவுசர் அணிந்து வகுப்பறைக்கு வரக்கூடாது

விடுமுறை நாட்களில் கல்லுாரி வளாகத்தில் தேவையின்றி கூடி கும்மாளம் போடக்கூடாது

வகுப்பறையில் எந்த காரணத்தை கொண்டும், மொபைல்போன், டேப்லேட் போன்றவற்றில்

கேம்ஸ் விளையாடுதல், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் சாட்டிங்

செய்வது போன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை

மொபைல்போனை, 'ஸ்விட்ச் ஆப் அல்லது சைலன்ட் மோடில்' வைத்து கொள்ள வேண்டும்

ஈவ்டீசிங், ராகிங் போன்ற ஒழுக்க சீர்கேடுகளில் ஈடுபட்டால், கல்லுாரியிலிருந்து வெளியேற்றப்படுவதுடன், அண்ணா பல்கலையின் எந்த இணைப்பு கல்லுாரியிலும் சேர முடியாது

கல்லுாரி வளாகங்களில், இரு சக்கரம் மற்றும் கார் போன்ற வாகனங்களை கொண்டு வருதல் அறவே தடை செய்யப்படுகிறது. கல்லுாரி நுழைவு வாயில் அருகில் வாகனங்களை நிறுத்தி கொள்ள வேண்டும்

அன்றாட பாடங்களை முடிப்பதுடன், வகுப்புகளை கட் அடிப்பது, கல்லுாரி நேரங்களில் சினிமா தியேட்டர் மற்றும் பொழுது போக்கு இடங்களுக்கு செல்வது கூடாது

தேர்வுகளில் ஒரு தாளில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பெற்றோருக்கு தகவல் அளித்து, விளக்கம் கேட்கப்படும். மேலும், அடுத்த தேர்வில் தேர்ச்சி பெறுவோம் என்ற உறுதிமொழி எழுதி வாங்கப்படும்.இவ்வாறு விதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Thursday, July 28, 2016

பிணக்கை போக்கும் கணக்கு ஆசிரியை

பிணக்கை போக்கும் கணக்கு ஆசிரியை


கணக்கு என்றாலே காத தூரம் ஓடும் மாணவர்கள் காலங்காலமாய் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஆசிரியை ஜோ.ரூபி கேத்தரின் தெரசாவை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் ரூபி கேத்தரின் தெரசா. வீடியோ பதிவாக இவர் உருவாக்கியிருக்கும் ‘எளிய முறையில் கணிதம் கற்பித்தல்’ இப்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கணித ஆசிரியர்களின் மடிக் கணினிகளில் பேசிக் கொண்டிருக்கிறது.

எளிய உத்திகள் இதோ!

ரூபி உருவாக்கியிருக்கும் எளியமுறையில் வாய்ப்பாடு எழுதும் முறையைப் பின்பற்றினால் ஒன்று முதல் இருபது வரையிலான வாய்ப்பாடுகளைத் தங்கு தடையின்றி நிமிடங்களில் எழுதி முடித்துவிடலாம். எண்களைக் கூட்டுவதற்காக இவர் சொல்லித் தரும் உத்தியைக் கையாண்டால், எத்தனை இலக்க எண்ணையும் எளிதில் கூட்டி விடை சொல்லிவிட முடியும். இதேபோல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முறைகளுக்கும் எளிய உத்திகளை பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனாக தருகிறார் ரூபி.

எண்களின் வகுபடு தன்மை, எண்களை வர்க்கப்படுத்துதல் உள்ளிட்டவைகளையும் எளிமையாகப் புரிந்துகொள்ள வழிகளைக்காட்டும் இவர், 1986-ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். கடந்த முப்பது ஆண்டுகளில் இவரிடம் கணக்குப் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்களில் ஒருவர்கூடக் கணிதத்தில் தேர்ச்சியைத் தவறவிட்டதில்லை.

கணிதம் கற்றுத் தரும் வீடியோக்கள்

“ஆரம்பத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் வேலைபார்த்தபோது எளிய முறையில் கணிதம் கற்பிக்கப் பயிற்சி எடுத்தேன். ஆனால், மதிப்பெண்ணை மட்டுமே குறியாகக் கொண்டு தனியார் பள்ளிகள் செயல்படுவதால் அங்கே, நான் கற்ற கணிதப் பயிற்சி பயன்படவில்லை. அரசுப் பள்ளிக்கு வந்தபிறகுதான் அதற்கான தேவை ஏற்பட்டது. அரசுப் பள்ளிக் குழந்தைகள் கணிதத்தின் அடிப்படைச் செயல்பாடுகளே தெரியாமல் தடுமாறியபோதுதான் எனக்குள்ளும் ஒரு தேடல் ஏற்பட்டது. இந்தக் குழந்தைகளுக்காக எதையாவது செய்தாக வேண்டுமே என நினைத்தேன். நான் எடுத்துக்கொண்ட பயிற்சிக்குச் செயல்வடிவம் கொடுத்தேன்” எனப் பெருமிதம் கொள்கிறார் ரூபி கேத்தரின் தெரசா.

பத்தாம் வகுப்புக்குக் கீழே உள்ள மாணவர்களுக்கு எளிய முறையில் கணிதம் கற்றுத் தர 60 வீடியோக்களையும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக 70 வீடியோக்களையும் உருவாக்கி அதைத் தனது ‘பிளாக் ஸ்பாட்’ பக்கங்களில் பேசவைத்திருக்கிறார் ரூபி. அடுத்த கட்டமாக, பிளஸ் டூ மாணவர்களுக்கும் எளிய முறையில் கணிதம் கற்கும் உத்திகளை வடிவமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

இது போதாது என்பேன்!

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே மெத்தனமாகத்தான் இருப்பார்கள் என்ற பொதுக்கருத்தையும் தகர்த்திருக்கிறார் இவர். பள்ளிவிட்டுச் சென்றதும் எளிய முறை கணிதப் பயிற்சியை முறையாக அனைவருக்கும் கொண்டு செல்வதற்காக வீட்டிலும் தினமும் மூன்றரை மணி நேரம் உழைக்கிறார். ‘சென்னை ட்ரீம்ஸ்’ பக்கத்தில் வெளியிடப்பட்ட ரூபியின் எளிய முறை கணிதப் பயிற்சி வீடியோவை மட்டுமே இதுவரை 1.85 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். கணித ஆசிரியர் குழுக்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் இரண்டாயிரம் பேர் இவரது எளியமுறை கணிதப் பயிற்சி முறையைக் கையில் வைத்திருக்கிறார்கள்.

“இது போதாது, அரசுப் பள்ளிகளை நம்பிவரும் ஏழைக் குழந்தைகளுக்காக ஆசிரியர்கள் இன்னும் அர்ப்பணிப்போடு சேவை செய்யவேண்டும் அதற்காகத்தான் இரவு பகல் பாராது உழைத்துக் கொண் டிருக்கிறேன்” என்கிறார் ரூபி கேத்தரின் தெரசா.

தொடர்புக்கு: 94432 36930

கபாலியும் காலி வத்திப்பெட்டியும்!....... சமஸ்



ரஜினி படம் ஒரு தேர்த் திருவிழா. தேர் பார்க்கப்போவது என்று முடிவெடுத்துவிட்டால், கூட்டத்தோடு பார்ப்பது கூடுதல் கொண்டாட்டம். திருவிழா என்பது சுவாமி பார்ப்பது மட்டும் இல்லை. ஆனால், ஊர் முழுக்க உள்ள அத்தனை திரையரங்குகளிலும் படத்தை எடுத்து, அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளைத் தொடங்கிவிட்டாலும் சமீப காலமாக முதல் நாள் அன்று ரஜினி படம் பார்ப்பது சாத்தியப்படுவதில்லை. கொள்ளைக் கட்டணம் கொடுத்துப் படம் பார்க்க மனம் ஒப்புவதில்லை.

திரையரங்கம் சென்று சினிமா பார்ப்பது அரிதாகி நீண்ட நாட்கள் ஆகின்றன. சென்னையில், சாதாரண நாட்களில், ஒரு குடும்பம் திரையரங்கம் போய் படம் பார்த்து வருவதற்கே எழுநூறு, எண்ணூறு ரூபாய் வேண்டும். சராசரியாக ஒரு டிக்கெட் விலை ரூ.120. வாகனம் நிறுத்த ரூ.50. பத்து ரூபாய் பப்ஸின் விலை அரங்கினுள்ளே ரூ.50. சம்பாத்தியத்துக்கும் செலவழிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. சோளப் பொரியை நூறு ரூபாய் கொடுத்து வாங்கித் தின்ன தனித்த ஒரு பராக்கிரம மனம் வேண்டி இருக்கிறது.

திரையரங்குகள் இன்றைக்கு எல்லோருக்குமான இடங்களாக இல்லை. ஒருகாலத்தில் சாதியை உடைத்து நொறுக்கிப் போட்டவை. இன்றைக்கு வர்க்கம் பார்த்து மேலே இருப்பவர்கள் மட்டும் வந்தால் போதும் என்று நினைக்கின்றன. இல்லாவிட்டால், சாமானிய நிலையிலுள்ள குடும்பங்கள் நொறுக்குத்தீனி எடுத்து வருவதைக்கூடத் தடுக்கும் முடிவை அவை எப்படி எடுக்கும்? ஆக, இப்போதெல்லாம் சிடியில்தான் படம் பார்க்கிறேன். இதில் தவறு ஏதும் இருப்பதாகக் கூறும் புண்ணியவான்கள் சாமானிய குடும்பங்கள் ஐம்பது, நூறு ரூபாயில் படம் பார்க்க வேறு ஏதேனும் வசதி இருக்கிறதா என்று கூற வேண்டும்.

திரையரங்கில் பைசா செலவழிப்பதில்லை என்கிற வைராக்கியத்துடன் படம் வெளியான ஐந்தாம் நாள் ‘கபாலி’க்குப் போனோம். முதல் நாள் ரூ.2,000-க்கு டிக்கெட் அன்றைக்குத்தான் ரூ.120-க்குக் கிடைத்தது. படம் பிடித்திருந்தது. குறிப்பாக ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால், வயதுக்கேற்ப ரஜினியின் சினிமா பயணத்தை சரியான தடம் நோக்கி நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் இரஞ்சித். “பழைய ரஜினி படங்களின் ‘மாஸ்’ இல்லை” என்று பலரும் பேசக் கேட்க முடிந்தது. அதற்கான காரணத்தை இரஞ்சித்திடம் தேடுவதைக் காட்டிலும் ரஜினியிடம் தேடுவது உசிதமாக இருக்கும் என்று தோன்றியது. இந்தப் படத்திலும் சரி; இதற்கு முந்தைய சமீபத்திய படங்களிலும் சரி; எங்கெல்லாம் முன்புபோல் ரஜினி துள்ள வேண்டும் என்று நினைக்கிறாரோ அங்கெல்லாம் அவருடைய வயது அவரைக் கைவிடுவதைக் கவனிக்க முடிந்தது. ஒரு ரசிகனாக படத்தில் வயதான ரஜினியையும் வயதுக்கேற்ற ஆர்ப்பாட்டமான அவருடைய நடிப்பையும் ரொம்பவே பிடித்திருக்கிறது. சமீப ஆண்டுகளில் ‘படையப்பா’வுக்குப் பின் அதிகம் ஒன்றவைத்த ரஜினி படம் இது.

ரஜினி படத்தை இரஞ்சித் இயக்குகிறார் என்ற தகவல் வெளியான நாள் தொடங்கி ‘கபாலி’ தொடர்பான விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஒருகட்டத்தில் இரஞ்சித்தை அடிப்படையாக வைத்து, ‘கபாலி தலித் அரசியல் பேசும் சினிமாவா?’ என்பது விவாதங்களின் மையப்புள்ளி ஆனது. பின் படத்துக்குச் சாதிய சாயம் பூசும் வேலையும் நடந்தது. படத்தில் மலேசிய தமிழனாக ரஜினி பேசியிருக்கும் சில வசனங்களைக் கதைக்கு வெளியிலிருந்து பார்க்கலாம் என்றாலும்கூட, ஒடுக்குமுறைக்கு எதிரான சாடலாகவே அவை பட்டன. காலங்காலமாக சினிமாவில் பிராமணர், தேவர், கவுண்டர், பிள்ளைமார், படையாச்சிகளின் புகழ் பாடிய வசனங்கள் உருவாக்காத உறுத்தலை ஒடுக்குமுறைக்கு எதிரான வசனங்கள் நமக்கு உருவாக்குகின்றன என்றால், பிரச்சினை படத்தில் இல்லை; அது நம் மனதில் இருக்கிறது.

திகைப்பூட்டிய விஷயம் ஒன்று உண்டு. படம் நெடுக நூற்றிச்சொச்சம் பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்படுகிறார்கள். அரசின் தணிக்கைத் துறை எப்படி அனைவரும் பார்ப்பதற்கான ‘யு’ சான்றிதழை வழங்கியது? படத்தை ‘ஜாஸ் சினிமாஸ்’ வெளியிட்டிருப்பதை நண்பர் சுட்டிக்காட்டினார். ‘எந்திரன்’ படம் வெளியானபோது உருவான சர்ச்சைகள் ஞாபகத்துக்கு வந்தன. அந்தப் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது காட்சி மாற்றம்!

திரையரங்கிலிருந்து வெளியே வந்தபோது பசி வயிற்றைப் பிறாண்டியது. கடலைவண்டி கண்ணில் பட வறுத்த கடலை வாங்கினோம். ஒரு பொட்டலம் ரூ.10. அவ்வளவு கூட்டம் வந்து செல்லும்போதும் பெரிய போணி ஆனதுபோலத் தெரியவில்லை. பெரியவர் காலையிலேயே வந்துவிடுவாராம். அதிசயமாக நூறு பொட்டலம் விற்றால்கூட எல்லாம் போக பெரியவருக்கு என்ன கிடைக்கும் என்று தோன்றியது. “மனுஷன் கடலை திங்கிறதை மறந்துட்டான் சார். நாளெல்லாம் நின்னாலும், முப்பது பொட்டலம்கூடப் போறதில்லை. கேவலமா நெனைக்கிறாங்க. அடுத்த தலைமுறையில கடலை வண்டினு ஒண்ணு இருக்காது சார்” என்றார். கடலையை எடுத்து மடித்தவர், “சூடு கொஞ்சம் கம்மி” என்றவாறே கொடுத்தார்.

அணைந்திருந்த அடுப்பைப் பற்றவைக்க முயன்றார். தீப்பெட்டியின் கடைசி குச்சி அது. அடுப்பு பற்றியதும் காலிப் பெட்டியைத் தூக்கி எறிந்தார். “ஒரு ரூவா தீப்பெட்டி. இதுல நாம கட்டுற வரி இருபத்தெட்டு காசு. ‘கபாலி’ படம் மொத நாள் வசூல் நம்மூர்ல மட்டும் இருவது கோடியாம். டிக்கெட் மூவாயிரம் வரைக்கும் வித்திருக்கான். ஒரு ரூவா அரசாங்கத்துக்கு வரி கிடையாது. எப்படி சார் உருப்படும் இந்த ஊர்?”

கடலையை வறுக்க ஆரம்பித்தார். வண்டியைக் கடப்போர் கவனத்தைத் திருப்ப சட்டியைக் கரண்டியால் தட்டினார். ‘டங்… ணங்… டங்…’

பெருமளவு கருப்புப் பணம் புழங்கும், சூதாட்டத்தைப் போல் நடக்கும் சினிமா துறைக்கு எதற்காக அரசாங்கம் சலுகை அளிக்க வேண்டும்? கேளிக்கை வரி விதிக்கப்பட்டால், நூறு ரூபாய் டிக்கெட்டுக்கு முப்பது ரூபாய் அரசுக்குப் போகும். தமிழில் படப் பெயரைச் சூட்டுபவர்களுக்கு கேளிக்கை வரியை ரத்துசெய்யும் முடிவை 2006-ல் தமிழக அரசு அறிவித்த ஆரம்ப ஆண்டுகளிலேயே வருவாய் இழப்பு ரூ.50 கோடியைத் தொட்டது. பெருமளவில் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்லக் கூடிய நிதி இது. இந்த இழப்பைப் பற்றி அந்நாட்களில் கருணாநிதி பேசிய வார்த்தைகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. “எதை எதையோ தாங்கிக்கொண்ட இந்த இதயம், இந்த ஐம்பது கோடியையா தாங்கிக்கொள்ளாமல் போய்விடப்போகிறது?”

அன்றைய ஐம்பது கோடி, இன்றைக்கு நூறு கோடியாகி இருக்கலாம். நாளை இருநூறு, முந்நூறு, ஐந்நூறு கோடிகள் ஆகலாம். இழப்பை கருணாநிதி தாங்கவில்லை; ஜெயலலிதாவும் தாங்கவில்லை!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

கவனம் குவித்தால் சி.ஏ. வெல்லலாம்!


சார்ட்டட் அக்கவுண்டன்ட்டாக இருக்கும் ஒருவர் நமக்கு அறிமுகமானாலேயே ‘அடேங்கப்பா பெரிய அறிவாளியாக இருப்பாரோ’ என்கிற மைண்ட் வாய்ஸ், உடனடியாக நம்மில் பலரிடம் ஒலிக்கும்!

இந்திய அளவில் கல்வி அறிவைச் சோதிக்கும் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாக சார்ட்டட் அக்கவுண்டன்ஸி (Chartered Accountancy Exam) தேர்வு கருதப்படுகிறது. முதல் முயற்சியிலேயே ஒருவர் இத்தேர்வில் வெற்றிபெறுவது, இன்றும் அதிசயமாகக் கருதப்படுகிறது. ஆனால் சி.ஏ தேர்வில் முதல்முறையிலேயே வெற்றிபெற்று லாவகமாக சாதித்துக்காட்டிவிட்டார் ராம். சேலத்தை சேர்ந்த ராம் 2016-ம் ஆண்டுக்கான சி.ஏ. தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 20 வயதே ஆன இவர் அகில இந்திய அளவில் நடத்தப்படும் சி.ஏ. தேர்வில் 800-க்கு 613 மதிப்பெண்கள் பெற்று தமிழர்களின் பெருமையாக மாறியுள்ளார்.

கற்றல் கைகொடுக்கும்

“எதில் சவால் அதிகமோ அதைச் செய்துபார்க்க எனக்கு எப்போதுமே பிடிக்கும். அப்படித்தான் சி.ஏ. தேர்வை எழுத முடிவெடுத்தேன்” என்று வெற்றியின் உற்சாகத்தோடு பேசுகிறார் ராம். இவர் ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே அப்போது சென்னையில் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட்டாக வேலைபார்த்த தன்னுடைய அண்ணன் ஹரிஷ் குமாரால் சி.ஏ. பக்கம் ஈர்க்கப்பட்டதாகச் சொல்கிறார். இது மிகவும் கடினமான படிப்பு என்றுதான் எனக்கு ஆரம்பத்தில் தோன்றியது. அதுவே எனக்கு சவாலாகவும் மாறியது” என்கிறார். இத்துறையில் தன்னிச்சையாகவும் வேலைபார்க்கலாம் அல்லது ஒரு நிறுவனத்திலும் பணி புரியலாம் என்கிற இரட்டை அனுகூலம் இருப்பதால் ராமுக்கு சி.ஏ. கனவு வளர ஆரம்பித்தது.

இவரது தந்தை ஓய்வுபெற்ற போக்குவரத்துத் துறை ஊழியர். தாய் பெரம்பலூரில் நூலகராகப் பணிபுரிந்து வருகிறார். ஆறாவது படிக்கும்போதே ராமுக்கு சார்ட்டட் அக்கவுண்டன்ஸி மீது ஆர்வம் இருப்பதைக் கண்டுபிடித்த அவருடைய அம்மா புதுமையான முறையில் அவரைத் தயார்படுத்தியிருக்கிறார். “நம்முடைய இலக்கு ஒன்றாக இருந்தாலும் பல விஷயங்களைக் கத்துக்கணும்; அது புத்தியைக் கூர்மைப்படுத்த உதவும்னு அம்மா எப்பவுமே என்கிட்ட சொல்லுவாங்க. அதனால் இந்தி, சமஸ்கிருதம் மொழிகளையும், தமிழ், ஆங்கிலம் டைப் ரைட்டிங்கும் கத்துக்கிட்டேன்” என்கிறார் ராம். இத்தனையும் கற்றுக்கொள்வதால் நேரடியான பயன்பாடு இருக்கிறதா இல்லையா என்பதை யோசிக்காமல் கற்றலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்ததன் பலன் இன்று புரிகிறது என்கிறார். ஏதோவிதத்தில் தட்டச்சுகூட சி.ஏ.வுக்கு உதவியிருக்கிறது என உறுதியாகச் சொல்கிறார்.



பெற்றோருடன் ஸ்ரீராம்

நட்புக்குக் கிடைத்த வெற்றி

மிகவும் சீரியஸாகப் பேசுகிறாரே என நினைத்தால் நண்பர் கூட்டம், மாணவர் குழுத் தலைவர், மாணவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எனக் கலகலப்பான இளைஞராகவும் இருக்கிறார். சொல்லப்போனால், ராமின் பால்ய நண்பர் ஷுபம் பண்டாரியும் இதே சி.ஏ. தேர்வில் தேர்வாகியுள்ளார். “மூன்றாம் வகுப்புப் படிக்கும்போதிலிருந்து நானும் பண்டாரியும் நெருங்கிய நண்பர்கள். சி.ஏ.தான் எங்கள் இருவருடைய கனவு. சேர்ந்து, படித்து, விளையாடி, வளர்ந்தோம். நான் முதலிடம் பிடித்திருக்கிறேன்; அவன் பட்டியலில் வேறொரு இடத்தைப் பிடித்திருக்கிறான். அவ்வளவுதான் வித்தியாசம்! நிச்சயமாக எங்களுடைய வெற்றியின் ரகசியத்தில் நட்புக்கும் முக்கிய பங்குண்டு” எனப் புன்னகைக்கிறார்.

சி.ஆர். சார்ட்டட் அக்கவுண்டன்ட் சி.நரேந்திரனிடம் ஆர்ட்டிக்கல் ஷிப் (article ship) என்கிற மூன்றாண்டு பயிற்சியும், சென்னை பிரைம் அகாடமியில் சில காலம் பெற்ற பிரத்தியேகப் பயிற்சியும் தேர்வில் வெல்ல உதவின என்கிறார். தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்ட்டட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா பரிந்துரைக்கும் புத்தகங்களைத்தான் முழுவதுமாக வாசித்திருக்கிறார் ராம். “வழக்கமாக சி.ஏ. படிப்புக்குரிய புத்தகங்களைத்தான் நானும் படித்தேன். அது 40 சதவீதம்தான் உதவும். மற்றபடி மூன்றாண்டுகள் ஒரு ஆடிட்டரிடம் வேலைபார்த்தபோதுதான் செயல்முறையில் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். தேர்வு எழுதும்போது அதை சரியாக நடைமுறைப்படுத்தினேன்” என்கிறார்.

Monday, July 25, 2016

போலி உதிரி பாகங்கள்

உயிருக்கு எமனாகும் போலி உதிரி பாகங்கள்


காலையில் அவசர அவசரமாக குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு, அலுவலகம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென மோட்டார் சைக்கிளை யாரோ இழுப்பது போன்றிருக்கும். அதை உணர்ந்து சுதாரிக்கும் முன்பாகவே நம்மைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சார், டயர் பஞ்சர் என கூறிக் கொண்டே நம்மைக் கடந்து செல்வர். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அருகிலுள்ள பஞ்சர் கடையைத் தேடி அல்லது மொபைல் போனில் அவரை அழைத்து பஞ்சர் போட கழற்றினால், அவரோ சார், டியூப் மவுத் போயிடுச்சு, வேற டியூப் போடணும் என்பார். சரி வாங்கி வா என்றால், அருகில் கடை இல்லை, இதுபோன்ற தேவைக்கு தானே டியூபை வாங்கி வைத்திருப்பதாகக் கூறுவார். வேறு வழியின்றி அதை மாட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு பிற்பகலில் செல்வோம்.

அடுத்த 10 அல்லது 15 நாளில் இந்த சம்பவம் முற்றிலும் மறந்தே போயிருக்கும். அலுவலகத்தில் நிறுத்தியிருக்கும்போது காற்று இறங்கியிருக்கும். தெரிந்த மெக்கானிக் வந்து மீண்டும் டயரைக் கழற்றுவார். அவர் கூறும் தகவல் நம்மை விதிர்த்துப் போகச் செய்யும். சார் இது டுபாக்கூர் டியூப். இது ஒரு வாரம் கூட தாங்காது. இதன் விலை வெறும் ரூ. 60 என்பார். வேறு வழியின்றி அங்கீகாரம் பெற்ற டீலரிடமிருந்து பில்லுடன் டியூப் வாங்கி போடுவார்.

இது ஒரு சம்பவம்தான். இதுபோல உதிரி பாகங்களை சாலையோரக் கடைகளில் மாற்றி தவித்தவர்கள் ஏராளம்.

தினசரி நிகழும் சாலை விபத்துகளுக்கு என்ன காரணம் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? அதிக வேகத்தில் சென்றது, அல்லது குடி போதையில் வாகனங்களை ஓட்டியதால்தான் விபத்து நிகழ்ந்ததாக பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

ஆனால் உண்மையில் இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் 20 சதவீத விபத்துகளுக்குக் காரணம், போலியான உதிரி பாகங்கள்தான். இது வெறுமனே யாரோ பதிவு செய்த புள்ளி விவரம் அல்ல. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (எஸ்ஐஏஎம்) நடத்திய ஆய்வில்தான் இது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் 6 தயாரிப்புகளில் 2 தயாரிப்புகள் போலியானவை என்று பாகிஸ்தான் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

போலிகள்

போலிகளின் புழக்கம் இன்று, நேற்று தோன்றியதல்ல, 1872-ம் ஆண்டிலேயே என்ஜினுக்கு உயவு எண்ணெய்யாக தயாரிக்கப்பட்ட மெக்கோய் உயவு எண்ணெய்க்கு போலிகள் வந்து அந்நிறுவன வருமானத்தையே அழித்துவிட்டன.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இதற்கு இணையாக போலித் தயாரிப்புகளும் வளர்ச்சி கண்டு வருகின்றன.

இந்திய ஆட்டோமொபைல் துறையில் போலிகளின் வரவால் ஏற்பட்ட பாதிப்பு சரியாக உணரப்பட்டது 1980-களில்தான். சில நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மட்டும்தான் போலிகள் வருவதில்லை. மற்றபடி பெரும்பாலான தயாரிப்புகளுக்கு போலிகள் சந்தையில் சர்வசாதாரணமாக புழங்குகின்றன.

உண்மையான உதிரி பாகங்களைப் போலவே இவை தயாரிக்கப்படும். அதேபோல அவை எப்படி பேக் செய்யப்பட்டிருக்கிறதோ அதைப் போல இவை பேக் செய்யப்பட்டிருக்கும். இவை தரத்தில் குறைந்தவை. நுகர்வோரைக் குழப்பும் விதமாக இத்தயாரிப்புகள் புழக்கத்தில் இருக்கும்.

வாகனங்களில் அடிக்கடி மாற்றும் ஸ்பார்க் பிளக், பிரேக் வயர், ஆயில் ஃபில்டர், ஏர் ஃபில்டர், முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள், வைபர்ஸ், ஸ்டார்ட்டர் மோட்டார், பேரிங், ஆயில் பம்ப், பிரேக் பேட், பிஸ்டர் ரிங்ஸ், உயவு எண்ணெய் (லூப்ரிகன்ட்) டியூப் போன்றவை போலியாக அதிகம் தயாரிக்கப்படுகின்றன. போலிகள் ரூ. 12 ஆயிரம் கோடி முதல் ரூ. 14 ஆயிரம் கோடி வரை விற்பனையாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரு சக்கர வாகனங்களுக்கான போலி தயாரிப்புகளின் மதிப்பு பாதிக்கும் மேல் உள்ளது. அதாவது ரூ. 5 ஆயிரம் கோடி முதல் ரூ. 7 ஆயிரம் கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக விலை குறைந்த தயாரிப்புகள் பெரும்பாலும் இதுபோன்ற போலியான தயாரிப்புகளாகத்தான் இருக்கும்.

கடையின் விற்பனையாளர் விலை குறைந்த தயாரிப்பை அளிக்கிறார் என்றாலே அதில் வில்லங்கம் இருக்கிறது என்று உணர வேண்டும்.

கார் அல்லது மோட்டார் சைக்கிளாக இருந்தாலும் இதுபோன்ற தரம் குறைந்த போலியான உதிரி பாகங்களைப் பயன்படுத்துவது உங்களது பயணத்தை பாதிப்பதோடு விபத்துகளுக்கும் வழிவகுத்துவிடும்.

பாதிப்பு

போலியான பொருள்களை பயன்படுத்துவோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது நிச்சயம். அடுத்து புதிய பொருள் தயாரிப்பு, கண்டுபிடிப்புகளை இது பாதிக்கும். ஒரு பொருள் கண்டுபிடித்து அதன் பலனாகக் கிடைக்கும் வருமானம் நிறுவனத்துக்குக் கிடைக்காமல் போகும்.

அரசுக்கு வரி வருவாய் குறையும். ஏனெனில் பெரும்பாலும் இதுபோன்ற போலி பொருள்கள் கள்ளக் கடத்தல் மூலமாகவோ அல்லது போலியான ஆவணங்கள் மூலமாக சந்தையில் விற்பனைக்கு வருபவை. சுமார் 35 சதவீத போலி தயாரிப்புகளால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2,200 கோடி அளவுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

போலியான பொருள்கள் தயாரிப்பு எளிது. மேலும் இதற்கான மூலப் பொருள்கள் சீனாவிலிருந்து எளிதாகக் கிடைப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

போலிகளைத் தடுப்பது மற்றும் இவ்வித பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை.இதுவும் போலிகளின் பெருக்கத்துக்கு முக்கியக் காரணமாகும்.

லாபம் அதிகம்

அனைத்துக்கும் மேலாக போலிகள் மீதான லாபம் அதிகம். பொருள் தயாரிப்போருக்கும் லாபம். விற்பனை செய்வோருக்கும் ஒரிஜினல் தயாரிப்புகள் விற்பதைக்காட்டிலும் போலிகளுக்கு அளிக்கப்படும் கமிஷன் அதிகம். இத்தகைய தயாரிப்புகளுக்கான விலையை கடைக்காரரே நிர்ணயம் செய்வது மேலும் அவர்களுக்கு சாதகமான அம்சம். சில தயாரிப்புகளுக்கு 55 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை லாபம் கிடைக்கிறது. இதுவும் போலிகள் விற்பனை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.

சட்டப்படி போலிகளை ஒழிப்பதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஒழிக்க முடியாமலும் போகலாம். ஆனால் போலிகளை வாங்காமல் இருப்பது அவரவர் கைகளில்தான் உள்ளது.

விலை குறைந்த, அல்லது அருகாமையில் உள்ள கடைகளில் கிடைக்கிறது என்பதற்காக உதிரி பாகங்களை வாங்கினால் விபத்தை கை நீட்டி வரவேற்கிறோம் என்றுதான் அர்த்தம்.

தொடர்புக்கு: ramesh.m@thehindutamil.co.in

MCI could be dead;

MCI could be dead; new body may nurse medical education in India


The panel has firmed up the view that MCI should be scrapped to increase the number of medical colleges in the country for producing more doctors in view of growing demand for healthcare services, the source said.

Prime Minister's additional principal secretary P K Mishra and Niti Aayog CEO Amitabh Kant are also on board of the committee to look into the issue of poor regulation of medical education by MCI.

The three-member committee has proposed to set up an altogether new body with three pronged approach - career, enterprise and ethics.

Earlier this year, a parliamentary committee had called for revamping the MCI saying, it has failed in its role as a regulator which has led to a downfall in India's medical education system.

The committee even asked the government to exercise its constitutional authority and take decisive action to restructure and revamp the regulatory system of medical education and practice.

"Due to massive failures of the MCI and lack of initiatives on the part of the government in unleashing reforms, there is total system failure due to which the medical education system is fast sliding downwards and the quality has been hugely sidelined in the context of increasing commercialisation of medical education and practice," the report had said.

MCI has failed to create a curriculum that produces doctors suited to Indian context, specially in rural and poor urban areas, the panel had said.
It also failed to maintain uniform standards of undergraduate and postgraduate medical education.

"There is devaluation of merit in admission, particularly in private medical institutions due to prevalence of capitation fees, which make medical education available only to the rich and not necessarily to the most deserving," the Committee said.

MCI failed in setting up medical colleges in country as per need, resulting in geographical mal-distribution of medical colleges, with clustering in some states and absence in several others, acute shortage of medical teachers and abysmal doctor-population ratio, the panel said.



Also, the Council has failed to oversee and guide the continuing medical education in the country, leaving this important task in the hands of the commercial private industry.

It also failed to instill respect for a code of ethics in medical professionals and take disciplinary action against doctors found violating the code, the report said. PTI

First Published: Sunday, July 24, 2016 - 11:18

NEWS TODAY 07.06.2026