Wednesday, August 3, 2016

'இப்படியொரு கொடூர சாவைப் பார்த்தது இல்லை!' -கலங்கடிக்கும் கலைச்செல்வி மரணம்

vikatan.com

தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர். ' எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15 பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கய்யா' எனக் கதறுகிறார்கள் கிராமத்து மக்கள்.

தஞ்சாவூர், அம்மாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட சாலையோர கிராமம் சாலியமங்கலம். இந்தப் பகுதியில் தலித் சமூகத்து மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். சாதி இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த 31-ம் தேதி இரவு தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகள் கலைச் செல்வி, தோட்டம் ஒன்றின் முள்புதரில் நிர்வாணமான நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார். படுகொலைக்கு முன்னதாகக் கொடூரமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்துக் கொலைக்குக் காரணமான ராஜா மற்றும் குமார் ஆகியோரைக் கைது செய்திருக்கிறது போலீஸ். குற்றவாளிகளை ரிமாண்ட் செய்வதில் காவல்துறை கால தாமதம் செய்ய, மதுரை எவிடென்ஸ் அமைப்பு தலையிட்டு ரிமாண்ட் செய்ய வைத்திருக்கிறது.

கலைச்செல்வியின் உறவினர்கள் நம்மிடம், " ராஜேந்திரனோட முதல் மனைவி மாரியம்மாள் உடம்பு சரியில்லாமல் செத்துப் போயிட்டாங்க. அவங்க அக்கா பாப்பம்மாள் வீட்டிலதான் கலைச்செல்வி வளர்ந்து வந்தாள். வீட்டு வேலைகளைக் கவனிக்கறதுன்னு அந்தப் பொண்ணு இருக்கற இடமே தெரியாது. சம்பவம் நடந்த அன்னைக்கு நைட் புள்ளை எங்க போச்சுன்னு ஊர் முழுக்க தேடிக்கிட்டு இருந்தாங்க. விடிய விடிய தேடியும் கிடைக்கல. மறுநாள் காலையில முள்புதர்ல நிர்வாணமா கிடக்கறாள்னு செய்தி வந்துச்சு. கொடூரமா கொன்னு போட்டுட்டானுங்க. குமார், ராஜான்னு இந்த பேருக்கும் ஊருக்குள்ள எந்த வேலையும் இல்லாம, வெட்டியா இருப்பானுங்க. தலித் பொண்ணுங்களைத் தூக்கிட்டுப் போறதுதான் இவனுக வேலையே. அவங்க சமூகத்து பெரியவங்களும் இதைத் தட்டிக் கேட்க மாட்டாங்க" என வேதனைப்பட்டனர். கலைச்செல்வியின் அப்பா ராஜேந்திரனோ, " என் புள்ளையக் கொன்ன மாதிரியே அவனுங்களும் சாகனும். எங்களுக்கு வேற எதுவும் வேணாம். அரசாங்கத்தோட எந்த உதவியும் வேண்டாம்" எனக் கதறி அழுதார்.

எவிடென்ஸ் கதிர் நம்மிடம், " என் வாழ்நாளில் இப்படியொரு கொடூர சாவைப் பார்த்ததில்லை. நுங்கம்பாக்கத்தில் கொல்லப்பட்ட சுவாதியைவிட, பல மடங்கு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் கலைச்செல்வி. ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண் கொல்லப்பட்டால் தேசிய அளவில் பரபரப்பான விவாதமாகிறது. அதுவே, ஏதோ ஒரு கிராமத்தில் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டால், யாரும் கண்டுகொள்வது இல்லை. மிகுந்த வேதனையாக இருக்கிறது. அந்தப் பெண்ணின் உடலில் கொடூரமான காயங்கள் இருக்கின்றன. வாயில் கிழிந்த உள்ளாடையைத் திணித்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு சாகும் வரையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் பாலியல் சித்ரவதை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். சாலிய மங்கலத்தில் வேற்று சாதி ஆண்களை எதிர்த்துப் பேச முடியாத நிலையில், அந்த ஊர் தலித் மக்கள் உள்ளனர்.

ஆண்டுக்கு 15 பெண்கள் வரையில் பாலியல் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள். ' இந்தக் கொடுமையை எதிர்த்துப் பேச முடியாத நிலைமையில இருக்கிறோம். அரசாங்கத்துகிட்ட சொல்லி எங்களைக் காப்பாத்துங்கய்யா' என அந்த மக்கள் கதறுகின்றனர். இதைப் பற்றி விரிவாக ஆய்வு நடத்த இருக்கிறோம். ' பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தைரியமாக வந்து புகார் கொடுங்கள்' என அறிவுறுத்தியிருக்கிறோம். ' அரசாங்கம் எந்த இழப்பீடும் தர வேண்டாம். இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டா போதும்' என்பதுதான் அவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

சாலிய மங்கலத்தில் தலித் மக்கள் மீது நடக்கும் கொடுமைகள் குறித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று படுகொலைகள் நடக்கும்போது மட்டுமே, அம்மக்கள் படும் துன்பங்கள் வெளி உலகிற்குத் தெரிய வருகின்றது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியாகவே எங்கள் போராட்டத்தைத் தொடருவோம்" என்றார் கொந்தளிப்போடு.

தலித் பெண்ணின் மரணம் பற்றிய தகவல் வெளியாகி 48 மணி நேரங்கள் கடந்தும் அரசு நிர்வாகத்தில் எவ்வித சலனமும் இல்லை. ' சாலிய மங்கலத்தை அரசு சீரியஸாக கவனிக்க வேண்டும்' என எச்சரிக்கை குரல் எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்
.

உங்கள் புரொஃபஷனல் இமேஜை வளர்த்துக் கொள்ள 5 வழிகள்!

உங்கள் புரொஃபஷனல் இமேஜை வளர்த்துக் கொள்ள 5 வழிகள்!


ஒருவர் மிகவும் சந்தோஷமான மனநிலையோடு சேஷியலாக பழகக் கூடிய நபராகவும், மிகவும் தாமதமாக தனது வேலைகளை செய்பவராகவும் இருக்கலாம், இல்லையென்றால் தனிமையில் அதிகம் இருப்பவராகவோ, யாரோடும் சிரித்துப் பேசாத நபராகவோ இருக்கலாம். இதெல்லாம் தனிப் பட்ட வாழ்க்கையில் சரி, ஆனால் புரொஃபஷனல் இமேஜ் என்ற ஒரு விஷயம் உள்ளது. ஒரு நபர் அலுவலகத்திலும், வேலையிலும் இப்படி இருக்க வேண்டும் என்ற புரொஃபஷனல் விஷயங்களைக் கட்டாயம் தெரிந்து அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1. உங்கள் வேலை என்ன?

உங்கள் வேலை என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் இலக்குகளைச் சரியாகத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் நிர்வாகம் சில கூடுதல் விஷயங்களை எதிர்பார்க்கலாம். அதனைச் செய்ய நீங்கள் தகுதியானவர் என்பதால் தான் அந்த வேலை உங்களுக்கு வழங்கப்படுகிறது. அதேசமயம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மையான வேலையையும், இலக்கையும் அடைந்துவிட்டுப் பின் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் முதன்மையான வேலை தான் உங்களது புரொஃபஷனலிஸத்தை பிரதிபலிக்கும். அதில் தெளிவாக இருங்கள். பின்னர் கூடுதல் வேலைகளைக் கவனியுங்கள்.

2. கற்றுக் கொள்ளுங்கள்!

உங்கள் வேலைக்குத் தேவையான விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறேன் என்று இருக்காதீர்கள். தினசரி கற்றுக் கொள்ளும் மனநிலையுடன் அனைத்து வேலைகளையும், நபர்களையும் அணுகுங்கள். நீங்கள் அணுகும் வேலையும், நபரும் உங்களைச் சோர்வடைய வைக்கும் விஷயமாக இருக்கக் கூடாது. அது உங்களுக்கு ஒரு புதிய விஷயத்தைக் கற்றுத்தரும் ஒன்றாக இருக்க வேண்டும். உங்களிடம் கேட்டால் சில விஷயங்களுக்குத் தீர்வு இருக்கும் என்ற நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

3. வேலை - நட்பு சமநிலை!

உங்களை ஒருவர் இவர் நமது நண்பர் தானே நாம் சில வேலைகளைச் செய்ய தவறினால் கோபம் கொள்ள மாட்டார். இவர் எப்போது சொன்னாலும் வேலைகளை முடித்துவிடுவார் என்பன போன்ற, உங்களை நிர்ணயிக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். வேலைகளில் எந்தப் பாகுபாடும் பார்க்காதீர்கள். வேலையைத் தரும் பாஸ் முதல், நீங்கள் வேலை வாங்கும் நபர் வரை அனைவரிடமும் நன்றாகப் பழகலாம். ஆனால் வேலையில் நியாயமாக இருங்கள். அதேபோல் எப்போது சொன்னாலும்(உங்கள் அலுவலக நேரம் தவிர) வேலையைச் செய்யும் நபராக இருக்காதீர்கள். அது உங்களை அப்படியேஒரே நிலையில் வைத்திருக்கும். அவசர உதவிகளை மட்டும் செய்யும். எப்போதும் அதிகம் தேவைப்படும் நபராக இருங்கள்.





4. செயல் திறனை அதிகரியுங்கள்!

உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையோ அல்லது பொறுப்போ அதில் செயல்திறனை அதிகரியுங்கள். உதாரணமாக உங்களிடம் 10 பேர் முடிக்கும் வேலையை 8 பேரை கொண்டு முடிக்க சொன்னால் தனிமனிதர்களின் பொறுப்பை உணர்ந்து குழுவாகச் செயல்திறனை கூட்டுங்கள். தானாக வேலையின் செயல்திறன் அதிகரிக்கும். உங்களது குறுகிய இலக்குகளால் பெரிய இலக்குகள் சாத்தியமாகும். உங்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும்.

5. உடல்மொழி!

நீங்கள் செய்யும் வேலை 80 சதவிகிதம் என்றால் மீதமுள்ள 20 சதவிகிதத்தை உங்கள் உடை, உடல்மொழி ஆகியவை தான் நிர்ணயிக்கின்றன. உங்கள் உடை புரொஃபஷனலாக இருப்பது அவசியம். சில நிறுவனங்களில் உடை பெரிய விஷயமாக எடுத்து கொள்ளப்படாது. ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்களில் உடை கட்டுப்பாடு என்பது அந்த அளவுக்கு இல்லை. ஆனால் உடல் மொழி அனைத்து இடங்களிலும் கவனிக்கப்படும் விஷயமாக இருக்கிறது. நீங்கள் பேசும் போது சில வார்த்தைகளைத் தவிர்த்து, சில சைகைகளைச் செய்யாமல், சரியான அமரும், நிற்கும் முறைகளைப் பிரதிபலித்தால் நீங்கள் பர்ஃபெக்ட் புரொஃபஷனல் இமேஜை பெறுவீர்கள்.



- ச.ஸ்ரீராம்

வேலை செய்யும் இடத்தில் இந்த 6 வாக்கியங்களை பயன்படுத்தாதீர்கள்! #DailyMotivation

vikatan

நீங்கள் சிறப்பாக வேலை செய்பவராக இருக்கலாம். ஒழுக்கம் உட்பட அனைத்திலும் ‘அட.. நம்பர் ஒன்யா இவன்’ என்று பேர் வாங்கி இருக்கலாம். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் இந்த ஆறு வாக்கியங்கள், நிர்வாகத்துக்கு உங்கள் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். அவை என்னென்ன தெரியுமா?

1. ‘இது முடியாது’ அல்லது ‘இதனைச் செய்வது கடினம்’

புதிதாக நிர்வாகம் ஒரு திட்டத்தை செயல்படுத்தலாம் என ஆலோசனை கேட்கும் போது. செய்ய முடியாது அல்லது அதனை செயல்படுத்துவது கடினம் என்று கூறாதீர்கள். ஒருவேளை உண்மையிலேயே அந்தத் திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்றால், அதிலுள்ள சிரமங்களைப் புரிந்து கொண்டு அதனை உங்கள் அலுவலகத்துக்கு ஏற்றவாறு மாற்றி, எப்படி செய்தால் அந்தத் திட்டம் வெற்றி பெறும் என யோசியுங்கள். ஆரம்பிக்கும் போதே முடியாது என்ற‌ வார்த்தையை பயன்படுத்துவதை நிர்வாகம் எப்போதும் விரும்பாது.

2. இது என் வேலை அல்ல

தனிப்பட்ட ஒருவரோ அல்லது ஒரு துறையோ சில காரணங்களால் இயங்க முடியாமல் போகும் போது அந்த வேலையை உங்களிடம் அளித்தால், ‘இது என்னுடைய வேலை அல்ல; இதனை நான் செய்ய மாட்டேன்’ என்று கூறாதீர்கள். உங்களுக்கு அந்த வேலை தெரிந்ததால் - அல்லது அதை உங்களால் செய்ய முடியும் என்று நிர்வாகத்திற்கு உங்கள் மீது நம்பிக்கை இருப்பதால்தான் - அந்த வேலை உங்களுக்கு அளிக்கப்படுக்கிறது. இதுபோன்ற நேரங்களில் வாய்ப்புகளை வீணாக்காமல், சிறப்பாக முடிக்க பழகுங்கள்.



3. இது சிறப்பாக இல்லை!

ஓர் அணி, ஏதோ ஒரு வேலையைச் செய்து அதனை அறிக்கையாக அளிக்கும் போது, இந்த வேலை சிறப்பாக இல்லை. இதில் இந்த விஷயங்கள் இல்லை என்று கூறாதீர்கள். அதில் உள்ள குறைகளை அவர்களுக்கு பரிந்துரைகளாக அளிக்க முயற்சி செய்யுங்கள். இது அந்த அணிக்கு உத்வேகத்தை அளிப்பதுடன், உங்களது தலைமை பண்பையும் பிரதிபலிக்கும் விதமாக அமையும்.

4. இல்லை என்று துவங்காதீர்கள்!

நீங்கள் பங்கேற்கும் முக்கியமான மீட்டிங்குகளையோ அல்லது தனிப்பட்ட உரையாடல்களையோ, இல்லை என்ற வார்த்தையோடு ஆரம்பிக்காதீர்கள். உதாரணமாக ஒருவர் ஒரு செயலை எப்படி செய்யலாம் என்று கேட்கும் போது ''இல்லை, இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை வழங்காமல், இந்தச் செயலை இப்படிச் செய்யலாமே’ என வழங்குங்கள். அவருக்கும் உடனடி வெறுப்பு வராமல் இருக்கும். உங்கள் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.



5. நாம் இப்படி செய்வதில்லை

அலுவலகத்தில் புதிய முயற்சியை ஒருவர் செய்கிறார் என்றால், அதனை என்ன என்று கவனியுங்கள். அது புதிதாக உள்ளது என்பதற்காக ''இது போன்ற விஷயங்களை நாம் செய்வதில்லை'' என்று கூறி புதுமைகளை மறுத்துவிடாதீர்கள். எல்லா விஷயங்களுமே புதிதாக யாரோ ஒருவர் உருவாக்கிய விஷயம் தான் எனபதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

6. அவர் சரியில்லை, அவர் சோம்பேறி, நிறுவனத்தைப் பிடிக்கவில்லை!

ஒரு நபரை ‘அவர் சரியில்லை’ என்றோ அல்லது ‘அவர் சோம்பேறித்தனமாக இருக்கிறார்’ என்றோ விமர்சிக்காதீர்கள் தனிப்பட்ட மனிதர்களை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. உயரதிகாரியாக இருந்தாலும், தனக்குக் கீழ் பணிபுரிபவர்களின் வேலையை மட்டுமே விமர்சிக்க முடியும். அதேபோல் நிறுவனத்தைப் பிடிக்கவில்லை என்று விமர்சித்துவிட்டு பணிபுரியாதீர்கள். என்னதான் நீங்கள் சிறப்பாக பணிபுரிந்தாலும், இவர் விருப்பமில்லாமல் பணிபுரிகிறார் என்ற மனநிலையையே அது உருவாக்கும்.

ச.ஸ்ரீராம்

ஆன்லைனிலேயே இனி காஞ்சிபுரம் பட்டுப்புடவை வாங்கலாம்

சவுந்தரியா ப்ரீதா

கைத்தறி ஆடைகளை சந்தைப்படுத்தும் நோக்கில், இந்திய கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் 13 ஈ காமர்ஸ் நிறுவனங்களோடு கைகோர்த்துள்ளது.

இதன்மூலம் காஞ்சிபுரம் பட்டையோ, மங்கள்கிரி பருத்திப் புடவையையோ, கோவை பட்டையோ ஆன்லைனிலேயே வாங்கிக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் நெசவாளர்களிடம் இருந்து அவற்றை நேரடியாகப் பெற்றுக்கொள்ளவும் வழிவகைசெய்யப்பட்டிருக்கிறது.

கைத்தறிப் பொருட்களை ஈ காமர்ஸ்ம் மூலம் விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு கொள்கை வடிவமைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து அவற்றை சந்தைப்படுத்தும் நோக்கில், கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் 13 ஈ காமர்ஸ் நிறுவனங்களோடு கைகோர்த்துள்ளது.

இந்த விற்பனையில் ஆர்வமுள்ள நிறுவனங்கள், வளர்ச்சி ஆணைய அலுவலகத்துக்கு தங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம். அதே நேரம் அவர்கள், தங்களின் இணையதளத்தில் கைத்தறி வணிகத்துக்காக தனிப்பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். அவற்றில் குறிப்பிட்ட நெசவாளர்களோடு இணைந்து விற்பனை செய்யும் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆடைகளில் கைத்தறி சின்னமோ, இந்திய கைத்தறி அடையாளமோ இருக்க வேண்டும்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலோக் குமார், ''இந்த நிறுவனங்கள் மூலம் கடந்த வருடத்தில் ரூ 1.7 கோடிக்கு பொருட்கள் விற்பனை ஆகியுள்ளன. சில நிறுவன இணையதளங்கள் இரண்டு அல்லது மூன்று நெசவாளர்களோடு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன.

வெளிப்படையான கொள்கை

எங்களுடையது வெளிப்படையான கொள்கை. இப்போது வரை எங்களுடன் 13 நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன. இன்னும் சில ஈ காமர்ஸ் நிறுவனங்களும் இதில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன. இணையதள இணைப்புகள் மூலம் கூட்டுறவு சங்கங்கள், மற்ற சங்கங்கள் மற்றும் நெசவாளர்களே இவற்றை விற்றுக்கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி'' என்கிறார்.

கடந்த அக்டோபரில் கைத்தறி வளர்ச்சி ஆணையத்துடன் இணைந்துள்ள அமேசான் நிறுவனம் கைத்தறி புடவைகள், அணிகலன்கள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட 4,000 பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளது. அந்நிறுவனம் ராஜஸ்தான் (கோட்டா) நெசவாளர்கள், மேற்கு வங்கம் (நாடியா), ஒடிஷா (பர்ஹார்) மற்றும் தெலங்கானா (போச்சம்பள்ளி) நெசவாளர்களோடு இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கைத்தறிப் புடவைகளை ஆன்லைனில் வாங்கத் தனிப்பிரிவு வைத்திருக்கும் நிறுவனங்கள் சிலவற்றின் விவரம்:

ஷாதிகா இணையதள இணைப்பு: ஷாதிகா

கோகூப் இணையதள இணைப்பு: கோகூப்

அமேசான் இணையதள இணைப்பு: அமேசான்

சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்தார்; ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நீடாமங்கலம்,

சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு குரு இடம் பெயர்ந்ததையொட்டி நேற்று ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குருப்பெயர்ச்சி விழா

ஆண்டு தோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குரு பகவான் சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு நேற்று காலை 9.30 மணிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி குருபரிகாரத்தலமான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 3.30 மணிக்கு 2-வது கால யாகசாலை பூஜைகளும், தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.

மகாதீபாராதனை

இதனையடுத்து கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், சனீஸ்வரபகவான் ஆகிய சாமிகளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதன்பின்னர் குரு பகவானுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டது. சரியாக 9.30 மணிக்கு குருபகவான் பெயர்ச்சியான நேரத்தில் குருபகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணிகளில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

திட்டை கோவில்

இதேபோல் பிரசித்தி பெற்ற தஞ்சையை அடுத்த திட்டை என்ற தென்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலிலும் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவையொட்டி குருபகவானுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குருப்பெயர்ச்சியையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருவொற்றியூர்

திருவொற்றியூர் குரு தட்சிணாமூர்த்தி கோவிலில் மட்டும் குருபகவான் வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பதால் வட குருஸ்தலம் என்று அழைக்கப்படுகின்றது.

குருப்பெயர்ச்சியையொட்டி அங்கு கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கிய லட்சார்ச்சனை பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை 9.30 மணிக்கு நிறைவு பெற்று குரு தட்சிணாமூர்த்திக்கு 108 மூலிகைகள் மற்றும் ஹோம திரவியங்கள் நிறைந்த கலச நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இங்கு வெளிமாவட்டங்களிலும் இருந்து வந்த பக்தர்கள் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்தனர். பாடி திருவல்லீசுவரர் கோவிலிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tuesday, August 2, 2016

ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு...புனித நீராட ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!

vikatan.com

ராமேஸ்வரம்: ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு தினமான இன்று ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மறைந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக சிறப்பு தர்ப்பண பூஜைகள் செய்த பின்னர் அவர்கள், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.



ஆடி அமாவாசை மற்றும் ஆடி பெருக்கு தினமான இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே வரத் துவங்கினர். இன்று காலை அக்னி தீர்த்தத்தில் கூடியிருந்த பக்தர்கள் முன்னிலையில், தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீராமர் பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுத்தார். இதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்களும் புனித நீராடியதுடன் மறைந்த தங்களின் முன்னோர்கள் நினைவாக சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி, அம்பாள் சன்னிதிகளில் அவர்கள் தரிசனம் செய்தனர்.



22 தீர்த்தங்களிலும் நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடியதால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. கோயில் தீர்த்தமாடுவதற்காக 4 ரத வீதிகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். வெளியூர்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகிய இரு நிகழ்வுகளும் ஒரே தினத்தில் வருவது 14 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சிறப்பு நிகழ்வாகும். இந்த சிறப்பு நிகழ்வு குறித்து அர்ச்சகர் பக்‌ஷி சிவராஜன் கூறுகையில், '' பிதுர்களின் காலம் என அழைக்கப்படும் தட்ஷியாயண காலத்தில் வருவது ஆடி அமாவாசை. இந்த நாளில் மறைந்த தங்களின் முன்னோர்கள், தங்களை தேடி வருவார்கள் என்பது காலம் காலமாக இந்துக்களிடையே கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாட்டில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி தங்கள் முன்னோர்களின் நினைவாக உலகின் முதலில் உருவான தானியங்களில் ஒன்றான எள்ளினை தண்ணீரில் கரைத்து பூஜைகள் செய்வார்கள்.

கடல்கள், நதிகள், ஆறுகள் சங்கமிக்கும் இடங்களில் தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது விசேஷமானது என ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கர்ம காரியங்கள் விடுபட்டிருந்தால், இந்த நாளில் அந்த பூஜைகளை செய்வதன் மூலம் தோஷங்கள் விலகி முழுமையான பலன் கிடைக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல வடமாநிலங்களில்கூட, செவ்வாய்க்கிழமையில் வரும் இந்த அமாவாசையை ’சீராவன்’ அமாவாசையாக குறிப்பிட்டு சிறப்பாக கடைப்பிடிப்பார்கள்.

இந்த சிறப்பான நாளுடன், ஆடிப்பெருக்கு தினமும் சேர்ந்து வந்துள்ளது. பூமியில் வாழும் ஜீவராசிகள் உயிர் வாழத் தேவையான விவசாய தானியங்களை விளைவிக்கத் தொடங்கும் காலம் இதுவாகும். விவசாயத்திற்கு நீர்தான் பிரதானம். எனவே விவசாயப் பணிகளில் ஈடுபடும் மக்கள், நாட்டில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி அந்த தீர்த்தங்களை காவடியாக எடுத்து சென்று நிலங்களில் தெளித்து பொன் பூட்டிய ஏறுகளின் மூலம் நிலங்களை உழத் துவக்குவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் பழக்கமாகும்.



ஆடி மாதமான இந்த மாதத்தில் தமிழகத்தில் ஓடும் ஆறுகளான காவேரி, தாமிரபரணி, வைகை மற்றும் நதிகள் எல்லாம் பெருகெடுத்து ஓடும். இந்த நாளில் காவிரியை தாயாக கருதும் பெண்கள் தங்களின் தாலிச் சரடுகளை மாற்றி வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் எல்லா வளங்களும் பொங்க வேண்டும் என வேண்டுதல் நடத்துவார்கள். இந்த நாளில் உறவுகள் மேம்பட சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு காதோலையும், கருக மணியையும் கொடுப்பது வழக்கம்.

மேலும், ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகியன ஒருசேர வரும் இந்த நாளில், ‘அதிசார வக்ரம்’ எனப்படும் குருபகவான் ஒரே ஆண்டில் சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளுக்கு இடம் பெறும் நிகழ்வும் நடக்கிறது. இந்த 3 நிகழ்வுகளும் ஒரு சேர வரும் இந்த அரிய நாளில் இறைவனையும், தங்கள் முன்னோர்களையும் ஒருசேர வழிபடுவதன்மூலம் விவசாயம் செழிக்கும், மழை அதிகமாக பெய்து அறுவடை அதிகரிக்கும். வறண்ட பூமி செழிக்கும்" என்றார்.

- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி

யார் இந்த சசிகலா புஷ்பா? சசிகலா விவகாரத்தில் என்ன நடந்தது? முழு பின்னணி!

vikatan.com

எதுவும் நிரந்தரமல்ல என்பதுதான் அரசியலில் நுழைபவர்கள் எவரும் முதலில் அறிந்துகொள்ளவேண்டிய பாடம். அதிமுகவில் அதுதான் அரிச்சுவடி.

அரசியலில் யாரும் எதிர்பாராத ஜெட் வேகத்தில் உயரச் சென்று அதிகாரங்களை அடைந்து, புகழையும் பெருமையையும் அடைந்தவர் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. தன் கட்சியின் தலைவர் தன்னை அறைந்தார் என மாநிலங்களவையின் மையத்தில் நின்று அவர் சொல்லிய ஒற்றை வார்த்தையால் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமடைந்திருக்கிறார் அவர். ஏற்கெனவே இந்திய அளவில் பிரபலமான அரசியல் தலைவரான ஜெயலலிதாவை இன்னும் பெரிய சர்ச்சையில் தன் பேச்சினால் சிக்கவைத்திருக்கிறார் சசிகலா புஷ்பா.

யார் இந்த சசிகலா புஷ்பா...

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அடையல் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்தவர் சசிகலா புஷ்பா. ஆசிரியப் படிப்பு படித்துவிட்டு வேலைக்குக் காத்திருந்த சமயத்தில், நெல்லை மாவட்டம் உவரி கிராமத்தை சேர்ந்த லிங்கேஸ்வர திலகர் என்பவருடன் திருமணமானது. ஆசிரியை ஆவதுதான் அவருடைய லட்சியமாக இருந்தது. அதற்காக அடுத்தடுத்து கல்வித் தகுதிகளை ஏற்படுத்திக்கொண்டாலும் வேலை கிடைத்தபாடில்லை. விரக்தியுடன் சென்னைக்கு கணவருடன் ரயில் ஏறினார் சசிகலா புஷ்பா .
சென்னையில் கணவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்துவந்த ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் நர்சரி டீச்சராக சேர்ந்தார். கூடவே மசாஜ் சென்டர் ஒன்றையும் வருமானத்திற்காக நடத்தி வந்தார்.

அந்த சமயத்தில் அ.தி.மு.கவில் செல்வாக்கோடு வலம்வந்த ஜெயக்குமாருடன் அறிமுகம் ஏற்பட்டது. அதன் மூலம் அதிமுகவில் பொறுப்புகள் பெற முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. அதன் பின்னர், அவரின் செல்வாக்கில் சென்னை அண்ணாநகரில் மகளிருக்கான தங்கும் விடுதி ஒன்றை நடத்திவந்தார். அவரின் கணவரும் இந்த சமயத்தில் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார்.



ஆனாலும் பொருளாதார ரீதியாக சிரம திசைதான். போராட்டம் மிகுந்த வாழ்க்கையை நடத்தி வந்தார். அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதை விட்டு அகலவே இல்லை. அ.தி.மு.கவில் பெயரும் புகழும் பெற வேண்டுமானால் தலைமைக்கு நெருக்கமானவர்களுக்கு அறிமுகமாகி இருக்கவேண்டும் என்ற திட்டமிடுதலுடன் தலைமையுடன் நெருக்கமான சிலருடன் நட்பு கொண்ட சசிகலா, அந்த வரிசையில் அதிமுக வின் நிழல் மனிதரான மணல் தொழிலதிபர் ஒருவருடன் நட்பு கிடைத்தபின் விடுவிடுவென வளர்ச்சி அடைந்தார்.

மணல் தொழிலதிபருடன் நெருக்கமாக இருந்த சசிகலா, கட்சியில் தனக்கு ஏதாவது பொறுப்பு வாங்கிக் கொடுக்குமாறு அவரை நெருக்க தொடங்கினார். சசிகலா புஷ்பாவின் இந்த தொடர்ச்சியான வலியுறுத்தல் காரணமாக அந்த தொழிலதிபர் மூலம், 'மிடாஸ்' மோகனிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அவரிடமும் கட்சிப் பொறுப்பு பற்றியே சசிகலா புஷ்பா வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் சசிகலா புஷ்பாவிற்கு கார்டனுக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் நெருக்கமானார். இது கட்சியில் இன்னும் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள காரணமானது.

அதனால்,சென்னையில் குடியிருந்த போதிலும் 2010 ம் ஆண்டு நெல்லை மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பொறுப்பு சசிகலா புஷ்பாவுக்கு கிடைத்தது. கட்சி மேலிட வட்டத்தில் நல்ல அறிமுகமானவராக வலம் வரத் துவங்கினார் . 2011 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியின் வேட்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் பரவலாக உள்ளூர்க் கட்சி நிர்வாகிகள் பலரும், ‘யார் இந்த சசிகலா புஷ்பா? இவருக்கு எப்படி சீட் கிடைத்தது?’ என்று விவாதிக்க தொடங்கினார்கள். அந்தத் தேர்தலில் ஜெயலலிதா மற்றொரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதுடன், தனக்கு தெரியாமல் முதல் பட்டியல் வெளியானதாகவும் அறிவித்தார்.



இரண்டாவது பட்டியலில் சசிகலா புஷ்பா பெயர் இடம்பெறவில்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும், கட்சித் தலைமையுடன் நெருக்கமாக இருக்க பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். 2011ல் கட்சியின் இளைஞர் இளம் பெண்கள் பாசறையின் துணைச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது. சசிகலா புஷ்பாவுக்கென்று ஆதரவு வட்டம் உருவானது. கட்சியின் சார்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும் அளவுக்கு ஜெயலலிதாவால் அப்போது முக்கியத்துவம் தரப்பட்டது.

அந்த அளவுக்கு கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்க தொடங்கியது. பின்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயராக வேண்டும் என்கிற கனவுடன் தீவிரமாகச் செயல்பட்டார். கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் மூலமாக காய் நகர்த்தினார். ஆனால், சொந்த ஊர்ப் பிரச்னை அதற்கு முட்டுக் கட்டையானது. சென்னையில் வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை என்பதை புரிந்து கொண்ட அவர், தூத்துக்குடி மாவட்டத்துக்கு தனது வாக்காளர் முகவரி உள்ளிட்டவற்றை மாற்றினார்.
அவர் எதிர்பார்த்தது போலவே, தூத்துக்குடி மாநகராட்சித் தேர்தலில், மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.அதில் வெற்றி பெற்று மேயராகவும் தேர்வானார். அந்த சமயத்தில் மாநகராட்சிக் கூட்டம் நடந்த போதே ஆணையரை பேச விடாமல் மைக்கை பிடுங்கியதாக சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி சர்ச்சையானது. கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும், கட்சித் தலைமையுடன் இருந்த நெருக்கம் காரணமாக அவருக்கு ஏற்றம் மட்டுமே ஏற்பட்டது. மேயர் பொறுப்பில் இருந்தபோதே 2014 ல் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பைக் கொடுத்தது, அ.தி.மு.க. தலைமை. அத்துடன், மாநில மகளிரணி செயலாளர் பொறுப்பும் அவரைத் தேடி வந்தது. மாநிலங்களவை அதிமுக கொறடாவாகவும் அவர் ஆக்கப்பட்டார். பளபளப்பாக சென்று கொண்டிருந்த அவரது அரசியல் வாழ்வினை ஒரு ஆடியோ அதகளம் செய்துவிட்டது.

ஆண் நண்பர் ஒருவருடன் சசிகலா புஷ்பா செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி கட்சி எல்லையைத் தாண்டி, அவர் மற்றவர்களின் கவனத்திற்கும் வந்தார். அந்த ஆடியோவில் அவர், ‘நேற்று நான் *******இருந்தேன். டெல்லியில் குளிரா இருக்குல்ல.. அதான் *****ந்தேன்’ என்கிற ரீதியில் பரபரப்பாக பேசியதுடன், ‘****** மாவட்ட ஆட்சியர் ஒரு தத்தி. அவருக்கு எதுவுமே தெரியாது’ என்று அதிகாரிகளையும் மட்டம் தட்டி, தம் சொந்தக் கட்சி தொடர்பான ரகசியங்கள் சிலவற்றையும் பேசியிருந்தார்.



அதன் பின்னர் இறங்கு முகம்தான் கட்சியில். கட்சியின் அனைத்துப் பொறுப்புகளும் பிடுங்கப்பட்டன. அத்துடன் மாநிலங்களவை கொறடா பொறுப்பில் இருந்தும் கழற்றிவிடப்பட்டார். ஆனாலும், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். மீண்டும் இழந்த இடத்தை திரும்பப் பெற்று விடமுடியும் என்கிற நம்பிக்கையுடனேயே அவர் செயல்பட்டார். ஆனால் திமுக எம்.பி சிவாவுடனான சர்ச்சை அதை இன்னும் சிக்கலாக்கியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக மாநிலங்களவை எம்.பி.,திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், இந்த புகைப்படங்கள் உண்மை இல்லை என்றும் தனது கணவருடன் இருந்த படங்களை யாரோ விஷமிகள் 'மார்பிங்' செய்து வெளியிட்டு தன்னை அசிங்கப்படுத்துவதாகவும் அவர் மறுப்பு தெரிவித்து இருந்தார். அந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்பாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் திருச்சி சிவாவை மையப்படுத்தியே சர்ச்சை அவர் வாழ்வில் மையம் கொண்டுவிட்டது.

சசிகலா, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) சென்னை திரும்ப, டெல்லி விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கிருந்த திருச்சி சிவாவை சட்டையைப் பிடித்து அடித்ததாக செய்தி வெளியாகி, இப்போது அவர் கட்சியை விட்டு கட்டம் கட்டப்படும் அளவுக்கு நிலை வந்துவிட்டது. தனது கட்சித் தலைமையை அவமரியாதையாக பேசியதால்தான் உணர்ச்சிவசப்பட்டு சிவாவை அடித்து விட்டதாக அவர் அந்த சம்பவத்திற்கு காரணம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக உடனடியாக விளக்கம் அளிக்க சென்னையில் ஜெயலலிதாவை நேற்று சந்தித்தார்.

அந்த சந்திப்பு அவரது அதிமுகவுடனான அரசியல் வாழ்வின் இறுதி என்றே இப்போது சொல்லப்படுகிறது. காரணம் இரும்புப் பெண்மணி என இந்திய மீடியாக்களால் சொல்லப்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இமேஜை அசைத்துப் பார்க்கும் விதமாக நாடாளுமன்ற மாநிலங்களவையின் நடுநாயகமாக நின்று சர்ச்சைக் கருத்துக்களைப் பேசியிருக்கிறார்.

கிட்டத்தட்ட அதிமுகவிற்கும் அதன் தலைமைக்கும் பெரும் சங்கடங்களைத் தரும் பேச்சு அது. “கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இரு எம்.பிக்கள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் பற்றி பேச விரும்புகிறேன். திருச்சி சிவாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். திருச்சி சிவா மிகவும் நேர்மையானவர். என் கட்சித் தலைவர் பற்றி, அவர் பேசியதற்காக, உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்துவிட்டேன் . திருச்சி சிவாவிடமும், திமுக தலைவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. நான் என் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய என் தலைவரால் நிர்பந்திக்கப்படுகிறேன்.

ஆனால், எனக்கு அவர் மீது நன்மதிப்பு இருக்கிறது. இந்த பதவியை எனக்கு கொடுத்தற்கு, நான் மிகவும் நன்றி உணர்வோடு இருப்பேன். ஆனால், என்னை இந்தப் பதவியில் இருந்து விலக வற்புறுத்துகிறார்கள். நான் என் பதவியில் இருந்து விலகமாட்டேன்.இந்த நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எங்கு இருக்கிறது. இங்கே பேசாமல் எங்கே பேசப்போகிறேன். என்னை அவமானப்படுத்தினார்கள். நேற்று, என் தலைவர் என்னை அறைந்தார். என்னை இங்கு தம்பிதுரை தான் அழைத்துவந்தார். என் குடும்பத்தினரிடம் கூட பேச என்னை அனுமதிக்கவில்லை. ஒரு தலைவர் ஒரு எம்.பியை அறைவது என்ன விதத்தில் சரி. பெண்களின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது. தமிழ்நாட்டில் எனக்குப் பாதுகாப்பு இல்லை. என்னால், என் வீட்டில் கூட வாழமுடியவில்லை" என அழுதபடியே தெரிவித்தார் சசிகலா புஷ்பா.

இதன்மூலம் ஜெயலலிதாவை நோக்கி இந்திய மீடியாக்கள் தங்கள் கேமிராவின் வெளிச்சத்தை ஆர்வத்தோடு நீட்ட நாடாளுமன்றத்தில் நடுமையத்தில் நின்று ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறார் சசிகலா புஷ்பா. இந்தப் பேச்சின் சுருக்கத்தை மாநிலங்களவை பத்திரிகையாளர்கள் தங்கள் அலுவலகத்திற்கு அனுப்புவதற்குள், சசிகலா புஷ்பா கட்டம் கட்டப்பட்ட செய்தியை அந்த பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பிவைத்து சசிகலாவுக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது அதிமுக தலைமை.


அதன் பின்னர் செய்தியாளர்களை சந்திப்பிலும், ஒருபோதும் தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் அப்படி யாரும் தன்னை வற்புறுத்த முடியாது என்றும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

.

இது ஒருபுறமிருக்க, சசிகலாவின் வளர்ச்சி அ.தி.மு.கவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பினாமி பெயர்களில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருப்பதாக அதிமுகவினர் சொல்கிறார்கள். குறிப்பாக மாற்றுக் கட்சியினர் பெயரில்தான் சசிகலாவின் சொத்துக்கள் உள்ளதாக அதிர்ச்சிக் கொடுக்கிறார்கள் அவர்கள். திருச்சி சிவாவுக்கும், சசிகலாவுக்கும் ஏற்பட்டமோதலுக்கு பின்னணியும் இதுதான் என்கிறார்கள்.



தங்களுக்கு கீழ்ப் படியாத சந்தர்ப்பங்களில் அதிமுக தலைமை, தங்களை அடித்ததாக கடந்த காலங்களில் புகார்கள் கிளம்பியதுண்டு. பத்துக்கு பத்து அறைகளில் புறப்பட்ட இந்த புகார், இப்போது மாண்புமிகு எம்.பிக்கள் குழுமிய இடத்தில் பேசப்பட்டிருப்பதுதான் சர்ச்சை ஆகியிருக்கிறது.


“நமது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று மாநிலங்களவையிலேயே ஒரு உறுப்பினர் கண்ணீருடன் கேள்வி எழுப்பியதன்மூலம் கட்சிக் கட்டுப்பாடு, தலைமையுடன் முரண், அரசியல் சர்ச்சை என்பதையெல்லாம் மீறி அவர் தனது பிரச்னையில் கட்சித் தலைமை மீதான அதிருப்தியை ஒரு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்வரும் குற்றப் புகாராகவே மாநிலங்களவையில் முன்வைத்திருக்கிறார். இந்திய அரசியலில் இப்போது சசிகலா புஷ்பா விவாதப் பொருளாகி இருக்கிறார். இன்னும் சில தினங்களுக்கு இந்திய மீடியாக்களின் லைவ் வேன்களை சென்னை தெருக்களில் அதிகம் பார்க்கலாம்.

- ஆண்டனிராஜ், எஸ். மகேஷ்

NEWS TODAY 21.12.2025