Saturday, August 13, 2016

தோல்வியிலிருந்தே வாழ்க்கையைக் கற்றுக்கொள்வோம்!



அரவிந்தன் சிவகுமார்

கல்விக் கடன் வசூலிக்க வந்த கார்ப்பரேட் ஈட்டிக்காரர்களின் நெருக்கடி, மிரட்டல் ஆகியவற்றுக்குத் தூக்கில் தொங்கி பதில் சொன்ன பொறியியல் பட்டதாரி மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த லெனின்...

பி.எஸ்.ஜி மருத்துவமனை மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்ட‌ மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவி லட்சுமி....

ஃபேஸ்புக்கில் தன்னை ஆபாசமாய்ச் சித்தரித்ததைத் தடுக்க முயன்று, காவல்துறையினரால் அலைக்கழிக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட வினுப்பிரியா...

வாழத் தொடங்கும் முன்னரே மரணத்தின் வாசலைத் தட்டிய இளம்வயதினரின் சமீபத்திய‌ தற்கொலை நிகழ்வுகள், அதிவேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திர நகரத்தை உலுக்கிச் சற்றே கவனத்தைத் திசைத் திருப்புகிற நிகழ்வாய் அமைந்திருக்கின்றன‌.

2014-ல் பல்கலைகழக மானியக் குழு உதவியோடு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் (96 கல்லூரிகள், 4646 மாணவர்கள்) 12.20 சதவீத மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும், 15.45 சதவீதத்தினர் தங்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் இருப்பதாகக் கூறியதும் பதிவாகியுள்ளது.

இவ்வாறான‌ தற்கொலைகள் நடக்கும்போதெல்லாம், பிரச்சினைகளைக் கையாளும் திறன் இல்லாமல் போவது, அதீத மனஅழுத்தம் போன்ற காரணங்களால் தற்கொலைகள் நிகழ்கின்றன என்று பூசி மெழுகப்படுகிறது. ஆனால் அது உண்மைதானா?

உயிர்- உள்ளம்- சமூகம் ஆகிய மூன்று கோணங்களிலிருந்து நாம் ஆய்வு செய்தால் மட்டுமே தற்கொலைகள் பற்றிய சரியான புரிதலும், அதைத் தடுப்பதற்குச் சரியான‌ வழிமுறையும் கிடைக்கும்.

தற்கொலை எண்ணம் ஏன்?

நெருக்கடிகளின் தாக்கத்தினால் தற்கொலைக்கு முயற்சிப்ப‌வருக்கு ஒருவித ‘உளவியல் வலி' ஏற்படுகிறது. அந்த வலி மேலோங்கி அதைக் குறைப்பதற்கான வழிதேடும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுவார்கள். அப்போது அவர்களின் சிந்தனை முறையில் பல மாற்றங்கள் நிகழும்.

அதாவது, ஒரு பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வுகள் இல்லவே இல்லை என்கிற எண்ணம் தோன்றுவது, இம்மியளவுகூட பிரச்சினை குறையாது என்கிற பயம் உள்ளிட்டவை எனக்குள்ள பிரச்சினைகள் இன்றே, இப்போதே முழுமையாய்த் தீர வேண்டும் அல்லது நான் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற முடிவை நோக்கி ஒருவரைத் தள்ளுகின்றன.

சூழலே காரணம்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவை தனிநபர் மனநிலையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திவருகின்றன‌. பள்ளி, கல்லூரிகளில் தனிநபர்த்தன்மை அதாவது 'இன்டிவிஜுவலிஸம்' முன்னிறுத்தப்படுகிறது. தவிர ‘டீம் ஸ்பிரிட்' எனும் குணம் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. ‘நீ ஜெயிக்கப் பிறந்தவன்/ள்' என்கிற மந்திரம் மட்டும்தான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

பட்டம் பெற்று வேலை தேடும் படலத்தில், அந்த வறட்டுத் தன்னம்பிக்கை மந்திரங்கள் மீண்டும் மீண்டும் மனதில் ஒலிக்கும். இந்த நிலையில்,நெருக்கடிகள் வ‌ரும்போது, பிரச்சினைக்கு வெளியிலிருந்து அவற்றை அணுகாமல், பிரச்சினையின் முழுத் தன்மையையும் புரிந்துகொள்ளாமல், பிரச்சினைக்குள்ளிருந்தே அணுகுவதால், ‘உளவியல் வலி' ஏற்படும். அது தற்கொலைக்கு வழிவகுக்கும்.

ஆக, தற்கொலைகளுக்குக் காரணம் மூளையில் ஏற்படும் வேதி மாற்றங்கள் மட்டுமே அல்ல. நாம் சார்ந்திருக்கும் சமூகச் சூழலும் மிக முக்கியக் காரணம்! இதைத்தான் ‘இயற்கைக்கு முரணாகத் தற்கொலைகள் தோற்றமளித்தாலும், தற்கொலைகளை உற்பத்தி செய்வது சமூகத்தின் இயற்கை குணமாகவுள்ளது' என்கிறார் மார்க்ஸ்.

எப்படி மீள்வது?

தினக் கூலிகளாய், பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் எப்படி அந்தப் பூக்காரம்மாவால் சிரிக்க முடிகிறது? எப்படி இடுப்பொடிய‌ வீட்டு வேலை செய்யும் அந்தப் பெண்ணால் அமைதியாகப் பேச முடிகிறது? மாற்றுத் திறனாளிகளால் எப்படி நம்பிக்கையுடன் உலவ முடிகிறது? அவர்கள் எப்படி நெருக்கடிகளைக் கையாளுகிறார்கள்? எந்தப் பல்கலைக்கழகத்தில் அதற்கு முனைவர் பட்டம் பெற்றார்கள்?

இன்றைய பொழுது என் கையில், இன்றைய சூழலில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யலாம். அதை மகிழ்ச்சியோடும் உறுதியோடும் செய்யலாம். தோல்விகளைப் பிரச்சினைகளாகப் பார்க்காமல் எல்லாவற்றையும் அனுபவங்களாய்ப் பார்க்கலாம். இதுவே நமது வாழ்க்கைத் தத்துவமாக இருக்கட்டும்.

‘நீ நூலகத்துக்கு போ!

நான் தெருவில் இறங்கப் போகிறேன்.

வாழ்க்கையை நான்

வாழ்க்கையிலிருந்தே கற்றுக்கொண்டேன்'

என்ற பாப்லோ நெருடாவின்

கவிதை வரிகள்தான், மருத்துவர்களின் ‘ப்ரிஸ்கிரிப்ஷனை' விட‌ இன்று முக்கியத் தேவையாய் இருக்கின்றன‌.



கட்டுரையாளர், கீழ்ப்பாக்கம் அரசு மனநலக்காப்பகத்தில் மனநல மருத்துவர்.

தொடர்புக்கு: spartacus1475@gmail.com

பஞ்சு அருணாசலம்: துணிச்சலான பரிசோதனைகளின் மன்னன்



சுமார் அறுபதாண்டுகளாகத் தமிழ்த் திரையுலகுக்காக உழைத்த பஞ்சுஅருணாசலம், தன் சிந்தனையை நிறுத்திக்கொண்டார். தம் கடைசி மூச்சுவரை அவர் திரைப்படங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார் என்பது வியப்புக்குரிய செய்தி.

அவர் இதுவரை 99 படங்களுக்குக் கதை வசனகர்த்தாகப் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூறாவது படத்துக்கான திரைக்கதை எழுதப்பட்டுத் தயாராக இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

கண்ணதாசனுக்கு உதவியாளராகத் தொடங்கிய அவருடைய உழைப்பு, கவுதம் கார்த்திக் வரை தொடர்ந்திருக்கிறது. கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ‘முத்துராமலிங்கம்’ படத்துக்காக 21 ஆண்டுகளுக்குப் பின்னால் இளையராஜா இசையில் பாடல்கள் எழுதிவிட்டுத்தான் மூச்சை நிறுத்தியிருக்கிறார்.

அவர் திரைத் துறைக்குள் வந்ததும் ஏற்கெனவே யாரோ போட்டு வைத்த பாதையில் பாதுகாப்பாகப் பயணித்துவிடவில்லை. எல்லோரும் நினைக்கக்கூடப் பயந்து ஒதுங்குகிற செயல்களைத் துணிச்சலுடன் செய்து வெற்றி பெற்றுக் காட்டியிருக்கிறார்.

இளையராஜாவை அறிமுகம் செய்தார். அது சாதாரணமாக நடந்துவிடவில்லை. அப்போது உச்சத்தில் இருக்கும் எம்எஸ்.விஸ்வநாதனையே இசையமைப்பாளராகப் போடலாம் என்று அவருடைய குடும்ப உறுப்பினர்களே வற்புறுத்தியபோதும், இளையராஜா முதன்முதலில் பாடல் பதிவு தொடங்குகிற நேரத்தில் மின்சாரம் தடைபட்டதை எல்லோரும் அபசகுனமாகக் கருதியபோதும் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்றிருக்கிறார் பஞ்சுஅருணாசலம்.

பரிசோதனை முயற்சிகள்

அவர் கதை வசனம் எழுதிய படங்களில் அதுவரை யாரும் செய்யாத பரிசோதனை முயற்சிகள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். ரஜினிக்குத் திருப்புமுனையாக அமைந்த படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’. அந்தப் படத்துக்குத் திரைக்கதை வனம் எழுதிய பஞ்சு அருணாசலம், அதுவரை நல்லவராகவே நடித்துவந்த சிவகுமாரைக் கெட்டவராகவும் அதுவரை கெட்டவராக நடித்துவந்த ரஜினியை நல்லவராகவும் எழுதியிருக்கிறார். படக் குழுவினர் எல்லோரும் பயந்தபோதும் அவர்களுக்குத் தைரியம் சொல்லி வேடங்களை மாற்றாமல் அப்படியே வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

ஒரே நேரத்தில் கமலை வைத்து ஒரு படம், ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதை அவர் எதிர்கொண்ட விதம் மிகவும் சுவையான நிகழ்வாகத் திரையுலகில் பேசப்படுகிறது. அவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்த நேரத்தில் இருவரையும் தனித்தனியாக நடிக்கவைத்துப் படமெடுக்க அவர் தயாரானார்.

அப்போதும், அதுவரை வில்லனாகவும் ஸ்டைல் மன்னனாகவும் நடித்து வந்த ரஜினியை குடும்பத்துக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் நல்லவனாக நடிக்க வைத்திருக்கிறார். 25 வயது முதல் 60 வயது வரையிலான பலவிதத் தோற்றங்களில் ரஜினி நடித்தார். இம்மாதிரியான புதுவிதத் தோற்றத்தில் ரஜினியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகம் படம் வெளியாகும்வரை எல்லோருக்குமே இருந்ததாம். ரஜினிக்கும் அந்தச் சந்தேகம் இருந்திருக்கிறது. அவர் திருப்தியில்லாமல் இருந்திருக்கிறார். அப்போது பஞ்சு அருணாசலம், ஐந்தாயிரம் அடிவரை படத்தை எடுத்து அவருக்குப் போட்டுக் காட்டுவோம், அப்போதும் அவருக்குத் திருப்தியில்லை யென்றால் படத்தை நிறுத்திவிடலாம் என்று சொல்லி எடுத்தாராம்.

எடுத்தவரை போட்டுப் பார்த்து ரஜினி திருப்தியடைந்தாராம். அந்தப் படம் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’. அப்படம் பெரிய வெற்றி பெற்றதுடன், அந்த ஆண்டின் சிறந்த படமாக சினிமா ரசிகர் சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை ரஜினிக்கும் சிறந்த இயக்குநருக்கான விருதை இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கும் அந்தப் படம் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

மாறுபட்ட திரைக்கதைகள்

1982-ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று வெளியான இரண்டு படங்களுக்கும் பஞ்சுதான் கதை வசனகர்த்தா. ஒன்று ‘எங்கேயோ கேட்ட குரல்’, இன்னொன்று ‘சகலகலா வல்லவன்’. கொஞ்சம் யோசித்தாலே ரஜினி நடிக்க வேண்டிய கதையில் கமல் நடித்திருக்கிறார் என்பதும் கமல் நடிக்க வேண்டிய கதையில் ரஜினி நடித்திருக்கிறர் என்பதும் புரிந்துவிடும்.

‘சகலகலா வல்லவன்’ படமாகும் நேரத்தில் இந்தக் கதை எனக்கு செட்டாகுமா என்று கமல் மிகவும் பயந்துகொண்டேயிருந்தார் என்று சொல்லப்படுகிறது. ‘வாழ்வே மாயம்’, ‘மூன்றாம் பிறை’, ‘சிம்லா ஸ்பெஷல்’ மாதிரியான படங்களிலேயே தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தால் கமர்ஷியலாக உங்களுக்குப் பின்னடைவு ஏற்படும்; அவ்வப்போது இப்படிப்பட்ட படங்களிலும் நடிப்பதுதான் உங்களுக்கு நல்லது என்று சொல்லி நடிக்கவைத்திருக்கிறார். அதே நேரம் கமலுக்குத் திருப்தி ஏற்பட வேண்டும் என்பதோடு அவருடைய நடனத் திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்ததும் அவர் நடனக்காரராகிவிடுகிறார் என்று மையக்கதைக்குப் பாதிப்பில்லாமல் திரைக்கதையை மாற்றினாராம் பஞ்சு. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘விஷ் யூ ஹேப்பி நியூஇயர்’ பாடல் இன்றுவரை பிரபலமாகவே இருக்கிறது. சில்க் ஸ்மிதாவுடனான ‘நேத்து ராத்திரி யம்ம்மா’ பாடலும் கமல் பாணி என்பதற்காகவே வைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ‘போக்கிரி ராஜா’, ‘தனிக்காட்டு ராஜா’, ‘ரங்கா’ போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினியை முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கவைத்திருந்தார். இப்படி யாரும் எதிர்பாராத விஷயங்களைப் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்து சாதனைகளாக்கியிருக்கிறார்.

‘பாபா’ படத்துக்கு முன்புவரை கிட்டத்தட்ட ரஜினியின் எல்லாப் படங்களிலும் பஞ்சு அருணாசலத்தின் பங்களிப்பு ஏதோ ஒரு வகையில் இருந்திருக்கிறது. இயக்குநர் யாராக இருந்தாலும் திரைக்கதை எப்படியிருந்தாலும் அதற்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் குறைந்தது நான்கைந்து இடங்களில் ரஜினி கைதட்டல் வாங்குகிற மாதிரி செய்துவிடுவாராம் பஞ்சு.

ஓய்வற்ற பயணம்

குள்ள மனிதராகக் கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. சுமார் நான்காயிரம் அடிவரை படமும் எடுக்கப்பட்டுவிட்டதாம். ஆனாலும் கமலுக்குத் திருப்தியில்லையாம். அதன் பின் பஞ்சு அருணாசலத்தை அணுகியிருக்கிறார். அவர் படத்துக்குள் வந்ததும் அதுவரை எடுத்ததை அப்படியே தூக்கி வைத்துவிட்டு, மறுபடியும் முதலிலிருந்து தொடங்கச் சொல்லியிருக்கிறார். அவருடைய திரைக்கதை கமலுக்கு மிகவும் பிடித்துப்போனதால் அவரும் எடுத்ததை அப்படியே விட்டுவிட்டு முதலிலிலிருந்து எடுத்தாராம்.

கையெழுத்து குண்டு குண்டாக அழகாக இருந்த காரணத்தாலேயே கண்ணதாசன் அவரைச் சேர்த்துக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அதோடு மடைதிறந்த வெள்ளம்போல கண்ணதாசனின் உதடுகளிலிருந்து ஒருமுறை மட்டுமே உதிரும் சொற்களை அட்சரம் பிசகாமல் பிடித்துக்கொள்ளும் வேகமும் பஞ்சு அருணாசலத்துக்கு இருந்த காரணத்தால் அவரோடு பல ஆண்டுகள் பயணிக்க முடிந்திருக்கிறது. கையெழுத்து மட்டுமின்றி அவர் எழுதிய எழுத்துகளும் நன்றாக இருந்ததால்தான் கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் அவருடைய பேனா ஓய்வின்றிப் பணியாற்றியிருக்கிறது.

சிறந்த கலைஞர்களிடம் உங்களுடைய ஆசை என்னவென்று கேட்டால், நான் என்னுடைய கலைப் பணியில் இருக்கும்போதே மரணிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.

இவருக்கு அப்படியே நடந்திருக்கிறது. ஒரு பக்கம் இப்போது தயாராகிக்கொண்டிருக்கும் ‘முத்துராமலிங்கம்’ படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதிக்கொடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் வார இதழ் ஒன்றுக்குத் தன்னுடைய திரைப்பயணத்தைத் தொடராக எழுதிக்கொடுத்துக்கொண்டு, மற்றுமொரு பக்கம் புதிய திரைக்கதையை எழுதிவிட்டு மரித்திருக்கிறார்.



கதை எழுதியவரின் மனமும் புண்படாமல் இயக்குநரின் தன்முனைப்பையும் சீண்டிவிடாமல் கதாநாயகர்களுக்குக் கைதட்டல் பெற்றுத் தந்துகொண்டிருந்த அந்தக் கலைஞனின் கைகள் இப்போது ஓய்வெடுக்கின்றன. தமிழ்கூறு நல்லுலகெங்கும் அவருடைய சிறப்புகளை நூற்றுக்கணக்கான கைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன.

குடும்ப உறுப்பினர்களே அவரை வற்புறுத்திய போதும், இளையராஜா முதன்முதலில் பாடல் பதிவு தொடங்குகிற நேரத்தில் மின்சாரம் தடைபட்டதை எல்லோரும் அபசகுனமாகக் கருதியபோதும் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்றிருக்கிறார்.

தங்க நகைக் கடன்... சுலபமாக அடைக்கும் மூன்று வழிகள்!

ஆத்திர அவசரத்துக்கு இன்றைக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது நகைக் கடன் தான். திடீரென்று அப்பாவுக்கு சுகமில்லை, பையன் காலேஜ் பீஸ் இந்த மாசமே கட்டணுமாம்; பஸ்ல போய் மாளலை; உடனே ஒரு டுவீலர் வாங்கணும்... இப்படி வரும் செலவுகளுக்கு யாரிடமும் கை ஏந்தாமல், நமக்கே நமக்கென இருக்கும் தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் பெற்று, பயன் அடைவதுதான் தங்க நகைக் கடன். நகர்ப்புறத்து மத்திய தர வர்க்க மனிதர்களுக்கு மட்டுமல்ல, கிராமப்புறங்களில் வாழும் பலருக்கும் நகைக் கடன் ஒன்றுதான் உடனடி பணத் தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கிறது. நம்மவர்கள் அதிக அளவில் தங்கம் மீது மோகம் கொள்வதற்கும் இது ஒரு முக்கியமான காரணம்.

மற்ற கடன்களுக்கும் இந்த தங்க நகைக் கடனுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம், மற்ற கடன்களை இ.எம்.ஐ. மூலம் ஒவ்வொரு மாதமும் கட்டலாம். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும்போது, இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போது, கடன் மூலம் வீடு வாங்கும்போது இ.எம்.ஐ. என்று சொல்லப்படுகிற மாதத் தவணை மூலம் கட்டி, நாம் வாங்கிய பொருளை நமக்கானதாக ஆக்கிக் கொள்ளலாம்.

ஆனால், தங்கக் கடன் இதிலிருந்து மாறுபட்டது. அதாவது, தங்கக் கடன் தொகையும் அந்த காலத்துக்கு கொடுக்கும் வட்டியையும் (அசலுக்கும் வட்டிக்கும் சேர்த்து முழு தொகையினை செலுத்திய பின்னரே) சேர்த்து கட்டியபின்னர்தான் தங்கக் கடனிலிருந்து மீள முடியும் அல்லது வருடத்துக்கோ அல்லது ஆறு மாதத்துக்கோ ஒருமுறையோ கடனுக்கு செலுத்தும் வட்டியை மட்டும் செலுத்தி தங்கக் கடனை புதுப்பிக்க முடியும். சில வங்கிகள், கடனையும் வட்டியையும் முழுமையாக கட்டிய பிறகு மறு அடகு வைக்க அனுமதிக்கிறது.

இல்லையெனில் தங்கக் கடன் காலம் முடிந்து மூன்று அல்லது ஆறு மாதம் கழித்து தங்கம் ஏலத்துக்கு சென்றுவிடும். பிறகு ஏலத்துக்கு சென்ற தங்க நகையை ஏல செலவுகளையும் மற்ற இதர செலவுகளையும் சேர்த்து அதற்குண்டான வட்டியையும் செலுத்தித்தான் தங்கக் கடனிலிருந்து மீள முடியும்.

இதனை ஒரு உதாரணம் மூலம் பார்ப்போம். நம்மிடம் உள்ள ஆபரண தங்க நகையின் மதிப்பு - ரூ. 1,25,000 என்று வைத்துக் கொள்வோம். தங்கத்தின் மதிப்பிற்கேற்ப 80% கடன் கிடைத்தால் ரூ.1,00,000. கடனுக்கான வட்டி விகிதம் - 10% எனில், ஓராண்டில் தங்க நகைக் கடனுக்கு செலுத்தும் வட்டி மட்டும் ரூ.10,000. ஆக மொத்தம் அசலும் வட்டியும் சேர்த்து வருட முடிவில் செலுத்தும் மொத்த தொகை ரூ.1,10,000.

இந்தப் பெரும் தொகையை ஒருவர் மொத்தமாக செலுத்தி அடைப்பது கடினம்தான். இதையே கடன் தரும் வங்கிகள் மாதத் தவணையாக செலுத்த சொல்லும்பட்சத்தில், அவரால் எளிதாக கடனைத் திரும்பக் கட்டக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை. எனவே, தங்க நகைக் கடனை எளிதாக திரும்ப செலுத்துவதற்கு என்ன வழி?

மூன்று வழிகள் உள்ளன. முதலாம் வழி, உங்களால் 1,10,000 தங்க நகைக் கடனை 12 மாதத்தில் திரும்ப செலுத்த வேண்டும் எனில், மாதம் 1,10,000/12= ரூ.9,167 சேமிக்க வேண்டும். இதுவே வங்கி சேமிப்புக் கணக்கில், 4% வட்டி விகிதத்தில் வளரும் திட்டத்தில் மாதம் ரூ.8,999 வீதம் 12 மாதங்களுக்கு சேமிக்கலாம். ஒருவருட கால வங்கி சேமிப்பில் 6.5% என்ற வட்டி விகிதத்தில் ரூ.8896 சேமிக்க வேண்டும். ஆர்டி அல்லது லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் 8% வருமானத்தில் ரூ.8.835 முதலீடு செய்து வரலாம். இந்த முதிர்வு தொகையை தங்க நகைக் கடனை அடைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து சேமித்து வந்தால், தங்க நகைக் கடனை சிரமம் இல்லாமல் சுலபமாக அடைக்கலாம்.

மாதம் சுமார் ரூபாய் 9,000 சேமிப்பது எங்களால் முடியாது என்று நினைப்பவர்கள் இரண்டாவதுவழியைப் பின்பற்றலாம். அதாவது, நகைக் கடனுக்கான வருட வட்டியை மாத வட்டியாக பிரித்து, அதற்கு மேல் எவ்வளவு கூடுதலாக சேமிக்க முடியுமோ சேமித்து, வருட முடிவில், தாங்கள் சேமித்த தொகையை எடுத்து நகைக் கடனுக்கான வட்டியை செலுத்தி கடன் சுமையை குறைக்கலாம். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.

தங்க நகைக் கடனாக வாங்கியது ரூ.1,10,000. ஒருவரால் மாதமொன்றுக்கு கட்ட நினைக்கும் தொகை - ரூ.5,000 என்று வைத்துக் கொள்வோம். ஒரு வருடத்துக்கு வட்டி ரூ.10,000 எனில், மாதமொன்றுக்கு வட்டியாக சேமிக்க வேண்டிய தொகை ரூ.833. இந்த வட்டித் தொகையுடன் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக சேமிக்கும் தொகை ரூ.4,167-ஐ ஒரு வருட வங்கி சேமிப்பு திட்டத்திலோ, அஞ்சலகத்திலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டிலோ சேமிக்கலாம்.

இந்த வகையிலும் சேமிக்க முடியாது என்பவர் களுக்கு மூன்றாவது வழி உள்ளது. அதாவது, உங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பணத்தை சேமித்து இடையிடையே அசலையும் வட்டியையும் கட்டலாம். இப்படி செய்வதினால் வட்டி சுமை குறையும். காரணம், தங்க கடனுக்கான வட்டி அதிகம். அசல் குறைந்தால்தான் வட்டியும் குறையும்.

இன்று தங்க நகைக் கடைக்காரர்கள் சுலப மாதத் தவணை திட்டத்தை வழங்கி வருவதால்தான், குறைந்த வருமானம் உள்ளவர்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து தங்க நகைகளை சேமிக்கிறார்கள். இது மாதிரி தங்க நகைக் கடனுக்கும் மாதத் தவணை பணம் செலுத்தும் முறையைக் கொண்டுவந்தால், வங்கிகளுக்கு திரும்ப வரவேண்டிய பணமும் சரியாக வரும். கடன் வாங்கியவர்களும் பணத்தை திரும்பத் தந்து, நகையை எடுத்துச் செல்வார்கள்.

எந்த ஒரு கடனையும் முழுமையாக ஒரே தவணையில் அடைப்பது கடினமான ஒன்றே. சுலப தவணைத் திட்டத்தின் மூலம் சிறுக சிறுக கடன் தொகையை திரும்ப செலுத்தி அதிலிருந்து மீண்டு வருவதுதான் புத்திசாலித்தனம்.

உறவில் விரிசல்: களையவேண்டிய பத்து காரணங்கள்!

vikatan.com

செல்போன் வருகைக்கு முந்தைய காலத்தில் காதலை சொல்லவே ஆணுக்கும் பெண்ணுக்குமான தயக்கம் நிறைய இருக்கும். பார்வையாலேயே பல நாட்கள் ஓடும். அதன் பிறகு ஒருவழியாக காதலை சொல்லி… அது கல்யாணத்தில் முடிந்தால் அவர்களுக்கு இடையிலான புரிதல் நிறைய இருக்கும். கூட்டுக் குடும்பமாக ஆட்கள் நிறைந்திருக்கும். அங்கே அந்த காதல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கண்களால் நடக்கும் உரையாடல். அதற்காக அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருந்தது இல்லை. சண்டைகளைத் தாண்டி அவர்களுக்குள் இருந்தது புரிதல்.

இன்று…? பார்த்ததும் ஒரே நாளில் காதலைச் சொல்லி், இரண்டே நாட்களில் எல்லாம் பேசி முடித்து… வாழ்க்கை என்பது சலித்துவிடுகிறது. சீக்கிரத்தில் தொடங்கி சீக்கிரத்தில் முடிந்து விடுகிறது. கணவன் மனைவிக்குள் மட்டுமல்ல…பொதுவாகவே உறவுகளுக்குள் விரிசல் எங்கிருந்து வருகிறது? விரிசலை ஏற்படுத்த காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். எப்படி சுற்றி வளைத்துப் பார்த்தாலும் எல்லா காரணங்களும் பெரும்பாலும், இந்த பத்துக்குள் நிச்சயம் அடங்கிவிடும். அப்படியான பத்து காரணங்களை பார்க்கலாம்.

1. ஈகோ (Ego)

குடும்பத்துக்குள் எட்டிப் பார்க்கக்கூடாத விஷயம் ஈகோ! அந்த வார்த்தைக்குள்ளேயே ‘கோ’ என்பது இருப்பதால், யாராவது ஒருவருக்கு அது வந்துவிட்டால், நிம்மதியை விரட்டிவிடும். நீ பெரியவனா… நான் பெரியவளா என்று போட்டிபோடும் மைதானம் அல்ல, வாழ்க்கை. கணவனுக்கு தெரியாதது மனைவிக்கு தெரிந்திருக்கலாம்; மனைவிக்கு தெரியாதது கணவனுக்கு தெரிந்திருக்கலாம்; எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இன்னொரு பக்கம் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் இந்த ஈகோ அடிக்கடி வந்து போகும். அதனால் ஈகோவை தவிர்த்துவிடுவோம்.

2. தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex)

இது எந்த நேரத்தில் மனிதனுக்குள் எட்டிப்பார்க்கும் என்பது தெரியாது. ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய முடியாமல் போய், அதற்காக வீட்டில் உள்ளவர்கள் சாதாரணமாக கிண்டல் செய்தால் கூட, அது சிலருக்கு தாழ்வு மனப்பான்மையாக மாறிவிடும். அது நாளடைவில் அதிகமாகி தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொள்வார்கள். அந்த வட்டமே விரிசலாக மாறும். சமையல் தொடங்கி படிப்பு வரை இந்த தாழ்வுமனப்பான்மை எதற்காக வேண்டுமானாலும் வரலாம்.

3. தவறான புரிதல் (Misunderstanding)

வாழ்க்கையை அழகாக மாற்றுவதே புரிதல்தான். அது கணவன் மனைவியாக இருந்தாலும் சரி… அப்பா பிள்ளை, அண்ணன் தங்கை என எந்த உறவுகளானாலும் புரிதல் என்பது அவசியம். புரிதல் மட்டும் இருந்தால் வாழ்க்கை வரமாகும். அதுமட்டும் இல்லாமல் போய்விட்டால், தொட்டதற்கெல்லாம் பிரச்னை எழ ஆரம்பித்துவிடும். ‘நான் சொல்றதை யாரும் கேட்க மாட்டேங்குறாங்க…’ என்று எல்லோரிடமும் எரிந்து விழ ஆரம்பித்துவிடுவீர்கள். மற்றவர்கள் எப்படி உங்களை புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களோ அதேபோல வீட்டில் மற்றவர்களின் உணர்வுகளை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

4. பொஸசிவ்னஸ் (Possessiveness)

‘தனக்கு மட்டுமே சொந்தம்’ என்று என்ற பொஸசிவ்னஸ் நமக்கு இந்நாளில் பழக்கமாகிவிட்டது. அளவு கடந்த அன்புதான் இந்த பொஸசிவ்னஸ். கணவன் வேறு ஒரு பெண்ணிடமோ, மனைவி வேறு ஓர் ஆணிடமோ சாதாரணமாக பேசினால் கூட அதை தாங்கிக்கொள்ள முடியாது. இந்த இடத்தில் அப்படியான ஒன்று நிகழ்ந்தால், ‘ஹேய் லூசு… அவளும் நீயும் ஒண்ணா…’ என அதே இடத்தில் சொல்லி உங்கள் துணையின் முக்கியத்துவத்தை புரியவைத்துவிட வேண்டும். அப்படியே அதை வளரவிட்டால், ஆபத்துதான். இது கல்யாணம் ஆனதும் வரலாம். 40 வயதிலும் வரலாம். எந்த நேரத்திலும் இது என்ட்ரி ஆகலாம்.

5. சந்தேகம் (Suspicion)

பொஸசிவ்னஸுக்கும் இதற்கும் மெல்லிய கோடுதான் வித்தியாசம். அதன் அடுத்த கட்டம் இது. வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் வீட்டுக்குள் வரவே கூடாத ஒன்று சந்தேகம். வாழ்க்கையை நரகமாக மாற்றும் சக்தி சந்தேகத்துக்கு உண்டு. பல வீடுகளில் புகுந்த சந்தேகப்பேய், வீட்டையே புரட்டிப்போட்டு, சில இடங்களில் உயிரையும் குடித்திருக்கிறது. அதனால் சந்தேகம் என்ற பேயை மனசுக்குள் விடாதீர்கள். அப்படி உங்களுக்கு எதாவது தோன்றினால் அதை உடனே உங்கள் துணையுடன் கலந்து பேசி தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சந்தேகத்தை வளரவிட்டால் அது வெட்ட முடியாத முள் காடாக வளர்ந்துவிடும்.

6. மனம் விட்டுப் பேசாதது (Not being open about their feelings)

எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டுப் பேசினால் தீர்ந்துவிடும். ஆனால், அப்படி பேசுவதற்குதான் பலர் தயாராக இருப்பதே இல்லை. கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வரும் சண்டைகளை இருவரும் பேசாமல் தள்ளிப்போடுவது தான் விரிசலை விரிவுபடுத்துகிறது. அதேபோல குழந்தைகளாக இருந்தாலும் சரி… பெற்றோராக இருந்தாலும் சரி… அவரவர்களுக்குள் ஒரு எண்ணம் இருக்கும். மற்றவர்கள் அதில் இருந்து மாறுபட்டு இருப்பார்கள். அந்த நேரத்தில் பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். ஆளுக்கொரு விஷயத்தை மனசுக்குள் மட்டுமே நினைத்திருந்தால் அதற்கு தீர்வு கிடைக்காது. அது விரிசலில் மட்டுமே முடியும்.

7. மூன்றாம் நபரின் தலையீடு (The intervention of a third person)

குறிப்பாக இது கணவன- மனைவி கவனிக்க வேண்டிய விஷயம். எந்த பிரச்னை வந்தாலும் அதை எந்த காரணத்துக்காகவும் மூன்றாம் நபரிடம் கொண்டு போகக் கூடாது. அவர்கள் இருவருமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். கணவனுக்கு மனைவியைவிடவும், மனைவிக்கு கணவனைவிடவும் வேறு எவரும் நல்லது நினைக்க முடியாது; நல்லது செய்யவும் முடியாது. மூன்றாவது நபர் ஒருவர் உங்கள் பிரச்னைக்குள் வந்தாலே நீங்கள் வேறு ஒரு பிரச்னைக்குள் சிக்க தயாராகி வருகிறீர்கள் என்பதுதான் மறைமுகப் பொருள்.

8. துன்புறுத்தல் (Harassment)

கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் பாசம், குழந்தைகளின் வரவுக்குப்பின் கொஞ்சம் குறைய ஆரம்பிக்கும். அதுவும் 40 வயதைக் கடந்த பெண்கள், குழந்தைகள் மீது அன்பையும் அக்கறையையும் காட்டிக் கொண்டு, கணவனை கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். கணவன் நெருங்கி வந்தாலும் விலகிப் போவார்கள். அந்த நேரத்தில்தான் உங்கள் துணைக்கு அரவணைப்பு முக்கியம். அடிப்பது, சண்டை போடுவது மட்டுமல்ல, விட்டு விலகிப்போவதும் ஒருவகையில் துன்புறுத்தல்தான். அப்படியான ஒன்று நிகழும்போது இருவருக்கும் இடையில் விரிசல் தொடங்கியிருக்கும்.

வீட்டில் இருக்கும் குழந்தைகள் சொல்வதையும் காதுகொடுத்துக் கேளுங்கள். உங்கள் எண்ணங்களை அவர்கள் மீது திணித்தால், அவர்களைப் பொருத்தவரையில் அதுவும் ஒருவகையில் துன்புறுத்தல்தான். அந்தத் திணிப்பு நாளடைவில் உங்கள் மீது வெறுப்பை உண்டாக்கும்.

9. விட்டுக்கொடுக்காதது (Being Selfish)

குடும்பத்துக்குள் சண்டை வருவது இயல்பு. சண்டைக்குப் பிறகு யார் முதலில் பேசுவது என காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த பிரச்னையாக இருந்தாலும் இரவு தூங்கப்போவதற்குள் முடிவுக்கு வந்துவிட வேண்டும். இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தாலே போதும்; மற்றவர் தானாக சமாதானம் ஆகிவிடுவார். ‘அடச்சே… இதுக்கா சண்டை போட்டோம்!’ என மறுநாள் உங்களுக்கே தோன்றலாம். அதேபோல குழந்தைகளிடமும் சில விஷயங்களில் பெரியவர்கள் விட்டுக்கொடுத்தே ஆக வேண்டும். ’அவன் என்ன சின்ன குழந்தைதானே… நான் சொன்னால் கேட்க மாட்டானா?’ என்ற எண்ணம் வரவே கூடாது. விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போக மாட்டான் என பெரியவர்கள் சொன்னதில் எவ்வளவு உண்மை அடங்கியிருக்கிறது.

10. சோசியல் மீடியா (Social Media)

இன்று பல குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைக்கும் விரிசலுக்கும் முக்கிய காரணமாக இருப்பது சோஷியல் மீடியாக்கள். பெரும்பாலானோர் அதிக நேரத்தை இங்கேதான் செலவிடுகிறார்கள். வீட்டில் இருப்பவர்களிடம் பேசுவதை விட சோஷியல் மீடியாவுக்குள் முன் பின் தெரியாதவர்களிடம் பேசுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சாப்பிடுவதற்கு, குளிப்பதற்கு, அலுவலகம் செல்வதற்கு என எல்லாவற்றும் தனித்தனியாக நேரம் ஒதுக்குகிறோம். ஆனால் நேரம் காலமில்லாமல் சோஷியல் மீடியா நம்மை ஆக்ரமித்துவிடுகிறது.

இதைக் கேட்டால் பிரச்னை தொடங்கிவிடுகிறது. அதேபோல் போன். உங்கள் கட்டுப்பாட்டில் போன் இருக்க வேண்டும். அதன் கட்டுப்பாட்டில் நீங்கள் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும்போது - முக்கியமாக படுக்கையறையில் - எந்தக் காரணத்துக்காகவும் போனை நோண்டிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். அது உங்கள் துணையை எரிச்சல்படுத்தும்.

இந்த பத்து காரணங்களை திரும்ப ஒருமுறை படியுங்கள். நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள் என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அதை சரி செய்யுங்கள். வாழ்க்கை வரமாகும்!

Thursday, August 11, 2016

இவரும் மனுஷன்தானா...? Read more at: http://tamil.oneindia.com/news/india/this-man-steals-the-mobile-from-dying-man-260032.html

டெல்லி: டெல்லியில் நேற்று காலை ஒரு விபத்து. 40 வயதான மதிபூல் என்பவர் விபத்தில் சிக்கி அடிபட்டு சாலையில் கிடந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக அவர் விழுந்து கிடந்தும், ரத்தம் கொட்டியும் கூட யாரும் அவரை மீட்க முன்வரவில்லை. அவரவர் வேலையைப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தனர்.

 ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் நின்றார். பரவாயில்லையே ஒருவராவது மீட்க வந்தாரே என்று பார்த்தால் அவர் செய்த காரியம்.. சீ.. இவரும் மனிதனா என்று சொல்ல வைத்து விட்டது. விழுந்து கிடந்த மதிபூலுக்கு அருகே கிடந்த அவரது செல்போனை மட்டும் பத்திரமாக எடுத்துக் கொண்டு அந்த நபர் போய் விட்டார். இந்தக் காட்சிகள் அனைத்தும் சிசிடிவி மூலம் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. மேற்கு டெல்லியில் உள்ள சுபாஷ் நகர் பகுதியில்தான் இந்த விபத்து நடந்தது. மதிபூல் ஒரு இ ரிக்ஷா டிரைவர் ஆவார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் போலீஸார் "விரைந்து" வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

ஆனால் அவர் இறந்து நெடு நேரமாகி விட்டது என்று டாக்டர்கள் கூறி விட்டனர். நான்கு குழந்தைகளுக்குத் தந்தை மதிபூல். தனது குடும்பத்தைக் காக்க பல வேலைகளைச் செய்து வந்துள்ளார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அவர் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஏதோ ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டுச் சென்று விட்டது. தூக்கி எறியப்பட்ட மதிபூல் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் விழுந்து கிடந்ததை அந்தப் பக்கமாக சென்ற பலரும் பார்த்துள்ளனர்.

 ஆனால் யாரும் அருகே கூட நெருங்க வரவில்லை. வந்த ஒரே நபரும் அவரது செல்போனை மட்டும் திருடி விட்டுச் சென்ற செயல்தான் அனைவரையும் அதிர வைத்துள்ளது. போலீஸார் நீண்ட தாமதத்திற்குப் பிறகே வந்தனர். ஆனால் அதற்குள் மதிபூலின் உயிர் போய் விட்டது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் மதிபூல். பகலில் இ ரிக்ஷா ஓட்டியும், இரவில் வாட்ச்மேன் வேலை பார்த்தும் சம்பாதித்து வந்தார். தற்போது மதிபூல் மீது வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக்கிய வேன் டிரைவர் மற்றும் மதிபூலின் செல்போனை திருடிய நபர் ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/this-man-steals-the-mobile-from-dying-man-260032.html

ககோரிக்கும் சென்னைக்கும் 91 ஆண்டுகால 'பந்தம்'

ஆக.9-ல் அன்றும் இன்றும்: ரயில் கொள்ளையில் ககோரிக்கும் சென்னைக்கும் 91 ஆண்டுகால 'பந்தம்'


தலைப்புச் செய்தியாகி இருக்கிறது கடந்த 9-ம் தேதி சேலத்திலிருந்து சென்னை வந்த ரயில் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5 கோடியே 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.

இதுபோல் ஒரு ரயில் கொள்ளை 91 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்துள்ளது. அதுவும் ஆகஸ்ட் 9-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடந்திருக்கிறது. இந்திய வரலாற்று நிகழ்வுகளில் முக்கியமானது அது. 'ககோரி சதி' அப்படித்தான் அந்த நிகழ்வு இந்திய வரலாற்றுப் பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ககோரி எனும் இடத்தில் அந்தக் கொள்ளைச் சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதால் அந்தப் பெயர் வந்தது. பின்னாளில் ககோரி புரட்சி என பெயர் வழங்கப்பட்டது.

கொள்ளை அரங்கேற்றப்பட்டது எப்படி?

1925 ஆகஸ்ட் 9 உத்தரப் பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் இருந்து லக்னோ நகருக்கு ஒரு பயணிகள் ரயில் புறப்பட்டது. அந்த ரயிலில் பிரிட்டிஷ் கருவூலத்தின் பணம் அடங்கிய பெட்டியும் இருந்தது. அந்தப் பெட்டியில் ரூ.8000 இருந்தது. அதை எப்படியாவது கொள்ளையடித்துவிட வேண்டும் என்பதுதான் திட்டம். இந்துஸ்தான் புரட்சிகர கூட்டமைப்பின் (Hindustan Republican Association) உறுப்பினர்களில் சிலரே அந்தத் திட்டத்தை தீட்டினர். அஸ்பக்குல்லா கான், ராம்பிரசாத் பிஸ்மி, சந்திரசேகர ஆசாத் ஆகிய மூன்று இளைஞர்களும் அந்த சதித் திட்டத்தை தீட்டினர்.

அதன்படி பணப் பெட்டியுடன் சென்ற அந்த ரயிலில் ஏறிய புரட்சிப் படையினர் துப்பாக்கி முனையில் ரயில் ஓட்டுநரையும் கார்டையும் சிறைப்பிடித்தனர். ரயிலில் இருந்து ரூ.8000-த்துடனான பணப் பெட்டியையும் மிக நேர்த்தியாக கொள்ளையடித்துச் சென்றனர்.

ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சேலம் - சென்னை ரயில் கொள்ளை சம்பவத்தை ககோரி கொள்ளை சம்பவத்தோடு தொடர்புபடுத்தி நிலைத்தகவல்கள் பதியப்படுவதால் ககோரி புரட்சியை நினைவுகூர்வது அவசியமாகிறது.

ஆனால் இரண்டு கொள்ளை சம்பவங்களின் நோக்கமும் நிச்சயமாக வெவ்வேறு.

தமிழில்: பாரதி ஆனந்த்

புதுக்கோட்டை அருகே காரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 26 ஆண்டுகளாக பணிபுரியும் மருத்துவர்



புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 26 ஆண்டுகளாக பணிபுரியும் மருத்துவர் இம்மாதம் ஓய்வு பெறுகிறார்.

கிராமப்புற அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிவோரின் உயர் கல்விக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுமென மத்திய சுகாதாரத் துறை அறிவித் திருந்தும்கூட பலர் கிராமப் புறங் களில் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதில்லை. இதனால் கிராமப் புறங்களில் உள்ள பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்து வர்களின் காலிப் பணியிடங்கள் அதிகமாகவே உள்ளன.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டி.நவரத்தினசாமி கூறியது:

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நான் தஞ்சாவூர் அரசு மருத் துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்துவிட்டு கடந்த 1990-ல் காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்தது முதல் அங்கேயே பணிபுரிந்து வருகிறேன். வேறெந்த மருத்துவமனைக்கும் செல்வில்லை.

பள்ளியில் படிக்கும்போதே மருத்துவராக வேண்டும். ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம் என்பதால் நகர் பகுதிக்கு செல்லவில்லை.

இந்தப் பகுதியில் தொடர்ந்து சேவை செய்துவருவதால் அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

தொடக்கத்தில் இங்கு, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் 2 மட்டுமே இருந்தன. அதேபோல, பரிசோதனை கருவிகள் அவ்வளவாக இல்லை. ஆனால், தற்போது 250-க்கும் மேற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் கிடைக்கின்றன.

அதே போல, ஏராளமான பரிசோதனை கருவிகளும் வந்து விட்டன. மருத்துவத் துறையில் வசதிகள் குறைந்த காலத்தி லும், வசதிகள் பெருகிய காலத்திலும் பணியாற்றியதால் ஏராளமான மாற்றங்களை உணர முடிந்துள்ளது.

தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றியதால் தொடர் சிகிச்சையின் மூலம் பலர் குணமடைந்துள்ளனர். மருத்துவருக்கும், மக்களுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.

நோயாளிகள் மருத்துவர் களையும், மருத்துவர்கள் நோயா ளிகளையும் அனுசரித்துச் சென்றால் மட்டுமே மருத்துவ சேவை திருப்திகரமாக இருக்கும். இளம் மருத்துவர்கள் கிராமப்புற மக்களுக்காகச் சேவையாற்ற வேண்டும் என்றார்.

இம்மாத இறுதியில் இம் மருத்துவர் ஓய்வு பெற்றுச் செல்வது இப்பகுதியினருக்கு இழப்புதான் என்கின்றனர் காரையூர் பகுதி மக்கள்.

NEWS TODAY 21.12.2025