Wednesday, August 24, 2016

முகப்பு » தமிழ்நாடு » ஒன்இந்தியா வாழ்த்துகள் கமல்.. அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் ஜெயலலிதா!


வாழ்த்துகள் கமல்.. அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் ஜெயலலிதா!


சென்னை: ரஜினி முதல் ஆளாக வாழ்த்தி விட்டார்.. அதுவும் எங்களின் நடிகர் திலகம் என்று டிக்ளேரே செய்து விட்டார். கருணாநிதி வாழ்த்தி விட்டார். அன்புமணி வாழ்த்தி விட்டார்... இன்னும் யார் யாரோவெல்லாம் வாழ்த்தி விட்டனர்.. ஆனால் இந்த மாநிலத்தின் முதல்வர், இந்த மாநிலத்தின் முன்னணி நடிகரான கமல்ஹாசனுக்கு, செவாலியர் விருது பெற்றதற்காக சின்னதாக கூட வாழ்த்தவில்லை.

ஒருவரை வாழ்த்துவதும், வாழ்த்தாமல் போவதும் அவரவர் விருப்பம். யாரும் அதை கேள்வி கேட்க முடியாது. வாஸ்தவம்தான்.. ஆனால் கமல்ஹாசனால் தமிழகத்திற்குத்தான் பெருமை கிடைத்துள்ளது, தமிழுக்குத்தான் பெருமை கிடைத்துள்ளது, தமிழ் சினிமாவுக்குத்தான் பெருமை கிடைத்துள்ளது. அப்படிப்பட்ட பெருமையைத் தேடிக் கொடுத்தவருக்கு வாழ்த்து சொல்லாமல் அமைதி காப்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் போன்ற அரும் பெரும் தங்கங்கள் நாட்டுக்குப் பெருமை சேர்த்தபோது பேதம் பாராமல் இந்திய உணர்வோடு ஜெயலலிதா முதல் அனைவரும் பாராட்டி வாழ்த்தி மகிழ்ந்தோம். அதேபோல நமது மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு செவாலியர் விருது கிடைத்திருப்பதையும் அதே மாநில உணர்வோடு பாராட்டியிருக்கலாம் இல்லையா?

அட, நரேந்திர மோடி கூட பாராட்டவில்லையே!.. சின்னதாக ஒரு வாழ்த்து.. வாழ்த்துகள் கமல்.. என்று சொல்லியிருந்தால் கூட அந்த நடிகனுக்கு சின்னதாக ஒரு மகிழ்ச்சி கிடைத்திருக்கும்.

உண்மையில் ஜெயலலிதாவுக்குப் பிடித்த நடிகராக இருந்தவர் கமல்ஹாசன்தான். கமலும் கூட ஜெயலலிதா பக்கம்தான் எப்போதும் சாயந்திருப்பார். ஆனால் இந்த உள்ளார்ந்த நட்பில் விரிசல் விழுந்தது விஸ்வரூபம் படம் சமயத்தில்தான். அந்தப் படத்தை ரிலீஸ் செய்வதில் பல விதமான தடங்கல்கள், தடைகள், இடையூறுகள். படத்திற்குத் தடை வர, கமல்ஹாசன் கொந்தளிக்க, நாட்டை விட்டுப் போவேன் என்று மிரட்ட பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அந்த சமயத்தில்தான் ஜெயலலிதாவுக்கு, கமல் மீது கடும் கோபம் வந்ததாக கூறப்படுகிறது.

அது பின்னர் கடந்த ஆண்டு வெள்ளம் சென்னையை மூழ்கடித்தபோது மேலும் விஸ்வரூபம் எடுத்தது... கமல்ஹாசன் அரசின் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து தெரிவித்த சில கருத்துக்கள் அரசை கடுமையாக கோபப்பட வைத்து விட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கமல்ஹாசனை மிகக் கடுமையாக தாக்கி அறிக்கை விட, அரசுக்கும், கமலுக்கான மோதலாக அது மாறியது. பின்னர் கமல் விளக்கம் அளித்தார்.

அந்த விளக்கத்தில், 'மின் அஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிக்கை நண்பருக்கு எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது. என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியைப் பற்றிய புலம்பலே. இது ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும், பல்வேறு கட்சிகளுக்கும் ஓட்டுப்போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக் கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.

மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர்காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட, மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். வாத பிரதிவாதங்களை புறந்தள்ளி ஆக்க வேலையில் முன்போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன் என்று கூறியிருந்தார்.

அதன் பிறகு ஆட்சியாளர்களின் பிளாக் லிஸ்ட் பட்டியலில் கமல்ஹாசன் சேர்க்கப்பட்டதாக பேசிக் கொண்டனர். இதனால்தான், இந்த நிகழ்வுகளை மனதில் வைத்துத்தான் கமல்ஹாசனுக்குக் கிடைத்துள்ள இந்த விருதுக்காக அரசுத் தரப்பும் மகிழவில்லை, ஜெயலலிதாவும் உற்சாகம் அடையவில்லை என்கிறார்கள். இதனால்தான் வாழ்த்தும் சொல்லவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. "அம்மா" என்றால் பெருந்தன்மை.. "அம்மா" என்றால் அன்பு.. "அம்மா" என்றால் மன்னிப்பு என்பார்கள்.. கமலுக்கு வாழ்த்துச் சொல்லி இதை நிரூபித்து விடலாமே முதல்வர் ஜெயலலிதா?

Friday, August 19, 2016

சவுதியில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு

BBC TAMIL  -THE HINDU

சவுதியில் பணியாற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறினால் அபராதம் கட்ட நேரிடும் அல்லது நாடு கடத்தப்படலாம்.

வெளிநாட்டைச் சேர்ந்த பணியாளர்கள், சவுதி அரேபியாவில், எந்த எந்த நிறுவனத்தின் மூலம் பணிக்குச் சேருகிறார்களோ (கஃபீல்) அந்த நிறுவனத்திலிருந்து விதிமுறைகளுக்கு எதிராக வெளியேறினால், இனிமேல் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அல்லது நாடு கடத்தப்படவும், நாட்டுக்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடையையும் சந்திக்க நேரிடும்.

ஓடிப்போகும் வெளிநாட்டுப் பணியாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டாம் என சவுதி பிரஜைகளை, பாஸ்போர்ட் முகமை அறிவுறுத்தியுள்ளது.

அதை அவர்கள் கடைபிடிக்காவிட்டால், அவர்களும் அபராதம் கட்டவும், சிறை தண்டனையை அனுபவிக்கவும் நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஸ்பான்ஸர்ஷிப் எனப்படும் முகமை அடிப்படையில் பணிக்கு அமர்த்தும் முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், அது ஒருவித அடிமைத்தனம் என்றும் மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?- இந்தியாவின் 120 வயதுடைய முதியவர் விளக்கம்



மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா வைச் சேர்ந்த சிவானந்தா என்ற துறவி தனக்கு 120 வயதாகிறது எனத் தெரிவித்துள்ளார். யோகா, பிரம்மச்சரியம் ஆகியவைதான் தனது நீண்ட ஆயுளுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்து துறவியான அவர் 1896 ஆகஸ்ட் 8-ம் தேதி பிறந்தவர் என அவரது பாஸ்போர்ட் தகவல் கள் தெரிவிக்கின்றன. இந்த பிறந்ததேதி, கோயில் பதிவேடு கள் மூலம் பாஸ்போர்ட் அலுவல கத்தால் சரிபார்க்கப்பட்டுள்ளன.

இதுவரை பூமியில் வாழ்ந்த வர்களில் அதிக காலம் வாழ்ந்தவராக ஜப்பானைச் சேர்ந்த ஜிரோமாந் கிமுரா கருதப்படுகிறார். கடந்த 2013 ஜூன் மாதம் உயிரிழந்த அவர் 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர்வாழ்ந்துள்ளார்.

சிவானந்தாவின் வயது 120 என உறுதி செய்யப்பட்டால், அவர்தான் இந்தியா மற்றும் உலகிலேயே மிக வயதானவர் என்ற பெருமையைப் பெறுவார். மேலும் மூன்று நூற்றாண்டுகளிலும் வாழ்ந்தவர் என்ற பெருமையும் கிடைக்கும்.

தனக்கு 120 வயதானதை சாதனை யாகப் பதிவு செய்ய சிவானந்தா கின்னஸ் சாதனைக்கு விண்ணப் பித்துள்ளார்.

“எனக்கு விளம்பரத்தில் பிரியம் இல்லை. எனவே இதுதொடர்பாக வெளியில் தெரிவிக்காமல் இருந் தேன். ஆனால் எனது அன்பர்கள் கேட்டுக்கொண்டதால் கின்னஸுக்கு விண்ணப்பித்துள்ளேன்” என சிவானந்தா தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடகங்கள் இவரைப் பற்றிய செய்தியை வெளியிட் டுள்ளன. 120 ஆண்டுகள் எனக் கூறி வரும் சிவானந்தா மிக நல்ல உடல் நலத்துடன் உள்ளார். தனியாகவே தனது பணிகளைச் செய்து கொள்கிறார். ரயிலிலும் தனியாகவே பயணிக்கிறார். ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரம் உடைய சிவானந்தா, தரையில் துணியை விரித்து, தலைக்கு மரக்கட்டை வைத்துப் படுக்கிறார். தினமும் யோகாசனம் செய்கிறார்.

“பால், பழங்களைத் தவிர்த்து விடுவேன். சிறு வயதில் நிறைய நாட்கள் பட்டினியாக தூங்கியிருக் கிறேன். யோகா, ஒழுக்கமான வாழ்வு, பிரம்மச்சரியம் இவைதான் என் நீண்ட ஆயுளுக்குக் காரணம். எளிமையான ஒழுக்க வாழ்வை வாழ்கிறேன்.

வேக வைத்த உணவு களை எடுத்துக்கொள்கிறேன். மசாலாப் பொருட்கள், எண்ணெய் வகைகளை சேர்த்துக் கொள்வ தில்லை. அரிசி, வேகவைத்த பருப்பு, ஒன்றிரண்டு பச்சை மிளகாய் இவைதான் என் உணவு” என சிவானந்தா தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ஆட்சிக்காலத்தில் மின்சாரம், கார்கள், தொலைபேசி இல்லாத காலகட்டத்தில் பிறந்த சிவானந்தா, தொழில்நுட்ப வசதி களால் பெரிதும் ஈர்க்கப்படவில்லை.

“முன்பு கொஞ்சம் பொருட்களை வைத்துக் கொண்டு மக்கள் மகிழ்ச்சி யாக இருந்தார்கள். தற்போது மகிழ்சியின்றியும், ஆரோக்கிய மின்றியும், நேர்மையற்றும் இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக் கியமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என அவர் தெரிவித் துள்ளார்.

Wednesday, August 17, 2016

4ஜி எனும் மாயவலை



கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல இருக்கிறது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 4ஜி சேவைக்கான மார்க்கெட்டிங் உத்திகள். எந்த நிறுவனம், எந்தத் திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பங்கள் எல்லாம் இல்லை.

அவை எல்லாமே குழப்பமாகத்தான் இருக்கிறது. கடந்த வாரம் இருந்த கட்டணம் இந்த வாரம் இல்லை. இந்த வாரத்தில் இருக்கும் சேவை அடுத்த வாரம் இருக்குமா தெரியவில்லை.

2ஜி சேவையே பலருக்கும் கிடைக் காத இந்தியாவில் 4ஜி-க்கான போட்டி யில் இறங்கிவிட்டன நிறுவனங்கள். இந்த 4 ஜி மாய வலையில் வாடிக்கையாளர்கள் சிக்க வைக்கப்படுகின்றனர். ‘மொபைல் டேட்டா’ மோகத்தால் நுகர்வோரின் கையிலிருக்கும் சொற்ப சில்லரைகளையும் நிறுவனங்கள் சுரண்டி வருகின்றன. நாம் பேச்சு வழக்கிற்காகத்தான் சில்லரைகளைச் சுரண்டுகின்றன என குறிப்பிடுகிறோம். ஆனால் உண்மையிலேயே 4ஜி என்கிற தொழில்நுட்பத்தை வைத்து இந்த நிறுவனங்கள் ஆடுவதோ மிக பெரிய சதுரங்க ஆட்டம்.

சந்தையில் முன்னணி நிறுவனமாக யார் இருப்பது என்பதில் தொடங்கும் ஆட்டத்தில் ஒவ்வொரு நிறுவனங்களும் ஒவ்வொரு விதமாக தங்களைத் தாங்களே மீறிக் கொள்கின்றன. ஆனால் எல்லா சுமைகளும் விழுவது என்னவோ வாடிக்கையாளர் தலையில்தான்.

பேஸ்புக்கின் இலவச இணையம், ஏர்டெல்லின் முன்னுரிமை இணைய தொடர்பு என இணைய வாய்ப்புக்கு எதிரான போக்குகள் குறித்த விவகாரங்கள் சற்றே ஓய்ந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை சுற்றி புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் வர்த்தக ரீதியான தொலைத் தொடர்பு சேவையின் தொடக்க நிலை யிலேயே தனது 15 லட்சம் வாடிக்கை யாளர்களுக்கு 3 மாதங்களுக்கான இலவச ‘டேட்டா’, குரல் வழி சேவைகளை அளிக்க உள்ளது. இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன இதர தொலைத் தொடர்பு நிறுவனங்கள். சோதனை அடிப்படையிலான சேவை யில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு இலவச ‘டேட்டா', குரல்வழி சேவைகளை வழங்கக் கூடாது என்கிற தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறையை ஆர் ஜியோ மீறுவதாக செயலகத்துக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஓஏஐ) புகார் அளித்துள்ளது.

ஆர் ஜியோ நிறுவனம் வர்த்தக ரீதி யான சேவையில் விதிமுறை மீறுகிறது என கவலைப்படும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு, தங்களது உறுப்பு நிறுவனங்களின் சேவை தரம் குறித்து கவலைப்பட்டிருக்கிறதா என்றால் கிடையாது. இத்தனைக்கும் ஆர் ஜியோ-வும் இதில் உறுப்பினராகத்தான் உள்ளது.

இந்த சேவையை இலவசமாக வழங்குவதில் ஆர் ஜியோ-வுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. எதிர்ப்பதற்கு இதர நிறுவனங்களுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் 3ஜி,4ஜி வாடிக்கையாளர்களிடம் கட்டணக் கொள்ளை அடிப்பதில் மட்டும் எல்லா நிறுவனங்களுமே கைகோர்த்துவிடுகின்றன.

சமீபத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (R COM) நிறுவனத் தில் வைஃபை பேட் வாங்கிய நண்பரொருவரின் புலம்பல் இது: ``ரூ.1,500 விலையிலான அந்த கருவியை வாங்கும்போதே 4ஜி சேவை வந்தால், அதை மேம்படுத்திக் கொள்ளலாம் என உறுதி கொடுத்தார்கள்.

இரண்டு மாதங்களாக பயன்படுத்தி வந்த நிலையில் திடுதிப்பென கடந்த வாரத்தில் 3ஜி சேவையை நிறுத்திவிட்டனர். வாடிக்கையாளர் சேவை மையம் சென்று விசாரித்தால் 3ஜி சேவையை நிறுத்திவிட்டோம் 4ஜி சேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்கின்றனராம்.

தற்போது 3ஜி சேவையே போதும், 4ஜி-க்கு தேவைக்கேற்ப மாறிக்கொள்கிறேன் என்ற போதிலும் முன்பு வழங்கிய வைஃபை இணைப்புக் கருவியில் இனிமேல் சேவை கிடைக்காது என்றும், 4ஜி-க்கு என்று தனியாக வைஃபை பேட் வாங்க வேண்டும் அல்லது 4ஜி சிம்கார்டு, 4ஜி போன் வாங்கிக் கொள்ளுங்கள் அப்போதுதான் எங்களது சேவையை தொடர முடியும் என்றனராம். ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால் வழக்கு தொடருங்கள், இல்லையெனில் புதிய கருவியை 10 சத விலைக்குறைப்பு செய்து தருகிறோம் அதை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறினார்களாம்.

ஒரு தொழில்நுட்பத்தை மேம்படுத்து வது நிறுவனத்தின் தேவையாக இருக்கலாம். ஆனால் அதை ஏன் வாடிக்கையாளர்களின் தலையில் வம்படியாக திணிக்க வேண்டும். பழைய தொழில்நுட்ப சேவைகளையே படிப்படியாக குறைத்து பயன்பாடு இல்லாத போது குறைப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அல்லது ஏற்கெனவே வழங்கப்பட்ட கருவியை திரும்பப் பெற்று புதிதாக மாற்றித் தருவதுதானே சரியானதாக இருக்கும் என எந்த கேள்விக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் பதில் சொல்லவில்லை.

புதிதாக 4ஜி சேவையை அளிக்கும் கருவியின் விலையோ ரூ.3,200 என நிர்ணயித்துள்ளனர். புது 4ஜி சிம் கார்டு வாங்கி அதை 4ஜி அலைவரிசையை ஏற்கும் ஸ்மார்ட்போனில் பயன்படுத்த வேண்டும். அதாவது ஏற்கெனவே இருக்கும் ஸ்மார்ட்போன் 4ஜி அலைவரிசையை ஏற்காது என்றால் நீங்கள் புது ஸ்மார்ட்போன்தான் வாங்க வேண்டும். அதாவது 4 ஜி சேவையை பயன்படுத்த கிட்டத்தட்ட புதிதாக சில ஆயிரங்களை செலவு செய்ய வேண்டும்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மட்டும் இப்படி வாடிக் கையாளர்களை ஏமாற்றும் வேலையை செய்யவில்லை கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே இப்படியான நெருக்கடிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றன. ஆறு மாதங்களுக்கு முன்பு சில ஆயிரங்கள் செலவழித்து வாங்கிய ஒரு ஸ்மார்ட்போன் இப்போது பழைய தொழில்நுட்பமாக மாறி விடுகிறது.

பொதுவாக 4ஜி சேவையை வழங்கும் ஏர்டெல், ஐடியா அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுமே குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் மட்டுமே தங்களது 4ஜி சேவை கிடைக்கும் என அறிவிக்கின்றன. சந்தையில் ஒரு உத்தியாக ஒவ்வொரு காலகட்டங்களிலும் இது மாதிரியான கூட்டுகளை வைத்துக் கொண்டாலும் 4ஜி சேவையை அளிப்பதில் முன்பை விட அதிகமாக வாடிக்கையாளர்களை சுரண்டி வருகின்றன என்பதுதான் உண்மை.

உதாரணமாக ஐடியா நெட்வொர்க் கில் 4ஜி வேண்டுமென்றால் 6,000 ரூபாய் விலையுள்ள ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். ஆறு மாதத்துக்கு முன்பு இதே விலையில் 3ஜி போன் வாங்கியவர் மீண்டும் இதே அளவு தொகையை செலவு செய்வது சாத்தியமற்றது. இதனால் கடும் நெருக்கடிகளுக்கு இடையில் புது போன் வாங்க தள்ளப்படும் சூழலை நிறுவனங்கள் உருவாக்குகின்றன.

4ஜி தொழில்நுட்பம் சர்வதேச அளவில் ஏற்கெனவே பல நாடு களில் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்தியாவிலும் அந்த தொழில்நுட்பத்துக் கான சந்தை இருக்கிறது என்பது நிறுவனங்களுக்கும் தெரிந்ததுதான். தவிர இந்தியா போன்ற நாடுகளில் ஒவ்வொரு தொழில்நுட்பமும் கடைக்கோடி குடிமகனுக்கும் சென்று சேர சில ஆண்டுகளாவது ஆகிறது. ஏனென்றால் நமது கட்டமைப்பு இன்னும் மேம்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் சந்தைப் போட்டியில் இதுவெல்லாம் நிறுவனங்களுக்கு தேவையில்லாத சமாச்சாரங்களாகிவிடுகிறது. முதன்மை யான நோக்கம் பயன்படுத்தும் குறிப்பிட்ட சதவீதத்தினரிடமிருந்து அதிக பட்சமாக கறந்துவிட வேண்டும் என்கிற முனைப்புதான் உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாததுதான் என்றாலும் நிறுவனங் களின் லாப உத்திரவாதத்துக்கு பயனாளிகள் ஒவ்வொரு முறையும் இப்படி சில ஆயிரங்களை கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க முடியுமா? அரசும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் இந்த வேட்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்குமா?

Tuesday, August 16, 2016

மாயக் காடும் முத்துக்குமார் எனும் வேட்டைக்காரனும்!





தமிழ்த் திரைப் பாடல்களில் நவீன வாழ்க்கையை, நவீன கவிதை ஆக்க முறையைப் பயன்படுத்தியவன்

ரொம்ப வளத்தியான முத்துக்குமார் உறங்கிக்கொண்டிருக்கிறான். யார் வந்தார்கள், யார் போனார்கள் என்று எதையும் சட்டைசெய்யாமல். அகிரா குரோசோவாவின் ‘ராஷோமோன்’படத்தைப் பல முறை பார்த்த அவனுக்கு தன்னைப் பார்த்துச் செல்லும் ஒவ்வொருவரும் தன்னுடைய இனி கலையவே முடியாத உறக்கம் குறித்து ஒவ்வொரு கதை சொல்வார்கள் என்பது தெரிந்துதான் இருக்கும். தெரிந்தவர், தெரியாதவர் எனப் பலர் அவனுக்காக இரங்குவர் என்பதும் அவனை முன்வைத்து மற்ற காரியங்களைச் சொல்வர் என்பதும் அவனுக்கு உறுதியாகத் தெரிந்திருக்கும். ஏனெனில், அவன் இருக்கும்போதே அவனைக் குறித்த கதைகளைக் கேட்டுச் சிரித்திருக்கிறான். அவன் இறந்ததாய் தவறுதலாய் செய்திகள் முன்பு வந்தபோது, இறப்புக்குப் பிறகு என்ன பேசுவர் என்பதைக் கேட்டும் பார்த்தும் இருக்கிறான்.

முத்துக்குமார் அவனுடைய சமகால அகக் கதையை, மன உளைச்சலை, சிக்கலை, வலியை, வருத்தத்தை நேரடியாக எழுத்தில் முன்வைத்தது இல்லை. தூரத்திலிருந்து பார்ப்பவருக்கு அவன் எளிதில் அடைய முடியாத ஒரு மலை உச்சியில் நின்றுகொண்டிருந்ததாகவே தோன்றியிருக்கும். இரண்டு தேசிய விருதுகள், 1500-க்கும் மேற்பட்ட பாடல்கள், 12 வருடங்களாக தமிழ்த் திரைப்படப் பாடல் உலகின் சூப்பர் ஸ்டார், பத்திரிகைகளில் தொடர்கள், எழுத்தாளர்கள் - பத்திரிகை ஜாம்பவான்கள் - அரசியல்வாதிகள் - அரசாங்க உயர் அதிகாரிகள் எல்லோரிடமும் முரண் இல்லா உறவு என அனைத்தும் ஆனது அந்த மலை உச்சி. ஏனையோர் அதிசயிக்கிற மலை உச்சி. ஆனால், அம்மலை உச்சியில் அந்த ஒற்றை மனிதன் சுழற்றி அடிக்கும் காற்றில் தலை மறைக்கும் புற்களுக்கு நடுவே நின்றுகொண்டிருந்தான். அங்கு இரவில் குளிரும் அதிகம், பகலில் வெப்பமும் அதிகம். மழை பெய்யாது கொட்டும், அப்புறம் அந்த உச்சி ஆபத்தானது. எந்த நொடியும் வழுக்கி விழ நேரலாம் என்பதும் அவனுக்கும் திரைத் துறைக்கும் தெரிந்த உண்மை.

பனியில் தெரியும் மலை

உச்சியிலிருந்து வழுக்கி விழாமல் 12 வருடம் தன்னைத் தானே தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தான் முத்துக்குமார். அவன் பாட்டெழுதாத நாள் இல்லை. வீடு, பாட்டு இவை இரண்டும் இன்றி, அவன் வாழ்வில் இந்த 12 வருடங்களில் அவன் அவனுக்காகச் செலவழித்த நேரம் வெகு சொற்பம். பயணங்களில் தீரா விருப்பம் கொண்ட அவன், பயணம் செய்தது வெகு சொற்பம். ஆள் கூட்டத்தில் ஒரு தனி ஆள். சினிமா என்கிற மாயக் காட்டில் அயராது வேட்டைக்குச் சென்ற வேட்டைக்காரன். அந்த மாயக் காடு விருந்துகளும் சிற்றின்பங்களும் கேளிக்கைகளும் நிறைந்த இருட்டு உலகம் என்றே பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. அந்த மாயக் காடு ஒழுக்க விதிகளுக்குப் புறம்பானது என்றே திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஆனால், வேட்டைக்குச் செல்பவனுக்குத்தான் தெரியும், காடு எத்தகையது என்று. ஆபத்துகளும், காயங்களும், அச்சுறுத்தும் பெரும் தனிமையும், வெகு சொற்ப இரை விலங்குகளும், போட்டிகளும் விரோதங்களும் நிறைந்தது அந்தக் காடு. இரை விலங்குகள் அகப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அவனுக்கு அகப்பட்டது, இறுதியில் இயற்கையின் விதிப்படி இரைக்கு இரையானான்.

அவன் பெருமலைதான். ஆனால், என்றும் அவன் தன்னை அப்படி உணர்ந்தது இல்லை. மனிதர்களை அவர்களின் சம உயரத்திலேயே சந்தித்தான், பழகினான், பாராட்டினான். அவன் வரியில் சொல்ல வேண்டும் என்றால், சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையாகத்தான் தன்னை வைத்துக்கொண்டான். ஒரு சாதனையாளன், கவிஞன் கைக்கொள்கிற எந்த உடல்மொழியையும் அவன் உருவாக்கிக்கொள்ளவில்லை. உடைகளில் எந்த வடிவமைப்பையும் பொருத்திக்கொள்ளவில்லை. ஒரு ஓட்டை சைக்கிளில் அசோகமித்திரனின் உடல்வாகுடன் கோடம்பாக்கத்துத் தெருக்களில் முதல் வாய்ப்புக்காக சுற்றிக்கொண்டிருந்த நாட்களில் எப்படி இருந்தானோ அதே மனநிலையில் இறுதி நாள் வரை இருந்தவன்.

வீட்டையும் காட்டையும் விரும்பியவன்

தமிழ்த் திரைப் பாடல்களில் நவீன வாழ்க்கையை, நவீன கவிதை ஆக்க முறையைப் பயன்படுத்தியவன் முத்துக்குமார். புதுப் புது உத்திகளை முன்வைத்தவன். ஹாஸ்யத்தையும் கொச்சைப்படுத்தாமல் செய்தவன். அவன் தமிழ்த் திரைப்படப் பாடல்களை அதுவரை இருந்த இடத்திலிருந்து மாற்றி வேறு ஒரு செறிவான தளத்துக்கு நகர்த்தியவன்.

அவன் தன் அரசியலைச் சொல்லவும் இல்லை. மறைக் கவும் இல்லை. தான் யாருக்காக எழுதுகிறோம், ஏன் இக்காரியத்தைச் செய்கிறோம் என்று தெரிந்தே அவன் செய்தான். எந்த இயக்கத்துக்குப் பாட்டு எழுதினான் என்பதை அவனும் சொல்லவில்லை, இயக்கமும் சொல்ல வில்லை. அவன் எழுதிய பாட்டு என்று தெரியாத அந்தச் சில பாடல்கள் இன்னும் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அம்மா இல்லாமல் வாழ்வைத் தொடங்கிய அவனுக்கு, உறவுகள் மீது தீராக் காதல். மகனாக, அண்ணனாக, தம்பியாக, பேரனாக, அப்பாவாக, கணவனாக அவன் அனைவருக்கும் தன்னால் இயன்றவரை தன் சக்திக்கு உட்பட்டு, பிரியத்தையும் ஆதரவையும் முழுமையாகக் கொடுத்தவன். வீடும் வீடு குறித்த எண்ணமுமே அவனுடைய வாழ்க்கை. வீடே அவன் சொர்க்கம்.

அவனுக்குக் கதைகள் பிடிக்கும்

அவனை நான் முதன்முதலாகச் சந்தித்தபோது, நாங்கள் இருவரும் 20 வயதுகளின் பெரும் கனவில் சுற்றிக்கொண்டிருந்தோம். ‘சில்க் சிட்டி’ (Silk City) என்று ஒரு ஆங்கில நாவலை எழுதிக்கொண்டிருந்தான் முத்து அப்போது. இந்திய ஆங்கில இலக்கியத்தில் தனக்கென ஒரு தடம் பதிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தது. போட்ட உடையோடு பயணம் கிளம்பிப்போகிற குணங்களால் நாங்கள் இருவரும் பெரிதும் ஈர்க்கப்பட்டோம். தாம்பரம் கிறித்துவக் கல்லூரி ஏரியில் அமர்ந்து பேசுகிற ராப்பேச்சு சூரிய உதயத்தில்தான் நிற்கும்.

எனக்கு சென்னையைப் பரிச்சயப்படுத்தியது அவன் தான். கோடம்பாக்கத்துத் தெருக்களுக்கு என்னை அழைத்துப்போனவன், அறிவுமதி அண்ணனின் அலுவலகத்தைக் காட்டிக்கொடுத்தவன். பால் சுகந்தி மேன்ஷனில் இருந்த அன்பான அஜயன் பாலாவை அறிமுகப்படுத்தியவன். இயக்குநர், குரு பாலுமகேந்தி ராவின் அவ்வளவு எளிதாகத் திறந்துவிட முடியாத அலுவலகக் கதவை எனக்காகத் திறந்துவிட்டவன், யுவன் ஷங்கர் ராஜாவை அறிமுகப்படுத்தியவன், என் குழந்தைகளின் மாமா, என்னை நானாகவே ஏற்றுக்கொண்ட நண்பன் என முத்து இந்த 20 வருட வாழ்க்கை முழுக்க என் உடனேயே இருந்தான்.

ஆகஸ்ட் 14 காலை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்த முதல் மாரடைப்பே அவனை எடுத்துக்கொண்டது. 15 நிமிடம் முன்பு வந்திருந்தால் அவன் இருந்திருப்பான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ‘இறந்துபோனதை அறிந்த பிறகுதான் இறக்க வேண்டும் நான்’என்று எழுதியவன், எதுவும் அறியாமலே இறந்துபோனான். மாயக் காடு அவனை எடுத்துக்கொண்டது. அந்தக் காட்டைப் பற்றியும் அதன் வேட்டைக்காரர்களைப் பற்றியும் கதை சொல்பவர்கள் கதை சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அவனுக்குக் கதைகள் பிடிக்கும்.

முத்து, நீ கேட்டுக்கொண்டிருப்பாய்தானே?

- ராம், ‘தங்க மீன்கள்’ திரைப்பட இயக்குநர், தொடர்புக்கு: thangameenkal@gmail.com

குறள் இனிது: வெற்றிக்கு மேல்வெற்றி!


ரியோ ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறதா, மலைப்பாக இருக்கிறதா?

உலகிலேயே அதிக வேகமாக ஓடுபவர் யார் தெரியுமா? 9.58 விநாடிகளில் 100 மீட்டர்களை ஜமைக்கா நாட்டின் உசைன் போல்ட் கடந்ததுதான் இதுவரை முறியடிக்கப்படாத உலக சாதனை!

`மின்னல் போல்ட்' எனும் செல்லப் பெயருடைய இவருக்கு இரண்டாவதாய் வருபவர்கள் மிகவும் பின்னால் இருப்பதையும் பார்த்து ரசியுங்கள்!

இவர் ஒரு காலத்தில் செருப்பை மாற்றி மாட்டிக் கொண்டு ஓடியவர் தான்! ஆனால் இப்பொழுது? 2008, 2012 இரண்டு ஒலிம்பிக்கிலும் 100மீ, 200 மீ இரண்டிலும் முதலில் வருவது என்றால் சும்மாவா?

இவரைப் போல வேறு சிலரும் 6'5”உயரம் இருக்கலாம்.ஆனால் இவர் மட்டும் இவ்வளவு சாதித்தது எப்படி? சிறிதும் சிதறாத கவனக் குவிப்பினால் தானே! கொஞ்சம் அசந்தாலும் அடுத்த ஆள் முன்னாடி ஓடிப் போய் விடுவானே!

சரி, இதுவரை ஒலிம்பிக்கில் மிக அதிக பதக்கங்களை வென்றவர் யாரென்று சொல்லுங்கள் பார்ப்போம். மைக்கேல் பெல்ப்ஸ் எனும் அமெரிக்க நீச்சல் வீரர்தான் 21 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் வாங்கியுள்ளார்! அவர் வாங்கியுள்ள மொத்த ஒலிம்பிக் பதக்கங்கள் 25!

அதிகபட்ச ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் என்றால் சும்மா இல்லைங்க.இவருக்கு அடுத்துள்ளவர் இவர் வாங்கியதில் பாதியைக் கூட வாங்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

விடமாட்டேன் என்று தண்ணீரில் குதித்தவர் தான்!

'பறக்கும் மீன் 'எனக் கூறப்படும் அளவிற்கு வேகமாக நீந்தினார், நீந்தினார்,யாரும் எட்டமுடியாத இடத்திற்கு நீந்தியே வந்து விட்டார்!

7 வயதிலேயே சகோதரிகள் கொடுத்த உத்வேகம்தான் அவரது உற்சாகத்தை ஒருமுகப்படுத்தி உயர்த்தி விட்டது!

சரி, நம்ம திபா கர்மாகர் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுவிட்டாரே! திரிபுரா பெண்ணான இவர் ஆங்கிலத்திற்குப் பதிலாக ஜிம்னாஸ்டிக்ஸ் படிக்கப் போனவராம்!

திபாவின் ஒருமித்த கவனம் இறுதிப் போட்டி வரை விளையாட்டில் இருப்பதற்காகவும், அவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாதென்பதற்காகவும், அவரது பயிற்சியாளர் பிஷ்பேஷ்பர் நந்தி அவரை ‘வீட்டுச் சிறையில்' வைத்து விட்டாராம்! பெற்றோர் தவிர யாருக்கும் அவரிடம் பேச அனுமதி இல்லை!

இக்கட்டுரையை நீங்கள் படிக்கும் பொழுது 'பறக்கும் பாவை'யான திபாவின் சாகஸங்களையும் உசைன் மற்றும் பெல்ப்ஸின் புதுப்புது சாதனைகளையும் பார்த்து ரசித்திருப்பீர்கள்!

பணியில் அர்ப்பணிப்பு என்பது ஒருவரை அவரது இலக்குடன் ஒட்ட வைக்கும் பசை என்பார் ஜில் கோனெக்!

விளையாட்டோ, வணிகமோ வெற்றி பெறத் தேவை ஒருமித்த கவனம்!

அலட்சியமின்மை எனும் கருவியைக் கொண்டு கருத்துடன் செயலாற்றினால், முடிக்க முடியாத செயல் எதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர்!

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்

கருவியால் போற்றிச் செயின் (குறள்: 537)

somaiah.veerappan@gmail.com

Monday, August 15, 2016

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்! By முனைவர். அ. பிச்சை


இந்திய தேசத்தின் 70-ஆவது சுதந்திர தினம் இன்று. 69 ஆண்டுகளுக்கு முன்னால், முதல் சுதந்திர தினத்தை - 15.08.1947-அன்று கொண்டாடியதும், குதூகலித்து மகிழ்ந்ததும் உலக வரலாற்றில் இடம் பெறத்தக்க நிகழ்வுகள்.

ஆங்கிலேயர் இந்தியத் துணைக் கண்டத்தை விட்டு வெளியேற முடிவு செய்தபோது. 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாளை ஆட்சி மாற்றத்துக்குத் தேர்வு செய்தனர். அது இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்த இரண்டாவது ஆண்டு தினம்.

"போரில் கிடைத்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி தருவதை விட, போரில்லாமல் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பது எங்களுக்கு அதிக மகிழ்ச்சி தரும் நாளாகக் கருதுகிறோம். ஆகவே தான் ஆகஸ்ட் 15-ஆம் நாளை நாங்கள் தேர்வு செய்கிறோம்' என்றார்கள். அவர்களின் உணர்வை மதித்து, ஆகஸ்ட் 15 நம் தேசத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆகஸ்ட் 14 முன் இரவு முதல், விழாவுக்கான முன்னேற்பாடுகளும், சம்பிரதாயச் சடங்குகளும் தொடங்கப்பட்டன. பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் சட்ட ஆலோசனை மன்றத்தில்தான் (அதுதான் இந்திய அரசியல் நிர்ணய சபையின் கூட்ட அரங்கமாக பின்னால் மாறியது) விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

அந்த அரங்கை அலங்கரித்த முன்னாள் வைஸ்ராய்களின் புகைப்படங்கள் மலர்களால் மறைக்கபட்டன. வண்ண வண்ண மாலைகளாலும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஒளிவிளக்குகளால் பிரகாசித்து அந்த அரங்கம்.

அந்த மண்டபத்தில் அவைத் தலைவரின் இருக்கைக்கு மேல் ஒரு அழகிய பெரிய கடிகாரம் இருந்தது. கடிகாரத்தில் இரு முட்களும் 12-ஐ தொட்டு இணைந்தது.

மணி 12 முறை கணீர் கணீரென்று ஒலித்து ஓய்ந்தது. அதன்பின் ஒரு ஒலி, ஒரு நாதம் எழுந்தது. அது மேல் மாடத்திலிருந்து பயிற்சி பெற்ற ஒருவரால் எழுச்சியோடு இசைக்கப்பட்ட சங்கநாத முழக்கம். இதுவே புதிய தேசம் பிறந்து விட்டது என்பதற்கான அறிவிப்பு.

அரங்கிலுள்ள அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்றார்கள். கையொலி எழுப்பி புதிய தேசத்தின் உதயத்தை புத்துணர்வோடு வரவேற்றார்கள். "வந்தே மாதரம்' என்ற கீதத்தை எல்லோரும் இணைந்து பாடினார்கள்.

"இந்திய தேசத்திற்காகவும் இந்திய மக்கள் நலனுக்காகவும் ஓயாது உழைப்போம், உளப்பூர்வமாக சேவை செய்வோம் என சபதம் ஏற்கிறோம்' என்ற உறுதி மொழியை நேருஜி சொல்ல, அதனை அனைவரும் அப்படியே திரும்பச் சொன்னார்கள்.

அதனைத் தொடர்ந்து மறைந்த தலைவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம், இரண்டு நிமிட அமைதி கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

உணர்ச்சிகரமான, மகிழ்ச்சிகரமான அந்த இனிய இரவில், முதல் நிகழ்ச்சியாக மூன்று முக்கியமான பெருமக்கள் உரை நிகழ்த்தினார்கள். முதலாவதாக, இந்திய இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் சார்பாக சௌத்ரி காலிக் உஸ் - ஸமான் பேசினார். அடுத்து சிறந்த சிந்தனையாளர், தத்துவ மேதை டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பேசினார்.

அடுத்ததாக, முக்கியமான நிகழ்வாக தேசத்தின் முதல் பிரதமர் பண்டித நேருஜி பேசினார். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த உரையில், "உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்தியா விழித் தெழுகிறது. புதிய விடியலை நோக்கி நம்பிக்கையோடு நாம் நமது பயணத்தைத் தொடங்குகிறோம்' - என முழங்கினார்.

ஆனால், விடுதலை வாங்கித் தந்த தேசப்பிதா காந்திஜியோ அந்தேரத்தில் கல்கத்தா பெலிய கட்டா சாலையில் உள்ள பாழடைந்த மாளிகையின் ஒரு பகுதியில் நெஞ்சில் கனத்த சுமையோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

அன்று படுக்கைக்குப் போகும் முன்பு காந்திஜி தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் "நான் இருட்டில் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன், இந்த தேசத்தை நான் தவறாக வழிநடத்தி விட்டேனோ' என்று வருந்தி எழுதியிருக்கிறார்.

ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை நகரங்கள், கிராமங்கள், குடிசைப் பகுதிகள் - அனைத்திலும் கொண்டாட்டங்கள் தான். "தேசமெங்கும் புதிய தீபாவளியாக, புதிய ஈத் பண்டிகையாக, புதிய கிறிஸ்துமஸ் தினமாகத் தெரிகிறது' என்றார் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை நிருபர்.

அன்றைய முதல் நிகழ்ச்சியாக சுதந்திர இந்தியாவின் முதலாவது கவர்னர் ஜெனரலாக மௌண்ட் பேட்டன் பதவி ஏற்று அவருக்கான இருக்கையில் அமர்ந்தார். அருகில் எட்வினா மவுண்ட் பேட்டன் அமர்ந்தார். அவர்களுக்கு இடப்பக்கத்திலும் வலப் பக்கத்திலும் இந்தியாவின் புதிய ஆட்சியாளர்கள் அமர்ந்திருந்தனர்.

பண்டித நேரு பருத்தியாலான ஜோத்பூர் உடைகளுக்கு மேல், லினன் துணியாலான கோட் அணிந்திருந்தார். அவரது கோட் பை-க்கு வெளியே அழகிய சிவப்பு ரோஜா சிரித்துக் கொண்டிருந்தது.

கதர் வேட்டி, கதர் சட்டை அணிந்த சர்தார் படேல், வெள்ளை நிற வேட்டியை மேலே போர்த்தி, ரோமப் பேரரசர் போலக் காட்சி அளித்தார்.

அடுத்து, சுதந்திர இந்தியாவின் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றார்கள். பிரதமர் நேருஜி உட்பட மொத்தம் பொறுப்பேற்றவர்கள் 14 பேர் மட்டுமே. "சுதந்திரம் தேசத்திற்குக் கிடைத்திருக்கிறது. காங்கிரஸýக்கு அல்ல. ஆகவே அனைவரையும் இணைத்துச் செயல்படுங்கள்' - என்பது அண்ணல் காந்தியின் அறிவுரை.

அதன்படி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் - ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம், பார்சி - என ஐந்து மதத்தினரும் இடம் பெற்றிருந்தார்கள். ஏன் நாத்திகர்களும் இடம் பெற்றிருந்தார்கள்.

காங்கிரசை காலமெல்லாம் எதிர்த்த ஆர்.கே. சண்முகம் செட்டி, அண்ணல் அம்பேத்கர், இந்து மகா சபையைச் சேர்ந்த சியாம் பிரசாத் முகர்ஜி - ஆகியோரும் அப்பட்டியலில் இடம் பெற்றவர்கள்.

பாபு ஜகஜீவன் ராமைச் சேர்த்து, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இருவருக்கு பிரிதிநிதித்துவம் அளிக்கப்பட்டது.

தியாகி, தேசபக்தர், கல்வியாளர், ஒன்றுபட்ட இந்தியாவே என் இலட்சியம் எனச் சொன்ன அபுல்கலாம் ஆசாத், ஜான் மத்தாய், (கிறிஸ்தவர்) சி.எச். பாபா (பார்சி - விஞ்ஞானி), சர்தார் பல் தேவ்சிங் (சீக்கியர்) ராஜ்குமார் அமிர்த கௌர் (மகளிர் பிரதிநிதி) - என்று அனைத்துப் பிரிவினரும் பங்கேற்கும் வகையில் அமைச்சரவை அமைந்திருந்தது.

அரசியல் அமைப்பு சபையில் காலை 10-30 மணிக்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. டில்லி மாநகரத்தில் 1000-த்துக்கும் அதிகமான இடங்களில் கொடி ஏற்றப்பட்டதாம்.

மாலை கூட்டத்தில் வெளிநாட்டுத் தூதர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், ஒரு எளிய மனிதர் உட்காரப் போனாராம். "அழைப்பிதழ் எங்கே' எனக் கேட்டபோது, "அழைப்பிதழா அது ஏன் பெற வேண்டும். நாங்கள்தான் சுதந்திரப் பிரஜைகளாயிற்றே' எனச் சொன்னாராம் அவர்.

பேருந்துகளில் ஏறிய கிராமத்து மக்கள் சுதந்திர தேசத்தில் நாங்கள் ஏன் கட்டணம் தர வேண்டும் எனக் கேட்டார்களாம்.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மாகாண பிரதமர் ஓ.பி. ராமசாமி ரெட்டியார் தேசியக் கொடியை ஏற்றினார். மக்கள் காலை முதல் இரவு வரை சாரி சாரியாக வந்து, கொடிக்கு வணக்கம் செலுத்தினார்கள்; கோட்டையைக் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார்கள். கிராமப் பகுதிகளில் கரகாட்டத்தில் மக்கள் ஈடுப்பட்டார்கள்.

இவ்வாறு தேசமெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனால், அதே நேரத்தில் சில பகுதிகளில் சில மக்கள் சஞ்சலத்திலும், சந்தேகத்திலும், அவநம்பிக்கையிலும், கவலையிலும் மூழ்கிக் கிடந்தார்கள்.

மேற்கு பஞ்சாபில் பாதிக்கப்பட்ட 20,000 அகதிகளுக்கு சிகிச்சையும், பாதுகாப்பும் வழங்கும் பொறுப்பு சுசிலா நய்யாருக்கு காந்திஜியால் வழங்கப்பட்டது.

பம்பாயில் கொலாசியா நகர்ப் பகுதியில் வாழும் ஒரு பெண், தன் வீட்டு பால்கனியில் இந்தியக் கொடியையும் ஏற்றி, பாகிஸ்தான் கொடியையும் ஏற்றினார். அவர்தான் ஜின்னாவின் ஒரே மகளான டினா.

லாகூரைச் சேர்ந்த குஷ்வந்த் சிங் "என் பஞ்சாபைப் பிரித்து சிதைத்து சீரழித்துவிட்டார்ளே. நான் அனைத்தையும் இழந்துவிட்டேனே. நான் மகிழ்ச்சி அடையவில்லை. சுதந்திர தினம் எனக்கு ஒரு சோக நாள்' - எனச் சொன்னார்.

இவ்வாறு தேசத்தின் பெரும் பகுதியில் பெருமகிழ்ச்சி. சிலர் மனங்களில் கலக்கமும் கவலையும்.

அன்று காலையில் அண்ணல் காந்திஜியின் ஆசியும், சுதந்திரதினப் பரிசும் கேட்டு நேருவும் பட்டேலும் எழுதிய கடிதத்தை, ஒரு தூதுவன் கல்கத்தாவில் மரத்தடியில் நின்றுகொண்டிருந்த காந்திஜியிடம் கொடுக்கிறார்.

கடிதத்தைப் படித்துப் பார்த்த மகாத்மா "நானோ பரம ஏழை, அவர்களோ அதிகார பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள். அவர்களுக்கு நான் என்ன தந்து விட முடியும்' எனச் சொல்கிறார், அப்பொழுது சிறிது காற்றடிக்கிறது. கிளைகள் அசைகின்றன ஒரு இலை காந்தியின் கையில் விழுகிறது. அந்த இலையை தூதுவனின் கையில் கொடுக்கிறார் காந்திஜி.

இலையைப் பெற்றுக் கொண்ட தூதுவன் கண்ணீர் வடிக்கிறான். அக்கண்ணீரால் இலை ஈரமாகிறது.

"கடவுள் கருணை நிறைந்தவர். வறண்ட இலையை நேரு, பட்டேலுக்கு பரிசாகக் கொடுக்க இறைவன் விரும்பவில்லை. ஆகவே தான் அதனை ஈரமாக்கிக் கொடுக்கிறார். இந்த இலை உங்கள் கண்ணீரால் பிரகாசிக்கிறது. அதே போல் இந்தியாவும் பிரகாசிக்கும். இது தான் என் சுதந்திர தினப் பரிசு' எனச் சொல்லுகிறார்.

இந்தியா பிரகாசிக்கும் என்பது அண்ணலின் நம்பிக்கை: அவர் வழி நடந்தால், அவர் நம்பியது நடக்கும்! நினைத்தது நிறைவேறும்!

NEWS TODAY 23.12.2025