Monday, August 29, 2016

இரட்டை ஜடை போட்டால்தான் படிப்பு வருமா?...பாரதி ஆனந்த்

Return to frontpage

பள்ளிச் சிறுமிகள் பற்றிய நம் நினைவலைகளைத் தட்டிவிட்டால் நம் கண் முன் முதலில் தோன்றும் காட்சி உச்சி வகிடெடுத்து, இரட்டைப் பின்னல்கள் அதன் கீழ் அழகாய்க் கட்டப்பட்டிருக்கும் ரிப்பன்களுடன் ஓர் உருவம்.

இந்த இரட்டைப் பின்னல்தான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.

நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் ஒரு புகாரை முன்வைத்திருக்கிறார்.

அதில் இடம்பெற்றிருந்த ஐந்து குற்றச்சாட்டுகள்:

1. ஈரமான தலைமுடியை அப்படியே பின்னலாகக் கட்டும்போது அதிலிருந்து துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் பேன் தொல்லை ஏற்படுகிறது.

2. தினமும் இரட்டைப் பின்னல் கட்டிக்கொள்வது நேர விரயமாகிறது. வீட்டில் இருப்பவர்கள் உதவியை நாட வேண்டியிருக்கிறது.

3. இரட்டைப் பின்னலால் முடி உதிர்வு அதிகமாகிறது.

4. காலையில் தலைக்குக் குளிப்பதைத் தவிர்க்கும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

5. இந்த விதிமுறை பாலினப் பாகுபாட்டை ஊக்குவிக்கிறது.

இந்தப் புகாரை ஆராய்ந்த மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பெண் குழந்தைகளை இரட்டைப் பின்னல் போட்டுக்கொள்ளும்படி பள்ளிகள் நிர்பந்திக்கக் கூடாது, அதேவேளையில் மாணவிகள் தலைமுடியைச் சீராக வாரி வர வேண்டும் என்பதைக் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

இதுதான் சங்கதி. இந்த உத்தரவுக்கு ஆதரவு இருக்கும் அளவுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. அண்டை மாநிலத்தின் இந்தச் செய்தியை முன்வைத்து நம்மூரில் சிலரிடம் இது குறித்துக் கருத்து கேட்டோம். அந்த மாணவியின் கருத்தை ஆதரிக்கும் தாய்மார்கள், தினமும் எண்ணெய் தேய்த்து இரட்டைப் பின்னல்கள் கட்டுவதும், வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே தலையில் தண்ணீர் விட்டு அலசும் நெருக்கடி ஏற்படுவதும் நிச்சயம் சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு நேர விரயத்தையும் இது ஏற்படுத்துகிறது. இரட்டைப் பின்னல்களும் ரிப்பன்களும் இல்லாமல் தலையைச் சீராக வாரிக்கொண்டு வருமாறு தெரிவிப்பதும் நல்லது என்று சொல்கிறார்கள்.

ஒருசில தாய்மார்களைப் பொறுத்தவரை நேர விரயம் என்றாலும் பள்ளிக்குச் செல்லும்போது சீராக இருப்பதுதான் அழகு. அதுமட்டுமல்லாமல் எப்படி வேண்டுமானாலும் தலைவாரிக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டால் பிள்ளைகள், அதுவும் பதின்பருவ பிள்ளைகள், சிகை அலங்காரத்துக்கே அதிக நேரம் செலவழிப்பார்கள் என்று கூறுகின்றனர்.

இந்த இரு வாதங்களையும் ஆசிரியர் ஒருவரிடம் முன்வைத்தோம். புதுச்சேரி சவராயலு நாயகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஹேமாவதி கூறும்போது, “கேரள மாணவியின் வாதங்கள் அனைத்தும் ஏற்புடையதே. நம் நாடு முழுவதும் கல்வியில் சமத்துவம் இருக்கிறதா? கல்வியில் சமத்துவம் ஏற்பட்டால் இளைய சமுதாயம் ஊக்கம் பெற்று ஏற்றம் காணும். அதை விடுத்து இது போன்ற சிறிய விஷயங்களில் கட்டுப்பாடு கடைப்பிடிப்பதால் என்ன நன்மை இருக்கிறது? ஒரு பெண் குழந்தை அவளது தலைமுடியை நீளமாகவோ கட்டையாகவோ வைத்துக்கொள்வது அவளது உரிமை. பள்ளிக்கு வரும்போது தலை முடியைச் சீராக வாரி வந்தால் போதுமானதே. இரட்டைப் பின்னலும் ரிப்பனும் ஒழுங்கின் அடையாளம் அல்ல. அது நாம் உருவாக்கி வைத்திருக்கும் ஒழுக்க நெறி பிம்பம். கேரள மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு அமைப்பின் உத்தரவை எல்லா மாநிலங்களும் பரிசீலிக்கலாம்” என்றார்.

இன்னும் பெண் சிசுக் கொலையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை; பெண்களுக்கு முழுமையாகக் கல்வி கொடுக்க முடியவில்லை; பாலியல் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. செய்வதற்கு இவ்வளவு இருந்தும் நம் சமூகத்துக்கு இரட்டைப் பின்னல்தான் இன்னும் பிரச்சினை என்பதை நினைத்துப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கிறது.

Sunday, August 28, 2016

நீங்கள் ஒரு நல்ல கணவரா?- 10PointCheck



vikatan.com

"வேலை..குடும்பம்..குழந்தைன்னு நான் நல்லாதானே பாத்துக்கிறேன்.. அப்புறம் எங்க மிஸ் ஆகுது”ன்னு யோசிக்கறீங்களா? அப்ப இந்த 10 பாயிண்ட்ஸ் உங்களுக்குதான். புது ஜோடியில இருந்து சில்வர் ஜூப்லி கொண்டாடின ஜோடிகள் வரைக்கும் இந்த மேட்டர் பொருந்தும். கல்யாணமே ஆகலைன்னாலும் எதிர்காலத்துல யூஸ் ஆகும் ப்ரோ.



1. சமைச்சு கொடுங்க :

உங்க மனைவிதான் தினமும் உங்களுக்கு சமைச்சு தறாங்களா? அப்ப ஒருநாள் நீங்க சமைச்சு கொடுக்க டிரை பண்ணுங்க. சமையல் அறை பக்கம் எட்டிக்கூட பார்க்காத ஆளாக இருந்தால், இன்னும் சிம்பிள். உங்க மனைவிகிட்டயே 'நீ சமைக்க சொல்லிக்கொடு, நான் கத்துக்கறேன்'னு அவங்க சொல்லச் சொல்ல கேட்டு அவங்களுக்கு இஷ்டமானதையே செஞ்சு கொடுக்கலாம். சமைச்சது ரொம்ப சுமாராக இருந்தாலும் கண்டிப்பாக இந்த சாப்பாடு அவங்களுக்கு டேஸ்டாக தான் இருக்கும்.


2.எழுதுங்க :

லவ் லெட்டரை காதலிக்கற பொண்ணுக்கு தான் கொடுக்கணும்னு கிடையாது. மனைவிக்கும் கொடுக்கலாம். அவங்களை எவ்வளவு லவ் பண்றீங்க, அவங்க வந்ததுக்கு பிறகு உங்க வாழ்க்கை எப்படி எல்லாம் மாறி இருக்குனு குட்டி காதல் கடிதமா எழுதி கொடுங்க. 'பேப்பர்ல எழுதி பல வருஷம் ஆச்சு பாஸ்?னு யோசிச்சா... மெசேஜ் டைப் பண்ணி அனுப்புங்க. திருமண வாழ்க்கையும், ஒரு வகையான காதல் வாழ்க்கைதாங்க.



3. கிப்ட் கொடுங்க :

வைர மோதிரமோ, தங்க வளையலோ, காஸ்ட்லி டிரஸோ தான் வாங்கிதரணும்னு கிடையாது. அவங்க ரொம்ப நாளா ஒரே செப்பலை பயன்படுத்தறாங்கனு தெரிஞ்சா புது செப்பல் வாங்கிக்கொடுக்கங்க. சின்ன சின்ன பரிசுகள் வாழ்க்கையை சுவாரசியமாக்கும். (அதுக்குன்னு வளையல் வாங்கித் தந்தத எல்லாம் கணக்குல காட்டாதீங்க பாஸ்)



4. கட்டிப்பிடிங்க :

கமல் சொன்ன அதே கட்டிப்பிடி வைத்தியம் தான். காலையில எழுந்ததும், ஆபிஸ் விட்டு வந்ததும், தூங்கப்போவதுக்கு முன்னரும்னு சின்ன ஹக் பண்ணுங்க. கிஸ் கொடுங்க. அப்புறம் பாருங்க, ரேம் க்ளீன் ஆன ஆண்ட்ராய்டு ஃபோனா வாழ்க்கை சும்மா ஸ்மூத்தா போகும்.



5. சண்டை வந்தா சமாளிக்கணும் :

ரோடு போட்டதும் சாலைகள் குண்டும் குழியுமாக ஆவதும், கல்யாணம் பண்ணதும் பேமிலிக்குள்ள சண்டை வரதும் சகஜம் தான். சண்டை வந்தால், உடனே மனைவி மேல குற்றம் சொல்லாதீங்க. திட்டாதீங்க. எதனால சண்டை வந்ததுனு உட்கார்ந்து பேசி அப்பவே தீர்த்துடுங்க. குழந்தைங்க முன்னாடியோ, உறவினர்கள் முன்னாடியோ சண்டை போட்டுக்காதீங்க. யார்கிட்டயும் உங்க மனைவியை விட்டுக்கொடுத்து பேசாதீங்க. (உங்க அம்மாகிட்ட கூட பாஸ்)



6. ஷேர் பண்ணுங்க :

புது விஷயங்களை ஏதாவது படிச்சலோ, பார்த்தாலோ, கேட்டாலோ ஃபேஸ்புக்ல ஷேர் பண்ற மாதிரி உங்க மனைவியிடமும் ஷேர் பண்ணுங்க. அவங்க ஏதாவது சொன்னா காது கொடுத்து கேளுங்க. பக்கத்து வீட்டு கதையை சொன்னால் கூட சுவாரஸ்யமா கேட்டுக்கோங்க. அலுத்துகாதீங்க. 'நீ சமைச்சு கொடுத்த சாப்பாடு சூப்பர்' , ' டிரஸ் செம'னு அடிக்கடி பாராட்டுங்க.



7. எல்லாத்துக்கும் எதிர்பார்க்காதீங்க :

சிலர் எது வேணும்னாலும் அவங்க மனைவியை தான் எதிர்பார்ப்பாங்க. எந்த பொருள் எங்க இருக்குனு கூட தெரியாத அப்பாவி ஜீவனாகவே வளர்ந்து இருப்பாங்க. அவங்க உங்களுக்கு தேவையானதை பார்த்துப் பார்த்து எடுத்துக்கொடுத்தாலும், நாட்கள் போக... போக... இது சலிப்பை ஏற்படுத்தும். 'நம்மள ஒரு வேலைக்காரி மாதிரி பயன்படுத்தறாரோ'னு கூட யோசிக்கலாம். அதுனால, இனி கூப்பிட்ட குரலுக்கு அவங்க ஓடி வரணும்னு நினைக்காதீங்க. ”யாரங்கே”ன்னு கேட்க நாம என்ன புலிகேசியா?


8. ஹெல்ப் பண்ணுங்க :

டைம் கிடைச்சா, அவங்களுக்கு சின்ன சின்ன உதவி பண்ணுங்க. வாஷ்பேஷின்ல பாத்திரம் இருந்தால் கழுவி கொடுங்க. வீட்டை சுத்தப்படுத்துங்க. துணி துவைச்சு காயப்போட உதவுங்க. இந்த ஹெல்ப் எல்லாம் நீங்க அவங்க மேல எவ்வளவு கேர் எடுத்துக்கறீங்கனு புரிஞ்சுப்பாங்க.

9. டூர் போங்க :

அலுவலகம், வீடு, குழந்தைகள்னு ஒரே இடத்தை சுற்றி சுற்றி வந்தால் சலிப்பு வரலாம். வருஷத்திற்கு ஒருமுறையாவது மனைவி, குழந்தைகளுடன் டூர் போங்க. கொஞ்சம்டைம் இருந்தால் மனைவி கூட லாங் டிரைவ் போங்க. அவங்க அம்மா, அப்பாவையோ, அவங்களுக்கு பிடித்த நண்பரையோனு சர்ப்ரைஸாக வர வைத்து அவங்க முன்னாடி நிறுத்துங்க. இதுக்கு எல்லாம் பலன் கொஞ்ச நாட்களிலேயே தெரிஞ்சுப்பீங்க.

10. பணமும் முக்கியம் :

ஒர் குடும்பம் நல்லா இருக்கணும்ன்னா, கண்டிப்பா பொருளாதாரமும் முக்கியம். உங்க சம்பளம் எவ்வளவு? மாசம் என்னென்ன செலவு ஆகுதுனு மனைவிகிட்ட உட்கார்ந்து பேசி செக் லிஸ்ட் போட்டு செலவு பண்ணுங்க. குழந்தைங்க படிப்பு, எதிர்கால திட்டம்னு எல்லாத்துக்கும் அவங்க கூட கலந்து பேசுங்க. அவங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்கனு புரிஞ்சுப்பாங்க.

இப்படியாக வாழ்ந்தால் “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை தான்” பாஸ்,



- ஹேமா

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பெண்கள் செல்ல உள்ள தடை நீங்குமா?



இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில்,பெண்கள் மாதவிலக்குக் காலங்களில் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்பது ஆகம விதி என்பார்கள்.இதனால் ஆண்டாண்டு காலமாகப் பெண்கள் மாத விலக்குக் காலங்களில் கோயிலுக்குள் செல்வதே இல்லை.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் மட்டும் மாதவிலக்கு காலங்களில் மட்டுமல்ல, குழந்தை பெற்றுகொள்ள தகுதியுடைய எந்தப் பெண்ணும் கோயிலுக்குள் போகக் கூடாது என்று அதன் இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது,' கடவுள் ஐய்யப்பன் ஒரு நித்திய பிரம்மாச்சரி' அதனால் 10 வயதில் இருந்து 50 வயதுடைய மற்றும் மாதவிலக்கு நிற்காத பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டிருக்கும்.

அதையும் மீறி பெண்கள் நுழைந்தால், அவர்கள் கோயில் நிர்வாகத்தால், வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு பிரபல கன்னட நடிகை ஜெயமாலா சபரிமலைக்குள் சென்று ஐய்யப்பன் சிலையைத் தொட்டு வழிபட்டதாகக் கூறி சர்ச்சையில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து கேரள தேவசம் போர்டு அவர் மீது வழக்கும் தொடர்ந்தது. திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கோபால கிருஷ்ணன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரை எதிர்த்து #HappyToBleed அமைப்பு சமூக வலைதளங்களில் ஒரு பக்கத்தை உருவாக்கியது .

இதனைத் தொடர்ந்து அனைத்து பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

"கோயில் என்பது பொதுவான ஆன்மிக தலம். அங்கு வரும் பெண்களுக்கு அனுமதி மறுக்க முடியாது. அரசியல் சட்டத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அவர்களுக்கு அனுமதி மறுப்பது, அடிப்படை உரிமைகளை மீறும் செயல். இந்த பிரச்னையின் தீவிரத்தன்மையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இந்த வழக்கு அரசியல் சட்ட பெஞ்சுக்கு அனுப்புவதற்கு உகந்தது என்று நாங்கள் நினைக்கக்கூடும். அப்படி மாற்றுவதாக இருந்தால், விரிவான உத்தரவைப் பிறப்பிப்போம் என்று கூறியதோடு, நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தர்ஹாவுக்கு, பெண்கள் செல்ல உரிமை உள்ளது

மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்ஹாவுக்கு, பெண்கள் செல்ல உரிமை உள்ளது’ என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்பை வழங்கியுள்ளது.

பாரதி முஸ்லிம் மகிலா அன்டோலன் அமைப்பைச் சேர்ந்த ஜாகியா சோமான் மற்றும் நூர்ஜகான் சபியா ஆகியோர் 2014-ம் ஆண்டு பொது நல மனு ஒன்றை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவின் மீதான விசாரணையில், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.எம்.கனடே மற்றும் ரேவதி மொஹிட்டி ஆகியோர் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

‘‘பாலினப் பாகுபாட்டைக் காரணம் காட்டக் கூடாது!’’

‘தர்ஹாவுக்குப் பெண்கள் செல்வதற்கு உரிமை உள்ளது’ என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14, 15, 19 மற்றும் 25 ஆகியவற்றில் சொல்லப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘‘சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டம், அனைவருக்கும் பொதுவானது. எனவே, தர்ஹாவின் மையப் பகுதிக்குப் பெண்கள் செல்வதற்கு உரிமை உள்ளது. மதத்தை வழிநடத்தவும், அதன் கொள்கைகளைப் பின்பற்றவும் அவர்களுக்கு உரிமை உள்ளது. எனவே, பாலினப் பாகுபாட்டைக் காரணம் காட்டி நாம் தடைபோடக் கூடாது." என்று தீர்ப்பில் கூறியுள்ளோம் ..

ஏன் இந்த தீர்ப்பை முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது ?

இந்தத் தீர்ப்பை நாடு முழுவதும் உள்ள பெண்கள் கொண்டாடி வரும் நிலையில், சபரிமலை கோயில் விவகாரத்திற்கும் முன்னுதாரணமாக வைத்து, ஏன் பார்க்க கூடாது என பெண்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து உழைக்கும் பெண்கள் உரிமை அமைப்பு குழுவின் இணை அமைப்பாளர் லதாவிடம் பேசினோம்... "இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த தீர்ப்பு, சபரிமலை வழக்கிற்கு முன்னுதாரணமாக அமையும் என்று நம்பிக்கை உள்ளது. கேரளாவில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள இடது சாரிகள் தலைமையிலான அரசு உடல் ரீதியான விஷயங்களை வைத்து பெண்களை தடுப்பது அவர்களின் உரிமையை பறிக்கும் செயல் என்று கூறியுள்ளது. எனவே இதை எடுத்துக்கட்டாக எடுத்துக்கொண்டு இதற்காகப் போராடி வரும் அமைப்புகள் விரைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. கேரள அரசின் மீது நம்பிக்கை உள்ளது. சபரிமலை கோயிலிலும் விரைவில் பெண்கள் செல்லுவதற்கு சட்டரீதியாக வழிபிறக்கும் என்றார். அதே நேரத்தில் தேவஸ்தான அமைப்பு இந்தத் தீர்ப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் .

மனிதர்கள் வகுத்த சட்டங்களை மனிதர்கள் மாற்ற முடியும்

இது தொடர்பாக வழக்கறிஞர் அருள் மொழியிடம் பேசினோம். "மதம் ,ஆட்சி அரசியல், குடும்பம் இவை மூன்றும் ஆண்களின் கையில்தான் உள்ளன. இவை மூன்று இடங்களிலும் பெண்கள் சம உரிமைக்காக போராடி வருகிறார்கள். வழிபாட்டுத் தலம் மற்றும் நினைவுசின்னம் எதுவாக இருந்தாலும் அந்தப் பெண்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்தத் தீர்ப்பு எதிர்காலத்தில், இதுபோன்று உரிமைக்காக போராடும் பெண்களுக்கு உதாரணமாக இருக்கும். இதைப் போன்றது தான் கோயிலில் பெண்கள் நுழையக்கூடாது என்ற விதி முறைகளும். அதனை எதிர்த்து போராட்டத்தை துவங்கி உள்ள பெண்களுக்கு உரிமை கிடைக்க வழிவகை உள்ளது. கோயிலின் சான்றுகளிலோ அல்லது புராணங்களிலோ பெண்கள் நுழையக்கூடாது என்று சொல்லவில்லை. எனவே நல்ல முடிவு வரும். இது மனிதர்கள் வகுத்தது. இதனை மனிதர்களால் நீக்க முடியும்." என்றார்.


கே. புவனேஸ்வரி

vikatan.com

உங்கள் உடல்மொழி சொல்லும்சேதி! #BodyLanguage




அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது போலத்தான் நாம் யார் என்பது நம் உடல் மொழியிலேயே தெரிந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல்மொழி என்பது தனித்துவமானது. ஒருவருடைய உடல்மொழியே அவரின் மனநிலையை எளிதாக வெளிப்படுத்தும். நீங்கள் தனியொருவனா, ஆயிரத்தில் ஒருவனா? உங்கள் உடல்மொழியே சொல்லிவிடும் நீங்கள் யார் என்பதை...!

உலகின் பெரும் ஆளுமைகள் அனைவரும் தனித்துவமான உடல்மொழியை கொண்டவர்கள். நம் அருகாமை உதாரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். படத்தின் முதல் காட்சி சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினிகாந்த். உடைமைகளை பெற்றுக்கொண்டு சிறை வாசலுக்கு நடந்து வர கதவுகள் திறக்கின்றன.அவர் நடந்து வருவது மட்டும் தான் காண்பிக்கப்படுகிறது. ஆனாலும் அவரின் முகத்தைக் காட்டும் வரையில் கூட பொறுத்திருக்காமல் எழுந்து நின்று கைதட்டி விசிலடிக்கிறோம் என்றால். அது அவரது உடல்மொழி செய்யும் மேஜிக். உங்கள் உடல்மொழியை மேம்படுத்திக் கொள்வதற்கான சில சிம்பிள் டிப்ஸ் இங்கே...



1. நம்மில் பெரும்பாலானோரும் பேசுகையில் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருப்போம். கைகளை காட்டிக்கொள்வது என்பது நம் எதிராளியிடம் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள். மேலும் அந்த உரையாடலில் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப்பற்றி தீவிரமாக சிந்திக்கவும் செய்கிறோமாம்.



2. பேசிக்கொண்டிருக்கும் பொழுது உதட்டை குவிப்பது. தாடையை சொறிவது. மேலும் என்ன என்பது போல அவசரப்படுத்துவது போன்றவை உங்களுக்கு ந்த விஷயத்தில் ஆர்வமில்லை என்பதை காட்டி உங்கள் நண்பரை சலிப்படையச் செய்யும்.


3. நீங்கள் எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பதை நேரடியாக கண் பார்த்து பேசுவதின் மூலமே சொல்லிவிட முடியும். மனிதனின் 70 சதவிகித தகவல் பரிமாற்றங்கள் உங்கள் சின்ன சின்ன உடல்மொழிகளாலேயே பிறருக்கு கடத்தப்படுகின்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4. இடுப்பில் கை வைத்துக்கொண்டு நிற்பது உங்கள் பொறுமையின்மையையும் உங்களுக்கு அந்த உரையாடலில் உள்ள ஆர்வமின்மையையும் காட்டுவதாய் இருக்கும்.

5. நீங்கள் நின்று கொண்டிருக்கும் தோரணையும் உங்கள் உடல்மொழியை அழகாய் கடத்தும். நின்று கொண்டு பேசும்பொழுது பாதங்களின் திசையும் கூட நீங்கள் கிளம்ப தயாராக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.



6. போலியாக செய்வதை தவிருங்கள். எதேச்சையாக கடந்து செல்கையில் வேறொரு மனநிலையில் இருந்துகொண்டு பிறரை பார்த்து புன்னகை செய்யும் பொழுது அது இயல்பானதாக இருக்காது. மனம் விட்டு சிரித்து உங்கள் இருப்பை பூர்த்தி செய்யுங்கள்.

7. நாம் எப்படி நம் கருத்தை எதிரில் இருப்பவர் காது கொடுத்து கவனிக்க வேண்டும் என நினைக்கிறோமோ. அது போலத் தான் பிறருக்கும் தோன்றும். உரையாடலின் போது பார்வையை வேறு பக்கம் செலுத்துவது. காதுக்குள் விரலை விட்டு எடுத்து அழுக்கு இருக்கிறதா என பார்ப்பது போன்றவையெல்லாம். நம் மீதான நம்பிக்கையை சுத்தமாக துடைத்துப் போட்டுவிடும். பிறருடனான உரையாடலில் கண் பார்த்து பேசி பழகுங்கள். அதன் பிறகு உங்கள் மீதான நம்பிக்கை பிறருக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்வதை உணர்வீர்கள்.

பிறருடைய உடல் அசைவுகளை பொறுத்தே நம்மை வெளிக்காட்டுவோம். தனியொருவனாக இருப்பதற்கும், ஆயிரத்தில் ஒருவனாக கடந்து போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது அல்லவா? மேலும் இதையெல்லாம் ஒரே நாளில் கடைபிடித்துவிட முடியாது தான். ஆனால் நம் உடல், நாம் சொல்வதைத்தானே கேட்க வைக்க வேண்டும்...!

- க.பாலாஜி

மாணவர்களே கட்டிய கழிப்பறை! - மலைக்க வைத்த மனிதநேயம்

vikatan.com

பள்ளிக்கே வராமல் நோயால் சுருண்டு கிடந்த நண்பனுக்கு கழிப்பறை கட்டித் தந்துள்ளனர் நாகப்பட்டினம் மாணவர்கள். ' கழிப்பறை இல்லாததே நோய் வருவதற்குக் காரணம் என்பதை உணர்ந்ததால், சக மாணவர்களிடம் வசூல் செய்து கழிப்பறை கட்டும் பணியை முடித்தோம்' என உற்சாகமாகப் பேசுகின்றனர் மாணவர்கள்.

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம், தேசத்தின் தூய்மை பற்றிய பிரசாரத்தை முன்னெடுக்கிறது மத்திய அரசு. ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறையின் தேவை பற்றிய விழிப்பு உணர்வு பிரசாரங்கள் வேகமெடுத்துள்ளன. ' கழிப்பறை இல்லாததால் மணமகனை மணக்காத மணப்பெண்' என்பன போன்ற செய்திகள் எல்லாம் வடஇந்தியாவில் சாதாரணம். தமிழ்நாட்டிலும், ஏழை எளிய மாணவனின் வீட்டிற்கு கழிப்பறைக் கட்டிக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் மாணவர்கள். மாணவர்களின் அசாதாரண முன்னெடுப்பை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள் நாகப்பட்டினம் மக்கள்.



நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் உள்ள எஸ்.கே.அரசு உயர் நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் மாணவர் அகத்தியன். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த அகத்தியன், அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளார். சக நண்பர்களான வசீகரன், ராகுல், நவீன்ராஜ், ஹரிஷ் ஆகியோர், ' ஏன் பள்ளிக்கு வருவதில்லை?' என விசாரித்துள்ளனர்.

அவர்களிடம், தன் காலில் இருந்து தோல் நோயைக் காட்டி அழுதிருக்கிறார் அகத்தியன். ' அடிக்கடி விஷக் காய்ச்சலும் வந்துவிடுகிறது. சரியான டாய்லெட் இல்லாததுதான் காரணம்' என அழுதிருக்கிறார். ' திறந்தவெளியில் மலம் கழித்ததால்தான் அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகிறார்' என்பதை உணர்ந்த நண்பர்கள், ' நாமே ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, கழிப்பறை கட்டினால் என்ன?' என்ற முடிவுக்கு வந்து, பள்ளி ஆசிரியர் வீரமணியிடம் கூறியுள்ளனர். அவரும், 'மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இந்தத் திட்டம் அமையும். உடனே தொடங்குங்கள்' என உற்சாகப்படுத்தினர்.



இதையடுத்து, சுதந்திரதினவிழா அன்று கழிப்பறை கட்டுவது குறித்து விழிப்பு உணர்வு பேரணியை நடத்தினர். கூடவே, சக மாணவர்களிடம் கையேந்தி காசு வசூல் செய்தனர். ஒருவழியாக கழிப்பறை கட்டுவதற்கான தொகை சேர்ந்துவிட்டது. இதையடுத்து, அகத்தியனின் நண்பர்களே முன்னின்று கழிப்பறையைக் கட்டும் பணியை நிறைவு செய்தனர்.



கொளுத்தும் வெயிலில் சக மாணவனுக்காக கழிப்பறை கட்டும் பணியில் மாணவர்கள் இறங்கியதை ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர் சுற்றுவட்டார பொதுமக்கள். மாணவர்களின் செயலைக் கேள்விப்பட்டு கல்வி அதிகாரிகள், அவர்களை நேரில் வரவழைத்துப் பாராட்டினர்.


'உயிர் காப்பான் தோழன்' என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளனர் இந்த மாணவர்கள். இந்த மாணவர்களுக்கு நாமும் வைப்போம் ஒரு ராயல் சல்யூட்!

த.அழகுதங்கம்
(மாணவ பத்திரிகையாளர்)

இது நல்லதல்ல... By ஆர். வேல்முருகன்

DINAMANI

கற்றலின் எதிரி விருப்பம் இன்மையோ, மறதியோ, அச்சமோ அல்லது வெறுப்போ கிடையாது. இவை அனைத்தையும் குழந்தைகளின் மனதில் பதிய வைக்கும் தண்டனைதான்.

அறிவியல் உலகம் எத்தனையோ முன்னேற்றத்தைக் கண்டுள்ள இந்தச் சூழ்நிலையிலும் வகுப்பில் சரியாகப் படிக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி, பள்ளிக் குழந்தைகளின் கைகளில் கற்பூரத்தை ஏற்றிச் சூடு வைத்துக் கொடுமைப்படுத்தியுள்ளார் அண்மையில் தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர்.

பொதுவாக, தொடக்கப் பள்ளிகளுக்கு ஆசிரியைகளை நியமிப்பது, குழந்தைகளின் மேல் அன்பு செலுத்தி நன்கு கற்றுத் தருவார் என்பதால்தான்.

ஆனால் சூடு வைத்ததன் மூலம் தான் ஆசிரியை பதவிக்குத் தகுதியில்லாதவர் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார், அந்த ஆசிரியை. எந்த ஆசிரியர் இயக்கமும் குறைந்தபட்சம் இதை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செயலால் சூடுபட்ட குழந்தைகளுக்குக் கல்வியின் மேல் கண்டிப்பாக வெறுப்புத்தான் வளர்ந்திருக்கும்.

இது தவிர, பல இடங்களில் தொடரும் பாலியல் வக்கிரங்கள், வகுப்புக்கு குடிபோதையில் வரும் ஆசிரியர்கள், தனக்குப் பதிலாக வேறு ஓர் ஆசிரியரை நியமித்து விட்டு, சொந்த வேலையைப் பார்க்கச் செல்லும் ஆசிரியர்கள் என்று பிரச்னைகளின் வடிவம் வெவ்வேறு விதமாக உள்ளது.

பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு பெருகியுள்ள இந்தக் காலத்திலும் மாதா, பிதாவுக்கு அடுத்தபடியாகக் கருதப்பட்டுப் போற்றப்படும் குரு, இவ்வாறு செய்வதுதான் பொதுமக்கள் மனதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கண்ட சம்பவங்கள் எல்லாம் சிறிய உதாரணங்கள்தான். இதே நிலை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் ஆசிரியர்கள் மீது சமுதாயம் வைத்திருக்கும் மதிப்பு குறைந்துவிடும்.

ஈடுபாடுதான் கல்வி கற்பதன் முதல் படி என்பது ஆசிரியர்களுக்குக் கண்டிப்பாகத் தெரியும். ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே மிகவும் கேவலமாகப் பார்க்கும் இத்தகைய சூழ்நிலையில், எத்தனை ஆசிரியர்கள் தங்களது மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பது கேள்விக்குறிதான்.

ராமேசுவரம் தீவில் ஒரு காலத்தில் தினசரி செய்தித்தாள்களை வீடு, வீடாக விநியோகித்த ஒரு சிறுவன், தனது ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் தினசரிகளில் தலைப்புச் செய்தியாக வந்தது மட்டுமல்லாமல், நாட்டின் முதல் குடிமகனாகவும் உயர்ந்தார் என்பது வரலாறு.

தான் முதல் குடிமகனாக இருக்கும்போது, திருச்சி கல்லூரியில் படித்தபோது தனக்குப் பாடம் போதித்த ஆசிரியரை, சந்திக்க விரும்பினார் அப்துல் கலாம். பாதுகாப்பைக் காரணம் காட்டி ஆசிரியரை அப்துல் கலாம் இருக்குமிடத்துக்கு அழைத்து வரலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

ஆனால் தனக்குப் பாடம் போதித்த ஆசிரியரை தான் சென்று பார்ப்பதுதான் சரி என்று கூறி அந்த ஆசிரியரை தானே சென்று சந்தித்து வந்தார் அப்துல் கலாம்.

நாட்டின் முதல் குடிமகனாக இருக்கும்போது சம்பந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து வரச் செய்வது என்பது அப்துல் கலாமுக்குப் பெரிய விஷயமாக இருந்திருக்க முடியாது.

இவர் சென்று பார்த்ததால் இருவரின் மீதான, ஆசிரியர், மாணவரின் மீதான எண்ணங்களும் மரியாதையும் மிகவும் உயர்ந்தது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஒரு மாணவரிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என்பது யோசித்துப் பார்க்க வேண்டும்.

இப்போதும் பெயர் தெரியாத எத்தனையோ ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் யாருக்கும் கண்டிப்பாக எந்த விருதும் கிடைக்காது.

அதற்காக அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. தங்கள் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள்.

இப்போதும் பல ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுகிறார்கள். தங்கள் ஊதியத்தின் ஒருபகுதியை மாணவர்களின் நலன்களுக்காகச் செலவிட்டு, பாடத்திட்டத்திற்கு அப்பாலும் பல்வேறு விஷயங்களை மாணவர்களுக்கு கற்றுத் தந்து கொண்டிருக்கின்றனர்.

முதலில் குறிப்பிட்ட விவகாரத்தில் சூடுபட்ட குழந்தைகள் அச்சத்தின் பிடியில்தான் இருப்பார்கள். அப்படி அச்சத்தின் பிடியில் கட்டுண்டு கிடக்கும் ஒரு குழந்தையால் எதைக் கற்றுக்கொள்ள முடியும்?

கற்றல் என்பது குழந்தைக்குக் குழந்தை கண்டிப்பாக மாறுபடும். இதுதொடர்பான விழிப்புணர்வு பெற்றோர்களிடம் மட்டுமல்லாமல், பெரும்பாலான ஆசிரியர்களிடமும் இல்லை.

தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சங்கங்கள் கூக்குரலிடுகின்றன. இதனால் நடவடிக்கை எடுப்பதற்கே உயர் அதிகாரிகள் சங்கடப்படுகின்றனர்.

இப்போதைய சூழ்நிலையில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் அடுத்துவரும் தலைமுறைக்குக் கல்வியின் மீது நாட்டத்தை ஏற்படுத்த முடியும். இல்லாவிட்டால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இருப்பார்கள், படிப்பதற்கு மாணவ, மாணவியர் இருக்க மாட்டார்கள்.

இது தனியார் பள்ளிகள் மேலும் வளர்ச்சியடையவே ஊக்கமளிக்கும். இந்த நிலை நாட்டுக்கும் வருங்கால சமுதாயத்திற்கும் நல்லதல்ல.

Saturday, August 27, 2016

வி.ஏ.ஓ.க்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த இளைஞரால் பரபரப்பு!



விழுப்புரம்: தந்தையின் இறப்பு உதவித்தொகை பெறுவதற்காக, கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதால் இளைஞர் பிச்சை எடுத்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ம.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவர் கடந்தாண்டு உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார். கொளஞ்சியின் மனைவி விஜயா தனது மகன்கள் ஐயப்பன், அஜித்குமார், மகள் அனுசுயா ஆகியோருடன் ம.குன்னத்தூர் கிராமத்தில் வசித்து வந்தார்.

கூலி வேலை செய்து தனது பிள்ளைகளை வளர்த்து வந்த விஜயாவுக்கு, தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவர் உயிரிழந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.12,500 வந்துள்ளது. அதைப் பெற வந்த கொளஞ்சியின் மகன் அஜித்குமாரிடம், உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்றால், எனக்கு ரூ.3,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ம.குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும், நீங்கள் கேட்கும் பணத்தை தர என்னிடம் பணம் இல்லை என அஜித்குமார் கூறி இருக்கிறார். ஆனாலும், பணம் தந்தால் மட்டுமே உதவித்தொகையை பெற முடியும் என்று கிராம நிர்வாக அலுவலர் கண்டிப்புடன் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதில் மனமுடைந்த அஜித்குமார், ம.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள கடை வீதி, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில், ''என் அப்பாவின் ஈம சடங்கிற்கு வாங்கிய கடனை அடைக்க வக்கு இல்லை. என்னிடம் அப்பா இறப்பிற்கு வந்த ரூ.12,500 தருவதற்கு மூன்றாயிரம் ரூபாய் கேட்கிறார் ம.குன்னத்தூர் வி.ஏ.ஓ." என்ற வாசகம் அடங்கிய பேனரை கையில் ஏந்தியபடி, அரசின் உதவித்தொகையைப் பெற கிராம நிர்வாக அலுவலருக்கு லஞ்சம் கொடுக்க, எனக்கு பிச்சை போடுங்கள் என்று அனைவரிடமும் கேட்டுள்ளார்.



இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

NEWS TODAY 23.12.2025