Wednesday, September 7, 2016

எஸ்.ஆர்.எம்., பல்கலையிடம் பணம் பறிக்க முயற்சி : சமூக விரோதிகள் மீது பதிவாளர் போலீசில் புகார்

DINAMALAR
சென்னை: எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி, சமூக விரோதிகள் பணம் பறிக்க முயற்சி செய்வதாக, பல்கலை பதிவாளர், போலீசில் புகார் செய்துள்ளார்.

எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் சேதுராமன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் மனு: ஒன்பது ஆண்டுகளாக, எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளராக உள்ளேன். எங்கள் பல்கலை., பொறியியல், மருத்துவம், சட்டம் என, பல்வேறு பிரிவுகளில், உயர்தர கல்வியை அளித்து வருகிறது. துரதிஷ்டவசமாக, டாக்டர் ஜெயச்சந்திரன் உட்பட சிலர் அளித்த புகாரால், எங்கள் பல்கலை வேந்தரான, பச்சமுத்து, ஆக., 25ல், போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார்; அவரை ஜாமினில் எடுக்க முயன்று வருகிறோம்.

பச்சமுத்து நடத்தி வரும், இந்திய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலராக, மதன் என்பவர் இருந்தார். அவர், பச்சமுத்துவுடன் இருந்த பழக்கத்தை பயன்படுத்தி, எஸ்.ஆர்.எம்., பல்கலையில், மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக, பல கோடி ரூபாய் சுருட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். அவர் மீது, பெற்றோர், மாணவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், பச்சமுத்துவையும், மோசடி குற்றச்சாட்டில், மதன் சேர்த்து விட்டார். இதனால் ஏற்பட்டுள்ள களங்கத்தை, பச்சமுத்து, சட்டரீதியாக எதிர்கொண்டு, தான் நிரபராதி என்பதை நிரூபிப்பார்.

பெற்றோர் மற்றும் மாணவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை பச்சமுத்து மறுத்துள்ள போதிலும், ஜாமின் மனுவில், புகார் தாரர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், 69 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் கட்டி விடுவதாக கூறி உள்ளார்.இந்நிலையில், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி, தொழில் முறை எதிரிகள், சமூக விரோதிகள், புகார்தாரர்களில் ஒரு சிலர், எங்களுக்கு பல வடிவங்களில் மிரட்டல் கொடுத்து, பணம் பறிக்க முயன்று வருகின்றனர். நாங்கள் ஏற்கனவே, சட்ட ரீதியாக எதிர்கொண்டு, தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளிலும், சம்பந்தப்பட்டோர் பணம் பறிக்க முயன்று வருகின்றனர்; எங்கள் பல்கலையை முடக்க சதி நடக்கிறது. நீங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், சமூக விரோத கும்பல்கள், எங்களிடம் பணம் பறிப்பதுடன், உயிருக்கும் ஆபத்தும் ஏற்படுத்தி விடுவர். எங்கள் கல்வி நிறுவனங்களில் பயிலும், 52 ஆயிரம் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கருதி, எங்களிடம் பணம் பறிக்க முயலும் கும்பல் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆடு மேய்த்த சிறுமி இன்று கல்வி அமைச்சர்!


‘வாழ்க்கை என்பது பெரும் போராட்டம்தான்; அதற்காகப் போராடாமல் விட்டுவிட முடியுமா?’ என்பதை இளம் வயதிலேயே உணரத் தொடங்கியவர் நஜா வெலு பெல்காசம் (Najat Vallaud-Balkacem). இன்று ‘பிரான்ஸின் புதிய முகம்’ எனக் கொண்டாடப்படும் இவர் வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் ஒரு குக்கிராமத்தில் வறுமைப் பிடியில் வாடிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கட்டிடத் தொழிலாளர்; உடன் பிறந்தவர்கள் ஆறு பேர். இளந்தளிர் நஜா நான்கு வயதில் ஆடு மேய்க்க விடப்பட்டார். வறுமை வாழ்க்கை விளிம்புக்குத் தள்ள ஆப்பிரிக்காவை விட்டுப் புலம்பெயர்ந்து பிரான்ஸில் குடியேறும் நிலைக்கு நஜாவின் குடும்பம் தள்ளப்பட்டது.

எதையும் சந்திப்பேன்!

பிறந்த பூமியை, உறவினரை, நண்பர்களை, பழக்கப்பட்ட கலாச்சாரத்தை திடீரென்று உதறிவிட்டு முற்றிலும் அந்நியமான சூழலில் வாழ்க்கையைத் தொடங்குவது மிகப் பெரிய சவால்! பள்ளிப் பாடங்களைப் படிப்பது முதல் பிரெஞ்சு மொழியைப் பேசுவது அதன் கலாச்சாரத்தைப் பழகிக்கொள்வதுவரை திகைப்பும் தடுமாற்றமும் ஆரம்ப நாட்களில் நஜாவுக்கு இருந்தது. ஆனால் தனக்கு நேர்ந்த அனுபவத்தைத் துணிச்சலாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டார் இளம் நஜா.

பிரான்ஸின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான பாரிஸ் அரசியல் ஆய்வுகள் கல்வி நிறுவனத்தில் (Institut detudes politiques de Paris) 2002-ல் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே வேளையில் பகுதி நேர வேலைக்குச் சென்று குடும்ப பாரத்தையும் தாங்கினார். சக மாணவர் போரிஸ் வெலுவோடு காதல் மலரவே கல்வியோடு காதலும் கைகூடியது. இருவரும் 2005-ல் தம்பதிகள் ஆனார்கள்.

புதிய திறப்பு

அரசியல் கல்வி அரசியலுக்கான கதவுகளைத் திறந்தது. வேலையில்லாத் திண்டாட்டம், அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்தல், நிறப் பாகுபாடு உள்ளிட்ட அரசியல் பிரச்சினைகள் அன்றைய காலகட்டத்தில் பிரான்ஸில் நிறைந்திருந்தன. இது போன்ற பிரச்சினைகளில் பிரெஞ்சு அரசு கொண்டிருந்த கொள்கைகள் மீது நஜாவுக்குக் கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. ஜனநாயகத்தை நிலைநாட்டவும், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அரசியலில் ஈடுபடுவது என முடிவெடுத்து சோஷலிஸ்ட் கட்சியில் 2002-ல் சேர்ந்தார். லியான் நகர மேயரான ஜெரார்து கோலம்பை ஆதரித்து முழு மூச்சாக அரசியலில் 2003-ல் இறங்கினார். ரோன் - ஆப்ஸ் பிராந்திய சபையின் கலாச்சாரக் கழகத் தலைவராக 2004-ல் நஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே சோஷலிஸ்ட் கட்சியின் ஆலோசகரானார்.

2008-ல் அவர் முதன்முதலில் களமிறங்கிய லியான் நகருக்கே கவுன்சிலரானார். 2012-ல் பெண்கள் அமைச்சகத்தின் அமைச்சரானார். 2013-ல் தன்பாலின உறவாளர்களின் திருமணத்தைச் சட்டரீதியாக பிரான்ஸ் அங்கீகரித்ததை “இது வரலாற்று முன்னேற்றம்” என துணிச்சலாகப் பாராட்டி ஆதரித்தார். சமூக வலைத்தளமான டிவிட்டரை வெறுப்பு அரசியலுக்குப் பிரயோகிக்கக் கூடாது என்கிற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். அதை அடுத்து, நகர்சார் விவகாரங்களுக்கான அமைச்சர், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், அரசாங்கச் செய்தி தொடர்பாளர் எனப் பல பதவிகள் வகித்தார்.

சாதனைப் பெண்

2014-ல் பிரான்ஸ் அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தபோது பல அமைச்சர்களின் பதவிகள் பறிபோயின. ஆனால், நஜாவின் திறமைக்காகவும் போராட்டக் குணத்துக்காகவும், அதுவரை அவர் வகித்துவந்த பொறுப்புகளில் சிறப்பாகப் பங்காற்றியதற்காகவும் 2014-ல் கல்வித் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புலம்பெயர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் 38 வயதில் பிரான்ஸின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைச்சராக ஆனது மிகப் பெரிய வரலாற்று நிகழ்வு. பிரான்ஸின் முதல் பெண் கல்வி அமைச்சர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் அவர். நிஜமாகவே நஜா பிரான்ஸுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே உற்சாகமூட்டும் புதிய முகம்தான்!

50 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தால் சில்வர் அண்டா ஃப்ரீ..!- இது புது கலாட்டா!



அழகுக்கு அழகு சேர்க்கும் தங்க நகைகளை அணிவதை விட நடுத்தரவர்க்கத்தினர் அடகு வைக்க அதிகம் பயன்படுத்துகின்றனர். சமீபகாலமாக தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் தங்க நகைகளுக்கு வழங்கப்படும் கடன் மதிப்பும் அதிகரித்துள்ளது. தங்க நகைகளை உரசிப்பார்த்து உடனடியாக வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. இதில் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தங்க நகைகளுக்கு கடன் வழங்க கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து தனியார் வங்கிகள் தங்க நகைகளுக்கு கடனை அள்ளி கொடுக்கின்றன. சில வங்கிகள் ஞாயிற்று கிழமைகளில் கூட தங்க நகைகளுக்கு கடன் வழங்குகின்றன.

இந்த போட்டி காரணமாக தனியார் நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் (பான்புரோக்கர்ஸ்) பிசினஸ் இல்லாமல் தள்ளாட ஆரம்பித்து விட்டன. காரணம் வங்கிகளை விட இங்கு கூடுதல் வட்டி. வங்கிகளில் ஆயிரத்தெட்டு நடைமுறைகளுக்குப் பிறகே தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்படும். ஆனால், நிதிநிறுவனங்கள், அடகு கடைகளில் நடைமுறைகள் பெயரளவுக்குத் தான் இருக்கும்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் போட்டி போட்டு தங்க நகைகளுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதால் அடகு கடைகளில் பிசினஸ் டல்லாகி விட்டதாக அதன் உரிமையாளர்கள் சொல்கிறார்கள். இதனால் அடகு கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை கவர புதிய யுக்தியை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளனர். வழக்கமாக ஜவுளி கடைகள் தான் பரிசு திட்டத்தை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பார்கள். அதே நடைமுறையை செய்யாறு அடகு கடைக்காரர்கள் கடைப்பிடித்துள்ளனர். இதற்காக ஸ்கூட்டி முதல் டிபன் பாக்ஸ் வரை பரிசுகளை அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்யாறு பகுதியில் பிட் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன. அதில் எங்களிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கு நகைகளை அடகு வைத்தால் பெரிய சில்வர் அண்டா இலவசமாக வழங்கப்படும். 30 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தால் சில்வர் பானை இலவசம். 10 ஆயிரத்துக்கு அடகு வைத்தால் எவர்சில்வர் பேஷன் இலவசம், 5 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தால் டிபன் பாக்ஸ் இலவசம் என்று அதிரடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்படும் நகைகளுக்கு ஒரு கூப்பன் வழங்கப்படும். 1.11.2016ல் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.மகேஷ்

ராயல் என்ஃபீல்டு பைக் விலை கிடுகிடு ஏற்றம்!


இந்தியாவில் தான் விற்பனை செய்யும் பைக்குகளின் விலையை, ஆகஸ்ட் மாத இறுதியில் கணிசமாக உயர்த்தியது. இந்த புதிய விலைகள், செப்டம்பர் மாதம் முதலாக அமலுக்கு வந்துள்ளன. ஆக ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை ஏற்றத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 1955 முதலாக இந்தியாவில் பைக்குகளை விற்பனை செய்யும் ராயல் என்ஃபீல்டு, அதன் டிஸைனில் பெரிய அளவில் மாற்றங்களைச் செய்யாதது மைனஸ்தான் என்றாலும், இந்த பைக்குகளுக்கான ரசிகர் வட்டம் காலப்போக்கில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனுடன் பைக்குகளுக்கான வெயிட்டிங் பீரியட்டும் அதிகரித்து வருவதை இங்கு சொல்லியாக வேண்டும். ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் புதிய சென்னை ஆன் ரோடு விலைப்பட்டியல் பின்வருமாறு;

350சிசி பைக் மாடல்கள்:

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350: 1,23,228
ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரா 350: 1,38,992
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350: 1,47,833
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350: 1,59,401

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்: 1,76,035

500சிசி பைக் மாடல்கள்:

ராயல் என்ஃபீல்டு புல்லட் 500: 1,76,837
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 500: 1,88,582
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 500 டெஸர்ட் ஸ்டார்ம்: 1,91,688
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 500 க்ரோம்: 2,00,371
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500: 2,02,007
ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி: 2,23,303

ஒவ்வொரு மாணவனுக்கும் கிடைத்த நல்ல நண்பர், ஆசிரியர்! #HappyTeachersDay


vikatan.com

நாம் அனைவரும் பள்ளி கல்லூரி படிப்பை கடந்து வந்தவர்கள். அங்கு நமக்கு கிடைத்த ஒரு அரிய புதையல் ஆசிரியர்கள். குழந்தைகள் தன் பள்ளி பருவத்திலும் சரி கல்லூரி பருவத்திலும் சரி பெற்றோரை விட ஆசிரியர்களிடமே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே ஒரு நல்ல புரிதல் இருக்க வேண்டும். நம் அனைவருடைய மனத்திலும் ஆசிரியர் என்றால் படம் நடத்தி குழந்தையை மாநிலத்தில் முதல் மாணவனாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பதிந்துவிட்டது. ஆனால், ஆசிரியர்களுக்கு அது தவிர பல விளக்கங்கள் உள்ளன. ஆனால் ஒரு ஆசிரியர் அப்படி இருந்தால் நம் மனம் அவரை ஏற்க மறுக்கிறது. ஏன் என்றால் மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி நாம் விரட்டப்படுகிறோம். ஆனால் இன்றளவிலும் பல ஆசிரியர்கள் தங்கள் கடமையை சரியாக செய்து வருகின்றனர். அப்படி ஆசிரியர் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? தெரிந்துகொல்லுங்கள்!

கற்பிப்பதில் ஆர்வம்!

இதுதான் முதல், கற்பிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் ஒருவர் அந்த ஆர்வத்தை தானகவே வெளிப்படுத்துவார். அப்படி ஆர்வம் உள்ளவரை நாம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அந்த ஆர்வம் இருக்கும் ஒருவர் தன் வகுப்பில் எளிதாக பாடத்தை புரியவைத்துவிடுவார். இந்த ஆர்வம் மிக்க ஆசிரியர் தன் மாணவர்களை மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி ஓடவிடாமல் அறிவு என்ற பாதைக்கு அழைத்துச்செல்வார்.

மாணவர்களிடம் அன்பு!

ஒவ்வொரு ஆசிரியரும் தன் மாணவர்களிடத்தில் அன்பு வைத்தவர்களாக இருக்க வேண்டும். அப்படி அன்பு செலுத்தும் ஆசிரியரிடத்தில் மாணவர்களும் அன்பு செலுத்தலாம். ஒவ்வொரு ஆசிரியரும் இந்த அன்பை உணர்ந்திருப்பீர்கள். இந்த விதமான ஆசிரியர் வகுப்பிற்குள் வந்தாலே மாணவர்கள் தனிப் புத்துணர்வு அடைவார்கள். அவர் எடுக்கும் பாடத்திலும் கவனம் செலுத்துவார்கள். ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் இதை அடுத்தவர்களுக்கு கொடுக்கலாம் என்றால் அது அன்பு தான்.


பாடத்துறையின் மீது காதல்!

தான் கற்பிக்கும் பாடத்துறையின் மீது காதல் கொண்ட ஒரு ஆசிரியர் அந்த பாடத்தை மாணவர்கள் விரும்பும் வகையில் கற்பிப்பார். தான் விரும்பும் பாடத்தை பிறர் விரும்பும் வகையில், ஆர்வத்தை தூண்டும் வகையில் மாணவர்களுக்கு அளிப்பது மிகவும் அருமையாக இருக்கும். மாணவர்களுக்கும் அந்த பாடத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்ப்படும்.


பள்ளியின் பொருள்!

ஒரு ஆசிரியர் பள்ளி எதற்கானது என்பது அறிந்திருக்க வேண்டும். பள்ளி என்பது மாணவன் வந்து குறிப்பிட்ட மணிநேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகளில் 100 மதிப்பெண்களுக்கான‌ பாடங்களை கற்றிருக்க வேண்டும் என்று கூறும் இடம் அல்ல. இது மாணவனின் வாழ்க்கையின் ஒரு பொன்னான காலம்தான் பள்ளி படிப்பு. இந்த பருவத்தில் அவன் வளர்ச்சி பெற்று, அவனுடைய அடையாளத்தை அறிந்து அவனுக்கு எது செய்தால் மகிழ்ச்சி அளிக்கும் என்பதை உணர்ந்து அதனை இலக்காக வைத்து ஓட வேண்டிய பருவம். ஆசிரியர்கள் அந்த மாணவனின் திரமையை கண்டறிய ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவன் திறமை வகுப்பறையில் வெளிப்படலாம் அல்லது விளையாட்டு மைதானத்தில் வெளிப்படலாம். இதை கண்டறிந்து அந்த மாணவனை ஊக்குவிக்கவேண்டியது ஆசிரியரின் கடமை.


விருப்பத்திற்கான மாற்றம்!

இது ஒரு சிறந்த ஆசிரியருக்கான ஒரு சிறந்த பன்பு. இந்த பன்பு உடைய ஆசிரியர் சிறப்பின் உச்சியில் உள்ளார் என்றே கூறலாம். ஆசிரியர் எப்போதும் தன் கற்ப்பித்தல் மூலமாக மாணவர்களை மற்றலாம் என்று எண்ணக்கூடாது. மாணவர்களுடன் கலந்துரையாடும்போது மாண‌வர்களுக்கு ஏற்ப தன்னை மற்றிக்கொள்ளவும் முன்வர வேண்டும். இது ஆசிரியர்களுக்கு ஒரு கடினமான காரியம் அல்ல. அப்படி தன்னை மற்றிக்கொள்ளும் மனம் ஆசிரியருக்கு வந்துவிட்டால் ஆசிரியர் மாணவரிடையே ஒரு சிறந்த உறவு உருவாகும்.


தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்!

எத்தனை வருடம் இந்த ஆசிரியர் பணியில் இருந்தாலும் நாம் கற்றது கை மண் அளவே. நாம் கற்க வேண்டியது ஏறாலம் என்பது ஒவ்வொரு ஆசிரியரும் அறிந்த ஒன்று. நமக்கு தெரிந்ததுடன் நிருத்தாமல் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்றலுக்கு முடிவில்லை. ஆசிரியர்கள் தினம் தினம் புதுப்புது சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். மேலும் அந்த சவால்களுக்கு திறமையுடன் உழைத்து நல்ல தீர்வுகளையும் கண்டறிய வேண்டும்

இது மட்டும் அல்ல.இன்னும் பல உள்ளன. கற்றல் என்பது ஒரு குழு முயற்சி. அங்கு ஆசிரியர் மாணவர் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. அனைவருமே கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். மாணவர்களுடன் உரையாடும் போது ஆசிரியர் ஒரு சக மாணவனாக அந்த மாணவனுடன் பேசிப் பழகவேண்டும். பொறுப்பு, கருணை, ஒத்துழைப்பு, படைப்பு,அர்ப்பணிப்பு, உறுதி, முன்மாதிரி, ஈடுபாடு, உத்வேகம், பறந்தமனம் போன்றவையும் ஆசிரியரின் உயரிய பண்புகளே.

மாபெரும் எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு மாபெரும் சக்தி ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்களை பெருமைப்படுத்த தான் இந்த ஆசிரியர் தின விழா. அத்தகைய பெருமை மிக்க ஆசிரியர்களுக்கு என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

முரளி.சு
மாணாவப் பத்திரிகையாளர்

மௌனராகம் 30: நினைவில் நகரும் கம்பளிப்பூச்சி!


கடந்த சில நாட்களாகவே ‘மெளன ராகம்’ திரைப்படத்தின் பின்னணி இசையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்ன காரணமெனத் தெரியவில்லை. பிறகு ஒரு நண்பர் சொல்லித் தெரிந்தது. இது மெளன ராகத்தின் முப்பதாவது ஆண்டு! ஆம், 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியானது அத்திரைப்படம்.

ஏதேனும் ஒரு திரைப்படம் நம்மைக் கவர்கிறது என்றால், அதற்கு முக்கியக் காரணம் நாம் அந்தப் படத்துடன் நம்மைத் தொடர்புபடுத்திக்கொள்வதுதான். என் வாழ்க்கையில் நான் அப்படித் தொடர்புபடுத்திக்கொண்ட சில திரைப்படங்களில் முதன்மையானது, முக்கியமானது, மௌன ராகம்.

இந்தப் படம் வெளியான அடுத்த வருடம் அதே ஆகஸ்ட் மாதத்தில் நான் பிறந்தேன். என் பால்யத்தில், கார்த்திக் போடும் சண்டைக் காட்சிகளுக்காகத்தான் இந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தேன். படத்தின் ஆகப் பெரும் பலம் கார்த்திக். “தான் நடித்தேன் என்று சொல்லிக்கொள்வதற்கு கார்த்திக்குக்கு இந்த ஒரு படம் போதும். ‘ஸீல் ஆஃப் யூத்’ என்பதை இந்தப் படத்தில் கார்த்திக் முழுமையாக வெளிப்படுத்தியிருப்பார். அதனை என்ஹான்ஸ் செய்ததில் இளையராஜாவின் இசைக்கும், பி.சி.ஸ்ரீராமின் கேமராவுக்கும் நிறைய பங்குண்டு” என்று என் நண்பர் ஒருவர் சொல்கிறார். இன்று வரையிலும் கார்த்திக் வரும் அந்தப் பகுதியைப் போல வேறு எந்தப் படத்திலும், எந்த இயக்குநரும் செய்யவில்லை. அதை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும் கார்த்திக்கின் துள்ளல் வசனம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.

கார்த்திக் அறிமுகமாகும் காட்சி இந்தப் படத்தின் சிறந்த காட்சிகளில் ஒன்று. அவர் தன் நண்பர்களுடன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் உள்ளே வரும்போது, கேமரா நிறைய ‘ஷேக்’ ஆகியிருக்கும். அந்தக் காட்சியைப் பார்த்தால், கார்த்திக் நம் எதிரில் வருவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

“கீழே ஒரு போர்வையை விரித்து அதில் பி.சி. ஸ்ரீராம் கேமராவுடன் படுத்துக்கொண்டார். நாங்கள் பின்னாலிருந்து அந்தப் போர்வையை இழுத்துக்கொண்டு செல்லச் செல்ல, கார்த்திக் அறிமுகமாகும் காட்சியை அவர் படமாக்கினார்” என்று திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் எழுதிய ‘கான்வர்சேஷன்ஸ் வித் மணி ரத்னம்’ புத்தகத்தில் தெரிவிக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் மணி ரத்னம்.

“திவ்யா என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து முதலில் ஒரு சிறுகதை எழுதினேன். அதுதான் பிறகு திரைப்படமாக மாறியது” என்று மணி அதே புத்தகத்தில் சொல்கிறார்.

அப்படியான ஒரு பெண்ணை என்னுடைய இருபதுகளில் கடந்தபோது தான், இந்தப் படம் சொல்லவரும் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்துகொண்டு பார்த்தேன்.

இது போன்ற சில தனிப்பட்ட காரணங்கள் பலருக்கும் இருக்கலாம். அவை எல்லாவற்றையும் தாண்டி அந்தப் படம் நம்மை ஈர்த்ததற்கு, இன்றும் ஈர்ப்பதற்கு முக்கிய காரணம் அதன் படமாக்கம்.

ஏழை நாயகன், பணக்கார நாயகி. நாயகியின் திமிரை அடக்கி, தன்னிடம் காதலில் விழவைக்கும் நாயகன். நாயகியின் அப்பாவின் வில்லத்தனங் களை முறியடித்து, சில பாடல் காட்சிகள், ‘அபுஹாய்… அபுஹாய்’ எனப் பறந்து பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகள், கொஞ்சம் சென்டிமென்ட் ஆகியவற்றுக்குப் பிறகு ‘சுபம்’ போடுகிற ரீதியிலான படங்கள் வந்துகொண்டிருந்த வேளையில், எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நகரும் திரைக்கதையுடன் வந்த இத்திரைப்படம், தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்!

கதை மிகவும் எளிமையானது. தனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவருடன் நாயகிக்குத் திருமணம் நடக்கிறது. நாயகிக்கு ஒரு ‘ஃப்ளாஷ்பேக்’ காதல் உண்டு. அதைத் தனக்குள்ளேயே மறைத்து வைத்துக்கொண்டு, புதிய வாழ்க்கைக்குத் தயாராக வேண்டிய சவால் நாயகிக்கு. அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் கதையின் அடிநாதம். அன்றைய காலத்தில் காதல் படங்களுக்கு கமல்ஹாசனிடம் ‘கால்ஷீட்’ கிடைக்கவில்லை என்றால், தயாரிப்பாளர்கள் அடுத்துத் தேர்வு செய்யும் நபர் மோகன். நாயகியை மையமாகக் கொண்ட இதுபோன்ற படத்தில் மோகன் நடித்தது உண்மையிலேயே ஆச்சர்யம்!

“சின்ன வயதிலிருந்து சுதந்திரமாக வளர்ந்த ஒரு பெண், பெற்றோர் பார்க்கிற ஆணை மணந்துகொள்வாள். முன்பின் தெரியாத ஒரு ஆணுடன் முதலிரவைக் கழிக்க நேரிடும். என் சிறுகதை அந்த முதலிரவைப் பற்றியதுதான். பின்னர் அந்தக் கதையைத் திரைப்படமாக எடுத்தபோது ரேவதி சொல்லும் 'நீங்க தொட்டாலே கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு' என்கிற வசனமும் அந்த முதலிரவைப் பற்றித்தான்” என்று பரத்வாஜ் ரங்கனுடனான உரையாடலில் தெரிவிக்கிறார் மணி.

திருமணமான முதல் நாளில் விவாகரத்தைப் பரிசாகக் கேட்கும் பெண், எந்த ஒரு கணவனுக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியையே தருவார். நாயகியின் முன்பு கம்பளிப்பூச்சியாகக் குறுகிப்போய் நாயகன் கடக்கின்ற நாட்கள், வெளிப்படுத்த முடியாத அன்பு குறித்த கவித்துவமான சுயகழிவிரக்கம்!

பின்னர் ஒரு காட்சியில் “என்னைத் தொட்டா உனக்குத்தான் கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கும்” என்று ரேவதியிடம் அவர் கொடுக்கும் பதிலடியில் அத்தனை காலம் தான் பொதித்து வைத்திருந்த ஆற்றாமையை, ஒரே வரியில் மோகன் கடந்துவிடும்போது நமக்குள்ளும் ஒரு பனிப்பாறை உடைக்கப்பட்டுவிடுகிறது.

இந்தப் படம் வெளியானதற்குப் பிறகு ‘மிஸ்டர் சந்திரமெளலி’ எனும் வசனம் எவ்வளவு பிரபலமானதோ, அதே அளவுக்கு அந்த ‘கம்பளிப்பூச்சி’யும் பிரபலமாகிவிட்டது. ‘மெளன ராகம்’ திரைப்படத்தை முதன்முறை பார்ப்பவர்களுக்கு கார்த்திக்கையும் அவருடைய இளமைத் துள்ளலையும் பிடிக்கும். அதே படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கிறவர்களுக்குக் கம்பளிப்பூச்சிதான் அதிகம் பிடிக்கும். ஏனென்றால், நம் எல்லோருக்குள்ளும் வெளிப்படுத்த முடியாத அன்பு, சுயகழிவிரக்கமாக நகர்ந்துகொண்டிருக்கிறது ஒரு கம்பளிப்பூச்சியைப் போல!

ரிலையன்ஸ் ஜியோ தொழில் ரகசியம் என்ன?


கடந்த வாரத்தின் ஹாட் டாபிக் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் தான். பங்குச்சந்தை, தொலை தொடர்புத் துறை என அனைத்து ஏரியாக்களிலும் ஜியோமயம்தான். இனி குரல் அழைப்புகளுக்கு கட்டணம் இல்லை, ஒரு ஜிபி டேட்டா 50 ரூபாய் மட்டுமே, மாணவர்களுக்கு 25 சதவீத சலுகை, இந்த வருடம் முழுவதும் இலவசம், அடுத்த வருடம் வரை 15,000 ரூபாய்க்கு இலவசமாக செயலிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் என வாடிக்கையாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் பல விஷயங்கள் இருந்தாலும், ஒரு புறம் எப்படி ரிலையன்ஸ் ஜியோ லாபம் ஈட்டும் என்ற சந்தேகமும் இருந்தன.

முகேஷ் அம்பானி இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட சமயத்தில் பார்தி ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன. அதே சமயத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கும் சரிந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை இந்த பங்கு சரிந்ததற்கும் முதலீட்டாளர்களிடையே நிலவிய எப்போது லாபம் ஈட்டும் என்னும் சந்தேகம்தான். காரணம் கிட்டத்தட்ட ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

குறுகிய காலத்தில் லாபம் ஈட்டுவது கடினம்தான். ஆனால் நீண்ட காலத்தில் கணிசமாக லாபம் சம்பாதிக்க வாய்ப்பு இருப்பதாக சில வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு வாடிக்கையாளர் மூலம் மாதம் 150 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ கட்டணங்களை கூர்த்து கவனித்தால் இதில் உள்ள உத்தி தெரியும். குறைந்தபட்ச கட்டணம் 149 ரூபாய். இதில் 0.3 ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும்.

குரல் வழி கட்டணம் இலவசமாக இருந்தால் கூட 0.3 ஜிபி மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் பெரும்பாலானவர் கள் இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். இதற்கு அடுத்த திட்டத் துக்கு செல்ல வேண்டும் என்றால் 499 ரூபாய்க்குத்தான் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். அந்த திட்டத்தில் கூட 4ஜிபி மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு ஜிபி 50 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றால் 4ஜிபி எப்படி 499 ரூபாய்?

மேலும் அதிக டேட்டா வேண்டும் என்றால் ரூ.1,000-க்கு மட்டுமே உங்களால் எடுக்க முடியும். இடையில் எந்த விலையும் கிடையாது. 1,000 ரூபாய்க்கு கூட 10 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இதுபோல விலை நிர்ணயம் செய்வதில் நல்ல உத்தியை கடைபிடித்திருக்கிறது.

இன்னொரு விஷயம் இந்த அனைத்து திட்டங்களுமே 28 நாட்களுக்கானது. ஒரு வருடத்துக்கு 365 நாட்கள் என்னும் போது 13 முறை கட்டணம் செலுத்தியாக வேண்டும்.

எப்படி இலவசம்?

எப்படி குரல் அழைப்புகள் இலவச மாகக் கொடுக்க முடியும் என்பது அடுத்த கேள்வி? அனைத்து அழைப்புகளும் இணையம் வழியே செல்கிறது. உதார ணத்துக்கு வாட்ஸ்அப்-பில் நாம் எப் படி பேசுகிறோமோ அல்லது தகவல் அனுப்புகிறோமோ அதேபோல இங்கேயும். அதனால் குரல் அழைப்புகளை இலவசமாக கொடுக்கிறது.

ஐடிஎப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தகவல்படி 8 கோடி வாடிக்கை யாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ வசம் இருப்பார்கள். ஒரு மாதத்துக்கு ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் கட்டணம் 180 ரூபாய் என்ற அளவில் இருக்கும். அடுத்த மூன்று வருடங்களில் பிரேக் ஈவன் ஆகும் என தெரிவித்திருக்கிறது. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் 2019-20-ம் நிதி ஆண்டில் பிரேக் ஈவன் ஆகும் என கணித்திருக்கிறது.

எடில்வைஸ் நிறுவனம் கூறும் போது 500 ரூபாய்க்கு கீழ் இரு பேக்கேஜ் மட்டுமே இருப்பதால் அதிக வாடிக்கையாளர்கள் ரிலையன் ஸுக்கு செல்லும் வாய்ப்பு குறைவு. தற்போதைய தொலைதொடர்பு நிறு வனங்கள் பல திட்டங்களை வைத் துள்ளன. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள் என்றும் கூறியிருக்கிறது.

கோடக் செக்யூரிட்டீஸ் கூறும் போது ஆரம்பத்தில் இலவசங்களால் வாடிக்கையாளர்கள் வருவார்கள். தற்போது இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்கு சிரமப்படுவது போன்ற சூழ்நிலை இருக்கும். வாடிக்கை யாளர்கள் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறது. நான்கு வருடங்களில் லாபம் சம்பாதித்தாலும் மொத்த முதலீட்டை மீண்டும் எடுப்பதற்கு 7-10 வருடங்கள் கூட ஆகலாம் என்ற கருத்தும் சந்தையில் இருக்கிறது.

ரிலையன்ஸ் மீன் பிடிக்குமா என்பது தெரியவில்லை ஆனால் மொத்த குட்டையையும் குழப்பி இருக்கிறது. டாடா டொகோமோ ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்னும் திட்டத்தை அறிவித்த போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தடுமாறின. அதன் பிறகு இப்போது…!

NEWS TODAY 23.12.2025