Friday, September 9, 2016


வங்கிப் பணியில் ரோபாடிக்ஸ் சாஃப்ட்வேர்: ஐசிஐசிஐ-யில் அறிமுகம்


இந்தியாவில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தனது வங்கிச் செயல்பாட்டில் ரோபாடிக்ஸ் உபயோகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் இத்தகைய சாஃப்ட்வேர் ரோபாடிக்ஸ் தொழில் நுட்பத்தைப் பின்பற்றியுள்ள மிகச் சில வங்கிகளுள் ஒன்றாக ஐசிஐசிஐ வங்கி திகழ்கிறது.

10 லட்சத்திற்கும் மேலான வங்கி பரிவர்த்தனைகளை 200 ரோபாடிக்ஸ் மேற்கொள்வதாக வங்கி தெரிவித்துள்ளது. வங்கி யின் மொத்த செயல்பாடுகளில் 20 சதவீதம் ரோபாடிக்ஸ் மூலம் நிறைவேற்றப்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது.

இத்தகைய ரோபாடிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து வதால் வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் நேரம் 60% வரை சேமிக்கப்படுவதாக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கொச்சார் தெரிவித்துள்ளார்.

சில்லரை வணிகம், அந்நியச் செலாவணி, கருவூலம் மற்றும் மனிதவளம் உள்ளிட்ட துறைகளில் இந்த ரோபாடிக்ஸ் சேவை பயன் படுத்தப்படுகிறது. இந்த நிதி யாண்டு இறுதியில் ரோபாடிக்ஸ் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த வங்கி திட்டமிட்டுள்ளதாக சாந்தா கொச்சார் தெரிவித்துள்ளார்.

Thursday, September 8, 2016

குடும்ப அமைதியைக் குலைத்த ஸ்மார்ட் போன்.. கூலிப்படை வைத்து மனைவியைத் தீர்த்துக் கட்டிய கணவர்
ஜான்சி, உ.பி.: 5 காசுக்காக கொலை நடந்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் உ.பி மாநிலம் ஜான்சியில் ஒரு ஸ்மார்ட் போன் லாக் "கோட்" எண்ணை மறைத்ததற்காக தனது மனைவியை ஆளை வைத்து போட்டுத் தள்ளிவிட்டார் ஒரு கணவர். பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணின் பெயர் பூனம் வர்மா. ஆகஸ்ட் 29ம் தேதி இந்தக் கொலை நடந்துள்ளது. இவரைக் கொலை செய்தது கணவர் வினீத் குமார் திவாகர் ஏவிய அவரது நண்பர்கள். நடந்தது இதுதான்...! திவாகருக்கு தனது மனைவியின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் வந்துள்ளது. அவர் அடிக்கடி செல்போனில் பேசி வருவதும், செல்போனை கையிலேயே வைத்திருப்பதும் அவரை குழப்பியது. இதையடுத்து சம்பவத்தன்று மனைவியின் ஸ்மார்ட் போனை எடுத்து அதில் உள்ளதைப் பார்க்க முயன்றார் திவாகர். ஆனால் போனை லாக் செய்திருந்தார் பூனம். இதையடுத்து அன்லாக் செய்வதற்காக லாக் கோட் எண்ணைக் கேட்டுள்ளார் திவாகர். ஆனால் அது என் போன், எனது பெர்சனல், லாக் கோடைச் சொல்ல முடியாது என்று கூறி மறுத்துள்ளார் பூனம். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்போதைக்கு அமைதியாகி விட்டார் திவாகர். அடுத்த நாள் அவர் கான்பூர் போய் விட்டார். அங்கிருந்து தனது மனைவிக்குப் போன் செய்து எனது நண்பர்கள் இருவர் வருவர். அவர்களிடம் எனது பெர்சனல் கம்ப்யூட்டரை கொடுத்து அனுப்பு என்று கூறியுள்ளார். அதன்படி அன்று இரவு திவாகரின் நண்பர்கள் லட்சுமண் மற்றும் கமல் ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் வீட்டுக்குள் புகுந்து பூனமை அவரது பெட்ரூமில் வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர் நகை, பணத்தை எடுத்துக் கொண்டும், அந்த அறையை சூறையாடி விட்டும், திருட்டும், கொலையும் நடந்தது போல செட்டப் செய்து விட்டு போய் விட்டனர். இந்தக் கொலைக்காக அவர்கள் இருவருக்கும் பணம் கொடுத்துள்ளார் திவாகர். அடுத்த நாள் காலை கண் விழித்தெழுந்த பூனத்தின் 4 வயதுக் குழந்தை தனது தாயார் இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதுள்ளது. குழந்தையின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தோர் வந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வினீத் குமார் திவாகரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சிக்கினார். விசாரணையின்போது அவர் கூறுகையில் ஸ்மார்ட் போன்தான் எல்லாவற்றுக்கும் காரணம். அது இல்லாதவரை எனது மனைவி நன்றாகத்தான் இருந்தார். அது வந்த பிறகு மாறி விட்டார். தனது போனில் ரகசியங்களை அவர் பாதுகாத்து வந்தார். அதை அறிய முயன்றபோதுதான் இந்த விபரீதமே நடந்தது என்றார் திவாகர்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/husband-kills-wife-as-she-hides-the-smartphone-lock-code-262231.html

மாடிப்படியும் பாடம் சொல்லும்

குள.சண்முகசுந்தரம்

எப்படா மணியடிக்கும் புத்தகப் பையைத் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு ஓடலாம் என்றுதான் மாணவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஆசிரியர் பா.சத்தியவேலிடம் படிக்கும் மாணவர்களிடம், “நேரம் ஆகிருச்சு கிளம்புங்கப்பா” என்று சொல்லித்தான் வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது.

மைதானத்தில் மாவு கணக்கு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள பொன்பத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சத்தியவேல். இவர் தனது மாணவர்களுக்கு மூன்று விதமாகப் பாடம் கற்பிக்கிறார்.

முதலாவது - விளையாட்டு முறை கணிதம். பெரும்பாலும் இந்த வகுப்பு மைதானத்தில்தான் நடைபெறும். உதாரணமாக கிராஃப் போட வேண்டுமென்றால் கோல மாவைக் கொண்டு மாணவர்களே ‘ஒய்’ அச்சு, ‘எக்ஸ்’ அச்சு போடுவார்கள். அதன் பிறகு ஒவ்வொரு புள்ளிகளும் குறிக்கப்பட்டு மாணவர்கள் புள்ளிக்கு ஒருவராக நிற்பார்கள். அவர்கள் கையில் கயிறு, நூலைக் கொடுத்து பிடிக்கச் சொல்லி அதன்மூலம் அட்டகாசமாக கிராஃப்பை வடிவமைத்துக் காட்டுவார் சத்தியவேல்.

ஆடைகளை வைத்து ஆஃபர் கணக்கு

இதேபோல், எண் கோடு வரைதல் உள்ளிட்ட பாடங்களையும் எளிமையாக படிக்க வைக்கிறார். அடுத்தது - செயல்வழிக் கல்வி. மாணவர்கள் வீட்டிலிருந்து ஏதாவது புத்தாடைகளை எடுத்துவந்து வரிசையாக வைப்பார்கள். அதன் ஒவ்வொன்றின் விலையும் தனித்தனியாக எழுதி வைக்கப்படும். அதற்குக் கீழே 10 சதவீதம் 5 சதவீதம் தள்ளுபடி என எழுதப்பட்டிருக்கும். 5 சதவீதம் தள்ளுபடி என்றால் அது எவ்வளவு ரூபாய்? அதுபோக அந்தத் துணியின் விலை எவ்வளவு? இதுபோன்ற விஷயங்களை மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

வங்கிகளை வைத்து வட்டிக் கணக்கு

சிலநேரம், மாணவர்கள் வீட்டிலிருந்து எடுத்து வரும் காய் - கனிகளுக்கு ஒரு விலை நிர்ணயம் செய்து, ஒருவர் இன்னொருவருக்கு அதை விற்பனை செய்ய வைத்து கொள்முதல் விலை, விற்பனை விலை, லாபம், நட்டம் இவை அனைத்தையும் மிகச் சரியாக கணக்கிட வைக்கிறார். இதேபோல் மாணவர்களைப் பிரபல வங்கிகளின் மேலாளர்கள்போல் உட்கார வைத்து அவர்களிடம் வீட்டுக் கடன் உள்ளிட்டவற்றை மற்ற மாணவர்களைக் கேட்க வைக்கிறார். மேலாளர்கள் தங்கள் வங்கியின் வீட்டுக் கடனுக்கான வட்டிவிகிதம் கால நிர்ணயம் இதையெல்லாம் சொல்வார்கள். அதை வைத்து வட்டி கணக்கிட்டு எந்த வங்கியின் வட்டி விகிதம் சாதகமானது என்பதை மற்ற மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

மூன்றாவது - கணினி வழிக் கணிதம். கணினியில் கேம்ஸ் விளையாட்டை விரும்பாத பிள்ளைகள் அரிது. அந்த கேம்ஸ்களோடு எஜுகேஷன் சாஃப்ட்வேர்களைச் சேர்த்து கணக்கு, ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களை மாணவர்களை தன் விருப்பத்தில் படிக்க வைக்கிறார்.

மாடிப்படியும் பாடம் சொல்லும்

“எனது வகுப்பில் மாணவர்கள் படிப்பு பயமில்லாமல் சுதந்திரமாக இருக்கிறார்கள். அதனால்தான் வகுப்பு முடிந்தாலும் அவர்களுக்கு வீட்டுக்குப் போக மனம் வருவதில்லை. வாய்ப்பாடு, ஆங்கிலப் பாடல்கள், வெண்பாக்கள், உள்ளிட்டவைகளை மாணவர்களைக் கொண்டே பாடவைத்து வீடியோக்களாக்கி வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட பாடம் நடத்தும்போதும் உணவு இடைவேளையின்போதும் அந்த வீடியோ காட்சிகள் பவர் பாயிண்ட் மூலம் ஒளிபரப்பப்படும்.



6,7,8 வகுப்புகள் மாடியில் உள்ளன. இவர்களுக்காக மாடி படிகளில் தினமும் சில சொற்களோ எண்களோ எழுதி வைக்கப்படும் 6,7,8 வகுப்பு மாணவர்கள் தினமும் கட்டாயம் 8 முறை மாடிப்படியில் ஏறி இறங்க வேண்டும். அப்படி இறங்கும்போது படிகளில் இருக்கும் வாசகங்களை படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இறுதி வகுப்பில் அந்தச் சொற்களை சம்பந்தப்படுத்தி நடத்தப்படும் வினாடி வினாவுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதால் மாணவர்கள் மாடிப்படி பாடத்தைக் கட்டாயம் உள்வாங்கி வைத்திருப்பார்கள். இப்படித்தான் விளையாட்டுப் போக்காய் போய்க்கொண்டிருக்கிறது எங்களது பயிற்று முறை” என்று தன்னுடைய சுவாரசியமான கற்பிக்கும் முறையை மிக எளிமையாகச் சொல்கிறார் சத்தியவேல்.

தொடர்புக்கு: 86086 75422

பார்வை: கொல்வதுதான் காதலா?

பிருந்தா சீனிவாசன்

சென்னை, கரூர், தூத்துக்குடி, திருச்சி, புதுச்சேரி… ஊர்தோறும் பெண்கள் தொடர்ந்து சிதைக்கப்படுகிறார்கள். கல்லூரி, தேவாலயம், பேருந்து நிலையம், மக்கள் நிறைந்த சாலை எதுவும் கணக்கில்லை. ஒரு பெண் - கட்டையால் அடிக்கப்பட்டோ, கத்தியால் கூறுபோடப்பட்டோ, கைகள் முறிக்கப்பட்டோ குற்றுயிரும் குலையுயிருமாகவோ சிதைக்கப்படலாம். ஒருவனுடைய தொலைபேசி அழைப்பைப் புறக்கணித்ததும் காதலை நிராகரித்ததும் அதற்குக் காரணங்களாகச் சொல்லப்படலாம். “இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். பாதியில கழட்டி விட்டுட்டுப் போயிடுவாங்க” என்று ஊர்கூடி இந்தக் கொடூரங்களை நியாயப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கவும் முயற்சிக்கலாம். ‘நடவடிக்கை எடுக்கிறோம்’என்று காவல்துறை சொல்ல, ஆர்ப்பாட்டக்காரர்கள் கொதிப்பு அடங்கி, பெண்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்று காத்திருக்கலாம். விவாதங்கள் அனைத்தும் தணிந்துபோகும் நாளில் ஒரு பெண்ணோ, பல பெண்களோ காதலின் பெயரால் வெட்டிச் சாய்க்கப்பட்டு, மீண்டும் தலைப்புச் செய்தியாகலாம். இப்படிப்பட்ட அவலச் சூழலில்தான் ஒரு பெண் இங்கே பிழைத்திருக்க வேண்டியிருக்கிறது.

எதையுமே சாதிக்காத கல்வி

சமீப காலமாக நம்மைச் சுற்றி நடக்கும் பெண்கள் மீதான இதுபோன்ற வன்முறைகளில் பெரும்பாலானவை காதலை மையமாகக் கொண்டு நடப்பதாகச் சொல்லப்படுகின்றன. உண்மைக் காதலுக்கு உயிரைக் கொல்லும் வன்சக்தி இல்லை. பிரிந்த பிறகும் தொடரும் பிரியம்தானே காதல். ஆனால், காதலைப் பற்றிய எந்தப் புரிதலும் அற்று பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இந்த வன்முறைகளுக்கு என்ன காரணம்? ஒரு பெண் தன்னை நிராகரித்ததுமே கத்தியால் குத்த வேண்டும் என்ற வெறி ஏன் ஓர் ஆணுக்கு ஏற்படுகிறது? இதுபோன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுகிறவர்களில் பெரும்பாலோர் படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? மனதைப் பக்குவப்படுத்தி, சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தாத கல்வி முறை, புதிதாக வேறென்ன திறமைகளை மாணவர்களுக்குக் கற்றுத்தரப் போகிறது? மதிப்பெண்ணைப் பெற்றுத்தருவதைத் தாண்டி, வாழ்வுக்கான மாண்புகளையும் பயிற்றுவிப்பதுதானே சிறந்த கல்வி? புதிய கல்விக் கொள்கையில் அது இல்லை, இது இருக்கிறது என்று வாதிடுகிறவர்கள், மாணவர்களை மாண்புள்ளவர்களாக மாற்றும் வல்லமை அந்தக் கல்விக் கொள்கைக்கு இருக்கிறதா என்பதையும் தங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை மேற்கண்ட நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

சட்டம் சாதிக்குமா?

பெண்கள் மீதான வன்முறைகளைக் கட்டுப்படுத்த சட்டங்களை மேம்படுத்த வேண்டும், தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் என்று சொல்கிறவர்களும் உண்டு. அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்ற பயம் தவறுகளை முற்றிலும் தடுக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டு தன்னையும் மாய்த்துக்கொள்ளும் எண்ணத்துடன் கத்தி எடுக்கிறவர்களைச் சட்டத்தால் என்ன செய்ய முடியும்?

பெற்றோர்கள், ஆசிரியர்களா?

இன்றைய இளைஞர்கள் சரியான புரிதலுடன் இல்லை, அதனால்தான் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகிறது என்ற பொதுவான கருத்தும் நிலவுகிறது. இளைஞர்களின் பெற்றோருக்குத் தங்கள் மகன்கள் குறித்தோ, அவர்களின் வளர்ப்பு குறித்தோ சரியான புரிதல் இருக்கிறதா? பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளைப் போலவே வளர்க்கிறார்கள். எதிலும் ஜெயித்துவிட வேண்டும், அவர்களுக்குக் கிடைக்காதது எதுவுமே இருக்கக் கூடாது என்ற நோக்கிலேயே பிள்ளைகளை வளர்க்கிறார்கள். கடன் வாங்கியாவது பிள்ளைகளின் அதீத ஆவலைப் பூர்த்திசெய்துவிடுகிறார்கள். எந்தக் கட்டத்திலும் தோல்விகளை, ஏமாற்றங்களை, நிராகரிப்புகளை ஏற்றுக்கொள்ளத் தங்கள் பிள்ளைகளை அவர்கள் பழக்குவதே இல்லை. அவசியம் எது, அநாவசியம் எது என்ற வேறுபாடே தெரியாமல் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர், பின்னாளில் தங்கள் பிள்ளை தறுதலையாக மாறுவதை நினைத்துப் புலம்பி என்ன பயன்?

பாலினப் பாகுபாடு

பெண்கள் மீதான வன்முறையின் அடிப்படைக் காரணி, சிறிதளவுகூட மாறாத ஆணாதிக்க மனோபாவம்தான். பெண் என்றால் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து, கிடைக்காததை நினைத்து உள்ளுக்குள் புழுங்கி தியாகியாக வாழ வேண்டும் என்றே காலங்காலமாக நிர்பந்திக்கப்படுகிறது. ஆனால், ஆணோ யாருக்கும் அடங்காத காளையாகத் திரியலாம். உடன்பிறந்த சகோதரிகளை அடக்கிவைக்கும் சிறுவனே, இளைஞனாகிறபோது காதலை மறுக்கும் பெண்ணை வக்கிரத்தோடு பழிவாங்குகிறான். பிறப்பு முதலே அவனுக்குக் குடும்பமும் சமூகமும் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது, அவன் ஆண் என்பதை மட்டுமல்லாமல், ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதையும்தான். ஆண் எதற்கும் அடங்கக் கூடாது; அழுவதும் தோற்பதும் பெண்களின் குணம் என்றே அவனுக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் சாதாரணப் புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் வெறியாட்டம் போடுகிறது ஆண் என்கிற அகந்தை.

இந்த வகையில் பெருகிவரும் தொழில்நுட்பமும், சமூக வலைத்தளங்களும் இளைஞர்கள் மனதில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்துகின்றன. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கிற வக்கிரம்கூட உடனுக்குடன் கையடக்கக் கருவியில் காணக் கிடைத்துவிடுகிறது. அடுத்தவர் அந்தரங்கம், வன்மம், பழிவாங்கல் என்று பாகுபாடே இல்லாமல் அனைத்தும், அடக்கி வைக்கப்பட்டிருக்கும் வக்கிர எண்ணங்களுக்கு தூபம் போடுகின்றன.

நுணுக்கமாகச் செயல்படும் ஆணாதிக்கம்

இந்தச் சமூகத்தைப் பொறுத்தவரை பெண் என்பவள் ஓர் உயிரோ, உணர்வுகள் நிறைந்த சக மனுஷியோ இல்லை. அவளுக்கென்று எந்தத் தேர்வும் இருக்கக் கூடாது என்பதை மிக நுட்பமாகக் கட்டமைத்து வைத்திருக்கிறது இந்த ஆண் மைய சமூகம். பெண்ணின் நடத்தையை ஒழுக்கத்தோடும், பண்பாடு கலாசாரத்துடனும் பிணைத்துவிட்டதன் மூலமாகத் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க நினைக்கிறது ஆணாதிக்கச் சமூகம். ஒரு பெண், தனித்து முடிவெடுத்துத் தன் முடிவுகளைச் செயல்படுத்துகிறபோது நிராகரிக்கப்பட்ட ஆண் மனதால் அதைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. ‘தன்னை ஏமாற்றிவிட்டாள், தன்னைச் சுரண்டிவிட்டாள்’ என்று ஓர் ஆண் சொல்வதன் மூலமாகப் பெண்ணின் தேர்வு செய்யும் உரிமை இங்கே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

எந்தத் தகுதியும் இல்லாமல் பொறுப்பற்றுத் திரியும் ஆண்களைக் கதாநாயகர்களாகச் சித்தரிக்கும் திரைப்படங்களும் ஓர் ஆணின் ஆளுமையை வடிவமைப்பதைத் தீர்மானிக்கின்றன. பாடல் வரிகள், வசனங்கள் என்று அனைத்திலும் பெண்களைக் கொச்சைப்படுத்துவதன் மூலமாகப் பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக மட்டுமே அவை பிரகடனப்படுத்துகின்றன.

ஆண் பெண் இரு பாலினரும் சீரழிந்துபோவதற்கான அத்தனைச் சாத்தியங்களையும் உள்ளடக்கிக் காத்திருக்கிறது இந்தச் சமூகம். அவர்களை அதிலிருந்து மீட்டு, நல்வழிக்குச் செல்ல வழிகாட்டுவதுதான் இப்போது நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவால். முதலில் வீட்டிலிருந்து தொடங்குவோம் மாற்றத்தை. நம் வீட்டு ஆண் குழந்தைகளுக்குப் பெண்களிடம் சமத்துவத்தைப் பின்பற்றக் கற்றுக்கொடுப்போம்; தோல்வியை சகஜமாக ஏற்றுக்கொள்ளச் சொல்லிக்கொடுப்போம். இதுபோன்ற அடிப்படையான விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டால் அதன் ஒளியில் சமூக மாற்றமும் மெல்ல சாத்தியப்படும்.

கண்ணீரும் புன்னகையும்: கருக்கலைப்புக்கு மறுத்ததால் கொலை முயற்சி


ஆந்திர மாநிலத்தின் முதுக்கூர் கிராமத்தில் கர்ப்பிணிப் பெண் கருக்கலைப்பு செய்ய மறுத்ததால், கணவர் வீட்டாரின் கொலைமுயற்சிக்கு ஆளானார். ஏற்கெனவே ஒரு பெண் குழந்தைக்குத் தாயான கிரிஜா, இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தபோது, ஜோதிடர் ஒருவர் மீண்டும் பெண்குழந்தைதான் பிறக்கும் என்று கூறியிருக்கிறார். அவருடைய மாமியாரும் மைத்துனியும் கிரிஜாவைக் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியுள்ளனர். ஆனால் கிரிஜா அதற்கு மறுத்தார். இந்நிலையில் கிரிஜா உறங்கும் நேரத்தில் அவர் வயிற்றில் அமிலம் கலந்த மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றனர். கிரிஜா கூச்சல் போட ஊரார் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கிரிஜா தற்போது தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தண்ணீருக்காக 20 கோடி மணி நேரம்

உலகம் முழுவதும் பெண்களும் பெண்குழந்தைகளும் தண்ணீர் சேகரிப்பதற்காக மட்டுமே தினமும் 20 கோடி மணி நேரத்தைச் செலவழிப்பதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நீர் வாரம் கடந்த திங்களன்று தொடங்கியதை அடுத்து இந்தச் செய்தியை யுனிசெப் வெளியுட்டுள்ளது. சுத்தமான நீரும், அடிப்படை சுகாதார வசதிகளும் முப்பது நிமிடப் பயணத் தொலைவுக்குள் உலகில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்க வைப்பதுதான் ஐ.நா. சபையின் வளம் குன்றா வளர்ச்சி இலக்காக உள்ளது என்று யுனிசெப் குளோபல் ஹெட் ஆஃப் வாட்டர் சானிட்டேஷன் அண்ட் ஹைஜீனின் உலகத் தலைவர் சஞ்சய் விஜிசேகரா கூறியுள்ளார். வீட்டுக்கு அருகே தண்ணீர் கிடைக்காதபோது, தண்ணீர்த் தேவையை நிறைவேற்றும் பொறுப்பு பெண்கள், பெண் குழந்தைகளின் தலையிலேயே விழுவதாகவும் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் குடும்பத்தோடு செலவழிக்கும் நேரமும் ஓய்வு நேரமும் குழந்தைகளைப் பராமரிக்கும் நேரமும் குறைகிறது. பெண்குழந்தைகளின் கல்வி குறிப்பாகப் பாதிக்கப்படுகிறது என்று யுனிசெப் எச்சரித்துள்ளது.

Wednesday, September 7, 2016

ரயில் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி : தாய் காலும் துண்டானது; சித்தப்பிரமையான நபர்

சென்னை: மாம்பலம் ரயில் நிலையத்தில், தஞ்சையில் இருந்து சென்னை வந்த மன்னை விரைவு ரயிலில், கணவன் கண் முன்னே, மனைவி தவறவிட்ட ஒன்றரை வயது குழந்தை

பலியானது; தாய்க்கும் கால் துண்டானது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேல், 40; பேராசிரியர். சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி லட்சுமி, 32. கே.கே.நகர் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு, ஒன்றரை வயதில் ஏகஸ்ரீ என்ற மகள் இருந்தாள். கடந்த வாரம், சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு, குடும்பத்துடன் சுந்தரவடிவேலு, விழா முடிந்து, நேற்று முன்தினம் இரவு, 9:15 மணிக்கு, தஞ்சையிலிருந்து சென்னைக்கு வரும் மன்னை விரைவு ரயிலில், மனைவி மற்றும் குழந்தையுடன், முன்பதிவு செய்யப்பட்ட, இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணித்தார்.




கோர சம்பவம் : சென்னை, மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி, கே.கே.நகர் செல்வது எளிது என்பதால், அந்த ரயில் நிலையத்தில் இறங்குவது என, முடிவு செய்துள்ளனர். ரயில், நேற்று காலை, 5:10 மணிக்கு, மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது, துாக்கத்தில் இருந்த சுந்தரவடிவேலும் அவரது மனைவியும், ரயில் புறப்பட தயாராக இருந்த சமயத்தில், கண் விழித்து பார்த்துள்ளனர். தாங்கள் இறங்க வேண்டி ரயில் நிலையம் வந்துவிட்டதால், சொந்த

ஊரிலிருந்து எடுத்து வந்த அரிசி, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை துாக்கிக் கொண்டு சுந்தரவடிவேல் முதலில் இறங்கி உள்ளார்.அவரை தொடர்ந்து, கையில் குழந்தையை துாக்கியபடி லட்சு மியும் இறங்கி உள்ளார். அப்போது, ரயில் வேகமெடுக்கத் துவங்கியதாக தெரிகிறது. இறங்கிவிடலாம் என நினைத்து, நடைமேடையில் கால் வைக்க முயன்ற லட்சுமி, நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். இதில், லட்சுமி வைத்திருந்த குழந்தை, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே இருந்த துவாரத்தில் விழுந்தது.இதனால், ''என்னங்க... குழந்தைய காப்பாத்துங்க,'' என பதறியபடி, அந்த துவாரம் வழியாக லட்சுமி இறங்கினார். இதனால், அவரது காலும் மாட்டிக்

கொண்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர நிகழ்வில், குழந்தையும் மனைவியும்

உயிருக்கு போராடுவதை கண்ட சுந்தரவடிவேல் கதறி அழுத காட்சி, கல் நெஞ்சத்தையும் கரைப்பதாக இருந்தது.




மீட்கும் முயற்சி : இந்த கோர விபத்தை கண்டு, ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் கூச்சல் போட்டனர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, குழந்தை மற்றும் லட்சுமியை மீட்கும் முயற்சியில்

ஈடுபட்டனர்.ஆனால் அந்த பச்ச மண், ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து கிடந்தது. இடது கால் துண்டாகிக் கிடந்த லட்சுமி, மகளின் பேரை உச்சரித்தவாறு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். தகவலறிந்து வந்த, எழும்பூர் ரயில்வே போலீசார், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் உடல், பிரேத பரிசோதனைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. கண் எதிரே குழந்தை இறந்து விட, மனைவியும் உயிருக்கு போராடு வருவதை கண்ட சுந்தரவடிவேல், பித்துப்பிடித்தவர் போல் காணப்படுகிறார்; அவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுந்தரவடிவேலின் சொந்த ஊரிலிருந்து, அவரது உறவினர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர். நேற்று காலை நடந்த இந்த கோர விபத்தால், மாம்பலம் ரயில் நிலையம் சோகமயமாக காட்சி அளித்தது.
'என்னால முடியலடா சாமி... ஆள விடு!' : 25 பரோட்டா சாப்பிட முடியாமல் திணறல்

அன்னுார் : கோவை, அன்னுார் அருகே, 25 பரோட்டா சாப்பிடும் போட்டியில், 5,001 ரூபாய் பரிசுத் தொகை யாருக்குமே கிடைக்கவில்லை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல நிறுவனங்களில் தள்ளுபடி விற்பனையை கேள்விப்பட்டிருப்போம். சற்று வித்தியாசமாக, கோவை அன்னுார் அருகே, ஒரு ஓட்டல் நிர்வாகம், வெண்ணிலா கபடி குழு திரைப்பட பாணியில், 25 பரோட்டாக்கள் சாப்பிட்டால், 5,001 ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில், 200 பேர் குவிந்தனர். 

பங்கேற்றவர்களிடம், 100 ரூபாயும் பெறப்பட்டது. இதில், காலை உணவை தவிர்த்து வந்தவர்கள் தான் ஏராளம். முதல் சுற்றில், ஐந்து பேர் பங்கேற்றனர். குருமாவை அதிகம் தொட்டுக் கொண்டால், பரோட்டா சாப்பிட முடியாது என்று உணர்ந்த பலர், பரோட்டாவை மட்டுமே, 'ருசி' பார்த்தனர்; நீரையும் அதிகம் பருகவில்லை. இதில், செல்வபுரத்தை சேர்ந்த பசும்பொன் அழகுக்கு மட்டுமே, 10 பரோட்டாக்களை விழுங்க முடிந்தது.இரண்டாவது சுற்றில், பங்கேற்ற ஆறு பேரில், ஒருவர் கூட, ஏழு பரோட்டாவை தாண்டவில்லை. மூன்றாவது சுற்றில், யாரும் பங்கேற்காததால், 20 பரோட்டா சாப்பிட்டாலே, பரிசுத் தொகை வழங்கப்படும் என, ஓட்டல் உரிமையாளர் தெரிவித்தும், ஒருவரும் அசைந்து கொடுக்கவில்லை.

 பரோட்டாவை சாப்பிட்டவர்கள், அதற்குரிய பணத்தை கொடுத்து, பரிசு வாங்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் திரும்பினர். சாப்பிட வந்தவர்களை விட, பார்க்க வந்த கூட்டமே அதிகம். பத்து பரோட்டா சாப்பிட்ட பசும்பொன் அழகு கூறுகையில், ''செல்வபுரத்தில் பரோட்டா மாஸ்டராக உள்ளேன். சாதாரணமாக, காலையில், 20 பரோட்டா சாப்பிடுவேன். இங்கு, 10க்கு மேல் சாப்பிட முடியவில்லை. பரோட்டாவின் எடை மற்றும் எண்ணெய் அதிகமாக இருந்தது, இதற்கு காரணம்,'' என்றார். பரிசுத் தொகை வாங்க முடியவில்லை என்ற ஏக்கமும், யாருக்கு கிடைக்கும் என்ற பொதுமக்களின் ஆர்வமும், கடைசி வரை நிறைவேறாமலே போனது.

NEWS TODAY 23.12.2025