Sunday, September 11, 2016

Posted Date : 16:40 (09/09/2016)


ரூ.5.72 கோடி கொள்ளையில் ரயில்வேயை திணறடித்த ஆர்.டி.ஐ கேள்விகள்!



சேலத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரசில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி ரூ.5.72 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்தாலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. வடமாநிலங்களில் முகாமிட்டுள்ள தனிப்படை அதிகாரிகள் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். இந்தநிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆர்.டி.ஐ போராளியும், வழக்கறிஞருமான பிரம்மா, ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி கணையை ரயில்வே நிர்வாகத்திடம் தொடுத்துள்ளார். வழக்கம் போல வழக்கு விசாரணையில் இருப்பதாகச் சொல்லி பதிலை இன்று அனுப்பி இருக்கிறது ரயில்வே நிர்வாகம். ஆர்.டி.ஐ.யில் பிரம்மா கேட்ட கேள்விகள் இதுதான்.

* சேலம் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு எந்த ரயிலில் பணம் கொண்டு வரப்பட்டது. வண்டி எண், ஓட்டுநர் பெயர், உள்ளிட்ட விவரம் தர வேண்டும்.

* ரயிலில் வங்கிக்குரிய பணத்தை சேலம் ரயில் நிலையத்தில் பார்சல் அனுப்பிய அலுவலர்களின் பெயர், பணி பொறுப்பு விவரம் வேண்டும்.

* சேலம் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட பணத்தின் பார்சல் பிரிவு புக்கிங் செய்த போது கொடுக்கப்பட்ட ரசீது நகல் வேண்டும்.

* அனுப்பப்பட்ட பணத்தின் மதிப்பு எவ்வளவு குறிப்பிடப்பட்டுள்ளது என்ற விவரம் வேண்டும்.

* அதற்கு கொடுக்கப்பட்ட பார்சல் எண் விவரம் வேண்டும். பார்சல் அலுவலகத்திலிருந்து ரயிலில் பணப்பெட்டிகள் ஏற்றப்பட்ட போது பதிவான கேமராவின் குறுந்தகடு தர வேண்டும்.

* ரயில் நிலையத்திலிருந்து பணம் எந்த தேதி, எத்தனை மணிக்கு புக்கிங் செய்யப்பட்டது என்ற விவரம் வேண்டும்.

* பணம் ஏற்றப்பட்ட பெட்டி சீல் வைக்கப்பட்டதை உறுதி செய்து கையொப்பமிட்ட அலுவலர்களின் ஆவண நகல் தர வேண்டும்.

* சேலத்திலிருந்து புறப்பட்ட ரயில் சென்னை வருவதற்கு முன்பு எந்தெந்த ரயில் நிலையங்களில் எத்தனை நிமிடங்கள் நிறுத்தப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்.

* அவ்வாறு ரயில் நிலையங்களில் நின்ற போது அதை ஆய்வு செய்த ரிப்போர்ட்டின் நகல் தர வேண்டும்.

* ரயிலில் பண பெட்டிகளை ஏற்ற எத்தனை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களின் பெயர் தர வேண்டும்.

* பணம் ஏற்றப்பட்ட ரயில் சென்னையில் எவ்வளவு நேரம் தனியாக நிறுத்தப்பட்டு இருந்தது என்ற விவரம் தர வேண்டும்.

* திருட்டு சம்பவத்தை முதலில் தகவல் கொடுத்த நபரின் பெயர், முகவரி, பணி பொறுப்பு தர வேண்டும். அவர் கொடுத்த புகார் மனு தர வேண்டும்.

* ரயிலில் பணம் கொண்டு வந்த போது பாதுகாப்பு பணியில் எத்தனை காவலர்கள் ஈடுபட்டு இருந்தார்கள். அவர்களின் பெயர், பணி பொறுப்பு, அவர்கள் பயணம் செய்த பெட்டி, மற்றும் இருக்கை எண் விவரம் தர வேண்டும்.

* பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு டிக்கெட் எந்த தேதியில் வழங்கப்பட்டது. டிக்கெட் நகல் தர வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடுத்த உத்தரவின் நகல் தர வேண்டும்.

* பாதுகாப்பு பணியில் நியமனம் செய்ய வேண்டும் என சேலம் வங்கி கொடுத்த கோரிக்கை மனுவில் நகல் வேண்டும். பணியில் இருந்த காவலர்கள் இதற்கு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்களா என்ற விவரம் தர வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் பணியின் போது யாருடன் செல்போனில் பேசினார்கள் என்ற விவரம் வேண்டும்.

* பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களில் எத்தனை பேருக்கு குடிப்பழக்கம் உள்ளது என்ற விவரம் வேண்டும். அன்றைய தினம் குடிபழக்கம் இல்லை என்று மருத்துவர் கொடுத்த சான்றிதழின் நகல் வேண்டும். கொள்ளை போன ரயிலின் மேற்கூரையில் எந்த இடத்தில், எவ்வளவு அளவில் துளை போடப்பட்டுள்ளது என்ற விவரம் வேண்டும்.

இந்த கேள்விகளுக்கு திருச்சி ரயில்வே கோட்ட ஆபரேசன்ஸ் மேலாளர் இன்று பதில் அனுப்பி உள்ளார். அதில் வழக்கு விசாரணையில் இருப்பதால் பதில் அளிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கறிஞர் பிரம்மா, உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளார்.

மாலை நேரத்திற்கு பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை


வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலோர், மாலை நேரத்துக்குப் பிறகு பாதுகாப்பு இல்லை என உணர்வதாக தொழில்துறை அமைப்பான அசோசெம் 

ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் தகவல் தொழில் நுட்பம், ஹோட்டல் வரவேற்பு, விமான போக்குவரத்து மற்றும் செவிலியர் துறைகளில் பணியாற்றுபவர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. என்.சி.ஆர்.,(NCR) எனப்படும் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளைக் கொண்ட தேசிய தலைநகர் மண்டலம், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் 5 ஆயிரம் பெண்கள் ஆய்வில் பங்கேற்றனர்.

பணியிடங்களில் பெண்களுக்கு பொதுவாகவே பாதுகாப்பு குறைவு என்று அவர்களில் பலர் தெரிவித்தனர். எனினும், மாலை 6 மணிக்கு மேல் பாதுகாப்பில்லை என உணர்வதாக 92 சதவீதம் பேர் தெரிவித்தனர். பெண்கள் பாலியல் தொல்லைகளை சந்திக்கும் இடங்கள் குறித்த கேள்விக்கு, பொதுப்போக்குவரத்தான பஸ், ஆட்டோ, டாக்சி போன்றவற்றை பெரும்பாலோர் தெரிவித்தனர். பஸ் நிறுத்தங்கள், கூட்டம் நிறைந்த சந்தைகள் ஆகியவற்றிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகம் என்றும் ஆய்வில் பலர் கூறினர். 

டெல்லியில் இந்த பிரச்னை அதிகம் என்று கூறியுள்ள அசோசெம், ஒவ்வொரு 40 நிமிடத்துக்கும் ஒரு பெண் வன்முறைக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளது. நகரச் சாலைகளில் 25 நிமிடத்துக்கு ஒரு பெண் பணியாளர் ஈவ்டீசிங் செய்யப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்கு புதிய விதிமுறைகளை அரசு உடனடியாக கொண்டு வர அசோசெம் ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் வேலையில், பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஒரு சூப்பரான ஐடியாவை மகாராஷ்டிரா காவல்துறை ஆணைய‌ர் கொடு‌த்துள்ளா‌ர்.

டெல்லியில் மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை இனி வேறு எந்த பெண்ணிற்கும் நடைபெறக் கூடாது என்பதற்காக, பெண்கள் வெளியே செல்லும் போது ஒரு பாக்கெட் மிளகாய் பொடியை உடன் எடுத்து செல்ல மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தானே நகரில் காவல்துறை ஆணையர் ரகு வன்ஷி அறிவுறுத்தியுள்ளார். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை எதிர்த்து போராட வேண்டும் என வலியுறுத்திய அவர்,பெண்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சுதந்திரம் பெற்று 64 ஆ‌‌ண்டுகள் முடிந்த பிறகும், நமது தாய் திருநாட்டில் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள மிளகாய் பொடியை எங்கு சென்றாலும் உடன் எடுத்து செல்ல வேண்டும் என்னும் நிலைமை துரதிஷ்டவசமானது. 
நன்றி குங்குமம் டாக்டர்

மது... மயக்கம் என்ன? டாக்டர் ஷாம்




எளிதாகக் கிடைப்பதே எல்லோரையும் குடிக்கத் தூண்டுகிறது!


தற்கொலை செய்து கொள்ள தைரியம் அற்றவர்கள் மரணமடைய தேர்ந்தெடுக்கும் எளிய வழி மது அடிமையாக மாறுவதே! எப்படித் தொடங்குகிறார்கள்? இன்றைய குடிமக்களில் பலர் வேடிக்கையாகக் குடிக்கத் தொடங்கியவர்களே. இந்தத் தொடக்கத்துக்கு முதல் முக்கியமான காரணம் என்ன? எளிதாகக் கிடைப்பதே பலரையும் குடிக்கத் தூண்டுகிறது. உலக அளவில் செய்யப்பட்ட பல ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெளிவாகத் தெரிய வரும் உண்மை இது. ஆம்... தமிழ்நாட்டில் வசிக்கிற ஒவ்வொருவருக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளாமலே இந்த உண்மை பளிச்சென விளங்கும். தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகள் இருப்பதாலேயே, குடிக்கிற பழக்கத்துக்கு ஆட்படுகிற ஏராளமானோரை நாள்தோறும் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம். 


குடிநோயாளி ஆவதற்கு முன்போ, குடிப்பழக்கம் இல்லாத வரையோ, யாரும் குடிப்பதற்காக ஏழு கடல் ஏழு மலை தாண்டுவது போன்ற பிரயத்தனங்கள் எதையும் செய்வதில்லை. அந்தப் பழக்கம் ‘விடாது கருப்பு’ போலத் தொற்றிய பின்புதான், அவர்கள் குடிக்காக எந்த ரிஸ்க்கையும் எடுக்கத் துணிவார்கள். பூட்டிய கடையை திறக்க வைப்பார்கள்... அண்டை மாநிலத்துக்குப் படை எடுப்பார்கள்... ‘அந்தச் சரக்கு இல்லாவிட்டாலும், எந்தச் சரக்காவது ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று இறைஞ்சுவார்கள்... பணம் இல்லையெனில் அதற்காக எதையேனும் விற்கவும், அடமானம் வைக்கவும் அல்லது கடன் வாங்கவும் தயங்க மாட்டார்கள். குழந்தையின் உண்டியல் சேமிப்பை எடுத்து வருவது கூட குடியின் பொருட்டு அவர்களுக்குத் தவறாகாது. இதற்கு அடுத்த செயல்தான் மதுவுக்காக மானம் கருதாது கை ஏந்துவது.

இதற்கு வலு சேர்க்கும்  சமூக அரசியல் காரணங்களும் உண்டு. தேவைக்கேற்ப சப்ளை என்கிற வணிக இயல்பு மாற்றப்பட்டு, சப்ளைக்கேற்ப குடிப்பவர்களை அதிகப்படுத்தும் பணியாகி விட்டது இங்கு. இதுவும் ஒருவித தேவைதான். குடிக்கிறவர்களுக்கான  தேவை அல்ல... குடிக்க வைக்கிறவர்களுக்கான தேவை. வணிக, அரசியல் ரீதியான தேவை. ஆனால், இதற்குப் பலியாகிறவர்கள் யார்? எளிதாகக் கிடைப்பது என்கிற விஷயத்தைத் தாண்டி, ஒருவரை மதுவின் பால் ஈர்ப்பது எது? நண்பர்கள், உறவினர்களின் தூண்டு தல். சில நேரம் வீட்டில் மற்றவர்கள் குடிப்பதைப் பார்க்கும் சிறுவர்கள் கூட, மறைமுகமாக மதுவின் பக்கம் 
தூண்டப்படுவது உண்டு. இதுவும் சமீபகாலமாக அதிகமாகி இருக்கிறது. இப்போதெல்லாம் டீன் ஏஜ் காலகட்டத்தில் சோதனை முயற்சியாக மது அருந்தி பார்ப்போரில் பாதிக்கும் அதிகமானோர் தொடர்ந்து குடிக்கத் தொடங்கி விடுகிறார்கள். அதனால்தான் அபாயத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

அடுத்த காரணி?

டீன் ஏஜில் மதுவைத் தொடாமல் தாண்டி வந்தவர்கள் கூட, பின்னாளில் அதற்கு அடிமையாவதும் உண்டு. நடுத்தர வயதில் ஏற்படும் மன அழுத்தம் இதற்கு ஒரு காரணம். குடும்பக் குழப்பம், வேலையில் கஷ்டம், பொருளாதாரச் சிக்கல் போன்றவை காரணமாக, தங்கள் கவலையை மறக்கடிக்கலாம் என்று எண்ணி மதுவுக்குள் வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களில் பலர் கூடுதல் கஷ்டமாக மதுவுக்கு அடிமையாகி விடுகிறார்கள். ஒருகட்டத்தில் உடல் மற்றும் மனம் இரண்டுமே அவர்களை குடிக்க வைப்பதாகி விடுகிறது. குடித்தே தீர வேண்டும் என்கிற நிலைக்குள் வந்து விழுகிறார்கள். குடிக்க இயலாமல் போனாலோ, உடல்நலம் குன்றியதாக உணர்கிறார்கள். மது அருந்தினாலோ, தற்காலிகமாக அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் மீண்டதாக எண்ணுவார்கள். போதை ஓரளவு தெளிந்ததும் மீண்டும் பிரச்னைகள்... மீண்டும் குடி... எங்கே போகும் இந்தப் பாதை? மருத்துவரும் அறிய மாட்டார்!

உடல்நிலை மோசமாகும் வரையோ, பணம் இல்லாத நிலை வரும் வரையோ, மது அருந்துவோர் யாரிடமும் உதவி வேண்டுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை மதுவே சர்வரோக நிவாரணி! உடல்நலமற்ற பொழுதில் மருத்துவரைச் சந்திக்கையிலும், அவர்கள் மது அருந்தும் விஷயத்தையும், மதுவினால்தான் உடல்நலம் குன்றிய உண்மையையும் வெளிப்படுத்துவதில்லை. மருத்துவரே அறிந்தால்தான் உண்டு. இதனால், அவர்களுக்கு முறையான சிகிச்சையும் கிட்டாமல் போகிறது. பிரச்னையும் நீண்டு கொண்டே செல்கிறது. இனி எந்தப் பிரச்னைக்காக நோயாளி வந்தாலும், அவருக்கு குடிப்பழக்கம் உள்ளதா என மருத்துவர்களே ஆய்ந்து அறியும் நிலைமை இப்போது உருவாகிவிட்டது.

அறிவது எப்படி?

நம் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர் அல்லது நண்பருக்கு தீவிரமான குடிப்பழக்கம் இருப்பதை நாம் அறியாமலே கூட இருக்கலாம். இருப்பினும் சிலபல அறிகுறிகளைக் கொண்டு, நாம் அதன் தீவிரத்தை அறிந்து உதவ முடியும். உதாரணமாக... 

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் உறவுச் சிக்கல்கள்

அடிக்கடி அல்லது தொடர்ச்சியான உடல்நலப் பிரச்னைகள் 

கை கால் நடுக்கம், வாய் குழறுதல், காலையில் கூட ஆல்கஹால் வாசனை

சோர்வு, பதற்றம் உள்பட பலவித மனவியல் சிக்கல்கள்

அலுவலகம் அல்லது தொழிலில் ஈடுபாடின்மை... அளவுக்கு மீறிய விடுப்புகள்

வயிற்றுக்கோளாறுகள் (சில நேரங்களில் ரத்த வாந்தி)

தூக்கம் இன்மை

பாலியல் சார்ந்த பிரச்னைகள்

விபத்துகளில் சிக்குதல் அல்லது காரணம் அறியாமலே காயம் அடைதல். 

இதுபோன்ற அறிகுறிகளில் ஒன்றோ, பலவோ ஒருவரிடம் அடிக்கடி உணர முடிந்தால், அவர் மது அடிமை ஆகிக்கொண்டிருக்கிறார் என்றே பொருள். 
அப்படியானால், அவர் சமீபகாலமாகத்தான் மதுவின் பிடிக்குள் அகப்பட்டிருக்கிறாரா? அவர் குடிப்பது உங்களுக்கோ, குடும்பத்துக்கோ கவலைக்கு உரிய செயலாகத் தோன்றுகிறதா? இரவில் மட்டுமல்லாது காலையிலும் குடிக்கிறாரா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை அறியுங்கள். விடைகள் இல்லை என்று தெரிந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ‘ஆம்’ என்று நீங்கள் சொல்வீர்களானால், உங்கள் உதவியே அவருக்கு உடனே தேவை. அவரை மீட்க முடியுமா?
ஆம்... உங்களால் முடியும்! 
ரயில் பெட்டியை தாழிட்டு இளம்பெண்ணிடம் பலாத்காரம்: ரயில்வே ஊழியர் அதிரடி கைது


திருச்சி: திருச்சி ஜங்ஷன் எடமலைப்பட்டிபுதூர் யார்டில் ரயில்வே பெட்டிகளை பராமரிப்பு பணி நடப்பது வழக்கம். இங்கு புதுக்கோட்ைட ஆலங்குடியை சேர்ந்த மரியச்செல்வம் (40) என்பவர் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் ஊழியராக கடந்த 10 ஆண்டாக பணியில் உள்ளார். 3 மாதங்களுக்கு முன் துப்புரவு பணிக்காக 23 வயது இளம்பெண் புதிதாக பணியில் சேர்ந்தார். இவருக்கு ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணி வழங்கப்பட்டது. கடந்த 5ம் தேதி ரயில் பெட்டிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அந்த பெட்டியில் ஏறிய மரியசெல்வம், ரயில் பெட்டியின் கதவை தாழிட்டு, அந்தப் பெண்ணை கட்டிப்பிடித்து பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கத்தி கூச்சல் போட்ட இளம்பெண், மரியசெல்வத்திடமிருந்து தப்பி ரயில் பெட்டி கதவை திறந்து வெளியே ஓடிவந்தார். யார்டில் பணியில் இருந்த சூப்பர்வைசரிடம் புகார் அளித்தார். பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இளம்பெண்ணின் புகாரை பெற்றும் சூப்பர்வைசர் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாக கூறப்படுகிறது. பெண்ணின் பெற்றோர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று திருச்சி ஜங்ஷன் வந்து ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.

இதையடுத்து அத்துமீறி கதவை தாழிட்டல்(342), அடித்து காயப்படுத்துதல்(322) மற்றும் பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிந்தனர். தலைமறைவாக இருந்த மரியசெல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். ரயில் பெட்டியில் சகபெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் ரயில்வே ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

20,000 கிமீ நீளத்துக்கு உலகின் மிக நீளமான புல்லட் ரயில் பாதை : சீனா நிறைவு செய்தது


பீஜிங்: 20 ஆயிரம் கிமீ நீளத்துக்கு புல்லட் ரயில் பாதை அமைத்து, உலகின் மிக நீளமான புல்லட் ரயில் நெட்வொர்க்கை சீனா நிறைவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் சீனா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீனாவின் மத்திய ஹெனான் மாநிலத்தில் உள்ள ஜெங்சோ என்ற இடத்தில் இருந்து கிழக்கு ஜியாங்சூ மாநிலம் சூஜோ என்ற இடம் வரையில் 362 கிமீ தூரத்துக்கு புல்லட் ரயில் போக்குவரத்தை சீனா நேற்று தொடங்கியது. இதன் மூலம் சீனாவின் புல்லட் ரயில் பாதைகளின் மொத்த தூரம் 20,000 கிமீ தூரத்தை தாண்டிவிட்டது. இவ்வளவு தூரத்துக்கு உலகில் வேறு எங்கும் புல்லட் ரயில் பாதை அமைக்கப்படவில்லை.

இதன் மூலம் ஜியான் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையோன பயண நேரம் 11 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த இரு நகரங்களுக்கு இடையேயுள்ள உள்ள 9 ரயில் நிலையங்களை மணிக்கு 300 கிமீ வேகத்தில் புல்லட் ரயில் கடக்கிறது. இந்த புல்லட் ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.

கடந்த ஏப்ரல் மாதம் சோதனை ஓட்டம் நடந்தது. சீனாவில் தற்போது 20 ஆயிரம் கி.மீ தூரத்துக்கு புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் ஜப்பானுடன் சீனா போட்டி போட்டு வருகிறது. இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் பாதை ஒப்பந்தத்தை ஜப்பான் பெற்றுள்ள நிலையில், சென்னை-டெல்லி இடையே புல்லட் ரயில் பாதை அமைக்கும் ஆய்வு பணியை சீனா மேற்கொண்டு வருகிறது.
தாம்பத்ய உறவுக்கு மறுத்த பெண்ணுக்கு மருத்துவ சோதனை

மும்பை: மும்பையை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2010 டிசம்பரில் திருமணம் நடந்தது. அப்போது கணவனுக்கு வயது 38. மனைவிக்கு 33. இருவருக்குமே இது 2வது திருமணம். திருமணத்திற்கு பின் தாம்பத்ய உறவுக்கு மனைவி தொடர்ந்து மறுத்து வந்தார். இதனால் 2011ல் விவாகரத்து கேட்டு கணவன் குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘மனைவி குடும்பம் நடத்த தகுதி இல்லாதவர். எனவே விவகாரத்து வேண்டும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அந்த பெண்ணை சோதிக்கும்படி குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது. அவர் தாம்பத்திய உறவுக்கு தகுதியானவர் தானா அல்லது குறைபாடு உடையவரா என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மும்பை ஜெ ஜெ மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அந்த பெண் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘‘குடும்ப நல கோர்ட் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது’’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கே.கே.தத் விசாரித்தார். அப்போது கணவர் சார்பில் ஆஜரான வக்கீல் ரமேஷ்லால்வானி வாதாடுகையில், ‘‘திருமணமானபின் 3 மாதங்களாக மனைவி தாம்பத்ய உறவுக்கு அனுமதிக்கவில்லை. எனவே அவர் திருமண உறவுக்கு தகுதியானவர் அல்ல. இதற்கு மருத்துவ பரிசோதனை தேவை’’ என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பெண்ணை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த குடும்ப நல கோர்ட் வழங்கிய உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.
பத்தரை மாற்று தங்கம்


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் மாரியப்பன் தங்கவேலு. இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் நமக்கு கூடுதல் பெருமை. ஆண்கள் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்திருக்கிறார் மாரியப்பன். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வருண் சிங் வெண்கலம் வென்றிருக்கிறார். ஊனம், ஏழ்மை, ஏளனம் போன்ற தடைக்கற்களை தகர்த்தெறிந்து சிகரத்தை எட்டியிருக்கும் இந்த வீரர்களின் சாதனை, ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறது. பாராலிம்பிக் போட்டியில் கிடைத்த தங்கம் என்று இதை குறைத்து மதிப்பிடுவது கூடாது. உலக அளவில் மிகச் சிறந்த வீரர்களின் கடுமையான போட்டியை சமாளித்து மாற்றுத் திறனாளியான மாரியப்பன் வென்றுள்ளது பத்தரை மாற்றுத் தங்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவரது மகத்தான வெற்றி, அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக, உந்துசக்தியாக இருக்கும்.

காதல் என்ற பெயரில் பெண்களை வெட்டிச் சாய்த்து, அமிலம் ஊற்றி சிதைத்து, பின்னர் தண்டனைக்கு பயந்து தற்கொலை செய்துகொள்ளும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் அவநம்பிக்கையையும் விரக்தியையும் அளித்த நிலையில், இளைஞர்கள் தங்களின் ஆற்றலை ஆக்கசக்தியாக, குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாரியப்பனின் வெற்றி உணர்த்துகிறது. சாதனை வீரருக்கு பாராட்டு, வாழ்த்துகளுடன் கோடிக் கணக்கில் ரொக்கப் பரிசுகளும் குவிகின்றன. வென்றவர்களை பாராட்டுவதும், கவுரவிப்பதும் நமது கடமை. அப்போது தான் மாரியப்பன், வருண் போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களை கடுமையாக முயற்சிக்கத் தூண்டும். நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகளுக்கான அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், திறமையான சிறுவர் சிறுமியரை தேர்வு செய்து உணவு, உடை, கல்வி, பயிற்சி என அனைத்து வசதிகளையும் அளிக்க வேண்டும்.

அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் உறுதி செய்து, எதிர்காலம் பற்றிய கவலையை போக்க வேண்டியதும் அவசியம். வெற்றியாளர்களை தோளில் தூக்கிக் கொண்டாடும் அதே சமயம், தோற்றவர்கள் துவண்டு விடாமல் முனைப்புடன் தங்கள் முயற்சியை தொடர ஆதரியுங்கள். ஒலிம்பிக்ஸ் முடிந்து பரபரப்பு ஓய்ந்ததும் விளையாட்டுத் துறை அமைச்சகம், அதிகாரிகள், நிர்வாகிகள் வழக்கம் போல தூக்கத்தில் ஆழ்ந்துவிடாமல், 2020ஐ மனதில் வைத்து ஆக்கபூர்வ நடவடிக்கையில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

NEWS TODAY 23.12.2025