Wednesday, September 21, 2016

'சிறையிலேயே செத்துப் போய்விடுகிறேன்...!' -பேரறிவாளன் தாக்குதல் பின்னணி

vikatan.com


வேலூர் சிறையில் தாக்குதலுக்கு ஆளான பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ' கொலைவெறியோடு நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் அவருக்கு நெருக்கமான சிலர் இருப்பதை அறிந்து மிகுந்த வேதனையில் இருக்கிறார் பேரறிவாளன்' என்கின்றனர் சிறை அதிகாரிகள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பகுதியில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 13-ம் தேதி வட மாநில கைதியான ராஜேஷ் கண்ணா என்பவர், இரும்புக் கம்பியால் பேரறிவாளனைக் கடுமையாகத் தாக்கினார். இதில், கை, கால் மற்றும் தலைப் பகுதியில் கொடும் காயத்திற்கு ஆளானார். சிறை வாழ்க்கையால் சிறுநீரகத் தொற்று, நரம்பு, மூட்டு பிரச்னை மற்றும் ரத்தக் கொதிப்பு நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வரும் பேரறிவாளனை குறிவைத்து நடந்த இந்தத் தாக்குதல் சிறை வட்டாரத்தை மட்டுமன்றி, அரசியல் கட்சிகளையும் அதிர வைத்தது. இதையடுத்து, ' தன் மகனை பரோலில் விட வேண்டும்' என்பதை வலியுறுத்தி, நேற்று முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தில் மனு கொடுத்தார் அற்புதம் அம்மாள்.

மருத்துவ சிகிச்சை முடிந்து சிறைக்குத் திரும்பிய பேரறிவாளனுக்கு, தாக்குதல் குறித்துக் கிடைத்த தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். இதைப் பற்றி நம்மிடம் விவரித்தார் மனித உரிமை ஆர்வலர் ஒருவர், " ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார் பேரறிவாளன். இதற்காக, 25 ஆண்டுகளாக தெருத் தெருவாக அலைந்து கொண்டிருக்கிறார் அற்புதம் அம்மாள். அண்மையில், ஏழு பேர் விடுதலையை எதிர்நோக்கி பேரணியில், கட்சி சார்பில்லாமல் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஏழு பேர் விடுதலையை நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்கிறோம். இந்த நேரத்தில் இப்படியொரு கொடூர தாக்குதல் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

தாக்குதலில் ஈடுபட்ட ராஜேஷ் கண்ணா என்ற கைதி, அடிக்கடி பேரறிவாளன் கொட்டடிக்கு வந்து, சகஜமாகப் பேசக் கூடியவர்தான். ஆனால், தாக்குதலுக்கு முன்பான ஒரு வாரம் முழுவதும் பேரறிவாளனுக்கு நெருக்கமான இரண்டு கைதிகள் அறையிலேயே ராஜேஷ் கண்ணா இருந்துள்ளார். அவர்கள்தான், பேரறிவாளனுக்கு எதிரான தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள். அந்த இரண்டு சக கைதிகளோடு சில மனஸ்தாபங்கள் இருந்தாலும், அவர்களோடு நட்பு பாராட்டியே வந்தார். இந்த வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டும் என நினைத்திருந்தால், சிறை நன்னடத்தை விதிகளின்படி பேரறிவாளன் எப்போதோ வந்திருக்க முடியும். ' ஏழு பேரும் ஒன்றாகத்தான் வெளியில் வருவோம்' என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

' நம்மை விடுவிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. ஆனால், அரசுக்கு எதிராக நளினி போன்றவர்கள் தொடுக்கும் வழக்குகளால் சிரமம்தான் ஏற்படுகிறது. எந்த வழக்கு போட்டாலும், ' உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது' என்ற ஒற்றைச் சொல்தான் வெளியில் வருகிறது. எனவே, அரசுக்கு எதிரான வழக்குகள் வேண்டாம்' என்பதுதான் பேரறிவாளனின் கருத்தாக இருக்கிறது. இதைச் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, பேரறிவாளனுக்கு எதிரான தாக்குதலைத் தூண்டிவிட்டுள்ளனர். அதிலும், கொலைவெறியோடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கைதி ராஜேஷ் கண்ணாவிடம், ' உனக்கு எதிராக சிறை அதிகாரிகளிடம் போட்டுக் கொடுப்பதே பேரறிவாளன்தான்' என அவரைத் தூண்டிவிட்டுள்ளனர்.

தாக்குதல் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார் பேரறிவாளன். ' இவர்கள் இப்படியெல்லாம் செய்வார்களா? நண்பர்களே இவ்வாறு செய்தால், எதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும்? சிறையிலேயே செத்துப் போய்விடுகிறேன்' எனக் கதறி அழுதிருக்கிறார். நரம்பு, மூட்டு பிரச்னைகளுக்கு மருந்து சாப்பிடும்போது, வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. தாக்குதலுக்குப் பின்னர் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருகிறார். இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை. யாரை நம்புவது என்று தெரியாமல் தவித்து வருகிறார் பேரறிவாளன்" என்றார் வேதனை கலந்த முகத்துடன்.
ராம்குமார் கடைசியாக பேசியது இதுதான்..! சிக்கலில் சிறை அதிகாரிகள்
vikatan.com

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18ம் தேதி புழல் சிறைக்குள் மின்வயரை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் சொல்கிறது. ஆனால், ராம்குமாரின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக சமூகவலைத்தளங்கள் தொடங்கி அவரது உறவினர்களும் சொல்கின்றனர். ராம்குமாரின் மரணம் இன்று விவாத பொருளாக மாறியிருந்தாலும் சிறைக்குள் ராம்குமார் உயிர் இழப்பதற்கு முன்பு கடைசியாக யாருடன் என்ன பேசினார் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "அன்றைய தினம் காலை உணவை மட்டுமே ராம்குமார் சாப்பிட்டார். அவர் அடைத்து வைத்திருந்த டிஸ்பென்சரி பிளாக்கில் ராம்குமாருக்கு 10க்கு 10 அளவு கொண்ட அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. அதே வரிசையில் கைதிகள் இளங்கோவும், வெங்கடேசனும் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். ராம்குமார், அறைக்குள்ளேயே பாத்ரூம் வசதி இருந்தது. எப்போதும் அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பார் அவர். யாருடனும் சரிவர பேச மாட்டார். அமைதியாக இருக்கும் அவருடன் சக கைதிகளும் பேச தயங்கினர். ஆரம்பத்தில் ராம்குமாரின் நடவடிக்கைகளை முழுமையாக கண்காணித்தனர். அதன்பிறகு அவரை கண்காணிப்பதில்லை. சிறையில் அடைக்கப்பட்டு 75 நாட்களுக்கு மேலாகி விட்டதால் சிறை காவலர்கள் வழக்கம் போல தங்களது பணியில் ஈடுபடத் தொடங்கினர். சில நேரங்களில் சிறை காவலர்கள், வார்டன்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஒற்றை வரியில் பதில் அளிப்பார்.

'சிறையிலிருந்து எப்போது வெளியே விடுவார்கள்' என்பது தொடர்பாகவே அவரது பதில் இருக்கும். இந்த சமயத்தில் கடந்த வாரம் ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்த பிளாக்கின் வாராண்டாவில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அப்போது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒரு விசாரணை கைதி ராம்குமாரிடம் பேசி உள்ளார். அப்போது அந்த கைதி, 'ராம்குமாரிடம் கவலைப்படாதே தம்பி, எனக்கும் உங்க ஏரியா தான். முதல் தடவை வரும் போது இதுமாதிரியாகத் தான் இருக்கும். நீ கொலை செய்யவில்லை என்றால் எதற்காக பயப்பட வேண்டும், இந்த வழக்கின் தீர்ப்பு உனக்கு சாதகமாகத்தான் வரும்' என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார். அப்போது, 'எனக்கும், இந்த கேஸிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுவாதி யார் என்ற தெரியாது. வெளியில் சென்ற பிறகு இந்த வழக்கில் என்னை எப்படி சிக்க வைத்தார்கள் என்பதை மீடியாக்களிடம் சொல்வேன்' என்று நம்பிக்கையுடன் ராம்குமார், அந்த கைதியிடம் சொல்லி இருக்கிறார். இதற்குள் அங்கு வந்த சிறைக்காவலர் ஒருவர், இருவரையும் எச்சரித்து விட்டு சென்றுள்ளார். உடனடியாக ராம்குமார், தன்னுடைய அறைக்குள் சென்று விட்டார்.

அந்த விசாரணை கைதி, நேற்று நடந்த மாஜிஸ்திரேட் விசாரணையின் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதன்பிறகு மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி, ராம்குமாரின் அறை கதவை திறந்து விட்ட சிறைக்காவலர் ஏன் அவரை தொடர்ந்து கண்காணிக்கவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு சிறைக்காவலர், ராம்குமார் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொன்னார்,அறைக்கதவைத் திறந்துவிட்டேன். அந்த நேரத்தில் உயரதிகாரிகளிடம், வாக்கி டாக்கியில் அவசரமாக எனக்கு அழைப்பு வந்தது. இதனால் அங்கு சென்று விட்டதாக சொல்லியுள்ளார். இதுதொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அந்த சிறைக்காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கிடையில் நேற்று சிறைத்துறை ஏ.டி.ஜி.பி விஜயகுமார், புழல் சிறைக்கு வந்தார். அவர், ராம்குமார் மரணம் குறித்து விசாரித்தார். இதன்பிறகு ராம்குமார் தங்கி இருந்த அறை, அவரது சிறை கதவை திறந்து விட்ட சிறைக்காவலர் மற்றும் பணியில் இருந்த சிறை வார்டன், அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து சி.சி.டி.வி கேமரா பழுது, பழுதடைந்த சுவிட்ச் பாக்ஸ் குறித்தும் விசாரணை நடத்தினார்" என்றனர்.

சுவாதி கொலை வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அதை காரணம் காட்டி ராம்குமார் ஜாமீனில் வெளிவந்திருக்க வாய்ப்பு இருந்தது. அவ்வாறு ராம்குமார் வெளியில் வந்திருந்தால் சுவாதி கொலையில் உள்ள மர்மங்களும் வெளியில் வந்திருக்கும். ஆனால் அதற்குள் ராம்குமார் உயிர் இழந்து விட்டதால் அவருடன் சேர்ந்து இந்த கொலை வழக்கில் உள்ள மர்மங்களும் புதைந்து விட்டது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரியிடம் பேசிய போது, "இந்த வழக்குகள் விசாரணையில் இருப்பதால் எந்த தகவலும் சொல்ல முடியாது. ஏ.டி.ஜி.பி, சிறைக்காவலரிடம் விசாரித்துள்ளார். விரைவில் பணி நேரத்தில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது" என்றார்.

vikatan.com



இந்த ஒயரைக் கடித்து தான் இறந்தாரா ராம்குமார்?


சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் கடந்த 18ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். சிறையில் மின் கம்பியை வாயால் கடித்து அவர் தற்கொலை கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக ராம்குமாரின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை முடிவில் ராம்குமாரின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், பிரேத பரிசோதனை நடப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது.

சிறையில் சுவரினுள் பதிக்கப்பட்ட மின் ஒயரை கடித்து ராம்குமார் எப்படி இறந்திருப்பார் என்ற சந்தேகம் முன்வைக்கப்படும் நிலையில், சிறையில் ராம்குமார் மின் ஒயரை கடித்த இடத்தை குறிப்பிடும் வகையில், ஸ்விட்ச் பாக்ஸ் படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஸ்விட்ச் பாக்ஸ் ஒயரை கடித்து தான் ராம்குமார் இறந்ததாக சொல்லப்படுகிறது.

அதேநேரத்தில் "இந்த ஸ்விட்ச் பாக்ஸ் டைல்ஸ் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்விட்ச் பாக்ஸை வாயால் கடித்து உடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவ்வாறு உடைக்க முயன்றிருந்தால், ராம்குமாரின் வாயிலும் காயங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் ராம்குமாரின் வாயில் காயங்கள் இல்லை. அதேபோல் மின்சாரம் உடலில் பாய்ந்தாலும் அவர் தூக்கி வீசப்பட்டிருப்பார். அப்படி தூக்கி வீசப்பட்டிருந்தாலும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கும். அதற்கான காயங்களும் ராம்குமாரின் உடலில் இல்லை. எனவே இந்த ஒயரை வாயில் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை," எனவும் சொல்லப்படுகிறது.

இதில் எது உண்மை என்பதற்கு பிரேத பரிசோதனையில் தான் விடை கிடைக்கும். இந்த புகைப்படம் வெளியானது தொடர்பாக சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசினோம். "இந்த புகைப்படம் எப்படி வெளியானது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். ராம்குமார் தற்கொலை செய்தது உண்மை. இதில் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை," என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

-மகேஷ்


vikatan.com

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், கடந்த 18ம் தேதி புழல் சிறைக்குள் சுவிட்ச் பாக்ஸை உடைத்து அதில் உள்ள மின்வயரை கடித்து தற்கொலை செய்ததாக சிறைத்துறை நிர்வாகம் தரப்பு சொல்கிறது. ஆனால், அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக உறவினர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் சொல்கின்றனர். இதற்கிடையில் ராம்குமார், தற்கொலைக்குப் பயன்படுத்தியதாக கூறப்படும் சுவிட்ச்பாக்ஸ் படம் ஒன்று நேற்று வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப்படம் எப்படி வெளியானது என்று சிறைத்துறை விசாரித்ததில் தடயவியல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சில புகைப்படங்களை எடுத்தனர். அவர்கள் மூலம்தான் இந்தப்புகைப்படம் வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் சிறைத்துறையினருக்கு உள்ளது.

இந்நிலையில், ராம்குமார் இறந்தது எப்படி என்று நேரிடையாக களத்தில் இறங்கினோம். அப்போது கிடைத்த தகவல் இது. ராம்குமார் மரணத்தை விவரித்தார் சிறைத்துறை உயரதிகாரி ஒருவர்.

"ராம்குமார் சிறைக்குள் அடைக்கப்பட்ட நாளிலிருந்து அவர் தற்கொலைக்கு முயன்ற நாள் வரைக்கும் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தோம். சிறையில் ஒரு ஷிப்ட்க்கு 40 சிறைக்காவலர்கள் பணியில் இருப்பார்கள். இதில் சிலர் உயரதிகாரிகளுக்கு ஆர்டர்லி பணிக்காக சென்று விடுவர். மீதமுள்ளவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவர். கடந்த ஞாயிற்றுக் கிழமை 15 சிறைக்காவலர்கள் பணியில் இருந்தனர். பேச்சிமுத்து என்ற சிறைக்காவலரிடம், ராம்குமார், தாகமாக இருக்கிறது, தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனடியாக பேச்சிமுத்தும், கதவை திறந்துள்ளார். சிறை அறையிலிருந்து வெளியேறிய ராம்குமார், அந்த பிளாக்கில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் குடம் அருகே சென்று தண்ணீர் குடித்துள்ளார். இந்த சமயத்தில் பேச்சிமுத்து, அங்கிருந்து சென்று விட்டார். அப்போது, தண்ணீர் குடம் வைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே உள்ள சுவிட்ச் பாக்ஸ் ஸ்குரு இல்லாமல் தொங்கி கொண்டு இருந்ததை ராம்குமார் பார்த்துள்ளார். உடனடியாக அதைப் பிடித்து உடைத்த ராம்குமார், அதிலிருந்து மின்வயரை இழுத்துள்ளார். பிறகு தன்னுடைய பற்களால் அந்த வயரை கடித்ததும் மின்சாரம் ராம்குமாரின் உடலில் பாய்ந்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சிறைக்காவலர் பேச்சிமுத்து, கையில் வைத்திருந்த லத்தியால் ராம்குமாரை தாக்கினார். இதன்பிறகு மின்சாரம் தாக்குதலிருந்து விடுவிக்கப்பட்ட ராம்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் சிறைத்துறைக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்திவிட்டது.

பணியில் கவனக்குறைவாக இருந்த சிறைக்காவலர் பேச்சிமுத்து மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். ராம்குமாருக்கு மின்சாரத்தை குறித்த அனைத்து விவரங்களும் தெரியும். ஏனெனில் அவர் இன்ஜினீயரிங்கில் படித்ததே அந்தப் பிரிவுதான். இதனால்தான் அவர், தற்கொலைக்கு மின்சாரத்தை பயன்படுத்தி இருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவுடன் ராம்குமார், பிளேடால் தற்கொலைக்கு முயன்றார். அதிலிருந்து காப்பாற்றி சிறைக்குள் அடைத்தப்பிறகும் அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்தோம். ஒருசில சிறைக்காவலர்களின் கவனக்குறைவால் இன்று ஒட்டுமொத்த சிறைத்துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளோம். வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் சிறைக்குள் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

17 ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவித்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா அப்துல் ரகீம் கூறுகையில், "நான் சிறையில் உயர்பாதுகாப்பு வளாகத்தில் அடைக்கப்பட்டு இருந்தேன். அப்போது சிறை நிர்வாகம், நீதித்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இன்று சிறைத்துறை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இதனால், எப்போது வேண்டும் என்றாலும் போலீஸார், விசாரணை கைதிகளிடம் விசாரிக்கும் சூழ்நிலை உள்ளது. இது விசாரணை கைதிகளுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தும். போலீஸாரின் கட்டுபாட்டுக்குள் விசாரணை கைதிகள் இருக்கும் சூழ்நிலை உள்ளதால் வழக்கை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றலாம். ராம்குமாரைப் பொறுத்தவரைக்கும் இந்த வழக்கில்தான் அவர் முதல் முறையாக கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள்ளேயே அவரிடம் போலீஸார் விசாரித்ததின் விளைவே அவரை கடுமையான மனஉளைச்சலுக்குள்ளாகி இருக்க வேண்டும். ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற அவரை மீண்டும் தற்கொலைக்கு தூண்டியதே போலீஸ் விசாரணைத்தான்.

சிறையை பொறுத்தவரைக்கும் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இது சிறைத்துறை உயரதிகாரிகளுக்குத் தெரியும். சிறைக்குள் இருக்கும் மின்மோட்டார்களின் வயர்கள் தாழ்வான பகுதியில்தான் இருக்கும். அதன்மூலமாகக்கூட தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புள்ளது. சிறைச்சாலை குற்றவாளிகளை திருத்தும் மையமாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் சிறைச்சாலைகள் குற்றங்களின் பிறப்பிடமாகவே மாறி வருகிறது. சிறைக்காவலர்கள் கூடுதல் பணிச்சுமையால் சிரமப்படுகின்றனர். இதுவே ராம்குமாரை கண்காணிக்க முடியாததற்கு காரணம். மேலும், சிறை நிர்வாகத்தை மீறி நினைத்த சிறைவாசியை காவல்துறை நினைத்த பிளாக்கிற்கு மாற்றுகிறது. ராம்குமார், தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதற்கான விடை பிரேத பரிசோதனையில் தெரியவந்துவிடும். மற்ற வழக்கைப் போல இந்த வழக்கில் பிரேத பரிசோதனை முடிவுகளை மாற்ற முடியாது. ஏனெனில் நீதிமன்றம் தலையீடு உள்ளதால் மரணத்துக்கான உண்மையான காரணத்தையே டாக்டர்களால் சொல்ல முடியும். இல்லையெனில் டாக்டர்களுக்கு சிக்கல் ஏற்படும். சிறைத்துறையை மீண்டும் நீதித்துறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே இதுபோன்ற தற்கொலை சம்பவங்களை தடுக்க முடியும். சிறைக்குள்ளேயும் கைதிகள் மனிதர்களாக நடத்தப்படுவார்கள். சுவாதி, ராம்குமார் போன்ற முக்கியமான வழக்குகளில் சுற்றும் சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் சிறைத்துறை அதற்கான ஆதாரங்களை நீதிமன்றங்களில் சமர்ப்பிக்க வேண்டும்" என்றார்.

அரிப்பு ஏற்படுவது ஏன்?

அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.

இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். உடலியல்ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’.

எதிர்ப்புப் புரதம்

அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின் – ஈ’ (IgE) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி? ‘லேன்ட்-லைன்’ போன் வேலை செய்யும் மெக்கானிஸம் போன்றது இது. லேன்ட் லைன் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பிதான். எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர்தான் பேச முடியும்.

இதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே ‘நரம்பு கேபிள்’தான். நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறிகிற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச் செல்கிறது. ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்லும் என்பதால், அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, சொறியும் உணர்வை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்கிறது. இதனால் அரிப்பு குறைகிறது.

என்ன காரணம்?

அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.

குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.

அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழு வதும் அரிப்பை ஏற்படுத்தும்.

குளிரும் ஆகாது!

சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.

தொடை இடுக்கு அரிப்பு

காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். கால் விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத்துகிற ஒரு காரணிதான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும்.

அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி... இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

வயதானால் வரும் அரிப்பு

முதுமையில் வருகிற அரிப்புக்கு வேறு காரணம் இருக்கிறது. வயதானவர்களுக்குத் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பு ஏற்படும்.

எச்சரிக்கும் நோய்கள்

உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

உணவும் மருந்தும்

நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்ல லாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.

மனப் பிரச்சினைகள்

அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள் உடலில் பூச்சி ஊறுவதைப்போல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால் எந்நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் அரிப்பும் சரியாகும்.

‘உடம்பு அரித்தால் ஒரு ‘அவில்’ போட்டுக்கோ’ என்று சாதாரணமாக வீடுகளில் சொல்வார்கள். அதேவேளையில் எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றால்தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும். நாமாக மருந்து சாப்பிடுவது, ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதைப் போல.



-கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

பூச்சிகள் உலகம்: உலகின் ஆபத்தான ங்கொய்ய்... ங்கொய்ய்...


உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மனிதர்கள் இறப்புக்குக் காரணமாகும் உயிரினம் எது தெரியுமா? சிங்கம் புலி போன்ற விலங்குகளோ, சுறா, திமிங்கலம் போன்ற கடல் வாழ் உயிரிகளோ, பாம்பு போன்ற விஷ ஜந்துக்களோ கிடையாது. அளவில் மிகவும் சிறிய கொசுதான் அந்த ஆபத்தான உயிரினம்!

மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு எனப் பல்வேறு காய்ச்சல்களைப் பரப்பும் கொசுவிடமிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுவும் மழைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆபத்தான உயிரினம் மட்டுமல்ல, அறிந்துகொள்ள பல்வேறு சுவாரசியங்களைக் கொண்டிருப்பவை இந்தக் கொசுக்கள். அவற்றைத் தெரிந்து கொள்வோமா?

டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலிருந்து பூமியில் இருக்கும் பழமையான உயிரினங்களில் ஒன்று கொசு.

# சுமார் 3,000-க்கும் மேற்பட்ட கொசு இனங்கள் உலகம் முழுக்க வாழ்கின்றன. இவற்றில் குறிப்பிட்ட இனக் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைப் பாதிக்கின்றன.

# பெண் கொசு மட்டுமே மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. கொசுக்கள் நீர்ப்பரப்பில் முட்டையிட்டு தனது இனத்தைப் பெருக்கும். அதனாலேயே நமது வசிப்பிடத்தைச் சுற்றி நீர் தேங்காது கவனித்துக்கொள்கிறோம்.

# பெண் கொசு தனது முட்டைகளை உருவாக்கத் தேவையான புரதச் சத்துக்காக மனித ரத்தத்தை உறிஞ்சுகின்றன.

# ஆண் கொசுக்கள் பெரிய தொந்தரவு செய்வதில்லை. தமக்குத் தேவையான உணவைத் தாவரங்களிடமிருந்து ஆண் கொசுக்கள் பெறுகின்றன.

# ஆணைவிடப் பெண் கொசுவுக்குப் பல மடங்கு ஆயுள் அதிகம். பெண் கொசு ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் இடும். இதுவே கொசுக்களின் எண்ணிக்கை வேகமாகப் பெருகக் காரணம்.

# கொசு நம் தோலுக்குள் துளையிட்டு ரத்தம் உறிஞ்சுவதையே கொசு கடிப்பதாக சொல்கிறோம். உண்மையில் கொசுவுக்குப் பல் போன்ற உறுப்புகள் இல்லை. ஊசி போன்ற குழல் ஒன்றைச் செலுத்தி ரத்தத்தை உறிஞ்சுகிறது.

# அப்படி உறிஞ்சும்போது உமிழ்நீரை நம் உடலில் கொசு செலுத்துகிறது. இதுவே நமக்கு அந்த இடத்தில் அரிப்புக்கும் தடிப்புக்கும் காரணமாகிறது.

# மனிதர்களிடமிருந்து வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் உடல் வெப்பத்தைத் தனது உணர்நீட்சி மூலம் பல அடி தொலைவிலிருந்தும் கொசுக்களால் அடையாளம் காண முடியும்.

# கொசு நம்மைச் சுற்றிப் பறக்கும்போது ‘ங்கொய்ய்’ என்று எரிச்சலூட்டுமே, அந்த ஒலி கொசுவின் இறக்கைகளிலிருந்து வருகிறது. விநாடிக்குப் பல நூறு தடவைகள் என அப்போதைய வேகத்தைப் பொறுத்துத் தனது இறக்கைகளைக் கொசு விசிறிப் பறக்கும். கொசுக்கள் முன் பின்னாகவும், பக்கவாட்டிலும், மேல் கீழ் என பல திசைகளில் பறக்கக் கூடியவை.

# சராசரியாக 2.5 மில்லி கிராம் எடையே உள்ள கொசு, தனது எடையைப்போல 2 மடங்குக்கும் அதிகமான ரத்தத்தை மனிதரிடமிருந்து உறிஞ்சும்.

மிகக் குறைவான எடை காரணமாக, வேகமான காற்று கொசுவுக்கு இடைஞ்சலாகும். இதனாலேயே கொசு விரட்டிகளைவிட மின் விசிறி, நம்மைக் கொசுக்களிடமிருந்து பாதுகாக்கிறது.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது கடினம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்

Return to frontpage

தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவது மிகவும் கடினமானது. இந்த விவகாரத்தில் கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில‌ முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவது குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில் காவிரி மேற்பார்வை குழு வரும் 30-ம் தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறக்க உத்தரவிட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் 27- ம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி நீரை திறந்து விடுமாறு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்த உத்தரவை அமல்படுத்துவது கடினமானது.

கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், மூத்த அதிகாரிகள் ஆகியோர் எடுத்துக்கூறியும் உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் 4 வாரம் கெடு விதித்திருக்கிறது. இது தொடர்பாக விவாதிப்பதற்காக புதன்கிழமை அமைச்சரவை கூட்டத்தையும், எம்எல்ஏ., எம்.பி.க்கள் கூட்டத்தையும், அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டியுள்ளேன். இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

எனவே கர்நாடக மக்களும், கன்னட அமைப்பினரும், விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும். கர்நாடக மக்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே கர்நாடக அரசுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

கர்நாடகாவில் போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இது தொடர்பாக முன்னாள் முதல்வரும், கர்நாடக பாஜக தலைவருமான எடியூரப்பா கூறும்போது, ''கர்நாடகாவில் குடிப்பதற்கு குடிநீர் நீர் இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது எனக்கூறி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் சித்தராமையா ஆட்சியை இழந்து சிறைக்கு சென்றால் நாங்களும் அவருடன் சிறைக்கு செல்வோம். எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரை கூட தரக்கூடாது''என்றார்.

NEWS TODAY 23.12.2025