Saturday, October 1, 2016

புதையல் ஆசை... நிர்வாண பூஜை..! திருச்சி திகில் கொலைகள்


திருச்சி மாவட்டத்தில் புதையல் ஆசை காட்டி 8 பேரை கொலை செய்தவர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிர்வாண பூஜை நடத்தி தந்தை உள்பட 8 பேரை கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த வேங்கூரைச் சேர்ந்தவர் தங்கதுரை. தி.மு.க பிரமுகர் ஒருவரின் உறவினர். இவர், கடந்த 7ம் தேதி மாயமானார். இவரது உடல் நிர்வாண நிலையில் கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் உள்ள வாய்க்காலில் கிடந்தது. அவரது மரணம் தொடர்பாக திருவெறும்பூர் போலீஸார் விசாரித்தனர். அப்போது தங்கதுரையின் நண்பர் சப்பாணியிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விசாரணையின் போது சப்பாணி, தங்கதுரையை மட்டுமல்லாமல் தன்னுடைய தந்தை உள்பட 8 பேரை கொலை செய்ததை போலீஸாரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு சப்பாணியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் சொன்ன இடங்களுக்கு சென்று ஒவ்வொரு உடல்களை தோண்டி போலீஸார் எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், கடந்த 2012ல் திருவெறும்பூர் மேல குமரேசபுரத்தைச் சேர்ந்த கோகிலா (70), பாப்பாக்குறிச்சி அற்புதசாமி (70), 2015ல் கீழ குமரேசபுரம் விஜய் விக்டர் (27), கிருஷ்ணசமுத்திரம் தெக்கன் (75), 2016ல் கூத்தைப்பார் வடக்கு ஹரிஜனத் தெருவைச் சேர்ந்த சத்தியநாதன் (45), உப்பிலியபுரம் வடகாடு குமரேசன் (50) ஆகியோரை சப்பாணி கொலை செய்துள்ளார். அடுத்து சப்பாணி, தன்னுடைய தந்தை தெக்கனையும் (75) கொலை செய்துள்ளார். பணம், நகைகளை கொள்ளையடிக்க சப்பாணி இந்த கொலைகளை செய்துள்ளார்" என்றனர்.

8 பேரையும் சப்பாணி கொலை செய்த ஸ்டைலே தனி என்கிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். "கோயிலுக்கு வரும் நபர்களிடம் சப்பாணி, முதலில் பேச்சுக் கொடுப்பார். அப்போது அவர்களின் வேண்டுதல்களை தெரிந்து கொள்வார். அதில் பணம் தேவைக்காக வருபவர்களிடம் காட்டில் புதையல் இருக்கிறது. பூஜை செய்தால் அதை எடுத்துவிடலாம் என்று ஆசைவார்த்தை கூறுவார். சப்பாணியின் பேச்சை நம்புபவர்கள் அந்த பூஜையில் கலந்து கொள்வார்கள். அவ்வாறு பூஜைக்கு சென்றவர்களை கொன்று நிர்வாணமாக புதைப்பதை சப்பாணி ஒரு வேலையாக வைத்துள்ளார். அவரது பேச்சு, நடவடிக்கை எல்லாம் பார்க்கும் போது சைக்கோ போல தெரிகிறது. சப்பாணி சொன்ன தகவலின்படி கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளோம். பிறகு டி.என்.ஏ பரிசோதனை நடத்தி சம்பந்தப்பட்டவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும். 7 பேரை கொன்ற சப்பாணி, தன்னுடைய தந்தை தெக்கனையும் கொலை செய்துள்ளார். அவரையும் புதையல் ஆசை காட்டி கொலை செய்தாரா என்று விசாரித்து வருகிறோம்" என்றார்.

கொலை செய்வது எப்படி?

புதையல் ஆசையில் சப்பாணியுடன் செல்லுபவர்களிடம் நிர்வாணமாக இருந்து பூஜை செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்று சொல்வார் சப்பாணி. அதன்படி அவர்களும் நிர்வாணமாகவே பூஜையில் கலந்து கொள்வர். மந்திரங்கள் கூறியப்பிறகு சாமி கும்பிட கண்களை அவர்கள் மூடும் போது கல்லை தூக்கிப் போட்டு அவர்களை கொலை செய்துவிடுவாராம் சப்பாணி. இதன்பிறகு அவர்களிடமிருந்த பணம், நகை உள்ளிட்டவைகள் கொள்ளையடித்து விட்டு உடலையும் காட்டுப்பகுதியில் புதைத்து விடுவாராம். இதனால் சப்பாணி செய்த கொலைகள் யாருக்கும் தெரியவில்லை. தங்கதுரை கொலையில் சிக்கியபிறகே அவரது முழு சுயரூபமும் போலீசுக்கு தெரியவந்துள்ளது. சப்பாணிக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். மேலும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

எஸ்.மகேஷ்

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் சுதிர் குப்தா... யார் இவர்...?


vikatan.com

சுவாதி கொலை வழக்கில் போலீஸார் குற்றம்சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ராம்குமார். அவர், கடந்த 18-ம் தேதி மின்கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டார் என போலீஸார் தெரிவித்தனர். முதலில், அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் பின்னர், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்த அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய முடிவுசெய்யப்பட்டது. ஆனால், ராம்குமாரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், ‘இது போலீஸாரின் திட்டமிட்ட கொலை’ என்று கூறி பிரேதப் பரிசோதனை செய்ய மறுத்தனர். அதுமட்டுமின்றி, ‘தமிழக அரசு சார்பில் உள்ள மருத்துவர்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றால்... உண்மை வெளியே வராது. எனவே, ராம்குமார் தரப்பில் ஒரு தனியார் மருத்துவர் இருக்க வேண்டும்’ என்று கோரினர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.


நீதிமன்றத்தை நாடிய ராம்குமார் தரப்பு!

இதனைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர் ராம்குமார் தரப்பினர். இதனை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. ‘வேண்டும் என்றால் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்யலாம்’ என்று உத்தரவிட்டார். அதிலும் திருப்தி அடையாத ராம்குமார் தரப்பு, உச்ச நீதிமன்றம் சென்றது. அப்போது, ‘இந்த மனுவை விசாரிக்கத் தேவையில்லை’ என்று அது தள்ளுபடி செய்தது. மேலும், தனியார் மருத்துவரை அனுமதிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரைச் சேர்த்து அக்டோபர் 1-ம் தேதிக்குள் பிரேதப் பரிசோதனையை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணி முதல் ராம்குமார் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பிரேதப் பரிசோதனை, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சுதிர்குப்தா குழுவுடன் தொடங்கியுள்ளது. இதில் பாலசுப்ரமணியம், செல்வகுமார் உள்பட 5 மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

யார் இந்த சுதிர் குப்தா?

உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி ராம்குமார் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய உள்ள குழுவில் இணைந்துள்ள சுதிர் குமார் குப்தா எய்மஸ் மருத்துவமனையின் மருத்துவர் ஆவார். இவர், எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவராக இருந்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. பின்னர் வழக்கில் சுனந்தா உடலை பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர் சுதிர் குப்தா, ‘சுனந்தாவின் கைகள் மற்றும் கன்னத்தில் காயங்கள் இருந்ததாக’ அஞ்சாமல் அறிக்கை கொடுத்து அதிரவைத்தார். சில மாதங்கள் கடந்த நிலையில், ‘சுனந்தாவின் மரணம் இயற்கையானது’ என அறிக்கை அளிக்குமாறு தமக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக சுதிர் குப்தா கூறினார். அதற்காக, ‘தம்மீது எய்ம்ஸ் மருத்துவமனை நடவடிக்கை எடுத்தால் அதைக் கண்டு தாம் அஞ்சப்போவது இல்லை’ என்றும் தெரிவித்தார். சுதிர் குப்தா சொன்ன அறிக்கையைத் தொடர்ந்தே இந்த வழக்கு சூடுபிடித்தது. பின்னர், எய்ம்ஸ் மருத்துவமனை தடயவியல் துறைத் தலைவர் பொறுப்பிலிருந்தும் சுதிர் குப்தா நீக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தர்மபுரியில் மர்மமான முறையில் மரணமடைந்த தர்மபுரி இளவரசன் பிரேதப் பரிசோதனையில் பிரச்னை எழுந்தபோது, உயர் நீதிமன்றம் நியமித்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் குழுவிலும் சுதிர் குப்தா இருந்தார்.

‘‘சரவணன் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை!’’

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்துவந்தார் திருப்பூர் மாணவரான சரவணன். அவர், கல்லூரியில் சேர்ந்து 10 நாட்களில் விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். சரவணன் உயிரிழப்பு தற்கொலை என்று கூறப்பட்டது. ஆனால், பிரேதப் பரிசோதனை செய்த சுதிர் குப்தா தலைமையிலான மருத்துவர் குழு, ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சரவணன் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. சரவணன் உடலில் யாரோ விஷ ஊசியைச் செலுத்தியிருக்க வேண்டும். மருத்துவம் தெரிந்தவராலேயே இந்த ஊசியைச் செலுத்த முடியும்’’ என்று தெரிவித்திருந்தது.

ராம்குமார் உடலை பிரேதப் பரிசோதனை செய்யும் குழுவிலும் குப்தா இணைந்திருப்பது இந்த வழக்கில் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஈடுபட்டுள்ள குப்தா என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவக் குழுவினர் மற்றும் மேஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி ஆகியோர் ராம்குமார் பெற்றோரைப் பார்த்து, ‘‘எங்களுடைய பரிசோதனை நேர்மையாக இருக்கும்’’ என்று கூறியதாக ராம்குமார் ஆதரவாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

‘‘ராம்குமார் உடலில் காயங்கள் உள்ளன!’


’இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ராயப்பேட்டையில் உள்ள ராம்குமாரின் உடலைப் போய் பார்த்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ‘‘ராம்குமார் உடலில் காயங்கள் இருப்பதாக மேஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வியிடம் புகார் அளித்துள்ளோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை, வீடியோ பதிவை இன்றே வழங்க வேண்டும். ராம்குமார் மரணம் தொடர்பாக சிறைத் துறை நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது’’ என்றார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால், மட்டுமே இந்த வழக்கின் அடுத்த நகர்வு என்ன என்பது தெரியவரும்.

- கே.புவனேஸ்வ
ரி

உள்ளாட்சி 5: உங்கள் ஒரு ரூபாயில் 86 பைசா எங்கே?


உங்கள் அதிகாரத்தைத் தெரிந்துக்கொண்டீர்கள். சரி, என்றைக்காவது அதனைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? உங்கள் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ஒருமுறையேனும் கலந்து கொண்டிருக்கிறீர்களா? அங்கே மக்கள் பிரச்சினை குறித்து கேள்வி எழுப் பியிருக்கிறீர்களா? ‘இல்லை’ என்பவர் கள் இனியாவது அதை செய்யுங்கள். “அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத் தும்போது மக்கள் அனைவரும் அதிகார வர்க்கத்தை எதிர்ப்பதற்கான தகுதியைப் பெறுவதே உண்மையான சுயாட்சி” என்றார் மகாத்மா காந்தி.

காந்தி இதனைச் சொன்ன காலகட்டத்தில் அதிகார வர்க்கத்துக்கு பத்து, இருபது தலைகளே இருந்தன. இன்று கூரிய கொம்புகளுடன் ஆயிரம் தலைகள் முளைத்துவிட்டன. இந்தச் சூழலில் அதிகார வர்க்கம் தவறு இழைக்கும்போது எதிர்ப்பது அவரவர் முடிவு. அனைவரும் சசி பெருமாள் ஆக முடியாதுதான்; அனைவரும் டிராஃபிக் ராமசாமி ஆக முடியாதுதான். ஆனால், அனைவரும் கேள்வி எழுப்பலாம், இல்லையா?

நாட்டுக்காக வேண்டாம். குறைந் தது, உங்கள் வீட்டுக்காகக் கேள்வி கேளுங்கள். உங்கள் வீட்டுக்கு பாது காக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை யா? கேள்வி கேளுங்கள். மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லையா? கேள்வி கேளுங்கள். உங்கள் குழந்தை படிக்க அரசுப் பள்ளி இல்லையா? கேள்வி கேளுங்கள். உங்கள் வீட்டுக்கு முன் பாக சாக்கடை அடைத்துக்கொண் டுள்ளதா? கேள்வி கேளுங்கள். குப்பை அள்ள ஆள் வரவில்லையா? கேள்வி கேளுங்கள். அருகில் இருக்கும் மதுக்கடை அச்சுறுத்தலாக இருக் கிறதா? கேள்வி கேளுங்கள். கேட்பதில் என்ன தயக்க வேண்டிக்கிடக்கிறது?

உலகம் உயிர்ப்புடன் இருக்கிற தென்றால் காரணம் கேள்விகளே. கேள்விகளுக்கு உயிர் உண்டு. கேள்விகள் தனித்து பிறப்பதில்லை. அவை துணைக் கேள்விகளுடனே பிறக்கின்றன. பிறக்கும் ஒவ்வொரு கேள்வியும் நிறைய குட்டிகளைப் போடுகின்றன. முடிவுறாத கேள்வி களின் இயக்கமே உலகத்தின் இயக் கம். கேள்விகளால் உருவானதுதான் மனித சமூகத்தின் வளர்ச்சி. கேள்விகள் எழுப்பாத சமூகம் பகுத்தறிவற்ற சமூகம். அது தேங்கிவிடும்.

நீங்கள் எழுப்பும் தனிநபர் கேள்வியே சமூகத்தின் கேள்விகளா கின்றன. சமூகங்களின் கேள்விகளே கிராமத்தின் கேள்விகளாகின்றன. கிராமங்களின் கேள்விகளே நகரங் களின் கேள்விகளாகின்றன. நகரங் களின் கேள்விகளே நம் தேசத்தின் கேள்விகளாகின்றன. தேசங்களின் கேள்விகளே சர்வதேசங்களையும் கட்டுப்படுத்துகின்றன. இங்கே கேட் காமல் எதுவும் கிடைக்காது. தட்டாமல் எதுவும் திறக்காது. பதில்கள் உடனே கிடைக்காது. ஆனால், கிடைக்காமலே போகாது.

இந்த இடத்தில், “எல்லாம் சரி, கிராம சபைக் கூட்டம் நடப்பதே எங்க ளுக்கு தெரிவதில்லையே...” என்கிற உங்கள் முணுமுணுப்பும் கேட்கிறது. அதையும் உங்கள் கேள்வியின் மூலமே முறியடிக்க இயலும். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 3(2)-ன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சியும் ஆறு மாதங்களுக்குக் குறையாத இடைவெளியில் கிராம சபையைக் கூட்ட வேண்டியது கட்டாயம். மிக மிகக் கட்டாயமாக ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கூட்டப்பட வேண்டும்.

கிராம சபைக் கூட்டம் கூட்டப்படுவதற்கு ஏழு நாட்கள் முன்பு கூட்டம் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும். கூட்டம் நடத்தப்படும் இடம், நாள், நேரம் மற்றும் கூட்டத்தில் விவாதிக்கப் படும் விஷயங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை பஞ்சாயத்து அலுவல கம், பள்ளிகள், கோயில்கள், மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சத்துணவு மையம், தொலைக்காட்சி அறை உள் ளிட்ட பொது இடங்களில் ஒட்ட வேண் டும். தண்டோரா அடித்து தகவல் சொல்ல வேண்டும். ஒலிப்பெருக்கியில் அறிவிக்க வேண்டும்.

வார்டு உறுப்பினர்கள் வீடுதோறும் சென்று மக்களை அழைக்க வேண் டும். ஒருவேளை உங்கள் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் கிராம சபைக் கூட்டத்தை நடத்த மறுத்தால் துணைத் தலைவர் கூட்டம் கூட்ட வேண்டும். அவரும் மறுத்தால் உங்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகார பூர்வமாக தகவல் சொல்லுங்கள். அவர் வந்து கிராம சபையைக் கூட்டுவார். கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் 72 மணி நேரத்துக்குள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும்.

ஜனவரி 26-ம் தேதியில் கூட்டப் படும் கூட்டத்தில் உங்கள் கிராமத்துக்கு என்னென்ன வளர்ச்சிப் பணிகள் வேண்டும் என்பது பட்டியலிடப்படும். ஊருக்கு என்ன வேண்டும் என்று நீங் கள் கேட்கலாம். திட்டகளுக்கான அடுத்த நிதியாண்டு திட்ட அறிக்கை மற்றும் வரவு செலவு திட்டத்தைச் சபை யில் வைத்து ஒப்புதல் பெறுவார்கள். அதனையும் பார்க்கலாம்.

மே 1-ல் கூட்டப்படும் கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களில் பயன் பெறும் பயனாளிகளின் பட்டியலை வாசித்து ஒப்புதல் பெற வேண்டும். அதில் போலிகள் சேர்க்கப்பட்டிருக் கலாம். உங்கள் பெயர் நீக்கப்பட்டிருக் கலாம். இவற்றை எல்லாம் நீங்கள் கலந்துக்கொள்வதின் மூலமே சரி செய்ய இயலும். தவிர, அன்றைய நாள் கூட்டத்தில்தான் அந்த வருடம் கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் பெற வேண்டும்.

ஆகஸ்ட் 15-ல் வறுமை ஒழிக்கும் புதுவாழ்வுத் திட்டம், தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம் (தாய்), பசுமை வீடுகள் திட்டம், ஊரக குடியிருப்புத் திட்டம், மகளிர் திட்டம், மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உட்பட அனைத்து துறைகளிலும் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பார்கள்.

அப்படி யாரும் எடுத்துரைக்க வில்லை எனில் கேட்டுத் தெரிந்துக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. அக்டோபர் 2-ல் கிராமப் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் அரசின் இதரத் துறைகள் மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகள் மீதான ஆய்வு நடக்கும். பஞ்சாயத்தின் முந்தைய ஆண்டு வரவு செலவு கணக்குகள் மீதான தணிக்கைக் குறிப்புகளை ஆய்வு செய்வார்கள். இவற்றிலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தாராளமாகக் கேட்கலாம்.

இவற்றை எல்லாம் ஏன் கேட்க வேண்டும்? ஏனெனில் அந்தத் திட்டங் களுக்கான நிதி உங்கள் வரிப்பணத் தில் இருந்து வருகிறது. அதனாலேயே அவற்றை ஆய்வு செய்யும் உரிமை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இவற்றை எல்லாம் இத்தனை காலமாக கேள்வி கேட்காமல் இருந்த தின் விளைவு என்ன தெரியுமா? ஒவ் வோர் ஐந்தாண்டுத் திட்டங்களிலும் மத்திய, மாநில அரசுகள் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.5 அல்லது 6 கோடி வரை ஒதுக்குகிறது.

உங்களுக்காக அரசு ஒதுக்கும் இந்த நிதியின் ஒரு ரூபாயில் 0.14 பைசா மட்டுமே உங்களை வந்தடை கிறது. மீதமுள்ள 86 பைசா ஊழலிலும் நிர்வாகச் செலவுகளிலுமே கரைந்துப்போகிறது. இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய திட்டக்குழு ஆகிய அமைப்புகள் நடத்திய இருவேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட உண்மை இது!

புதிய கால அட்டவணை வெளியீடு: 88 விரைவு ரயில் வேகம் அதிகரிப்பு - பயண நேரம் 20 முதல் 90 நிமிடங்கள் குறையும்


புதிய கால அட்டவணையின்படி 88 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயண நேரம் 20 முதல் 90 நிமிடங்கள் வரையில் குறையும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோக்ரி தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணையை தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோக்ரி நேற்று வெளியிட, தலைமை செயல் மேலாளர் எஸ்.அனந்தராமன் பெற்றுக் கொண்டார். பின்னர், ஜோக்ரி கூறியதாவது:

தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை அக்டோபர் 1-ம் தேதி (இன்று) முதல் நடைமுறைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரையில் இந்த புதிய அட்டவணை பின்பற்றப்படும். தெற்கு ரயில்வேயில் மொத்தம் 9 வாராந்திர விரைவு ரயில்கள் 3 வகையான பெயர்களில் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரல் - ஆமதாபாத் (ஹம்சபர்) வாராந்திர விரைவு ரயில் (புதன்கிழமைகளில்), திருச்சி- கங்கா நகர் வாராந்திர விரைவு ரயில் (வியாழக்கிழமைகளில்) இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - சந்திர காச்சி இடையே (அந்த்யோதயா) வாராந்திர விரைவு ரயில் (புதன் கிழமைகளில்), எர்ணாகுளம் ஹவுரா இடையே அந்த் யோதயா அதிவிரைவு ரயில் (செவ்வாய்க்கிழமைகளில்) இயக் கப்படுகிறது. கோயம்புத்தூரில் இருந்து கே.எஸ்.ஆர். பெங்களூ ருக்கு உதய் அதிவிரைவு ரயில் திங்கள்கிழமை தவிர மற்ற நாட்களில் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும். எர்ணாகுளம் - ஹட்டியா இடையே வாராந்திர அதிவிரைவு ரயில் (வியாழக் கிழமைகளில்) இயக்கப்படுகிறது. மேற்கண்ட 6 புதிய ரயில்கள் இயக்கம் தொடங்குவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதுதவிர, மற்ற மண்டலங்களில் இருந்து இயக்கப்படும் 3 புதிய வாராந்திர விரைவு ரயில்களும் தெற்கு ரயில்வேயில் கடந்து செல்லும் வகையில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் வரையில் தினமும் இயக்கப்பட்டு வந்த காக்கிநாடா சர்கார், கச்சிகுடா விரைவு ரயில்கள் செங்கல்பட்டு வரை யில் நீடிக்கப்பட்டு இயக்கப் படுகிறது.



தெற்கு ரயில்வே சார்பில் இயக் கப்படும் 88 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 38 ரயில்கள் 20 நிமிடம் முதல் 60 நிமிடம் வரையும், 7 ரயில்கள் 60 நிமிடம் முதல் 90 நிமிடம் வரையும் விரைவாக சென்றடையும். அதிகபட்சமாக, சிலம்பு, ராமேஸ்வரம் விரைவு ரயிலில் 90 நிமிட பயண நேரம் குறையும்.

இதற்கிடையே, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து புறப்படும், வந்தடையும் 43 ரயில்களின் நேரம் மாற்றப் பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம், எழும்பூர்- ஜோத்பூர் வாராந்திரம், சென்னை சென்ட்ரல் - ஹூப்ளி வாராந்திரம் ஆகிய விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதில் ராமேஸ்வரம், ஜோத்பூர் 2 ரயில்களும் வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் மாற்றப்படும். மற்ற ரயில்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். சென்னை சென்ட்ரல் - பெங்களூர் விரைவு ரயில் 12795/12796-க்கு பதில் 22690/ 22689 ஆக மாற்றப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். சென்னை - திருவனந்தபுரம் ஏசி வாராந்திர விரைவு ரயில் காட்பாடி மற்றும் ஈரோட்டில் நிரந்தரமாக நின்று செல்லும்.



இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, சென்னை கோட்ட மேலாளர் அனுபம்சர்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செல்போன் மூலம் முழு தகவல்

தெற்கு ரயில்வேயில் விரைவு ரயில்களின் புதிய கால அட்ட வணை நேற்று வெளியிடப் பட்டுள்ள நிலையில், இன்று உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இருப்பினும் ஏற் கெனவே, பயணத்தை திட்ட மிட்டு ரயில் டிக்கெட் முன் பதிவு செய்த பயணிகளுக்கு ரயில்களின் நேர மாற்றம், ரயில் எண் மாற்றம் உள்ளிட்ட புதிய தகவல்களை பதிவு செய்யப்பட்டுள்ள பயணி களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்ப ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.

மின்சார ரயில்கள்

சென்னை சென்ட்ரல் பேசின்பிரிட்ஜ் இடையே 5, 6-வது புதிய பாதைகள் நிறைவடைந் துள்ளன. இதேபோல், கடற்கரை தாம்பரம் - செங்கல்பட்டு உள்ளிட்ட வழித்தடங்களில் கால அட்டவணை மாற்றிய மைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அடுத்த 2 மாதங்களில் மின்சார ரயில் களின் புதிய கால அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.

ரூ.35-க்கு விற்பனை

புதிய கையேடுகள் இன்று முதல் ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கையேடு விலை ரூ.35 ஆகும்.

காலனால் வெல்ல முடியாத ஆளுமை: சிவாஜி கணேசன் 88

நா.முத்துவீராச்சாமி - கா. சுந்தராஜன்

அக்டோபர் :1- சிவாஜி கணேசன் 88



சின்னையா - ராஜாமணி தம்பதிக்கு 1928-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளில் பிறந்த குழந்தைதான் கணேசன். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தந்தை சிறை சென்றிருந்தால் பிறக்கும்போதே தந்தையின் முகம் காணவில்லை. தந்தை விடுதலையானபோது அவரது வேலை பறிக்கப்பட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் குடியேறினர்.

படிப்பின் மீது ஆர்வமில்லாத கணேச மூர்த்திக்குத் தெருக்களில் நடந்த கூத்துக்கள், நாடகங்கள் மீது ஆர்வம் அதிகம். நண்பர் காக்கா ராதாகிருஷ்ணன் மூலம் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் குழுவில் சேர்ந்துவிட்டார். கணேசனின் கலைப் பயணத்துக்கு அங்கு வித்திடப்பட்டது. பல முக்கியமான வேடங்களில், பெண் வேடம் உட்பட அனைத்து வேடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.

பெரியாரின் பாராட்டு

அறிஞர் அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ என்ற நாடகத்தின் அரங்கேற்றத்தில் திடீர் என்று ஏற்பட்ட மாறுதலால் முதல் நாள் அளிக்கப்பட்ட 90 பக்க வசனங்களை ஒரே இரவில் படித்து நாடகத்தில் சிவாஜியாகவே மாறினார் கணேசன்.

திரைப்படம், நாடகம் ஆகியவற்றைப் பெரிதும் விரும்பாத பெரியார் ஈ.வெ.ரா., அண்ணாவின் நாடகத்துக்குத் தலைமை தாங்கினார். கணேசனின் நடிப்பும் வசன உச்சரிப்பும் அவரை வெகுவாக ஈர்க்க, நாடகத்தை ரசித்துப் பார்க்க ஆரம்பித்தார். முடிவில் கணேசனைப் பாராட்டிய அவர், ‘நீ சிவாஜியாகவே மாறிவிட்டாய் இன்று முதல் உன் பெயருடன் சிவாஜியும் சேர்ந்து சிவாஜி கணேசன் ஆகிறாய்’ என்று மனதாரப் பாராட்டினார்.

விமான டிக்கெட்டுடன் வந்த வாய்ப்பு

பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘பராசக்தி’ என்ற நாடகத்தில் சிவாஜி கணேசன் முக்கியப் பாத்திரத்தில் நடித்துவந்தார். அந்நாடகத்தைப் பார்த்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனர் பி .ஏ. பெருமாள் முதலியாரும் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரும் இணைந்து இந்நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்தனர். இப்படத்தின் கதாநாயகன் குணசேகரனாக கே. ஆர். ராமசாமியை நடிக்கவைக்க ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் முடிவெடுத்தார். ஆனால் பி.ஏ. பெருமாள் ஒரு புதுமுக நடிகரை வைத்து படமெடுக்க வேண்டும் என்ற முடிவுடன் ‘நூர்ஜகான்’ நாடகத்தில் பெண் வேடத்தில் நடித்த கணேசனைக் கதாநாயனாக நடிக்க வைக்க விரும்பினார்.

திருச்சியில் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த சிவாஜி கணேசனுக்கு விமான டிக்கட்டுடன் சென்னையிலிருந்து சினிமாவில் கதாநாயனாக நடிக்க அழைப்பு வந்தது. 1951-ம் ஆண்டு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் சக்ஸஸ் சக்ஸஸ் என்ற முதல் வசனத்துடன் தன் கலையுலக வாழ்வை ஆரம்பித்து, சினிமாவில் வெற்றி நாயகனாக அரை நூற்றாண்டுக் காலம் திகழ்ந்தார்.

அழியாத பிம்பங்கள்

‘பராசக்தி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள், புராண, சரித்திர நாயகர்களின் கதாபாத்திரங்கள், வரலாற்று நாயகர்கள், எதிர்மறையான கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் தன்னுடைய நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும், நடை, உடை பாவனையாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு சிறந்த நடிகனாக உருமாறினார். சிவன், கர்ணன், வ.உ.சி., கட்டபொம்மன் போன்றோரை நினைக்கும்போது நம் நினைவில் சிவாஜியின் முகமே நிழலாடும். தந்தை, மகன், அண்ணன், கணவன் எனப் பல்வேறு உறவு முறைகளை அழியாத திரைப் பிம்பங்களாக மாற்றினார்.

கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து...



தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று 305 திரைப்படங்களில் நடித்துள்ள சிவாஜி கணேசன், சிறந்த நடிகருக்கான ஆசிய - ஆப்பிரிக்கத் திரைப்பட விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, மத்திய அரசின் பத்ம, பத்மபூஷன் விருது, திரைத்துறை வித்தகருக்கான தாதாசாகேப் பால்கே விருது, தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது, பிரெஞ்சு அரசாங்கத்தின் செவாலியே விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தன்னுடைய அன்னை இல்லத்தின் மேல் ஒரு சிறுவன் புத்தகம் படிப்பது போன்ற ஒரு சிறிய சிற்பத்தை வைத்திருந்தார். அவர் வாழ்ந்த சென்னை, தியாகராயநகர், தெற்கு போக் சாலை செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி உலகமே அவரைக் கவுர வித்தது. 1962-ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாகாணத்திலுள்ள நயாகரா நகரின் ஒரு நாள் கவுரவ மேயர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். 2001-ல் அவர் மறைந்த பிறகு மத்திய அரசு அவருக்குத் தபால் தலை வெளியிட்டுப் பெருமை சேர்த்தது. 2006-ம் ஆண்டு புதுச்சேரி அரசின் சார்பில் புதுச்சேரியிலும், தமிழக அரசு சார்பில் சென்னை கடற்கரை காமராஜர் சாலையிலும் முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டன.

திரைக்கு அப்பால்

திரைப்படங்களைத் தாண்டியும் அவரது பங்களிப்பு நீண்டது. சினிமாவில் தீவிரமாக நடித்துக்கொண்டிருந்தபோதே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று நடிகர் சங்கத்துக்காகக் கலை அரங்கத்தைக் கட்டினார். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் கட்டபொம்மனுக்குச் சிலை அமைத்து அந்த இடத்தை நினைவுச் சின்னமாகச் சொந்தச் செலவில் பராமரித்தார். மும்பையில் வீ ரசிவாஜி சிலை அமைக்கப் பொருளுதவி வழங்கினார். சென்னை மெரினா கடற்கரையில் திருவள்ளுவருக்குச் சிலை அமைத்துக் கொடுத்தார். தன் மனைவி கமலா அம்மாள் போட்டிருந்த நகைகளை யுத்த நிதிக்காகத் தந்ததுடன், ரூ.17 லட்சம் தொகை வசூலித்துக் கொடுத்தார். மதிய உணவுத் திட்டத்துக்காகப் பிரதமர் நேருவிடம் ரூ. 1 லட்சம் வழங்கினார். பெங்களுர் மக்கள் நலனுக்காக ‘கட்டபொம்மன்’ நாடகத்தின் மூலம் ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கினார். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான காமராஜர் சிலைகள் அவரால் நிறுவப்பட்டவை.

கலையுலகை வென்ற கலைஞனை 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் நாள் காலன் வென்றுவிட்டான். அவர் தன் நடிப்பால் மக்கள் மனதில் பெற்ற இடம் மகத்தானது, நிரந்தரமானது. காலன் உள்பட யாராலும் வெல்ல முடியாதது.

இளைப்பாறும் இசை!

வெ.சந்திரமோகன்

நுட்பமான உணர்வுகளைக் குரலில் வெளிப்படுத்திய ஜானகியம்மா ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்

சமீபத்தில், சிங்கப்பூரில் நடந்த ‘சைமா’ திரைப்பட விருது நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது ஜானகியம்மாவுக்கு வழங்கப்பட்டது. விருதை வாங்கிக்கொண்ட கையோடு மைக்கைப் பிடித்து, ‘கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலயும்’ என்று இவர் பாடத் தொடங்க, அலட்டல் இல்லாத, முதிர்ந்த இந்தப் பெண்மணியிடமிருந்து துள்ளலுடன் வெளிப்பட்டது ஓர் இளம் குரல். நினைவில் இருக்கும் பல பாடல்களைத் தொடர்ந்து பாடினார். ‘ருசி கண்ட பூனை’ படத்தில் பாடிய ‘கண்ணா நீ எங்கே?’ பாடலைக் குழந்தையின் மாறாத குதூகலத்துடன் இவர் பாடியதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. என்ன வயது ஜானகியம்மாவுக்கு! ஆனால், குரலில் இனிமை வற்றவேயில்லை. முதுமையின் தடுமாற்றம் இருந்தாலும் பழுதில்லாத குரல்.

இந்த ஜானகியம்மாதான் வயோதிகம் காரணமாக ஓய்வுபெறுவதாக அறிவித் திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ‘வேலையில்லாப் பட்டதாரி’ படத்தில் அனிருத் இசையில் இவர் பாடிய ‘அம்மா அம்மா’ பாடல் பிரபலமானது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘திருநாள்’ படத்தில் இடம்பெற்ற ‘தந்தையும் யாரோ’ பாடலுக்குப் பின்னர் தமிழில் வேறு எந்தப் பாடலையும் அவர் பாடவில்லைதான். ஆனால், பாடுவதை நிறுத்திக்கொள்வதாக இவர் அறிவித்த பின்னர், ஒரு பெரும் வெறுமையை ரசிகர்களால் உணர முடிகிறது. “இத்தனை வருஷம் எத்தனையோ நல்ல பாட்டு பாடிட்டேன். நானே பாடிட்டு இருக்கணுமா?” என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார். “என் பாட்டை ரசிகர்கள் என்னைக்கும் கேட்பாங்க” என்று மனநிறைவுடன் கூறுகிறார். அது முற்றிலும் உண்மை!

1957-ல் ‘விதியின் விளையாட்டு’ திரைப்படத்தில் சலபதி ராவின் இசையில் பதிவான ‘பேதை என் வாழ்க்கை பாழானதேனோ’ என்ற பாடல்தான் அவர் பாடிய முதல் தமிழ்ப் பாடல். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று எத்தனையோ மொழிகளில் பாடியிருக்கிறார். ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’ (ஆலயமணி), ‘சிங்காரவேலனே’ (கொஞ்சும் சலங்கை), ‘இந்த மன்றத்தில் ஓடி வரும்’(போலீஸ்காரன் மகள்), ‘சித்திரமே நில்லடி’ (வெண்ணிற ஆடை), ‘பூஜைக்கு வந்த மலரே வா’ (பாதகாணிக்கை), ‘கண்ணிலே என்ன உண்டு’ (அவள் ஒரு தொடர்கதை) என்று 1960-கள், 1970-களில் இனிமையான பல பாடல்களைப் பாடினார். எனினும், பி.சுசீலாவுடன் ஒப்பிட்டால், அந்தக் காலகட்டத்தில் இவர் பாடிய பாடல்கள் குறைவுதான்.

இரண்டாவது இன்னிங்ஸ்

1970-களில் பிற மொழிகளில் அதிகம் பாடினாலும், இளையராஜாவின் வருகைக்குப் பிறகு தனக்கு அதிகப் பாடல்கள் கிடைத்தன என்று ஜானகி சொல்லியிருக்கிறார். தமிழில் அதன் பிறகுதான் இவரது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் அவர் பாடிய ‘டூயட்’ பாடல்கள் கணக்கிட முடியாதவை. தனிப் பாடல்கள் தனிக் கணக்கு. ‘எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்’ (குரு), ‘குயிலே கவிக்குயிலே’ (கவிக்குயில்), ‘காற்றில் எந்தன் கீதம்’ (ஜானி), ‘தூரத்தில் நான் கண்ட உன் முகம் (நிழல்கள்), ‘எண்ணத் தில் ஏதோ சில்லென்றது’ (கல்லுக்குள் ஈரம்) என்று எத்தனை பாடல்கள்!

ரஹ்மானின் வரவுக்குப் பிறகும் இவரது இசைப் பயணம் தொடர்ந்தது. இளையராஜா வின் இசையில் ‘அவதாரம்’ படத்தில் இடம்பெற்ற ‘தென்றல் வந்து தீண்டும்போது’, ‘அரண்மனைக் கிளி’ படத்தின் ‘ராசாவே… உன்னை விட மாட்டேன்’, தேவா இசை யமைத்த ‘புள்ளகுட்டிக்காரன்’ படத்தின் ‘மெட்டி மெட்டி வெள்ளி மெட்டி’, கங்கை அமரன் இசையில் ‘அத்தமக ரத்தினமே’ படத்தின் ‘அள்ளி அள்ளி வீசுதம்மா’ என்று பல பாடல்கள் வரவேற்பைப் பெற்றவை. ரஹ்மான் இசையில் ‘மார்கழித் திங்கள் அல்லவா’ (சங்கமம்), ‘நெஞ்சினிலே’ (உயிரே) என்று அது ஒரு தனிப் பட்டியல். நாசர் இயக்கிய ‘தேவதை’ படத்தின் ‘ஒரு நாள் அந்த ஒரு நாள்’ பாடல் இளையராஜா - ஜானகி இணையின் மற்றொரு மகுடம்.

அன்பின் ஊற்று

எனினும், ஏராளமான புதிய குரல்கள் வந்துகொண்டிருந்ததால், 90-களின் தொடக்கம் வரை பல பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த ஜானகிக்குத் தமிழில் வாய்ப்புகள் குறைந்தன. ஆனால், கால மாற்றத்தைப் புரிந்துகொண்ட இவருக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகவே இல்லை. தனது இசைப் பயணத்தின் உச்சத்தில் இருந்தபோதே, தனக்குப் பிறகு பாட வந்த சித்ரா, ஸ்வர்ணலதா போன்ற பாடகிகளை மிகவும் ஊக்குவித்தவர் இவர். “எப்போதும் பாடல் கேட்டுக்கொண்டு, ஒரு குழந்தையைப் போல் கைபேசியில் ‘டாக்கிங் டாம்’ ஆப்ஸில் பேசிக்கொண்டிருக்கும் அன்பான ஜீவன் இவர்” என்று ஒரு முறை சொன்னார் சித்ரா.

குரலில் அத்தனை பாவம் காட்டும் ஜானகி, பாடும்போது தலையை அசைப்பதுகூடத் தெரியாது. அமைதியாக நின்றுகொண்டு பிரபஞ்சத்தைத் தாண்டும் குரல் வீச்சுடன் பாடுவார். ‘ரெக்கார்டிங்’ சமயத்தில் பயங்கரமாகக் கலாட்டா செய்வாராம் எஸ்.பி.பி. செல்லமாகக் கோபித்துக்கொள்வாராம் ஜானகி. தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில்கூட மனோ போன்ற பாடகர்கள் பணிவு கலந்த உரிமையுடன் இவரிடம் ‘செல்லச் சண்டை’ போடுவதுண்டு. கோபமே இல்லாத பெரியக்கா போல் அதைச் சமாளித்துக்கொண்டு பதிலுக்குக் கிண்டலும் செய்வார் இவர். ஆனால், காலம் தாழ்த்தி தனக்கு வழங்கப்பட்ட ‘பத்மபூஷண்’ விருதை ஏற்க உறுதியுடன் இவர் மறுத்தபோது பலருக்கும் ஆச்சரியம். பாலிவுட்டில் - ஏன், வட இந்தியா முழுவதிலும் லதா மங்கேஷ்கருக்கு இருக்கும் புகழும் மரியாதையும், அவருக்குச் சற்றும் குறைவில்லாத ஜானகிக்கு இங்கே கிடைக்கவில்லை. ‘பத்மபூஷண்’ விருதை 30 வருடங்களுக்கு முன்பே அவருக்கு வழங்கியிருக்க வேண்டும். சுமார் 40,000 பாடல்கள் பாடிய, ஒவ்வொரு பாடலையும் அத்தனை ஆத்மார்த்தமாக உயிர்ப்புடன் பாடிய ஒரு மாபெரும் பாடகிக்கு இந்த தார்மீகக் கோபம்கூட இல்லையென்றால் எப்படி? “பல்வேறு மொழிகளில் நான் பாடிய பாடல்களை ரசிக்கும் ரசிகர்களின் மனதில் நான் இருக்கிறேன். இதற்கு மேல் என்ன விருது வேண்டும்?” என்று சொன்னவர் இவர்.

ஜானகி பாடுவதை நிறுத்தியிருக் கலாம். ஓய்வு என்றே அறிவித்திருக்கலாம். எனினும், இனி இவர் அமர்ந்திருக்கப்போவது சாய்வு நாற்காலியில் அல்ல. ரசிகர்களின் மனதில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட அற்புதமான அரியணையில்!

வெ.சந்திரமோகன்

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

அறிவியல் அறிவோம்: வயதாவதைத் தள்ளிப்போட முடியுமா?

த.வி.வெங்கடேஸ்வரன்

அண்ணன் வயதுடையவருடன் நடந்து செல்கையில், நம்மைப் பார்த்து “நீ தான் மூத்தவனா” என்று யாராவது கேட்டால் எப்படியிருக்கும்?

இந்த விஷயத்தை நுணுக்கமாக ஆராய்ந்திருக்கிறார் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த டியூக் பல்கலைக்கழகப் பேராசிரியர் டானியல் பெல்ஸ்கை. “உங்கள் வயதும், உடல் மூப்பும் ஒன்றல்ல! நீங்கள் பிறந்து 38 வயது ஆகியிருக்கலாம். ஆனால், உங்கள் உயிரியல் வயதானது ஏழெட்டு ஆண்டுகள் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம்” என்று அடித்துச் சொல்கிறது அந்த ஆய்வு.

ஆய்வு எப்படி நடத்தப்பட்டது என்று கேட்கிறீர்களா? நியுசிலாந்து நாட்டில் 1972 மற்றும் 1973-ல் பிறந்த ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொருவரின் உடலியக்க மாற்றமும் அளக்கப்பட்டது. இடையில் கொஞ்சப் பேர் இறந்துவிட்டாலும்கூட, ஆய்வு நிற்கவில்லை. பிஎம்ஐ எனப்படும் உடல் நிறை குறியீட்டெண், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு போன்ற பதினெட்டு உடலியக்க குறிகளைத் தொடர்ந்து அளந்து பதிவு செய்தனர். இப்படி அவர்களது 26 வயது, 32 வயது, 38 வயது என்று தொடர்ந்து சேகரிக்கப்பட்ட புள்ளியியல் விவரங்களைக் கொண்டு, மூப்படையும் வேகத்தைக் கணக்கிட்டனர். அதில், எல்லா மனிதர்களும் ஒரே சீராக மூப்படைவதில்லை என்று அறியப்பட்டது. சிலர் ஆண்டுக்கு 1.2 என்ற வேகத்தில் மூப்படைந்தனர். அதாவது, 38 வயதில் இவர்கள் நாற்பதரை வயதுக்காரர்கள் போல் மாறிவிட்டார்கள். சிலரின் மூப்பு வேகம் குறைவாக இருந்தது. அதாவது, 38 வயதிலும் 32 வயதுக்காரர்கள் போல் இருந்தார்கள்.

மூப்படைந்தவர்களை இளைஞர்களுடன் ஒப்பிட்டு, அவர்களது உடலியல் செயல்பாடுகளில் பல வேறுபாடுகளைக் கண்டறிந்துள்ளனர். அதாவது, நம் உடலின் எரிசக்தி நிலையம் போலச் செயல்பட்டுச் செல்களுக்கு உள்ளே இருந்து ஆற்றலை வழங்குகிற மைடோகாண்ட்ரியா (Mitochondrion) எனப்படும் இழைமணி மூப்படைந்தவர்களிடம் சிதைந்துபோய் விடுகிறது. இளைஞர்களிடம் வைக்கோலை முறுக்கியது போலக் காணப்படும் டிஎன்ஏ மூலக்கூறு இழைகள், மூப் படைந்தவர்களிடம் நைந்துபோன தென்னை நார் போலக் காணப்படுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தமானது வடிகட்டித்தான் அனுப்பப்படும். ஆனால், மூப்படைந்தவர் களுக்கோ இந்த வடிகட்டியில் கசிவு காணப்படுகிறது.

ஆனாலும், எதனால் தூண்டுதல் ஏற்பட்டு மூப்பு இயக்கம் செயல்படுகிறது என்பதை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எனவே, எப்படித் தலை நரைப்பதைத் தடுத்துவிட்டால், மூப்பின் வேகத்தைக் குறைக்க முடியாதோ அதைப்போல இந்த ஒவ்வொரு உடலியக்க செயல்பாட்டைச் சரி செய்வதன் மூலம் ஒருவரின் மூப்பைத் தள்ளிப்போட முடியாது என்று முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள். ஆனாலும், இந்த ஆய்வு இளமையை நீட்டிக்க உதவும் என்றும் நம்புகிறார்கள்.

அப்புறம் என்ன, யார் இளமையாக இருப்பது என்று அண்ணன், தம்பிக்குள் நடக்கிற போட்டியில் அப்பாக்களும் பங்கேற்கும் காலம்தான் இனி!

- த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் விஞ்ஞானி. தொடர்புக்கு: tvv123@gmail.com

NEWS TODAY 25.12.2025