Sunday, October 30, 2016


கல்வி கண் போன்றது

By மா. இராமச்சந்திரன் | Last Updated on : 29th October 2016 12:32 AM |

கடந்த மூன்று ஆண்டுகளில் முப்பத்தெட்டு அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இது ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் உண்மை. சாராயக்கடைகள் மூடப்பட்டிருந்தால் சந்தோஷமாயிருந்திருக்கும். மூடப்பட்டிருப்பதோ கண்ணொளி கொடுக்கும் கல்விக்கூடங்கள். கவலையாகத்தான் இருக்கின்றது.

மேலும் பல அரசுப் பள்ளிகளின் அவலநிலை பற்றியும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. 1,200 அரசுப் பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளதாகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் தெரிவித்துள்ளது.
எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகாகவி பாரதியார், "புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்' என்று கூறினார். நாடு விடுதலை பெற்றபின் பொறுப்பேற்ற ஆட்சியாளர்கள் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் காட்டினர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் கல்வித் துறையில் பெரும் புரட்சியே ஏற்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி செய்ததோடு அரசுப் பள்ளிகளையும் தோற்றுவித்தனர். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள் பல திறக்கப்பட்டன.

ஓட்டுக்கூரையும் சிறிய தோட்டமும் கூடிய கட்டமைப்புடன் ஓராசிரியர் பள்ளி, ஈராசிரியர் பள்ளிகளாக அவை செயல்பட்டன. தமிழகத்தில் 300-க்கும் மேல் மக்கள்தொகையுள்ள எல்லா கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

1954-இல் 21,000-ஆக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 1962-இல் 30,000-ஆக அதிக ரித்தது. இதனால் ஏழை, எளியோரின் பிள்ளைகளும் கல்வி கற்கும் வாய்ப்பு உருவானது.

கல்வி கொடுப்பது அரசின் கடமை, அதைப் பெறுவது மக்களின் உரிமை என்ற உணர்வோடு அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த அவலநிலை அரசுப் பள்ளிகளுக்கு ஏன் வந்தது? எப்படி வந்தது? மாணவர் சேர்க்கை குறைந்ததால் வந்தது என்பர்.
மாணவர் சேர்க்கை குறைவான இழிநிலைக்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பின்மை, பொதுமக்களின் தனியார் மோகம், அரசின் அலட்சியம் என்ற மூன்றையும் காரணமாகச் சொல்லலாம்.

தொடக்கக் காலத்தில் அர்ப்பணிப்புடன் பணி செய்த ஆசிரியர்கள்போல் பின்னர் வந்த ஆசிரியர்கள் இல்லை. பள்ளிப் பணியைவிடத் தம் சொந்தப் பணியையே அவர்கள் பிரதானமாகக் கருதினர். சொந்த வேலைகளையெல்லாம் முடித்த பின்னர்தான் பள்ளிக்கூடத்திற்கு வந்தனர்.
பாடம் நடத்துவதில் அக்கறையின்றி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாகப் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டனர். பாதி நேரம் பள்ளிக்கு வராமல் வெளி வேலைகளில் ஈடுபட்டனர். அரசியல் சார்பும், அதிகாரிகள் தொடர்பும் அவர்களுக்குச் சாதகமாகயிருந்தன.

இதனால் பள்ளியின் தரம் குறைந்தது. மக்கள் மனத்தில் அரசுப் பள்ளிகளின் மீதிருந்த மதிப்பும் நம்பிக்கையும் குறையத் தொடங்கின. இந்தக் காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் பெருகின. மக்கள் மனத்திலும். தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் எண்ணம் வளர்ந்தது.
பணிப்பாதுகாப்பு போன்ற தங்கள் நலனுக்காகப் போராடிய ஆசிரியர்கள் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தத் தவறிவிட்டனர்.
விண்ணுயர் கட்டடங்கள், விதவிதமான விளையாட்டுச் சாதனங்கள், விரிவான கட்டமைப்பு வசதிகள், கவர்ச்சியான சீருடை, ஆங்கிலவழிப் போதனை, வீட்டு வாசல்வரைவரும் வாகன வசதி, மாணவரிடம் காட்டும் கவனம் போன்றவை தனியார் பள்ளிகள் மீது பொதுமக்களுக்கு ஓர் ஈர்ப்பை உண்டாக்கியதோடு, தங்கள் பிள்ளைகள் இத்தகைய பள்ளியில் படிக்கவேண்டும் என்ற மோகத்தையும் அவர்கள் மனத்தில் தோற்றுவித்தது.
ஏற்கெனவே அரசுப் பள்ளிகள் மீது அவர்களுக்கிருந்த அதிருப்தி, செலவையும் பொருட்படுத்தாது தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கத் தூண்டியது.

உள்ளூரில் அரசு பள்ளியில் இலவசக் கல்வி கிடைத்தும் தங்கள் பிள்ளைகள் பள்ளி வாகனத்தில் வெளியூர் சென்று கட்டணம் செலுத்திப் படித்துவருவதைக் கெளரவமாகக் கருதினர். இதனால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைந்தது.

ஆயினும், அரசின் அலட்சியமே இதன் மூல காரணம் எனலாம். கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய அரசு, ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் சம்பளமும் அவர்களுக்குள்ள சலுகைகளும் வீண் என்று எண்ணியது. சங்கம் அமைத்து உரிமை கேட்ட ஆசிரியர்களைப் பகைவர்களாகக் கருதியது.

ஆசிரியச் சங்கங்களின் வலிமையை அடக்க எண்ணிய ஆட்சியாளர்கள் அரசுப் பள்ளி நலனில் அக்கறை காட்டுவதைத் தவிர்த்தனர். தனியார் பள்ளிகளின் பெருக்கத்தைக் கண்டுகொள்ளாமலே இருந்து, அவற்றை வளரவிட்டனர்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை நவீனப்படுத்தி, கல்விமுறையில் புதுமையைப் புகுத்தியிருக்க வேண்டியவர்கள் அலட்சியமாக இருந்துவிட்டார்கள். இன்றுவரை ஓராசிரியர் பள்ளியும் ஈராசிரியர் பள்ளியும் இருப்பது இதைத்தான் காட்டுகிறது.
கல்வியைத் தனியார் மயமாக்கும் நோக்கத்தை ஓசைப்படாமல் செயல்படுத்தினர். அதன் விளைவு, "பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம்' என்ற பாரதியின் கனவுக்கெதிராய்ப் பள்ளித் தலமனைத்தும் மூடுதல் செய்யும் அவலத்திற்கு வித்திட்டுள்ளது.

ஏழையின் கல்வியில் அக்கறையுள்ள அரசு இருந்திருந்தால் இந்த அவலம் உருவாகியிருக்காது. இப்பொழுதாவது அரசு விழித்துக்கொண்டு தொடக்கக் கல்வியில் சீர்திருத்தம் செய்து கிராமப்புற அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கற்றுகொடுக்கவும் கற்றுக்கொள்ளவும்
மனம் இருந்தால் போதும்
சாலைகளும்
பாட சாலைகளாகும்.

நீங்கள் நிலவுக்கு சாலை அமைத்துவிடவில்லை; தற்புகழ்ச்சி வேண்டாம்: சுங்கச்சாவடி நிறுவனத்திடம் உச்ச நீதிமன்றம்


தலைநகர் டெல்லியையும் நொய்டா பகுதிகளையும் இணைக்கும் 8 பாதை ‘பிளை வே’ சாலையை அமைத்த நிறுவனம் சுங்கவரி வசூலிப்பதற்கான அலஹாபாத் உயர் நீதிமன்றத் தடைக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் தற்புகழ்ச்சி வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளது.

டெல்லி-நொய்டா-டைரக்ட் (டி.என்.டி) ஃபிளை வே அடுத்த உத்தரவு வரும் வரை வாகனங்களிடம் சுங்கவரி வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

நொய்டா டால் பிரிட்ஜ் கம்பெனி, சுங்கவரி வசூலிப்பதற்கான அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமை அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “ஏதோ நிலாவுக்கே சாலை அமைத்தது போல் நீங்கள் கூறுகிறீர்களே! சரி, நீங்கள் நல்ல பணிதான் செய்திருக்கிறீர்கள், மக்கள் அதில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அதற்காக உங்களை நீங்களே தட்டிக் கொடுத்து தற்புகழ்ச்சி செய்து கொள்ளாதீர்கள்.

மேலும், இது தொடர்பாக சுங்கவரி வசூல் நிறுவனமே ஆலோசனை வழங்கியது போல் தனிப்பட்ட தணிக்கையாளர் அல்லது தலைமை தணிக்கையாளரையோ நியமித்து நிறுவனத்தின் செலவுகள், லாபம் ஆகியவற்றை ஆய்வு செய்வோம் என்று நீதிபதிகள் கூறினர்.

நிறுவனம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, அலஹாபாது உயர்நீதிமன்றம் நொய்டா அதிகாரிகளுடன் 1993-ம் ஆண்டு நிறுவனம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் புனிதத்தன்மையை காக்காமல் அலஹாபாத் உயர்நீதிமன்றம் சுங்க வரி வசூலிக்கத் தடை விதித்தது, நிறுவனம் இன்னும் இத்திட்டத்தின் செலவுத்தொகையையே ஈட்டவில்லை. சுங்கவரி நிறுவனம் மைனஸ் வருவாயில் ஓடிக்கொண்டிருக்கிறது பிளை வே 2001-ல் தொடங்கப்பட்டது.

“நாங்கள் சுமார் 80,000 பங்குதாரர்களைக் கொண்ட ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனம். வரிவசூலை நிறுத்தினாலும் நாங்கள் ஒப்பந்தத்தின் படி சாலைகளின் பழுதுகளை பார்த்தேயாக வேண்டும். இன்னும் 15 ஆண்டுகளுக்கு நாங்களே இதற்குப் பொறுப்பு. ஆனால் நாங்கள் எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்றால் எப்படி?

வரிவசூலை நிறுத்தினால் சுங்கச்சாவடியில் பணியாற்றும் 472 பேரையும் வேலையிலிருந்து அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்த தலைமை நீதிபதி, “நீங்கள் 300 கோடி முதலீடு செய்து 1,100 கோடி சம்பாதித்துள்ளீர்கள் என்றுதானே உயர்நீதிமன்றம் வரிவசூலுக்கு தடை விதித்தது” என்றார்.

பிறகு நொய்டா நிறுவனத்தை நோக்கி நிறுவனம் பொதுமக்கள் பக்கம் நிற்கிறதா அல்லது சுங்கவரி நிறுவனத்தின் பக்கம் நிற்கிறதா என்று கேட்ட போது வழக்கறிஞர் உத்தரவுகளை தான் எடுத்துக் கொள்வதாக கூறினார்.

“ஏன் உங்கள் அதிகாரிகள் வரவில்லை. பொது விஷயத்தில் நாட்டம் இல்லையா” என்று கேட்டார் நீதிபதி டி.எஸ்.தாக்குர். மேலும் சுங்கவரி வசூலை தற்காலிகமாக நிறுத்துவதால் நிறுவனம் ஒன்றும் பாதிப்படையாது என்று திட்டவட்டமாகக் கூறியதோடு, நிறுவனத்தின் செலவு., ஈட்டிய தொகை விவரங்கள் தனிப்பட்ட தணிக்கையாளர் அறிக்கையில் இன்னும் சில நாட்களில் வந்து விடும் அந்த அறிக்கை உங்களுக்குச் சாதகமாக இருந்தால் நீங்கள் கூடுதல் காலம் வரி வசூல் செய்யலாமே” என்று அலஹாபாத் உயர்நீதிமன்ற வரிவசூல் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தார்.

நொய்டா குடியிருப்புவாசிகள் சங்கமோ சுங்கச் சாவடி நிறுவனம் இதுவரை சுமார் ரூ.2,300 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணை தீபாவளி விடுமுறைகள் முடிந்து மீண்டும் நடைபெறும் என்று தெரிகிறது.

காவு வாங்கும் கலப்பட எண்ணெய்கள்! எந்த எண்ணெயும் நல்ல எண்ணெய் இல்லை!


நன்றி குங்குமம் டாக்டர்

ஆரோக்கிய அச்சுறுத்தல்

ஏற்கனவே நாம் பல குழப்பத்தில் இருக்கிறோம்… இதில் ஒவ்வொருவரும் டாக்டராக மாறி ஆலோசனை என்ற பெயரில் நம் குழப்பத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் சமையல் எண்ணெய் பற்றி வெளிவரும் விளம்பரங்கள் ஒவ்வொன்றும் அநியாய குழப்பம். ‘சந்தையில் விற்பனையாகும் எண்ணெய்களைப் பயன்படுத்தினால் உங்கள் இதயத்தில் மெழுகு படியும். எங்கள் எண்ணெயில் அது கிடையாது’ என்று சமீபத்தில் ஒரு விளம்பரம் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

எல்லா எண்ணெயிலுமே பிரச்னை என்றால் எந்த எண்ணெயைத்தான் பயன்படுத்துவது என்று இதய சிகிச்சை மருத்துவரான ஜாய் தாமஸிடம் கேட்டோம்…‘‘எண்ணெய் கலப்படம் என்பது சாதாரணமாகிவிட்டது. காஸ்மெட்டிக் ஆயில் என்கிற தேங்காய் எண்ணெய் போன்றவற்றில் செய்கிற கலப்படத்தால் பெரிய பிரச்னைகள் எதுவும் வரப்போவதில்லை. சருமத்தில் அலர்ஜி, எரிச்சல், காயம் போன்ற சின்னச் சின்ன தொந்தரவுகள்தான் ஏற்படும். அரிதாக சில பெரிய பிரச்னைகள் உண்டாகலாம். ஆனால், சமையல் எண்ணெயில் நடக்கும் Adulteration என்கிற கலப்படம்தான் நம் உடனடி கவனத்துக்குரியது.

சில விளம்பரங்களில் சொல்லப்படுவது போல சமையல் எண்ணெய் கலப்படங்கள் ரத்த நாளங்களில் படியாது. கொழுப்பு மட்டும்தான் அப்படிப் படிந்துகொள்ளும். ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பாக வரும் வாய்ப்பும் கலப்பட எண்ணெய்களால் இல்லை. கொழுப்பு எண்ணெய்கள் சூடான நிலையில் உருகி திரவ வடிவத்துக்கு மாறும். குளிர்ந்த நிலையில் உறைந்துவிடும். அதுபோல இந்த கலப்பட எண்ணெய்கள் மாறுவதில்லை. கலப்பட எண்ணெய்க்கு ஒரே தன்மைதான் உண்டு. அது எப்போதும் திரவ வடிவில்தான் இருக்கும்.

அதேபோல, இந்த கலப்பட எண்ணெய்களால் இதயம் நேரடியாகப் பாதிக்கப்படுவதும் இல்லை. இதயத்தின் மின் திறன் வேண்டுமானால் பாதிக்கப்படலாம். அதாவது, இதயத் துடிப்பின் விகிதம், ரத்தத்தை உள்வாங்கி வெளியேற்றும் தன்மை போன்றவை பாதிப்புக்குள்ளாகும். இந்த உண்மை சில ஆய்வுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றைத் தாண்டி கலப்பட எண்ணெய்களால் ஏற்படும் முக்கியமான பிரச்னை கல்லீரல் பாதிப்பு. நாம் சாப்பிடும் உணவு குடலிலிருந்து முதலில் கல்லீரலில் சென்றுதான் சேர்கிறது.

அங்குதான் கார்போஹைட்ரேட், புரதம் என உணவு உடைக்கப்பட்டு செரிமானம் நடக்கிறது. அதனால், கலப்பட எண்ணெய்களால் கல்லீரலே பெரிதும் பாதிக்கப்படும். இந்த எண்ணெய்கள் கார்சினோஜெனிக் என்கிற புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் கொண்டவை. அதனால் கல்லீரல் புற்றுநோய் வரும் அபாயமே இதில் அதிகம். கல்லீரல் உடலின் மிகவும் முக்கியமான உறுப்பு. கல்லீரல் மாற்று சிகிச்சை என்பது மிகவும் காஸ்ட்லியான அறுவை சிகிச்சையும் கூட. எல்லோராலும் செய்துகொள்ளவும் முடியாது. இதில் இன்னும் ஒரு அபாயமும் உண்டு.

கல்லீரல் மட்டும் பாதிக்கப்பட்டால் மாற்று சிகிச்சை செய்து கொண்டு தப்பித்துவிடலாம். இந்த புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் பரவிவிட்டால் கல்லீரல் மாற்று சிகிச்சையும் கைகொடுக்காது;6 மாதங்களில் இருந்து ஒரு வருடத்துக்குள் உயிரிழப்பு ஏற்படுவதற்கான அபாயமும் அதிகம். அதனால், இந்தப் பிரச்னையின் தீவிரத்தை எல்லோரும் உணர வேண்டும். மக்களின் அத்தியாவசியப் பயன்பாட்டில் இடம்பிடித்திருக்கும் எண்ணெய் கலப்படத்தை அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.

மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கலப்படம் செய்கிறவர்களை சமூக விரோதிகளாகத்தான் கருத வேண்டும். அரசாங்கம் இவர்கள் மேல் தீவிரமான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்களுக்கு வியாபாரம் செய்யும் உரிமை உண்டு. தங்கள் தயாரிப்பின் பெருமைகளைச் சொல்லவும் உரிமை உண்டு. ஆனால், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தவறான விளம்பரங்களைச் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இது தார்மீக ரீதியாகவும் பெரும் தவறு’’என்கிறார் ஜாய் தாமஸ்.

சமையல் எண்ணெயில் மெழுகு ஏன் கலக்கிறார்கள் என்ற நம் கேள்விக்கு நுகர்வோர் ஒருங்கிணைப்பு அலுவலரான சோமசுந்தரம் விளக்கமளிக்கிறார்.‘‘இந்த கிரீமை பூசிக் கொண்டால் சிவப்பாகிவிடலாம் என்று சில விளம்பரங்கள் வருகின்றன. அதுபோலத்தான் எண்ணெயில் வாக்ஸ் கலப்படம் என்பதும். இது ஒரு விற்பனைத் தந்திரம். ஏனெனில், மெழுகை எண்ணெயில் கலக்க முடியாது. மெழுகின் குணமே வேறு. சமையல் செய்து முடித்தபிறகு பாத்திரத்தில் படியும் எண்ணெய் கறையைத்தான் Wax என்று குறிப்பிடுகிறார்கள்.

எந்த எண்ணெயில் சமையல் செய்தாலும் கறை படியத்தான் செய்யும். ஆனால், வாக்ஸ் என்றவுடன் மெழுகை எண்ணெயில் கலக்கிறார்கள் போல என்று மக்கள் நினைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. மக்களைத் தவறான வழிக்குத் திசை திருப்பும் விளம்பரம் இது. குறைவான விலையில் அரசாங்கமே விற்கிற பாமாயில் பற்றியும் இப்படித்தான் தவறான அபிப்பிராயத்தை மக்களிடம் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தேங்காய் எண்ணெய்
கெடுதல் என்ற நம்பிக்கையையும் இப்படித்தான் உருவாக்கினார்கள்.

இதுபோன்ற விளம்பரங்களைப் பற்றி Advertisement Standards Council of India என்ற அமைப்பில் புகார் செய்யலாம். மும்பையில் இருக்கும் இந்த அமைப்பு பற்றிய விவரங்களை இணைய தளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இதேபோல ஒரு எண்ணெய் நிறுவனம் கலப்படம் செய்கிறது என்று சந்தேகப்பட்டால் குறிப்பிட்ட எண்ணெயின் மாதிரியை எடுத்து அரசாங்கத்தின் பகுப்பாய்வுக்கூடத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 500 ரூபாயிலேயே இந்த பரிசோதனை செய்துவிடலாம். உணவுப் பாதுகாப்புத்துறையிடமும் புகார் அளிக்கலாம். தவறு உறுதியானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

தனிமனிதராக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதபட்சத்தில் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ எங்களைப் போன்ற நுகர்வோர் அமைப்பிடமோ உதவிகளைக் கேட்கலாம். நாங்கள் தேவையான உதவிகளைச் செய்வோம். இதையும் விட முக்கியமான விஷயம், நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்தான் எப்போதுமே பாதுகாப்பானவை. நம் ஊரின் வெப்பநிலைக்கும், நம் வாழ்க்கைமுறைக்கும் இந்த 3 எண்ணெய்கள்தான் ஆரோக்கியமானவையும் கூட. இதைத்தாண்டி இன்று சந்தையில் விற்பனையாகி வரும் எல்லா எண்ணெய்களுமே பிரச்னைகளுக்குரியவைதான்’’ என்கிறார்.

எந்த எண்ணெயைத்தான் வாங்குவது?

Refine, Bleach, Deodorised இந்த மூன்று விஷயங்களும் ஒரு எண்ணெயில் இருக்கக் கூடாது. எந்த உணவுப்பொருளாக இருந்தாலும் அது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கெட்டுப் போய்விடும். அதனால் ஒரு பொருளின் வாழ்நாளை நீட்டிப்பதற்காக செய்யப்படும் வேதிவினைதான் Refine. அடுத்து Bleach என்பது எண்ணெயை சுத்தமாகத் தண்ணீர் போல காட்டு வதற்காக செய்யப்படும் வேதிவினை.

அடுத்து எண்ணெய் நமக்குப் பிடித்த வாசனையில் இருக்க வேண்டும் என்பதற்காக எண்ணெயின் நிஜமான மணத்தை மாற்றி வேதிப்பொருட்களைக் கலக்கும் முறை. தரமான எண்ணெய் கொஞ்சம் கெட்டியாகத்தான் இருக்கும். தண்ணீர் போல இருக்காது. பளிச்சென்று சுத்தமாகவும் இருக்காது. கடலை எண்ணெய் என்றால் அதன் வாசனை கொஞ்சமாவது இருக்கும். வித்தியாசமான நறுமணம் எதுவும் இருக்காது.

இந்த 3 விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, விளம்பரங்களைப் பார்த்து எண்ணெய் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். எல்லாப் பொருட்களுக்குமே இது பொருந்தும். எண்ணெயைப் பொறுத்தவரை குடும்ப நல மருத்துவரிடமோ, இதய சிகிச்சை மருத்துவரிடமோ ஆலோசனை கேட்டுத் தேர்ந்தெடுப்பது இன்னும் பாதுகாப்பானது.

எண்ணெய் பயன்பாட்டிலும் பேலன்ஸ்டாக இருங்கள்!
கொஞ்சம் தானிய உணவு, கொஞ்சம் கீரை, கொஞ்சம் பழங்கள் என்று உணவில் சரிவிகிதத்தை மருத்துவர்கள் கடைப்பிடிக்கச் சொல்கிறார்கள். அந்த பேலன்ஸ்டு டயட் முறை எண்ணெய் பயன்பாட்டிலும் அவசியம். வீட்டுக்கு மாதம் 2 லிட்டர் எண்ணெய் சமையலுக்குத் தேவை என்றால் ஒரே எண்ணெயை மட்டுமே 2 லிட்டர் வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு எண்ணெயிலும் ஒவ்வொரு வகையான சத்துகள் உண்டு. இதை Essential fatty acid என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் என பல எண்ணெய்களை மாறி மாறிப் பயன்படுத்தும்போது நமக்குக் கூடுதல் பலன் கிடைக்கும். அதேபோல, சிலர் எண்ணெய் என்றாலே ஆபத்து என்று அலர்ஜியாவார்கள். அப்படி முற்றிலும் எண்ணெயைத் தவிர்ப்பதும் தேவையற்றது. எண்ணெயில் இருக்கும் சத்துகளும் நமக்குத் தேவை. நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் எண்ணெயை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம், எந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறோம், எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைத்தான்.

ஞானதேசிகன்

படம்: ஏ.டி.தமிழ்வாணன்
வாழ்க்கையில் யாரையும் குறை சொல்லாதீர்கள்...

நல்லவர்கள் மகிழ்ச்சி தருகிறார்கள்

கெட்டவர்கள் அனுபவம் தருகிறார்கள்

மிகக் கெட்டவர்கள் பாடம் தருகிறார்கள்

மிக நல்லவர்கள் நினைவுகள் தருகிறார்கள். :)
நாட்டாண்மைக்கே' தீர்ப்பு சொன்ன கிராமம்

திருப்புவனம்: சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் குறைவாக இருந்த காலத்தில் கிராமங்களில் பெரும்பாலும் பிரச்னைகளை விசாரித்து தீர்ப்பு சொல்வது நாட்டாண்மை எனப்படும் கிராம தலைவர்கள் தான். அதிலும் தீர்ப்பு சொன்ன நாட்டாண்மைக்கே பிரச்னை வந்த போது கிராமமே சேர்ந்து தீர்ப்பு சொன்னதும் அதை நாட்டாண்மை ஏற்றுக் கொண்ட சம்பவமும் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள ஏனாதி, பூவந்தி, மடப்புரம், செம்பூர், சுண்ணாம்பூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்கள் 'அஞ்சூர்நாடு' என அழைக்கப்படுகிறது. இதில் தாய் கிராமம் ஏனாதி. ஐந்து கிராமத்திலும் நடைபெறும் சொத்து பிரச்னை, வாய்க்கால் தகராறு,பாதை தகராறு , திருவிழா உள்ளிட்ட எந்த பிரச்னையானாலும் அஞ்சூர் நாட்டு தலைவர் சொல்வது தான் இறுதி தீர்ப்பாக இருக்கும். இந்த ஐந்து கிராமங்களுக்கும் தனித்தனி நாட்டாண்மை உண்டு. இன்றைய கால கட்டத்தில் நாட்டாமை பதவியை ஒழித்து விட்டனர் என்றாலும் கிராமத்தில் பெயரளவில் இன்னமும் நாட்டாண்மை உண்டு. கோவில் திருவிழா உள்ளிட்ட விஷயங்களில் இன்னமும் முதல் மரியாதை நாட்டாமைகளுக்கு உண்டு. நாட்டாண்மைக்கு சொன்ன தீர்ப்பை கோர்ட்டே பாராட்டிய சம்பவமும் நடந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள ஏனாதி கிராம நாட்டாண்மையாக இருந்தவர் கருப்பையா அம்பலம். இவருக்கு திருமணமாகி சிட்டுப்பிள்ளை என்ற மனைவியும்,மூன்று குழந்தைகளும் உண்டு. அந்தக்காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் நாட்டாண்மை கருப்பையா அம்பலம் தட்டு வண்டி எனப்படும் மாட்டு வண்டியில் மற்ற ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அவ்வாறு நாலுார் நாட்டைச் சேர்ந்த அரசனுார் கிராமத்திற்கு கடந்த 1937ல் செல்கையில் அந்த ஊரைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்பவரை பார்த்து விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டு ஏனாதிக்கு வந்துள்ளார். தகவலறிந்து முதல் மனைவி மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிராமங்களில் பிரச்னை என்றால் நாட்டாண்மைக்கு தகவல் சொல்வார்கள். பிரச்னைக்கு காரணமே நாட்டாமை என்பதால் கிராமமே இணைந்து விசாரித்துள்ளது. இரண்டாவது மனைவி பேச்சியம்மாளை கைவிட கருப்பையா அம்பலம் மறுத்துள்ளார். 

இதனையடுத்து கிராமமே இணைந்து ஆலோசனை நடத்தியுள்ளது. முதல் மனைவியிடம் கிடைக்காத சந்தோஷம் இரண்டாவது மனைவியிடம் கிடைத்துள்ளது. எனவே கருப்பையா அம்பலம் இரண்டாவது மனைவியுடன் இருந்து கொள்ளலாம். ஆனால் இதுவரை சம்பாதித்த சொத்துக்கள், பரம்பரை சொத்துக்கள் அனைத்தையும் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு கொடுத்து விட வேண்டும். இனி சம்பாதிக்கும் சொத்துக்கள் அனைத்தும் இரண்டாவது மனைவிக்கு சொந்தம் என கூறியுள்ளனர். 

அதனைக் கேட்ட நாட்டாண்மை கருப்பையா அம்பலம் கட்டியிருந்த இடுப்புக் கொடியை கூட அறுத்து கொடுத்து விட்டு இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு சென்றுவிட்டார். தொடர்ந்து இரண்டாவது மனைவியுடன் குடும்பம் நடத்தியதில் மலைச்சாமி, ராஜலட்சுமி, பாண்டியம்மாள் என்ற குழந்தைகள் பிறந்துள்ளன. கருப்பையா அம்பலத்திற்கு பின் மலைச்சாமி நாட்டாண்மையாகவும் அஞ்சூர் நாட்டு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அதன் பின் மலைச்சாமி மகன்கள் முருகானந்தம், வெங்கடேசன், திருமூர்த்தி ஆகியோரில் தற்போது வெங்கடேசன் ஏனாதி நாட்டாண்மையாக உள்ளார். வெங்கடேசனிடம் கேட்ட போது,“எங்கள் ஐயா(தந்தை வழி தாத்தா) விற்கு தான் இந்த தீர்ப்பு சொன்னார்கள். இந்த தீர்ப்பை பாராட்டி அந்த காலத்தில் சென்னை ஐகோர்ட் நீதிபதி மிஸ்ரா பாராட்டு பத்திரம் வழங்கியுள்ளதுடன் இதனை மேற்கோள் காட்டியும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.தீர்ப்புக்கு பின் எங்கள் ஐயாவின் இரு மனைவிகளும் சமாதானமாக இருந்தாலும் எனது தந்தை, அதன் பின் நாங்கள் என பரம்பரை பரம்பரையாக நாட்டாண்மையாக இருந்துள்ளோம். 1989ல் எம்.ஜி.ஆர்.,ஆட்சி காலத்தில் நாட்டாண்மை பதவி ஒழிக்கப்பட்டது. ஏனாதி கிராம பஞ்சாயத்துகள் உள்ளுரில் உள்ள பொது மந்தையில் நடைபெறும். அஞ்சூர் நாட்டு பஞ்சாயத்துகள் தற்போது சிவகங்கை -மதுரை சாலையில் உள்ள தனியார் கல்லுாரி எதிரே உள்ள ஆலமரத்தடியில் நடைபெறும். பஞ்சாயத்து நாளன்று ஆலமரத்தடியில் அஞ்சூர் நாட்டைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கூடுவது வழக்கம்”, என்றார்.நாட்டாண்மை பதவி ஒழிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் தான் காரணம் என கூறப்படுகிறது

. எல்லா கிராமங்களிலும் நாட்டாண்மைக்கு முதல் மரியாதை கொடுக்கப்படுவது வழக்கம்.1988ல் அப்போதைய அமைச்சராக இருந்த எஸ்.டி. சோமசுந்தரம் கிராமத்தில் நடந்த அரசு விழாவிற்கு வந்த போது நாட்டாண்மைக்காக காத்திருந்துள்ளார். கோபமடைந்த அவர் எம்.ஜி.ஆரிடம் சொல்லி நாட்டாண்மை பதவியையே காலி செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. கிராமப்புற பஞ்சாயத்துக்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் இன்றளவும் 2வது மனைவி சம்பந்தமான தீர்ப்பு அனைவராலும் ஏற்று கொள்ளக் கூடிய தீர்ப்பாக இருந்துள்ளது. திருமூர்த்தி கூறுகையில்,“ கிராமங்களில் பிரச்னை என்றால் பாதிக்கப்பட்டவர் வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் நாட்டாண்மையை சந்தித்து பிரச்னையை கூறுவார். எதிர்தரப்பிற்கு ஆளனுப்பிய பின் குறிப்பிட்ட நாளில் இருதரப்பையும் வைத்து விசாரணை ஆரம்பமாகும். நாட்டாண்மை சொல்லும் தீர்ப்பை 95 சதவிகிதம் அனைவரும் ஏற்று கொள்வோம். மீறுபவர்களை ஊரை விட்டு விலக்கி வைக்கும் சம்பவமும் நடைபெறும்.

ஆனால் எனக்கு தெரிந்து யாரும் நாட்டாண்மை தீர்ப்பை எதிர்த்ததில்லை. அனைவரும் ஏற்றுகொள்வார்கள். ஏன் என்றால் எங்கள் ஊர் நாட்டாண்மை அவருக்கு சொன்ன தீர்ப்பை ஏற்று கொண்டு அதன்படி நடந்து கொண்டவர் என்பதால் நீதி தவற மாட்டார் என்பது நம்பிக்கை,” என்றார்.
குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'

முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு, 3 மணி நேரத்திற்குள் எழுதி முடிப்பது சற்று கடினமாக உள்ளது. இதற்கு தினமும் ஒரு 'மாதிரி தேர்வு' எழுதிப் பழகினால் நேர மேலாண்மையில் வெற்றி பெறலாம். தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நினைவுபடுத்தி திரும்ப படித்தாலே போதுமானது. கீழ்க்கண்ட பாடங்களில் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை:

பொது அறிவு பகுதி

புதிய தேர்வு முறையில் 25 வினாக்கள் ஆப்டிடியூட் பகுதியில் கேட்கப்படுகிறது. இதில் எண்களின் வகைகள் தொடர்புடைய வினாக்கள், அடிப்படை கணித முறை, கையாளும் முறை, பின்னங்கள், தனிவட்டி, கூட்டுவட்டி பரப்பளவு மற்றும் கனஅளவு பகுதிகளில் உள்ள சூத்திரங்களை நினைவுப்படுத்தவும்.n விபரங்களை கையாளும் முறையில் பட்டை விளக்கப்படம், வட்ட விளக்கப்படம், கோட்டு விளக்கப்படம், அட்டவணைகள் தொடர்பான வினாக்கள்.n பகடை, புதிர், வினாக்கள், எண் தொடர் வரிசை, விடுபட்ட எண், விடுபட்ட படம், படத்தொடரில் அடுத்து இடம் பெறும் படம். நடப்பு நிகழ்வுகள் பகுதியிலிருந்து 10 முதல் 15 வினாக்கள் கேட்கப்படலாம். விண்வெளி நிகழ்வுகள், தேசிய சின்னங்களின் முக்கியத்துவங்கள், சமீபத்திய விருதுகள், உலகின் முக்கிய அமைப்புகளின் சமீபத்திய மாநாடுகள், நடைபெற்ற இடங்கள் (குறிப்பாக ஐ.நா., செய்திகள்) விளையாட்டுச் செய்திகள், புதிய கண்டுபிடிப்புகள், நியமனங்கள், பாதுகாப்பு சிறப்பம்சங்கள்.n வரலாறு பாடத்தில் கால வரிசை, முக்கிய ஆண்டுகள், சங்க காலம் முதல் சுதந்திரம் பெற்றது வரையிலான காலங்களில் நடந்த போர்களின் ஆண்டுகள், இடம், போரிட்ட நபர்கள், போர் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள்.n உலகை வலம் வந்த பயணிகள், அவர்கள் இந்திய வருகையின் போது இருந்த மன்னர்கள்.n வரலாற்று புத்தகங்கள், அதன் ஆசிரியர்கள், பத்திரிகைகள், சமய சீர்திருத்த இயக்கங்கள், இந்திய தேசிய காங்.,தோற்றம், மாநாடுகள், நடந்த இடம், தலைமை வகித்தவர், முக்கிய தீர்மானங்கள்.n இயற்பியலில் அலகுகள், விதிகள், அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், அளவிடும் கருவிகள், அதன் பயன்கள் மற்றும் அறிவியல் மதிப்புகள்.n வேதியியலில் வேதிப்பெயர்கள், சமன்பாடுகள், முக்கிய அமிலங்கள், தனிம வரிசை அட்டவணையின் சிறப்பு, அன்றாட வாழ்வில் பயன்படும் வேதிச் சேர்மங்கள்.n தாவரவியலில் செல் அமைப்பு, தாவர, விலங்கு செல்களில் உள்ள நுண்ணுருப்பிகளின் பணிகள், தாவர பாகங்கள், வளர்ச்சி காரணிகள், வைரஸ், பாக்டீரியாவால் ஏற்படும் தாவர நோய்களை பட்டியலிடல்.n மனித உடலியியலில் ரத்த வகைகள், ரத்த செல்களின் சிறப்பம்சம், இதய அமைப்பு, செயல்படும் விதம், நாளமிள்ளா சுரப்பிகளின் சிறப்புகள், வைட்டமின், எலும்புகளின் எண்ணிக்கை மற்றும் முக்கிய எலும்புகளின் பெயர்கள், நரம்பு மண்டலத்தில் மூளையின் அமைப்பு, அதன் பணிகள், பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள், அதை ஏற்படுத்தும் கிருமிகள்.n புவியியலில் மாநில தலைநகரங்கள், முக்கிய மலைகளின் அமைவிடம், காடுகளின் சிறப்பு, விலங்கு சரணாலயங்கள், அமைந்துள்ள மாவட்டம், மாநிலங்கள், அங்கு புகழ்பெற்ற விலங்குகள், முக்கிய ஆறுகளின் பிறப்பிடம், சேருமிடம், துணையாறுகள், பயனடையும் மாநிலங்கள், அணைகளை வரிசைப்படுத்தி படிக்கவும். போக்குவரத்து அமைப்பை, உணவு பயிர்களில் முதன்மை வகிக்கும் மாநிலங்கள், தாதுக்கள் காணப்படும் இடங்கள்.n சூரியன் மற்றும் சூரியக் குடும்ப 8 கோள்களின் தனிச்சிறப்புகள், வானிலை, பருவகால காற்றுகள்.n இயற்கை பேரிடர்களான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, பனிப்பாறை வீழ்ச்சி, பாதிப்புகள்.n இந்திய அரசியல் அறிவியலில் அரசியலமைப்பு சட்டத்தின் வளர்ச்சி, அட்டவணைகள், முக்கிய ஷரத்துகள், சமீபத்திய சட்டத் திருத்தங்கள், ஜனாதிபதி, பிரதமர், முக்கிய பதவிகளை பற்றிய சிறப்பம்சங்கள், சமீபத்திய அரசியல் மாற்றம், தேர்தல் கமிஷன்.n பொருளாதார கோட்பாடுகளை கூறியவர்கள், பொருளாதார வார்த்தைகளின் அர்த்தம், ஐந்து ஆண்டு திட்டங்களின் சிறப்பம்சம், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், கமிட்டிகள்.

பொதுத்தமிழ் 

இதுவரை குரூப் - 4 தேர்வில் உள்ள கேள்விகளைப் பார்த்து, அதில் உள்ளவற்றிக்கு விடையளிக்க முயற்சிக்க வேண்டும். இதனால், எவ்வாறு கேள்விகள் கேட்கப்படும் என்ற தெளிவு கிடைக்கும்.
பகுதி (அ) இலக்கணம் : இலக்கணத்தில் முக்கியமானது தொடரும் தொடர்பும், அறிதல், பிழை திருத்தம், பெயர்ச்சொல்லின் வகையறிதல், இலக்கணக் குறிப்பறிதல், எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல், எதுகை, மோனை, இயைபு பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு முயற்சியுடன் விடையளிக்க வேண்டும். இதற்கு பயிற்சி மிக முக்கியம். இதனால் அதிக மதிப்பெண் பெற முடியும்.
n பொதுத்தமிழ் பாடப்பகுதிக்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை படிப்பது நல்லது. தமிழ் இலக்கண எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி பகுதிகளில் தற்போது யாப்பு, அணி பகுதிகளில் இருந்து அதிகம் வினாக்கள் கேட்கப்படுகிறது.n துணைப்பாடத்தில் முக்கிய கூற்றுகளை கவனிக்கவும், புணர்ச்சி விதி, சந்திப்பிழைகளை நன்கு படிக்கவும்.n நுாலின் வேறு பெயர்கள், நுாலாசிரியர் பெயர், அவரின் சிறப்பு பெயர், அறிஞர்களின் கூற்றுகள், புகழ் பெற்ற தொடர்களை கூறியவர்கள் மற்றும் இடம்பெற்ற நுால்கள், இலக்கண குறிப்பு.
பகுதி (ஆ) இலக்கியம் : இதிலிருந்து 30 வினாக்களுக்கு மேல் கேட்கப்படும். இதை எளிமை என அலட்சியம் கூடாது. சமயம், பண்பாடு, காலாசாரம், நாகரிகம் இப்பகுதியில் அடங்கியுள்ளது. முக்கியமானது பதிணென் மேற்கணக்கு, பதிணென் கீழ்கணக்கு, பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம். புரிந்து தெளிவாக விடையளிக்க வேண்டும்.

n சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம், புதுக்கவிதை வரை உள்ள நுால்,- நுாலாசிரியர்கள், குறிப்புகள், அவர்களின் பிற இலக்கியப் படைப்புகள்.
பகுதி(இ) தமிழ் அறிஞர்கள், தமிழ் தொண்டு மறுமலர்ச்சிக் காலம் என்பது தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டாற்றியவர்களும் ஆவர். இவர்கள் உலக நாடுகளுக்கு தமிழ் சென்றடைய முக்கியமானவர்கள். இதில் மிக முக்கியமானது பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், மருதகாசி, புதுக்கவிதை கவிஞர்கள், கலைகள், சிற்பம், உரைநடை, உ.வே.சாமிநாத அய்யர், தேவ நேயப்பாவாணர், ஜி.யு. போப் வீரமாமுனிவர், தமிழ் பெண்கள், தமிழர் வணிகம், உணவே மருந்து, திரு.வி.க.,வை மனப்பாடம் செய்யாமல், அவர்களின் வாழ்க்கை சிறப்புகளை வியந்து பார்த்து படித்தால் தெளிவு கிடைக்கும்.

- பெ.வெங்கடாசலம், நிர்வாக இயக்குனர்,நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங்,மதுரை. 90470 34271.

டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ள 5451 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்ப நவ.,6 ல் தேர்வு நடக்கிறது. இதில் 12 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்விற்காக ஆவலுடன் உள்ளனர். இத்தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் 75 வினாக்கள், அறிவுக்கூர்மை தொடர்பாக 25 வினாக்கள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்கள். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் இல்லை. ஆதலால் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.
தேர்விற்கு செல்லும் முன்... 

* ஹால் டிக்கெட், நீலம் அல்லது கருமை நிற மை கொண்ட “பால் பாயின்ட் பேனா” மூன்று அல்லது நான்கு கொண்டு செல்க.* தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சென்றால் பதற்றத்தை தவிர்க்கலாம்.* கைக்கடிகாரம் அணிந்து அடிக்கடி நேரத்தை சரிபார்க்கவும்.* தேர்வுக்கு முதல் நாள் இரவு, நன்கு துாங்கவும். துாக்கமின்றி சென்றால், யோசிக்கும் திறன் குறையும்.* கவனச் சிதைவு இன்றி முழு கவனத்துடன் கேள்விகளை படித்து பார்க்கவும்.* தன்னம்பிக்கையுடன் கூடிய பயிற்சி, முயற்சியே போட்டித் தேர்வுகளில் வெற்றியை தேடித்தரும். இதை மனதில் வைத்து படித்து நீங்களும் அரசு ஊழியராக வாழ்த்துகள்!

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...