Thursday, November 3, 2016

அச்சமூட்டும் சாலை விபத்துகளும், அதிகரிக்கும் இறப்புகளும்: தமிழகத்தில் 9 மாதங்களில் 13,142 பேர் பலியான சோகம்


தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில் மொத்தம் 13 ஆயிரத்து 142 பேர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளால் சராசரியாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இறக்கின்றனர். 4 நிமிடங்களுக்கு ஒருவர் சாலை விபத்தால் இறக்கிறார். தினமும் 16 குழந்தைகள் உயிரிழக்கின்றன. தினமும் சராசரியாக நடக்கும் 1,214 சாலை விபத்துகளில் 400 பேர் இறக்கின்றனர்.

சாலைகள் விரிவாக்கம், மேம்பாலம் கட்டுதல், தற்போது உள்ள முக்கிய சாலைகளை 2 வழி அல்லது 4 வழி பாதைகளாக மாற்றும் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இது போன்ற புதிய வசதி மூலம் வாகனங் களின் வேகத்தை அதிகரித்து ஓட்டவே ஆர்வம் காட்டுகிறோம். ஆனால், போக்குவரத்து விதி முறைகளை முழுமையாக பின் பற்றுவதில்லை என புள்ளிவிவ ரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. விதிமுறைகளை பின்பற்றாததால், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

உதாரணத்துக்கு தமிழகத்தில் 2001-ம் ஆண்டில் நடந்த 51 ஆயிரத்து 978 சாலை விபத்துகளில் 9,571 பேர் இறந்துள்ளனர். இதேபோல், கடந்த ஆண்டில் நடந்த 69,059 சாலை விபத்துகளில் 15,642 பேர் இறந்துள்ளனர். ஓட்டுநர்களின் கவனக்குறைவு, வாகனங்களின் வேகம் அதிகரிப்பு, பாதசாரிகளின் கவனக்குறைவு, மோசமான சாலை கள், வாகனங்கள் அதிகரிப்பு உள்ளிட்டவை முக்கியக் காரணங் களாக இருக்கின்றன. 55 சதவீத விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம் என அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் 54 ஆயிரத்து 676 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 13 ஆயிரத்து 142 பேர் இறந்துள்ளனர். உயிரிழப்பை ஏற்படுத்திய 15,642 விபத்துகளில் 85 சதவீத விபத்துகள் நெடுஞ்சாலைகளில் நடந்துள்ளன.



இது தொடர்பாக போக்கு வரத்து ஆணையரக அதிகாரி களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

வாகனங்களின் பெருக்கம், அதிக வேகமாக செல்வது சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. தமிழகத்தில் தினமும் 6,210 வாகனங்கள் புதியதாக பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1 லட்சத்து 36 ஆயிரத்து 620 வாகனங்கள் புதியதாக பதிவு செய்யப்படுகின்றன. தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதுதவிர, விபத்து அதிகமாக நடக்கும் இடங்களைக் கண்டறிந்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள மாவட்டங்கள் தோறும் அரசு அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுக்களும் அமைத்து கண்காணித்து வருகிறோம். போக்குவரத்து விதிமீறல்களை மீறக்கூடாது, என்ற பொறுப்பு பொதுமக்களிடம் வர வேண்டும். கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். குறுகிய சாலைகளில் அதிக வேகமாக செல்லக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் ஓட்டிச் செல்லக்கூடாது என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இதற்கிடையே, புதிய சாலை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோ தாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இதில், போக்குவரத்து விதியை மீறுபவர்களுக்கு அபராதத் தொகை பல மடங்கு அதி கரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விபத்துகளையும் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

மது... மயக்கம் என்ன? டாக்டர் ஷாம்

மதுபோதையும் ஈகோவும் மிக மோசமான இணைகள்! உண்பது, உறங்குவது போன்ற அத்தியாவசிய கடமைகளில் ஒன்றாகவே குடிப்பதும் மாறி விடுகிறது மது மனிதர்களுக்கு. குடிக்காமல் கட்டுப்பாடாக இருப்பது என்பது இவர்களைப் பொறுத்த வரையில் மிகவும் சிரமமான விஷயமே. இருப்பினும் சில ஆலோசனைகள் அல்லது இணைந்த செயல்பாடுகள் மூலமாக மதுவைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். உதாரணமாக...இரவில் மட்டும் குடிக்கிறவர்களே பெரும்பாலும் அதிக அளவு இருக்கிறார்கள். நல்ல வேளை. இவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்படும் வகையில் திட்டமிட வேண்டும்.

இரவில் கோயில் போன்ற மது வாசம் அற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கம் ஆக்கலாம். அலுவலகப் பணியாளர்களில் இப்படி ஒரு குழுவே உண்டு. 6 மணி அடித்ததும் சக ஊழியர்களுடன் ஆர்வத்தோடு கிளம்பிப் போய் உற்சாக பானம் அருந்திய பின்பே வீடு நோக்குவார்கள். ஆரம்பத்தில் சுவாரஸ்யமான பொழுதுபோக்காகவே தொடங்கும் இப்பழக்கம் காலத்தின் கோலத்தில் அடிமை நிலைக்கு அழைத்துச் சென்று விடும். இப்படிப்பட்டவர்கள் உடனடியாக அக்குழுவிலிருந்து விலகி, மாலை நேர மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.
திரைப்படங்கள் பார்க்கவோ, விளையாட்டுகளில் ஈடுபடவோ அந்த மாலையைப் பயன்படுத்தலாம்.

சிலர் குடிப்பது யாருக்கும் தெரியாது. ஆனால், சில நண்பர்களோடு மட்டும் எல்லை இல்லாமல் குடித்துத் திளைப்பார்கள். அந்த நண்பர்களை தவிர்ப்பதுதான் நல்வழி. மன அழுத்தம் ஏற்படும்போது மதுவை நாடுவது சிலருக்கு வாடிக்கை. ‘ரொம்ப ஸ்டெரெஸா இருக்கு’,‘மேனேஜர் திட்டிட்டாரு’ என இவர்கள் சொல்லத் தொடங்கினாலே, அடுத்து வண்டியை நிறுத்துவது டாஸ்மாக் வாசலில்தான். மன அழுத்தத்தைப் போக்க மது ஒரு மருந்து அல்ல என்கிற உண்மையை உணர்ந்து கொள்வது அவசியம்.

மன அழுத்தத்துக்குக் காரணமான பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது என்றே பார்க்க வேண்டும். குடித்தாலும் மன அழுத்தம் ஒருபோதும் குறையாது. மாறாக அதிகரிக்கவே செய்யும். யோகா, தியானம், மனநல ஆலோசனை போன்றவையே பலன் தரும். சிலர் தனியாக இருக்கும்போது மட்டும் குடிப்பார்கள். ’தனிமை’, ’போர் அடிக்குது’ என இவர்களுக்குக் காரணங்கள் கிட்டக்கூடும். தனிமையை தவிர்ப்பதே இவர்களுக்கு முதல் மருந்து. குடும்பத்தோடும், குடிப்பழக்கம் இல்லாத நண்பர்களோடும் அதிக நேரம் செலவிட வேண்டும்.

‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ போன்ற குடிப்பழக்கத்தை கைவிட உதவும் அமைப்புகளில் இணையலாம். ‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ என்கிற மது அருந்தாதவர்கள் குழு, 1935ம் ஆண்டு முதல், உலக அளவில் செயல்படும் ஓர் அமைப்பு. மதுவைத் தவிர்க்க இங்கு ஆலோசனைகள் வழங்கப்படும்... அனுபவங்கள் பகிரப்படும்... ஆதரவு அளிக்கப்படும். 1957 முதல், இந்தியாவின் முக்கிய நகரங்களில் செயல்படும் இவ்வமைப்பு, தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், அருப்புக் கோட்டை, கோவை, கூடலூர் (நீலகிரி), மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய இடங்களில் பங்காற்றுகிறது.

தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்களை www.aagsoindia.org என்ற இணையதளத்தில் காணலாம்.
‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதோ’ என்கிற மனப்புலம்பலுக்கு ஆளாகிறவர்களும் எளிதில் மதுவின் போதைக்குள் விழுகிறார்கள். வாழ்வின் சிரம கட்டங்களுக்கு இது ஆறுதல் அளிப்பதாக அவர்களுக்குத் தோன்றுகிறது. முறையான வழிமுறைகளில் பிரச்னைகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக மதுவை நாடுகிறார்கள். காலப்போக்கில் அப்பிரச்னை மறந்தோ, மறைந்தோ போகும். மதுவே பிரச்னையாகி நிற்கும்.

உறவுகள் மற்றும் நட்பு வட்டத்தை பேணுவது பிரச்னைகளைச் சமாளிக்க கை கொடுக்கும். மதுவினால் ஏற்படும் உறவுச்சிக்கல்களை சரிசெய்யவும் மது விடுதலே ஒரே வழி. ஓய்வாக இருக்கும் போதும், விடுமுறை நாட்களிலும் மது ஆசை தூண்டப்படக்கூடும். கிடைத்ததற்கரிய அந்த நேரத்தை எப்படி பயனுள்ள வகையில் செலவழிப்பது எனச் சிந்தியுங்கள். நல்ல பொழுதுபோக்குகளில் ஆர்வம் காட்டுவது மாயையிலிருந்து விடுபட உதவும். குழந்தைகளோடு நேரம் செலவிடுவதைப் போல மகத்தான மாற்று வேறில்லை.

எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிரச்னைக்குப் பயந்து மதுவை நாடுவதால் பயன் ஏதும் இல்லை என்கிற கசப்பு உண்மையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். குடி என்பது குடிப்பவரைத் தாண்டி குடும்பத்தில் உள்ள குழந்தை முதல் குடுகுடு தாத்தா வரை அத்தனை பேரையும் பாதிக்கிறது என்பது அறிந்ததே. ஒரு குடும்பத்தில் கணவனோ, மகனோ குடிப்பதற்கு மனைவியோ, தாயோ நிச்சயமாகக் காரணமாக இருக்க முடியாது.

அதனால் குடும்ப உறுப்பினர்கள் தங்களை ஒரு குறையாக எண்ண வேண்டிய அவசியம் இல்லை. குடியின் காரணமாக அவர்களின் குடும்பத்திலுள்ள பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதே யதார்த்தம். ஆண்மைக்குறைவு போன்ற குடிநோய் காரணமான இயலாமைகள் ஒரு பக்கம், குடும்ப வன்முறை, பலாத்காரம் போன்ற விருப்பமில்லா உறவுப் பிரச்னைகள் இன்னொரு பக்கம் என எத்திசை சிக்கலுக்கும் குடி காரணமாகிறது. இதனால் குடும்பத்தினருக்கு பதற்றமும் மனச்சோர்வும் ஏற்படுகிறது.

மன அழுத்தமோ மிக அதிகமாகிறது. தொடர்ச்சியாக மனநலப் பிரச்னைகளுக்கும் ஆளாகின்றனர். அது மட்டுமல்ல... குழந்தைகள் உள்பட எல்லோருக்குமே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மது சார் சிக்கல்களுக்கு மது அருந்துபவரே தீர்வை நாடுவதுதான் முழுமையாக இருக்கும். எனினும் அவருக்கு குடும்பத்தினர் உதவ முடியும். உங்கள் குடும்ப உறுப்பினர் / நண்பர் அபாய கட்டத்தில் இருக்கிறாரா? உடல், மனம், சமூகம் இம்மூன்றுக்கும் குழப்பம் விளைவிக்கும் அளவுக்கு ஒருவர் மது அருந்துகிறார் எனில், அவர் அபாய கட்டத்தில் இருக்கிறார் என்றே பொருள்.

அடிக்கடி வாய்ப்புண் அல்லது வயிற்றுப்புண்ணால் அவதிப்படுகிறாரா? அதற்குக் குடியே காரணமாக இருக்கலாம். காயங்கள், வயிற்றில் ரத்தக்கசிவு, மஞ்சள் காமாலை, பாலுறவுத் தொற்று போன்றவற்றுக்கும் அதீத குடி காரணமாகலாம். குடும்ப வன்முறையில் ஈடுபடுகிறவர்கள், மனைவி விருப்பமின்றி உறவுப் பலாத்காரத்தில் ஈடுபடுகிறவர்கள் பெரும்பாலும் குடியால் பாதிக்கப்பட்டவர்களே. மனநலம் குன்றிய நிலையில் இருக்கிறவர்களுக்கும் மது காரணமாக இருக்கக்கூடும்.

எப்படி உதவ முடியும்? கோபம், எரிச்சல் போன்றவை உதவாது. ஆறுதலாக இருப்பதன் மூலமே, குடியிலிருந்து விடுபடச் செய்ய முடியும். ஆகவே, அவரது தனிமையை தவிர்க்கும் வகையிலும் செயல்படுங்கள். சிலர் உணவுக்குப் பின் மது அருந்த மாட்டார்கள். அதனால் கூடிய மட்டிலும் சீக்கிரமாகவே அவரை உணவருந்தச் செய்து விடுங்கள். குடிப்பழக்கம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டவர் மருத்துவரிடம் செல்லும்போது, நீங்களும் உடன் செல்லுங்கள்.

டாக்டரிடம் இது பற்றி கூறுங்கள். உண்மை நிலை அறிந்தால் மட்டுமே சரியான சிகிச்சையை பெற முடியும். குடும்பத்தினரின் ஆதரவு, மனநல ஆலோசனை, போதை நிறுத்தப் பின் விளைவுக்குச் சிகிச்சை, ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் போன்ற ஆதரவுக் குழுக்களில் இணையச் செய்தல் ஆகியவை நிச்சயம் பலன் தரும்.

அதிர்ச்சி டேட்டா

மது மற்றும் புகையிலையை தவிர்ப்பதன் மூலமாகவே 30 சதவிகித கேன்சர் நோய்களை தவிர்க்க முடியும். 2013ம் ஆண்டு வரை ரஷ்யாவில் பியர் என்பது மதுபானமாகவே கருதப்படவில்லை. அங்கு மட்டுமே ஆண்டுக்கு 5 லட்சம் உயிர்கள் மதுசார் நோய்கள் மற்றும் பிரச்னைகளால் மடிகின்றன. ஆல்கஹால் விஷமாவதால், அமெரிக்காவில் தினமும் 6 பேர் இறக்கின்றனர்.

அலுவலகப் பணியும் குடும்பப் பொறுப்பும் இரண்டையும் எப்படி சமாளிப்பது?


நன்றி குங்குமம் தோழி

உழைக்கும் தோழிகளுக்கு...ரஞ்சனி நாராயணன்

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று ஒருகாலத்தில் சொன்னார்கள். இப்போது பெண்களின் லட்சணமும் அதுவே என்றாகிவிட்ட நிலையில் எப்படி இரண்டையும் சமாளிப்பது? இந்திரா நூயி கூட பெண்களுக்குக் குற்ற உணர்வுதான் மிச்சம் என்கிறாரே! என்ன செய்யலாம்?

ஒரு பெண்ணோ ஆணோ அவர்களுடைய நிறுவனப் பணிகளில் வெற்றி அடைந்திருக்கிறார்களா என்று தீர்மானிப்பது எது? பணம்? அங்கீகாரம்? சுய அதிகாரம்? இவை எதுவுமே இல்லை என்கிறது சமீபத்தில் அக்சென்ஷர் நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வு. எப்படி குடும்ப வாழ்க்கை மற்றும் நிறுவனப் பணிகளை சமாளிக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் தங்கள் பணிகளில் வெற்றி அடைந்திருக்கிறார்களா என்பதை தீர்மானிக்கிறதாம்.

நீங்கள் தினமும் அலுவலகத்திலிருந்து தாமதமாகத் திரும்புகிறீர்களா? இரவு நெடுநேரம் உட்கார்ந்து கொண்டு அலுவலகத்தில் முடிக்க முடியாமல் போன வேலைகளை வீட்டில் செய்கிறீர்களா? உங்கள் பணிவாழ்க்கை சமநிலை ஆபத்தில் இருக்கிறது என்று இதற்கு அர்த்தம். உங்கள் எரிச்சல்களையும் கோபத்தையும் குழந்தைகளின் மேலும், கணவனின் மேலும் காட்டுகிறீர்களா? ஆபத்து! 9லிருந்து 5 வரை மட்டுமே அலுவலகப்பணி என்று இருக்க வேண்டாம்
என்றாலும், ஒவ்வொரு நாள் மாலையையும் அலுவலகத்தில் கழிப்பது என்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

அலுவலகப்பணிகளை அலுவலக நேரத்தில் முடிப்பது என்பது இயலாத காரியம். அதே நேரம் தொழில் வாழ்க்கையில் முதலிடம் வகிப்பதும் அவசியம். எப்படி? இதோ சில யோசனைகள்... தேவை சுய அலசல். வாரம் 40 மணிநேர வேலை என்பது கொஞ்சம் கொஞ்சமாக 60 மணி நேரமாக மாறத்தொடங்கி விட்டது என்றால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது சுய அலசல்தான். பணிநாட்களில் அலுவலகத்தில் உங்களது பெரும்பாலான நேரத்தை எப்படிச் செலவழிக்கிறீர்கள் என்று கவனியுங்கள்.

உள்பெட்டி செய்திகளுக்கு பதில் சொல்லுவதிலும், அதிகாரிகளுடனான சந்திப்புகளிலும் நேரம் வீணாகிறதா? இவற்றின் நேரத்தை மாற்றியமையுங்கள். அல்லது அவற்றுக்கான நேரத்தைப் பாதியாகக் குறையுங்கள். பெரிய வேலைகளை முதலில் முடியுங்கள் முக்கியமான, நேரம் அதிகம் செலவழிக்க வேண்டிய வேலைகளை முதலில் முடித்துவிடுங்கள். காலை வேளைகளில் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அதனால் பெரிய வேலைகளை முடிப்பதும் சுலபமாக இருக்கும். அதிக வேலைகளை குறைந்த நேரத்தில் செய்யலாம்.

உள்பெட்டி செய்திகளுக்கு பதில் சொல்வது, அதிகாரிகளைச் சந்திப்பது போன்றவற்றை மதிய உணவுக்குப் பின் வைத்துக் கொள்ளுங்கள். ஓர் அட்டவணை போடுங்கள் இன்று என்னென்ன செய்யவேண்டும் என்பதை சிலர் தினமும் எழுதுவார்கள். ஆனால், அதில் பாதி கூட செய்து முடித்திருக்க மாட்டார்கள். அப்படிச் செய்யாமல் இன்றைக்கு 8 மணிநேரம் அலுவலகத்தில் இருக்கப்போகிறீர்கள் என்றால் ஒவ்வொரு வேலைக்கும் எத்தனை மணிநேரம் செலவழிக்கப் போகிறீர்கள் இத்தனை மணியிலிருந்து இத்தனை மணிவரை என்று எழுதுங்கள்.

எவ்வளவு நேரம் ஒதுக்கி இருக்கிறீர்களோ, அத்தனை மணி நேரத்துக்குள் ஒவ்வொரு வேலையையும் முடிக்கப் பாருங்கள். அப்படி திட்டமிடப்பட்ட நேரத்தில், மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதுவது, தவறவிட்ட தொலைபேசி அழைப்புகளை கூப்பிடுவது போன்று நேரத்தை வீணடிக்கும் செயல்களில் ஈடுபடாதீர்கள். இவற்றுக்கென்று தினமும் அரை மணிநேரம் ஒதுக்குங்கள். தொலைபேசி பேச்சுகளை சுருக்கமாக முடியுங்கள். மின்னஞ்சல்களை விஷயத்தை மட்டும் சொல்லி முடித்து விடுங்கள்.

கவனச் சிதறல்களை தவிர்த்துவிடுங்கள் கவனத்தை சிதற அடிக்கக்கூடிய விஷயங்களைத் தவிர்த்து வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் கணினியில் அனாவசியமாக நிறைய ஜன்னல்களைத் (tabs) திறந்து வைக்காதீர்கள். குறிப்பிட்ட வேலை முடியும்வரை தொலைபேசியை பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள். முடிந்தால் தொலைபேசியை மௌனப்படுத்தி விடுங்கள். அவ்வப்போது இடைவெளி தேவை தொடர்ச்சியாகப் பலமணிநேரம் வேலை செய்வதைவிட அவ்வப்போது சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு வேலையைத் தொடர்வது உங்கள் வேலைத்திறமையை அதிகரிக்கும்.

ஒரு பெரிய வேலையை முடித்தவுடன் நாற்காலியிலிருந்து எழுந்து சிறிது கை கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். சுடச்சுட காபி அல்லது வேறு ஏதாவது பானம் குடித்துவிட்டு வேலையைத் தொடருங்கள். அதற்காக தோழிகளுடன் அரட்டை அடிக்கவோ, ஃபேஸ்புக் பார்க்கவோ ஆரம்பித்து விடாதீர்கள். இவைதான் உங்கள் நேரத்தை விழுங்கும் பகாசுரன்கள்! ‘நோ’ சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் இன்றைக்கு வேலை கழுத்துவரை இருக்கிறது என்று தெரிந்தும், நமக்குத் தெரிந்தவர்கள் என்று தயவு தாட்சண்யம் பார்த்து சில விஷயங்களை செய்து தருவதாக ஒப்புக்கொண்டு விடுவோம்.

முடியாது என்று சொல்லவும் தயக்கம். இப்படிப்பட்ட சூழ்நிலையை உறுதியாக தவிர்த்து விடுங்கள். முடியாது என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். அதுவும் குறிப்பாக வேலை மும்முரமாக இருக்கும்போது அனாவசிய வேலைகளைச் செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள். முன்னோக்குடன் செயல்படுங்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, பெரிய விஷயங்களைக் கோட்டை விடாதீர்கள். இரண்டொரு நாளில் முடிக்க வேண்டிய வேலைகளை உடனடியாக முடித்து விடுங்கள். உங்களுக்கான பணிகள் வரும்போதே உங்களுக்குத் தெரியும் எந்த வேலையை எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும், காலக்கெடு எப்போது என்று.

அதற்குத் தகுந்தாற்போல உங்கள் நேர ஒதுக்கீடு இருக்கட்டும். இன்று செய்ய வேண்டியவை என்று பட்டியல் போடும்போதே சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள். நாம் நினைத்தபடி நடக்காது சில வேலைகள் அல்லது நீங்கள் ஒருவரே சில வேலைகளை செய்து முடிக்க முடியாது. வேறொருவரின் உதவி தேவைப்படலாம். அவர் அவரது வேலைகளை முடித்து விட்டுத்தான் உங்களுக்கு உதவுவார் என்று தெரியும். இந்த மாதிரியான வேலைகளுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். அவருக்கும் உங்களுக்கும் ஒத்துப்போகும் வேலை நேரத்தைத் தேர்ந்தெடுங்கள்.

அதேபோல நீங்கள் இன்னொருவருக்கு உதவ நேரலாம். அவருடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். முன்கூட்டியே இருவருமாக திட்டமிட்டால் சின்னச் சின்ன மனஅழுத்தங்களைத் தவிர்க்கலாம். அடுத்த வாரம் உங்கள் பாஸ் வருகிறார் என்றால் உங்கள் திட்டப்படி எதுவும் நடக்காது என்று தெரியும். அந்த நேரங்களில் நீங்கள் நினைத்தபடி நடக்காமல் போகலாம். அதையெல்லாம் கருத்தில் கொண்டு உங்கள் வேலை நேரங்களைத் திட்டமிடுங்கள்.
செய்வன திருந்தச் செய் ஒருவேலையைச் செய்யும்போதே கூடியவரை திருத்தமாகச் செய்துவிடுங்கள்.

ஒருமுறை செய்து முடித்த வேலையை மறுமுறை செய்யும்படி இருக்கக்கூடாது. அன்றைக்கு செய்ய வேண்டிய வேலை முடிந்துவிட்டது என்றால் உடனே அலுவலகத்தை விட்டுக் கிளம்பி விடுங்கள். மிகமிக முக்கியமானது
அலுவலக நேரத்தை அலுவலகப்பணிகளுக்கு மட்டுமே செலவழியுங்கள். அரட்டை அடிக்கவோ, ஃபேஸ்புக் பார்க்கவோ உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் மாலை வேளைகளை குழந்தைகள், கணவன், பெற்றோர்களுடன் செலவழியுங்கள்.

இப்படிச் செய்வது உங்களுக்கும் நல்லது. குடும்பத்தினரும் உங்களை அனுசரித்துக் கொண்டு போவார்கள். பெரும்பாலான நாட்கள் இப்படி இருந்தால் அலுவலகத்தில் வருடாந்திர முடிவின்போது நீங்கள் தாமதமாக வந்தாலும் குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வீட்டில் அமைதி நிலவினால்தான் அலுவலகத்தில் உங்கள் பணி சிறக்கும்.
எல்லோருக்கும் இருப்பது 24 மணி நேரம்தான். அதை நாம் எப்படி செலவிடுகிறோம் என்பதில்தான் நமது சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது!



துப்பாக்கி ரவைகள் நெஞ்சைத் துளைக்கும் முன்' இந்திராவின் ஆசை!



“இன்று நான் இங்கிருக்கிறேன். நாளை இருப்பேனா என்று தெரியாது. என்னைச் சுட்டுக் கொல்ல எத்தனை முயற்சிகள் நடைபெற்றன என்பதை யாரும் அறியமாட்டார்கள். வாழ்வு, சாவு பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு இரண்டும் ஒன்றுதான். நான் கணிசமான காலம் வாழ்ந்துவிட்டேன். அந்தக் காலத்தை, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் செலவிட்டதில் பெருமைப்படுகிறேன். இது ஒன்றுதான் எனக்குப் பெருமையே தவிர, வேறு எதற்காகவும் நான் பெருமைப்படவில்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்வேன். நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டை வளப்படுத்தும்; பலப்படுத்தும்.”






முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தான் கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள், 1984-ம் ஆண்டு அக்டோபர் 30-ல் ஒரிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு,அன்றிரவு ஒரிசாவின் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், வழக்கமாக தன் சொற்பொழிவுப் பிரிவு செயலாளர் தயாரித்துக் கொடுத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் பேசத்தொடங்கினாலும், இறுதியாக அதிலிருந்து விலகி, புதிதாகப் பேசிய உணர்ச்சிமயமான வார்த்தைகள் இவை.

இந்திரா காந்தி இவ்வாறு பேசியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாநில கவர்னர், “வன்முறையால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற பொருள்பட பொதுக்கூட்டத்தில் பேசினீர்களே. ஏன்? அதைக்கேட்டு நான் ரொம்பவும் கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன்” என்று இந்திராவிடம் கூறியபோது, “நான் என் மனதில் பட்டதைச் சொன்னேன். என் தாத்தாவும், அம்மாவும் அணு அணுவாக இறப்பதைக் கண்ணால் கண்டு, மனம் நொந்தவள் நான். நோய்வாய்ப்பட்டு, துயரப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாவது மிகவும் கொடுமை. ஆரோக்கியமாக இருக்கும்போது, திடீரென்று மரணத்தைத் தழுவுவதையே நான் விரும்புகிறேன்” என்று இந்திரா காந்தி பதிலளித்தார்.

மறுநாள். நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய கொடூரமான இரண்டாவது படுகொலையாக, இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டார். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி, அவருடைய வீட்டில் பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப் பிறகு, இந்திரா காந்தி மீது சீக்கியர்களில் பலர் ஆத்திரம் கொண்டிருந்தனர். அதன் காரணமாக, இந்திரா காந்தியின் வீட்டில் காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்தக் கூடாது என்று ரகசியத்துறையின் இயக்குநர் கருத்து தெரிவித்திருந்தும், அவர் அதை ஏற்கவில்லை.




1984 அக்டோபர் 31-ம் தேதி காலை 8 மணிக்கு, இந்திரா காந்தி பற்றி டெலிவிஷன் படம் ஒன்றை எடுப்பதற்காக, வெளிநாட்டுப் படப்பிடிப்பாளர் ஒருவர் வந்து, பிரதமரின் அலுவலகத்தில் காத்திருந்தார். ஒரு கட்டடத்திலிருந்து மற்றொரு கட்டடத்துக்குச் செல்ல இடையில் இருந்த தூரம் சுமார் 300 அடி. அதைக் காரிலேயே கடந்திருக்க முடியும் என்றாலும், வந்திருந்தவருக்குப் பேட்டியளிக்க இந்திரா காந்தி நடந்தே சென்றார். அப்போது, புதர் போன்ற செடிகளுக்குப் பின்னால் பிரதமரின் இல்ல பாதுகாவலர்கள் பியாந்த்சிங், சத்வந்த்சிங் ஆகியோர் நின்றிருந்தனர்.

பியாந்த்சிங் தன் கைத்துப் பாக்கியால், இந்திரா காந்தியை நோக்கி ஐந்து முறை சுட்டார். அதே நேரத்தில், சத்வந்த்சிங் இயந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இந்திரா காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன.

ரத்தம் பெருக்கெடுக்க உயிரிழந்த இந்திரா காந்தி, பிறப்பு முதலே சிறப்புப் பெற்றவர். அப்போது, முதல் உலகப் போர் முடிந்திருந்த சமயம். இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கியிருந்த காலம். ஜவஹர்லால் நேரு - கமலா நேரு தம்பதியின் மகளாக, புகழ்பெற்ற குடும்பத்தில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத்தில், 1917 நவம்பர் 19ல் பிறந்தார் இந்திரா பிரியதர்ஷினி.

பெரும் பணமும் புகழும் கொண்ட குடும்பம் என்றாலும் தாத்தா, அப்பா, அம்மா என இந்திராவின் குடும்பத்தினர் அனைவருமே சுதந்திரச் சிந்தனைகளோடு வாழ்ந்தவர்கள். அதனால், அதிக காலத்தை சிறையிலேயே அவர்கள் கழித்தார்கள். அந்தக் காலகட்டத்தில் குடும்பத்தின் மற்ற பெண்களுடன் சபர்மதி ஆசிரமத்தில் தங்கிய அனுபவம், இந்திரா காந்தியின் இளைமைக் காலத்தில் அவரை வாட்டியது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய மகாத்மா காந்தி, இந்திராவின் குடும்பத்துடன் சுதந்திரப் போராட்டம் குறித்து அடிக்கடி பேசிவந்ததும், போராட்ட காலத்தில் மக்கள் பட்ட துன்பங்களை நேரடியாகப் பார்த்துவந்ததும், இந்திராவின் நெஞ்சில் சுதந்திரப் போராட்ட உணர்வுகளை எழுப்பின.

ஜவஹர்லால் நேரு, தன் மகள் இந்திராவோடு இருந்து அவருக்குக் கல்வி அறிவூட்ட முடியவில்லை என்றாலும், சிறையில் இருந்துகொண்டே 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளையும், உயிர்களின் தோற்றம், கண்டங்கள் பிறப்பு, பேரரசுகள், உலகப் போர், அறிவியல் கண்டுபிடிப்புகள், உலகில் குறிப்பிடத்தக்க மனிதர்கள், தொழிற் புரட்சி, பொருளாதாரம், இயற்கை வளம் என எந்தப் பல்கலைக்கழகமும் சொல்லித்தர முடியாத விஷயங்களைத் தன் கடிதங்களின் மூலம் தன் மகளுக்குக் கற்பித்தார். லால் பகதூர் சாஸ்திரியின் மந்திரி சபையில் அமைச்சராக இருந்து, தன் அரசியல் பணியைச் சிறப்பாக்கினார், இந்திரா. தன் தந்தையுடன் பல நாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அவற்றையெல்லாம் பிற்காலத்தில், தன் அரசியல் ஸ்திரத்தன்மை வெளிப்பாட்டுக்கு பயன்படுத்திக்கொண்டார்.

கோடிகளைக் குவிக்கும் அரசியல் செய்யவில்லை இந்திரா காந்தி. தன்னை, தன் குடும்பத்தையே நாட்டுக்காகத் தியாகம் செய்தவர். அதனால்தான், நேருவின் மறைவுக்குப் பின் இந்திராவை பிரதமராக்கினார், கர்மவீரர் காமராஜர்.

தேசிய ஒருமைப்பாட்டை நேசித்தவர் இந்திரா காந்தி. தன் ஆட்சிக்காலத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், ஏழை எளிய மக்களின் நிலை உயரவும் பாடுபட்டார். நம்மை எதிரியாக நினைத்த நாடுகளையோ, உள்நாட்டிலே தன்னை எதிர்த்தவர்களைக் கண்டோ, ஒருபோதும் அஞ்சாதவர்.

இந்திரா சராசரி அரசியல்வாதி அல்ல. இந்தியாவின் வரலாறும் அன்னை இந்திராவின் வரலாறும் ஒன்று கலந்தது. வரலாறாக நிலைத்த நெஞ்சுரம் மிக்க அன்னையை நினைவில் வைப்போம்!

இடிக்கப்பட்டது மெளலிவாக்கம்.... மிச்சமிருக்கும் கட்டடங்கள் எத்தனை...? என்ன சொல்கிறது சட்டம்?



விதிமீறல்... அத்துமீறல்... முறைகேடுகள்... இவற்றின் பின்னணியில்தான், சென்னை மாநகர், கான்கிரீட் காடாக வளர்ந்து நிற்கிறது. அதிகாரம், அரசியல் வியாபாரத்தோடு சென்னையில் சொந்தமாக இடமும், கட்டடமும் வைத்துள்ள சாதாரண குடிமகன்களும் கூட்டுச்சேர்ந்து அரங்கேற்றிய அராஜகத்தின் அடையாளங்களே, மாநகரம் முழுவதும் ஓங்கி உயர்ந்து நிற்கும் வரைமுறையற்ற கட்டடங்கள். சென்னை மாநரின் கடும் போக்குவரத்து நெரிசல், சுகாதாரக்கேடு, மிக காஸ்ட்லியான ஏரியாக்கள்கூட இரண்டு நாட்கள் மழையில் மூழ்கிப்போகும் நிலை என்று மாநகரின் இன்றைய மூச்சுத்திணறலுக்கு இந்த வரைமுறையற்ற கட்டடங்களே காரணம். 1990-களுக்குப் பிறகு சென்னைக்கு ஏற்பட்ட இந்த நிலை, 2000-த்துக்குப் பிறகு தமிழகத்தின் முக்கிய மாநகரங்களுக்கு நேர்ந்தது.

இதை மிகமிகத் தாமதமாக உணர்ந்துகொண்ட தமிழக அரசாங்கம் 1999-ம் ஆண்டு, ‘வரைமுறையற்ற கட்டடங்கள் மறுவரையறை’ என்று ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் விதிமுறைகளை மீறிக் கட்டி... அதில் சிக்கியவர்கள், இந்தச் சட்டம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “சட்டம் சரிதான்... ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் ஓர் ஒழுங்குமுறை வேண்டும்” என்று சொல்லி சில வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தச் சொன்னது. அதன்படி, ‘சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். அந்த கமிட்டியின் கூட்டம் மாதம் ஒரு முறை நடைபெற வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

தமிழக அரசு இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உறுதி செய்தது. அதையடுத்து, சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால், அதன் கூட்டம் மாதம் ஒருமுறை நடக்கவில்லை என்று அந்தக் கமிட்டி உறுப்பினரான தேவசகாயம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதுபோல, தமிழகத்தில் விதிமீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக நகரமைப்புச் சட்டம் ஒரு திருத்தம் கொண்டுவந்தது. அது செல்லாது என்று ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. அதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைத்துப் புதிய விதிகளைப் பரிந்துரைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அந்தக் குழுவும் புதிய விதிகளை வகுத்துத் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது. இந்த வழக்கும், சென்னை தி.நகர் பகுதியில் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பான வழக்கும் கடந்த நவம்பர் 1-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை ஒழுங்குபடுத்த, இந்த நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தது. ஆனால், அவை எதுவும் பின்பற்றப்படவில்லை.

அசம்பாவித சம்பவங்கள் நடந்தபின்பே நடவடிக்கை எடுப்போம் என்ற மனநிலையில் அரசு அதிகாரிகள் இருக்கின்றனர். ஒருபுறம், அரசாங்கம் கொள்கைரீதியாக எந்த முடிவையும் எடுப்பதில்லை. மறுபுறம், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும் பின்பற்றுவதில்லை. விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது சி.எம்.டி.ஏ., எந்தவிதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினர். அதன்பிறகு, “நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தை ஒரு வாரத்துக்குள் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் கூட்ட வேண்டும். மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத சி.எம்.டி.ஏ-வின் உறுப்பினர் செயலர், அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்



தீயணைப்பு வசதிகள் இல்லாத கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவைப் பொறுத்தமட்டில், தீ தடுப்புப் பாதுகாப்பு இல்லாத கட்டடங்கள் குறித்து ஆய்வுசெய்து, அந்த விதமான வசதிகள் இல்லாத கட்டடங்கள் பாதுகாப்பற்ற கட்டடங்கள் என்பதற்கான எச்சரிக்கை நோட்டீஸை ஒட்டவேண்டும். அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்குத் தள்ளி வைக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

சட்டத்தின் சந்துபொந்துகள்... மவுலிவாக்கம் ஒரு சாட்சி!

தமிழகம் முழுவதும் உள்ள விதிமுறை மீறிய கட்டடங்களை வரைமுறைப்படுத்த 1999-ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. ஆனால், அதையே 17 ஆண்டுகளாகத் தமிழக அரசால் நடைமுறைப்படுத்த முடியவில்லையா? அதுவும் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்த பிறகும் அதைச் செய்ய முடியவில்லையா என்று ஆச்சர்யப்படுவதில் அர்த்தமே இல்லை. ஏனென்றால், நம்முடைய சிஸ்டம் அப்படி. மவுலிவாக்கத்தில் கட்டடம் இடிந்து 61 பேர் இறந்தபிறகும்கூட, பக்கத்தில் இருக்கும் ஒரு கட்டடத்தை இடிக்க 2 ஆண்டுகள் ஆகியிருக்கிறது தமிழக அரசுக்கு. அரசின் மெத்தனம் ஒருபக்கம் என்றால், அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் வாய்தாக்களும் நிலுவையில் இருந்தது மற்றொரு காரணம்.

தமிழகத்தில் உள்ள விதிமீறிய கட்டடங்களை நெறிப்படுத்த, சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் இழுத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், மவுலிவாக்கம் கட்டட விபத்து ஏற்பட்டது. 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி மவுலிவாக்கத்தில் அருகருகே, கட்டப்பட்டுக்கொண்டிருந்த இரண்டு கட்டடங்களில் ஓன்று பூமிக்குள் புதைந்தது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 61 பேர் மரணமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், வட இந்திய கட்டடத் தொழிலாளிகள். இதையடுத்து, நீதிமன்றம் இந்த விவகாரத்தைக் கொஞ்சம் சீரியஸாகக் கையில் எடுத்தது. மவுலிவாக்கம் கட்டடத்துக்குப் பக்கத்தில் இருக்கும் மற்றொரு கட்டடத்தை இடிக்க காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டரின் உத்தரவை எதிர்த்து, கட்டட உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போனார் கட்டட உரிமையாளர். அங்கு வழக்கு இழுத்தடிக்கப்பட்டு, ‘இறுதியில் கலெக்டரின் உத்தரவும், அதை உறுதிப்படுத்திய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவும் சரியே என்று சொல்லி, கட்டடத்தை இடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இதற்கே இரண்டரை ஆண்டுகள் இழுத்துவிட்டன. ஒரு கட்டடத்தை இடிக்கவே இத்தனை ஆண்டுகள் என்றால், தமிழகம் முழுவதும் உள்ள விதிமுறைகளை மீறிய கட்டடங்களை வரைமுறைப்படுத்துவது என்றால், அது சாதாரண காரியமா? ஏனென்றால், நம்முடைய சிஸ்டம் அப்படி!


ஜோ.ஸ்டாலின்

தகர்க்கப்பட்டது மவுலிவாக்கம் 11 மாடி அடுக்குமாடி கட்டடம்


சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி அடுக்குமாடி கட்டடம் வெடி மருந்து மூலம் நேற்று மாலை 6.52 மணிக்கு தகர்க்கப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி மவுலிவாக்கத்தில் இருந்த இரண்டு 11 மாடி அடுக்குமாடி கட்டத்தில் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி அருகில் இருந்த மற்றொரு அடுக்குமாடி கட்டத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி அடுக்குமாடி கட்டடம் இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று கட்டடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, தரைதளம், 5வது தளம் உள்ளிட்டவற்றில் உள்ள தூண்களில் துளையிடப்பட்டு வெடிமருந்துகள் வைக்கப்பட்டன. இதற்காக திருப்பூரில் இருந்து மேக்லிங்க் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டடத்தை இடிப்பதற்கான அனைத்துப் பணிகளையும் அதிகாரிகள் முன்னிலையில் செய்தனர். இடிப்பதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியவுடன் 5வது தளத்தில் உள்ள வெடிமருந்துகள் வெடித்தன. அடுத்த சில நொடிகளிலேயே முதல்தளத்தில் உள்ள வெடிமருந்துகள் வெடித்தன. இதைத் தொடர்ந்து அந்த பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சி அளித்து.

கட்டடம் இடிக்கும் பணி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, சிஎம்டிஏ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இது குறித்து கட்டடம் இடிப்பு பணியில் ஈடுபட்ட நிபுணர்கள் கூறுகையில், "இந்த கட்டடத்தின் வரைபடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சில நாட்களாக ஆய்வு செய்தோம். எந்த தூண்களின் பிடிமானத்தில் கட்டடத்தை தாங்கும் சக்தியை கண்டறிந்தோம். அடுத்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டடத்தை அப்படியே சீட்டுக்கட்டு சரிவது போல இடிக்க ஏற்பாடு செய்தோம். இதனால் அருகில் உள்ள எந்த கட்டடங்களுக்கும் எந்தவித பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டோம். கண்மூடி கண்திறக்கும் நொடிக்குள் 11 மாடி கட்டடமும் இடித்துத் தள்ளப்பட்டது" என்றார்.

3 நொடிகளுக்குள் 11 மாடி அடுக்குமாடி கட்டடமும் இடிக்கப்பட்டது. கட்டடம் தகர்க்கப்பட்டு 30 நிமிடங்களுக்கு மேலாக, அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் காணப்பட்டது. பாதுகாப்பு கருதி அந்தப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதற்கு மத்தியில், அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டு இருந்த மக்கள், கட்டடம் தகர்க்கப்பட்டதற்குப் பின்னர் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். அதிகாரிகள், மற்றும் போலீசார் இரவு முழுவது, அந்தப் பகுதியிலேயே முகாம் இட்டிருந்தனர்.


எஸ்.மகேஷ், ந.பா.சேதுராமன்
வீடியோ/படம்: ஆ.முத்துக்குமார், தி.குமரகுருபரன்

Wednesday, November 2, 2016

மாணவர்களுக்கு ''வாட்ஸ் அப்'' வரமா.... சாபமா

DINAMALAR

அலைபேசியில் அனுப்பும் குறுந்தகவலுக்குப் பதில் காணொலி, கேட்பொலி மற்றும் உருப்படிமங்களை எளிமையாகத் தடையின்றி அனுப்புவதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது 'வாட்ஸ் ஆப்' செயலி. அமெரிக்காவைச் சார்ந்த ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகியோரின் முயற்சியால் 2009 பிப்., 24ம் தேதி சிலிகான் பள்ளத்தாக்கில் 55 பணியாளர்களைக் கொண்டு 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் துவங்கப்பட்டது. அதன் மூலம் 'வாட்ஸ் ஆப்' செயலி
உருவாக்கப்பட்டது.
ஜான், பிரைன் இருபதாண்டுகளாக 2007 செப்., வரை யாஹூ நிறுவனத்தில் கணினி சார்ந்த வேலைகளைச் செய்தனர். பின் 'பேஸ்புக்' நிறுவனத்தில் வேலையில் சேர முயற்சித்தனர். அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. மனம் தளராத இருவரும், வரும் காலங்களில் மக்கள் 'ஸ்மார்ட் போன்' உபயோகிப்பர் என கணித்து, 'வாட்ஸ் ஆப்' செயலியை உருவாக்கியதுதான் இன்றைய அவர்களின் இமாலய வெற்றிக்குக் காரணம். 'வாட்ஸ் ஆப்' நிறுவனர்களான ஜான் மற்றும் பிரைன் ஆகியோரை வேலைக்கு எடுக்காத 'பேஸ்புக்' நிறுவனம், ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு 2014 பிப்., 19 'வாட்ஸ் ஆப்' நிறுவனத்தைத் 1600 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

மைனர்களுக்கு தடை

'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துபவர்கள், தங்கள் சொந்தத் தகவல்களை வெளியிடுவதற்கு மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும். பதினாறு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அதைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்துவது தெரிந்தால் உடனடியாக 'வாட்ஸ் ஆப்' குழுவிலிருந்து நீக்கப் படுவர் என்பதை 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் விதிமுறையாக குறிப்பிட்டது. ஆனால் நடைமுறையில் இந்த விதிமுறை எவ்வளவுதுாரம் காப்பாற்றப்பட்டுள்ளது என தெரியவில்லை.
80 கோடி பேர்

உலகில் 80 கோடி நுகர்வோர் 'வாட்ஸ் ஆப்' செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். மாதம் லட்சத்திற்கும் அதிகமான புதிய பயனாளர்கள் உருவாகின்றனர். 'வாட்ஸ்ஆப்' பயன்படுத்துபவர்களில் உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
'ஸ்மார்ட் போனுடன் 'வாட்ஸ் ஆப்' வைத்திருப்போரை, இன்றைய நாகரிகக் குறியீடாக உருவாக்கி, அவர்களைத் தங்கள் மாய வலைக்குள் சிக்கவைக்கும் வேலையைப் பன்னாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.
இந்த கவர்ச்சி வலையில் சிக்கிய மாணவர்கள், 'வாட்ஸ் ஆப்'க்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் மாணவர்கள் சுயமாகச் சிந்திக்கும் நேரத்தையும் கல்வி கற்கும் நேரத்தையும் இழக்க நேரிடுகிறது. இதைப் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்கள் உணர்ந்து, அதைப் பயன்படுத்த முறையாக வரையறை செய்ய வேண்டும்.
அரட்டைக்காக பயன்படும் அவலம்

'ஸ்மார்ட் போனுடன் வாட்ஸ் ஆப் பயன்படுத்தக் கூடிய மாணவர்களிடம், அவர்கள் கல்வி முறையில் ஏற்படக்கூடிய நன்மை மற்றும் தீமைகளை அறிய, தென்மாவட்ட தகவல் தொழில் நுட்ப இளைஞர்களை ஒருங்கிணைத்து வரும் 'மதுரை ஐடியன்ஸ்' அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.
மதுரை மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகளிடம் ஆய்வு நடந்தது. அவர்களிடம் கலந்துரையாடல், அலைபேசி, மின்னஞ்சல், முகநுால், மற்றும் டுவிட்டர் வழியாகக் கேள்விகளை கேட்ட போது கல்வி, பொதுத் தகவல், அரட்டை, குடும்பம் போன்ற நான்கு நியாயமான காரணங்களுக்காக இதைப் பயன்படுத்துவதாகப் பெரும்பாலோர் தெரிவித்தனர்.
அவர்களிடம் பெற்ற தகவல்களைப் பகுப்பாய்வு செய்ததில், மாணவர்கள் அரட்டைக்காகவும், பொதுத் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், “வாட்ஸ்ஆப்'” பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.
மாணவிகள் பெரும்பாலும் குடும்பம் சார்ந்த தகவல்களை நண்பர்களிடம் தெரிவிக்கவும் அரட்டைக்காகவும் பயன் படுத்துவதாகத் தெரிவித்தனர்.
கல்விக்கான பயன்பாடு குறைவு

மிக குறைந்த எண்ணிக்கையினரே கல்விக்காக பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது.கல்விக்காக -8, பொதுத் தகவலுக்காக -11, அரட்டைக்காக -72, குடும்பத்திற்காக -9 சதவீதம் பயன்படுத்தியுள்ளனர். 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்தியவர்கள் 72 சதவீதம் பேர் நடந்து முடிந்த தேர்வுகளில் மதிப்பெண் குறைவாக எடுத்ததையும்
ஒப்புக்கொண்டனர்.
நுாறு பேர் கொண்ட குழுவாக இருப்பதால், அரட்டையடிப்பதிலேயே மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், அதனால் கல்வியில் அதிகக் கவனம் செலுத்த நேரத்தை ஒதுக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதைப் பார்க்கும் போது வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும், வலிமை இழந்து போய்க் கொண்டிருக்கும் மாணவ மாணவியரின் பொன்னான நேரம் குறித்த விழிப்புணர்வை பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் ஏற்படுத்தித் தர வேண்டியது
அவசியம் என்பது தெரிகிறது. 'வாட்ஸ்ஆப்' செயலியில் மாணவ மாணவியர் ஆங்கிலத்தில் மிகச் சுருக்கமாகவும், வேகமாகவும் எழுதிப் பழகுவதால் மொழிப் பயன்பாட்டில் நிறைய குழப்பங்களும் இலக்கணப் பிழைகளும் ஏற்படுகின்றன. இது தேர்வுகளிலும் அவர்களை அறியாமல், எழுத்துப் பிழை ஏற்படுத்த வைப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பாதிக்கப்படும்

கல்வியின் தரம்

'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, ஆம் என 76, பாதிப்பு இல்லை என 24 சதவீதத்தினரும் பதில் அளித்துள்ளனர்.
மாணவர்களின் கல்வி மட்டும் பாதிக்கப்படாமல், ஒருவர் பொழுதுபோக்காகக் காணொலி, கேட்பொலி ஆகியவற்றை 'வாட்ஸ்ஆப்' பில் தடையின்றி அனுப்புவதால் அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் அவை செல்கின்றன.
அவற்றை விருப்பம் இல்லாமலும் பார்க்க வேண்டிய சூழல் அக்குழுவிலுள்ள அனைவருக்கும் ஏற்படுகிறது. ஒருவகையில் அதுவே அவர்களின் நேரத்தைச் சூறையாடத் தொடங்குகிறது.

'வாட்ஸ் ஆப்' போதை

உண்மையான தேவைக்குப் பயன்படவேண்டிய மின்சாரம் மற்றும் இணைய சேவையும் திசைமாறி வீணாகிறது என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இதுவே தொடர்ந்து, கணவன் மனைவியாகிற நிலையில், அவர்களுக்குள் பேசி பகிர்ந்து கொள்ளுதல் என்ற பரஸ்பர உறவு நிலை மாறி 'வாட்ஸ்ஆப்' மூலம் பகிர்ந்து கொள்ளுதல் என்கிற நிலை மேலோங்கி, அவர்களின் நெருங்கிய உறவிற்கு தடையாகவும் அமைந்து விடும்.
'டிவி' மூலம் கால் நூற்றாண்டு களாக மாணவர் கிரிக்கெட் நோய்க்கு ஆட்கொள்ளப்பட்டார்களோ, அதைப்போல 'ஸ்மார்ட்போன்' உதவியுடன் 'வாட்ஸ்ஆப்' என்ற நோயால் இப்போது உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வரு கின்றனர் என ஆய்வு முடிவு மூலம் அறிய முடிந்தது.
எனவே இளம் தலைமுறையினர் வாழ்வை செம்மைப்படுத்தும் விதம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எல்லா நல்லதற்குள்ளும் கெட்டதும் இருக்கிறது. எல்லாக் கெட்டதற்குள்ளும் நல்லதும் இருக்கிறது என்பது 'வாட்ஸ் ஆப்' செயல்பாடு தெரியப்படுத்துகிறது.-பெரி.கபிலன்
கணினி அறிவியல் பேராசிரியர்மதுரை. 98944 06111.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...