Wednesday, November 9, 2016

indian_bride


இந்தியப் பெண்களிடையே சொந்த சாதியல்லாது பிற சாதியில் வரன் தேடும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா?

By கார்த்திகா வாசுதேவன் 
60 சதவிகித இந்தியப் பெண்கள் வாழ்க்கைத் துணைக்கான தேடலில் தங்களது சாதியை விட பிற சாதி வரன்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்கிறார்கள் என ’பானிஹால்’ எனும் வரன் தேடலுக்கான இணையதளம் ஒன்று சமீபத்தில் தனது சர்வே முடிவை அறிவித்திருக்கிறது.
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதெல்லாம் அந்தக் காலம், இப்போதெல்லாம் அறிவியல், மருத்துவம் இரண்டின் மூலமும் பொருத்தம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்தப் பானிஹால் தனது வாடிக்கையாளர்களின் திருமணப் பொருத்தங்களை நியூரோ சயன்ஸ் அடிப்படையில் பார்த்துத் பொருத்தமான வரன்களைத் தேர்ந்தெடுக்க உதவுகிறதாம். இந்த இணையதளம் இதுவரை 6000 வாடிக்கையாளர்களிடம் நடத்திய ஒரு ஆய்வில்;
மணப்பெண்களின் எதிர்பார்ப்பு என்பது;
  • இரண்டில் ஒரு பெண் கூட்டுக் குடும்ப வாழ்வை விரும்புகிறார். அவர்களுடைய தேடல் கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்து வாழத் தயாராக இருக்கும் மணமகனாகவே இருக்கிறது.
  • தோற்றத்தைக் கண்டு மயங்குவதெல்லாம் மலையேறிப் போய் விட்டது. பத்தில் ஆறு பெண்கள் திருமண வரன்களுக்கான இணைய தள சுய விவரப் பக்கத்தில் புகைப்படம் கூடப் பகிராத மணமகன்களைத் தொடர்பு கொண்டு விசாரிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்களாம்.
  • முன்பெல்லாம் மணமகன் தரப்பிலிருந்து தான் திருமணப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது சம்பிரதாயமாக கடைபிடிக்கப் பட்டு வந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல இந்த இணையதளத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், இவர்களது பயனாளர்களில் 40 சதவிகிதத்தினர் பெண்கள் என்பதோடு திருமணப் பேச்சு வார்த்தைகளின் போது ஆண் வீட்டாரை விட பெண் வீட்டார் தான் இத்தகைய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதில் தெளிவாகவும், ஆர்வமாகவும் ஈடுபடுகிறார்கள்.
  • அதோடு கூட இன்றைய பெண்கள் மணமகனைத் தேர்ந்தெடுப்பதில், அவரது சொத்து மதிப்பைக் காட்டிலும் அவரது கல்விக்கும், உத்யோகத்திற்கும்  முன்னுரிமை தருகிறார்கள். குறைந்த பட்சம் தங்களது வாழ்க்கைத் துணை பட்டதாரியாகவாவது இருக்க வேண்டும் எனும் விழிப்புணர்வும், எதிர்பார்ப்பும் 85 சதவிகிதப் பெண்களுக்கு இருக்கிறது.

ரிடையர்மெண்டுக்குப் பிறகு; என்னென்னவோ செய்யலாம்?


retire_3

ரிடையர்மெண்டுக்குப் பிறகு;

என்னென்னவோ செய்யலாம்?

மனமுவந்தும், மனத் திருப்தியோடும் செய்வதற்கு எத்தைனையோ விசயங்கள் இருக்கின்றன.

ஆனால் அவையெல்லாம் அவரவர் மனதளவில் நின்று போகின்றன. பின்பு நடப்பதெல்லாம்;

ஆண்கள்/ பெண்கள் என்ற வேறுபாடின்றி ரிடையர்டு ஆன எல்லோருமே ஒரு குறுகிய வாழ்க்கை வட்டத்தில் சிக்குண்டு மீள முடியாதவர்களாகிப் போகிறார்கள்
கூட்டுக் குடும்பம் எனில் பேரன் பேத்திகளை பள்ளிக்கு கொண்டு விட்டு, திரும்ப அழைக்கும் வேலையை ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆண்கள் மாதா மாதம் ரேஷன் கடைக்குச் சென்று திரும்புகிறார்கள். கரண்ட் பில் கட்டும் பொறுப்பேற்கிறார்கள். மளிகைக் கடைக்கும், மெடிக்கல் ஷாப்புக்கும் சென்று வரும் தலையாய கடமை இவர்கள் தலையில் ஏற்றப்படுகிறது.
பெண்கள் மருமகளோ, மகளோ வேலைக்குச் செல்பவர்கள் எனில் சமையற்கட்டுக்கு பொறுப்பாளராக்கப்பட்டு விடுகிறார்கள்.
ஒழிந்த நேரங்களில் பேக்கேஜ் டூர் பதிவு செய்து கொண்டு நண்பர்கள் அல்லது உறவினர்களோடு ஆன்மீகச் சுற்றுலா சென்று திரும்புகிறார்கள்.
பிள்ளைகள் வெளியூரில் இருந்தால் அடிக்கடி அவர்களிருக்கும் இடங்களுக்குச் சென்று திரும்புகிறார்கள். இரண்டுக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் எனில் மகன் வீட்டில் பத்து நாள், பெரிய மகள் வீட்டில் 7 நாள். சின்ன மகள் வீட்டில் 5 நாள் என்று கால்ஷீட்டை பிய்த்துக் கொடுத்து விட்டு மாதக் கடைசியில் சொந்தக் கூட்டில் அக்கடா என்று உட்காரும் போது மீண்டும் அடுத்த ரவுண்டு ஊர் சுற்றலுக்கு அழைப்பு வந்து விடுகிறது.
வாழ்வின் ஏதோ ஒரு திருப்தியின்மையை காம்ப்ரமைஸ் செய்து கொள்வதற்காக என்று தொடங்கி அன்லிமிடட் மீல்ஸ் போல அன்லிமிடட் டி.வி சீரியல் ரசிகையாகவோ, செய்திச் சேனல் ரசிகர்களாகவோ தங்களை மனமாற்றம் செய்து கொள்கிறார்கள்.
போதாக்குறைக்கு ரிடையர் ஆனவர்கள் தானே... வேறென்ன வேலையிருக்கப் போகிறது? என்று அவரவர் குடும்பப் பஞ்சாயத்துகளோடு சேர்த்து அறிந்தவர்,தெரிந்தவர் உற்றம், சுற்றம் என அனைத்து தரப்பினரது குழப்பப் பஞ்சாயத்துகளிலும் தலையிட்டு கருத்து சொல்லியும், சொல்லாமலும் நொந்து நூடுல்ஸ் ஆகிறார்கள்.

இது தான் ரிடையர்மெண்ட் வாழ்க்கையா?

அன்பான பெரியோர்களே, தாய்மார்களே...

உங்கள் மனதைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்களேன், பரபரப்பாய் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் ரிடையர்மெண்டுக்குப் பிறகான நாட்களில் வாழ்வை ரசிக்க பிரமாதமாய் என்னவெல்லாம் திட்டம் போட்டீர்கள் என்று? அதெல்லாம் புஸ்வாணமாய்ப் போவதேன்?!

என் அம்மா பள்ளி ஆசிரியையாக இருந்து ரிடையர் ஆனவர். அம்மா ரிடயர்மெண்டுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே வீட்டுக்கு வெளியே அம்மிக்கல்லும், ஆட்டுக்கல்லும் வாங்கிக் கொண்டு வந்து போட்டுக் கொண்டார். “ஏம்மா... அதான் கிரைண்டர், மிக்ஸில்லாம் இருக்கே? இது எதுக்கு? என்றதற்கு; ’இல்லை நான் ரிடையர்ட் ஆனதுக்கு அப்புறமா கிரைண்டர், மிக்ஸி யூஸ் பண்றதைக் குறைச்சிட்டு இனிமே நம்ம பழைய வாழ்க்கை முறைப்படி அம்மிக்கல்லும், ஆட்டுகல்லில் அரைத்துத் தான் சமைக்கப் போறேன்; அதான் ஹெல்த்தியானது, பிடிச்சதை ருசிச்சு சாப்பிட்டு வாழ்க்கையை அதன் போக்கில் ரசிச்சு வாழப் போறேன்” என்றார்.

இந்தப் பதில் நான் எதிர்பாராதது... ஆனால் சந்தோசமாக இருந்தது.

சில மாதங்கள் கடந்தன.

அடுத்த முறை அம்மா வீட்டுக்குப் போகும் போது பார்த்தால் வீட்டுக்கு வெளியே அம்மிக் கல்லும், ஆட்டுக்கல்லும் போட்டது போட்டபடி புதுக் கருக்கு மாறாமல் அப்படியே இருந்தன. அதில் மாவரைத்த சுவடே இல்லை. என்னாச்சும்மா? என்றதற்கு “ஆசையா தான் வாங்கிப் போட்டேன், ஆனா முடியலம்மா... மூட்டு வலி பாடாய் படுத்துது, குனிஞ்சு உட்கார்ந்து அரைக்க முடியல... வீடுன்னு இருந்தா சாஸ்திரத்துக்கு அம்மியும், ஆட்டுக்கல்லும் இருக்கணும், இருந்துட்டுப் போகட்டும்... அவ்வளவு தான்” என்றார்.”

அம்மாவைப் பார்க்க பாவமாய் இருந்தது. ”ம்மா மூட்டு வலி சரியானதும் அரைக்கலாம்மா” என்று சொல்லத்தான் ஆசை, ஆனால் பெரும்பாலான அம்மாக்களுக்கு மூட்டு வலி சரியாக மருத்துவத்தை தாண்டி உளவியலும் அல்லவா கருணை காட்ட வேண்டியதாக இருக்கிறது. அதனால் நான் வெறும் புன்னகையோடு நிறுத்திக் கொண்டேன்.

ஆனால் மனதுக்குள் ஒரு குரல் இப்போது வரை விடாது ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.

அம்மாவின் அந்த சின்னஞ்சிறு எதிர்பார்ப்பு பொய்த்துப் போக மூட்டு வலி மட்டுமா காரணமாக இருக்க முடியும்? இல்லை... இல்லவே இல்லை.

அட இனி என்ன? இந்த வயதில் போய் அம்மி, ஆட்டுக்கல்லில் எல்லாம் அரைத்து ரசித்து சமைத்து என்ன ஆகப் போகிறது? ருசித்துச் சாப்பிட்டு சமையலைப் பாராட்ட பிள்ளைகளா உடனிருக்கிறார்கள் என்ற வெற்று உணர்வு ஆக்ரமித்திருக்கலாம். அல்லது அறுபது கடந்தாச்சு இனி என்ன ருசி வேண்டி இருக்கு? உப்பு, புளி, காரம் என எதாவது தூக்கலாக சாப்பிட்டு விட்டால் நாள் முழுக்க அஜீரணத் தொல்லையாகி விடுகிறது. போதும்... போதும் என்ற சலிப்பு தான் எல்லாவற்றிற்கும் மூல காரணமாயிருக்க முடியும். சலிப்பு வந்த பின் வாழ்வின் மீதான் சுவாரஸ்யம் படிப்படியாக குறையத் தானே செய்யும். அப்படியே குறைந்து, குறைந்து பின்னொரு நாளில் அது தொலைக்காட்சி சேனல்களின் சீரியல் பைத்தியத்தில் வந்து முடிவுறும் பட்சத்தில் சமையலில் மட்டுமல்ல வாழ்விலும் பிறகெப்போதும் அவர்கள் திட்டமிட்ட அந்த சுவாரஸ்யங்களைத் தேடிக் கண்டடையவே முடிவதில்லை.

ஆதாலால் குடும்பச் சுமையிலிருந்தும், சேனல் சீரியல் அடிக்ஸனில் இருந்தும், குடும்பத்தின் குழப்பப் பஞ்சாயத்துகளில் இருந்தும் ரிடையர்டு சிட்டிஸன்களை காப்பாற்ற ஏதாவது சிந்திக்கலாமே என்று சிந்தித்ததன் விளைவு தான் இக்கட்டுரை :)



ரிடையர்மெண்டுக்குப் பிறகான வாழ்வின் சலிப்பை எப்படிக் கலைவது?
முதலில் ஃபேலியோ டயட்காரர்கள் சொல்வதைப் போல பிளட் டெஸ்ட் எடுத்து விடுங்கள். முடிந்தால் ஒரு மாஸ்டர் ஹெல்த் செக் அப் கூட செய்து கொள்ளலாம். சீனியர் சிட்டிஸன்களுக்கு ஆஃபர்கள் உண்டாம். வயதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை. நாம் ஆரோக்கியமாகவே இருக்கிறோம் என்ற தன்னம்பிக்கை உணர்வு தான் முதல் தேவை. இதை தள்ளிப் போட்டுக் கொண்டே போகப் போக வாழ்வும் நம்மைத் தள்ளிக் கொண்டே போய் ஒரு மூலையில் உட்கார வைத்து விடுகிறது. ஆகவே முதலில் இதைச் செய்து விடலாம்.
அடுத்ததாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் காலத்தில் நம்மோடு ஒத்த உள்ளத்தில் புரிந்துணர்வோடு பழகிப் பின் காலத்தின் கட்டாயத்தால் பிரிந்த பால்ய நண்பர்களை மெனக்கெட்டு தேடிக் கண்டு பிடியுங்கள். அவர்களோடு அலைபேசித் தொடர்பிலிருங்கள், முடிந்தால் சமயம் கிடைக்கையில் சந்திக்கவும் தவறாதீர்கள். இந்த வாழ்வு உங்களுக்கானது. குழந்தைகள், சொந்தங்களுக்காக மட்டுமே வாழ்ந்து முடித்து விட்டால் பிறகு நிறைவேறாத ஏக்கங்கள் பட்டியல் அதிகமாகிக் கொண்டே போகும்.
வயதானால் ஆன்மீகச் சுற்றுலா தான் போக வேண்டும் என்று எந்த நாட்டிலும் பிரத்யேக சட்டங்கள் இல்லை. ஆதலால் உள்ளுக்குள் இளமையாக எண்ணிக் கொண்டு அவரவர் வாழ்க்கைத் துணையோடு மனம் விரும்பும் இடங்களுக்கு அடிக்கடி இல்லா விட்டாலும் ஆண்டுக்கு ஒரு முறையாவது நான்கைந்து நாட்கள் டூர் சென்று திரும்புங்கள்.
இளமையில் எதையாவது கற்றுக் கொள்ள விரும்பி; நேரமோ, பொருளாதார நிலையோ ஏதோ ஒன்று ஒத்துக் கொள்ளாது போய் கற்றுக் கொள்ள இயலாமல் போன விசயமென ஏதாவது இருப்பின் தயவு செய்து அதை இப்போது கற்றுக் கொள்வது என தீர்மானம் செய்து கொள்ளுங்கள். நீச்சல், பாட்டு, நடனம், இப்படி ஏதாவது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ’ஸ்னாப் டீல்’ விளம்பரத்துப் பாட்டி காலில் சலங்கை கட்டி ஆடினால் தான் ரசிப்போம்; நம் வீட்டில் பாட்டி ஆடினால் கேலி செய்வோம் என்று யாரெனும் குறுக்கிட்டால் சட்டை பண்ணாமல் முன்னேறிச் செல்லுங்கள். ஜப்பானில் 50 வயதில் னடனம் கற்றுக் கொண்டு இப்போது 80 லும் ஒரு பாட்டி நடனப் பள்ளியே நடத்திக் கொண்டிருக்கிறாராம். ஆகவே உங்களது மனப்பூர்வமான விருப்பங்களுக்கு இப்போதும் கூட தடை சொல்லிக் கொண்டிருப்பதில் நியாயமே இல்லை தானே!
டைரி எழுதுவதில் விருப்பமிருந்தால் அதைச் செய்யலாம், அல்லது மரபிலிருந்து அழிந்து போன வழக்கங்களில் ஒன்றாகி விட்ட கடிதம் எழுதும் பழக்கத்தை குழந்தைகளிடையே ஏற்படுத்துங்கள். நேர விரயமென்று நினைத்தால் சொல்வதற்கேதுமில்லை. ஏனெனில் சுவாரஸ்யம் தான் முக்கியம் எனில் இது கூட சுவாரஸ்யம் தானே! பொக்கிஷமாய் பழைய கடிதங்களைப் பாதுகாப்பவர்களுக்குத் தான் தெரியும் கடிதம் எழுதுவதில் இருக்கும் பேரின்பம்.
மாலை நேர நடை பயிற்சிக்கு ஒரு செட் சேர்த்துக் கொள்வதைப் போலவே ’விட்’ அடிக்கவும் ஒரு செட் சேர்த்துக் கொண்டு வாரமொரு முறையாவது ஒன்று கூடிச் சிரிக்க மறக்காதீர்கள். சென்னையில் ’லாஃபிங் கிளப் ’செயல்படுகிறதே அதை கிராமத்தின் ரிடையர்டு வாத்தியார்களும், குமாஸ்தாக்களும், ரிடையர்டு நிலச்சுவாந்தாரர்களும் கூட பின்பற்ற ஒரு தடையும் இல்லை. ஆகவே ’சிரிச்சாப் போச்சு ரவுண்ட்’ மாதிரி ஏதாவது செய்து சிரிக்க நேரம் ஒதுக்குங்கள்.
சில பெற்றோர்களின் மனக்கவலைகளில் ஒன்று பிள்ளைகளின் வருமானக் குறைவு. வருமானம் உயர வேண்டும் என்று நினைப்பது தவறில்லை, ஆனால் சதா சர்வ காலமும் வாழ்க்கையை வருமானம் மட்டுமே தீர்மானிப்பதில்லை, என்பதையும் உணர்ந்திருப்பவர்களாய் இருப்பது நல்லது. ஏனெனில் சில பெற்றோரிடையே ரிடையர்மெண்டுக்குப் பிறகு இந்தக் கவலை அதிகரிப்பதாக ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறது.

’புதுப் புது அர்த்தங்கள்’ படத்து பூர்ணம் விஸ்வநாதன், சவுகார் ஜானகி ஜோடியைப் போல அத்தனை சுவாரஸ்யமாய் வாழ்ந்து முடிக்கா விட்டாலும் கூட குறைந்த பட்சம் வாழ்வின் சின்னஞ்சிறு ஆசைகளையாவது மிஸ் பண்ணி விட வேண்டாமே!

’மிதுனம்’ என்றொரு தெலுங்குப் படம் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், லஷ்மியும் வயதான தம்பதிகளாக நடித்திருப்பார்கள். படத்தில் எஸ்.பி.பி தான் ரிடையர்டு ,லஷ்மி இல்லத்தரசியாகத் தான் இருந்திருப்பார், ஆனால் பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் இருக்க இங்கு கணவரோடு தனித்திருக்கும் மனைவியாக அவருடையதும் ரிடையர்மெண்டுக்குப் பின்னான வாழ்க்கை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் படத்தை வயதான தம்பதிகளின் வாழ்வை சுவாரஸ்யம் குன்றாமல் இருக்கச் செய்ய மேலே சொல்லப்பட்ட அத்தனை விசயங்களும் நிறைக்கின்றன. ரிடையர்டு ஆன சீனியர் சிட்டிஸன்கள் மட்டும் அல்ல, அவர்களது வாரிசுகளும் பார்க்க வேண்டிய படமிது. வாய்ப்பிருந்தால் இணையத்தில் தேடிப் பார்க்கவும்.

மேலே சொன்ன விசயங்களைப் எப்படித் தொடங்குவது என்று சலிப்பிருந்தால் புகைப்படத்தில் சிறு பிள்ளை விளையாட்டாய் தென்னை மரப் பீப்பீ செய்து ஊதிக் கொண்டிருக்கிறார்களே அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் ப்ளீஸ்!

வாழ்க்கை எப்போதும் அழகானதே!

500ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களாக குவியும் மொய் .. கவலையில் "கல்யாணங்கள்"!



சென்னை: கள்ளப்பணம், கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியை அளித்தாலும் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். செய்தி பரவியதும் டீ கடைகள், மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆகியவற்றில் புகுந்து பொருட்களை வாங்கினர்

. இதனால், நூறு ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க முடியாமல் பலரும் தவித்தனர். VIDEO : PM Modi full speech on Rs 500 and 1000 currency notes bans 00:08 / 00:40 : Ad ends in 00:31 Powered by திருமண மண்டபங்களில் குவிந்திருந்தவர்களுக்கு மோடியின் அறிவிப்பு அதிர்ச்சியாகவே இருந்தது. கையில் இருப்பது 500 ரூபாய் நோட்டுக்கள்தான் என்பதால் அவற்றை மாற்றுவது எப்படி? மொய் எழுதினால் ஏற்றுக்கொள்வார்களா? என்ற தயக்கமே ஏற்பட்டது. 

பணமாக கையில் கொடுக்க கொண்டு வந்தவர்கள் கவரில் போட்டு 500, 1000 ரூபாய்களாக கொடுத்துச் சென்றனர். மொய் பணம் வாங்குபவர்களிடமும் பணம் மாற்றுவதற்கு ஒரு கூட்டம் முண்டியடித்தது. ரூ.1,00, ரூ.200 மொய் எழுதுபவர்கள் சிலர், தங்கள் நண்பர்களோடு சேர்ந்து ஒரே கவரில் பெயர்களை எழுதி மொய் கவர் கொடுத்தனர். இன்று காலையில் திருமணம் முடிந்த உடன் மொய் எழுதியவர்கள் பைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களாகவே இருந்தது. சிலர் மட்டுமே 100 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனர். 
வைத்திருந்தவர்களுக்கு கூடுதல் வருமானம் என்றாலும், அந்த பணம் கையில் கிடைத்தும் அனுபவிக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. மொய் பணத்தை வைத்து மண்டப வாடகை, கேடரிங், அலங்காரம் செய்தவர்கள், ஆகியோர்களுக்கு பணமாக கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மண்டப வாடகை போன்றவற்றை செக் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் செலுத்த யோசனை செய்து வருவதாக திருமணம் நடத்துபவர்கள் தெரிவித்தனர். 

500 மற்றும் 1000 நோட்டுகள் தடை: 5 முக்கிய அம்சங்கள்


நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* அரசு பஸ்கள், ரயில் நிலை யங்கள், விமான நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட் ரோல் பங்க்குகள், அரசு பால் பூத்துகள், தகன எரிமேடைகள் அடக்க ஸ்தலங்களில் அடுத்த 72 மணி நேரத்துக்கு இந்த நோட்டு கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

* இந்த நோட்டுகளை ரூ.4,000 வரைவங்கி மற்றும் அஞ்சல கங்களில் உரிய அடையாள அட் டையை காண்பித்து வரும் 24-ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம். இந்த நோட்டு களை அஞ்சலக மற்றும் வங்கிக் கணக்குகளில் நாளை முதல் டிசம்பர் 30 வரை உச்ச வரம் பின்றி டெபாசிட் செய்யலாம்.

* இன்று வங்கிகள் செயல் படாது. ஏடிஎம்கள் இன்றும் நாளையும் செயல்படாது. ஏடிஎம் களில் முதல் சில நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2000 வரை எடுக்கலாம். பின்னர் இது ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* வங்கிகளில் இருந்து சில நாட்களுக்கு நாளொன்றுக்கு ரூ.10 ஆயிரமும், வாரத்துக்கு 20 ஆயிரம் வரையிலும் எடுக்கலாம். பின்னர் இத்தொகை படிப்படியாக உயர்த்தப்படும்.

* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்பாடு, காசோலை, டிடி பரிவர்த்தனைக்கு தடையில்லை.

ஹெல்மெட் அணியாத இளைஞர்களை போலீஸ் மடக்கியபோது விபத்து: சென்னை சம்பவம் உணர்த்துவது என்ன?


'தலைக்கவசம் உயிர்க்கவசம்'. இந்த விழிப்புணர்வு வாசகத்தின் மீது வாகன ஓட்டிகளின் புரிதலும் போக்குவரத்து போலீஸாரின் கெடுபிடியும் தமிழகத்தின் நீண்ட கால விவாதப் பொருள்.

இந்த விவாதத்துக்கு இன்னுமொரு கருவாக கிடைத்துள்ளது சென்னையில் இன்று (திங்கள்கிழமை) நடந்த சம்பவம் ஒன்று.

வாரத்தின் முதல் நாள் என்பதால் வழக்கமான பரபரப்பு. "சென்னை கலங்கரை விளக்கம்பகுதியில் போக்குவரத்து போலீஸார் கெடுபிடியால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் விபத்துக்குள்ளானர்கள்" இப்படித்தான் முதல் தகவல் வெளியானது.

சம்பவத்தை நேரில் பார்த்த புதுப்பேட்டையைச் சேர்ந்த அலாவுதீன் 'தி இந்து'விடம் கூறும்போது, "நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலங்கரை விளக்கம்பகுதியில் ஹெல்மெட் அணியாத காரணத்துக்காக எனது இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்து கொண்டனர். அவசர வேலை இருந்ததால் நான் சென்றுவிட்டேன். மாலை, போலீஸாரிடம் எனது வாகனம் குறித்து கேட்டேன். ஆனால், திங்கள்கிழமை காலை வந்து ஆர்.ஐ-யை சந்திக்குமாறு சொல்லி அனுப்பிவிட்டனர். ஆர்.ஐ. பாண்டியனை சந்திப்பதற்காக காலை 8 மணியளவில் கலங்கரை விளக்கம்பகுதியில் ஆல் இந்தியா வானொலி நிலையம் அருகே நின்று கொண்டிருந்தேன்.

அப்போது பைக்கில் இரண்டு இளைஞர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. போலீஸார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்த இடத்தின் அருகே அவர்கள் வாகனம் வந்தபோது போலீஸ்காரர் ஒருவர் காலை நீட்டி வாகனத்தை நிறுத்த முயன்றார். திடீரென வாகனத்தை மறித்ததால் அந்த இளைஞரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் வாகனத்தை ஓட்டிய மோஹித் என்ற இளைஞருக்கு தலை, கை, கால்களில் அடிப்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். மற்றொரு இளைஞர் புவனுக்கு கண், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. காலை நீட்டி வண்டியை நிறுத்த முயன்ற போலீஸ்காரருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.

வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்த வேண்டும் என முடிவு செய்த போலீஸார் தடுப்பு வேலியை வைத்திருந்தால் அதைப் பார்த்துவிட்டு தூரத்திலேயே வாகனத்தின் வேகத்தை அவர்கள் கட்டுப்படுத்தியிருப்பார்கள். அதைவிடுத்து மிக அருகில் வாகனம் வந்தபோது காலை நீட்டி வாகனத்தை மறித்ததால்தான் விபத்து நேர்ந்தது" என்றார்.



சம்பவ பகுதியில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் | படம்: எல்.சீனிவாசன்.

இந்தத் தகவலின் அடிப்படையில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங்கை தொடர்பு கொண்டு இரண்டு கேள்விகளை முன்வைத்தோம்.

கேள்வி 1: கலங்கரை விளக்கம் பகுதியில் போக்குவரத்து போலீஸார் ஹெல்மெட் அணியாத இளைஞர்களை துரத்தியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது?

கேள்வி 2: போக்குவரத்து போலீஸாரே ஹெல்மெட் இல்லாமல் பயணித்த புகைப்படம் இருக்கிறது.அவர்கள் மீது உங்கள் நடவடிக்கை என்ன?

"சம்பவம் குறித்து எனக்கு இன்னும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை. அதனால் இப்போதைக்கு எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. தகவல் கிடைத்தவுடன் தெரிவிக்கிறேன்" என்றார்.

ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் அபய் குமார் சிங் கூறியதின் பேரில் பேசுவதாக 'தி இந்து' விடம் பேசிய சென்னை போக்குவரத்து இணை ஆணையர் கே.பவானீஸ்வரி, "கலங்கரை விளக்கம் பகுதியில் காலையில் நடந்த சம்பவத்தில் இளைஞர்களை போக்குவரத்து போலீஸார் துரத்தவில்லை. ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது நீதிமன்ற உத்தரவு அதை மக்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை உறுதி செய்வதே எங்கள் பணி. வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அந்த இரண்டு இளைஞர்களையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் வேகமாக வந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்திருக்கிறார்கள். இதில் போக்குவரத்து போலீஸ் ஒருவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞர்கள் இருவரும் மைலாப்பூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் உடல்நலம் சீராக இருக்கிறது.

அப்படியே போலீஸார் நிறுத்தியும் நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை அடுத்த சிக்னலில் மடக்கிப் பிடிப்பதே வழக்கம். எனவே, ஹெல்மெட் அணியாததற்காக யாரையும் துரத்தும் அவசியம் இல்லை.

போக்குவரத்து போலீஸாரே ஹெல்மெட் அணியாமல் விதிகளை மீறுவதாகக் கூறியிருந்தீர்கள். பொதுமக்களுக்கு என்ன சட்டதிட்டமோ அதேதான் போக்குவரத்து போலீஸாருக்கும். விதிகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

காயமடைந்தவர்கள் விவரம்:

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் பின்வருமாறு. மோஹித்(19) த/பெ. ஹீராலால். புவன் குப்தா (18) த/பெ. உமேஷ் குப்தா. இருவரும் யானைகவுணி பகுதியைச் சேர்ந்தவர்கள். கல்லூரி மாணவர்கள். பெசன்ட் நகரிலிருந்து யானைக்கவுணி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே சம்பவம் நடந்துள்ளது.

காயமடைந்த போக்குவரத்து போலீஸ்காரர் சாம் வெஸ்லி தாஸ்(33). இவருக்கு வலது காலில் அடிபட்டுள்ளது. ராயப்பேட்டையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காலில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் நிலை என்ன?

மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் மோகித், புவன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் தரப்பில், "மாணவன் மோகித்துக்கு தலை, கை, காலில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. புவனுக்கு கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இப்போது இருவருமே நலமாக இருக்கின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் இருவரையும் இன்னும் அவரது உறவினர்கள் நேரில் சென்று பார்க்கவில்லை. மோகித் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக அவரது சகோதரர் கூறினார்.

மருத்துவர்களிடம் விசாரித்தபோது, "அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள். சிகிச்சை அளித்துள்ளோம். இப்போது பரவாயில்லை" என்றனர்.

உயர் நீதிமன்ற உத்தரவும்.. தனிப்படையும்:

இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தீவிரமாக காவல் துறை அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி, போக்குவரத்து கூடுதல் ஆணையர் அபய் குமார் சிங் மேற்பார்வையில் வட சென்னை இணை ஆணையர் எம்.டி.கணேச மூர்த்தி, தென் சென்னை இணை ஆணையர் கே.பவானீஸ்வரி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதனடிப்படையில், சென்னையில் நாள்தோறும் ஆங்காங்கே ஹெல்மெட் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

அரசு என்பது மக்களால் ஆனதே. சட்டம் ஒன்று அமலுக்கு வரும்போது அதை முழுமையாக நடைமுறைப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது. தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் 67 ஆயிரத்து 250 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றில் 15 ஆயிரத்து 190 பேர் உயிரிழந்தனர். அதேபோல் 2015-ம் ஆண்டு நிகழ்ந்த 69 ஆயிரத்து 59 சாலை விபத்துகளில் 15 ஆயிரத்து 642 பேர் பலியானார்கள். இந்த ஆண்டும் அதிக அளவில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கின்றன. தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் 54 ஆயிரத்து 676 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 13 ஆயிரத்து 142 பேர் இறந்துள்ளனர் என்கிறது சமீபத்திய புள்ளிவிவரம். அதிகரித்துவரும் சாலை விபத்துகள் குறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறும்போது, "போக்குவரத்து விதிமீறல்களை மீறக்கூடாது, என்ற பொறுப்பு பொதுமக்களிடம் வர வேண்டும். கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். குறுகிய சாலைகளில் அதிக வேகமாக செல்லக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் ஓட்டிச் செல்லக்கூடாது" என்றனர்.

இந்த பொறுப்பு நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது. ஹெல்மெட் அணிந்திருந்தால் விபத்து நேர்ந்தால் பெரியளவிலான சேதத்திலிருந்து தப்பிக்கலாம் என்பதாலேயே அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தன்னுயிரைக் காக்க தானே தயாராக இல்லாதபோது அரசு என்ன செய்ய முடியும். ஒவ்வொரு தனிநபரின் பின்னாலும் சென்று கண்காணிப்பது என்பது நடைமுறை சாத்தியமற்றது. எனவே, குறைந்தபட்ச பொறுப்புணர்வோடு மக்கள் நடந்துகொள்வது அவசியமானது.

போக்குவரத்து போலீஸார் கவனிக்க வேண்டியது என்ன?

மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது எவ்வளவு அவசியமோ அதே அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததே போக்குவரத்து போலீஸாரின் அணுகுமுறையும். மக்கள் ஹெல்மெட் அணிய தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விதிமீறல்கள் நடைபெறும்போது கண்டிப்பாக நடவடிக்கை அவசியம். ஆனால், நீதிமன்ற உத்தரவை சுட்டிக் காட்டி கடுமை காட்டுவது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். ஹெல்மெட் அணியாதவர்களை வாகனத்திலிருந்து இறக்கி சில இடங்களில் கைபலத்தை பயன்படுத்தி அடிப்பது போன்ற நிகழ்வுகள் எப்படி சட்டத்தை முழுமையாக அமல்படுத்த உதவும்? "மணிக்கணக்கில் நிற்கவைப்பது, நாள் கணக்கில் இழுத்தடிப்பது, ஹெல்மெட் வாங்கியதற்கு பில் கொண்டுவா என்று சொல்லி அதுவரை அசல் ஆவணங்களை வாங்கி வைத்துக்கொள்வது" எல்லாம் மக்களை அதிருப்தி அடையச் செய்கிறது என்கிறார் இணையவாசி ஒருவர்

'டார்கெட்' உண்மையா?

அண்மையில் போக்குவரத்து போலீஸில் ஹெல்மெட் அணியாததற்காக நண்பர் ஒருவர் சிக்கியிருக்கிறார். அவருடைய அசல் ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்ட போக்குவரத்து போலீஸார் ஹெல்மெட் வாங்கிய பில் கொடுத்துவிட்டு ஆவணங்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கின்றனர். நண்பரோ, "ஸ்பாட் ஃபைன் சொல்லுங்கள் கட்டிவிடுகிறேன். ஹெல்மெட் உடனடியாக வாங்கிவிடுகிறேன்" எனக் கூறியிருக்கிறார். அதற்கு போலீஸாரோ, "நீங்கள் நேர்மையாக பேசுகிறீர்கள். ஆனால் எங்களுக்கு ஒரு நாளைக்கு 40 கேஸ் பிடிக்கும் டார்கெட் இருக்கிறது. பிடிபடுபவர்களில் பலரும் யாராவது பெரிய இடத்து நபரின் பெயரைச் சொல்லி எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். நீங்கள் நேர்மையாக இருப்பதால் ஆவணங்களை கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்" என சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். நண்பர் இப்போது ஹெல்மெட் ரசீதுடன் ஆவணத்தை மீட்கும் பணியில் இருக்கிறார்.

அபராதம் வசூலிப்பு எப்படி?

ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டியை போக்கு வரத்து போலீஸார் வழி மறித்து அவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்ததற்கான ரசீதை கொடுக்கின் றனர். பின்னர் வாகன ஓட்டியின் ஆர்.சி. புத்தகம், ஓட்டுநர் உரிமத்தை சம்பந்தப்பட்ட போக்குவரத்து ஆய்வாளர் பெற்றுக்கொள்கிறார். அபராத தொகையை நடமாடும் நீதிமன்றத்தில் கட்டி அதற்கான ரசீதையும், ஹெல்மெட் வாங்கியதற் கான ரசீதையும் காட்டினால் போலீஸார் பறிமுதல் செய்த ஆவணங்களை திரும்ப கொடுத்துவிடுவார்கள்.

சென்னையில் 135 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு மொத்தம் 2 நடமாடும் நீதிமன்ற வாகனங்கள் மட்டுமே உள்ளன. இதனால், தண்டனைக்கு உள்ளாகும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ரூ.100 அபராதம் கட்ட வாரக்கணக்கில் அலைய வேண்டியுள்ளது. எனவே, உடனடியாக அபராதம் செலுத்தும் (ஸ்பாட் ஃபைன்) திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இத்தனை காலம் மெத்தனமாக இருந்துவிட்டு உயர் நீதிமன்ற உத்தரவு வந்ததையடுத்து விழித்துக் கொண்ட போலீஸார் கெடுபிடி காட்டட்டும். ஆனால், அதற்காக இப்படி இலக்கு வைத்து ஆட்களை பிடித்தால் சட்டத்தின் நோக்கம் நிறைவேறுமா என்பதை போலீஸார் உற்று கவனித்து திட்டங்களை வகுத்தால் நல்லது.

உதய், ஜிஎஸ்டி, நீட் தேர்வுக்கு ஒப்புதல்: ஓபிஎஸ் வெள்ளை அறிக்கை வெளியிட ஸ்டாலின் வலியுறுத்தல்


அதிமுக அரசு பல வருடங்களாக எதிர்த்து வந்த பிரச்சினைகளில் திடீரென்று ஒப்புதல் அளிக்க வேண்டிய பின்னணி குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு தமிழக அரசின் நிர்வாகத்தை யார் நடத்துகிறார்கள் என்ற மிகப் பெரிய கேள்விக்குறி எழுந்திருக்கிறது. அவர் மருத்துமனைக்கு சென்றவுடன் மாநிலம் சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சினைகளில் முடிவு எடுக்க முடியாமல் ஆட்சி நிர்வாகம் தத்தளித்துக் கொண்டிருந்தது. விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையான காவிரி பிரச்சினையில் கூட கை கட்டி நின்று வேடிக்கை பார்த்ததை அனைவரும் அறிவர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் எழுந்த தன்னெழுச்சியின் காரணமாக தமிழக அரசின் நிர்வாகத்தில் பொறுப்பு ஆளுநரே நேரடிக் கவனம் செலுத்தினார். குறிப்பாக, காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நியமித்த குழு தமிழகத்தைப் பார்வையிட வந்த போது அந்த குழுவிற்கான ஏற்பாடுகள் குறித்து 7.10.2016 அன்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் நேரடியாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை அழைத்துக் கேட்டறிந்தார். ஆளுநரின் நிர்வாக நடவடிக்கை குறித்து ஆளுநர் அலுவலகமே செய்திக் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டது.

மேலும் நிதியமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திடம் முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த அனைத்து இலாகா பொறுப்புகளையும் வழங்கி 11.10.2016 அன்று ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். நிதியமைச்சர் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கலாம் என்றும் அந்த உத்தரவில் தெளிவுபடுத்தினார்.

மாநில நிர்வாக நலன் மற்றும் மக்கள் நலன் கருதி ஆளுநரின் இந்த முடிவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானே வரவேற்று அறிக்கை வெளியிட்டேன். ஆளுநரின் இந்த உத்தரவுக்குப் பிறகு இருமுறை அமைச்சரவைக் கூட்டத்தை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டியுள்ளார். ஆனால் அந்த அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பத்திரிகை செய்திக் குறிப்புகள் ஏதும் இல்லை.

திமுக ஆட்சி நடைபெற்ற போது அமைச்சரவைக் கூட்டத்தை தலைவர் கருணாநிதி கூட்டினால், அங்கே எடுக்கப்பட்ட முடிவுகள் உடனடியாக செய்திக் குறிப்பாக வெளியிடப்படும் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடித்து வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளையே ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அதிமுக ஆட்சிக்கு ஏற்பட்டிருப்பது மட்டுமின்றி, அந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து ரகசியமாக வைத்துக் கொள்ளும் அதிமுக அரசின் போக்கு வேதனைக்குரியது.

இந்த சூழ்நிலையில்தான் மத்திய அரசின் உதய் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், மருத்துவக் கல்லூரி நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மாநில அரசு தனது பழைய கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் முற்றிலும் சரண்டர் செய்து விட்டு, அந்த திட்டங்களுக்கு எல்லாம் ஒப்புதல் தெரிவித்து உள்ளதையும் பத்திரிக்கை செய்திகள் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது.

பிரதமரை 14.6.2016 அன்று நேரில் சந்தித்த முதல்வர் ஜெயலலிதா ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில், ''9270 கோடி ரூபாய் இழப்பீட்டை உருவாக்கும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவிற்கு சம்மதிக்க முடியாது'' என்றார். ''மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தும் உதய் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்றார்.

''கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் அதே நேரத்தில் மாநிலத்தின் சமூக பொருளாதார நோக்கங்களை சிதைக்கும் மருத்துவக் கல்லூரிக்கான நீட் தேர்வு முறையை நிரந்தரமாக நீக்க வேண்டும்'' என்றும் கூறியிருந்தார். ''ஆதார் எண்களை உணவு அட்டைகளுடன் இணைக்கும் பணி மாநிலத்தில் துவங்கியிருக்கிறது. அந்தப் பணி முடிந்த பிறகுதான் உணவு அட்டைப்படியான பயனாளிகளை கண்டு பிடிக்க முடியும். ஆகவே தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்'' என்றும் கோரிக்கை வைத்தார்.

முதல்வர் ஜெயலலிதா மருத்துமனையில் சேர்க்கப்படும் முன்பு இப்படி எதிர்ப்பு தெரிவித்த நான்கு முக்கியப் பிரச்சினைகளிலும் இப்போது அதிமுக அரசு மத்திய அரசின் முடிவுகளுக்கு கை கட்டி நின்று சம்மதம் தெரிவித்துள்ளது. மத்திய அரசுடன், மாநில அரசு நிர்வாகரீதியாக நெருங்கிச் செல்வது வரவேற்புக்குரியது. ஆனால் உதய் திட்டம், நீட் தேர்வு, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் ஆகிய அனைத்தையும் அதிமுக அரசு தான் முன்பு எடுத்த நிலையை மாற்றிக் கொண்டது ஏன் என்பது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டாமா?

மக்களுக்காகவே நாங்கள் என்று கூறிக் கொள்ளும் அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒப்புக்கொண்ட உண்மைகளை ஏன் விளக்க மறுக்கிறார்கள்? இப்போது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்க அதிமுக அரசு முன் வந்துள்ளது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

முதல்வர் பொறுப்புகளைக் கவனிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசு கூட்டும் எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் படி வரி விதிப்பு குறித்து விவாதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்திற்கு நிதியமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்தும் கூட அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமே ஸ்தம்பித்து நிற்கிறது.

அரசியல் சட்டப்படி அரசு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய மிக உயர்ந்த பொறுப்புள்ள ஆளுநர் பதவிக்கு தமிழகத்தில் முழு நேர ஆளுநர் இதுவரை நியமிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலைகள் யாருக்காக உருவாக்கப்படுகின்றன? யாருடயை நிகழ்ச்சி நிரலின்படி அதிமுக ஆட்சி செயல்படுகிறது? யார் ஆட்சி செய்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படுகிறது என்ற கேள்வி ஒவ்வொரு தமிழர்கள் மனதிலும் தினம் தினம் எழுகிறது.

மாநில நிர்வாகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவும் நேரத்தில் அரசு முன்பு எதிர்ப்பு தெரிவித்த அத்தனை திட்டங்கள், சட்டங்கள் எல்லாவற்றிற்கும் அவசர அவசரமாக அனுமதியளிக்க வேண்டிய நிர்பந்தம் இந்த ஆட்சிக்கு ஏன் வந்திருக்கிறது? மாநிலத்தில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடியில் எங்கிருந்தோ குளிர் காய நினைப்பது யார்? என்ற கேள்விகள் எல்லாம் அடுக்கடுக்காக எழுகின்றன.

ஆகவே, அதிமுக அரசு பல வருடங்களாக எதிர்த்து வந்த பிரச்சினைகளில் திடீரென்று ஒப்புதல் அளிக்க வேண்டிய பின்னணி குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக வெளியிட வேண்டும்.

அதேநேரத்தில் ஜனநாயக மரபுகளுக்கு விரோதமாக, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு மாறாக, மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக, கொல்லைப்புறமாக, பினாமியாக, உண்மைகளைப் புரட்டிப் போட்டு ஆட்சி செலுத்த விரும்புகிறவர்களை, முயல் வேடம் அணிந்திருக்கும் முதலைகளை, பொதுமக்கள் அடையாளம் கண்டு விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

குறள் இனிது: தண்டிக்கத் தயங்கலாமா..?


2004-ல் வெளியான காமராசர் திரைப் படத்தில் ஒரு காட்சி.முதலமைச் சரான அவர் அலுவலகத்திற்கு அவசரமாகக் கிளம்பும் பொழுது கையில் குழந்தையுடன் ஒரு ஏழைப் பெண் ஓடி வந்து அவர் காலில் விழுந்து அழுவாள்.

‘ஐயா, என் கணவரைப் போலீஸ் பிடித்துக் கொண்டு போய் விட்டாங்க' என்பவளிடம், அவள் கணவன் என்ன தப்பு செய்தான் எனக் கேட்க, அவன் சாராயம் விற்றதாகவும், இனிமேல் சாமி சத்தியமாகச் சாராயம் விற்க மாட்டான் என்றும் சொல்வாள்.

அதற்குக் காமராசர் ‘உனக்கு வெட்கமாக இல்லையா? கொலை காரனைக் கூட மன்னிக்கலாம், ஓர் உயிர் தான் போகும். ஆனால் சாராயம் விற்றால் ஊரே நாசமாகும்' என்பார்.

அப்பெண்ணோ ‘ஐயா, அவர் இல்லைன்னா இந்தப் பச்சைக் குழந்தை பட்டினி கிடந்து சாக வேண்டியது தான்' எனக் கதறுவாள்.

லட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்ளில் மதிய உணவு அளித்த கருணை உள்ளம் கொண்டவர் அவர்.ஆனால் அந்தக் கைக்குழந்தை பட்டினி கிடக்கும் என்பதைக் கேட்டும் மனம் இரங்க வில்லை, மாறவில்லை!

சிறிதும் தயங்காமல் ‘அவனை வெளியே விட்டால் ஊரில் இருக்கும் எல்லாக் குடும்பமும்ல பட்டினி கிடக்கணும்’ எனச் சொல்லி விட்டு கிளம்பி விடுவார்!

தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரமும் கடமையும் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டிய உண்மை நிகழ்ச்சி இது!

ஐயா, அலுவலகங்களில் அனுபவப்பட்டு இருப்பீர்கள்.யாரேனும் கையூட்டுப் பெற்றோ வேறு பெருந்தவறு செய்தோ மாட்டிக் கொண்டு விட்டால் அவருக்கு உரிய தண்டனை கொடுக்க நீங்கள் முற்படும் பொழுது பலரும் குறுக்கிடுவார்கள்.

இதற்குக் காலங்காலமாய் சொல்லப்படும் காரணங்கள் தெரிந் தவைதானே! ‘ஏதோ தெரியாமல் பண்ணிட்டானுங்க. முதல் தடவை மன்னித்து விடுங்க' என்பார்கள். சிலரோ ‘பாவங்க, அவன் பிள்ளை குட்டிக்காரனுங்க. அவன் செய்த தப்புக்கு அவன் குடும்பத்தைத் தண்டிக்கக் கூடாதுங்க' என்பார்கள்! ‘ ஏங்க, இவன் ஒருத்தன் தானா தப்பு செய்கிறான்? ஏதோ போறாத காலம் மாட்டிக்கினான். மத்தவனெல்லாம் சாமர்த்தியமாக தப்பிச்சுகிறானுங்க' என்பவர்களும் உண்டு!

அல்லது, ‘இவன் ஒருத்தனைத் திருத்திட்டா எல்லாம் மாறிடுமா? அதற்கு அப்புறமும் தப்பு நடந்துகிட்டு தானுங்க இருக்கும்' என்பார்கள்!

சற்றே சிந்தித்துப் பாருங்கள். இதைப் போன்ற வாதங்கள் எதுவுமே செய்த தப்பை நியாயப்படுத்த முடியாது. செய்யக் கூடாதது என்று தெரிந்தும் செய்வதில் என்னங்க முதல் முறை?

குடும்பம் இருப்பவனைத் தண்டிப்பதில்லை என்றால் எந்தக் குற்றவாளியையாவது தண்டிக்க முடியுமா? இரண்டு, மூன்று குடும்பம் வைத்திருப்பவனை அத்தனை முறைகள் மன்னிப்பதா?

தவறு செய்தவர்களென்று தெரிந்தும் தண்டிக்காவிட்டால், குற்றங்களுக்கு முடிவேது? நல்ல பணியாளர்களைப் பாதுகாப்பது போலவே கெட்ட பணியாளர்களைத் தண்டிப்பதும் மேலாளரின் கடமை தானே? பொல்லாதவனிடம் எதற்குங்க நல்ல பெயர்?

நாட்டு மக்களைக் காத்து, அவர்களிடையே உள்ள குற்றவாளிகளைத் தண்டனைகளால் ஒழிப்பது அரசனுடைய தொழிலாகும், பழி அல்ல என்கிறார் வள்ளுவர்!

குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுஅன்று வேந்தன் தொழில் (குறள்: 549)

somaiah.veerappan@gmail.com

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...