Friday, November 11, 2016

கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி?


புதுடில்லி: 'கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது எப்படி' என, இணையத்தில் அதிகமானோர் தேடியுள்ள தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கறுப்புப் பணத்தை ஒடுக்கவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள், கையில் உள்ள நோட்டுகளை எப்படி மாற்றுவது குறித்து கவலையடைந்தனர். அதே நேரத்தில், 'கூகுள்' இணையதளத்தில், நேற்று முன்தினம் அதிகமான மக்கள் தேடிய விஷயம், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி என்பதே. இதில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான, பா.ஜ., ஆளும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், இது குறித்த தகவல்களை அதிகமாக தேடியுள்ளனர். அதைத் தொடர்ந்து, மஹாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், டில்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இது குறித்த தகவலை அதிகமாக தேடியுள்ளனர். மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, புதிய, 500 மற்றும் 2,000 ரூபாய் குறித்த விபரங்களையும், கூகுளில் அதிகமானோர் தேடியுள்ளனர்.
28 கோடி பேர் : நம் நாட்டில், 28 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இணையத்தை அதிகமாக பயன்படுத்துவதில், உலக அளவில், சீனா முதலிடத்திலும், இந்தியா

இரண்டாவது இடத்திலும் உள்ளது.

பணமின்றி தவித்தவர்களுக்கு இலவச உணவு நெல்லையில் மனிதாபிமான ஓட்டல்


திருநெல்வேலி:500, 1000 ரூபாய் செல்லாது அறிவிப்பால், பணமின்றி தவித்தவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஓட்டலில் இலவச உணவு வழங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்த வருகின்றனர் நெல்லையை சேர்ந்தவர்கள்.

திருநெல்வேலி என்.ஜி.ஓ.,காலனியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே பாலாஜி சைவ உணவகத்தை, அதே பகுதியை சேர்ந்தவர்கள் விஷ்ணு, கோபி ஆகியோர் நடத்துகின்றனர்.
இவர்களது ஓட்டல் அருகே பெருமளவு இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்களின் குடும்பங்கள் அதிகம் உள்ளன.

500 ரூபாய், ஆயிரம் ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்ட அன்று இரவிலேயே மாணவர்கள், அரசு ஊழியர்கள் கையில் பணம் இருந்தாலும் நுாறு ரூபாய் நோட்டுகள் இல்லாததால், டீ குடிக்க கூட முடியாமல் சிரமப்பட்டனர்.

இதை நேரடியாக பார்த்த இருவரும், ''யார் வேண்டுமானாலும் தங்களது ஓட்டலில் சாப்பிட்டுக்கொள்ளலாம். முடிந்தால் பணம் கொடுங்கள், இல்லாவிட்டால் நினைவில் வைத்துக்கொண்டு பின்னர் கொடுங்கள்,''என கூறி கடந்த இரு நாளும் வந்தவர்களுக்கெல்லாம் உணவு வழங்கினர். நேற்று பாங்குகள் திறக்கப்பட்டு ஓரளவு நிைலமை சீரடைந்ததாலும், நேற்று இரவு வரையிலும் உணவு வழங்கினர்.

இதுகுறித்து விஷ்ணு கூறுகையில், நாங்கள் ஓட்டல் தொழிலை அண்மையில் தான் துவக்கினோம். நாங்கள் தினம் தினம் பார்க்கும் மனிதர்கள் பட்டினியால் வாடுவதை எப்படி சகித்துக்கொள்ள முடியும். பணம் இல்லை என்பதற்காக உணவு இல்லை என்று மறுப்பதோ, உணவு பண்டங்களை வைத்துக்கொண்டு கடையை வழக்கத்திற்கு மாறாக இழுத்து மூடுவதிலோ எங்களுக்கு உடன்பாடில்லை.

எனவே பலரும் எங்கள் ஓட்டலில் சாப்பிட்டுச்சென்றார்கள். அவர்கள் நிலைமை சகஜமான பிறகு பணம் தரலாம். தராமலும் போகலாம். ஆனால் பசியோடு வந்த அவர்களுக்கு சுடச்சுட உணவு பரிமாறியதில் எங்களுக்கு திருப்தி, என்றார்.
இவரை பாராட்ட... 9786077881 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

எரிப்பார்களா புதைப்பார்களா?


எரிப்பார்களா புதைப்பார்களா?
ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் இனி, செல்லாது' என்ற, அறிவிப்பால், பாதாளத்தில் விழுந்தது போன்று பதறுகின்றனர், கறுப்பு பண பதுக்கல்காரர்கள். இவர்கள், தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை, எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற பரிதவிப்பில் உள்ளனர்.

அரசியல், அதிகார மட்டத்தில் செல்வாக்கு மிகுந்த நபர்களை தொடர்பு கொண்டு, உதவி கோரி வருவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற சட்டவிரோத பண பரிமாற்றங்களை வருமான வரித்துறையினர், தற்போது தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், அதையும் மீறி சில சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது, அம்பலத்துக்கு வந்துள்ளது.

தனியார் பள்ளி ஊழியர்களின்வங்கி கணக்கில் கறுப்பு பணம்


திருப்பூரிலுள்ள தனியார் பள்ளியில் பணி யாற்றும், பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியை கூறியதாவது:எங்களது பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, 100ஐ தாண்டும். நேற்று முன் தினம், பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து, அவசர கூட்டத்துக்கு வருமாறு எங்களுக்கு அழைப்பு வந்தது. என்னவோ, ஏதோ, என்ற தவிப்புடன் நாங்கள் பங்கேற்றோம்.

அந்த கூட்டத்தில் பேசிய பள்ளி நிர்வாகி, 'எங்களிடம் பழைய, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் உள்ளன. மத்திய அரசின் திடீர் உத்தரவால் அவற்றை, வங்கிக் கணக்கில் மொத்தமாக செலுத்துவதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன.

இதனால், ஊழியர்களான உங்களின் வங்கிக் கணக்கில், ஒவ்வொருவரின் பெயரிலும், குறிப் பிட்ட தொகையினை செலுத்த ஏற்பாடு செய்கிறோம்.அந்த தொகையை நீங்கள் செலுத் தியதாகவே வங்கி கணக்கில் இருக்கட்டும்.

'நான்கு, ஐந்து மாதங்கள் வரை, அந்த பணத்தை நீங்கள் எங்களுக்கு திரும்பத்தர வேண்டாம். அதன்பின், மாதத்தவணை அடிப்படையில், உங்களது சம்பளத்தில் இருந்து நாங்களே மாதம் 5,000 ரூபாய் வீதம் பிடித்தம் செய்து கொள்கிறோம்; இது, வட்டியில்லா கடனாக இருக்கட்டும். இதுநாள் வரை, இந்நிறுவனம், உங்களுக்கு உதவியிருக்கிறது. தற்போதைய நெருக்கடியை சமாளிக்க, நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்' என்றார்.

பள்ளி நிர்வாகத்தின் இந்த முடிவை, ஊழியர் களில் பலரும் ஏற்கவில்லை. காரணம், எங்களது பெயரிலான வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டால், அதற்கு நாங்களே பொறுப்பாளி; வருமானவரி செலுத்தவும் நேரிடலாம். தவிர, இது ஒருவித முறைகேடும் கூட. நாங்கள் முன்பு, ஒரு முறை ஊதிய உயர்வு கோரியபோது, நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறியது பள்ளி நிர்வாகம்.

இப்போது, எப்படி இவ்வளவு பணம் வந்தது. பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணம், செல்லாமல் போவதை தடுக்க, புதிய நோட்டுகளாக மாற்றிட முயற்சி செய்கிறது. இது தொடர்பாக, வருமானவரித்துறை மற்றும்

ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பியுள்ளோம். இவ்வாறு, அந்த ஊழியர் தெரிவித்தார்.

வேறு வழி உண்டா...


கோவையை சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமை யாளர் கூறியதாவது:வெளிமாவட்டம் ஒன்றில், எனது நண்பர் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். மத்திய அரசின் அறிவிப்புக்குப்பிறகு என்னை தொடர்பு கொண்ட அவர், தனக்கும், தனது பங்குதாரர்களுக் குச் சொந்தமான, ஏறத்தாழ 15 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன. அவற்றை செல்லத்தக்கதாக மாற்ற என்ன செய்ய வேண்டும். வேறு வழி ஏதாவது இருக்கிறதா, என்று கேட்டார்.

வருமானத்துக்குரிய கணக்கை முறையாக காட்டி யிருந்தால், இதுபோன்ற நெருக்கடி, பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்காது. தற்போது அவர், அந்த பணத்தை கணக்கு காண்பித்தால், அல்லது அதிகாரி களால் கண்டறியப்பட்டால், 200 மடங்கு தொகை யினை அபராதமாக செலுத்த நேரிடும். அதனால், கணக்கில் காட்டவும் முடியா மல், அழிக்கவும் மனமில்லாமல், ஏறத்தாழ பைத்தியம் பிடித்தது போன்ற நிலைக்கே, நண்பர் சென்றுவிட்டார்.

கறுப்பு பணத்தை குழிதோண்டி புதைப்பது நல்லதா, எரிப்பது நல்லதா என்ற விவாதத்தையும் தற்போது கேட்க முடிகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

வாகனங்களில் பறக்குது 'கறுப்பு' குறையுது தங்கக்கட்டி இருப்பு


கோவை நகரை சேர்ந்த முக்கிய வர்த்தகர் ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின் அறிவிப்பு, கறுப்பு பணம் பதுக்கியவர்களின் துாக்கத்தை தொலைத் திருக்கிறது. அவர்கள் வசமிருக்கும் கோடிக்கணக் கான மதிப்பிலான, 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை எல்லாம் செல்லாக்காசாக, வெற்றுத்தாளாக மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு மாற்றிவிட்டது. பதுக்கிய ரூபாய் நோட்டுகளின் மதிப்பை காப்பாற்ற, பதுக்கல்காரர்கள் துடிக்கின்றனர்.

வாகனங்களில் பணத்தை ஏற்றிக்கொண்டு அங்கு மிங்குமாக அலைகின்றனர் என்றும் கூட சொல்கி றார்கள். சிலர், தங்களது நட்பு மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி, தங்க வியாபாரிகளிடம், பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, தங்கக் கட்டிகள் வாங்கியுள்ளனர்.

மார்க்கெட்டில் தற்போது, சொக்கத்தங்கத்தின் விலை கிராம் 3,200 ரூபாய் என்றால், மத்திய அரசின் நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, கிராம் 4,200 ரூபாய் வரை விலை வைத்து, வியாபாரி கள் விற்கின்றனர். இதன் மூலம், கிலோவுக்கு குறைந்தது, 10 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. வாங்கும் நபருக்கும் நஷ்டம் கிடையாது.

காரணம், அவர், கூடுதல் பணம் கொடுத்தாவது தங்கத்தை வாங்காவிடில், பதுக்கி வைத்திருக்கும் மொத்த கறுப்பு பணத்தின் மதிப்பையும் இழந்து விடுவார். இந்த சட்டவிரோத வியாபாரத்தின் மூலமாக, மிகப் பெரிய அளவில், மொத்தமாக அதாவது 100,200 கோடி அளவிலான கறுப்பு பணத்தை, தங்கமாக மாற்றிக்கொள்ள வாய்ப் பில்லை என்றபோதிலும், ஒரு சில கோடி ரூபாய் களை வைத்திருப்பவர்கள், மாற்றிக்கொள்ள இயலும்.

வருமானவரி செலுத்தப்படாத, கணக்கில் காட்டப் படாத, கறுப்பு பணத்தை, அதாவது 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை பெறும் தங்க வியாபாரிகள், அவற்றை தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி கொள்வதில் எவ்வித பிரச்னையும் இருக்காது. காரணம், அவர்கள் சட்ட ரீதியாக கொள்முதல் செய்து, கணக்கு காட்டி இருப்பு வைத்திருந்த தங்கத்துக்கு ஈடான தொகையினை, வங்கி கணக்கில் பழைய நோட்டாக இருப்பினும் செலுத்த முடியும்.

அதேவேளையில்,கையிருப்பு தங்கம் முழுவதும் விற்று முடிக் கப்பட்டுவிட்டபின், புதிதாக
தங்கம் கொள் முதல் செய்யும்போது,பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை செலுத்த முடியாது என்பதை யும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருப்பினும், மேற்கண்ட 'பிசினஸ்'சில், நகைத்தொழிலுடன் தொடர்பில் இருக்கும் மிகச்சிலர் ஈடுபட்டுள்ளனர். பிறர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை.கறுப்பு பணத்தை வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

'கறுப்பு பண பதுக்கல்காரர்கள், தாங்களாக முன்வந்து, தங்களிடம் இருக்கும் பணத்தின் மதிப்பை காட்டி, 47 சதவீத வரியை செலுத்தலாம். இந்த பணத்தை எப்படி சம்பாதித்தோம் என்பது பற்றியெல்லாம் தெரிவிக்க வேண்டியதில்லை' என, தெரிவித்தது. இத்திட்டத்தில், சேர்ந்தவர்கள் மிகச்சிலரே.

'ஒவ்வொரு முறையும், மத்திய அரசில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் இவ்வாறு தான் மிரட்டுகிறார்கள்; இதை 'சீரியஸ்' ஆக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை' என்றே, பலரும் அலட்சியமாக இருந்துவிட்டனர். சிலர், மத்திய அரசின் திட்டத்தை ஏற்று, கறுப்பு பணத்தை கணக்கில் காண்பித்தார்கள். அதற்குண்டான வரியினை செலுத்த மத்திய அரசு, ஓராண்டு கால அவகாசமும் அளித்திருக்கிறது.

மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று, அன்று கணக்கு காண்பித்தவர்கள், இன்று நிம்மதியாக இருக்கிறார்கள். ஒரு கோடி ரூபாயில், 47 லட்சம் அரசுக்கு போனாலும், 53 லட்சம் மிஞ்சு கிறது. ஆனால் இன்று, கறுப்பு பண கணக்கு காண்பிக்காதவர்களின் நிலையோ பரிதாபம். பதுக்கி வைத்திருக்கும் ஒட்டுமொத்த பணத் தின் மதிப்பும் போய்விட்டது. துாக்கமிழந்து தெருத்தெருவாக அலைகிறார்கள்.

தங்களுக்கு அறிமுகமான வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் வங்கி அதிகாரிகளின் உதவியை நாடுகிறார்கள். தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு, இனி என்ன செய்ய முடியும்?

'டாஸ்மாக்'கில்நள்ளிரவு 'பண மாற்றம்'


கோவையில் பணியாற்றும் 'டாஸ்மாக்' பணியாளர்கள் சிலர் கூறியதாவது:மதுவிற்ற பணத்தை வங்கியில் செலுத்தும் முன், எங்களுக்கு ஒரு வாய்மொழி உத்தரவு வந்தது, 'பணத்தை அப்படியே வைத்திருங்கள்' என்று. எதற்கு இப்படி கூறினார்கள் என, தெரியாமல் குழம்பிப் போனோம்.

அதற்கான விடை அடுத்த சில மணி நேரங்க ளில் கிடைத்தது. முக்கிய புள்ளி ஒருவரின் பெயரிலான நபர்கள், 1,000, 500 ரூபாய் நோட்டு களுடன் டாஸ்மாக் கடைகளுக்கு, வாகனங் களில் பரபரப்புடன் வந்தார்கள்.

அவர்கள் கோவை, திருப்பூர், நீலகிரி கடை களுக்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் சென்றிருக்கக்கூடும். தாங்கள் கொண்டு வந்திருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுகளை எங்களிடம் கொடுத்துவிட்டு, அதற்கு ஈடான மதிப்பில் 100, 50 ரூபாய் நோட்டுக்களை வாங்கிச் சென்றுவிட்டார்கள். 'அவர்கள் வந்ததும் தெரியாது; போனதும் தெரியாது' என சொல்லுமளவுக்கு, அவ்வளவு வேகம்,

அவர்களது நடவடிக்கையில்.வந்த நபர்கள் யார், அனுப்பியது யார், பணத்தை எங்கு கொண்டு போனார்கள் என்றெல்லாம் எங்களுக்கு தெரியாது. இந்த பண மாற்று சம்பவம், டாஸ்மாக்கில் மட்டுமல்ல; அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் நடந்ததாக கூறப்படுகிறது.

சிலர், தங்களது நட்பு மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி, தங்க வியாபாரிகளிடம், பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, தங்கக் கட்டிகள் வாங்கியுள்ளனர்.

மத்திய அரசின் முடிவுக்கு உயர் நீதிமன்றம் வரவேற்பு: ரூ.500, ரூ.1000 செல்லாது என்பதை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல் லாது என மத்திய நிதி அமைச்ச கம் வெளியிட்டுள்ள அறிவிப் பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தியன் நேஷனல் லீக் மாநில பொதுச் செயலர் எம்.சீனிஅகமது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடும்போது, “முன்னேற்பாடு நடவடிக்கைகள் இல்லாமல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் சிரமத் துக்கு ஆளாகியுள்ளனர். புதிதாக 2000 ரூபாய் நோட்டு வெளியிட்டி ருப்பது இந்திய ரிசர்வ் வங்கி சட்டத் துக்கு விரோதமானது” என்றார்.

தவறில்லை

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், “5, 10, 50, 100, 1000 என ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம். புதிதாக ரூ.2000 நோட்டு வெளியிடுவதில் தவறில்லை. 1946, 1978 ஆண்டு களில் இதுபோல் ரூபாய் நோட்டு கள் செல்லாது என அறிவிக்கப் பட்டுள்ளது” என்றனர்.

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிடும் போது, “ரூபாய் நோட்டுகளை செல்லாது என்பதும், புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதும் மத்திய அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது” என்றார்.

கள்ள நோட்டுகள்

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவிப்பு வெளியிட்டபோது, இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கறுப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகள் அச்சிடுவதைத் தடுக்கவும், ஊழலை ஒழிக்கும் நோக்கத்திலும், பயங்கரவாதத்துக்கு கள்ள நோட்டுகளை பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த நோக்கத்தில் கொண்டுவரப் பட்டுள்ள இத்திட்டம் வரவேற்கத் தக்கது.

இந்தியாவில் அதிக அளவு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், போதைப் பொருள் கடத்தலுக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் கள்ள நோட்டுகள் பயன்படுத்தப்படு வதாகவும், இதனால் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ளது. இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டதில் அரசிய லமைப்பு சட்டம் உட்பட எந்த சட்டத்தையும் மத்திய அரசு மீறவில்லை. இதனால், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டியதில்லை. சிரமங்கள் தற்காலிகமானது. இதை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலை யிட முடியாது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை முழுமையாக ஏற்காவிட்டா லும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடு வது நல்லதல்ல. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்த தகுதியுடன் இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் குவிந்தன: டெல்லி, மும்பையில் வருமான வரி சோதனை

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் குவிந்தன. இதனிடையே, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 

நாடு முழுவதும் காலாவதியான ரூபாய் நோட்டுகளை ஒப்படைத்துவிட்டு புதிய நோட்டுகளைப் பெறுவதற்காக லட்சக்கணக்கானோர் நேற்று வங்கிக் கிளைகளை முற்றுகையிட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

கருப்புப் பணம், கள்ள நோட்டுகள், தீவிரவாத நிதியுதவி ஆகியவற்றைத் தடுப்பதற்காக புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதேநேரம், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிதாக அச்சிடப்பட்ட 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

பெட்ரோல் பங்க்குகளில் மட்டும் 2 நாட்களுக்கு பழைய நோட்டுகள் பெறப்படும் என அறிவித்தார். இதனால் பெரும்பாலானோர் பெட்ரோல் பங்குகளை முற்றுகையிட்டதால் அங்கும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்ப முடியாமலும், ஓட்டலில் சாப்பிட முடியாமலும் திண்டாடினர்.

இதனிடையே, நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை 500, 1,000 பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் ஒப்படைத்துவிட்டு புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கென ஒரு படிவம் தரப்பட்டது. அதை நிரப்பி அதனுடன் அடையாள அட்டையின் நகலையும் இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் காலையிலேயே பொதுமக்கள் வங்கிகள், அஞ்சலகங்களை முற்றுகையிட்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். சில இடங்களில் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுச் சென்றனர்.

மேலும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள சில வங்கிகள், அஞ்சலகங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. சில வங்கிகளில் ஒருசில மணி நேரங்களிலேயே புதிய நோட்டுகள் தீர்ந்துவிட்டன.

பழைய நோட்டுகளுக்கு பதிலாக ஒவ்வொருவரும் தலா ரூ.4,000 வரை மட்டுமே புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எனினும், சில வங்கிக் களைகளில் ரூ.2000 மட்டுமே வழங்கப்பட்டதாக மக்கள் புகார் கூறினர். அதேநேரம், பழைய நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.

இங்கு சில்லறை கிடைக்கும்: மாற்றி யோசித்த மற்றும் சிலர்

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய மக்கள் சில 'உத்தி'களைக் கையாண்டு நிலைமையைச் சமாளித்து வருகின்றனர்.

"நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்" என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், நம் மக்கள் சில உத்திகளைக் கையாண்டு நிலைமையைச் சமாளித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முழுக்க 36 கிளைகளைக் கொண்டு, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சரவண பவன் உணவகத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இதுகுறித்து சரவண பவன் உணவக நிர்வாகி கே. கமலக்கண்ணன் கூறும்போது, ''நாங்கள் எந்த தயக்கமும் இல்லாமல் ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொள்கிறோம். வங்கிகள் திறந்தவுடன் அவற்றை மாற்றிக் கொள்வோம்'' என்றார்.

சில சுவாரஸ்யமான தீர்வுகள்

சில வாடிக்கையாளர்கள் இந்தப் பிரச்சனைக்கு வேறு விதமாகத் தீர்வு கண்டனர். சாப்பிட்ட/ செலவழித்த இருவரின் தொகையை ஒருவரே செலுத்த மற்றொருவர், அவருக்கு ஆன்லைனில் ரீசார்ஜ் செய்துவிடுவதாக உறுதிகூறிச் சென்றார்.

இன்னும் சிலர் காஃபி குடித்துவிட்டு, கிரெடிட் கார்டு மூலமாக அதற்கான தொகையைக் கட்டினர். இது இந்திய வழக்கமில்லைதான். ஆனால் மாறித்தானே ஆகவேண்டும். சின்னத் தொகையாக இருந்தாலும், பணமில்லாத இந்த நேரத்தில் இதுவே சிறந்த வழியாக இருக்க முடியும்.

''யூடூ டாக்ஸி நிறுவனம் 500 ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கிறது. அதே நேரம் மீதிச் சில்லறையைத் தருவதில்லை. அதற்குப் பதிலாக அடுத்த பயணத்துக்கான அட்டையை வழங்கிவிடுகிறது'' என்கிறார் அதன் வாடிக்கையாளர் சிவசங்கரன்.

இண்டஸ்இண்ட் வங்கி, கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் தனது வாடிக்கையாளர்களுக்கு 2 மடங்கு அதிக பாயிண்டுகளை வழங்குகிறது.

பிரச்சனைகள் எழும்போதுதான் மனிதர்கள் கண்டுபிடிப்பாளர்களாக மாறுகிறார்கள் போல!

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...