Friday, November 11, 2016

அறிவித்தபடி இயங்காத ஏடிஎம் மையங்கள்: அவதிப்படும் பொதுமக்கள்


சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஏடிஎம் மையத்தின் முன் திரண்டிருந்த மக்கள் | படம்: எல்.சீனிவாசன்.

இரு நாட்களுக்குப் பிறகு ஏடிஎம் மையங்கள் நாடு முழுவதும் இன்று முதல் (11-ம் தேதி) இயல்பாக இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் விசாரித்தவரை நிலைமை தலைகீழாக இருக்கிறது.

பெரும்பாலான ஏடிஎம்-கள் இயங்காததால் மக்கள் பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர். அன்றாட அத்தியாவசியச் செலவுக்குக்கூட பணம் இல்லாமல் சாமானிய மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஐஸ்ஹவுஸ் போன்ற பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் ஏதும் திறக்கவில்லை. சென்னை பெரம்பூர் பகுதியில் ஒன்றிரண்டு ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடிந்தது. அண்ணா நகர் பகுதியில் இருக்கும் ஹெச்டிஎப்சி ஏடிஎம் மையங்கள் ஏதும் இன்னும் இயங்கவில்லை. மதியம் 3.30 மணிக்கு மேல் அந்த மையங்களில் பணம் எடுக்கலாம் என வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மதுரை நிலவரம்:

மதுரை மாவட்டத்தில் ஆங்காங்கே ஒருசில ஏடிஎம் மையங்கள் மட்டுமே திறந்திருக்கின்றன. அத்தியாவசியத் தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் ஒவ்வொரு ஏடிஎம் மையமாக அலைந்து திரிகின்றனர். தபால் அலுவலகங்களில் 'எங்களுக்கு இன்னும் பணம் வரவில்லை' என்ற பதிலையே திரும்பத்திரும்ப கூறுகின்றனர்.

சில வங்கிகளில் எங்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்குத்தான் பணம் வழங்க முன்னுரிமை மற்ற வங்கி கணக்குடையவர்களுக்கு இப்போதைக்கு பணமில்லை எனக் கூறி அனுப்புகின்றனர். கையில் ரூ.500, ரூ.1000 இருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது போதிய பணம் இல்லாததாலேயே ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படவில்லை என்றனர்.

கோவை திண்டாட்டம்:

கோவை நகரிலும் ஒரு சில ஏடிஎம் மையங்களில் மட்டுமே பணம் எடுக்க முடிகிறது. சில ஏடிஎம் மையங்கள் திறந்துள்ளன. ஆனால், அவற்றை பணத்துக்காக இயக்கினால், "பணம் இல்லை" என்ற அறிவிப்பு மட்டுமே வருகிறது என்று மக்கள் புலம்புகின்றனர். வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று புதிய நோட்டுகளை மாற்றியவர்கள் கவலை வேறாக இருக்கிறது. ரூ.2000 எடுத்துக் கொண்டு எந்தக் கடைக்குச் சென்றாலும் சில்லறை இல்லை ரூ.2000-க்கும் பொருட்கள் வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார்கள் என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சேலத்திலும் தவிப்பு:

சேலத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது. ஐஓபி, எஸ்பிஐ போன்ற ஒருசில ஏடிஎம் மையங்களில் மட்டுமே பணம் எடுக்க முடிகிறது. நேற்று போலவே இன்றும் வங்கிகளில் மக்கள் அதிகளவில் திரண்டுள்ளனர்.



படம்: எஸ்.குருபிரசாத்.

மாநகராட்சியில் பழைய ரூ.500, ரூ.1000 பயன்படுத்தி வரி செலுத்தலாம் என்ற அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால், மக்கள் பழைய நோட்டுகளை கொடுத்து வரி பாக்கியை செலுத்தி வருவது ஆறுதல் தரும் விஷயம்.

திருச்சியில் ஓரளவு சிரமம் குறைவு:

திருச்சி டவுன் பகுதியில் ஏடிஎம் மையங்கள் ஓரளவு இயங்கிவருவதாக அங்கிருந்து வந்த தகவல் தெரிவிக்கின்றது. எஸ்.பி.ஐ., ஐ.ஓ.பி. வங்கிகளில் பணம் எடுக்க முடிவதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால், கேவிபி, ஹெச்டிஎப்சி போன்ற ஏடிஎம் மையங்களில் பணம் இன்னும் நிரப்பப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.



திருச்சியில் ஏடிஎம் மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் | படம்: எஸ்.ஞானவேல் முருகன்.

செல்லாத நோட்டுகளை வைத்து என்ன செய்வது? : திருப்பி கொடுத்த தேர்தல் பொறுப்பாளர்கள்

அரவக்குறிச்சி: ஆளுங்கட்சிக்கு பாதகமாக வந்த தகவலையடுத்து, தேர்தல் பொறுப்பாளர்களின் அவசரக் கூட்டத்தை நேற்று, அமைச்சர்கள் நடத்தினர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் போட்டியிடுகிறார். 11 அமைச்சர்கள், 30க்கும் மேற்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், அ.தி.மு.க.,வுக்கு சாதகமான நிலை இல்லை என, உளவுத்துறை போலீசார், ஆளுங்கட்சி தலைமையிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, திடீரென நேற்று, ஓட்டுச்சாவடி வாரியாக, தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொறுப்பாளர்கள், 'தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்ட பணம் போதுமானதாக இல்லை' எனக் கூறியதாக தெரிகிறது.
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: மொத்தம் உள்ள, 245 ஓட்டுச்சாவடிகளில், தலா, 25 என, 11 அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது; செலவுகளை, அமைச்சர்கள் பார்த்து கொள்ள வேண்டும். இருப்பினும், அனைத்து செலவுகளையும் தானே பார்த்து கொள்வதாக, வேட்பாளரான செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். ஆனால், ஓட்டுச்சாவடி முகவர்கள், ஊராட்சி கிளை செயலர்களுக்கு மட்டுமே பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. உள்ளூர் மற்றும் வேறு மாவட்டத்தில் இருந்து வந்த கட்சி நிர்வாகிகள், தங்கள் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஆளுங்கட்சி செல்வாக்கு குறைந்து வருகிறது என்ற தகவல், உளவுத்துறை போலீசாரால் தலைமைக்கு சென்றது. இதன் காரணமாக, நேற்று முன்தினம், அமைச்சர்கள் ரகசிய கூட்டம் நடத்தினர். நேற்று, அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர் ஆகியோர், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் கூட்டம் நடத்தினர்.அங்கு, ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய், ஊராட்சி கிளை செயலருக்கு, 2,000 ரூபாய் அளித்துள்ளனர். இதனால், அதிருப்தியடைந்த பொறுப்பாளர்கள், '500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல், சாப்பாட்டுக்கு கூட மற்றவர்களிடம் கையேந்தும் நிலையில் உள்ளோம். இதையெல்லாமல் கொண்டு கொள்ளாமல், செல்லாத, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வழங்கினால், அதை வைத்து என்ன செய்ய முடியும்' எனக் கூறி, பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர். உடனே அமைச்சர்கள், 'தலைமையிடம் பேசி, மாற்று ஏற்படும் செய்கிறோம்' என்று சமாளித்தபடி சென்றுவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கறுப்பு பணத்தை 'வெளுக்க' அறக்கட்டளைகள் : புதிய வழியில் பதுக்கல்காரர்கள்

செல்லாத ரூபாய் நோட்டுகளை, சட்டப்பூர்வமாக மாற்ற, அறக்கட்டளைகள் துவக்க, முக்கிய பிரமுகர்கள் திட்டமிடுவதால், புதிதாக பதிவாகும் அறக்கட்டளைகளை, அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் பயன்பாட்டில் இருந்த, 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்தது. இது, அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை தந்தாலும், கறுப்பு பணத்தை பதுக்கியுள்ள, கோடீஸ்வரர்கள், பெரும் புள்ளிகளுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. தங்களது வேலையாட்கள், தெரிந்தவர்கள் மூலம், வங்கிகளில், பழைய நோட்டுகளை மாற்றினாலும், சில ஆயிரம் ரூபாய்க்கு மேல், பதுக்கல் பணத்தை மாற்ற முடியாது. எனவே, கோடிக்கணக்கில் குவித்து வைத்திருக்கும் கறுப்பு பணத்தை, சட்டப்பூர்வமானதாக மாற்ற, அவர்கள் இரவு, பகலாக, மூளையை கசக்கிக் கொண்டிருக்கின்றனர். உத்தர பிரதேசத்தில் சிலர், பயந்து போய், 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை எரித்ததாக செய்தி வெளியானது.ஆனால், சற்று விவரமான பெரும் புள்ளிகள், குறிப்பாக, அரசியல்வாதிகள், அறக்கட்டளைகள் துவக்கி, கறுப்பு பணத்தை, சட்டப்படி அங்கீகாரம் உடையதாக மாற்ற திட்டமிட்டு வருவதாக, அரசியல் கட்சிகள் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: பழைய ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், சில அரசியல்வாதிகள், கறுப்பு பணத்தை மாற்ற, நல்ல காரியங்களை செய்வதற்கான அறக்கட்டளை போல, போலி அறக்கட்டளைகள் துவக்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள், அந்த அறக்கட்டளைகளின் நிர்வாக குழுவில், படிப்பறிவில்லாத, தாங்கள் இடும் கட்டளைகளுக்கு கீழ்படியும் நபர்களை, உறுப்பினர்களாக நியமிப்பர். பின், அறக்கட்டளைகளுக்கு, பணத்தை நன்கொடை கொடுத்ததாக கணக்கு காட்டி, அதை செல்லத்தக்கதாக மாற்ற திட்டம் தீட்டி வருகின்றனர். எனவே, மத்திய, மாநில அரசுகள், புதிதாக பதிவாகும் அறக்கட்டளைகளையும், அவற்றுக்கு பெரும் தொகையை நிதியுதவியாக அளிப்போரையும் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி?


புதுடில்லி: 'கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது எப்படி' என, இணையத்தில் அதிகமானோர் தேடியுள்ள தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கறுப்புப் பணத்தை ஒடுக்கவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள், கையில் உள்ள நோட்டுகளை எப்படி மாற்றுவது குறித்து கவலையடைந்தனர். அதே நேரத்தில், 'கூகுள்' இணையதளத்தில், நேற்று முன்தினம் அதிகமான மக்கள் தேடிய விஷயம், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி என்பதே. இதில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான, பா.ஜ., ஆளும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், இது குறித்த தகவல்களை அதிகமாக தேடியுள்ளனர். அதைத் தொடர்ந்து, மஹாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், டில்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இது குறித்த தகவலை அதிகமாக தேடியுள்ளனர். மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, புதிய, 500 மற்றும் 2,000 ரூபாய் குறித்த விபரங்களையும், கூகுளில் அதிகமானோர் தேடியுள்ளனர்.
28 கோடி பேர் : நம் நாட்டில், 28 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இணையத்தை அதிகமாக பயன்படுத்துவதில், உலக அளவில், சீனா முதலிடத்திலும், இந்தியா

இரண்டாவது இடத்திலும் உள்ளது.

பணமின்றி தவித்தவர்களுக்கு இலவச உணவு நெல்லையில் மனிதாபிமான ஓட்டல்


திருநெல்வேலி:500, 1000 ரூபாய் செல்லாது அறிவிப்பால், பணமின்றி தவித்தவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஓட்டலில் இலவச உணவு வழங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்த வருகின்றனர் நெல்லையை சேர்ந்தவர்கள்.

திருநெல்வேலி என்.ஜி.ஓ.,காலனியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே பாலாஜி சைவ உணவகத்தை, அதே பகுதியை சேர்ந்தவர்கள் விஷ்ணு, கோபி ஆகியோர் நடத்துகின்றனர்.
இவர்களது ஓட்டல் அருகே பெருமளவு இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்களின் குடும்பங்கள் அதிகம் உள்ளன.

500 ரூபாய், ஆயிரம் ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்ட அன்று இரவிலேயே மாணவர்கள், அரசு ஊழியர்கள் கையில் பணம் இருந்தாலும் நுாறு ரூபாய் நோட்டுகள் இல்லாததால், டீ குடிக்க கூட முடியாமல் சிரமப்பட்டனர்.

இதை நேரடியாக பார்த்த இருவரும், ''யார் வேண்டுமானாலும் தங்களது ஓட்டலில் சாப்பிட்டுக்கொள்ளலாம். முடிந்தால் பணம் கொடுங்கள், இல்லாவிட்டால் நினைவில் வைத்துக்கொண்டு பின்னர் கொடுங்கள்,''என கூறி கடந்த இரு நாளும் வந்தவர்களுக்கெல்லாம் உணவு வழங்கினர். நேற்று பாங்குகள் திறக்கப்பட்டு ஓரளவு நிைலமை சீரடைந்ததாலும், நேற்று இரவு வரையிலும் உணவு வழங்கினர்.

இதுகுறித்து விஷ்ணு கூறுகையில், நாங்கள் ஓட்டல் தொழிலை அண்மையில் தான் துவக்கினோம். நாங்கள் தினம் தினம் பார்க்கும் மனிதர்கள் பட்டினியால் வாடுவதை எப்படி சகித்துக்கொள்ள முடியும். பணம் இல்லை என்பதற்காக உணவு இல்லை என்று மறுப்பதோ, உணவு பண்டங்களை வைத்துக்கொண்டு கடையை வழக்கத்திற்கு மாறாக இழுத்து மூடுவதிலோ எங்களுக்கு உடன்பாடில்லை.

எனவே பலரும் எங்கள் ஓட்டலில் சாப்பிட்டுச்சென்றார்கள். அவர்கள் நிலைமை சகஜமான பிறகு பணம் தரலாம். தராமலும் போகலாம். ஆனால் பசியோடு வந்த அவர்களுக்கு சுடச்சுட உணவு பரிமாறியதில் எங்களுக்கு திருப்தி, என்றார்.
இவரை பாராட்ட... 9786077881 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

எரிப்பார்களா புதைப்பார்களா?


எரிப்பார்களா புதைப்பார்களா?
ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் இனி, செல்லாது' என்ற, அறிவிப்பால், பாதாளத்தில் விழுந்தது போன்று பதறுகின்றனர், கறுப்பு பண பதுக்கல்காரர்கள். இவர்கள், தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை, எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற பரிதவிப்பில் உள்ளனர்.

அரசியல், அதிகார மட்டத்தில் செல்வாக்கு மிகுந்த நபர்களை தொடர்பு கொண்டு, உதவி கோரி வருவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற சட்டவிரோத பண பரிமாற்றங்களை வருமான வரித்துறையினர், தற்போது தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், அதையும் மீறி சில சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது, அம்பலத்துக்கு வந்துள்ளது.

தனியார் பள்ளி ஊழியர்களின்வங்கி கணக்கில் கறுப்பு பணம்


திருப்பூரிலுள்ள தனியார் பள்ளியில் பணி யாற்றும், பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியை கூறியதாவது:எங்களது பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, 100ஐ தாண்டும். நேற்று முன் தினம், பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து, அவசர கூட்டத்துக்கு வருமாறு எங்களுக்கு அழைப்பு வந்தது. என்னவோ, ஏதோ, என்ற தவிப்புடன் நாங்கள் பங்கேற்றோம்.

அந்த கூட்டத்தில் பேசிய பள்ளி நிர்வாகி, 'எங்களிடம் பழைய, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் உள்ளன. மத்திய அரசின் திடீர் உத்தரவால் அவற்றை, வங்கிக் கணக்கில் மொத்தமாக செலுத்துவதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன.

இதனால், ஊழியர்களான உங்களின் வங்கிக் கணக்கில், ஒவ்வொருவரின் பெயரிலும், குறிப் பிட்ட தொகையினை செலுத்த ஏற்பாடு செய்கிறோம்.அந்த தொகையை நீங்கள் செலுத் தியதாகவே வங்கி கணக்கில் இருக்கட்டும்.

'நான்கு, ஐந்து மாதங்கள் வரை, அந்த பணத்தை நீங்கள் எங்களுக்கு திரும்பத்தர வேண்டாம். அதன்பின், மாதத்தவணை அடிப்படையில், உங்களது சம்பளத்தில் இருந்து நாங்களே மாதம் 5,000 ரூபாய் வீதம் பிடித்தம் செய்து கொள்கிறோம்; இது, வட்டியில்லா கடனாக இருக்கட்டும். இதுநாள் வரை, இந்நிறுவனம், உங்களுக்கு உதவியிருக்கிறது. தற்போதைய நெருக்கடியை சமாளிக்க, நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்' என்றார்.

பள்ளி நிர்வாகத்தின் இந்த முடிவை, ஊழியர் களில் பலரும் ஏற்கவில்லை. காரணம், எங்களது பெயரிலான வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டால், அதற்கு நாங்களே பொறுப்பாளி; வருமானவரி செலுத்தவும் நேரிடலாம். தவிர, இது ஒருவித முறைகேடும் கூட. நாங்கள் முன்பு, ஒரு முறை ஊதிய உயர்வு கோரியபோது, நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறியது பள்ளி நிர்வாகம்.

இப்போது, எப்படி இவ்வளவு பணம் வந்தது. பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணம், செல்லாமல் போவதை தடுக்க, புதிய நோட்டுகளாக மாற்றிட முயற்சி செய்கிறது. இது தொடர்பாக, வருமானவரித்துறை மற்றும்

ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பியுள்ளோம். இவ்வாறு, அந்த ஊழியர் தெரிவித்தார்.

வேறு வழி உண்டா...


கோவையை சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமை யாளர் கூறியதாவது:வெளிமாவட்டம் ஒன்றில், எனது நண்பர் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். மத்திய அரசின் அறிவிப்புக்குப்பிறகு என்னை தொடர்பு கொண்ட அவர், தனக்கும், தனது பங்குதாரர்களுக் குச் சொந்தமான, ஏறத்தாழ 15 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன. அவற்றை செல்லத்தக்கதாக மாற்ற என்ன செய்ய வேண்டும். வேறு வழி ஏதாவது இருக்கிறதா, என்று கேட்டார்.

வருமானத்துக்குரிய கணக்கை முறையாக காட்டி யிருந்தால், இதுபோன்ற நெருக்கடி, பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்காது. தற்போது அவர், அந்த பணத்தை கணக்கு காண்பித்தால், அல்லது அதிகாரி களால் கண்டறியப்பட்டால், 200 மடங்கு தொகை யினை அபராதமாக செலுத்த நேரிடும். அதனால், கணக்கில் காட்டவும் முடியா மல், அழிக்கவும் மனமில்லாமல், ஏறத்தாழ பைத்தியம் பிடித்தது போன்ற நிலைக்கே, நண்பர் சென்றுவிட்டார்.

கறுப்பு பணத்தை குழிதோண்டி புதைப்பது நல்லதா, எரிப்பது நல்லதா என்ற விவாதத்தையும் தற்போது கேட்க முடிகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

வாகனங்களில் பறக்குது 'கறுப்பு' குறையுது தங்கக்கட்டி இருப்பு


கோவை நகரை சேர்ந்த முக்கிய வர்த்தகர் ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின் அறிவிப்பு, கறுப்பு பணம் பதுக்கியவர்களின் துாக்கத்தை தொலைத் திருக்கிறது. அவர்கள் வசமிருக்கும் கோடிக்கணக் கான மதிப்பிலான, 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை எல்லாம் செல்லாக்காசாக, வெற்றுத்தாளாக மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு மாற்றிவிட்டது. பதுக்கிய ரூபாய் நோட்டுகளின் மதிப்பை காப்பாற்ற, பதுக்கல்காரர்கள் துடிக்கின்றனர்.

வாகனங்களில் பணத்தை ஏற்றிக்கொண்டு அங்கு மிங்குமாக அலைகின்றனர் என்றும் கூட சொல்கி றார்கள். சிலர், தங்களது நட்பு மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி, தங்க வியாபாரிகளிடம், பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, தங்கக் கட்டிகள் வாங்கியுள்ளனர்.

மார்க்கெட்டில் தற்போது, சொக்கத்தங்கத்தின் விலை கிராம் 3,200 ரூபாய் என்றால், மத்திய அரசின் நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, கிராம் 4,200 ரூபாய் வரை விலை வைத்து, வியாபாரி கள் விற்கின்றனர். இதன் மூலம், கிலோவுக்கு குறைந்தது, 10 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. வாங்கும் நபருக்கும் நஷ்டம் கிடையாது.

காரணம், அவர், கூடுதல் பணம் கொடுத்தாவது தங்கத்தை வாங்காவிடில், பதுக்கி வைத்திருக்கும் மொத்த கறுப்பு பணத்தின் மதிப்பையும் இழந்து விடுவார். இந்த சட்டவிரோத வியாபாரத்தின் மூலமாக, மிகப் பெரிய அளவில், மொத்தமாக அதாவது 100,200 கோடி அளவிலான கறுப்பு பணத்தை, தங்கமாக மாற்றிக்கொள்ள வாய்ப் பில்லை என்றபோதிலும், ஒரு சில கோடி ரூபாய் களை வைத்திருப்பவர்கள், மாற்றிக்கொள்ள இயலும்.

வருமானவரி செலுத்தப்படாத, கணக்கில் காட்டப் படாத, கறுப்பு பணத்தை, அதாவது 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை பெறும் தங்க வியாபாரிகள், அவற்றை தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி கொள்வதில் எவ்வித பிரச்னையும் இருக்காது. காரணம், அவர்கள் சட்ட ரீதியாக கொள்முதல் செய்து, கணக்கு காட்டி இருப்பு வைத்திருந்த தங்கத்துக்கு ஈடான தொகையினை, வங்கி கணக்கில் பழைய நோட்டாக இருப்பினும் செலுத்த முடியும்.

அதேவேளையில்,கையிருப்பு தங்கம் முழுவதும் விற்று முடிக் கப்பட்டுவிட்டபின், புதிதாக
தங்கம் கொள் முதல் செய்யும்போது,பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை செலுத்த முடியாது என்பதை யும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருப்பினும், மேற்கண்ட 'பிசினஸ்'சில், நகைத்தொழிலுடன் தொடர்பில் இருக்கும் மிகச்சிலர் ஈடுபட்டுள்ளனர். பிறர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை.கறுப்பு பணத்தை வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

'கறுப்பு பண பதுக்கல்காரர்கள், தாங்களாக முன்வந்து, தங்களிடம் இருக்கும் பணத்தின் மதிப்பை காட்டி, 47 சதவீத வரியை செலுத்தலாம். இந்த பணத்தை எப்படி சம்பாதித்தோம் என்பது பற்றியெல்லாம் தெரிவிக்க வேண்டியதில்லை' என, தெரிவித்தது. இத்திட்டத்தில், சேர்ந்தவர்கள் மிகச்சிலரே.

'ஒவ்வொரு முறையும், மத்திய அரசில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் இவ்வாறு தான் மிரட்டுகிறார்கள்; இதை 'சீரியஸ்' ஆக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை' என்றே, பலரும் அலட்சியமாக இருந்துவிட்டனர். சிலர், மத்திய அரசின் திட்டத்தை ஏற்று, கறுப்பு பணத்தை கணக்கில் காண்பித்தார்கள். அதற்குண்டான வரியினை செலுத்த மத்திய அரசு, ஓராண்டு கால அவகாசமும் அளித்திருக்கிறது.

மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று, அன்று கணக்கு காண்பித்தவர்கள், இன்று நிம்மதியாக இருக்கிறார்கள். ஒரு கோடி ரூபாயில், 47 லட்சம் அரசுக்கு போனாலும், 53 லட்சம் மிஞ்சு கிறது. ஆனால் இன்று, கறுப்பு பண கணக்கு காண்பிக்காதவர்களின் நிலையோ பரிதாபம். பதுக்கி வைத்திருக்கும் ஒட்டுமொத்த பணத் தின் மதிப்பும் போய்விட்டது. துாக்கமிழந்து தெருத்தெருவாக அலைகிறார்கள்.

தங்களுக்கு அறிமுகமான வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் வங்கி அதிகாரிகளின் உதவியை நாடுகிறார்கள். தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு, இனி என்ன செய்ய முடியும்?

'டாஸ்மாக்'கில்நள்ளிரவு 'பண மாற்றம்'


கோவையில் பணியாற்றும் 'டாஸ்மாக்' பணியாளர்கள் சிலர் கூறியதாவது:மதுவிற்ற பணத்தை வங்கியில் செலுத்தும் முன், எங்களுக்கு ஒரு வாய்மொழி உத்தரவு வந்தது, 'பணத்தை அப்படியே வைத்திருங்கள்' என்று. எதற்கு இப்படி கூறினார்கள் என, தெரியாமல் குழம்பிப் போனோம்.

அதற்கான விடை அடுத்த சில மணி நேரங்க ளில் கிடைத்தது. முக்கிய புள்ளி ஒருவரின் பெயரிலான நபர்கள், 1,000, 500 ரூபாய் நோட்டு களுடன் டாஸ்மாக் கடைகளுக்கு, வாகனங் களில் பரபரப்புடன் வந்தார்கள்.

அவர்கள் கோவை, திருப்பூர், நீலகிரி கடை களுக்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் சென்றிருக்கக்கூடும். தாங்கள் கொண்டு வந்திருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுகளை எங்களிடம் கொடுத்துவிட்டு, அதற்கு ஈடான மதிப்பில் 100, 50 ரூபாய் நோட்டுக்களை வாங்கிச் சென்றுவிட்டார்கள். 'அவர்கள் வந்ததும் தெரியாது; போனதும் தெரியாது' என சொல்லுமளவுக்கு, அவ்வளவு வேகம்,

அவர்களது நடவடிக்கையில்.வந்த நபர்கள் யார், அனுப்பியது யார், பணத்தை எங்கு கொண்டு போனார்கள் என்றெல்லாம் எங்களுக்கு தெரியாது. இந்த பண மாற்று சம்பவம், டாஸ்மாக்கில் மட்டுமல்ல; அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் நடந்ததாக கூறப்படுகிறது.

சிலர், தங்களது நட்பு மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி, தங்க வியாபாரிகளிடம், பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, தங்கக் கட்டிகள் வாங்கியுள்ளனர்.

மத்திய அரசின் முடிவுக்கு உயர் நீதிமன்றம் வரவேற்பு: ரூ.500, ரூ.1000 செல்லாது என்பதை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல் லாது என மத்திய நிதி அமைச்ச கம் வெளியிட்டுள்ள அறிவிப் பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தியன் நேஷனல் லீக் மாநில பொதுச் செயலர் எம்.சீனிஅகமது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடும்போது, “முன்னேற்பாடு நடவடிக்கைகள் இல்லாமல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் சிரமத் துக்கு ஆளாகியுள்ளனர். புதிதாக 2000 ரூபாய் நோட்டு வெளியிட்டி ருப்பது இந்திய ரிசர்வ் வங்கி சட்டத் துக்கு விரோதமானது” என்றார்.

தவறில்லை

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், “5, 10, 50, 100, 1000 என ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம். புதிதாக ரூ.2000 நோட்டு வெளியிடுவதில் தவறில்லை. 1946, 1978 ஆண்டு களில் இதுபோல் ரூபாய் நோட்டு கள் செல்லாது என அறிவிக்கப் பட்டுள்ளது” என்றனர்.

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிடும் போது, “ரூபாய் நோட்டுகளை செல்லாது என்பதும், புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதும் மத்திய அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது” என்றார்.

கள்ள நோட்டுகள்

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவிப்பு வெளியிட்டபோது, இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கறுப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகள் அச்சிடுவதைத் தடுக்கவும், ஊழலை ஒழிக்கும் நோக்கத்திலும், பயங்கரவாதத்துக்கு கள்ள நோட்டுகளை பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த நோக்கத்தில் கொண்டுவரப் பட்டுள்ள இத்திட்டம் வரவேற்கத் தக்கது.

இந்தியாவில் அதிக அளவு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், போதைப் பொருள் கடத்தலுக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் கள்ள நோட்டுகள் பயன்படுத்தப்படு வதாகவும், இதனால் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ளது. இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டதில் அரசிய லமைப்பு சட்டம் உட்பட எந்த சட்டத்தையும் மத்திய அரசு மீறவில்லை. இதனால், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டியதில்லை. சிரமங்கள் தற்காலிகமானது. இதை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலை யிட முடியாது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை முழுமையாக ஏற்காவிட்டா லும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடு வது நல்லதல்ல. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்த தகுதியுடன் இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

NEWS TODAY 24.05.2026