Tuesday, November 29, 2016

நவம்பர் 29: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பகிர்வு...

நவம்பர் 29: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பகிர்வு...

நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்

டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும், கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.

நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்

திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு "இவன் என் நாடக கம்பெனி ஆள் !"என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.

சீர்திருத்த கருத்துகளை படங்களில் இயல்பாக கொண்டு சேர்த்தார் அவர். தன்னுடைய நிலம் முழுவதையும் ஊர் மக்களுக்குப் பொதுவாக்கி, கூட்டு உழைப்பால் கிடைக்கும் பலனை ஊர் மக்கள் ஒற்றுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நல்லத்தம்பி படத்தில் வலியுறுத்தினார். தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்தும் அவர் குரல் கொடுத்தார். கிந்தனார் நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். இது எதுவும் அறிவுரை போல இருக்காது என்பது தான் கலைவாணரின் முத்திரைக்கு சான்று

அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே.

என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன்; உன்னை நான் இப்படி நடி அப்படி நடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுடச் சொன்னார் ராதா .

என்.எஸ்.கே., லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை ஸ்ரீநடராஜா கல்விக் கழக இலவச வாசகர் சாலையில் பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்



என்.எஸ்.கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்டபொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே
பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி

"நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? "என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.

அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் . ” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நாற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு

ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டுத்தான் அவரின் மூச்சு ஓய்ந்தது. தன் மனைவி மதுரத்திடம் இப்படிச்சொன்னார் ,"நான் ஐம்பது வயசுக்குள்ள இறந்துடணும் மதுரம். ஒரு கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும் !" என்று

சொன்னபடியே நாற்பத்தி ஒன்பது வயதில் மரணமடைந்தார்.

குறள் இனிது: உடனடி வளர்ச்சியும் நீண்டகால வளமையும்...

சோம.வீரப்பன்

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை (குறள்: 512)


பல மேலாளர்கள் தம் நிறுவனத்தில் டக் டக் கென்று விற்பனையில் வளர்ச்சியைக் காண் பித்து நல்ல பெயர் வாங்கி விடுவார்கள். ஆமாம், அதெல்லாம் இந்த துரித உணவு போலத்தான்!

ஆனால் சில பணியாளர்களோ அந்நிறுவனத் திற்குத் தற்காலிகமாக இல்லாமல் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு விற்பனையுடன் லாபமும் அதிகரிக்கும்படியான வழிவகைகளைச் சிந்தித்து, அதற்காகச் செயல்படுவார்கள்.

ஆமாங்க. கீரைச்செடி போன்றவை சீக்கிரமே பலன் கொடுக்கலாம்.ஆனால் ஒரு முறை தானே! தென்னைமரம், மாமரம் போன்றவை காய்க்க நாளாகலாம்.ஆனால் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பலன் கிடைக்குமே!

நான் வங்கியில் பணிபுரிந்த போது இரு வகையினரையும் பார்த்து இருக்கிறேன். நம்ம குமார் போன்றவர்கள் வருடம் முழுவதும் தூங்கி விட்டு மார்ச், செப்டம்பரில் மட்டும் படு சுறுசுறுப்பாகி விடுவார்கள்!

கடைசி நேரத்தில் யார் காலிலாவது விழுந்து, சாளர அலங்காரம் (window dressing) செய்து விடுவார்கள்! நீங்களும் அனுபவப்பட்டு இருப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் அவர்களது ஓவர் டிராஃப்ட் கணக்கிலிருந்து தொகையை எடுத்து சும்மா சிறிது நாட்களுக்கு நடப்புக் கணக்கிலோ சேமிப்புக் கணக்கிலோ வைக்கச் சொல்லி நச்சரிப்பார்கள்.

எங்குமே வளர்ச்சி என்பது வெறும் கண்துடைப்பாக இருக்கக் கூடாதில்லையா? வங்கிகளில் நிலைத்து நீடிக்கும் வளர்ச்சிக்கு வித்திடுபவர்களும் இல்லாமல் இல்லை. எனது நண்பர் ஒருவர். தான் கிளையில் பொறுப்பு எடுத்தவுடன் தமது கணக்கைச் செயல்பாட்டில் வைத்துக்கொள்ளாத வாடிக்கையாளர்களைப் பட்டியலிட்டுத் தொடர்பு கொள்வார். அவர்களின் ஆட்சேபங்களுக்கெல்லாம் பொறுமையாய் பதில் சொல்லி மீண்டும் எங்கள் சேவையைப் பயன்படுத்துங்கள் என்று அவர் கேட்கும் தோரணையே வெற்றி தந்து விடும்!

எந்தப் பிரச்சினை வந்தாலும் அஞ்சி ஓடாமல் எதிர்கொள்வார். அதாங்க, ஆங்கிலத்தில் trouble shooter என்பார்களே. ஒவ்வொரு பிரச்சினையும் ஒரு தீர்வுடன் தான் பிறக்கிறது என்பது அவரது நம்பிக்கை ! எந்த ஊரிலும் மாநகராட்சி மற்றும் அரசாங்கத்தின் பல துறைகளின் கணக்குகளைத் திறக்க பெரும் முயற்சிகள் எடுப்பார். அதற்கு நீண்ட நடைமுறைகள் இருக்கும். நம்மவர் சளைக்க மாட்டார்!

இம்மாதிரிக் கணக்குகளைத் தொடங்குவது சிரமமாக இருக்கலாம். ஆனால் பின்னர் யார் வரி கட்டினாலும் அதுபாட்டுக்குக் கூடிக் கொண்டே போகுமே! தற்பொழுது ,ரூபாய் நோட்டு விவகாரத்திற்குப் பின் பலமடங்கு அதிகரித்த நகராட்சிகளின் வரி வசூல் ஞாபகம் வருகிறதா?

‘நீங்கள் ஓடும் திசை சரியாக இருந்தால்தான் உங்கள் வேகத்தினால் பலன் உண்டு' என்கிறார் மேலாண்மை குரு ஜோயல் பார்க்கர்!

நண்பர் வங்கிக்கு வர்த்தகம் பெருக ,புதுப்புது வழிகளை உண்டாக்க முயலுவார். ஒரு முறை ஒரு பள்ளியில் மாணவிகளுக்குச் சேமிப்பு விழா நடத்தி சில ஆயிரங்களில் ஆரம்பித்தது இன்று அச்சிறுமிகளுடன் பல கோடிகளாய் வளர்ந்துள்ளது! வற்றாத ஊற்றுக்களைத் தேடிப்பிடிப்பவர்கள் தானே நல்ல பணியாளர்கள்! வருவாயைப் பெருக்குவதுடன், தடைகளைத் தகர்த்து தொடர்ந்து பலனளிக்கும் நடவடிக்கைகளை எடுப்பவர்களையே பணியிலமர்த்த வேண்டுமென்கிறார் வள்ளுவர்!

சிரிக்க வைத்தவரின் குடும்பத்தில் சிரிப்பு இல்லை

என். சுவாமிநாதன்

நாகர்கோவிலின் அடையாளங்களில் ஒன்று ‘மதுர பவனம்’. மறைந்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீடுதான் அது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கான்கிரீட் வீடும் அதுதான். கம்பீரமான அந்த வீட்டை இப்போது புனரமைக்கக் கூட வசதியின்றி தவிக்கின்றனர் கலைவாணரின் வாரிசுகள்.

நாகர்கோவில், ஒழுகினசேரி யில் பிறந்த, நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ் ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. தனது தொடக்க காலங்களில் நாடகக் கொட்டகையில் சோடா விற்பனையாளராகவும், டென்னிஸ் கிளப்பில் பந்து பொறுக்கி போடுபவராகவும், வில்லுப்பாட்டு மற்றும் நாடக கலைஞராகவும், பல தொழில்கள் செய்து, தனது திறமையால் திரைத்துறைக்குள் வந்தவர் என்.எஸ்.கே.

திரைப்படங்களில் நகைச்சுவை யுடன், கருத்துகளையும் விதைத்த வருக்கு ‘கலைவாணர்’ என்று பட்டம் கொடுத்தவர் பம்மல் கே.சம்பந்த முதலியார். ஈகை பண்பிலும் என்.எஸ்.கே. சிறந்தவர். அப்படிப்பட்டவரின் வீடு இன்று குடும்பத்தினரின் வறுமையால் கவனிப்பாரின்றி கிடக்கிறது.

அண்ணா, எம்ஜிஆர் தங்கினர்

என்.எஸ்.கிருஷ்ணனின் மருமகள் உமைய பார்வதி கூறும் போது, ‘‘நாகர்கோவிலில் ‘இன்ப கனவு’என்ற நாடகம் நடந்த போது, சென்னையில் இருந்து நடிகர்கள் வந்திருந்தனர். நாடகத்தைப் பார்க்க எம்ஜிஆரும் வந்திருந்தார். அப்போது இந்த வீட்டில் எம்ஜிஆர் 12 நாட்கள் தங்கியிருந்தார். ஒரே மக்கள் கூட்டம். மாடியில் இருந்து ரசிகர்களைப் பார்த்து எம்ஜிஆர் கையசைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாவும் இங்கு வந்துள்ளார். அவர் படுத் திருந்த கட்டிலை, அவர் ஞாபக மாக இப்போதும் பராமரித்து வருகிறோம்.

உலகத்திலேயே 2 நகைச்சுவை நடிகர்களுக்குத்தான் சிலை உண்டு. ஒன்று சார்லி சாப்ளின், மற்றொன்று கலைவாணர். எம்ஜிஆர்தான் நாகர்கோவிலில் கலைவாணருக்கு சிலை வைத் தார். காந்தியின் மீது அதிக பற்று கொண்டவர் கலைவாணர். காந்தி இறந்த செய்தி கேட்டு 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்தார். நாகர்கோவில் பூங்காவில் காந்தி நினைவு ஸ்தூபி அமைத்தார்.



மாமாவோட, காலத்துக்கு பின், என் கணவர் என்.எஸ்.கே.கோலப் பனுக்கு திரைத்துறையில் நடிக்க எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். பெரிய இடத்து பெண், பணக்கார குடும்பம் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை நடிகராக வந்தார். ஆனால், இளவயதிலேயே என் கணவர் இறந்து விட்டார். அவர் இறந்த 22-வது நாளில் எம்ஜிஆரும் மறைந்தார்.

எங்கள் வீட்டில் இறப்பு நடந்து 41 நாட்கள் ஆகாததால் போகக்கூடாது என பலர் சொன்னார்கள். ஆனால், நாங்கள் ஊருக்குத் தெரியாமல் குடும்பத்தோடு சென்று எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தினோம்.

கலைவாணரும், என் கணவரும் இறந்த பின் எங்கள் குடும்பம் வறுமையில் விழுந்தது. எனக்கு 3 ஆண், 2 பெண் பிள்ளைகள். பிள்ளைகளும் தாத்தா, அப் பாவைப் போல சினிமா துறையில் வர வேண்டும் என முயற்சிக் கின்றனர். ஆனாலும் ஜொலிக்க முடியவில்லை. உண்மையான பேரன்களுக்கு இன்னும் திரைத் துறை கனவாகவே உள்ளது’’ என்றார்.

ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

சில ஆண்டுகளுக்கு முன்பு கலைவாணர் குடும்பம் கஷ்டப்படுவது குறித்து நடிகர் ரஜினிக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர் மறைந்த நகைச்சுவை நடிகர் வி.கே.ராமசாமி மூலம் இக்குடும்பத்தை தொடர்புகொள்ள சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் ஏனோ உதவியை மறுத்து விட்டனர்.

கமல்ஹாசன் கலைவாணர் மீது அதீத பற்று கொண்டவர். இப்போதும் என்.எஸ்.கே. குடும்பத்தினர் சென்னை சென்றால் கனிவோடு விசாரிப்பாராம். 5 ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டுக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வந்துள்ளார். வீட்டை வாசலில் இருந்து பார்த்ததுமே கண்கலங்கியுள்ளார்.

இன்று கலைவாணர் பிறந்த நாள்

Monday, November 28, 2016

பொண்ணுங்க எப்போல்லாம் அழகா இருப்பாங்க தெரியுமா?


vikatan.com

பசங்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு பொண்ணுங்கள கொஞ்சம்கூட வெட்கப்படாம பார்க்குறவங்க. இன்னொண்ணு பொண்ணுங்களுக்கே தெரியாம திருட்டுத்தனமா வேடிக்கை பார்க்குறவங்க. ஏன்னா பொண்ணுங்கள ரசிக்காத பசங்களே கிடையாது. அப்படி ரசிக்கும்போது பெண்கள் பேரழகா தெரியும் தருணங்கள் எவையெல்லாம் தெரியுமா?

* தமிழ்நாட்டுல மழைக்காலத்துலயும் வெயில் அடிக்கும்கிறது உலகம் அறிஞ்ச விஷயம். கொளுத்துற வெயில்ல கூட்டம் அதிகமான பஸ்ல ஏறிட்டு கர்சீஃப் எடுத்து வியர்வையைத் துடைச்சிட்டு, அதே கர்சீஃப்பை விசிறியாக்கி விசிறும்போதுகூட பொண்ணுங்க அவ்வளவு அழகு பாஸ்! அடிக்கிற சம்மர்ல இதெல்லாமா ரசிப்பீங்கங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது.

* தெருவுல நடந்து போற வழியில் இருக்கிற எல்லாக் கோயில் வாசலைக் கடக்கிறப்பவும், கண்ணை மூடி ரெண்டு விரலை மட்டும் எடுத்து நெத்தியில் வெச்சுட்டு அப்புறமா அதே விரல்களை கிஸ் பண்றதைப் பார்த்ததுக்கு அப்புறமா 'கடவுள் இருக்கான் கொமாரு'-ன்னு மாறுன பசங்களோட எண்ணிக்கை அதிகம்.

* கீழே குனிஞ்சு தெருவையே வெறிக்க வெறிக்கப் பார்த்துட்டு வர்ற பொண்ணுங்க, நாம கிராஸ் ஆகிறப்போ மட்டும் சொல்லி வெச்ச மாதிரி சைடு லுக் விட்டுக்கிட்டே தலைகோதி, பசங்களுக்கு ஆயிரம் டன் மின்சாரத்தை பாய்ச்சுவாங்க பாருங்க! அந்த டைம்ல பசங்க மனசுல சேதாரமே இல்லாம ஒரு விபத்தே நடக்கும்.

* ஏதாவது சண்டை வந்தா கோபமும், கண்ணு கலங்கி ரெண்டு மில்லி லிட்டர் அழுகையும் சேர்த்துப் பேசுவாங்க. வேற வழியில்லாம நம்மப் பசங்க ஸாரி கேட்டு சரண்டர் ஆவாங்க. அந்நேரம் வலியே வராத அளவுக்கு சின்னதா ஒரு அடி அடிக்கிறப்போ பொண்ணுங்க பேரழகு பாஸ்.

* தப்பித்தவறி கோயில் பக்கம் போனா... நெய் விளக்குப் போடுற இடத்துல வலம் வர்ற பொண்ணுங்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவுல தெரியுற ஹீரோயின் மாதிரி எக்ஸ்ட்ரா அழகோட தெரியுறதைக் கவனிச்சதுண்டா? அதே மாதிரி மோதிர விரல்ல பட்டும் படாம குங்குமத்தை எடுத்து வெச்சுக்கிற அழகை நாள் முழுக்கப் பார்த்துக்கிட்டு இருக்கலாம்னு பசங்களுக்குத் தோணும்.

* எங்கேயோ பார்க்கிற மாதிரி பசங்க பக்கம் திரும்பும்போது கண்ணும் களவுமா மாட்டிக்கிட்டா டக்குனு வேற பக்கம் திரும்பறதுக்கும், மிரட்சி கலந்து சின்னதாப் பொண்ணுங்க சிரிக்கிறதுக்கும் ஆயிரம் லைக்ஸ் தாராளமாப் போடலாம். ஆண்கள என்ன கொடுமைப்படுத்தினாலும் இந்தக் காரணங்களால மன்னிச்சு விட்றலாம்.

* ஏதாவது கேள்வி கேட்டாலோ இல்லை கலாய்ச்சாலோ... ஒரேயொரு புருவத்தைச் சுருக்கி முறைக்கிற பார்வையாலே 'போடா டேய்' அப்படிங்கிறதைக் கண்ணாலேயே பேச பொண்ணுங்களால மட்டும் எப்படித்தான் முடியுதோ? இதையே பசங்க பண்ணா... மைண்ட் வாய்ஸ்ல யோசிக்கிற வடிவேலுவா தெரிவாங்கங்கிறது வேற விஷயம்.

* வேலைக்கு நடுவுல மானிட்டரை வெறிச்சுப் பார்த்துக்கிட்டே இல்லாத நகத்தைக் கடிக்கிறதுலேருந்து... சூடே இல்லாத காபியை ஊதி ஊதிக் குடிக்கிறதுவரை பொண்ணுங்க பண்ற எல்லாமே மொத்தத்துல அழகுதான் ஜி!



- கருப்பு

இன்னும் என்ன செய்யப்போகிறீர்கள் மிஸ்டர் மோடி? சாமானியனின் குரல்

vikatan.com

பெருந்தொகை ரூபாய் நோட்டுக்கும், சில்லறை நோட்டுக்குமான பிரச்னையில் சிக்கித்தவிக்கிறார்கள் சாமானிய மக்கள். 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்ற அறிவிப்பு, கிட்டத்தட்ட சாமானிய மக்களை முடக்கி போட்டுள்ளது. கடந்த 8ம் தேதி இரவு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டின் சரித்தரத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கு முக்கியமான பங்கு வகிக்கும் தருணங்கள் அரிதாகவே வரும். அப்படியான சந்தர்ப்பம் தான் இது. மக்கள் சில கஷ்டங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். இரு தினங்களில் நிலைமை சீராகும்," என பேசினார்.

"செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில், புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும். இரு தினங்களில் நிலைமை சீரடையும். பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்.நவம்பர் 25ம் தேதி வரை 4 ஆயிரம் பணம் எடுக்கலாம். அதன் பின்னர் அது மாற்றியமைக்கப்படும்," எனவும் மோடி தெரிவித்திருந்தார்.

2 நாட்கள் இப்போது 20 நாட்களாகி விட்டன. ஆனால் நிலைமை சீரடையவில்லை. சொல்லப்போனால் மிகவும் மோசமாகிக்கொண்டே போகிறது. பிரதமர் மோடி சொன்னது ஒன்று. ஆனால் இப்போது நடப்பது ஒன்று. அரசின் மிக மோசமான திட்டமிடலால் சாமானிய மக்கள்சொல்ல முடியாத சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.



மோசமான இந்த 20 நாட்கள்...

டிசம்பர் 30ம் தேதி வரை பணத்தை மாற்றிக்கொள்ளலாம். நவம்பர் 25ம் தேதி வரை ஒருவர் 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே மாற்ற முடியும் என்று தெரிவித்திருந்தார் மோடி. நவம்பர் 25ம் தேதிக்கு பின்னர் இந்த வரம்பு உயர்த்தப்படும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் 'நவம்பர் 25ம் தேதி வரை மட்டுமே மாற்ற முடியும். அதன் பின்னர் வங்கிகளில் மாற்ற முடியாது' என அறிவித்து விட்டார்.

உங்களிடம் சில 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருக்கிறது என்றால் அதை மாற்ற நீங்கள் ரிசர்வ் வங்கிக்கு செல்ல வேண்டும்.ஒரு நாளைக்கு 2 ஆயிரம் தான் தரப்படும். நெருக்கடியான சூழலை சொன்னால், அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாயை பெறலாம். கோயமுத்தூரில் இருந்து உங்களிடம் உள்ள 2 ஆயிரத்தை மாற்ற நீங்கள் சென்னை வந்து சென்றால் உங்களுக்கு மிக குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் செலவாகும்.

திருவாரூரில் இருந்து வந்த ஒருவர் ரிசர்வ் வங்கியில் தன்னிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, 10 ரூபாய் நாணயங்கள் 200ஐ வாங்கி சென்றிருக்கிறார். "நான் இங்கு வந்த ரயில் கட்டணம், உணவு எல்லாம் சேர்த்து ஆயிரத்துக்கும் மேல் செலவாகி விட்டது. என்னுடைய உழைப்பு விரையமாகி இருக்கிறது. 30ம் தேதி வரை மாற்றலாம் என்றார்கள். இப்போது ரிசர்வ் வங்கியில் தான் மாற்ற முடியும் என சொல்லி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது' என்றார்.



வங்கிகளிலேயே பணமில்லை

மறுபுறம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தையும் எடுக்க முடியவில்லை. ஏனென்றால் வங்கிகள் பணமில்லை. நிலைமை சீரடைய 2 நாட்கள் எனச்சொன்னது இப்போது 50 நாட்கள் ஆகியிருக்கிறது. ஏற்கனவே 20 நாட்கள் கழிந்து விட்டது. ஏ.டி.எம்., வங்கி என எங்கும் பணமில்லை. புதியதாக வருவதாக சொல்லப்பட்ட ரூ.500 பணம் இன்னும் பெரும்பான்மை மக்களை சென்று சேரவில்லை.

செயல்பாட்டில் இல்லை என ஏ.டி.எம். மையங்களும், பணமில்லை என வங்கிகளும் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டிருக்கின்றன. ஏ.டி.எம். மையங்களில் அறிவித்த நாள் முதல் இந்த நிலை தான் என்பதால் அதைப்பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் வங்கிகளிலேயே பணமில்லை என்றால், நிலைமையின் விபரீதம் அதிர்ச்சியளிக்கிறது.

என்ன தான் நடக்கிறது என சாமானிய மக்களுக்கு புரியவில்லை. புரியவைக்கவும், சாமானிய மக்களின் பிரச்னைகளை தீர்க்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லை.



தொடர் பரிதவிப்பில் சாமானியர்கள்

பிரதமர் மோடி அறிவித்த போது 'கறுப்பு பணம் ஒழியும், கள்ள நோட்டுகள் இனி இருக்காது. ஊழல் என்பது காணாமல் போய் விடும்' என்றே சாமானியர்கள் நினைத்தார்கள். நம்பினார்கள். சொல்லாப்போனால் இன்னும் பெரும்பான்மையானோர் நம்புகிறார்கள். ஆனால் இந்த 20 நாட்களில் இவையெல்லாம் சாத்தியம் தானா என்ற கேள்வி எழுந்துள்ளதை மறுக்க முடியவில்லை. எந்த பணக்காரர்களும் வங்கியில் வரிசையில் நின்று பணத்தை செலுத்தவில்லை. 'கணக்கில் வராத பணம் ரூபாய் நோட்டுகளாக இல்லை. பெரும்பகுதி தங்கமாக, ரியல் எஸ்டேட்களில் முடங்கி இருக்கிறது. இதனால் பெரும் பலன் கிடைக்கப்போவதில்லை' என்ற பேச்சு பரவலாக கேட்கத்துவங்கியுள்ளது.

இந்த 20 நாட்களில் பல இடங்களில் புதியதாக வந்த 2000 ரூபாய் நோட்டின் கள்ள நோட்டுகள் வரத்துவங்கி விட்டன. 'ஆயிரம் ரூபாயை ஒழித்து விட்டு, 2 ஆயிரம் ரூபாய் கொண்டு வருவது ஊழலை எப்படி ஒழிக்கும். ஊழல் செய்த பணத்தை பதுக்குவதை இது எளிதாக்கத்தானே செய்யும்' என்ற கேள்வியையும் எளிதாக கடந்து செல்ல முடியவில்லை.

ஆனால் இன்னும் பொறுமையோடு தான் இருக்கிறான் சாமானியர்கள். 'கையில் பணமில்லை. அத்தியாவசிய செலவுகளை கூட செய்ய முடியவில்லை. வேலை இல்லை. தொழில் முடங்கி விட்டது' என ஏராளமான சிரமங்களுக்கிடையே விரைவில் பிரச்னை சரியாகும் என்று பொறுமையோடு காத்திருக்கிறார்கள் சாமானியர்கள்.

"இது மிகவும் முக்கியமான பிரச்சனையாகும். மக்கள் பாதிக்கப்பட்டு வேதனையில் இருக்கிறார்கள். ஒருவேளை நாட்டில் கலவரமே வெடிக்கலாம்" என உச்சநீதிமன்றமே கவலைப்பட்டது. ஆனால் அரசிடம் அந்த கவலை இருப்பதாக தெரியவில்லை.



2 நாட்கள் ஏன் 50 நாட்கள் ஆனது?

8ம் தேதி இரவு தான் இந்த பொருளாதார சீர்த்திருத்த முடிவை அறிவித்தார். 9ம் தேதி வங்கி இருக்காது. 9,10 தேதிகளில் ஏ.டி.எம். மையங்கள் இருக்காது. 10ம் தேதி முதல் வங்கிகளிலும், 11ம் தேதி முதல் ஏ.டி.எம்.களிலும் நீங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். நவம்பர் 25ம் தேதி வரை வங்கியில் தினமும் 4 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக்கொள்ளலாம். ஏ.டி.எம். மையத்தில் தினம் 2,500 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தார். இருநாளில் சிரமம் சீராகும் என்றார்.

ஆனால் சொன்னபடி 2 நாளில் பிரச்னை சரியாகவில்லை. வங்கிகள், ஏ.டி.எம். முன்னால் கால் கடுக்க காத்திருந்தார்கள் மக்கள். நிலைமை எப்போது சீராகும் என்ற கேள்வி பரவலாக எழுந்த போது, 'நிலைமை சீரடைய 2,3 வாரங்கள் ஆகலாம்' என்றார் நிதியமைச்சர். ஆனால் ஒரு படி மேலே சென்று இன்னும் 50 நாட்கள் ஆகும் என்றார் பிரதமர் மோடி.

மக்களின் பாதிப்புகள் குறித்த பல கேள்விகளுக்கு அரசிடம் பதில் இல்லை. இது தொடர்பான விரிவான விளக்கத்தை வலியுறுத்திய போதும் அரசிடம் இருந்து எந்த விளக்கமும் கிடைக்கப்பெறவில்லை. "500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு தொடர்பாக விரிவாகப் பேசுமாறு என்னை சிலர் தொடர்ந்து நெருக்கி வருகின்றனர். நான் முன்பு சொன்ன அதே கருத்தையே திரும்பக் கூறுகிறேன். 50 நாட்கள் நான் அவகாசம் கேட்டுள்ளேன். அதன் பிறகு இதுகுறித்து விரிவாகப் பேசுவேன்," என்கிறார் பிரதமர் மோடி. ஆனால் 50 நாட்கள் அல்ல. சில மாதங்கள் இந்த பிரச்னை என்பது தொடரத்தான் செய்யும் எனச்சொல்லி இருக்கிறார்கள் வங்கி ஊழியர்கள்.



ஒத்திவைக்கப்பட்ட திருமணங்கள்

500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பல திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. திருமணங்கள் நின்று போன நிகழ்வும் கூட நடந்திருக்கிறது. குஜராத்தில் 500 ரூபாயில் தண்ணீரும், டீயும் மட்டும் கொடுத்து ஒரு திருமணம் நடந்தது. திருமண வீடுகளில் இருக்க வேண்டி மகிழ்ச்சி முற்றிலும் மறைந்திருந்தது. இதையும் பெருமையாகவே சொன்னார் மோடி. "குஜராத் மாநிலம் சூரத்தில் 500 ரூபாய்க்குள் ஒரு திருமணம் நடந்ததை அறிந்தேன். வெறும் டீ விருந்துடன் அது முடிந்துள்ளது. மக்கள் இதுபோலத் தியாகங்கள் செய்வது என்னை நெகிழ வைக்கிறது," என தெரிவித்தார். அதே நேரத்தில் 500 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவில் நடந்த ரெட்டி குடும்ப திருமணத்தை பற்றி பேச அவர் மறந்து விட்டார் அல்லது மறைத்து விட்டார்.

திருமணம் நடக்கும் வீடுகளுக்கு 2.5 லட்சம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிப்பு உள்ளதே என கேட்க கூடும். ஆனால் அதற்கான விதிமுறைகள் என்னவென தெரியுமா?. வங்கியில் நீங்கள் 8ம் தேதிக்கு முன்னர் போடப்பட்ட தொகையை தான் எடுக்க முடியும்.கையில் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்து அதை இப்போது வங்கியில் டெபாசிட் செய்து எடுக்க முடியாது. அதற்கும் ஏகப்பட்ட விதிமுறைகள்.



திருமணத்துக்கு பணம் எடுக்க என்ன விதிமுறை தெரியுமா?

திருமண பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களோடு, நீங்கள் திருமண செலவுக்கு யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என்பதையும், அவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்பதற்கான ஆவணத்தையும் நீங்கள் சமர்பிக்க வேண்டும். திருமணத்தில் வாழை மரம் கட்டுபவர்கள் துவங்கி சமையல் செய்பவர்கள் என தின சம்பளத்துக்கு வருபவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்பதற்கான ஆவணத்தை கொடுத்தால்தான் உங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியும். இத்தனை ஆவணங்களையும் கொடுத்தால் கூட உங்கள் வங்கியில் இருந்து பணம் கிடைக்காமல் போகலாம். ஏனென்றால் பெரும்பாலான வங்கியில் பணமில்லை.

"எங்கள் மகளின் திருமணத்துக்காக வங்கியில் பணம் போட்டு வைத்திருந்தோம். திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து விட்டார்கள். கையில் இருந்த தொகையை மாற்ற முடியவில்லை. வங்கியில் இருக்கும் பணத்தையும் எடுக்க முடியவில்லை. எல்லா ஆவணங்களை சமர்பித்தும் பலனில்லை. பணம் கிடைக்கவில்லை. வழக்கமாக எங்கள் வீட்டு விசேஷத்துக்கு சமையல் செய்பவர்கள், நகை செய்யும் பொற்கொல்லரை நான் பயன்படுத்த முடியவில்லை. ரெடிமேடாக நகைகளை பெரிய கடைகளில் வாங்கினோம். வங்கி கணக்கை கையாளும் பெரிய சமையல் காரரை அணுகினோம். திருமண ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ளும் பெரிய நிறுவனத்திடம் ஒப்படைத்தோம். எங்கள் வீட்டு திருமண செலவு இதனால் இரட்டிப்பானது," தொலைக்காட்சியில் வெளிப்படையாகவே சொல்லி இருந்தார் சென்னையைச் சேர்ந்த மிடில் க்ளாஸ் நபர்.

இப்போது இந்த விதிகளை தளர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என சொல்லி இருக்கிறார் மத்திய நிதியமைச்சர். விதி தளர்த்தப்படும் என்று கூட அவர் சொல்லவில்லை.



பெரு நுகர்வு கலாச்சாரத்துக்கு தள்ளப்படுகிறோமா?

மறுபுறம் பெரு நுகர்வு கலாச்சாரத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். "பணப்பை வைத்திருந்த காலம் எல்லாம் போய் விட்டது. இனி மின்னணுப்பைக்கு மாறுங்கள். நீங்கள் உங்கள் செல்போனை வங்கிக்கிளையாக பயன்படுத்துங்கள். எப்படி செல்போனில் படம் எடுத்து நண்பர்களுக்கு அனுப்புகிறீர்களோ, அதே போன்று இதைச் செய்யுங்கள்" என சாதாரணமாக சொல்கிறார் பிரதமர் மோடி. நாட்டில் வங்கி கணக்கை கையாளதவர்கள் எண்ணிக்கை என்பது 45 சதவீதத்துக்கும் அதிகம். வங்கி கணக்குகள் இத்தனை கோடி புதியதாக துவங்கப்பட்டது என சொன்னாலும், அவை எல்லாம் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட். அவற்றில் மிகப்பெரும்பாலான கணக்குகள் பயன்பாட்டில் இல்லை. அப்படியே இருக்கிறது.

நம் நாட்டில் 80 சதவீதத்துக்கும் மேல் பண பரிவர்த்தனைகள் தான் நடக்கிறது. இன்னும் மின்சாரம் இல்லாத கிராமங்கள் இந்தியாவில் இருக்கின்றன என்பதை அரசு ஒப்புக்கொள்கிறது. செல்போனை பயன்படுத்த தெரியாத, வங்கி கணக்கை கையாளத்தெரியாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனால் இது எதைப்பற்றியும் கவலைப்படமால் ஒற்றை அறிவிப்பில் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்து விட்டார் மோடி.

நடுத்தர மக்களின் நிலை மிக மோசம். அவர்களை பெரு நுகர்வு கலாச்சாரத்துக்குள் தள்ளியுள்ளது. காய்கறி விற்பவர்கள் சிறிய மளிகை கடை நடத்துபவர்கள், டீக்கடை, சிறிய உணவகங்கள் என யாரிடமும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் இயந்திரங்கள் இல்லை. தினமும் காய்கறி வாங்க பெரும் டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்க்கும், உணவு உட்கொள்ள பெரு உணவகங்களுக்கும் செல்ல வேண்டிய சூழலை அரசு ஏற்படுத்தி இருக்கிறது. முடி திருத்துவதற்கு கூட பெரும் தொகை செலவிடும் அளவுக்கு பெரும் சலூன் நிறுவனங்களுக்கு செல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

பன்னாட்டு உணவகங்களும், குளிர்பானங்களும் இந்தியாவில் கால்பதித்த போது அவர்கள் சொன்னது, "இந்தியாவில் உள்ளவர்கள் வீட்டில் சாப்பிடுவதும், தண்ணீர் குடிக்கும் பழக்கங்களும் தான் எங்கள் தொழிலுக்கு எதிரி". இதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது. இப்போது பெரு நிறுவனங்களை நோக்கி மக்களை அரசே ஓட வைத்திருக்கிறது.



திட்டமிடல் இல்லாதது தான் காரணம்...

உலகத்திலேயே 85 சதவீத புழக்கத்தில் இருந்த பணத்தை செல்லாது என அறிவித்து எடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம் என்பது இந்தியாவில் தான். அதுவும் இப்போது தான். இவ்வளவு பெரிய சீர்த்திருத்தத்தை கையில் எடுத்த அரசு, இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து யோசிக்காதது ஏன் என தெரியவில்லை. புதிய ரூபாய் நோட்டுகள் வரவில்லை. வங்கி, ஏ.டி.எம்.களிலேயே பணமில்லை. இப்படி எந்த முன்னேற்பாடும் இல்லை.

பணமின்றி அல்லாடுகிறார்கள் மக்கள். 65க்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் நின்று மரித்துப்போய் இருக்கிறார்கள். 10க்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் இறந்து போய் இருக்கிறார்கள். வங்கி வாசலில் தங்கள் பணத்தை எடுக்க வருபவர்கள் மிக மோசமாய் தாக்கப்படுகிறார்கள். ஆனால் இது குறித்த எந்த கவலையும் அரசுக்கு இருப்பதாய் தெரியவில்லை.

ரூபாய் நோட்டுப் பிரச்சனையால் மக்கள் வங்கி, ஏடிஎம் வாசல்களில் நீண்ட வரிசையில் நிற்பதை பற்றி கேட்டால், 'எல்லையைப் பாதுகாக்க ராணுவ வீரர்கள், ஜவான்கள் நிற்கவில்லையா. அதை விட இது பெரியதா?' என கேட்கிறார். மக்கள் படும் கஷ்டங்களை பற்றி பேசினால் அவர்கள் கறுப்பு பணத்தை ஆதரிப்பவர்களைப்போல, தேச துரோகிகள் போல பார்க்கப்படுகிறார்கள்.

சற்றும் முன் யோசனை இல்லாமல் பண நடமாட்டத்தை நிறுத்தியதுதான் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முக்கிய காரணம். 85 சதவீத பணத்தை செல்லாது என அறிவிக்கும் போது, 80 சதவீதத்துக்கு மேல் பண பரிவர்த்தனைகள் செய்யும் நாட்டில் எப்படியான பாதிப்புகள் என்பதை யூகிக்க முடியும். புதிய நோட்டுகள் 2 நாளில் கிடைக்கும் என்றார்கள். 500 ரூபாய் நோட்டு இன்னும் வரவே இல்லை. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெருமளவு புழக்கத்தில் வரவில்லை. 100, 50 என செலவு செய்யும் மக்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்து என்ன செய்வது என தெரியவில்லை.



2 டிசைன்களில் புதிய ரூபாய் நோட்டுகள்

நாட்டில் சில பகுதிகளில் தான் 500 ரூபாய் நோட்டு கிடைக்கிறது. அதுவும் 2 டிசைன்களில். அரசு அச்சடித்து வெளியிட்டதே இரு வடிவங்களில் வெளியாக அதிர்ந்து போய் உள்ளார்கள் மக்கள். கள்ள நோட்டு என சந்தேகம் எழுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்க, தவறு நடந்து விட்டது. கள்ள நோட்டு என பயந்தால் அதை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது. ஆனால் இதில் எது சரி? எது தவறு என்பதை மக்கள் எப்படி உணர்வார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு இதுவரை ரூபாய் நோட்டு அச்சிடுவதில் தவறு நிகழ்ந்ததாக தெரியவில்லை. அதையும் இப்போது நிகழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே ரூபாய் நோட்டுகளே கிடைப்பதில்லை. இது போன்ற சூழலில் ரூபாய் நோட்டுகளை பெறவும் பெரும்பாலானோர் தயங்குகின்றனர். சில்லறை பிரச்னையால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.

'கறுப்பு பணத்தை ஒடுக்கும் போரில் சாமானியர்களே, முன்னணி படை வீரர்களாக இருக்கிறார்கள்' என்கிறார் பிரதமர் மோடி. முன்னணி படைவீரர்கள் தான் போரில் முதலில் பலி கொடுக்கப்படுகிறார்கள்' என்ற அர்த்தத்தில் அவர் சொன்னாரா தெரியவில்லை. ஆனால் படைவீரர்களை பலி கொடுக்கும் நிகழ்வாகத்தான் இது அமைந்திருக்கிறது.

சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது... சிலரேனும் மடியாமல் பகை வெல்ல முடியாது' என்கிறார்கள். அந்த சிலர் சாமானியர்களாக இருப்பது தான் வேதனை.

- ச.ஜெ.ரவி,

பழைய நோட்டுக்களால் பதறும் அமைச்சர்கள்! -மொத்தமாக முடங்கிய அரசு

vikatan.com

தமிழக அரசின் சார்பில் கோரப்பட்ட டெண்டர் பணிகளுக்கு பழைய ரூபாய் நோட்டுக்களில் கமிஷன் கொடுக்க முன்வருவதால், கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர் அமைச்சர்கள். ' பொதுப்பணி தொடங்கி பள்ளிக்கல்வி வரையில் பழைய நோட்டுக்களைப் பார்த்தாலே தெறித்து ஓடுகின்றனர். அரசின் பணிகளும் மொத்தகமாக முடங்கியுள்ளன' என வேதனைப்படுகின்றனர் ஒப்பந்ததாரர்கள்.

மத்திய அரசு அறிவித்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது அறிவிப்பால், சிறு வணிகர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியான சில நாட்களில், தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுக்களை டாஸ்மாக், ஆவின், போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் சில்லறை நோட்டுக்களாக மாற்றிக் கொண்டனர் சில அமைச்சர்கள். மூன்று தொகுதி தேர்தல்களுக்கும் தேவையான சில்லறை நோட்டுக்களும் அரசு நிறுவனங்களில் மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இதன்பின்னர், அரசு சார்பாக அறிவிக்கப்படும் பணிகள் உள்பட இதர வருமானங்களையும் 100 ரூபாய் மற்றும் புதிய நோட்டுக்களாகவே அமைச்சர்கள் கேட்கின்றனர்.

"வணிகவரித்துறை, சி.எம்.டி.ஏ, டாஸ்மாக் உள்பட அரசின் வளம் கொழிக்கும் துறைகளில் அன்றாடம் வர வேண்டிய கமிஷன் தொகையை, சில்லறை நோட்டுக்களாகவே அதிகாரிகள் வாங்கிக் கொள்கின்றனர். ஒவ்வொரு துறையின் முக்கியப் புள்ளிகளுக்கும் சில்லறை நோட்டுக்களாக பணத்தைக் கொடுத்துவிடுகின்றனர். அன்றாட வருமானத்தை குறிவைத்து, தனியார் யாரும் பயன்பெற்றுவிடக் கூடாது என்பதற்காக டாஸ்மாக், இந்து அறநிலையத்துறை உள்ளிட்ட துறையில், வங்கிகளில் செலுத்தும் தொகைகளுக்கான டினாமினேஷன்களை நகல் எடுத்து தலைமையத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அரசுத் துறைகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் பணத்தைக் கையாள்கின்றனர் ஊழியர்கள்.



"மின்வாரியத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக, கடந்த மாதம் பத்துக்கும் மேற்பட்ட கம்பெனிகளுக்குச் சேர வேண்டிய தொகைள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதற்குள் ரூபாய் நோட்டுக்கள் குறித்து அரசின் அறிவிப்பு வெளியாகிவிட்டதால், துறையின் முக்கியப் புள்ளிக்குச் சேர வேண்டிய தொகைகளை வழங்க முடியவில்லை. இதனால், வாரியத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதிகளையும் முடக்கி வைத்துவிட்டனர். இந்தப் பணிகளை எல்லாம், பல மாதங்களுக்கு முன்பே நிறைவு செய்துவிட்டனர். மின்வாரியத்தில் இருந்து நிதிகளை அளிக்காமல் இழுத்தடிப்பதால், ஒப்பந்ததாரர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை உள்பட பல துறைகளில் எந்த வேலைகளும் நடக்கவில்லை. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை யாருக்கு ஒதுக்க வேண்டும் என அமைச்சர்கள் முன்கூட்டியே முடிவு செய்துவிடுகின்றனர். அதற்கேற்ப, கமிஷன் தொகைகளும் முன்பே பெற்றுக் கொள்வது வழக்கமான நடைமுறை. நடப்பு பட்ஜெட்டில் அரசின் திட்டங்கள் தொடர்பான பணிகளுக்குக் கடந்த மாதம் டெண்டர்கள் விடப்பட்டன. இவற்றை உடனடியாக செய்து முடிப்பதில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுப் பணித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஆறு, குளம் தூர்வாருதல், புதிய கட்டடப் பணிகள், பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றுக்கான ஒதுக்கப்பட்ட நான்காயிரம் கோடி ரூபாய் வரையில் முடங்கியுள்ளன. காரணம். பழைய நோட்டுக்களில் கமிஷன் கொடுப்பதுதான்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர்.



"பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் கட்டடப் பணிகள், பராமரிப்புப் பணிகள், நாற்காலிகள், ஆய்வக உபகரணங்கள் ஆகிய பணிகள் அனைத்தும் அக்டோபர் மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இந்தப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 30 கோடி ரூபாயில் 6 கோடி ரூபாய் கமிஷனாகக் கொடுக்கப்பட்டுவிட்டது. இதில், சேலத்தைச் சேர்ந்த ஒருவர் 1.20 கோடி ரூபாயும் மூத்த அமைச்சர் ஒருவரின் உறவினர் 4.80 கோடி ரூபாயும் கொடுத்துவிட்டார். இந்தப் பணத்தை நல்ல நோட்டுக்களாக மாற்ற துறையின் புள்ளிகள் பட்டபாடு தனிக்கதை. வருகிற ஜனவரி முதல் வாரத்தில் அடுத்தகட்ட பணிகளை ஒதுக்கீடு செய்வதற்கான வேலைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ' புதிய நோட்டுக்கள் அல்லது 50, 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்' என அதிகாரிகள் உறுதியாகக் கூறிவிட்டனர். ஒப்பந்ததாரர்களும் சில்லறை நோட்டுக்களாக மாற்றும் வேலையில் முனைப்போடு இறங்கியுள்ளனர்.

நடப்பு ஆண்டில், நெடுஞ்சாலை, உயர்கல்வித்துறை, வேளாண்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன. இந்தப் பணிகளுக்காக துறையின் மூத்த அமைச்சர் ஒருவரை சந்தித்தனர் ஒப்பந்ததாரர்கள். அவர்களிடம் பேசிய அமைச்சர், ' பழைய 500, 1000 ரூபாய் என்றால், யாரும் கமிஷனை எடுத்துக் கொண்டு வர வேண்டாம். இதுதவிர, வேறு எந்த ரூபாய் நோட்டு என்றாலும், உடனே வரவும்' என நேரடியாகவே கூறிவிட்டார். மற்ற துறைகளின் அமைச்சர்களும் கெடுபிடியாக இருக்கின்றனர். இதனால், சில்லறை ரூபாய் நோட்டுக்களைத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. அதற்குள் யாராவது முந்திக் கொண்டு போய் புதிய நோட்டுக்களைக் கொடுத்துவிட்டால், அவர்களுக்கே பணிகளை ஒதுக்கீடு செய்துவிடுகின்றனர்" என ஆதங்கப்பட்டார் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர்.

புதிய ரூபாய் நோட்டுக்களின் வரவால் அமைச்சர்களின் அன்றாட பணிகள் முடங்கியுள்ளதாக குரல் எழுப்புகின்றனர் கோட்டை வட்டாரத்தில். ' வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்' என்கின்றனர் சில அதிகாரிகள்.


-ஆ.விஜயானந்த்

மாற்றத்திற்கான ஏஜெண்டுகளா இளைஞர்கள்?



சி.வெங்கட சேது

ரொக்கப் பணம் இல்லாத சமுதாயத்தை நோக்கி மக்கள் முன்னேற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், சமுதாயத்தில் இத்தகைய மாற்றத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு முகவர்களாக இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் உரை நிகழ்த்தியுள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றதும், ஏறக்குறைய மூடுவிழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்த அகில இந்திய வானொலிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். பிரதமரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை முன்கூட்டியே மக்கள் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, அந்தந்த மாதத்தில் அரசின் தலையாய பிரச்சினைகள் பற்றி பிரதமர் தனது கருத்துகளைப் பதிவு செய்வார். தற்போது, ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்கொண்டு வருவது ரூபாய் நோட்டு விவகாரம். அதுபற்றி அவர் என்ன கூறினார்?

நவம்பர் 27-ம் தேதி, ஞாயிறன்று 26-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ரொக்கப்பணம் இல்லாத இந்தியாவுக்கு மக்கள் மாற வேண்டும் என்ற உபதேசத்தை முன் வைத்தார்.

ரூபாய் நோட்டுகளை கையில் எடுத்துச் செல்லாமல், கடன் அட்டைகள், வங்கி டெபிட் அட்டைகளை மக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, அவர்களுக்கு அதற்கான பயிற்சியை இளைய சமுதாயத்தினர் அளிப்பதன் மூலம் இளைஞர்கள், பணமில்லா சமுதாயத்தை உருவாக்க ஏஜெண்டுகளாக செயல்பட வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மேலும் பேசியதாவது:-

"பணத்தைக் கொடுத்து பொருட்களை வாங்காமல், பணமில்லா சமுதாயத்தை, அதுபோன்றதொரு மாற்றத்தை உருவாக்குவதற்கு இந்திய இளைஞர்கள் முகவர்கள் ஆவர். வங்கிகள் அல்லது தனியார் நிறுவனங்களின் பாதுகாப்பான, உத்தரவாதமான (?) 'ஆன்லைன்'ங பணப் பரிவர்த்தனையை இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும். ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு முதியோருக்கு இளைஞர்கள் உதவுவதுடன், அதுதொடர்பாக அவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.

இளையோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 குடும்பங்களுக்காவது, பணம் இல்லாமல், எலக்ட்ரானிக் முறையில் பொருட்களை எப்படி வாங்குவது?- என்பது குறித்து கற்பிக்க வேண்டும்.

டிஜிட்டல் நிதிப் பரிவர்த்தனையின் சூட்சுமங்கள் குறித்து சாமான்ய மக்கள் அறிந்து கொண்டால், அவர்களுக்கு எவ்வித சிரமமும் இருக்காது. இளைஞர்கள் இதுபோன்ற பரிவர்த்தனைகளை மிக எளிதில் அறிந்து கொள்ள முடியும். சிறு வணிகர்கள், தங்களது வணிகத்தை பெருக்கிக் கொள்ள டிஜிட்டல் உலகிற்கு மாற வேண்டும்.

கறுப்புப் பணத்திற்கு எதிரான அரசின் பிரச்சாரம் வெற்றிபெற அனைவரின் ஆதரவும் தேவை. எனது கனவு ரொக்கப்பண பரிவர்த்தனை இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்பதுதான். இந்தியாவில் ஏன் அந்த சமுதாயத்தை உருவாக்க முடியாது?

பழைய ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கை ஏழைகள், விவசாயிகள், நலிவடைந்த தொழிலாளர்கள் ஆகியோரின் நலன்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதுதான் பழைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிகை. தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்களுக்கு வங்கிகளில் அவர்களின் சம்பளத்தை செலுத்துவதன் மூலம் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவததில் இருந்து, யாரும் தப்பிக்க முடியாது. தொழிலாளர்கள் தங்களிடம் உள்ள செல்போன் மூலமே மின்னணு பணப் பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ள முடியும் என்பதால், அவர்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்க வேண்டும்.

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்புகளாகத் திகழ்வது விவசாயிகளே. இந்தியாவின் இக்கட்டான தருணங்களில், விவசாயிகள் அரசுக்கு மிகவும் ஆதரவாக இருந்துள்ளனர். கறுப்புப் பணத்தை, ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தி அதனை மாற்ற முயற்சிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பினாமி பரிவர்த்தனைகளை செய்வோர் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பால் எழுந்துள்ள சிரமங்கள் முடிவுக்கு வர 50 நாட்கள் வரை ஆகலாம். 70 ஆண்டுகால பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இதுபோன்ற கால அவகாசம் அவசியமாகிறது.

ரூபாய் நோட்டுகள் மாற்றும் விவகாரத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும், அரசுக்கு முழு ஆதரவு அளித்து வரும் மக்களுக்கு பாராட்டுகள். வங்கிகள் மற்றும் தபால் நிலைய அதிகாரிகள், இரவு-பகலாக தங்களது கடின உழைப்பை அளித்து வருகிறார்கள். இந்தியாவை உருமாற்றம் செய்யும் நோக்கில் அவர்களின் உழைப்பு குறிப்பிடத்தக்கது. மக்களின் ஒருமித்த ஆதரவைப் பார்க்கும்போது, கறுப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் இந்தியா வெற்றியடையும் என்ற நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி, மிகவும் குறிப்பிடத்தக்க தீபாவளியாக அமைந்தது. நாடு முழுவதும் இருந்து, 12 கோடிக்கும் மேற்பட்டோர், இந்திய ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். பாதுகாப்புப் படையினருக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் மூலம் இந்த ஆண்டு, அரசு பொதுத் தேர்வில் 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது, அம்மாநிலத்தின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை கல்வியை நோக்கி செலுத்தியிருப்பது, அவர்களிடையே உள்ள ஊக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது" என்று பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

'இந்தியாவின் கிராமங்கள் மற்றும் விவசாயத்தின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி' என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி தெரிவித்தார். காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான பிரதமர் மோடி, கிராமப்புற மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டுதான். ரூபாய் நோட்டு தொடர்பான முடிவை அறிவித்தாரா? என்பது மிகப்பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ஏனென்றால், இந்தியாவில் இன்னும் எத்தனையோ கிராமங்களில் வங்கிக் கிளைகளே இல்லாத நிலை உள்ளது. அப்படி இருக்கும்போது, அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வங்கிக் கணக்குகளை எப்படித் தொடங்குவார்கள். எத்தனை கிராமங்களில் வங்கிகளே இல்லை?, எவ்வளவு கோடி பேருக்கு இந்தியாவில் இன்னமும் வங்கிக் கணக்குகள் கிடையாது? போன்ற புள்ளி விவரம் மோடிக்குத் தெரியுமா?

'படிப்பறிவு இல்லாதவர்களுக்கு கல்வியை சொல்லிக் கொடுங்கள்' என்று இளைஞர்களைக் கேட்டுக் கொண்டால் சரி. 'பணம் இல்லாத, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனையை இளையோர், மற்றவர்களுக்கு கற்பியுங்கள்' என்றால், சம்பந்தப்பட்டவர்களிடம், அதுபோன்ற கார்டுகள் இருந்தால்தானே அதைப் பற்றி சிந்திக்க முடியும்? இது ஏன் பிரதமர் மோடிக்கு தெரியாமல் போனது?

இந்தியா முழுவதும் உள்ள சாமான்ய, நடுத்தர மக்களின் இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கும் அடுத்த 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், பிரதமர் பதில் அளிக்கட்டும்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...