Friday, December 16, 2016

வாட்ஸ்அப்ல க்ரூப் மாறி மெஸேஜ் அனுப்பிட்டீங்களா? இதைப் படிங்க!

வாட்ஸ்அப்
இந்த பாஸ் தொல்ல தாங்க முடியலடா! டார்கெட்ட முடிக்கச் சொல்லி உசுற வாங்குறாருனு தெரியாம பாஸுக்கே வாட்ஸ்அப் ஃபார்வர்டு பண்ற ஆளா நீங்க... இல்ல கேர்ள் ஃப்ரெண்டுக்கு அனுப்ப வேண்டிய லவ் யூ மெஸேஜ் வேற யாருக்கோ போய் முழிக்கிறீங்களா? இனிமே நீங்க பயப்படாம இருக்கலாம் எப்படி தெரியுமா?

ஆமாம், வாட்ஸ்அப் ஆனது மெஸேஜ் எடிட்டிங் அண்ட் ரீகாலிங் வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் அனுப்பிய மெஸேஜை திரும்ப பெறவும், அதனை எடிட் செய்யவும் முடியும் என்கிறது வாட்ஸ்அப்.

WABetainfo என்ற ட்விட்டர் பக்கம், வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் பீட்டா வசதிகளை பற்றி முன் கூட்டியே கூறி வருகிறது. வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதிகளைப் பற்றி முதலில் கூறியது இந்த பக்கம் தான். இந்த பக்கம் பதிவெற்றிய ட்விட்டில் கூறியிருப்பது என்னவெனில்,

"வாட்ஸ்அப் நீங்கள் அனுப்பிய மெஸேஜ்களை எடிட் செய்யும் மற்றும் திரும்பப் பெறும் வசதியை பீட்டா தளத்தில் கொடுத்திருக்கிறது. பீட்டா தளத்துக்கு மட்டும் அளித்துள்ளதால், இந்த வசதியில் மேலும் மாற்றங்கள் ஏற்படலாம். ஆப்பிள் நிறுவனத்தின் iOS 2.17.1.869 தளத்தில் இந்த வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது."




சோதனை ஓட்டமாக ஒரு சில பகுதிகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் இந்த சேவை அவர்களிடமிருந்து வரும் ஃபீட் பேக்கை அடிப்படையாக கொண்டு மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்படும். வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனை பயன்படுத்த ஆப் ஸ்டோர் அல்லது ப்ளே ஸ்டோருக்கு சென்று சைன் அப் செய்ய வேண்டும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்பின் டெஸ்டராக நீங்கள் இருக்கிறீர்கள் என்ற தகவலும் இடம் பெற்றிருக்கும்.

வாட்ஸ்அப் அப்டேட்டில் அனுப்பிய செய்திகளை திரும்பப் பெற இயலும் என்றாலும் ஒரு சில நிமிடங்களுக்குள் தான் எடிட் அல்லது திரும்பப் பெற முடியும். அதற்குள் செய்யவில்லை என்றால் அது அனுப்பிய நபருக்கு சென்று விடுமாம். இந்தியா வாட்ஸ்அப் பயன்பாட்டில் முன்னணி இடம் வகிப்பதால் இந்தியாவில் முதலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் வீடியோ காலிங் வசதி இந்தியாவில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி தகவல் ஆப்ஸ்களில் இந்தியாவில் வாட்ஸ்அப் தான் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் 16 கோடி மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் தினமும் வாட்ஸ்அப் மூலம் பத்து கோடி கால்கள் செய்யப்படுகின்றன. வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் வாங்கியதிலிருந்து அதன் புதிய விஷயங்கள் மக்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளன.

ம. சக்கர ராஜன்,
மாணவர் பத்திரிகையாளர்

அசைவம் நல்லதா... கெட்டதா? நலம் நல்லது-29 #DailyHealthDose

vikatan.com
அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று, அசைவம் சாப்பிட்டால் உடல் வளர்ச்சிபெறும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது, அசைவம் சாப்பிடுபவர்களுக்கு காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை, இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி.

அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 90 சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்களும் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த `மைக்ரோசாஃப்ட்’, `ஆப்பிள்’ நிறுவனங்களை உருவாக்கியவர்களும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண்சத்துக்களும் காய், கனிகளில் குறைவு. உதாரணமாக, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச்சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில், இரும்புச்சத்து 300 மைக்ரோகிராம்தான் இருக்கிறது. எனவே, அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்கவேண்டியது இல்லை. ஆனால், நம் உடலுக்கு அசைவம் மட்டும் போதுமா, அதை எப்படிச் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று தெரிந்துவைத்திருப்பது நல்லது.



அசைவ உணவுகளை எப்படி, எவ்வளவு சாப்பிடலாம்?

* போருக்குச் செல்லும் வீரன்போல, காரில் போகும் சுகவாசி சாப்பிடுவது சரிப்படாது. கட்டுமரத்தில் நிமிர்ந்து நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக இருப்பவர் கேண்டில் லைட் டின்னரில் `ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்வது சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் நாம் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிட வேண்டும்.

* ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக்கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்துச் சாப்பிடுவது இன்னும் சிறப்பானது.

* மற்ற நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள்.

* வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையாவது வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள்.

* கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றையச் சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டிறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் அவர்கள்.

* `மாமிசம் சாப்பிடும்போது, கண்டிப்பாக இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பட்டை, கிராம்பு ஆகியவை இருக்க வேண்டும்’ என்கிறது தமிழ் மருத்துவம். எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கறையிலும், இந்தக் கறி மசாலா இல்லாமல், கிடாக்கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், இன்றைக்கு மூலைக்கு மூலை விரிந்திருக்கும் பன்னாட்டு கறிக்கடைகளில், அவித்தும் பொரித்தும் தரப்படும் கறி வகைகளில் கறி மசாலாவைப் பார்க்கவே முடியாது. அதேபோல், நம்முடைய சமையல் அறைகளை ஆக்கிரமித்துள்ள மசாலாப் பொடி பாக்கெட்களும் எந்த அளவுக்கு நல்லது என்று சொல்ல முடியாது. எனவே, வீட்டில் தயாரிக்கப்பட்ட கறி மசாலாவில், அந்த மணத்தோடு செய்த கறி வகைகளைச் சாப்பிடுவதே நல்லது.



* ரெஸ்டாரன்ட்டுகளில், ஹோட்டல்களில் கிடைக்கும் கறிவகைகளைத் தவிர்ப்பது சிறந்தது. காரணம், அவற்றில் நூற்றுக்கணக்கான ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கின்றன; ரசாயன உப்புகளும் கலக்கப்படுகின்றன. குறிப்பாக, புற்றுநோயை வரவேற்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் குளூட்டமேட் ஆகியவை உண்டு.



* கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரைதேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்த்த கோழியாக இருக்கக் கூடாது. ஆரோக்கியமான முறையில் வளர்ந்த கோழியாக இருப்பின், `உடல் சூட்டைத் தந்து, சாதாரண சளி, இருமல், மந்தம் ஆகியவற்றைப் போக்கும். உடல் தாதுவை வலுப்படுத்தி, ஆண்மையைப் பெருக்கக்கூடியது’ என்கிறது சித்த மருத்துவம். இதில், வைட்டமின் பி 12 சத்து அதிகம். அதனால் உடல் எடை அதிகரிக்காது. நம் ஊரில் `கருங்கோழி’ எனப்படும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. தசை சூம்பி, வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயாளிகளுக்கும், பிற தசை நோயாளிகளுக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெடுங்காலமாகச் சொல்லி வருகிறது தமிழ் மருத்துவம். பிராய்லர் கோழி இறைச்சி நல்லதல்ல. பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் சிறுமிகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே பூப்படையும் பிரச்னை வரவும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



* மீன்கள் வெறும் உணவு அல்ல; ஊட்ட உணவு. அதிலும், கொழுப்பு அதிகம் இல்லாத புரதம் மிகுந்த உணவு. ஆனால், அந்தப் புரதத்தையும் இதயத்துக்கு நல்லது சேர்க்கும் சத்துக்களையும் முழுமையாகப் பெற வேண்டுமானால், மீனை பொரிக்கவோ, வறுக்கவோ கூடாது. வேக வைத்த மீனே சிறந்தது. `இ.பி.ஏ.’, (Eicosapentaenoic Acid), `டி.ஹெச்.ஏ.’ (Dacosahexaenoc Acid) எனும் இரண்டு `ஒமேகா 3’ அமிலங்கள் மீன்களில் உண்டு. இந்த இரண்டையும் நம் உடம்பு உற்பத்தி செய்யாது. சில வகை எண்ணெய் வித்துக்களைத் தவிர்த்து, தாவரங்களிலும் இது பெரிதாகக் கிடையாது. மூளைத் திறனைத் தூண்ட, புற்றுநோயைத் தடுக்க, மாரடைப்பைத் தடுக்க உதவும். இந்த இரண்டு `ஒமேகா 3’ அமிலங்களும் கடல் மீன்களிடம் கிடைக்கும்.

* ஆடோ, மீனோ, கோழியோ... அசைவ உணவுகள் விரைவில் கெட்டுப்போகும் இயல்புடையவை. இறைச்சிக்காக ஒரு விலங்கைக் கொல்லும்போது அதன் தோலும் குடலும் முழுமையாக நீக்கப்பட்டவுடன், விரைவாக அடுப்படிக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அதில் ஏற்படும் தாமதம், இறைச்சியில் நுண்ணுயிரிகளைப் பெருக்கம் செய்யக் காரணமாகிவிடும். ஆனால், இன்றைக்கு பன்னாட்டு கோழி, ஆட்டுக்கறி உணவகங்களில் இந்தக் கறித்துண்டுகள் கடந்துவரும் பாதை ரொம்ப தூரம் என்பதை மனதில்கொள்ளவும்.

எனவே, இறைச்சியை ஃப்ரெஷ்ஷாக வாங்கி, மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்த பிறகு சமைத்துச் சாப்பிடுங்கள்... அதையும் அளவாகச் சாப்பிடுங்கள்!

ஆச்சர்யம்... டிராஃபிக்கில் சிக்கினார் தமிழக முதல்வர்!

டிராஃபிக்
பொதுவாகவே தமிழகத்தில் முதல்வர்கள் மீது மக்களுக்கு அதிக வெறுப்பு வளர முக்கிய காரணமாக இருப்பது டிராஃபிக் ஜாமை ஏற்படுத்துவதுதான். ஜெயலலிதா முதன்முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றபோது மக்களிடையே வெறுப்பை சம்பாதித்தற்கு இதுவும் ஒரு காரணம். வீட்டில் இருந்து ஜெயலலிதா புறப்படும் போதே அனைத்து பகுதிகளிலும் டிராஃபிக்கை மூடுவது போலீசாரின் வழக்கமாக இருந்தது. அந்த சமயத்தில் பள்ளிக்குச் செல்வோர் அலுவலகம் போவோர் என பலரும் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பார்கள்.

ஜெயலலிதா மட்டுமல்ல தமிழக முதல்வர்களாக பொறுப்புக்கு வரும் யாரும் மக்களோடு மக்களாக பயணிக்கத் தயாராக இருந்தது இல்லை. தங்கள் பயணத்துக்காக உடனடியாக டிராஃபிக்கை மூடி வைப்பதுதான் வழக்கம். கருணாநிதி முதல்வராக இருந்தாலும் அதுதான் நடக்கும் ஏன் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது கூட கோவை போன்ற பெரு நகரங்களில் கமாண்டோக்கள் புடை சூழ 50 கார்கள் பின்னால் அணி வகுக்க வலம் வந்தவர்தான். அதனால்தான் தவறை உணர்ந்திருக்கிறோம் என்று கடைசி சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் கதறிய போது கூட மக்கள் காதுகொடுத்துக் கேட்கவில்லை.

அடிக்கடி கேரளத்தை நாம் உதாரணத்துக்கு சொல்வோம். தலைவர்களை மக்களாக பாருங்கள் என்பதுதான் கேரள மக்களின் பாலிசி. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ரயில் நிலையத்தில் கையில் குடை வைத்துக் கொண்டு சாதாரணமாக அமர்ந்திருப்பது போல புகைப்படங்கள் இணையத்தில் உலா வரும். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பதவியில் இருந்து விலகிய பிறகு திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு ஒரு விழாவுக்கு பங்கேற்க சென்றார். திரும்புகையில் ரயிலை தவற விட அரசுப் பேருந்தில் கொச்சியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பயணித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தக் கூட, கேரள தற்போதைய முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் ஒரே விமானத்தில் பயணித்து ஒரே காரில் விமான நிலையத்தில் இருந்து ராஜாஜி ஹாலுக்கு வந்து சேர்ந்தனர்.

பொதுவாகவே தமிழகத்தைப் பொறுத்தவரை தனிநபர் வழிபாடும், துதிபாடும் குணமும் அதிகமாக இருப்பதால், தலைவர்களை தெய்வமாகத் தொண்டர்கள் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். தலைவர்களை நாம்தான் உருவாக்குகிறோம் என்பதை மறந்து விடுகின்றனர். அதனால்தான் தலைவருக்காக இறத்தல் கூட பெருகிக் கொண்டே போகிறது. ஒரு தலைவர் சென்றால் இன்னொரு தலைவர் வருவார் என்ற மனநிலை இல்லாத தன்மையும் ஒரு காரணம். இதனால்தான் இந்தியாவில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும் நம்மால் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை சினிமா சார்ந்த முதல்வர்களே கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு விட்டதால் மக்கள் மனநிலை அப்படி மாறிப் போயிருக்கலாம்.

இப்போது தமிழகத்தில் பன்னீர்செல்வம் என்ற டீக்கடை மனிதர் முதல்வராகியிருக்கிறார். எளிமையான மனிதர். அதிர்ந்து பேசாதவர். தனது தலைமைக்கு கடைசி வரை விசுவாசமாக இருந்தவர். அதிமுகவில் அவர் முதுகெலும்புடன் இருக்கிறார். இல்லாமலும் போகிறார். அதிமுக தலைமையை கைப்பற்றுகிறார். கைப்பற்றாமல் போகிறார். இதுவெல்லாம் நமக்கும் தேவையில்லை. அதிமுகவின் உள்கட்சி விவகாரம் அது. ஆனால், இப்போது முதல்வர் என்ற வகையில் நல்லாட்சியைத் தர வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

பன்னீர் செல்வம் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னை சார்மியர் சாலையில் நேற்று முதல்வர் பன்னீர்செல்வத்தின் கான்வாய் மக்களுடன் மக்களாகவே சென்றுள்ளது. ஏற்கெனவே புயலால் டிராஃபிக் விளக்குகள் சேதமடைந்து விட, முதல்வரின் காரும் டிராஃபிக்கில் சிக்கியுள்ளது. சார்மியர்ஸ் சாலையில் சுமார் 15 நிமிடங்கள் முதல்வரின் கான்வாய் நின்றுள்ளது. பின்னர் போலீசார் முதல்வர் கான்வாய் செல்ல வழி ஏற்படுத்தித் தந்துள்ளனர். தொடர்ந்து முதல்வரின் கான்வாய் பயணத்தை தொடங்கியுள்ளது.

பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

வங்கிக் கணக்கை இயக்க பான் எண் கட்டாயம்: ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடு


புது தில்லி: வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்துக்கும் மேல் வைத்திருப்பவர்களுக்கும், நவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கும் புதிய கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதாவது, வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்துக்கும் மேல் வைத்திருப்பவர்கள் பான் எண்ணை இணைக்கும் வரை அல்லது படிவம் 60ஐ அளிக்கும் வரை தங்களது வங்கிக் கணக்கை இயக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதே போல, 2016 நவம்பர் 8ம் தேதிக்கு மேல் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்திருக்கும்பட்சத்தில் அவர்களும் பான் எண் இணைக்காமல் இருந்தால் கணக்கை இயக்க முடியாது என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், சாதாரண ஏழை, எளிய மக்கள், கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிக்கு உதவி இருந்தால், அவர்கள் தங்களது வங்கிக் கணக்கை இயக்க முடியாத நிலை ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

இதே போல், ஏழை மக்களுக்கான ஜன் தன் வங்கிக் கணக்கில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை டெபாசிட் செய்யப்பட்டதால், ஒரு மாதத்துக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாமல் கட்டுப்பாடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

HSE Examination 2017 Time Table














பணம் டெபாசிட் செய்தவர்களுக்கு ரிசர்வ் வங்கி 'செக்' 


நவம்பர் 9-ம் தேதிக்கு பின் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தோர் பணத்தை எவ்வாறு எடுக்கலாம் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், டிசம்பர் 30-ம் தேதி வரை பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இதனால், பொதுமக்கள், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். டெபாசிட் பணத்தை ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், 2 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் பான்கார்டு இல்லாமல் பணத்தை எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணம் மதிப்பு இழப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த மனுவிற்குப் பதில் அளிக்க ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ரிசர்வ் வங்கி இன்று பதில் மனு தாக்கல் செய்தது.

அதில், நவம்பர் 9-ம் தேதிக்கு பின் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தோர் பான்கார்டு எண் தராமல் பணம் எடுக்க முடியாது என்றும், பான்கார்டு அல்லது வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என்றும், வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் வைத்திருக்க வேண்டும் என்றால் பான்கார்டு அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பழைய 500, 1000 நோட்டுகளை பயன்படுத்த அவகாசம் அளிப்பது குறித்த வழக்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு அளிக்க உள்ளது.

ரிசர்வ் வங்கி டூ சேகர் ரெட்டி! - சி.பி.ஐ வலையில் தமிழக அமைச்சர்கள்


அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டைத் தொடர்ந்து, அவருக்கு பணத்தை மாற்றிக் கொடுத்த வகையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் சிக்குகின்றனர். 'வருமான வரித்துறையில் பிடிபட்ட சேகர் ரெட்டிக்குச் சொந்தமான பணம் மற்றும் தங்கம் உள்ளிட்டவை சி.பி.ஐயின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டன. எப்போது வேண்டுமானாலும் அதிரடி நடவடிக்கைகள் பாயலாம்' என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில்.

வேலூர், காட்பாடியைச் சேர்ந்த பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி, அவருடைய உறவினர் சீனிவாச ரெட்டி மற்றும் கீழ்பாக்கம் கார்டனைச் சேர்ந்த பிரேம் குமார் ஆகியோரது வீடுகளில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து 170 கோடி ரூபாய் பணமும் 130 கிலோ தங்கமும் பிடிபட்டன. மூன்று நாள் நடத்தப்பட்ட சோதனையில் ரெட்டியின் காரில் இருந்து 24 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கார்டன் வட்டாரத்திற்கு நெருக்கமான ரெட்டியின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது, அ.தி.மு.க அமைச்சர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் நெருங்கிய நண்பரான பிரேம் குமார் வீட்டிலும் ரெய்டு நடந்ததையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். குறிப்பாக, 'சேகர் ரெட்டியின் பணத்தை தங்கமாக மாற்றிக் கொடுத்ததில் பிரேம் குமாரின் பங்கு மிக முக்கியமானது' என்கின்றனர் அதிகாரிகள். " புதிய இரண்டாயிரம் ரூபாய்களை மாற்ற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

ஆனால், ரெட்டியின் வீட்டில் இருந்து 34 கோடி ரூபாய்க்குப் புதிய நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன. அட்டைப் பெட்டிகளில் சீல் பிரிக்கப்படாமல் இருந்த புதிய ரூபாய் கட்டுக்களைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ந்து போய்விட்டனர். அரசு அச்சகத்தில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் வழக்கமாக ரிசர்வ் வங்கியின் மைய அலுவலகத்துக்கு அனுப்பப்படும். பின்னர் அந்தப் பணம் வங்கிகளுக்குப் பிரித்து வழங்கப்படும். வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய பணம், நேரடியாக சேகர் ரெட்டியின் வீட்டிற்குச் சென்று சேர்ந்துவிட்டது. இந்த விவகாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். அச்சகத்தில் அடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் சீரியல் எண்களையும் ரெட்டியின் வீட்டில் பிடிபட்ட ரூபாய் நோட்டுக்களின் சீரியல்களையும் சரிபார்த்து வருகின்றனர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள வங்கி அதிகாரிகளை சி.பி.ஐ வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கியின் மைய அலுவலகங்களில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது" என்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர்.

" ஓர் இடத்தை குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வை நடத்தினால், அங்கு கைப்பற்றப்படும் பணத்தை பி.டி எனப்படும் வருமான வரித்துறை கணக்குக்குள் கொண்டு வருவது வழக்கம். ஆனால், சேகர் ரெட்டி உள்பட மூன்று பேர் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டில் பிடிபட்ட பணம் மற்றும் தங்கத்தை பி.டி கணக்கிற்குள் கொண்டு வரவில்லை. மொத்தப் பணத்தையும் தங்கத்தையும் சி.பி.ஐ கொண்டு போய்விட்டது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ என மூன்று துறையின் அதிகாரிகளும் சேகர் ரெட்டியின் தொடர்புகளை ஆராய்ந்து வருகின்றனர். பாரிமுனையில் உள்ள மார்வாடிகள் துணையோடு கறுப்புப் பணத்தை தங்கமாக மாற்றிக் கொடுத்து வந்தார் பிரேம் குமார். மத்திய அரசின் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது அறிவிப்பிற்குப் பிறகு, தங்கமாக மாறிய பரிவர்த்தனைகளை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினர். அதன் விளைவாகவே பிரேம் குமாரும் அவரைத் தொடர்ந்து சேகர் ரெட்டியும் வசமாக சிக்கினர். ரெட்டி கைதால் கார்டன் வட்டாரம் அதிர்ந்தாலும் சி.பி.ஐ வளையத்தில் பிரேம் சிக்கியிருப்பது ஆளும் கட்சியின் அமைச்சர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள், தங்கமாக மாறிய ரூபாய்கள் என பல தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் தகவல்களும் அடுத்தகட்ட ரெய்டுக்கு நாள் குறித்துத் தந்திருக்கிறது" என்கிறார் வருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரி ஒருவர்.

தமிழக அரசின் சீனியர் அமைச்சர்கள் தொடர்போடு கடந்த ஐந்தாண்டுகளில் ரெட்டி குவித்த கோடிகள்; அதற்கான பின்னணி; ஆதாயம் அடைந்த அமைச்சர்கள் என சி.பி.ஐ செல்லும் பாதையை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் ஆளும்கட்சி புள்ளிகள். கொங்கு மண்டலத்தை குறிவைத்து அடுத்த ரெய்டு நடக்கலாம் என்ற பேச்சுக்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

NEWS TODAY 14.06.2026