Saturday, December 24, 2016

எம் ஜி ஆர்

கல்கியின் நாவலும் கலைந்துபோன எம்.ஜி.ஆரின் கனவும்...! எம்.ஜி.ஆர் நினைவு தினச் சிறப்புப் பகிர்வு


நினைத்ததை முடித்தவன் நான்... நான்... நான்... என திரைப்படம் ஒன்றில் பெருமிதத்தோடும் கர்வத்தோடும் பாடி ஆடியிருப்பார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்கு முன்னும் பின்னும் திரையுலகில் வெற்றிக்கோட்டை தொட்டவர்கள் உண்டு. ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்கு உச்சத்தை தொட்டவர்கள் அரிதினும் அரிது. அந்த அரிதானவர்களிலும் எம்.ஜி.ஆர் தனித்து நிற்பவர். காரணம் இயக்கம், ஒளிப்பதிவு, ஸ்டண்ட், நடனம், எடிட்டிங், என திரையுலகின் அத்தனை துறைகளும் அவருக்கு இருந்த ஞானம். அவரது சினிமா தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் அவர் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னனும் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படங்கள் அந்த திறமைக்கு கட்டியம் கூறுபவை. இன்றைக்கும் அவை எம்.ஜி.ஆரின் மாஸ்டர் பீஸ் எனலாம். குறிப்பாக நாடோடி மன்னன் திரைப்படம் அவரது வாழ்வில் குறிப்பிடத்தக்க படம். இந்த படத்திற்காக அதுவரை தான் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் அவர் அடகுவைக்கவேண்டியதானது. இந்த இரு படங்களின் தயாரிப்பை விட அவற்றை வெளியிடுவதில் அவர் சந்தித்த சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல; ஒரு நாவலுக்குரிய பகீர் திருப்பங்கள் கொண்டவை. நாடோடி மன்னன் இறுதிகட்டப்படப்பிடிப்பின்போது ஒருசமயம்,“படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி" என்று நெருங்கிய நண்பர்களிடம் சோகம் இழையோடச் சொல்லியிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக என்று சொல்லமுடியாது; உழைப்பின் பலனாக, நாடோடி மன்னன் அமோக வெற்றிபெற்றது. அடுத்த 20 வருடங்களுக்கு அவரை திரையுலகின் மன்னனாக்கியது. ராஜாராணி படங்கள் என்றால் எம்.ஜி.ஆரைவிட்டால் அதில் சோபிக்க வேறு ஆள் கிடையாது என அடித்துச்சொல்லும் அளவு அந்த வேடங்களில் அசத்திய எம்.ஜி.ஆரை நாடோடி மன்னன் வெற்றி புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதற்குப்பின் அப்படி ஒரு வெற்றியை அவரது வாழ்வில் பார்த்திருக்கமுடியாது. மொத்த தமிழகமும் கொண்டாடியது அந்த படத்தை. நாடோடி மன்னன் தந்த வெற்றி அவருக்கு தொடர்ந்து இம்மாதிரி படங்களை தரவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. அப்படி அவரது ஆசையில் உதித்த எண்ணம்தான் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கவேண்டும் என்பது.

கல்கியின் ஆகச்சிறந்த புதினங்களில் ஒன்றான 'பொன்னியி்ன் செல்வன்' வாசகர்களிடையெ பெற்றிருந்த வரவேற்பு எம்ஜி.ஆரை பெரிதும் ஈர்த்தது. கல்கியின் உரைநடை வீச்சும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளும் அதன் வர்ணனைகளும் நிரம்பி காணப்பட்ட பொன்னியின் செல்வன் நாவல் 50களில் புராண இதிகாச கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர் என்று கருதப்பட்ட எம்.ஜி. ஆருக்கு பெரும் ஆசையை மனதில் வித்திட்டதில் ஆச்சரியமில்லை. இதற்கென கல்கியின் குடும்பத்தினரிடம் முறையான அனுமதி பெறப்பட்டது. நாடோடி மன்னன் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற சில மாதங்களில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் எம்.ஜி. ஆர். தனது வழக்கமான படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு பொன்னியின் செல்வன் வெளிவரும் என செல்லும் இடங்களில் எல்லாம் பெருமிதமாக சொன்னார். பொன்னியின் செல்வன் படமானால் அது தனக்கு நாடோடி மன்னனுக்கு ஈடான நிரந்தர புகழை ஈட்டித்தரும் என்பதில் ஐயமின்றி இருந்த எம்.ஜி. ஆர், 'நாடோடி மன்னன்' வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே, 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பு 'பொன்னியின் செல்வன்' என்று தான் பொறுப்பாசிரியராக இருந்த 'நடிகன் குரல்' (1959 டிசம்பர் மாத இதழில் ) இதுபற்றிய தகவலை வெளியிட்டார். அறிவிப்பை தொடர்ந்து படத்தில் நடிப்பதற்கான நடிகர் நடிகைகள் தேர்வும் நடந்தது. சிறுசிறு கதாபாத்திரத்திற்கும் கூட தேர்ந்த நடிகர் நடிகைகளை தேர்வு செய்தார். வழக்கமான தனது படங்களில் பயன்படுத்துபவர்களை தவிர்த்து புதிய கலைஞர்களை இதில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டார். 'பொன்னியின் செல்வன்' கதையில் இருவேடங்களில் எம்.ஜி.ஆரே ஏற்று நடிக்க முடிவெடுத்தார். நாவலின் முக்கிய கதாநாயகி கதாபாத்திரத்திற்கு அவர் தேர்ந்தெடுத்தது தமது குடும்பநண்பரும் பழம்பெரும் இயக்குனருமான கே. சுப்ரமணியம் அவர்களின் மகள் பத்மா சுப்ரமணியத்தை. நடனக்கலைஞரான அவர் நடித்தால் கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக பேசப்படும் என்பது எம். ஜி. ஆரின் எண்ணம். பகீரத முயற்சியில் இதற்கான அனுமதியை அவரது தந்தையிடம் இருந்து பெற்ற எம்.ஜி. ஆரால் அவரது மகளிடம் திட்டம் பலிக்கவில்லை. திரைப்படத்தில் நடிப்பதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் எம். ஜி. ஆரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதேசமயம் நாடோடிமன்னன் வெற்றியினால் தொடர்ந்து படங்களில் புக் ஆகி இடைவிடாமல் நடித்துக்கொண்டிருந்ததால் எம்.ஜி.ஆரின் கவனமும் பொன்னியின் செல்வனிலிருந்து விலகியது. என்றாலும் தனது மனதில் கதாபாத்திரங்ளையும் காட்சியமைப்புகளையும் செதுக்கியவாறு இருந்தார். மற்ற படங்களின் அவுட்டோர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது பொன்னியின் செல்வனுக்கும் லோகேஷன்களை பார்த்து குறித்துக்கொண்டார். இருப்பினும் அது காகித வடிவிலேயே இருந்தது. '1964 ல் ஆகஸ்ட் 2ந்தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் “படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டு இருக்கின்றன. அதை கலரில் எடுக்கப் போகிறேன். ஆங்கிலத்திலும் எடுக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் இருக்கிறது. ஆங்கில வசனங்களை அண்ணாவை எழுதும்படி கேட்கப் போகிறேன்!” எனகூறியிருந்தார். அத்தனை நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தயாரிப்புக்கு குறிப்பிட்ட சில வருடங்களாவது தேவைப்படும் என்ற நிலையில் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களின் ஓய்வு ஒழிச்சலின்றி நடித்துவந்த எம்.ஜி.ஆரால் படத் தயாரிப்பில் ஈடுபடமுடியவில்லை.
பொன்னியின் செல்வன் கதையில் ஏராளமான கதாபாத்திரங்களும், சம்பவங்களும் உள்ளன. எனவே, படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்க முடியவில்லை. 'அடிமைப் பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களை எடுத்து முடித்த பின்னரும், பொன்னியின் செல்வன் படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கப்படவில்லை.எம். ஜி. ஆரைப்பற்றி அவ்வப்போது நிலவி வந்த சில தகவல்களும் இந்த படத்தினை தள்ளிப்போட்டது என்பார்கள்.

பொதுவாக எம்.ஜி. ஆர் வெளிப்படங்களிலேயே தான் திருப்தியடைந்த பின்னரே அது வெளியாக அனுமதிப்பார். அப்படிப்பட்டவர் தன் சொந்தப்படத்தினை அதுவும் அவரது கனவுப்படத்தை வெளியிட எத்தனை வருடங்கள் எடுத்துக்கொள்வாரோ என்று பிரபல நடிகர்களிடம் ஒரு பேச்சு எழுந்ததாக சொல்வார்கள். பணம் கணிசமாக கிடைக்கும் என்றாலும் ஒரு திரைப்படத்திற்காக நீண்ட நாட்களை செலவிட அவர்கள் தயாரில்லை. முக்கிய கதாபாத்திரத்திற்கு தான் தேர்வு செய்த பத்மா சுப்ரமணியம்தான் நடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த எம். ஜி. ஆர் 70 களில் பத்மா இருந்த ஒரு மேடையில் “பத்மா சம்மதித்து நடித்து கொடுத்தால் ஒரு மாதத்தில் படத்தை வெளியிடுவேன்” என்றும் கூறிப்பார்த்தார். ஆனாலும் திரைப்படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்த பத்மா சுப்ரமணியம் அதற்கு மசியவில்லை. இப்படி பல காரணங்களால் எம். ஜி. ஆர் பொன்னியின் செல்வனை கைவிட வேண்யடிதானதாக திரையுலகில் சொல்வர். ஆனாலும் எம்.ஜி. ஆரின் மனதில் இருந்து பொன்னியின் செல்வனை விலக்க முடியவில்லை. தான் பொது இடங்களில் தான் சந்திக்கும் திறமையான கலைஞர்களிடம்“ என் படத்தில் இந்த கேரக்டரில் நடிக்கறியா என தொடர்ந்து கேட்டபடி இருந்தார். நடிகர் சிவகுமாரின் 100-வது படவிழாவில் (1978ம் ஆண்டு) பேசிய எம்.ஜி.ஆர். 'பொன்னியின் செல்வனை படமாக எடுக்க நான் முயற்சித்தபோது, சோழ இளவரசனாக சிவகுமாரை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன்’ என்று பேசினார். இப்படி வந்தியத்தேவன், எம்.ஜி.ஆரை விரட்டிக்கொண்டே இருந்தான். ஆனால், காலம் கைகூடவில்லை! முதல்வரான பின்னும் பொன்னியின் செல்வனை அவர் மனதில் இருந்து கழற்றிஎறிந்திட முடியவில்லை.

அரசியலில் பரபரப்பாகி முதல்வரானபின்னரும் அவ்வப்போது தனக்கு நெருங்கிய ஒரு பத்திரிக்கையாளரிடம் இது குறித்த ஆதங்கத்தை எம்.ஜி. ஆர் வெளிப்படுத்தியிருக்கிறார். 80 களில் கமல்ஹாசனை வைத்து துவங்கும் திட்டமும் அவர் மனதில் இருந்தது. ஆனால் துரதிர்ஸ்டவசமாக காலம் அவருக்கு அந்த கனவை நனவாக்கும் வாய்ப்பை இறுதிவரை வழங்கவில்லை. இதனிடையே குறிப்பிட்ட வருடங்களில் பொன்னியின் செல்வன் மீதான எம்.ஜி. ஆருக்கான உரிமை சட்டப்படி கைவிட்டுப்போன நிலையில் கமலஹாசனும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதுவும் ஈடேறவி்ல்லை.

இப்படி அரசியலிலிலும் திரையுலகிலும் தான் நினைத்ததை முடிப்பதில் வல்லவரான எம்.ஜி.ஆருக்கு“பொன்னியின் செல்வன்” நாவல் அவரது நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாக நிலைத்து நின்றுவிட்டது.

ராம மோகன் ராவ் ‛அட்மிட்'

சென்னை: வருமான வரித்துறையினரின் சோதனைக்கு உள்ளான, ராம மோகன் ராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கருதி, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஐ.சி.யூ.,வில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக தலைமை செயலாளராக இருந்தவர் ராம மோகன் ராவ். பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும், திருப்பதி தேவஸ்தான அறக்காவலர் குழு உறுப்பினருமான சேகர் ரெட்டி வீடு மற்றும்அலுவலகங்களில், 130 கோடி ரூபாய் ரொக்கம், 171 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இவரிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து , டிச.,21 ல் ராம மோகன் ராவ் வீடு மற்றும் அவரது மகன் விவேக் வீடு, அலுவலகங்கள், தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட, 12 இடங்களில், துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

வருமான வரித்துறை சம்மன் :

இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை உருவாக்கியது. தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ராம மோகன் ராவ் நீக்கப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். வருமான வரித்துறையினர் அவருக்கும், அவரது மகனுக்கும் சம்மன் அனுப்பியதாக, தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், நேற்று இரவு ராம மோகன் ராவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கருதி, சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, ராமமோகன ராவ் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஒரு வதந்தி உலாவி வருகிறது.

11,124 கி.மீ. புல்லட்டில் பயணித்தால் என்ன நடக்கும்? #RoadTrip


"இமாச்சலப் பிரதேசத்தில் உதய்பூர் என்ற ஒரு சின்ன டவுன். இரவு பதினோரு மணியளவில்... நல்ல குளிர். பெளர்ணமி. தனியாக என் தண்டர்பேர்ட் 500-ல் போய்க் கொண்டிருந்தேன். புல்லட் பீட் பின்னணியில் ஒரு கிடார் சத்தம் கேட்டது. வண்டியை நிறுத்திவிட்டு சுற்றிப் பார்த்தேன். ரோட்டின் ஓர் ஓரத்தில் ஒரு பையன் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தான். நான் அவனிடம் போனேன். அவனிடமிருந்து கிடார் வாங்கி எனக்குத் தெரிந்த சில பாடல்களை பாடி, வாசித்தேன். அதன் பின், அவன்... அவனுடைய விரல்கள் கிடாரில் பெரிய மேஜிக் செய்தன. அந்த இரவை அங்கேயே அப்படியே பாட்டு பாடி கழித்தோம். என் பெயர் அவனுக்குத் தெரியாது, அவன் பெயர் எனக்குத் தெரியாது. ஆனால், இருவருக்குமே அது ஒரு அற்புதமான இரவு...இது தான் பயணத்தின் அழகு " என்று தன் பயணக் கதையை கிக் ஸ்டார்ட் செய்கிறார், கோவையைச் சேர்ந்த சாய்க் குமார்.

இவர் சமீபத்தில் இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரி டூ வட உச்சி ஜம்மு காஷ்மீர் வரை தனியாக ஒரு பைக் பயணம் போய்வந்திருக்கிறார். மொத்தம் 77 நாட்கள்... 11, 124 கிமீட்டர்கள் என அவர் கடந்து வந்த கதையை புல்லட் வேகத்திலேயே சொல்லத் தொடங்குகிறார்...

எதற்காக இந்தப் பயணம் ?

" பயணம் தொடங்கும் பலரும் சொல்லும் அதே காரணம் தான் என்னுடைய தொடக்கமும். வேலை... ஒரே மாதிரியான வாழ்க்கை முறை... அதை உடைக்க வேண்டும் என்ற ஆர்வம், பயணம் மீதான ஆசை. ஆனால், இதற்கு மேல் ஒரு பயணியாக எனக்கு ஒரு முக்கிய குறிக்கோள் இருந்தது. அது என்னை நான் புரிந்து கொள்வது... அதற்கேற்றார் போல இந்த பயணம் எனக்கு மிகப் பெரிய பாடமாக அமைந்தது".

தனியாக பயணம் செய்தது எப்படி இருந்தது?

"நான் அடிப்படையிலேயே கொஞ்சம் ரிசர்வ்டான ஆள் தான். எனக்குத் தனியாக இருப்பது பிடிக்கும். அதனால், தனியாக பயணித்தது பெரிய கஷ்டமாக இல்லை. மேலும், தனியாக பயணித்தாலும் இதில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். குஜராத்தின் ரேன் ஆஃப் கட்ச் பகுதியில் இருந்த ஒரு ராணுவ வீரர்... பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாமல் ரொம்ப தனிமையில் இருந்தார். என்னைப் பார்த்ததும் பேச ஆரம்பித்தவர், தொடர்ந்து 4 மணி நேரம் விடாமல் பேசினார், அதே போல், டில்லியில் ஒரு கஷ்மீர் நண்பன் கிடைத்தான்... கஷ்மீரியாக அவன் படும் வேதனைகள், அவன் வாழ்வின் பிரச்சினைகள்... அதே போன்று சில இஸ்ரேலிய ஊர்சுற்றிகளோடு ஒரு வாரம் பயணம் செய்தேன். பயணத்தை தனியாக தொடங்கினாலும், பயணம் தனிமையானதாக இல்லை. பயணத்தில் பார்க்கும் இடங்கள் அழகு என்றால், பழகும் மனிதர்கள் பேரழகு..."

உங்கள் பயண நண்பன் தண்டர்பேர்ட் 500 குறித்து சொல்லுங்களேன் ?

"பொதுவாகவே இந்தியாவில் தொலை தூரப் பயணங்களின் அடையாளமாகப் பார்க்கப்படுவது புல்லட்கள் தான். அதன் அடிப்படையிலேயே தண்டர்பேர்ட் 500யைதேர்ந்தெடுத்தேன். ஆனால், பலரும் அதற்கான சர்வீஸில் பிரச்சினைகள் இருப்பதாக சொன்னார்கள். அதற்கேற்ற மாதிரியே வண்டி எடுத்ததில் இருந்தே பல பிரிச்சினைகள் இருந்தன. வண்டியில் இருந்த பிரச்சினைகளைவிடவும், சர்வீஸ் ஆட்களோடு போராடுவதே பெரிய கஷ்டமாக இருந்தது. ஆனால், எல்லாம் முடிந்து பயணம் தொடங்கிய பிறகு, வண்டியில் பெரிய தொந்தரவுகள் இல்லை. மைலேஜும் 28யில் இருந்து 30 வரை கிடைத்தது."



பயணத்தின் போது ஏதேனும் விபத்துகள்?

"குஜராத்தின் புஜ் பகுதியில் வண்டியை நிறுத்தி வைத்திருந்த போது, ஒரு பையன் ரிக்‌ஷாவில் வந்து மோதிவிட்டான். அதில் சைலன்சர், ஹேண்டில் பார், க்ராஷ் பார் என அனைத்தும் வளைந்துவிட்டன. பின்னர், அதையெல்லாம் சீர் செய்தேன். ரொடாங் பாஸ் ரோடு வழியாக லேவிற்கு சென்று கொண்டிருக்கும் போது, உள்ளூரைச் சேர்ந்த ரெண்டு பேர் எனக்கு முன்னாடி போய்க் கொண்டிருந்தார்கள். சரியாக பிரேக் பிடிக்காமல், ஸ்லிப்பாகி என் கண் முன்னாடியே பல நூறு அடி பள்ளத்தில் விழுந்து இறந்தார்கள். அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது."

பயணத்தின் ஏதாவது ஒரு சமயத்தில் " ஏண்டா... பயணம் கிளம்பினோம்..." என்று வருந்தியது உண்டா?

"நிச்சயமாக இல்லை. நான் ஆபிஸில் ஏசி ரூமில் உட்கார்ந்து பயணம் குறித்து யோசித்ததைவிட, நிஜப் பயணம் கடுமையாக இருந்தது உண்மை தான். ஆனால், அதற்காக நான் எந்த தருணத்திலும் வருத்தப்படவில்லை."

உங்களின் பயண வழி என்னவாக இருந்தது?

"கோவையில் தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக மும்பை சென்றடைந்தேன். அங்கிருந்து குஜராத், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு கஷ்மீர்... பின்பு, திரும்பும்போது டெல்லி, ஹைதரபாத், பெங்களூரு, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருச்சூர் கடைசியாக, ஆரம்பித்த கோவையில் வந்து முடித்தேன்."

பயணத்தில் சவாலாக இருந்த பகுதிகள் என்ன?

"உறுதியாக லே டூ மணாலி தான். கடுமையான பாதை. குளிர். ஆங்காங்கே நிலச் சரிவு. கொஞ்சம் ஸ்லிப்பானாலும் கூட, மரணம் நிச்சயம். அதில் ஓட்டியது பெரிய சவால். அதுமட்டுமில்லாம, கிட்டத்தட்ட 18 ஆயிரம் அடி உயரம்... ஆக்சிஜன் அளவு மிக குறைவு. ஒரு கட்டத்தில் ஆல்டிட்யூட் மெடிக்கல் சிக்னஸ் ( ALTITUDE MEDICAL SICKNESS ) வந்துவிட்டது. மயக்க நிலையிலேயே கிடந்தேன். அங்கு நான் தங்கியிருந்த கூடாரத்தின் ஓனர்கள் என்னை பத்திரமாக பார்த்துக் கொண்டார்கள். என்னோடு பயணித்த சக பயணிகளும், எனக்காக அவங்களோட பயண திட்டத்துல மாற்றம் செய்துட்டு எனக்கு உடல் தேறும் வரை என்னோடு இருந்தாங்க. அந்த நாட்களையும், அந்த மனிதர்களையும் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்."



மொத்த பயணத்துக்கான செலவு எவ்வளவு?

"பயணத்தோட மொத்த செலவு 1.3 லட்சம். இதில் பெரும்பாலான பணம் பெட்ரோலுக்குத் தான் செலவானது. வண்டியோட டேங்க் கெபாசிட்டி 20 லிட்டர். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் டேங்கை நிரப்பினேன். தோராயமாக ஒரு நாளைக்கு 300 கிமீட்டர் பயணித்தேன். "

பயணத்திற்குப் பின் உங்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள்?

"மனிதர்களை பொதுவாக அவர்களின் உடைகள், நடவடிக்கைகள் வைத்து ஜட்ஜ் செய்வதை முழுமையாக நிறுத்தியுள்ளேன். இவர் நம்மை ஏமாற்றிவிடுவாரோ என்ற பயத்திலேயே பிறரிடம் பழகும் எண்ணம் மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்தப் பயணத்தில் நான் சந்தித்த அத்தனை மனிதர்களும் அவ்வளவு அழகானவர்கள். எல்லாவற்றிருக்கும் மேலாக, என்னுடைய தன்னம்பிக்கை அதிகமாகியிருக்கிறது."

இப்படி ஒரு பயணத்தை முடித்துவிட்டு, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குள் போவது சாத்தியமா?

"கஷ்டம் தான் . ஆனால், வேறு வழியில்லை. வாழ்க்கைக்குப் பணம் அவசியமாகிறதே... இந்த பயணங்களின் நினைவுகளோடு, அடுத்த பயணத்திற்குத் தயாராக பணம் சேர்க்க தொடங்கியுள்ளேன். வேலை போரடிக்கிறது... வாழ்க்கைப் பிடிக்கவில்லை என்ற காரணங்களைக் காட்டி பயணம் கிளம்புபவர்களுக்கு ஒரேயொரு விஷயம்... பயணம் ஒரு " எஸ்கேபிசம்" கிடையாது. இதிலிருந்த தப்ப, பயணத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. பயணம் எவ்வளவு அழகானதோ, அதே அளவிற்கு கடினமானதும் கூட..." என்று சொல்லி முடிக்கிறார் சாய்க் குமார். அவர் இருக்கும் திசையில் தலைசாய்த்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது அந்த நீல நிற தண்டர் பேர்ட்...

- இரா. கலைச் செல்வன்.
Posted Date : 15:04 (23/12/2016)
Last updated : 15:05 (23/12/2016)


அரிதினும் அரிதான அரசியல் தலைவர்... கக்கன் நினைவு தின பகிர்வு !





1980-ம் ஆண்டு. தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த கால கட்டம் அது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுரை முத்துவை சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றார் எம்.ஜி.ஆர். அப்போது காளிமுத்து சொன்ன தகவலால் பதறி போனார் எம்.ஜி.ஆர். உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சாதாரண வார்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரை கண்ட உடன் கலங்கினார். உடனடியாக அவரை சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டார். அப்போது சிகிச்சை பெற்று வந்தவர் எம்.ஜி.ஆரிடம் வேண்டாம் என்றார். 'எல்லோருக்குமான சிகிச்சை பிரிவே எனக்கு போதும். நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி' என்றார் அவர்.

எம்.ஜி.ஆர். அங்கிருந்த மருத்துவ பொறுப்பாளர்களை அழைத்து, "இவர் யார் எனத் தெரியுமா? இவர் போன்றவர் பெற்றுத் தந்த சுதந்திரத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருக்கு தனி அறை வசதியும் உயர்ந்த மருத்துவமும் அளியுங்கள்" என உத்தரவிட்டுச் சென்றார். எம்.ஜி.ஆரை கலங்க வைத்த... 'இவரில்லாவிட்டால் நாம் இல்லை' என பெருமையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட நபர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் முக்கியமானவரான கக்கன். சென்னை சென்ற உடன் முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்து பயணம் போன்றவற்றிற்கு உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர். அத்தோடு கக்கனுக்கு ஓய்வூதியமும் கிடைக்க வழியேற்படுத்தினார்.

ஆனால் படிப்படியாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. 1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாளில் நினைவிழந்த கக்கன், நினைவு திரும்பாமலேயே 1981 டிசம்பர் 23-ம் நாள் இறந்தார். அவரின் நினைவு தினம் இன்று. உயிரே போகும் சூழலிலும் எளிமையாய் வாழ்ந்தவர் கக்கன். அவரது உடலை காமராசர் நினைவிடம் அருகே புதைக்கவேண்டும் என்பது அவரது உறவினர் மற்றும் நண்பர்களின் விருப்பமாக இருந்தது. அதை அரசின் காதுகளுக்கும் கொண்டு சென்றனர். ஆனால் கடைசி வரை அந்த குரலுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. மக்களோடு மக்களாக வாழ்ந்த தலைவன் 1981ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் எரியூட்டப்பட்டார். எளிமைக்கு உதாரணமாக திகழ்ந்த கக்கன் நினைவு தினம் இன்று.



பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எளிய வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ள வேண்டுமென்று வாழ்ந்து காட்டி தமிழ்நாட்டு மக்களின் மனதில் நிலைத்துவிட்ட கக்கன் பிறந்த ஊர் மேலூரிலிருந்து கொட்டாம்பட்டி செல்லும் வழியிலுள்ள தும்பைப்பட்டி. சமகால அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களை பார்த்துப்பழகிப்போன நமக்கு கக்கன் போன்ற தலைவர்களின் வரலாறு கண்ணீர் சிந்த வைக்கிறது.

காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைத்து அமைச்சர்களும் இவரைப்போன்று இருந்தார்களா என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், முதல்வராக இருந்த காமராஜரும், அமைச்சர் கக்கனும் சாகும் வரையில் எளிமையாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தார்கள் என்று அடித்து சொல்லலாம். இவர்களின் அரசியல் எதிரிகள் கூட இதை மறுக்கமாட்டார்கள்.

மேலூர்காரரான கக்கனுக்கு சென்னை திருவற்றியூர் தாங்கலில் மன்றம் வைத்து இன்றும் அவரைக் கொண்டாடுகிறார்களென்றால் அவருக்கு புகழ் எதனால் வந்தது என்பதை அறிய முடியும். இன்று மதுரை மாவட்டத்தில் நிலைத்து நிற்கும் பல நல்ல திட்டங்கள், பாசனக்கால்வாய்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமணைகள் என வருவதற்கு கக்கன் தான் காரணம். இருந்தாலும் அவர் விரும்பிய சாதீய சமநிலை மட்டும் மதுரை மாவட்டத்தில் இன்னும் வரவில்லை என்பதும் உண்மை.

இப்பவே அப்படியென்றால் அவர் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் இங்கு எவ்வளவு கீழ் நிலையில் இருந்திருப்பார்கள் என்பதை எண்ணி பார்க்கவே வேதனையாக உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.யில் ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்தவுடன், எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் அப்போது அவர் ரோல் மாடலாக ஏற்றுக்கொண்ட மகாத்மா காந்தி, காமராஜர் வழியில் செல்ல முடிவு செய்தார் கக்கன். பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை ஒன்றை மட்டும் எதிர்பார்த்து மற்றவர்கள் போராடியதற்கும் கக்கனின் போராட்டத்திற்கும் வேறுபாடு உண்டு. தான் பிறந்த சமூகத்தின் விடுதலைக்கும், நாட்டு விடுதலைக்கும் இணைந்து போராட வேண்டிய நிலையில் இருந்தார்.



தீண்டாமை கொடுமையை களைவதற்குமுன், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி அவசியம் என்பதில் குறியாக இருந்தார். அதனால்தான் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட அரிஜன சேவா சங்கத்தில் ஒரு வாலண்டியராக இணைந்து மேலூர் வட்டாரத்தில் தொடங்கப்பட்ட அரிஜனப்பள்ளியின் விடுதி பொறுப்பாளராக இருந்து சேவையாற்றினார்.

பகலில் விடுதலைபோராட்டம். இரவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்விப்பணி. தும்பைபட்டியில் அமைந்திருந்த ஊருணியில் ஒடுக்கப்பட்ட மக்களை தவிர மற்ற சாதியினர் அனைவரும் நீரெடுக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களோ ஊருக்கு வெளியிலிருந்த குளத்தை மட்டும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த அசுத்தமான குளத்துக்கு ஊர்க்காரர்கள் வைத்த பெயர் பீக்குளம்.

மேலூர் தாலுகா காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கனுக்கு இந்த கொடுமையை பார்த்து மனம் சகிக்கவில்லை. அதற்காக உடனே களத்தில் இறங்கி போராடவும் அவர் நினைக்கவில்லை. இந்த கொடுமையை தன்னோடு கட்சிப் பணியாற்றும் மற்ற காங்கிரஸ் காரர்களிடம் சொல்லியும் பலனில்லை. காரணம் அந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியில் சாதிக்கட்டமைப்பையும், தீண்டாமயையும் ஆதரிப்பவர்களே அதிகம் அங்கம் வகித்தனர்.

கக்கனின் வேதனையை புரிந்துகொண்ட தும்பைபட்டி அம்பலம் ஒருவரும் செட்டியார் ஒருவரும் ஊர் பஞ்சாயத்தை கூட்டி தாழ்த்தப்பட்ட மக்களையும் ஊர் பொதுக்குளத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று பேசினார்கள். பொங்கி எழுந்த ஆதிக்க சாதி கூட்டம், இந்த இரண்டு பேரையும் தாக்க முற்பட்டனர். வாக்கு வாதத்துக்கு பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள், குளத்தின் இன்னொரு கரையை பயன்படுத்திக்கொள்ள ஒத்துக்கொண்டனர்.



இது ஒரு அரைகுறை தீர்வென்றாலும் அந்த காலகட்டத்தில் ஆதிக்க சாதியினர் இந்தளவுக்கு இறங்கி வந்ததே பெரிய சாதனைதான். காமாரஜருக்கு அடுத்து கக்கனுக்கு மிகவும் பிடித்தவர் யாரென்றால் அமைதி வழியில் போராடும் குணத்தை உருவாக்கிய வைத்தியநாதய்யர். அரிஜன மக்களின் முன்னேற்றத்தில் எந்தவொரு பாசாங்குமில்லாமல் உழைத்தவர் வைத்தியநாதய்யர்.

இதற்காக அவர் இழந்தது ஏராளம். மீனாட்சியம்மன் கோயில் ஆலய நுழைவுப்போராட்டத்தை கக்கனோடு சேர்ந்துதான நடத்தினார். அதற்கு பின்பும் கக்கனுக்கு பல வகையிலும் உதவியாக இருந்தார். அதனால்தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது 1955 ம் ஆண்டு வைத்தியநாதய்யர் இறந்தார். தகவலறிந்து உடனே மதுரை கிளம்பினார் கக்கன்.

இறுதிச்சடங்கு செய்யும் நேரத்தில் வைத்தியநாதய்யரின் பிள்ளைகளோடு கக்கனும் மொட்டையடித்து கொள்ளி வைக்க தயாரானார். இதனைக்கண்ட ஐயரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். வைத்தியநாதய்யரின் பிள்ளைகளோ, நாங்கள் பிறப்பால் மகன்கள். கக்கன் வளர்ப்பால் மகன். அவருக்கும் உரிமை இருக்கிறது என்றனர். இதைக் கேட்ட ஐயரின் உறவினர்கள் அதிர்ந்து போனார்கள். சிலர் கோவித்துக்கொண்டு இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் கிளம்பி சென்றார்கள்.

காங்கிரசை கடுமையாக எதிர்த்தாலும் அரியலூர், மேலூர் சட்டமன்றத்தொகுதியில் கக்கன் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை திமுக. கக்கன் மீது தனி மரியாதை வைத்திருந்தது. 1967ல் காங்கிரஸ் ஆட்சிக்கு பெரும் கெட்ட பெயர் ஏற்பட்ட நிலையில்தான் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தினார்கள். காங்கிரசின் படுதோல்விக்கு பிறகு மிகவும் கஷ்டமான நிலைக்கு கக்கன் குடும்பம் சென்றுவிட்டது. நிறைய கடன் வேறு. அதை தெரிந்துகொண்ட பழ.நெடுமாறன் மதுரையில் கக்கனுக்கு மணிவிழா எடுத்து நிதி வசூல் செய்து 21 ஆயிரம் வழங்கினார். அதை வங்கியில் டெபாசிட் செய்ய மறுத்த கக்கன், நாவினிபட்டி பண்ணையார் போன்றவர்கள் தேர்தல் செலவுக்கு நன்கொடையாக கொடுத்த பணத்தை கடனாக எழுதி வைத்திருந்தார். நெடுமாறன் வழங்கிய நிதியின் மூலம் இக்கடன்களை அவர்கள் கேட்காமலே அடைத்தார்.



அப்போது மதுரை மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர் பின்னாளில் புதுவை பலகலைகழக வேந்தராக பதவி வகித்த வேங்கடசுப்ரமணியன். இவரிடம் மதுரை மாவட்ட தலித் மக்களின் நிலையை எடுத்து சொல்லி விடுதிகளுடன் கூடிய பள்ளிகளை அதிகம் திறக்க வைத்தார். அதில் பிற்பட்ட சாதி மாணவர்களுக்கும் அதிக விடுதிகள் கட்ட ஏற்பாடு செய்தார். ஓராசிரியர் பள்ளிகள் அதிகம் திறக்கப்பட்டது.

காவல்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். அவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். லஞ்ச ஒழிப்பு துறையை உருவாக்கியதும் இவர்தான். சாதி கலவரங்களுக்கு அடிப்படையாக உள்ள பிரச்னைகளை கண்டறிய தனி பிரிவை காவல்துறையில் ஏற்படுத்தினார். என்னதான் காவல்துறையை அவர் கண்ட்ரோலில் வைத்திருந்தாலும், கலவரங்களில் உயர்சாதி வெறியோடு செயல்படும் காவலர்களை, அதிகாரிகளை தடுக்கவோ தண்டிக்கவோ அவரால் முடியவில்லை. வெளியே சொல்ல முடியாத இந்த வேதனை அவரிடம் இருந்துள்ளது.

கக்கனிடம் நீண்டகாலம் தனிச்செயலாளராகப் பணியாற்றிய கே.ஆர். நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் சொல்லும்போது, "விடுதலை வேள்வியில் சவுக்கடிகளின் தழும்புகளைப் பரிசாகப்பெற்றவர். சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளானவர். அரசியல் உலகில் பிழைக்கத்தெரியாதவர் என்ற பட்டப்பெயருக்குச் சொந்தக்காரர். இன்றைக்கு அவரை யார் நினைக்கிறார்கள். அவர் செய்த ஒரே பாவம் தாழ்த்தப்பட்ட குலத்திலே பிறந்தது தான். பார்த்தால் பாவம், தொட்டால் தீட்டு என்கிற வர்ணாசிரம அகராதியில் அவர் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டார். தமிழகத்தில் இதுவரை கக்கன்ஜியைவிட உயர்ந்தவர்கள் எவரும் இல்லை. இனியும் பிறக்கப்போவதும் இல்லை. இது சத்தியம்.." என்றிருந்தார்....அது உண்மையிலும் உண்மைதான்.

மூத்தவர்கள் தங்கள் பதவிகளை விட்டு விலகி கட்சிப்பணிகளை செய்ய வேண்டுமென்று அறிவித்து அதற்கு தானே முன்னுதராணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகிய காமராஜர், அடுத்த முதல்வராக கக்கனை முன்மொழிய நினைத்தார். இதை தெரிந்துகொண்ட கக்கனோ, தன்னைவிட சீனியரான பக்தவச்சலத்தை முன்மொழிந்தார். காமராஜரின் ஆசை நிறைவேறாமல் போனது.

கக்கன்ஜியின் அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கையை பற்றி நிறைய சம்பவங்களை கூறலாம். அது ஓரளவு நமக்கு தெரிந்த விஷயங்கள்தான். ஊழலிலும் குற்றங்களிலும் புழுத்துப்போன சமகால அரசியலை அவதானித்துவரும் இன்றைய செல்பி தலைமுறையினருக்கு மீண்டும் மீண்டும் இவைகளை நினைவு படுத்த வேண்டியது அவசியம்.....

வேளாண்மைத் துறை அமைச்சராக கக்கன் இருந்தபோது அவரை மலேஷிய நாட்டின் வேளாண்மைத் துறை அமைச்சர் சந்திக்க வந்திருந்தார். அவர் கக்கனுக்கு ஒரு பேனா பரிசளித்தார். கக்கன் அந்த பேனாவை ஆச்சரியமாக பார்த்தார். அதற்கு மலேஷிய அமைச்சர், இது தங்கப்பேனா என்றார். அப்படியானால் இதை வைத்துக்கொள்ளும் தகுதி எனக்கில்லை. நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.. என்றார் கக்கன்.

மலேஷிய அமைச்சரோ இது நட்பிற்கான அடையாளம். எனது பரிசு என்றார். உடனே கக்கன், தன் உதவியாளரை அழைத்து, பதிவு புத்தகத்தில் இந்த பேனா வந்தது குறித்து பதிவு செய்து எடுத்து வாருங்கள் என்றார். மலேஷிய அமைச்சர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை பதிவு செய்யாமல் வாங்கிக்கொள்ள கக்கன் உடன்படவில்லை. கடுப்பான மலேஷிய அமைச்சர் அந்த பேனாவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

கக்கனின் தம்பி விஸ்வநாதன், சிறந்த ஓட்டப்பந்தய வீரர். இவருக்கு போலீஸ் வேலையில் சேர ஆர்டர் வந்தது. இந்த விஷயத்தை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அண்ணன் கக்கனிடம் விஸ்வநாதன் சொல்ல, வேண்டாம், நீ போலீஸ் வேலையில் சேரக்கூடாது. அந்த துறை என் பொறுப்பில் உள்ளது. நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், என் சிபாரிசில் வந்ததாகச் சொல்வார்கள் என்று அவரை போலீசில் சேர கக்கன் அனுமதிக்கவில்லை.
உடனே அப்போது ஐ.ஜியாக இருந்த அருளைக் கூப்பிட்டு, விஸ்வநாதனின் விரல்கள் சரியாக செயல்படாது. துப்பாக்கியை கையாளுவதெல்லாம் சிரமம். பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறவர்கள் முழுத் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும் என்று சொன்னதோடு அவருக்கு வழங்க இருந்த பணி ஆணையையும் நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

ஆனால் உண்மை என்னவென்றால், விஸ்வநாதன் இளவயதில் விளையாடும்போது தவறிவிழுந்ததால் அவரது வலது முழங்கையின் மேல்புறத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் சுண்டு விரலும் மோதிர விரலும் சற்று வளைந்திருந்தது இதை விஸ்வநாதன் அருளிடம் தெரிவிக்க.. இதற்காகவா அமைச்சர் அப்படி கூறினார், என போலிஸ் அதிகாரி அருள் ரொம்பவும் கவலைப்பட்டுள்ளார்.

இப்படி தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏகப்பட்ட சம்பவங்களை நாம் கற்றுக்கொள்ள பாடமாக வைத்துவிட்டு சென்றுள்ள கக்கனை இன்று மட்டுமல்ல எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஏனென்றால் கக்கன் அரிதினும் அரிதான அரசியல் தலைவர் கக்கன்.

'வர்தா' துயர் துடைக்க வந்தவர்களை அடித்து துரத்திய அ.தி.மு.க.வினர்


தருமபுரி : வர்தா புயலால் சிக்கி சின்னாப்பின்னமான நகரை சீர்படுத்த வந்த துப்புரவு தொழிலாளர்களை அ.தி.மு.க.வினர் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை மையப்படுத்தி அடித்த வர்தா புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றிருந்தது. லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்களும் புயல் காற்றில் சாய்ந்து விழுந்தன. இதனால் மின்சாரம், குடிநீர், போக்குவரத்து வசதிகள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகின. சாலைகள் தோறும் மரங்கள் வீழ்ந்து கிடக்க... மரங்களை அகற்ற... மின் வினியோகத்தை சீர்படுத்த தமிழகம் முழுவதும் இருந்து ஆதரவுக்கரம் நீட்டியது அரசு பணியாளர்கள் தான்.
அனைத்து மாவட்டங்களில் இருந்து துப்புரது தொழிலாளர்கள், மின்வாரிய தொழிலாளர்கள், வனத்துறையினர் உள்ளிட்டோர் சென்னை வந்து, மரங்களை அகற்றுவது, துப்புரவு பணிகள், மின் வினியோக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இப்படி பணியாற்ற வந்த இடத்தில் துப்புரவு பணியாளர்களை அடித்து கொடுமைப்படுத்திய நிகழ்வு அரங்கேறி இருப்பது தான் வேதனை.

வர்தா புயலால் சென்னையில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில். சேலம் மாவட்டத்திலிருந்து 119 ஆண் துப்புரவு பணிளர்கள் கடந்த சில நாட்களாக ஈடுபட்டனர். வேளச்சேரி பகுதியில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தியும், சாலைகளை தூய்மைபடுத்தும் வேலைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று விஜயா நகரில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர்களை, வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பாலன், மாது,ராவி,ராமக்கிருஷ்ணன் ஆகிய நால்வருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னைக்கு சென்றிருக்கும் சேலம் துப்புரவு பணியாளர்களிடம் பேசினோம், “நேற்று மதியம் ஒரு மணி இருக்கும் நாங்க ஒரு பத்துபேர் விஜயா நகர் பகுதியில் சுத்தம் பண்ணிகிட்டு இருந்தோம். அப்ப அந்த பகுதியோட வட்டச்செயலாளர் சம்பத்ங்கறவர் எங்க கிட்ட வந்து, கபாலி நகருக்கு சுத்தம் பண்ண வரச்சொன்னார். ஆனா, விஜயா நகரில் இன்னும் வேலை முடிக்கலை. அவர் பேச்சையும் தட்ட முடியாதுங்குறதுக்காக ஒரு நாலுபேர முதல்ல கபாலிநகருக்கு போக சொல்லிட்டு. மத்தவங்க விஜயா நகர்ல இருக்கும் வேலைய முடிச்சிட்டு அங்க போகலாம்னு நினைச்சு வேக வேகமா வேலை பாத்துகிட்டு இருந்தோம்.

அப்ப, அவர் என்ன நினச்சாரோ தெரியல. நான் கூப்பிட்டா நீங்க எல்லாரும் வர மாட்டீங்களாடானு, கெட்டவார்த்தையில் திட்டினாரு. அதை பொறுத்துகிட்டு தான் நாங்க நின்னோம். திடீர்னு ஓரமாக கிடந்த மரக் கட்டையை எடுத்து அடிக்க ஆரம்பிச்சார். இதுல பாலன், மாது, ரவி, ராமகிருஷ்ணன் ஆகிய நாலு பேருக்கு அடி விழுந்துச்சு. அவர் கூட வந்த இன்னொருத்தரும் தன் பங்குக்கு ஒரு குச்சிய எடுத்து அடிச்சார். எல்லோருக்கும் பலமான அடி வலி தாங்கல..

உடனே மாநகராட்சி கமிஷனருக்கு தகவல் கொடுத்தோம்.. அவர் அமைச்சர் வரைக்கும் பேசியிருக்கிறார். ராத்திரி 7 மணிக்கு சரவணன்னு ஒருத்தர் வந்தார் வேளச்சேரி அ.தி.மு.க பகுதி செயலாளர்னு சொன்னாங்க. “நடந்தது மிகப்பெரிய தப்புதான் மன்னிச்சிடுங்க. விஷயத்தை பெருசு பண்ணாதிங்க நான் மேல பேசிடுறேன்.. நீங்க எல்லாரும் நாளைக்கு வேலைய முடிச்சிட்டு கிளம்பிடுங்க, மன்னிச்சுடுங்கனு கையெடுத்து கும்பிட்டார். வேலை இன்னும் இருந்துச்சு. நாங்க இருந்தா விஷயம் பெருசாகிடும்ங்குறதால எங்களை உடனே ரிலீவ் பண்ணி அனுப்பிட்டாங்க," என்றனர்.

அழுக்கு உடை அணிந்து 'சேவை' செய்தவர்களை, 'வெள்ளை' உடை அணிந்தவர்கள் அடித்து விரட்டியிருக்கிறார்கள்.



VIEW COMMENTSPOST COMMENT

செல்லாக்காசு : 50 நாட்களை நெருங்குகிறோம்... நிலைமை சரியானதா? #Demonetisation

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளுக்குத் தடை கொண்டு வரப்பட்டு இன்றோடு (23.12 2016) 45 நாட்கள் ஆகிறது. அப்பாவி மக்கள் வங்கிகள் மற்றும் ஏ. டி. எம்-களில் வரிசையில் நிற்கும் நிலை மாறவில்லை. முதலில் இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்றார்கள். ஒரு வாரம் என்றார்கள், கடைசியாக 50 நாட்களில் சரியாகி விடும் என்று கூறினார்கள். தற்போது 50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.இன்னும் நிலைமை சரியான பாடில்லை. பணம் இருக்கும் ஏ.டி.எம்-களைத் தேடி மக்கள் அலைகின்றனர். அதே போன்று வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகை கிரடிட் ஆகாமல் பவுன்ஸ் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. 500,1000 ரூபாய் மட்டும் செல்லாக்காசு ஆக மாறவில்லை. சாதாரண மனிதர்களின் வாழ்கையும் தான். இது குறித்து வங்கியிலும் ஏ.டி.எம் - களிலும் நின்றிருந்த மக்களிடம் பேசினோம்.

செக் பவுன்ஞ்ச் அவமானம் ...

எழும்பூரில் இந்தியன் வங்கி வாயிலில் காத்திருந்த ரேணுகாவிடம் பேசினோம். "கடந்த மாதம் 23-ம் தேதி காசோலை டெபாசிட் செய்தேன். இன்னும் என் கணக்கில் கிரெடிட் ஆகவில்லை. நான் மற்றவர்களுக்கு கொடுத்த செக்-கள் பவுன்ஞ்ச் ஆகிவிட்டன.கடன் கொடுக்க வேண்டியவர்கள் முன்பு கூனிக் குறுகி நிற்கின்றேன். மிக வேதனையாக உள்ளது. ஆன்லைன் ஆன்லைன் என்கிறார்கள் இதனால் பாதிக்கப்படப் போவது முதியவர்கள்தான். அவர்களைப் பற்றி யாரும் யோசிக்கவில்லையா?" என்றார்.



ஏ.டி.எம் வாசலில் நின்றிருந்த பாலகிருஷ்ணனிடம் பேசினோம்."பணம் அதிகமாக வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி எடுத்துக் கொள்வார்கள். ஐந்தும், பத்துமாக குருவி சேர்ப்பது போன்று சேர்த்து வைத்த பணத்தை வங்கிகளில் இருந்து எடுத்துச் செலவு செய்யும் நாங்கள், எப்படிப் பணம் எடுக்க முடியும். கார்டில் தேய்த்து செலவு செய்யுங்கள் என்கிறார்கள். கார்டில் பணம் அதிகமாக இருந்தால்தானே தேய்க்க முடியும் பணம் இல்லாமல் என்ன செய்ய முடியும்" என்றார்.

என் பணத்திற்கு நானே பிச்சைக்காரன்

"என்னுடைய பணத்துக்கு என்னையே பிச்சைக்காரனாக மாற்றியுள்ளார்கள். அதுதான் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. செய்கிற வேலையெல்லாம் விட்டுவிட்டு நாள் கணக்கில் வங்கி வாசலில் காத்திருக்கிறேன். அவமானமாக உள்ளது" என்கிறார் அப்துல்காதர்.

சிங்கப்பூரில் இருந்து வந்து தனது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் காத்திருக்கும் விநோத்திடம் பேசினோம். "ஆயிரம் ரூபாய் இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாகத் திண்டாடுகிறேன். இதுவரை பணம் எடுக்க முடியவில்லை. இந்த நிமிடம் வரை பணம் எடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறேன்"என்று கலங்கினார்.

பணம் எடுக்க வந்த செல்வியிடம் பேசினோம்."தெருத் தெருவாக காலையில் இருந்து அலைந்து கொண்டிருக்கிறேன். ஒரு ஏ.டி.எம் கூட திறக்கப்படவில்லை. திறந்துள்ள ஏ.டி .எம்-கள் வேலை செய்யவில்லை. எனது அன்றாடப் பணிகள் எல்லாம் பாதிக்கப்படுகிறது. வேலை பார்ப்பேனா, குடும்பத்தை பார்ப்பேனா, பணத்துக்காக அலைவேனா சொல்லுங்க" என்றார்.

அண்ணாச்சி கடையில் சரக்கு வாங்கும் எனக்கு எதுக்கு ஆன்லைன் !

"பாரிமுனையில் உள்ள நகைக்கடைகளில் 500 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் வங்கிகளில் கிடைக்கவில்லை. மக்களை ஏமாளிகள் என்று நினைக்கிறார்கள். ஆன்லைன், ஆன்லைன் என்று சொல்கிறார்கள். அண்ணாச்சி கடையில் சரக்கு வாங்கும் எனக்கு எதுக்கு ஆன்லைன் சொல்லுங்க. முதலில் நாட்டு மக்களை வளரச் செய்துவிட்டு வங்கி கார்டுகளை வழங்குங்கள்" என்றார் வெங்கட்.

ஆன் லைன் ஆன் லைன் என்று சொல்கிறார்கள் படித்தவர்கள் எளிதாகப் பயன்படுத்த முடியும். படிக்காத விவசாயிகளும், வேலைக்கார்களும் எப்படிப் பயன்படுத்த முடியும். அவர்கள் எங்கே போவார்கள் அவர்களுக்கு ஏது ஆன்லைன் வசதி, பாஸ்வேர்டு" என்றார் மல்ஹோத்ரா.



20 சதவிகித ஏ.டி.எம்-களே திறந்துள்ளது !

இது குறித்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச்செயலாளர்.சி பி கிருஷ்ணாவிடம் பேசியபோது,"நாட்டில் பெரும்பாலான வங்கிகள் மற்றும் ஏ.டி. எம்-களில் பணம் இல்லை. ஒரு நாளைக்கு நாலாயிரம் கோடி அச்சாகிற பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் உள்ள ஏ.டி.எம்-களில் 80 சதவிகித ஏ.டி.எம் - கள் மூடப்பட்டுள்ளன. 20 சதவிகித ஏ.டி.எம்-கள்தான் திறக்கப்பட்டுள்ளன. அதிலும் இரண்டு மூன்று மணி நேரம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

வரும் 30 -தேதி முதல் நிலைமை சரியாகும் என்று ஆர்.பி.ஐ சொல்லியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அது உண்மையா? என்று தெரியவில்லை. ஆனால் வங்கியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களே பணம் இல்லை என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டச்சார்யாவே பணம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

பணப்பற்றாக்குறை வரும் 30-ம் தேதி முதல் சீராக வாய்ப்பில்லை. இந்தியாவில் பணத்தை அச்சடிக்க 4 அச்சகங்கள் மட்டுமே உள்ளது. இந்த அச்சகங்கள் மூலம் தேவையான 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க குறைந்தபட்சம் ஏப்ரல் மாதம் ஆகிவிடும்.

மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம் 2,000 ரூபாய் நோட்டை ஏன் தருகிறீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்கவில்லை. 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற நடைமுறையை ஏன் செயல்படுத்தவில்லை என்று நீதிபதிகளும் கேட்கவில்லை. இப்படி இருக்கிற சூழலில் நிலைமை எங்கே சரியாவது? மத்திய அரசு தனது போக்கை எப்படி மாற்றிக் கொள்ளும்" என்றார்.

50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை முழுமையாக எடுக்க முடிவில்லை. 500 மற்றும் 1000 ரூபாய்க்கான தடை அறிவிப்பை திடீரென்று அறிவித்து நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மோடி, அதனை சரிபடுத்தும் நடவடிக்கையை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு !

- கே.புவனேஸ்வரி

ராம மோகன ராவ் திடீரென மருத்துவமனையில் அனுமதி


முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவின் வீடு, தலைமை செயலக அலுவலகம், அவரது மகன் மற்றும் உறவினர்களது வீடு ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது, ராம மோகன ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 08.06.2026