Sunday, December 25, 2016

என் பெயர் சைக்கிள் ரிக் ஷா’: கும்பகோணத்தில் ஓடிய 1,500-ல் எஞ்சியது 5 மட்டுமே! வி.சுந்தர்ராஜ்

கும்பகோணத்தில் சவாரிக்காக காத்திருக்கும் சைக்கிள் ரிக் ஷா தொழிலாளர்கள்.

கடந்த 1980-ம் ஆண்டு வாக்கில் கும்பகோணம் நகரில் எங்கு திரும்பினாலும் சைக்கிள் ரிக் ஷாக்கள்தான் தென்படும். அப் போது, 1,500 ரிக் ஷாக்கள் ஓடிக் கொண்டிருந்த கும்பகோணத்தில் தற்போது இயங்குபவை வெறும் ஐந்தே ஐந்துதான்.

இந்த தொழில் எப்படி நசிந்தது, இதில் ஈடுபட்ட தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்?

கும்பகோணம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கூண்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஏராளமான எண்ணிக்கையில் இருந்தன. பின்னர் சைக்கிள் ரிக் ஷாக்கள் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டன.

கும்பகோணத்தில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், பாலக்கரை காய்கறி சந்தை, அரசு மருத்துவமனை, காந்தி பூங்கா, பெரிய தெரு உள்ளிட்ட இடங்களில் சைக்கிள் ரிக் ஷா ஸ்டாண்டுகள் இருந்தன.

வெளியூரிலிருந்து வருபவர் களும், உள்ளூரில் உள்ளவர்களும் ரிக் ஷாக்காரர்களை பாசத்தோடு சவாரிக்கு அழைத்து செல்வார்கள். நியாய மான கூலியைத் தருவதுடன், உழைப்பைப் பார்த்து சற்று கூடுத லாகவும் கொடுக்கும் காலமும், மனதும் அப்போது இருந்தது.

பின்னர் மோட்டார் வாகனங் களின் வளர்ச்சியால் ஆட்டோக்கள் வரத் தொடங்கின. செல்ல வேண்டிய இடத்துக்கு விரைவாகச் செல்வதற்கு எளிதான வாகனமாக ஆட்டோக்கள் இருந்ததால், பொதுமக்களும் சைக்கிள் ரிக் ஷாவைத் தவிர்த்து விட்டு ஆட்டோக்களை பயன் படுத்தத் தொடங்கினர்.

நாடு முழுவதும் ரிக் ஷாக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், பாரம்பரியமிக்க நகரமாகவும், கோயில் நகரமாகவும் உள்ள கும்பகோணத்தில் இன்றும் 5 பேர் சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர்.

கும்பகோணம் ரயில் நிலை யத்தில் காலையில் ரயில் வரும் நேரங்களில் இவர்கள் ஆஜராகி, பயணிகளை சவாரிக்கு அழைக்கின் றனர். ஆனால், யாருமே அவர் களைக் கண்டுகொள்வதில்லை என்றாலும், நாள்தோறும் ரயில் வரும்போதெல்லாம் சளைக் காமல் வந்து காத்திருந்து எப்படியாவது ஒரு சவாரியாவது ஏற்றிச் செல்கின்றனர்.

ரிக் ஷா ஓட்டும் தொழிலாளர் கள் முருகையன்(69), ஆனந்தன் (57), ராமகிருஷ்ணன்(72), காந்தி(69) ஆகியோர் கூறியது: நாங்கள் 40 ஆண்டுகளாக ரிக் ஷா ஓட்டி வருகிறோம். அப்போது எம்ஜிஆர் நடித்த ரிக் ஷாக்காரன் படம் வந்தபோது எங்களுக்கு பெரும் மரியாதையும் மதிப்பும் இருந்தது. இப்போது அதெல்லாம் போய்விட்டது. நாங்கள் ரயில் நிலையத்தை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துகிறோம். சென்னை போன்ற நகரங்களிலிருந்து வரும் வயதானவர்கள் ரிக் ஷாவில் ஏறு கிறார்கள். ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய் கிடைத்தாலே அதிகம். வறுமையில் வாடும் எங்களுக்கு மாத உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாங்கள் ரயில் நிலையத்தில் ரிக் ஷாவை நிறுத்த ஆண்டுதோறும் பணம் கட்ட வேண்டும். எங்களது நிலையைப் பார்த்து இங்குள்ள பார்சல் கையாளுபவர்களே பணம் கட்டி விடுவார்கள். ஆட்டோக்கள் வந்ததும் பலர் ஆட்டோ ஓட்டவும், மார்க்கெட்டில் கூலி வேலைக்கும் சென்றுவிட்டனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றோம். தாங்கள் ரிக் ஷாவில் செல்வதை மற்ற குழந்தைகள் கேலி செய்வதாகவும், எங்கள் வாகனங்கள் வேண்டாம் என்றும் பெற்றோரிடம் குழந்தைகள் கூறிய தால், யாரும் எங்களுக்கு சவாரி கொடுப்பதில்லை. எங்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது. இந்த பிழைப்பு எங்கள் தலை முறை யோடு முடிந்துவிடும். இவ்வாறு வேதனையுடன் தெரிவித்தனர்.

குறைந்த கட்டணம், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனம், சக மனிதனின் உழைப்பை நேரடியாக பார்த்து நெகிழும் மனிதம் என ரிக் ஷா வண்டிக்கென தனி அடையாளங்கள் உள்ளன. எனவே, குறைந்த தூரங்களுக்குச் செல்லும்போது இந்த ரிக் ஷாக்களை சவாரிக்காக பயன்படுத்துவோம். இதன்மூலம் ரிக் ஷாக்காரர்களின் வாழ்வாதா ரத்தை நாம் காப்பது மட்டுமல்ல, பரபரக்கும் இந்த அவரச காலத் திலும் ஒரு பாரம்பரியத்தை காத்து நின்ற பெருமை நம்மைச் சேரும்.

தமிழகத்தில் வருமான வரி சோதனைகளை தீவிரமாக்க அதிகாரிகள் முடிவு: ஹைதராபாத் சிறப்புக் குழு சென்னையில் ஆலோசனை

ராமமோகன ராவ் | கோப்பு படம்


ராமமோகன ராவை கைது செய்யும் முயற்சிகள் தீவிரம் | சொத்துகளை கணக்கெடுக்கும் பணியில் தனிக்குழு

தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனையை மேலும் தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஹைதராபாத்தில் இருந்து மேலும் 60 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். முக்கியப் பிரமுகர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். முதல் கட்டமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமமோகன ராவை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை தி.நகரில் வசிக்கும் தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது உறவினர், நண்பர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்கள் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத 144 கோடி ரொக்கம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டில் கடந்த 21-ம் தேதி வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அவரது மகன் விவேக், உறவினர்களின் வீடு, அலுவலகங்கள் என 14 இடங்களில் சோதனை நடந்தது.

ராமமோகன ராவ் வீட்டில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.30 லட்சம் (புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் உட்பட) ரொக்கம், அவரது மகன் விவேக் வீட்டில் இருந்து பல கோடி பணம், 10 கிலோ தங்கம், வைர நகைகள், பல கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டதாக கூறப்பட்டது.

சேகர் ரெட்டி, அவரது நண்பர்கள், உறவினர்கள், ராமமோகன ராவ், அவரது மகன் மற்றும் உறவினர் வீடுகளில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள், பணம், ஆவணங்கள் சிக்கியிருப்பது வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான மணல் வியாபாரிகள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆகியோரின் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கும் கோடிக்கணக் கான மதிப்புள்ள தங்கக் கட்டிகள், பணம், ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. எனவே, தமிழகத்தில் சோதனை மற்றும் விசாரணையை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே, 60 வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமை யிலான தனிப்படையினர் தமிழகத் தில் சோதனை நடத்தி வருகின்றனர். அடுத்தகட்டமாக மேலும் பலரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதற்காக ஹைதராபாத்தில் இருந்து 60 அதிகாரிகளை வரவழைத் துள்ளனர். அவர்கள் நேற்று மதியம் விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவல கத்துக்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ராமமோகன ராவ் வீட்டில் சிக்கிய ரகசிய டைரி, அவரது அலுவல கத்தில் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட கம்ப்யூட்டர் டிஸ்க் ஆகிய வற்றில் பதிவாகி இருந்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வியூகம் அமைத்துள்ளனர். இதன் முதல்கட்டமாக, நெஞ்சுவலி என்று கூறி போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமமோகன ராவை எந்த நேரத்திலும் கைது செய்து, தங்கள் கட்டுப்பாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்டு வரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சோதனையின்போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் சொத்துகளை கணக்கெடுக்கும் பணியில் தனிக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வைத்து மேலும் சில அதிகாரிகள், அரசியல்வாதிகள் வீடுகளில் அடுத்தடுத்து எந்த நேரமும் சோதனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த சோதனைக்கு தமிழக போலீஸார் ஒத்துழைக்க மறுத்தால், துணை ராணுவத்தை பாதுகாப்புப் பணிக்கு ஈடுபடுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது. ஏற்கெனவே ராமமோகன ராவ் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் சோதனை நடந்த போதும் துணை ராணுவத்தினர் தான் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டி ருந்தனர்.

அதேபோல இனிவரும் காலங் களிலும் துணை ராணுவத்தினரின் துணையுடன் சோதனைகளை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள் ளதாகவும் இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி விட்டதா கவும், 20 கம்பெனி துணை ராணுவத் தினர் தயார் நிலையில் உள்ளதா கவும் கூறப்படுகிறது. வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி முடிவால் முக்கிய அரசியல் வாதிகள், அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, வருமான வரித் துறையினர் சோதனை குறித்து ஊர்ஜிதப்படுத்தப்படாத பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. ‘ராமமோகன ராவ் வீட்டில் சிக்கிய சொத்து ஆவணங்களின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும். அவர், ரூ.1,700 கோடி மதிப்பில் துபாயில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றை வாங்கியுள்ளார்’ என்றெல் லாம் பல தகவல்கள் வருகின்றன. இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகள், சொத்து மதிப்பு குறித்த உண்மையான தகவல்களை வருமான வரித்துறையினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராமமோகன ராவுக்கு ‘திடீர்’ நெஞ்சுவலி

சோதனையில் சிக்கிய பணம், நகை, சொத்து ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக ராமமோகன ராவ், அவரது மகன் விவேக், நண்பர் அமலநாதன் ஆகியோருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதில், அமலநாதன் மட்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 55 கேள்விகளை கேட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் பதில்களை பெற்றுள்ளனர். அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அழைக்கும்போது வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

ராமமோகன ராவும் அவரது மகனும் விசாரணைக்கு வருவார்கள் என எதிர்பார்த்து வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால், இருவரும் ஆஜராகவில்லை. மற்றொரு நாளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறோம் என வேறு நபர் மூலம் தகவல் அனுப்பியதாகவும், அதை வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தந்தை, மகன் இருவரும் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 1 மணி அளவில் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ராமமோகன ராவ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அவருக்கு ஓய்வு தேவை எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.






விவேக், தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரை தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், ராமமோகன ராவுக்கு திடீரென ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து உளவுப் பிரிவு போலீஸார் மூலம் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் திரட்டி வருகின்றனர். எந்த நிலையிலும் விசாரணையில் இருந்து யாரும் தப்ப முடியாது என வருமான வரித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

களம் புதிது: அரசு அதிகாரத்தின் பெண் முகம்!

Return to frontpage

படம்: வி.கணேசன்

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரே, நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளரின் பணிகள் என்ன?

ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சி மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர் (சட்டமன்ற கட்சித் தலைவர்) முதல்வராக இருப்பார். அந்த மாநிலத்தை நிர்வாக ரீதியாக ஆள்பவர் தலைமைச் செயலாளர்தான். இவரது நேரடிக் கட்டுப்பாட்டில்தான் மாநிலக் காவல் துறை, ஒட்டுமொத்த அரசு நிர்வாகம், அரசின் நிதி நிலை அறிக்கை தயாரிப்பு, நிதி மேலாண்மை போன்றவை இயங்கிவருகின்றன.

அரசின் கொள்கை முடிவுகளை நிர்வாக ரீதியாக நிறைவேற்ற முடியுமா, முடியாதா என்பதைத் தீர்மானிப்பது தலைமைச் செயலாளர்தான். மாநில சட்டப் பேரவையில் புதிய திட்டங்களை முதல்வர் அறிவிப்பார். அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தும் முக்கியப் பொறுப்பு தலைமைச் செயலாளருக்குத்தான் உண்டு. அரசுத் திட்டங்களை அந்தந்தத் துறைகளின் செயலாளர்கள் உரிய முறையில் நிறைவேற்று கிறார்களா, திட்டப் பலன்கள் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை அவ்வப்போது துறைச் செயலாளர்களின் ஆய்வுக் கூட்டம் நடத்தி தலைமைச் செயலாளர் உறுதி செய்வார்.

உள்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், பள்ளிக் கல்வி, உயர்கல்வி, வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப் படுகிறன்றனவா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பும் தலைமைச் செயலாளருக்குத்தான் இருக்கிறது.

ஒரு திட்டத்தில் இருக்கும் சாதக, பாதக அம்சங்கள், அவற்றுக்கான நிதி ஆதாரம், நடைமுறைப் பிரச்சினைகள் என எல்லாவற்றையும் முதல்வருக்குத் தலைமைச் செயலாளர்தான் எடுத்துரைக்க வேண்டும். மத்திய அரசு நிதி உதவி பெறும் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகச் செலவிடப்படுகிறதா என்பது குறித்தும் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமைச்சர்களால் பிரச்சினை ஏற்பட்டால் அது குறித்து முதல்வர் கவனத்துக்கு தலைமைச் செயலாளர்தான் கொண்டு செல்வார். ஐ.ஏ.எஸ். அதிகாரி தவறு செய்யும்போது முதல் கட்ட விசாரணை நடத்தப்படும். அதில் தவறு செய்ததற்கான முகாந்திரம் இருப்பது உறுதியானால் ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருக்கும் தலைமைச் செயலாளர்தான் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார். அது தொடர்பான அறிக்கை அவருக்கே (தலைமைச் செயலாளர்) வரும். பின்னர் மாநில அரசை நிர்வாகம் செய்யும் தலைவர் என்ற முறையில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பார்.

பணியில் இருக்கும்போதே பட்ட ஆய்வு

கிரிஜா வைத்தியநாதன் 1959-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார். சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.எஸ்சி. இயற்பியல் பட்டம் பெற்ற அவர், 1981-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். 1983-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணியில் சேர்ந்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநர், மதுரை மாவட்ட ஆட்சியர், நிதித்துறை சிறப்புச் செயலாளர், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர், நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். பணியில் இருந்தபோதே 2011-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் நல்வாழ்வுப் பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து பி.எச்டி பட்டம் பெற்றார். 2013-ம் ஆண்டு நில நிர்வாக ஆணையராகப் பணியாற்றினார். 2014-ம்

உள்ளே ரெய்டு... வெளியே பர்த்டே பார்ட்டி - இது ‘பத்ரிநாராயண்’ ஸ்பெஷல்!

vikatan.com

சினிமாவில்தான் வருவாய்த்துறை அதிகாரிகள் வீட்டில் ரெய்டு நடத்தும் போது, வில்லன்கள் 'இப்போ பார்க்கிறியா முதலமைச்சர்ட்ட பேசுறீயானு' டயலாக் விடுவார்கள். அல்லது அசால்ட்டாக மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம் பெறும். ரெய்டை பற்றி கொஞ்சம் கூட சினிமா வில்லன்கள் கவலைப்பட மாட்டார்கள். அதிகாரிகளைக் கண்டு அஞ்சவும் மாட்டார்கள். சினிமாவில் வரும் காட்சிகள் போலே இப்போது நிஜயத்திலும் நடைபெற்றுள்ளது.

கிலோ கணக்கில் தங்கம், கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்ததைத் தொடர்ந்து சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் கிடைத்த ஆவணங்கள் கொடுத்த தகவல்களின் அப்படையில் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தின் அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. ராமமோகன ராவ் வீட்டிலும் கோடிக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. மாநிலத் தலைமைச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது, தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழக அரசு அதிகாரிகள் இடையேயும் இந்தச் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ராமமோகன ராவின் உறவினர்கள், நண்பர்கள் வீட்டிலும் வருவாய்துறை அதிகாரிகள் தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் சம்பந்தி பத்ரிநாராயண் (வயது 55) ஆந்திர மாநிலம் சித்தூரில் வசித்து வருகிறார். சிபிஐ அதிகாரிகள் நேற்றுமுன்தினம் அவரது வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர். காலை 5.30 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் பத்ரிநாரயண் வீட்டுக்குள் புகுந்தனர். சிபிஐ அதிகாரிகள், வீட்டுக்குள் புகுந்ததும் பத்ரிநாராயண் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடந்தனர். ஆனாலும் ரெய்டுக்கு முழுமையாக ஒத்துழைத்தனர். அன்றைய தினம் பத்ரிநாராயணனின் 55-வது பிறந்த தினம் ஆகும். அவரது பிறந்த நாளை விமர்சையாக கெண்டாட குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். வீடும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பத்ரிநாராயண் வீட்டில் சுமார் 20 மணி நேரம் சோதனை நடைபெற்றது. சோதனையில், 2 கிலோ தங்கம், ரூ.25 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 125 ஏக்கர் நிலம் வாங்கியதற்காக பத்திரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தாலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை கைவிட பத்ரிநாராயணுக்கு மனம் வரவில்லை. சோதனை நடந்தால் என்ன? நாம் பிறந்த நாள் கொண்டாடுவோம் என்று முடிவு செய்தார்.

இதையடுத்து பிரமாண்ட கேக் கொண்டு வரப்பட்டது. உள்ளே அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போதே வீட்டு வாசலில் வைத்து பத்ரிநாராயண் தனது 55-வது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். அவரது உறவினர்கள் பத்ரிநாராயணுக்கு கேக் ஊட்டி விட்டனர். 'ஹேப்பி பர்த்டே' பாடினர் பத்ரிநாராயண் வீட்டில் ரெய்டு நடப்பது தெரியாமல் ஏராளமான தெலுங்குதேசக் கட்சியினர் , அவரது நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்து தெரிவிக்க வீட்டுக்கு வந்தனர். வீட்டில் ரெய்டு நடப்பதை கேள்விபட்டு பின்னர் தலைமறைவாகி விட்டனர்.

வீட்டில் ரெய்டு நடந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் பிறந்த நாள் கொண்டாடிய பத்ரிநாராயண் வருவாய்துறை அதிகாரிகளுக்கு பிறந்த நாள் கேக் கொடுத்தாரா... எனத் தெரியவில்லை. ஆனால், ரெய்டு முடிந்ததும் அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணைக்கும் அவர் முழுமையாக ஒத்துழைத்தாக சொல்லப்படுகிறது.

மிஸ்டர் கழுகு: ராம மோகன ராவ்... நெக்ஸ்ட் சசிகலா?

vikatan.com


‘‘தமிழகத்தின் உச்ச அதிகார மையமான செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்து வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இந்தியாவிலேயே ஒரு அரசாங்கத்தின் தலைமைச்செயலகத்துக்குள் புகுந்து சோதனை நடத்தப்பட்டது இதுதான் முதல்முறை. அப்படிப்பட்ட அவமானகரமான பெருமையைத் தேடித் தந்துள்ளார் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் என்ற வரலாற்றுத் தகவலுடன் வந்தார் கழுகார்.

‘‘வருமானவரித் துறையின் இந்த திடீர் ஆர்ப்பரிப்புக்குப் பின்னணி என்ன?’’

‘‘2016 சட்டமன்றத் தேர்தல் களேபரங்கள் நினைவிருக்கின்றனவா? அப்போது ஓட்டுக்கு நோட்டுக் கொடுப்பதைத் தடுக்க முடியாத அளவுக்கு, தமிழகம் முழுவதும் கரன்ஸி விளையாடியது. எச்சரித்து... எச்சரித்து நொந்துபோன தேர்தல் ஆணையம் தஞ்சை, அரவக்குறிச்சித் தேர்தல்களையே ஒத்திவைத்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பாக கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் அன்புநாதன் வீட்டில், ஓட்டுக்குக் கொடுக்கப்பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குத் தகவல் வந்தது. அவர்கள் வருமானவரித் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து அன்புநாதன் பங்களா, குடோன்களை வளைத்தனர். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கரூர் அன்புநாதன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அதில் கோடி கோடியாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தமிழகத்தின் ஆட்சியாளர்கள், அதிகாரமையங்கள், தொழிலதிபர்கள் என்ற சிண்டிகேட் மாஃபியா பின்னணியில் இருப்பது புரிந்தது.’’



‘‘அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையானவர்களாகவும் விசுவாசமானவர்களாகவும் இருந்த நத்தம் விசுவநாதன், ஓ.பி.எஸ், சைதை துரைசாமி போன்றவர்களின் தொடர்புகள் பற்றிய தகவல்கள் வருமானவரித் துறையினருக்குக் கிடைத்தது. அத்துடன் தமிழக அரசின் கஜானாவாக இருந்த, மேலும் பல தொழிலதிபர்களும் இருந்தனர். அதனால், ஒரு கட்டத்துக்குமேல் வருமானவரித் துறையினரால் மேற்கொண்டு நகர முடியவில்லை.’’

‘‘ம்ம்ம்...’’

‘‘அ.தி.மு.க-வுக்கு 50 எம்.பி.-க்கள் உள்ளனர். அவர்களைவைத்து மோடி அரசாங்கத்துக்கு அவ்வப்போது ‘தண்ணி காட்டி’க்கொண்டிருந்தார் ஜெயலலிதா. எப்படியாவது ஜெயலலிதாவுக்கு `செக்’ வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டுக்கொண்டிருந்த மத்திய அரசு, அவ்வப்போது சொத்துக் குவிப்பு வழக்கைவைத்து விளையாட்டுக் காட்டும். அவர்களுக்கு வருமானவரித் துறை அதிகாரிகள் கொடுத்த விவரங்கள் மேலும் ஒரு புதிய ரூட்டைப் போட்டுக் கொடுத்தது.’’

‘‘தோண்டத் தோண்ட பல மர்மங்கள் வரும்போல இருக்கிறதே.’’

‘‘மத்திய அரசு உடனடியாக, வருமானவரித் துறை நுண் உணர்வுப் பிரிவுக்குச் சிறப்பு அதிகாரிகளைப் போட்டு தனி டீம் உருவாக்கியது. அந்த டீம், கடந்த 6 மாதங்களாக தமிழகத்தை ரகசியமாக கண்காணித்தது. அவர்களின் கண்காணிப்பு தீவிரமடைந்தபோது அதில், சசிகலா, ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, பிரேம் ரெட்டி, தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் வளையத்துக்குள் வந்தனர். ஆனால், அதற்குள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானது. அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயம் மத்திய அரசு அடக்கி வாசித்தது.’’

‘‘ம்...’’

‘‘டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். அதன்பிறகு, பி.ஜே.பி ஏதேதோ வழிகளில், அ.தி.மு.க-வுக்கு மறைமுகமாக குடைச்சல் கொடுத்துக் கொண்டுதான் இருந்தது. அதன் தற்போதைய கட்டம்தான் இப்போது நடக்கும் காட்சிகள். இந்தக் காட்சிகளுக்கு பிள்ளையார்சுழி, சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில்தான் போடப்பட்டது. டிசம்பர் 11-ம் தேதி சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தி, 105 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதில் 70 கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் தாள்கள். இதையடுத்து, சேகர் ரெட்டியை சிறப்பு டீம் ஒன்று கஸ்டடியில் வைத்து விசாரித்துக்கொண்டிருந்தது.’’

‘‘சேகர் ரெட்டி அனைத்து விவரங்களையும் சொல்லிவிட்டாரா?’’



‘‘விசாரணை தொடங்கிய முதல்நாளே, சேகர் ரெட்டி அனைத்து விவரங்களையும் புட்டு புட்டு வைத்துவிட்டார். குறிப்பாக, தேர்தல் சமயத்தில், சசிகலாவிடம் எம்.எல்.ஏ.சீட்டு மற்றும் தேர்தல் செலவுக்காகக் கொடுக்கப்பட்ட பணம், அந்த சமயத்தில் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சசிகலா பணப் பரிவர்த்தனைகள் செய்தது, ஓட்டுக்கு கொடுப்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் செய்யப்பட்ட பணப் பரிவர்த்தனைகள், கடந்த ஆட்சியின்போது பொதுப்பணித் துறை கான்ட்ராக்டுகளை எடுக்க, அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கப்பட்ட பணம், துறைச் செயலாளர் என்ற முறையில் ராம மோகன ராவ் செய்த முறைகேடுகள், எந்தக் கான்ட்ராக்ட் எடுத்தாலும், அரசாங்க கமிஷன் 30 சதவிகிதம் என்று ஊழல் செய்தது என அனைத்தையும் ஒப்பித்துவிட்டார் சேகர் ரெட்டி. அதன்பிறகுதான், ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குள் புகுந்தது வருமானவரித் துறை. அரசியல் மேகங்கள் திசைமாறுவதைப் பொறுத்து அடுத்தடுத்த அதிரடிகள் இருக்கும்.’’

‘‘பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டுக்கும் இந்த ரெய்டுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?’’

‘‘பன்னீர்செல்வம் டெல்லியில் பிரதமரைச் சந்தித்தற்கும் இந்த ரெய்டுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. டெல்லி போன பன்னீர்செல்வம், அங்கு பிரதமர் மோடியிடம் புலம்பித் தள்ளிவிட்டாராம்.’’

‘‘என்ன சொன்னாராம்?’’

“கதறிவிட்டாராம். ‘நீங்கள் ஒரு ரூட் போட்டு என்னை அதில் போகச் சொல்கிறீர்கள். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. அங்குள்ள அதிகாரிகள் அனைவரும், மன்னார்குடி குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனர். நான் மீட்டிங் போட்டால், ஒரு மணி நேரம் கழித்துத்தான் அதிகாரிகளே வருகின்றனர். இதுபோன்ற அதிகாரிகளை வைத்துக்கொண்டு, சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து என்னால் அரசியல் செய்யவோ, கட்சியைக் கொண்டுபோகவோ முடியாது’ என்று பிரதமர் மோடியிடம் புலம்பியதாகச் சொல்கின்றனர். புலம்பிவிட்டு வந்த மறுநாள், ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு.’’

‘‘பன்னீர்செல்வத்துடன் ராம மோகன ராவும் டெல்லி போயிருந்தாரே?’’

‘‘ராம மோகன ராவ் டெல்லி போய் இருந்தார். ஆனால், அவருக்கு பிரதமரைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. பன்னீர்செல்வம் மட்டும்தான் பிரதமரைப் பார்த்தார். டெல்லியில் முதல்வரை ஏர்போர்ட்டுக்கு வந்து அழைத்துச் சென்றவர் தம்பிதுரை. ஆனால், அவருக்கு பிரதமர் மீட்டிங்கில் அனுமதி இல்லை. தம்பிதுரையின் மூலமாக சசிக்கு எந்தத் தகவலும் போகக் கூடாது என்பதற்காகத்தான் இந்த மறுப்பு. அப்போதே இந்த ரெய்டு விவகாரம் பன்னீர்செல்வத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அதனால்தான், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, கோட்டைக்குள் வந்தபோதும், பன்னீர்செல்வம் அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அத்துடன், இப்போது நடந்த ரெய்டு என்பது பன்னீர்செல்வத்துக்கும் வைக்கப்பட்ட செக் தான்.’’

‘‘பன்னீர்செல்வத்துக்கும் ‘செக்’கா?’’



‘‘கைதாகி உள்ள சேகர் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததைவிட, சசிகலாவுக்கு விசுவாசமாக இருந்ததைவிட பன்னீர்செல்வத்துக்குத்தான் அதிக விசுவாசமாக இருந்தார். பொதுப்பணித் துறை பன்னீர்செல்வத்தின் கையில் இருந்ததுதான் காரணம். அவர் மூலம்தான் சேகர் ரெட்டி அத்தனை கான்ட்ராக்ட்களையும் எடுத்தார். அதனால், மத்திய அரசு சொல்கிறபடி நடந்துகொள்ளவில்லை என்றால், பன்னீருக்கும் சிக்கல்தான்.’’

‘‘இப்போது மோடி அரசு என்னதான் நினைக்கிறது?’’

‘‘சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியைவிட்டுவிட்டு போகச்சொல்கிறது. அதை நேரடியாகச் சொல்லாமல், சுற்றி வளைத்துச் சொல்கிறது. சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டுவிட்டார். அடுத்து ராம மோகன ராவும் கைது செய்யப்படலாம். இப்படியே பிடியை இறுக்கிக் கொண்டே போகும் மத்திய அரசு, அ.தி.மு.க மசியவில்லை எனில் அடுத்து சசிகலாவை குறிவைப்பார்கள் அதற்கான வேலைகளையும் மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது அடுத்த டார்கெட் சசிகலாதான்!’’ என்றபடி பறந்தார் கழுகார்.

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி

‘சாணி என்றவர் சரண்டர் ஆன கதை!

vikatan.com

இதே டிசம்பர் மாதத்தில்தான் ஒரு பிரளயம் அரங்கேறியது. 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி சசிகலாவையும் அவரது உறவுகளையும் கட்சியைவிட்டு கட்டம் கட்டினார் ஜெயலலிதா. அடுத்து சில நாட்களிலேயே கட்சியின் பொதுக்குழு கூடியது. சசிகலாவை விமர்சித்துப் பேசலாமா, கூடாதா? என்று குழப்பத்தில் இருந்தார்கள் நிர்வாகிகள். ‘அம்மாவின் முடிவில் மாற்றம் இருக்காது. இனி சசிகலா அவ்வளவுதான்’ என நினைத்து பொதுக்குழுவில் படபடப்போடு பேச ஆரம்பித்தார் அப்போது அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமி. ஜெயலலிதா முன்பு அவர் பேசிய பேச்சு அப்போது சூட்டைக் கிளப்பியது. அப்படி என்ன பேசினார்?



“சாணத்தைப் பிடித்து அதைப் பிள்ளையாராக மாற்றுபவர் அம்மா. அதற்காகச் சாணம் தன்னையே கடவுளாக நினைத்துக்கொண்டால் எப்படி? அது வெறும் சாணம்தான் என்று புரிய வைக்க, ஒரேயடியாக அதை அம்மா வழித்துப் போட்டுவிடுவார். அம்மா அருகில் இருப்பவர்கள், ‘நாங்களும் பிள்ளையார் பிடிக்கிறோம்’ என்று முயன்றால்... அதுவும் நடக்காது. அப்படி நினைக்கிறவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். ஒன்றுக்கும் பயன்படாத பொருளாகி விடுவார்கள்’’ என்று சசிகலாவை மறைமுகமாக விளாசித்தள்ளிவிட்டார் கே.பி.முனுசாமி. பிறகு மூன்றே மாதங்களில் சசிகலா மீண்டும் கார்டனுக்குள் வந்ததால் பதவியை இழந்தார் கே.பி.முனுசாமி.

அப்போது, கே.பி.முனுசாமி உள்ளாட்சித் துறை அமைச்சர், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் என ஜெயலலிதாவுக்கு அடுத்துள்ள தலைவர்களில் ஒருவராக ஜொலித்திருந்தார். ‘‘மன்னிப்பே கிடையாது’’ என பொதுக்குழுவில் சசிகலாவை மறைமுகமாக எச்சரித்த ஜெயலலிதா, மூன்றே மாதங்களில் சசிகலாவை மன்னித்து சேர்த்துக்கொண்டார். முனுசாமியோ ஆடிப்போய்விட்டார். அதற்குப் பிறகு என்ன நடந்தது?

முனுசாமியின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். “அன்று அம்மாவின் நிலைப்பாடு சசிகலாவுக்கு எதிராக இருந்ததால் அண்ணன் அப்படி பேசிவிட்டார். தலைமைக்கு விசுவாசமாக இருந்தது ஒரு தவறா? ஆனால், சசிகலா நேரம் பார்த்துப் பழிவாங்கிவிட்டார். அதற்கு அண்ணனால் வளர்த்துவிடப்பட்ட பழனியப்பனையே பயன்படுத்திக்கொண்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததற்கு தர்மபுரியைச் சேர்ந்த பழனியப்பனின் அமைச்சர் பதவிதான் நியாயப்படி பறிபோயிருக்க வேண்டும். ஆனால், முனுசாமியை காலி செய்வதுதான் சசிகலாவின் கணக்கு. ‘அன்புமணி வன்னியர் என்பதால், அவருக்கு ஆதரவாக வன்னியரான கே.பி. முனுசாமி செயல்பட்டார். என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை’னு ஜெயலலிதா காலில் விழுந்தார் பழனியப்பன். இதை கச்சிதமாக ரூட் போட்டுக்கொடுத்தது சசிகலா தரப்பு.



பழனியப்பனுக்கு பதவி முக்கியமாச்சே... பக்காவாக அதை செய்து முடித்தார். அதற்குமேல் சொல்ல வேண்டியதை அண்ணனை எதிர்க்கும் தம்பிதுரை மூலம் சசிகலா சொல்லவைத்தார். அவ்வளவுதான்... ஒரே நாளில் அடுத்தடுத்து அண்ணனிடம் இருந்த அத்தனை பதவிகளையும் பறித்துவிட்டார்கள். செல்வாக்காக வலம் வந்தவர் டம்மியாக்கப்பட்டார். அடுத்தடுத்து அவர் மீது புகார்களை அடுக்கியபோது கடந்த சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதிக்கு அம்மா சீட் கொடுத்தார்கள். கிருஷ்ணகிரியில் வென்று கே.பி.முனுசாமி மீண்டும் பவருக்கு வந்துவிடுவார் என நினைத்த சசிகலாவும், தம்பித்துரையும் கிருஷ்ணகிரியிலிருந்து வேப்பனக்ஹள்ளிக்கு அண்ணனை மாற்றினார்கள். அங்கும் வெற்றிபெற்றுவிடுவார் என்று ரிப்போர்ட் போனது. ‘நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணியை ஜெயிக்க வெச்சாருல்ல... இப்போ சட்டமன்றத் தேர்தல்ல அன்புமணியை எதிர்த்து பென்னாகரத்தில் நிற்கச் சொல்லுவோம்’ என்று ஜெயலலிதாவிடம் சொன்னார் சசிகலா. அதன்படியே அண்ணனை பென்னாகரத்தில் நிறுத்தி திட்டமிட்டு தோற்கடிக்கச் செய்துவிட்டார்’’ என்றார்கள்.

அன்றைக்கு சாணமாக இருந்த சசிகலா இன்று சாமியாகிவிட்டார். ஆமாம், கே.பி.முனுசாமியும் இப்போது சசிகலாவிடம் சரண்டர் ஆகிவிட்டார். கே.பி.முனுசாமி அதிருப்தியில் இருக்கிறார் என்பதை அறிந்த சசிகலா, ‘இந்த சூழலில் இது நல்லதல்ல. கட்சியின் சீனியர்கள் யாரும் நமக்கு எதிராக பேசவிடக்கூடாது. அவரை வரச்சொல்லுங்கள்’ என்று கே.பி.முனுசாமிக்கு நெருக்கமான திவாகரன் மூலமாக தூது அனுப்பினார். உடனே கடந்த 20-ம் தேதி அவருக்கான அப்பாயின்ட்மென்ட் தரப்பட்டது. சசிகலாவைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ‘‘அன்றைக்கு அம்மா திடீர்னு என்னைப் பேசச் சொல்லுவாங்கனு நான் எதிர்பார்க்கவே இல்லம்மா. என்ன பேசுறதுனு தெரியாம அப்படி பேசிட்டேன் மன்னிச்சிடுங்
கம்மா’’ என்று சொல்லியிருக்கிறார். ‘‘உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. உங்களுக்குத் தேவையானது உங்களைத் தேடிவரும் பழையபடி உற்சாகமாக கட்சிப்பணியைப் பாருங்கள்’’ என்று சொல்லி அனுப்பினாராம்.பார்ப்போம்!

- எம்.புண்ணியமூர்த்தி

சவுகார்பேட்டையில் சிக்கிய பண சுரங்கம்... ஐ.டி.ரெய்டால் அலறும் காக்கிகள்!

vikatan.com

வருமான வரித்துறையினர் தமிழகத்தில் நடத்திவரும் கறுப்புப் பண வேட்டையில், சேகர் ரெட்டியிடம் முடிந்தவரை விசாரித்து முடித்துவிட்டனர். இனி சீரியல்படி ஆட்களை தூக்க வேண்டியது மட்டுமே மிச்சம் என்கிற அளவுக்கு நிலைமை போக ஆரம்பித்துவிட்டது. சென்னை தி.நகர், மாம்பலம் உள்ளிட்ட நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் தங்களுடைய கண்காணிப்பை தொடர்ந்து தீவிரப் படுத்தி வருகின்றனர். சென்னையில் புரசைவாக்கம், மண்ணடி, பாரிமுனை, சவுகார்பேட்டை போன்ற இடங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளின் பட்டியலில் இல்லாததால் அவைகள் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை.

அளவுக்கு அதிகமான புதிய ரூபாய் நோட்டுகள், கணக்கில் வராத பணம், நகைகள் என்று அடுத்தடுத்த ரெய்டுகளில் தாராளமாக சிக்குவதால் வருமான வரித்துறை அதிகாரிகள் முழு தெம்பில் சுழன்று சுழன்று வேலை பார்க்கிறார்கள்.வருமான வரித்துறையினரின் ரெய்டில் சிக்கிய சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலம், அடுத்தடுத்த ஆட்களை அடையாளம் காட்டத் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் சர்வேயர் ரத்தினம், புதுக்கோட்டை எம்.ஆர். என்கிற ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வரையில் அந்த வாக்குமூலத்தின் நீளம் போய்க்கொண்டே இருக்கிறது.

சென்னை சவுகார்பேட்டை மீது கவனம் திரும்பவும், ரெட்டி அன்ட் கோ கொடுத்த வாக்குமூலம்தான் காரணம் என்கின்றனர். இதுவரையில் நடந்த ரெய்டுகளில் இதுவும் முக்கியமான ஒன்று. நான்கு நாட்கள் ஆனபின்னும், இன்னும் இங்கே ரெய்டு முழுமையாக முடிந்ததா, இல்லையா என்றே தெரியாத அளவுக்கு சவுகார்பேட்டை ரெய்டு போய்க் கொண்டே இருக்கிறது. சவுகார்பேட்டையில், பெருமாள் தெருவில் இருக்கிறது, தீபக் டிரேடர்ஸ். தங்கமுலாம் பூசும் கவரிங் நகைக்கடை மற்றும் ஃபேன்சி பொருட்கள் விற்கும் கடை. ஆனால், கடையின் உள்ளே சுரங்கம் அமைத்து கோடிக்கணக்கான கள்ளப் பணத்தை பதுக்கியிருக்கிறார் இதன் உரிமையாளர் தீபக். சென்னை வேப்பேரியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார். 'தீபக் டிரேடர்ஸ்' என்ற ஒரு பெயர்ப் பலகை, வெளியில் சாதாரணமாகத் தொங்க, அங்கே நடப்பதோ மிரட்டலான பணப் பரிமாற்றங்கள் என்கிறார்கள்.

சேகர் ரெட்டியின் நூல் பிடித்த தொடர்புகளில் சவுகார் பேட்டை தீபக்கும் இருக்கவேதான், அதிகாரிகள் இங்கும் நுழைந்து ஆய்வு மேற்கொண்டனர்.தீபக்கின் சுரங்கம் போன்ற பிரமாண்ட நிறுவனத்தில் நடந்த மூன்று மணி நேர சோதனையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், பழைய ரூபாய் நோட்டுகளும் கட்டுக் கட்டாக பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. முதல் நாள் மீட்பு பணத்தின் மதிப்பு மட்டுமே 10 கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள். வேப்பேரியில் உள்ள தீபக்கின் வீட்டில் நடந்த சோதனையும் அதிகாரிகளை ஏமாற்றவில்லை. கணக்கில் வராத 6 கிலோ தங்கம், மற்றும் முக்கியமான சில ஆவணங்கள் அங்கேயும் சிக்கியுள்ளன. தீபக் வீடு மற்றும் கடையில் ரெய்டு போய்க் கொண்டிருந்த போதே வருமான வரித் துறையினரின் அடுத்த ரெய்டு 'இரானி' நகைக்கடையில் ஆரம்பித்தது.

சென்னை பாரிமுனை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள 'இரானி' நகைக்கடை மற்றும் கடையின் உரிமையாளர் வீடுகளிலும் அடுத்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியில் இருந்து பெறப்பட்டது, தங்கத்தில் முதலீடு செய்வதற்காக கொண்டுவரப் பட்டவையா? போன்ற விசாரணை நடவடிக்கைகள் போய்க்கொண்டு இருக்கிறது.ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லப்பட்ட தரகர்கள், தீபக் வசிக்கும் குடியிருப்பில்தான் முன்னர் சிக்கினர் என்பதால் ரெய்டில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் விசாரணை உத்தியையும், அடுத்தக்கட்ட ரெய்டு நடவடிக்கையையும் இதனால் முற்றிலும் மாற்றி உள்ளனர்.



சேகர் ரெட்டியை மடக்கி, அடுத்தடுத்த அரசியல் காய்களை வெட்டலாம் என்று சின்னதாக கோடாரி தூக்கியவர்களுக்கு, ஐ.பி.எல் சூதாட்ட தரகர்களுடன் தொடர்புடைய ஆட்களை நெருங்கிவிட்ட உணர்வு இப்போது ஏற்பட்டிருக்கிறது.
சென்னை சவுகார்பேட்டை மற்றும் பாரிமுனை பகுதிகளில், அடித்த ரெய்டில் ஐ.டி.அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல்கள் நிறையவே கிடைத்துள்ளன. "என்.எஸ்.சி போஸ் சாலை (பாரிமுனை), சவுகார்பேட்டை, யானைக்கவுனி போன்ற இடங்களில் நகை வியாபாரிகளுடன் நெருக்கமான உறவில் இருக்கும் சில காக்கிகளின் தொடர்பை உறுதிப்படுத்தும் டைரி, ஐ.டி அதிகாரிகளின் கையில் சிக்கியுள்ளது.

வருமான வரித்துறையினரின் ரெய்டின் போது ராம மோகனராவிடமும் இதே போன்று ஒரு டைரி கிடைத்ததாக தகவல் உண்டு. ரெய்டின்போது, உள்ளூர் போலீசாரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற விவரத்தையும் ரகசியக்குழுவினர் கண்காணிப்பதால் 'போன் போட்டு தகவல்' கொடுக்கும் கறுப்பாடுகள் கலங்கிப் போயுள்ளனர். காவல்துறையில் தனிப்படை (ஸ்பெஷல் டீம்) என்ற பெயரில் இயங்கும் சிலர் 'ஸ்பெஷலாக' அடிக்கடி நகைக் கடைகள், இதுபோன்ற சட்டத்துக்குப் புறம்பான ஆட்களிடம் ரெய்டு அடித்து, சொத்துகளை குவித்து வைத்துள்ளனர். சிலர் அவர்களின் தொழில் நுட்பங்களைக் கூட இருந்தே கற்று நகைக்கடை, கந்து வட்டி என்று பெரிதாக வளர்ந்து விட்டனர். 'எங்களுக்கு எதற்கு இனி கவர்ன்மென்ட் வேலை, இருக்கறதை வைத்து காப்பாற்றிக் கொண்டால் அது போதும்' என்ற குரலே அங்கு கேட்கிறது.



ஸ்பெஷல் டீம்களை இயக்கும் மேலதிகாரிகளின் சொத்துப் பட்டியல் அதை விட பல மடங்கு எகிறிப் போய் இருப்பது, வருமானவரி புலனாய்வுத்துறையின் சோதனை டீமையே, சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது."இவ்வளவு நாட்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட பர்சன்டேஜைக் கொடுத்து விட்டுத்தான் தொழில் செய்தோம், அதே போல் நீங்களும் வாங்கிக் கொண்டு எங்களை வாழவிடுங்கள்" என்று ரெய்டின்போது விபரம் புரியாமல் சில வியாபாரிகள் கதறியுள்ளனர். கூடவே, காக்கிகளுக்கு வருடம் தவறாமல் கலெக்‌ஷன் கொடுத்த ஆதாரங்களையும் பட்டியல் போட்டுக் கொடுத்துள்ளனர். அவர்களிடம் பக்குவமாகப் பேசி ' ஸ்பெஷல் போலீஸ் டீம்' குறித்த விபரங்களை ஐ.டி. அதிகாரிகள் வாங்கிக் கொண்டுள்ளனர். ஐ.டி.அதிகாரிகளின் பிடியில் 'ஸ்பெஷல் ரெய்டு காக்கிகள்' சிக்கிக் கொண்டாலும் வியப்பில்லை.

NEWS TODAY 08.06.2026