போலீசை அடித்தால் சும்மா விடுவோமா? கடுகடு துணை கமிஷனர்
மத்திய அரசின் செல்லாத ரூபாய் அறிவிப்பைக் கண்டித்து கடந்த டிசம்பர்
மாதம் 31-ம் தேதி பள்ளிக்கரணை மேடவாக்கம் பகுதியில், இந்திய ஜனநாயக
வாலிபர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர்
மோடியைக் கண்டித்தும், பா.ஜனதாவைக் கண்டித்தும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்
முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தினால் போக்குவரத்து நெரிசல்
ஏற்படுகிறது என்று கூறி போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முற்சித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையை
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொளுத்த முயன்றனர். அதனைத் தடுத்த போலீசார், அவர்களை
சரமாரியாக தாக்கி கைது செய்தனர். சம்பவத்தைப் படம்பிடித்த
பத்திரிக்கையாளரையும் தாக்கிய போலீசார் அவரிடமிருந்து கேமராவை
பறித்துக்கொண்டனர்.
கைது செய்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை வேனில்
ஏற்றிய போலீசார் உள்ளே வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களில் 3
பெண்களும் இருந்தனர். அவர்களையும் அடித்து உதைத்து பாலியல் ரீதியாக
கொடுந்தாக்குதலையும் போலீசார் நடத்தியுள்ளனர். போலீசாரின் தாக்குதலில்
ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 14 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரும் நேற்று
(புதன்) ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுக்க அதிர்ச்சியை
ஏற்படுத்திய போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் குறித்து பல்வேறு
தரப்பினரும் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தச்
சம்பவம் குறித்துக் கள ஆய்வு நடத்திவரும் மக்கள் கண்காணிப்பகத்தின்
ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் தாக்குதலில் ஈடுபட்ட சென்னை போலீசாரிடமும்
ஆய்வு நடத்தி வருகிறார். அதனையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்,
பள்ளிக்கரணை-மேடவாக்கம் பகுதியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது
போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சட்டம்
ஒழுங்கு துணை ஆணையர் சங்கரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். துணை ஆணையர்
சங்கர், 'போலீசை அடித்தால் நாங்க சும்மா விடுவோமா' என்று ஆசீர்வாதத்திடம்
கடுகடுத்துள்ளார்.
இது
தொடர்பாக நம்மிடம் பேசிய ஆசீர்வாதம்,"மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு
மீறப்படுமோ அதில் கொஞ்சமும் குறைவு இல்லாமல் மேடவாக்கத்தில் போலீசார்
நடந்துள்ளனர். அதனால் மக்கள் கண்காணிப்பகம் இந்த விஷயத்தில் உரிய கள ஆய்வை
நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர முடிவு செய்தது.
அதன்படி
தாக்குதல் நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி வரும் துணை கமிஷனர் சங்கரை
சந்தித்து விளக்கம் கேட்டோம். மாநகர ஆணையரை சந்திக்கத்தான் அனுமதி
கேட்டிருந்தோம். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. துணை ஆணையரை
சந்திக்கத்தான் அனுமதி கிடைத்தது. அதுவும் நீண்ட நேர காத்திருப்புக்குப்
பின்னர் துணை ஆணையர் சங்கர் என்னை அவரின் அறைக்கு அழைத்துப் பேசினார்.
அப்போது எனக்கு மேடவாக்கம் தாக்குதல் சம்பந்தமான வீடியோ காட்சியை
காட்டினார்.
"சார், போலீசார் மிகக் கடுமையாக ஜனநாயக வாலிபர்
சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்கள் என்றும் பாராமல்
பாலியல் துன்புறுத்தலோடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையெல்லாம் ஜுனியர்
விகடன் உள்ளிட்ட வார இதழ்கள், நாளிதழ்களில் தொலைக்காட்சி செய்திகளில்
வந்துள்ளன" என்றோம்.
அதற்கு அவர், 'அதெல்லாம் இருக்கட்டும்,
போலீசாரை யார் தாக்கினாலும் நாங்க சும்மா விடமாட்டோம். அதான் நடந்தது.
'என்று கூறினார். மேலும் அவர், 'சார் அமெரிக்காவில் எல்லாம் போலீஸ்
நில்லுன்னு சொன்னா நிக்கணும் சார். இல்லனா சுட்டுருவான் சார்' என
பதிலளித்தார்.
"அத்தோடு இந்த ஆதாரங்களைத்தான் மனித உரிமை
ஆணையத்தில் கொடுக்க உள்ளோம். ஜனநாயக சங்கத்தினர்தான் போலீசார் மீது
தாக்குதலை நடத்தினார்கள் என்று அங்கு தெரிவிக்கவுள்ளோம்" என்றும்
அதிரடியாகக் கூறினார்.
இது மிக அதிர்ச்சியான விஷயம். மக்கள்
கண்காணிப்பகம் நேரடி கள ஆய்வை நடத்தியுள்ளது. ஆய்வு அறிக்கையை இன்னும் சில
தினங்களில் வெளியிடுவோம்" என்றார் கொந்தளிப்பாக. - சி.தேவராஜன்.
Dailyhunt
இது ஜல்லிக்கட்டு அல்ல; ‘ஏறுதழுவுதல்
தமிழர்களுக்கென தனியாக ஒரு
பாரம்பரியம், கலாசாரம், வாழ்க்கை முறைகள், வழிபாடுகள் உண்டு. தமிழர்களிடையே
பல சாதி, பல இனம் இருக்கிறது. பல மதங்களை கடைபிடிக்கிறார்கள். ஆனால்,
எல்லோருக்கும் ஒரு பொதுவான பண்டிகை என்றால், அது ‘‘பொங்கல்’’தான். தனக்கு
உணவு அளிக்கப்பயிர்களை விளைவிக்க செய்த இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும்
வகையில் பொங்கலிட்டு, அது பொங்கும்போது, ‘‘பொங்கலோ பொங்கல்’’ என்று உள்ளம்
நிறைய குலவையிட்டு வாழ்த்தும் பண்டிகைதான் இது. தனக்கும், வேளாண்மைக்கும்
உதவியாக இருந்த மாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பொங்கலிட்டு
மகிழ்வார்கள். இந்த நாளில் ஊரிலுள்ள இளைஞர்கள் தங்கள் வீரத்தையும், உடல்
வலிமையையும் காட்ட, ஒவ்வொரு ஊரிலும் பல்வேறு வகையான வீரவிளையாட்டுக்களை
நடத்துவார்கள். அதில் ஒன்றுதான் சங்க இலக்கியங்களில் எல்லாம் ‘ஏறுதழுவுதல்’
என்ற பெயருடன் சீறிவரும் காளைமாட்டை அடக்கும் வீரவிளையாட்டாகும்.
காலமெல்லாம் ‘ஏறுதழுவுதல்’ என்ற பெயரில் நடந்து வந்தது இந்த
வீரவிளையாட்டாகும். பிற்காலங்களில் என்ன காரணத்தினாலோ, ஜல்லிக்கட்டு என்ற
பெயர் மாறியது.
இந்த நிலையில், 2006–ம் ஆண்டு இந்த விளையாட்டில் கலந்துகொண்ட ஒரு மாணவன்
உயிரிழக்க நேரிட்டது. இதையொட்டி, அந்த மாணவனின் தந்தை மதுரை ஐகோர்ட்டு
கிளையில் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது.
அதன்பிறகு அப்பீல்கள் தொடர்ந்து வழக்குகள், தீர்ப்புகள் என்றநிலையில் கடந்த
இரண்டு ஆண்டுகளாக போட்டி நடக்கவில்லை. ஆனால், இரண்டு ஆண்டுகளாக இந்த ஆண்டு
நடந்துவிடும், நிச்சயம் நடந்துவிடும் என்று அரசியல்வாதிகள் உறுதிமொழிகள்
கொடுப்பதும், அதனை மக்கள் நம்புவதும் ஒருவாடிக்கையாக நடந்துவருகிறது.
ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு, பிறகு அந்த
எதிர்ப்பு உணர்வுகள் அப்படியே மங்கிப்போய்விடும். இந்த ஆண்டும், பொங்கல்
நெருங்குகிற நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு முழுவதும் வீறுகொண்ட
புதிய போராட்டங்கள் கிளம்பிவிட்டன. அனைத்து ஊர்களிலும் விவசாயிகள்,
மாணவர்கள் இந்த விளையாட்டை இந்த ஆண்டு நடத்தியே தீரவேண்டும் என்று
போர்க்குரல் எழுப்பி வருகிறார்கள். மத்திய அரசாங்கத்தை எடுத்துக்கொண்டால்,
உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. இந்த வழக்கை மீறி எங்களால் ஒன்றும்
செய்ய முடியாது என்று கூறுகிறது. எதிர்க்கட்சிகள் அவசர சட்டம்
பிறப்பித்தால் நடத்த முடியும் என்கிறார்கள். உச்சநீதிமன்றமோ, உடனடியாக
எங்களால் தீர்ப்பு வழங்க முடியாது. தீர்ப்பை இப்போதுதான்
எழுதிக்கொண்டிருக்கிறோம் என்று நேற்று கூறிவிட்டது. இதற்கிடையில்,
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இடைக்கால மனுதாக்கல் செய்யும் அனுமதியும்
மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், விவசாயிகளெல்லாம் ஜல்லிக்கட்டு இல்லையென்றால், ‘‘எங்களுக்கு
கரும்பு பொங்கல் இல்லை, கருப்பு பொங்கல் என்கிறார்கள்’’. பல ஊர்களில்
தடையை மீறி, ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்று சூளுரைத்துவிட்டனர்.
காரைக்குடியில் மஞ்சுவிரட்டு என்றபெயரில், இந்த போட்டி நடந்துவிட்டது. ஆக,
இது ஒரு பெரிய சட்டம்–ஒழுங்கு பிரச்சினையாக உருவெடுக்கப்போகிறது. இதை
தடுக்க பா.ஜ.க. மூத்த தலைவர் டெல்லி மேல்–சபை உறுப்பினரான இல.கணேசன்
அருமையான யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு என்று
நடத்தாமல் ‘ஏறுதழுவுதல்’ என்ற பெயரில் புதிய விழாவாக அறிவிக்கலாம். அதற்கான
அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறது என்று ஒருகருத்தை தெரிவித்துள்ளார்.
பண்டைய இலக்கியங்களில், தமிழர்களின் வீரவிளையாட்டான ‘ஏறுதழுவுதல்’
என்றுதான் இருக்கிறது. கலித்தொகை, திருவிளையாடல் புராணம், நாலடியார் போன்ற
இலக்கியங்கள் அனைத்திலும் ‘ஏறுதழுவுதல்’ என்ற பெயரில்தான்
நடத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்–அமைச்சரும்
உறுதிமொழி அளித்துள்ளார். மத்திய அரசாங்கம் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில்
அவசரசட்டம் பிறப்பிக்கவேண்டும். இல்லையென்றால், இல.கணேசன் கூறிய
ஆலோசனையின்படி, ‘ஏறுதழுவுதல்’ என்றபெயரில் ஜல்லிக்கட்டு விளையாட்டை
நடத்தமுடியுமா? என்பதை சட்டரீதியாக பரிசீலித்து, எந்தவித அசம்பாவிதமும்
நடக்காமல் தகுந்த முன்னேற்பாடுகள், மருத்துவவசதிகளுடன் இந்தப்போட்டியை
நடத்த சட்டநிபுணர்களுடன், மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் ஆலோசனை நடத்தி
உடனடியாக அறிவிக்கவேண்டும்.
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் 23-ம் தேதி தொடங்குகிறது. புதிய
திட்டங்கள், நிவாரணம், அதிகாரிகளுடன் கலந்தாய்வு என பரபரப்பாக இயங்கி
வருகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 'முதல்வராக சசிகலா பதவியேற்பதற்காக
குறிக்கப்பட்ட நல்ல நாட்கள் தள்ளிக் கொண்டே போகின்றன. பிரதமரை நேரடியாகச்
சந்திக்கச் சென்ற தம்பிதுரைக்கும் உரிய மரியாதை கிடைக்கவில்லை" என்கின்றனர்
அ.தி.மு.க வட்டாரத்தில்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு
எளிதாக வர முடிந்த சசிகலாவால், முதல்வர் பதவியை நோக்கி நகர முடியவில்லை.
கடந்த சில நாட்களாக வெளிப்பட்டு வரும் முட்டல், மோதல்கள் நேற்று
பகிரங்கமாகவே வெடிக்கத் தொடங்கின. இதை உணர்ந்து, தன்னுடைய நிலைப்பாட்டை
உளவுத்துறை அதிகாரி ஒருவர் மூலம் கார்டன் பார்வைக்குக் கொண்டு சென்றார்
ஓ.பி.எஸ்.
அப்படியும் மன்னார்குடி உறவுகளின் கோபம் தணியவில்லை.
"ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், பிரதமரை
சந்திக்க முயற்சி மேற்கொண்டார் தம்பிதுரை. அப்போது முடியவில்லை. இரண்டாவது
முறையாக, நேற்று ஜல்லிக்கட்டுக்காக சசிகலா கொடுத்த கடிதத்தை எடுத்துக்
கொண்டு பிரதமரை சந்திக்கச் சென்றார் அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும்
மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை. 'கென்ய அதிபருடனான சந்திப்பில்
பிரதமர் இருக்கிறார். அதனால்தான் அவரை சந்திக்க முடியவில்லை' என தம்பிதுரை
சமாதானம் சொன்னாலும், பன்னீர்செல்வத்துக்கு எதிராக நடத்தப்படும் உள்கட்சி
தாக்குதல்களை பிரதமர் கவனித்துக் கொண்டு வருகிறார். ஜல்லிக்கட்டு என்ற
பெயரில் சமரசம் பேசத்தான் தம்பிதுரை சென்றார். அதற்கு மோடி இடம்
கொடுக்கவில்லை" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,
"டெல்லியில்
நேற்று மீடியாக்களிடம் பேசும்போதும், தமிழகத்தில் முதல்வர் ஒருவர்
இருக்கிறார் என்பதை எந்த இடத்திலும் அவர் நினைவூட்டவில்லை. அதேநேரம்,
'ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம். பின்வாங்க மாட்டோம்' என அதிரடியைக்
கிளப்பினார் பன்னீர்செல்வம். 'ஆட்சிக்குள் பன்னீர்செல்வம் பலம் பெற்றுவிடக்
கூடாது' என்பதற்காகத்தான், கடிதம் எழுதுவது, நிர்வாகிகளை பேச வைப்பது
போன்ற செயல்களை மன்னார்குடி உறவுகள் செய்து வருகின்றன. கட்சிக்குள்
இருக்கும் உள் எதிரியாக பன்னீரையும் வெளி எதிரியாக தீபாவையும் பார்க்கிறார்
சசிகலா. அமைச்சர்கள் மற்றும் சீனியர் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசித்து
வருகிறார். பன்னீரை வீழ்த்தும் அவர்களின் முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.
கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்டுவிட்டதால், சசிகலாவின் முதல்வர் கனவு
தள்ளிப் போய்விட்டது" என்றார் விரிவாக.
"சசிகலா, தினகரன், நடராசன் உள்ளிட்ட மூவரும் அதிகாரத்துக்குள் வந்துவிட முடியாத அளவுக்கு வழக்குகள்
நெருக்கிக் கொண்டிருக்கின்றன. பணப் பரிவர்த்தனை வழக்கில் டி.டி.வி.தினகரனை
நெருக்கிக் கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை. லெக்சஸ் கார் இறக்குமதியில்
மோசடி செய்த வழக்கில் நடராசன் வகையாகச் சிக்கியிருக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஜனவரிக்குள் வரலாம் என்பதால்
பதைப்புடன் இருக்கிறார் சசிகலா. இந்த வழக்குகளால் முதல்வர் பதவியைத்
தொட்டுவிடுவது அவ்வளவு எளிதானதல்ல. தீர்ப்பு வருவதற்குள் முதல்வர்
ஆகிவிட்டாலும், உறவுகளில் ஒருவரை பதவிக்குக் கொண்டு வரலாம் எனத்
திட்டமிட்டிருந்தார் சசிகலா.
அவருடைய நினைப்புக்கு குறுக்கே
பன்னீர்செல்வம் இருக்கிறார். அதன் விளைவை தம்பிதுரை நேரடியாகக் காட்டிக்
கொண்டிருக்கிறார். 'உங்கள் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறேன்' என
பன்னீர்செல்வம் கூறினாலும், கார்டன் வட்டாரம் மிகுந்த எரிச்சலில்
இருக்கிறது. பிரதமர் மூலமே விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வேலையில்
மன்னார்குடி உறவுகள் இறங்கியுள்ளன. 'இப்போதுள்ள நிலை தொடர்ந்தால், தமிழக
பா.ஜ.கவின் எதிர்காலத்துக்கு நல்லது' எனத் திட்டமிடுகிறார் அமித் ஷா.
அதனாலேயே, சசிகலாவுக்கு எதிரான சக்திகளை சந்திப்பதற்கு ஆர்வம் காட்டி
வருகிறார். தீபாவுக்குக் கூடும் கூட்டங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு,
விசாரித்திருக்கிறார். விரைவில் தீபாவை அவர் சந்திப்பதற்கும் வாய்ப்பு
இருக்கிறது" என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர்.
"குடியரசு
தினத்தில் பன்னீர்செல்வம் கொடியேற்றுவார் என ஆளுநர் அலுவலகம்
தெரிவித்துள்ளது. சட்டசபை கூட்டத் தொடர், பட்ஜெட் வேலைகள் என முதல்வருக்கான
பணிகளில் வேகத்தைக் கூட்ட ஆரம்பித்துவிட்டார் பன்னீர்செல்வம். முதல்வரின்
முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில், இருட்டடிப்பு செய்வதற்கான
வேலைகளில் ஆளும்கட்சி ஊடகமும் செயல்பட ஆரம்பித்துவிட்டது. 'ஜெயலலிதா
மரணமடைந்த நாளிலேயே, சசிகலா முதல்வர் பதவியை ஏற்றிருந்தால், இந்தளவுக்கு
விவகாரம் நீண்டிருக்காது' என மன்னார்குடி உறவுகள் பேசி வருகின்றனர்.
வெங்கய்ய நாயுடு சொன்னதால்தான், பன்னீர்செல்வத்தை முன்னிறுத்தினார்.
இப்போது தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, பன்னீர்செல்வதைப் பதவியில்
இருந்து நீக்குவதற்கு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் சசிகலா. எந்த
அசைவையும் காட்டாமல், பளீர் புன்னகையோடு வலம் வருகிறார் முதலமைச்சர்
பன்னீர்செல்வம்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.
- ஆ.விஜயானந்த்
இந்த சம்பவம் நடந்து 50 வருடமாகி விட்டது. ஆனால்
இன்றளவும் அதை எளிமையாக கடந்து விட முடியாது. அந்தளவு தமிழக அரசியலில்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் அது.
திரைப்படங்களில்
கதாநாயகனாக வருபவர்தான் வில்லனைச் சுடுவார். ஆனால் வில்லன் நடிகராக
திகழ்ந்தவர் கதாநாயகனை சுட்ட சம்பவம் தான் அது. அதுவும் நிஜத்தில்.
அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவராகவும், ஏழைகளின் தோழனாகவும், நல்லதை
மட்டுமே செய்பவராகவும் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டு பாமர
மக்களின் நெஞ்சம் எல்லாம் நிறைந்திருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அரசியலில் காங்கிரசுக்கு மாற்றாக உருவெடுத்திருந்த தி.மு.க.வின்
செல்லப்பிள்ளையாகவும் திகழ்ந்தவர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
மக்கள் மனங்களிலும் அரசியல் அரங்கிலும் அசைக்க முடியாத
செல்வாக்குடன் திகழ்ந்த எம்.ஜி.ஆரை ஒரு தோட்டாவின் மூலம் சாய்த்த
சம்பவம்தான் அது. எம்.ஜி.ஆரை சுட்டவர் எம்.ஆர்.ராதா. "எம்.ஜி.ஆரை
சுட்டுட்டேன்னு ஆளாளுக்கு கோஷம் போடறாங்க. நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது
வருஷமாக நண்பர்களா இருக்கோம். எங்களுக்குள்ள சின்ன கோபம். சண்டை
போட்டுட்டோம். அந்த சமயத்துல கம்பு இருந்திருந்தா கம்புச் சண்டை
போட்டிருப்போம். கத்தி இருந்தா கத்திச்சண்டை போட்டிருப்போ, துப்பாக்கிதான்
இருந்துச்சு. சுட்டுக்கிட்டோம்' என சாதாரணமாக பதிலளித்தார்
1967-ம்
ஆண்டு நடக்க இருந்த பொது தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் நடந்தது அந்த
அதிர்ச்சி சம்பவம். எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் திரை உலகில் கொடி கட்டி
பறந்த காலம் அது. 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற படத்துக்காக பட அதிபர்
வாசு நடிகர் எம்.ஆர்.ராதாவிடம் ரூ.1 லட்சம் கடனாக பெற்றிருந்தார். படம்
வெளியான பின் அந்த பணத்தை திருப்பி கொடுப்பது எனவும், அதற்கு எம்.ஜி.ஆர்
பொறுப்பேற்று இருந்ததாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக பேச ஜனவரி
12-ம் தேதி ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு
எம்.ஆர்.ராதா சென்றிருந்தார். உடன் பட அதிபர் வாசுவும் சென்றிருந்தார்.
இருவரும் எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசி கொண்டிருக்கும் போது
எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. அந்த
நேரத்தில் ராதா தன் மடியில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து
எம்.ஜி.ஆரை நோக்கி சுட்டார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத எம்.ஜி.ஆர்
சமயோசிதமாக குனிய துப்பாக்கியில் இருந்து வெளியான தோட்டா எம்.ஜி.ஆரின் இடது
பக்க காதின் அருகாமையில் கண்ணத்தில் பாய்ந்தது. இதனை தொடர்ந்து
எம்.ஆர்.ராதா துப்பாக்கியை தன் தலையில் வைத்து இயக்க அதிலிருந்து வெளியான
தோட்டா ராதாவின் நெற்றியில் பாய்ந்தது.
துப்பாக்கியால்
சுடப்பட்ட எம்.ஜி.ஆர் ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டு பின்னர் சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராதாவும் அங்கே அனுமதிக்கப்பட்டார். ராதாவின் நெற்றியில் பாய்ந்த தோட்டா
அகற்றப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரி கண்ணத்தில் பாய்ந்த தோட்டா அவரது
கழுத்தில் 3 முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்தது. அதனை அகற்றினால்
எம்.ஜி.ஆரின் உயிருக்கே ஆபத்து ஏற்படாலாம் என மருத்துவர்கள் கருதினர்.
இதனால் தோட்டாவை அகற்றாமலேயே தையல் போடப்பட்டது.
இந்த நிலையில்
நடக்க இருந்த தேர்தலில் பரங்கிமலை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளராக
நிறுத்தப்பட்டிருந்தார் எம்.ஜி.ஆர். அவரால் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்ல
முடியாத நிலையில் அவர் மருத்துவமனையில் கழுத்தில் பெரிய கட்டுடன்
இருக்கும் படங்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டது.
தேர்தல் பிரசாரத்துக்கு
தொகுதிக்குச் செல்லாமலே தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்
ரகுபதியை 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரும்
எம்.ஆர்.ராதாவும் குணமடைந்த நிலையில் ராதா மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டு விசாரணை நடந்தது. எம்.ஜி.ஆரின் சாட்சியத்தை கேட்டறிந்த
சைதாப்பேட்டை நீதிமன்றம் எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை
அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் துப்பாக்கி தோட்டாவிடம் இருந்து உயிர் தப்பியது
மட்டுமல்ல தேர்தலில் படுத்து கொண்டே ஜெயிக்கவும் செய்தார்.
அதனால் தான் காலத்தை வென்றவன் எனவும், காவியமானவன் எனவும் அழைக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். - இரா.மோகன்
'கௌரவம்' படத்தின் பாடல் காட்சி ஒன்றில் நடிப்பதற்காக
படப்பிடிப்புக்கு தளத்துக்கு வந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்த அந்த பாடலின் ஒலிப்பேழையை ஓடவிட்டார் உதவி
இயக்குநர். காட்சிக்கான உடைகளை அணிந்தபடி சிவாஜி பாடலை கேட்கத்
துவங்கினார். ஒருதடவையல்ல... இருதடவையல்ல; கிட்டதட்ட 11 முறைக்கும் மேலாக
பாடலை ஓடவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தபடி பாடலை கேட்டு முடித்த சிவாஜி
படத்தின் இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரத்தை அழைத்து "சுந்தரா கொஞ்சம்
டயம் கொடு...அப்புறம் சூட் பண்ணிக்கலாம்..."
எந்த பாடலையும்
அதிகபட்சம் ஓரிருமுறை கேட்டுவிட்டு நடிக்கத் தயாராகும் சிவாஜியின் இந்த
மாற்றத்தை கண்டு குழம்பிய சுந்தரம் "என்னண்ணே ஏதாவது
பிரச்னையா...சூட்டிங்கை இன்னொரு நாள் வெச்சிடலாமா...?
என்றார் பதறியபடி
. "இல்லை சுந்தரா, அண்ணன் எனக்கு பெரிய
சவாலை கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலை, தேர்ந்த நடிகனுக்குரிய உணர்ச்சிப்
பிரவாகத்தோடு பாடியிருக்கிறார். பல்லவியில் ஒரு விதமான பாவம்,
ஆக்ரோஷம்.அடுத்த சரணத்தில்..இன்னொரு விதமான..தொனி. மற்ற சரணத்தில்.இன்னொரு
பரிமாணம்.என பிச்சு உதறியிருக்கிறார். ஒரே வரியையே இரண்டு இடங்களில் இரண்டு
விதமான தொனிகளில் பாடி அற்புதம் செய்திருக்கிறார். ஒரு நடிகனின் வேலையை
அவர் செய்திருக்கும்போது ஒரு நடிகனாக நான் இன்னும் அதிகம்
மெனக்கெட்டால்தான் நான் அவர் சவாலை எதிர்கொள்ளமுடியும்... காட்சியும்
எடுபடும். அதனால் எனக்கு கொஞ்சம் ஒய்வு கொடு பிறகு நடித்துக்கொடுக்கிறேன்"
என ஓய்வறைக்குள் புகுந்துகொண்டார் சிவாஜி.
உச்சி
முதல் உள்ளங்கால்வரை நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் திலகத்துக்கு, தம்
குரலிலேயே சவால் கொடுத்த அந்த பாடகர் டி.எம். சௌந்தரராஜன் என்கிற
டி.எம்.எஸ்.!
கவுரவம் படத்தில் இடம்பெற்ற " நீயும் நானுமா... கண்ணா
நீயும் நானுமா..." என்ற அந்த பாடலில் சிவாஜிக்கு சவால் தந்த டி.எம்.எஸ்க்கு
தபால் தலைவெளியிட்டு கவுரவம் செய்திருக்கிறது மத்திய அரசு. கடந்த 30-ம்
தேதி இந்திய அளவில் இசைத்துறையில் சாதனை படைத்த 10 ஆளுமைகளுக்கு தபால் தலை
வெளியிட்டு கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த பட்டியலில் இடம்பெற்ற
ஒரே தென்னிந்திய கலைஞர் டி.எம்.எஸ் மட்டுமே.
தமிழ்சினிமாவின்
சாகாவரம் பெற்ற குரலுக்கு சொந்தக்காரரான டி.எம். சவுந்தரராஜன், மதுரையில்
1923- ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி பிறந்தார். பிரபல வித்வான்
காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றார். இசை ஞானம்
அடைந்தபின் தன் அறிவை பெருக்கிக்கொள்ள சிறியதும் பெரியதுமான கச்சேரிகளில்
பாட ஆரம்பித்தார். தன் திறமையை மெருகேற்றிக்கொள்ள மதுரை சுற்றுப்புறங்களில்
கோயில் பஜனைகளில் கூட சங்கடங்கள் இன்றி பாடுவார். டி.எம்.எஸ் திரையுலகில்
நுழைய காரணம் அவரது குரல்வளம். ஆம் அவரது குரல் அன்றைய சூப்பர் ஸ்டார்
தியாகராஜ பாகவதரின் குரலை ஒத்திருக்கும். "டேய் உன் குரலுக்கு பாகவதர் போல்
நீ எங்கேயோ போகப்போறெ" என அவருக்கு எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை
நண்பர்கள் ஏற்படுத்திவைத்தனர். கச்சேரிகளில் அவர் பாடுகிறபோது சற்று கண்ணை
மூடிக்கேட்டால் தியாகராஜ பாகதவர்தான் நினைவுக்கு வருவார். தெய்வாதீனமாக
அமைந்த இந்த குரல்வளம்தான் அவருக்கு சினிமா உலக கதவு திறக்க காரணமானது.
புகழின் உச்சியில் இருந்த சமயம் தியாகராஜ பாகவதர் திருச்சியில் கச்சேரி
செய்ய வந்திருந்தார். அதே கச்சேரியில் அவருக்கு முன்பு பாடிய சிறுவன்
ஒருவனது குரல் அவரை ஈர்த்தது. ஆச்சர்யத்துடன் சிறுவனை அழைத்து பாடச்
சொன்னார் பாகவதர். பாகவதரின் புகழ்பெற்ற பாடல் ஒன்றை அட்சரம் பிசகாமல்
பாடிக் காண்பித்தான் சிறுவன். "சென்னைக்கு வா தம்பி நல்ல எதிர்காலம்
இருக்கு" என வாஞ்சையாய் தலையை தொட்டு ஆசிர்வதித்தார் தியாகராஜபாகவதர்.
திரையுலக கனவில் மிதக்க ஆரம்பித்த சிறுவன் டி.எம்.சௌந்தரராஜன் சினிமா
வாய்ப்பு தேடி சென்னை வந்தார்.
சுந்தரராவ் நட்கர்னி இயக்கத்தில்
வெளியான கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப்
போகாதேடி" என்ற பாடல்தான் சினிமாவில் அவர் குரல் ஒலித்த முதல்பாடல்.
தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற
படங்களில் பாடினார். மலைக்கள்ளனில் எம்.ஜி.ஆருக்கு பாடிய எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" பாடல் பட்டிதொட்டியெல்லாம் டி.எம்.எஸ் என்ற
மந்திரக்குரலோனை கொண்டு சேர்த்தது. தொடர்ந்து திரையுலகில் டி.எம்.எஸ்ஸின்
சகாப்தம் துவங்கியது.
எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின்
திரையுலக வரலாற்றில் டி.எம்.எஸ் தவிர்க்கவியலாதவர். எம்.ஜி.ஆர் பாட்டு
சிவாஜி பாட்டு என இவர்களை அடையாளப்படுத்தும் அனைத்து பாடல்களும் டி.எம்.எஸ்
பாடியவை. தம் குரல் வளம், இசைஞானம் இவற்றுக்கிடையில் எல்லை தாண்டாத மற்ற
பாடகர்களிடமிருந்து டி.எம்.எஸ் முற்றிலும் மாறுபட்டார். திரையுலகின் அன்றைய
இருபெரும் ஆளுமைகளுக்கும் இருவேறுவிதமாக பாடும் திறமை பெற்றிருந்த இவரது
பாடல்களை கண்ணை மூடியபடிக் கேட்டால் பாடலை உச்சரிக்கும் கதாநாயகன் யார் என
கண்டறிந்துகொள்வர் அந்நாளைய ரசிகர்கள். இது வேறு எந்த பாடகருக்கும்
கிடைக்காத பேறு. ஆனால் இது டி.எம்.எஸ் எளிதில் சாதித்தது அல்ல...அதன்பின்
இருந்த அவரது உழைப்பு அளப்பரியது.
உரத்த குரலும் அழுத்தமான பேச்சு
வன்மையும் கொண்ட சிவாஜி பாடல்களுக்கு அடிவயிற்றிலிருந்து குரலை
எழுப்புவார். எம்.ஜி.ஆரின் சன்னமான குரலுக்கு கண்டமும் நாசியும் இணையும்
இடத்திலிருந்து பாடுவார்...ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,முத்துராமன்
சிவகுமார், நாகேஷ் என இன்னபிற நாயகர்களுக்கு கண்டத்திலிருந்து சில
ஃபார்முலாவில் பாடி அசரடிக்கும் திறமைசாலியாக உலாவந்தவர் டி.எம்.எஸ்.
பாடல்களை
பாடுகிறபோது இசையமைப்பாளர் சொல்லிக்கொடுத்ததுபோல் நில்லாமல் பாடலை
மெருகேற்ற பெரும் சிரத்தை எடுத்துக்கொள்வார் டி.எம்.எஸ். அதற்காக பாடலின்
இசை அம்சங்களை தவிர்த்து பாடல்காட்சியின் சூழலையும் இயக்குநரிடம் கேட்டு
தெரிந்துகொண்டு பாடுவது அவரது குணம். 'உயர்ந்த மனிதன்' படத்தில் இடம்பெறும்
'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடல் நடுத்தர வயதைக் கடந்த கதாநாயகன்
தன் பால்ய நினைவுகளை சுமந்தபடி தன் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்து
பாடுவதாக காட்சி. படத்தின் கதாநாயகன் சிவாஜி மூச்சிரைக்கப்பாடுவதாக
இயக்குநர் காட்சியை சித்தரித்திருந்தார். அதைக்கேட்டுக்கொண்ட டி.எம்.எஸ்
ரிக்கார்டிங் நடந்த அறையில் பாடலை பாடியபடி தேவைப்பட்ட நேரத்தில்
பின்னாளில் சிறிது துாரம் ஓடிவந்து திரும்ப மைக் முன் வந்து பாடுவார்.
காட்சிக்கு தக்கபடி டி.எம்.எஸ் குரல் தத்ரூபமாக பாடல் காட்சிக்கு பொருந்தி
பாராட்டுகளை பெற்றுத்தந்தது. அந்த அர்ப்பணிப்புக்கு பெயர்தான் டி.எம்.எஸ்.
வீரம்,
காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும்
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும்,மூவாயிரத்துக்கும்
மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். முருகனுக்காக அவர் பாடி
இசையமைத்த பாடல்கள் சாகாவரம்பெற்றவை.
மேதைகள் குழந்தைத்தன்மை கொண்டவர்கள் என்பதற்கு டி.எம்.எஸ் -ம்
விதிவிலக்கல்ல. திரையுலகில் யார்மீதும் அவர் பொறாமை கொண்டவரல்ல அவர். மாறாக
திறமைசாலிகளை அவர் அடையாளங்கண்டு வளர்த்திருக்கிறார். 50 களின்
பிற்பகுதியில் திருச்சி வானொலி நிலையத்துக்கு பாடல் பாடச் சென்றபோது அங்கு
பணிபுரிந்துவந்த கவிஞர் ஒருவரின் திறமையை பாராட்டி 'சென்னைக்கு வாய்யா
உனக்கு எதிர்காலம் இருக்கு' என வாஞ்சையோடு வாழ்த்திவிட்டுச் சென்றார்.
அவர்தான் பின்னாளில் காவியக்கவிஞர் என பெயர்பெற்ற வாலி. பாடகரான டி.எம்.எஸ்
தேர்ந்த சமையற்கலைஞர் என்பது பலரும் அறியாதது. தன் குரலின் இனிமைக்காக பல
சமையற்குறிப்புகளை அறிந்துவைத்ததோடு ஓய்வு நேரத்தில் தானே சமைத்து
குடும்பத்தினருக்கு பரிமாறுவார்.
"டி.எம்.எஸ், எம்.ஜி.ஆர், சிவாஜி,
நான் உட்பட அரசியலில் பங்கெடுத்த நடிகர்களின் திரையுலக வாழ்க்கைக்கு
மட்டும் அல்ல; அரசியல் வாழ்க்கையிலும் டி.எம்.எஸ்க்கு முக்கிய பங்கு உண்டு.
ஆம்...தேர்தல் பிரசாரங்களுக்கு நாங்கள் செல்லும் இடங்களில் எத்தனை
மணிநேரங்கள் நாங்கள் தாமதமாக சென்றாலும் மக்களை காத்திருக்கச்செய்தது,
எங்களுக்காக அவர் குரல் கொடுத்து பாடிய பாடல்கள்தான். இப்படி எங்கள்
அரசியல்வாழ்விலும் அவர் பங்கு முக்கியமானது" என வெளிப்படையாக சொன்னார்
நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இது நிதர்சனமும் கூட.
ஆனால் தன்னால்
பயனடைந்த கதாநாயகர்கள் பின்னாளில் அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்தபோதுகூட
அவர்களின் சிறு பரிந்துரைக்கு கூட சென்று பல் இளிக்காத பண்பாளராக இறுதிவரை
திகழ்ந்தார் டி.எம்.எஸ்.
கதாநாயகர்களுக்காக குரல் கொடுத்த டி.எம்.எஸ் 1962-ம் ஆண்டு 'பட்டினத்தார்' என்ற படத்தில் தானே க(தை)தாநாயகனாக நடித்தார். அருணகிரிநாதர்
என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்த டி.எம்.எஸ். அதில் முருகனை
புகழ்ந்து "முத்தைத் திருபத்தித் திருநகை" எனும் பாடலை பாடியிருந்தார்.
தான் பாடும் பாடலின் பொருளை அறிந்தபின்னரே பாடும் வழக்கமுடைய டி.எம்.எஸ்
இந்த பாடலை பாடும் முன் கிருபானந்தவாரியாரிடம் நேரில் சென்று அதற்கான
பொருளைக் கேட்டறிந்த பின்னரே பாடினார். புகழ்பெற்ற அந்த பாடலைக் கேட்ட
அவரது பையன்களில் ஒருவர், "அப்பா, உனக்கு சிவாஜி குரல் கொடுத்தாரா" என
கேட்க விழுந்து விழுந்து சிரித்தாராம் டி.எம்.எஸ்.
"வடநாட்டுக்கு
ஒரு முகமது ரஃபி என்றால் தென்னாட்டுக்கு டி.எம்.சவுந்தரராஜன் என ஒரு முறை
டி.எம்.எஸ் குறித்து சிலாகித்த வாலி, கர்நாடக பாடகர்களே கூட சமயங்களில்
சுருதி விலக்கக்கூடும். டி.எம்.எஸ் எப்போதும் அதை செய்யமாட்டார். அத்தனை
இசைஞானம்" என புகழ்ந்தார்.
" லட்ச ரூபாய் கொடுப்பதாக சொன்னாலும்
டி.எம்.எஸ் சுருதி விலகி பாடமாட்டார். அதுதான் டி.எம்.எஸ்" என இன்னும் ஒரு
படிமேலாக டி.எம்.எஸ் பற்றி எம்.எஸ்.வி குறிப்பிட்டார் ஒருசமயம்.
உண்மைதான்,
இசைக்காக எதையும் விட்டுக்கொடுக்கத் தயங்காதவர் டி.எம்.எஸ். தான்
இசையமைத்த ஒரு படத்தில் தன் இருமகன்கள் இசையுலகில் தலையெடுத்த நேரத்திலும்
பாடலின் சுவைக்காக அவர்களை தவிர்த்து மற்றொரு புகழ்பெற்ற பாடகர் திருச்சி
லோகநாதனின் மகனான டி.எல்.மகராஜனை பாடவைத்தார். பாடகருக்கு புகழ் கிடைக்கும்
பாடல் என்று தெரிந்தும் இசைக்கே முக்கியத்துவம் அளித்து வேறொருவரை
பாடவைத்த அவரது பண்பு ஆச்சர்யமானது.
தமிழை அட்சர சுத்தமாக அழகாக
உச்சரித்து தமிழுக்கு பெருமை சேர்ந்த டி.எம்.எஸ், தமிழை தாய்மொழியாக
கொண்டவரல்ல என்பது ஆச்சர்யமான தகவல்.
2010ல் கோவையில் நடந்த உலகத்
தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் "செம்மொழியான தமிழ்மொழியாம்" என பாடியதுதான்
இசையுலகில் டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடல். 3 தலைமுறையினரை தன்
இனிய குரலால் மகிழ்வித்த 'மதுரை மாங்குயில்' டி.எம்.எஸ்ஸின் புகழ்
தமிழர்கள் காதுகள் இல்லாது பிறக்கும் காலம் வரை நீடித்து நிலைக்கும். - எஸ்.கிருபாகரன்
Dailyhunt
ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் இதுதான் நடக்கும்! சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை
'உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன் தமிழகத்தில் தடையை மீறி
ஜல்லிக்கட்டு நடந்தால், சட்டத்தைக் காக்க தமிழக அரசு தவறிவிட்டது என
அர்த்தம். அந்தச் சூழ்நிலையில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு
வரவேண்டும்' என ட்விட்டரில் கூறியுள்ளார் சுப்பிரமணிய சுவாமி. தமிழகத்தில்
ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற சூழல் தகித்து வரும் நிலையில், இந்த
கருத்து கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழுக்காக உழைத்தவர்... தமிழுக்காகவே வாழ்ந்தவர்... தமிழ் அறிஞர் ச.வே.சு நினைவு பகிர்வு !
தமிழ் மொழிக்காகவே வாழ்வின் கடைசி காலம் வரையிலும் உழைத்த முதுபெரும் தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் இன்று காலமானார்.
தமிழ்
மொழியின் மீதும் தமிழர்கள் மீதும் அளப்பறிய பற்றுக் கொண்டு
செயல்பட்டவர்களில் மிக முக்கியமானவர், ச.வே.சுப்பிரமணியன். இலக்கியங்கள்
மீது இவருக்கு இருந்த ஆளுமையின் காரணமாக 180 நூல்களை எழுதி உள்ளார். தமிழ்
மட்டும் அல்லாமல் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் இவர் புலமை வாய்ந்தவர்.
அதனால் ஆங்கிலத்தில் 8 நூல்களையும் மலையாளத்தில் ஒரு நூலும் எழுதி உள்ளார்.
அநேகமாக
தமிழகத்தில் அவரது காலடித் தடம் பதியாத பல்கலைக் கழகங்களே இல்லை என்று
சொல்லும் அளவுக்கு அனைத்து பல்கலைக் கழகங்களிலும் அறக்கட்டளைச் சொற்பொழிவை
நிகழ்த்தி உள்ளார்.
இவரது ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை இருநூற்றைத்
தாண்டும்.. இவரிடம் ஆலோசனை பெற்று முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை
50-க்கும் அதிகம். தமிழ்
மீது உள்ள பற்று காரணமாக அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்,
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே தமிழூர் என்ற கிராமத்தை அவரே
உருவாக்கினார். அங்குள்ள தமிழ் நகரில் 'தமிழகம்" என்ற இல்லத்தில் வசித்து
வந்தார். 87 வயதான நிலையிலும் தமிழுக்கு தொண்டு செய்து வந்த
ச.வே.சுப்பிரமணியன், கடந்த 4-ம் தேதி சாலையில் நடந்து சென்றபோது வாகனம்
மோதியதில் காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார்.
நெல்லை மாவட்டம்
வீரகேரளம்புதூரில் 1929 டிசம்பர் 31-ம் தேதி, சு.சண்முக வேலாயுதம்,
ராமலட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் ச.வே.சுப்பிரமணியன்.
தொடக்கக் கல்வியை விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள திருஇருதய மேல்நிலைப்
பள்ளியில் பயின்றார். உயர்நிலைப் பள்ளிக்கல்வியை அம்பாசமுத்திரம்
தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர், இடைநிலைக் கல்வியை
ம.தி.தா இந்துக் கல்லூரியில் பயின்ற அவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
இளங்கலை பட்டம் படித்தார். முனைவர் பட்டத்தை கேரள பல்கலைக்கழகத்தில் ஆய்வு
மேற்கொண்டு முடித்தார்.
தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-ல்
பணியைத் தொடங்கிய அவர், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி,
திருவனந்தபுரம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும் பணியாற்றிய அனுபவம்
அவருக்கு இருந்தது. சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள்
இயக்குநராகவும் செயல்பட்டார். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1969-ல்
திருவள்ளுவர் கல்லூரி உருவாக்க காரணமாக இருந்தார்.
தமிழகத்தில்
பல கருத்தரங்குகளில் இவர் ஆய்வுக் கட்டுரைகளை படித்துள்ளார். அத்துடன்,
இலங்கை, ஜெர்மனி, போலந்து, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து
உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும் சென்று ஆய்வுக் கட்டுரைகளையும் சிறப்பு
சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி உள்ளார். இவர், சென்னை உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்த காலத்தில், பல ஆய்வு நூல்களை
வெளியிட்டார். இவரது நூல்கள் பல்வேறு பலகலைக் கழகங்களிலும் கல்லூரி
மாணவர்களுக்கு பாடநூலாக உள்ளது.
பணியில்
இருந்து ஓய்வு பெற்ற பின்னர், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழூர் என்ற
கிராமத்தை உருவாக்கினார். அங்கு இவரது வீட்டில் பல அரிய நூல்கள்
இருந்ததால் எப்போதும் அங்கு மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களால் நிறைந்து
இருக்கும். இவர், செந்தமிழ்ச் செம்மல், நல் அறிஞர், தமிழாசுரர், தமிழ்
இயக்கச் செம்மல், தொல்காப்பியச் செம்மல் என பல பட்டங்களையும் விருதுகளையும்
பெற்று உள்ளார். 1999-ல் சாகித்ய அகாடமி சார்பாக இவருக்கு 'பாஷாசம்மன்"
என்ற உயரிய விருது வழங்கப்பட்டது. தமிழ் மொழிக்காக பங்காற்றியதைக்
கவவுரவிக்கிற வகையில் இந்த விருது சாகித்ய அகாடமியால் வழங்கப்பட்டது. அதன்
பின்னர், இதுவரையிலும் தமிழ் மொழிக்காக வேறு எழுத்தாளர் யாருக்கும் இந்த
விருது வழங்கப்படவில்லை. இவர், இலக்கிய நினைவுகள், சிலம்பின் சில
புரல்கள், இலக்கிய கனவுகள், மாந்தர் சிறப்பு, ஒன்று நன்று, இலக்கிய
உணர்வுகள், கம்பன் கற்பனை, கம்பன் கவித்திறன், இளங்கோவின் இலக்கிய
உத்திகள், தமிழ் இலக்கிய வரலாறு, சிலப்பதிகார இசைப்பாடல்கள் என நூல்களின்
வரிசை சென்று கொண்டே இருக்கிறது. ஆங்கிலத்தில், சிலப்பதிகாரத்தின்
இலக்கணம், அகநானூறு இலக்கணம், தமிழ் இலக்கிய ஆய்வுகள் என 9 நூல்களை எழுதி
இருக்கிறார். சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டத்தை மலையாள மொழியில்
மொழிபெயர்த்து உள்ளார்.
இவரது வாழ்க்கை வரலாற்று நூல்களாக 'தமிழ்
ஞாயிறு, சாதனைச் செம்மல்" மற்றும் தமிழ்ச் செம்மல் வ.வே.சு" என இரு
படைப்புக்கள் வெளிவந்து உள்ளன. வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த
ச.வே.சுப்பிரமணியன் மறைவுக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் தமிழ்
ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இவரது பெயரை அவரது படைப்புக்கள்
காலம் கடந்தும் நினைவுகூரும் என்பது நிச்சயம். - ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்