Thursday, February 2, 2017

குழந்தைகளை செய்தித்தாள் படிக்க வைக்க 6 சுலப வழிகள்!

குழந்தைகளை

குழந்தைகளைப் பற்றிய புகார்கள் வீட்டுக்கு வீடு மாறும் என்றாலும் ஒரு புகார் மட்டும் எல்லோர் வீடுகளிலும் இருக்கும். 'எப்போ பார்த்தாலும் டிவியைப் பார்த்துட்டு, அதுவும் கார்ட்டூன் சேனலைப் பார்த்திட்டே இருக்காங்க' என்பதுதான் அது.

அதிக நேரம் தொடர்ச்சியாக டிவி பார்ப்பதனால் கண் உள்ளிட்ட உடல் உறுப்புகளும் மனநிலையும் பாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற பல பெற்றோர்களும் குழந்தைகளை பாடப் புத்தகம் அல்லாத புத்தகங்கள் படிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொண்டு, தோல்வி கண்டிருப்பார்கள். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை, குழந்தைகளிடம் உருவாக்க காலை எழுந்ததும் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை உருவாக்கலாம். 'அதையும் முயற்சி செய்து பார்த்துவிட்டோம்' என உதட்டைப் பிதுக்கும் பெற்றோர்களுக்கு வழிகாட்டும் 6 சுலபமான வழிகள் இதோ:



1. செய்திகளை ஏந்தி வரும் கப்பல்: செய்தித்தாளைக் கிழிக்காமல் கப்பல் அல்லது கிரீடம் என... என்னென்ன உருவங்கள் தயாரிக்க முடியுமோ அவற்றைச் செய்யுங்கள். அதை உங்களின் பிள்ளை கண் விழிக்கும்போது, அவர்கள் எதிரில் இருப்பதுபோல வைத்துவிடுங்கள். அவர்கள் அதைப் பார்த்ததும் ஆவலோடு எடுத்துப் பார்ப்பார்கள். பின், இதை எப்படிச் செய்தீர்கள் எனக் கேட்பார்கள். அப்போது, 'அதில் உள்ள செய்திகளைப் படித்துவிட்டு வா கற்றுக்கொடுக்கிறேன்' என்று சொல்லுங்கள். அவர்கள் படித்துவிட்டு, கேட்பார்கள். அப்போது எப்படிச் செய்வது எனக் கற்றுக்கொடுங்கள். இதைப் போல தினந்தோறும் செய்யும்போது, நாளைக்கு என்ன உருவம் தன்னை எழுப்பப் போகிறது என்கிற எதிர்ப்பார்ப்போடு உறங்கச் செல்வார்கள். அந்த எதிர்பார்ப்பு செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை நிச்சயம் உருவாக்கும்.



2. செய்திகளை கட் பண்ணுங்க: செய்தித்தாளின் எல்லா செய்திகளும் குழந்தைகள் படிக்கும் விதத்தில் இருக்காது. அவர்கள் அவசியம் படிக்க வேண்டும் என நீங்கள் நினைக்கும் செய்திகளை நறுக்கி எடுங்கள். காலையில் டீ கொடுக்கும்போது, டம்பளரின் அடியில், குளிக்கச் செல்லும்போது டவலில் செல்லோ டேப்பால் ஒட்டியும் டிபன் சாப்பிடும்போது தட்டில் விளிம்பில்... என காலை வேளையில் குழந்தைப் பயன்படுத்தும் பொருட்களில் அவற்றை இணைத்து வையுங்கள். இதைத் தொடர்ந்து செய்யும்போது, நிச்சயம் அந்த துண்டுச் சீட்டுகள் வழியே செய்தித்தாளைச் சென்றடைவார்கள்.



3. டோரா சொல்லும் செய்திகள்: முந்தைய வழியைப் போலவே இது. குழந்தைகளுக்கான செய்தியைச் சுற்றி, அவர்களுக்குப் பிடித்தமான உருவத்தை, உதாராணமாக டோரா பிடிக்கும் எனில் டோராவின் படத்தை அவுட் லைனாக வரைந்து விடுங்கள். டோராவைப் பார்க்கும் ஆவலில் அதனுள் இருக்கும் செய்தியைப் படிக்க ஆரம்பிப்பார்கள். நாட்கள் செல்லச் செல்ல, மற்ற செய்திகளையும் படிக்க விருப்பம் கொள்வார்கள்.



4. மீதி செய்தியைத் தேடிச் செல்லுதல்: அநேகமாக பலரின் வீடுகளில் கரும்பலகை இருக்கிறது. இல்லையென்றாலும் சுவரின் ஏதேனும் ஓர் இடத்தில் கறுப்பு வண்ணம் தீட்டி வைத்திருப்பர். அதில், காலையில் நீங்கள் படித்த செய்தியின் ஒரு பகுதியை எழுதுங்கள். அதாவது, அந்தப் பகுதி முழுமையடையாமல் ஒரு சஸ்பென்ஸோடு இருக்க வேண்டும். அது என்னவென்று தேடி, செய்தித்தாளை ஆவலோடு படிக்கும் விதத்தில் எழுதி வைக்கலாம். செய்தித் தேடும் பழக்கம் செய்தித்தாளைத் தொடர்ந்து வாசிக்கவும் வைக்கும்.

5. வட்டமிட்டு பரிசு பெறு: நீங்கள் காலையில் எழுந்து செய்தித்தாளைப் படிக்கும்போது அதில் உள்ள சொற்களைத் தனியே குறித்துக்கொள்ளுங்கள். அந்தச் சொற்கள் உள்ள பகுதி, குழந்தைகள் படிக்க வேண்டிய பகுதியாக இருக்கட்டும். குழந்தைகள் எழுந்ததும் அந்தச் சொற்கள் ஒவ்வொன்றாகச் சொல்லி, செய்தித்தாளில் எங்கிருக்கிறது எனக் கண்டுபிடிக்கச் சொல்லுங்கள். சொற்களைத் தேடும்போது, அந்தச் செய்தியையும் படிப்பார்கள். சரியாக கண்டுபிடித்ததும் பாராட்டி, சின்னதாக பரிசு ஒன்றையும் கொடுங்கள். இது நாள்தோறும் தொடர்ந்தால், நீங்கள் சொற்களைச் சொல்லும் முன்பே செய்திகளைப் படித்து தயாராக இருப்பார்கள்.



6. படித்துக்காட்டும் பழக்கம்: 'அம்மாவுக்கு நேரமே இல்லை. நியூஸ் பேப்பரைக் கொஞ்சம் படித்துக்காட்டு' எனப் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, தம்பி, தங்கை இவர்களில் யாருக்கேனும் ஒருவருக்கு தினமும் செய்தித்தாளைப் படித்துக்காட்டும் பழக்கத்தை உருவாக்குங்கள். அது நாளடைவில், யாருக்கும் படித்துச் சொல்ல வேண்டியதில்லை என்றாலும் தனக்காக செய்திகளைத் தேடிச் சென்று படிப்பர்.

இந்த வழிகளைச் செயல்படுத்தும்போது, செய்தித்தாள் கிழிக்கவோ, கோடுகள் இட்டு சேதமாகவோ செய்யலாம். இவையெல்லாம் குழந்தைகள் தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வரைதான். அதுவரை இரண்டு செய்தித்தாளாக வாங்கலாம். குழந்தைகளுக்கு புத்தக வாசிப்புப் பழக்கம் புதிய உலகைத் திறக்கும்.

தமிழ் சீரியல்களில் தவிர்க்க முடியாத 5 விஷயங்கள்!


இளமையான அம்மா, அதை விட இளமையான பாட்டி, அம்மாஞ்சி மகன்கள், கொடுமைக்கார மாமியார்கள் அல்லது அரக்கக் குணம் கொண்ட மருமகள் எனத் தமிழ் சீரியல்களின் டெம்ப்ளேட்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சில குறிப்பிட்ட குணங்கள் இல்லாத தமிழ் தொடர்களே இல்லைன்னு சொல்லலாம். அதுவும் கடந்த இருபத்து அஞ்சு வருஷமா இப்படியேதான் இருக்குங்கிறதுதான் சோக ஸ்டோரி!

நகை குடோன் ஆன்ட்டிஸ்


எவ்வளவு ஸ்பீடா போட்டுகிட்டாலும் முக்கால் மணி நேரம் டைம் எடுக்கும் அளவுக்கு நகை போட்டு ஒரே ஒரு ஆன்ட்டியாவது ஒவ்வொரு சீரியலிலும் எண்ட்ரி கொடுப்பார்கள். இதில் இன்னொரு விஷயம் என்னான்னு பார்த்தால் நைட் 3 மணிக்குக்கூட.. ஏன் 24 மணிநேரமும் அந்தக் கிலோ கணக்கான நகைகளோடத்தான் சுத்திகிட்டு இருப்பாங்க.





க்யூட் பேபிஸ்

இந்தக் குழந்தைகள் நம்ம சீரியல் பார்ட்டிகளிடம் மாட்டிக்கொண்டு படும் பாடு இருக்கே, சொல்லவே வேண்டாம். எந்த கேரக்டரையும் தேவையில்லாமல் யூஸ் பண்ணக்கூடாது என்கிற விதிமுறையை அந்தக் குழந்தைகளிடம் இருந்துதான் ஆரம்பிப்பார்கள். நிறைய வாயடிக்கும் பெண் குழந்தைனா கண்ணை மூடிகிட்டு சொல்லலாம் அதைக் கண்டிப்பா வில்லன்கள் கடத்துவாங்கன்னு. சில சீரியல்களில் ஹார்லிக்ஸ், காம்ப்ளான் எல்லாம் கொடுக்கவே மாட்டார்கள் போலிருக்கு. எட்டு மாசக் குழந்தை எத்தனை வாரங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும். ஆனால், அதோட அப்பா மட்டும் கொலைப்பழி விழுந்து ஜெயிலுக்குப் போய் ஆயுள் தண்டனை அனுபவிச்சு, அங்கு நல்லவனா மாறித் திரும்பி வந்திருப்பார்.



கஷ்டம் ப்ரோ

"உன்னை கொன்னு, கத்தியால் குத்தி, கழுத்தறுத்து,கடல்ல வீசி, பெட்ரோல் ஊற்றி எரிச்சிடுவேன்'ங்கிற தெலுங்கு டப்பிங் பட டயலாக் மாதிரி ஒவ்வொரு நாடகத்தின் முன்னணி கேரக்டர்கள் படும் கஷ்டம், இந்த உலகத்தில் யாருக்குமே வரக்கூடாது என்று பார்க்கிற எல்லோருமே வேண்டிக்குவாங்க. அப்படி ஒரு கஷ்டம்லாம் சாதாரண மனுசனுக்கு வந்தா ஒவ்வொருத்தரும் நாலைந்து தடவை தற்கொலை பண்ணிக்குவாங்க. இருந்தாலும் அவர்கள் அதையெல்லாம் அசால்ட்டாக் கடந்து போவாங்க பாருங்க, அதான் கெத்து!



வியாதி -

டிஸைன் டிஸைனான வியாதிகள் சினிமாவில்தான் வரும். ஆனா சீரியலில் பார்க்கிறவர்களுக்குப் புதுப்புதுப் பெயரைச் சொல்லி பயமுறுத்தாமல் சாதாரண காய்ச்சல், வயிற்று வலியென்றுதான் அட்மிட் ஆவாங்க. ஆனா அதோட ரிசல்ட் வேற மாதிரி இருக்கும். ஷார்ட் டைம் மெமரி லாஸ்க்கு சிகிச்சையா வாழைப்பழம் கொடுத்து, போகிற போக்கில் மெடிக்கல் மிராக்கிள் பண்ணுவார்கள். இன்னும் சில தொடர்களில் வயிற்றுக்குள் கத்தியை விட்டு செம சுத்து சுத்தியிருப்பார் வில்லன். இருந்தாலும் குத்து வாங்கியவரின் நாலு பையன், இரண்டு பெண்கள், பேரன் பேத்திகள் (??!!!) வேண்டுதலில் அந்த மனிதர் பிழைத்து வந்து நிற்பார். இன்னும் சில சீரியல்களில் ஒரே அறையில் செக்சன் 302 செய்துவிட்டு நான்கைந்து வாரங்களுக்கு அந்தப் பிணத்தை வைத்துக்கொண்டு அலைவார் வில்(லி)லன்.

மிஸ்டர் ஹேண்ட்சம்

ஆஃபிஸ் முடிந்து வீட்டுக்குப் போனா... எப்படா கையில ரிமோட் கிடைக்கும்னு தேவுடு காத்து, தலையெழுத்தே என சீரியலும் பார்க்கும் ஆண்களுக்கு வயிற்றெரிச்சல் கிளப்பும் மேட்டர் இது. ஒரு ஆண் கேரக்டர் இருப்பார். ஆளும் சுமார்தான். அதில் அவருக்கு வேலை வேறு போயிருக்கும். இருந்தாலும் அவருக்கு ஒரு எக்ஸ் லவ் இருக்கும். அந்த லவ்வர் இவரை மீண்டும் ரொமான்ஸ் செய்து பழிவாங்கத் துடிப்பார். ஒரு பக்கம் மனைவி, இன்னொரு பக்கம் பழைய ஆபிஸில் வேலை பார்த்த கொலிக்கின் ஒன்சைட் லவ் என வதவதவென அவரை லவ் டார்ச்சர் செய்து கொண்டிருப்பார்கள்.


- வரவனை செந்தில்

மறதி... ஜாக்கிரதை! நலம் நல்லது-39 #DailyHealthDose

மறதி



புத்திசாலியாக இருப்பதற்கும் ஞாபக சக்திக்கும் தொடர்பு இல்லை. இதற்கு வால்ட் டிஸ்னி, வின்ஸ்டன் சர்ச்சில், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்... எனப் பலரை உதாரணமாகச் சொல்லலாம். ஆனாலும்,`நேத்துப் படிச்சது இன்னைக்கு மறந்து போச்சே...’ என்கிற கவலை நம்மில் பலருக்கும் உண்டு. மறதி பிரச்னை தீவிரமாகும்போது அதை `அல்சைமர்’ என்கிறது மருத்துவ மொழி.

`கார் சாவியை எங்கே வெச்சேன்னு தெரியலியே?’, `காதலிகிட்ட புரொபோஸ் பண்ணின தேதியை மறந்துட்டேனே..’, என்பவை எல்லாம் ஆரம்பகட்ட மறதிக் குறைபாடு என்கிறது நவீன மருத்துவம். இப்படி கொஞ்சமாக மறக்கத் தொடங்கி, கடைசியாக எங்கு இருக்கிறோம், என்ன செய்ய வந்தோம்... என்பதை எல்லாம் மறக்க ஆரம்பிப்பதுதான் அல்சைமர் நோயின் உச்சகட்ட அபாயம்.

வயதானவர்களுக்குத்தான் அதிகம் வருகிறது அல்சைமர் என்கிற இந்த நோய். `2020-ம் ஆண்டு, உலக மக்கள்தொகையில் 14.2 சதவிகித வயோதிகர்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதேபோல், ஓய்வுக்காலம் வந்த பிறகுதான் இது வரும் என்பது கிடையாது. செல்லத் தொப்பையோடு, தலைக்கு டை அடித்துக்கொள்ளும் வயதிலும் மறதி நோய் வர வாய்ப்பு இருக்கிறது.



`அவ்வளவா பிரச்னை இல்லை’ என்று நம்மை எப்போதோ யோசிக்கவைத்த மறதி...
`அடடா... மறந்துட்டேனே’ என நாம் சுதாரிக்கும் மறதி...
மற்றவர், `அதுக்குள்ள மறந்துட்டீங்களா?’ என அங்கலாய்த்துக்கொள்ளூம் மறதி...
`சார்... அவர் மறதி கேஸ். எழுதிக் கொடுத்துடுங்க’ என அடுத்தவர் எச்சரிக்கும் மறதி...
`எதுக்குக் கிளம்பி வந்தோம்?’ என யோசித்து நடுவழியில் திணறும் மறதி...
`நான் யார், என்ன செய்ய வேண்டும்?’ என்பதே தெரியாமல் போகும் மறதி...
ஒட்டுமொத்தமாகச் செயல் இழந்து முடங்கும் மறதி...
என அல்சைமர் மறதி நோயை ஏழு படிநிலைகளாகப் பார்க்கிறது நவீன மருத்துவம். இவற்றில் இரண்டு, மூன்றை நம்மில் பலர் அனுபவித்திருப்போம்.

சாதாரண வயோதிக்கத்துக்கும், இந்த மறதி நோய்க்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. மூளையில் புதிதாக முளைக்கும் அமைலாய்டு பீட்டாவை இதற்கு முக்கியமான தடயமாகப் பார்க்கிறார்கள். சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா வாழ்வியல் நோய்கள்தான், இந்த மறதி நோயை அதிகரிப்பவை என எச்சரிக்கிறது, உலக சுகாதார நிறுவனம். ஓர் ஆச்சர்யமான விஷயம், மெடிடேரேனியன் டயட் (Mediterranean diet) சாப்பிட்டால் மறதி நோய் வருவது குறையும் என்பது. மத்தியத் தரைக்கடலைச் சுற்றியுள்ள நாடுகளின் பாரம்பர்ய உணவுகளை `மெடிடேரேனியன் டயட்’ என்கிறார்கள். இந்த வகை உணவுகள், அதிக ஆன்டிஆக்ஸிடென்ட்டுகளையும், அழற்சியைக் குறைக்கும் (Anti-Inflammatory) தன்மையையும் கொண்டவை என, அமெரிக்கா, இக்கிலாந்து விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டு, நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த மத்தியத் தரைக்கடல் உணவுகளுக்கு, நம் ஊர் மிளகு, சீரகம், வெந்தயம், பூண்டு, பெரிய நெல்லிக்காய், முருங்கை, மணத்தக்காளிக் கீரை, கம்பு, கேழ்வரகு முதலான சிறுதானியங்களும், பாரம்பர்ய இந்திய உணவுகளும் கொஞ்சமும் சளைத்தவை அல்ல. கூடுதலாக, மருத்துவக்குணம்கொண்ட பல தாவர நுண்சத்துக்களையும் கொண்டவை.



ஞாபகசக்தி அதிகரிக்க சில வழிமுறைகள்...

* வல்லாரைக் கீரையை சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம். வல்லாரையில் உள்ள ஆசியாடிகோசைட்ஸ் (Asiaticosides), மூளைக்குச் சோர்வு தராமல், அறிவைத் துலங்க வைக்கும். வல்லாரை தோசை, வல்லாரை சூப் இன்றைக்கு பாரம்பர்ய உணவகங்களில் பிரபலமான உணவுகள்.

* 'பிரம்மி’, பாரம்பர்ய மருத்துவத்தின் பிரபலமான ஞாபகசக்தி மருந்து. மறதியை நீக்கவும், ஞாபகசக்தியை அதிகரிக்கவும் இதில் உள்ள `பேக்கோசைட்ஸ்’ (Baccosides) பயன் அளிப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பிரம்மி வாங்கி சாப்பிடலாம்.

* தினசரி 20 முதல் 40 நிமிடங்களுக்கு யோகாசனப் பயிற்சிகள் மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள் செய்யலாம். இவை மறதியைப் போக்கும்; ஞாபகசக்தியைப் பெருக்கும்.



எதிர்கால மறதி சிக்கலில் இருந்து தப்பிக்க, நிகழ்காலத் தேவை, அந்தக் காலத்தில் இருந்த அக்கறை மட்டுமே. நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, அன்றாடம் ஆரோக்கியமான உணவு என வாழ்க்கையைத் திட்டமிடத் தவறினால், மறதி நோய் கொண்ட வயோதிகம் வரும் சாத்தியம் மிக அதிகம் என்பதை ஞாபகத்தில் கொள்வோம்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

தொகுப்பு: பாலு சத்யா

பிரேக்ஃபாஸ்ட் மிஸ் பண்ணவே கூடாது... ஏன் தெரியுமா? #BreakfastYMust


காலைப் பொழுது, இன்று நம் கையில் இல்லை. கடிகார முள் நகர நகர, ஒவ்வொருவருக்கும் கூடுகிறது பிரஷர். பணியிடம், கல்விக்கூடம், வியாபாரத்தலம்... என்பதை நோக்கி விரைகிற அவசர தருணம் அது. ஒவ்வொருவருக்கும் அவரவர்பாடு, அவரவர் வாழ்க்கை. இதில் பெரும்பாலானவர்களுக்கு நிறுத்தி, நிதானமாகச் சாப்பிட நேரம் இருப்பதில்லை... அதாவது பிரேக்ஃபாஸ்ட். இருக்கிற உணவை ருசி, பசி அறியாமல் வாய்க்குள் அடைத்துக்கொண்டு, வீட்டைவிட்டுக் கிளம்பி ஓடுவது ஒன்றே குறிக்கோள் என்பதுபோல அப்படி ஒரு ஓட்டம். அப்படிப்பட்டவர்கள் கவனத்துக்காக ஒரு செய்தி!

பிரேக்ஃபாஸ்ட்... இரவில் சாப்பிட்டுவிட்டு, அதன்பிறகு எடுத்திருந்த நீண்ட நேர இடைவெளிக்கு உணவு உட்கொள்வதன் மூலம் தடை போடுவதுதான் பிரேக் ஃபாஸ்ட். உங்களுக்குத் தெரியுமா..? காலை உணவைத் தவிர்ப்பது மிக மோசமான பக்கவிளைவுகளை நமக்கு ஏற்படுத்திவிடும். நாம் உயிர் வாழ, நம் உடல் இயங்கத் தேவையான சக்தியைத் தருவது உணவு. அதிலும் காலையில் நாம் சாப்பிடும் உணவில், கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து மற்றும் கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கவேண்டியது அவசியம். இவையெல்லாம் இருந்தால்தான், அன்றைக்கு முழுவதற்குமான சக்தி நம் உடலுக்குக் கிடைக்கும்.

பிரேக்ஃபாஸ்ட் ஏன் முக்கியம்?

இரவு உணவு சாப்பிடுகிறோம். அதற்குப் பின் ஆறில் இருந்து பத்து மணி நேரங்கள் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம். இந்த இடைவெளியில், இரவில் உடலும் மூளையும் ஓய்வுநிலையில் இருக்கும். மறுநாள் காலையில் இரண்டுக்கும் சக்தி தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடும் உணவு, மூளையில் இருக்கும் நியூரோடிரான்ஸ்மிட்டர்களை சிறப்பாகச் செயல்பட வைத்து, நினைவுத்திறன் அதிகரிக்க உதவுகிறது. அதோடு, உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.







பிரேக்ஃபாஸ்ட் தொடர்ந்து சாப்பிடவில்லை என்றால்...

குழந்தைகளுக்கு...

பகல் பொழுதிலேயே தூக்கம் வரும்; படிப்பில் கவனமின்மை, நாள் முழுவதும் சோர்வு, நினைவாற்றல் இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இளம் வயதினர்களுக்கு...

முடி உதிர்தல், உடல் வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பு, சோர்வு, தலைசுற்றல், குமட்டல், உடல் எனர்ஜி குறைதல், அல்சர், சர்க்கரைநோய் டைப்-2, நினைவாற்றல் இழப்பு, உடல் எடைக் குறைவு போன்றவற்றை ஏற்படும்.

வயதானவர்களுக்கு...

நாள் முழுக்க உடல் மற்றும் மனச்சோர்வு, இதய நோய்கள், சர்க்கரைநோய், தலைசுற்றல், வயிற்று எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.





பிரேக்ஃபாஸ்ட்: யாருக்கு... எப்போது... எவ்வளவு?

காலை உணவு 7-9 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும்.

நைட் ஷிஃப்டுக்குச் செல்பவர்கள், கண்டிப்பாக காலை உணவை சாப்பிட்ட பிறகுதான் ஓய்வு எடுக்க வேண்டும். நீண்ட நேரம் தூங்கும்போது, இரைப்பையில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் நன்கு சுரக்கும். காலை உணவைத் தவிர்த்தால், வயிற்றில் புண் தோன்றி, அமிலம் உணவுக்குழாய்க்குச் சென்று நடுக்காதை அடையும். மேலும், ஒற்றைத் தலைவலியையும் ஏற்படுத்திவிடும்.

காலை உணவாக ஏதாவது ஒரு பழம், லேசாக புளித்த மாவு கொண்டு தயார் செய்யப்பட்ட எளிதில் செரிமானம் ஆகும் உணவைச் சாப்பிட வேண்டும். கொழுப்புச்சத்தும் அவசியம். அதற்காக அதிக கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வேண்டாம். சரிவிகித உணவாகச் சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு, நன்றாக காய்ச்சிய பாலை அருந்தக் கொடுக்கலாம். பால் குடிக்காதவர்கள், கடலை போன்ற பருப்பு வகைகளைச் சாப்பிடலாம். அவித்த முட்டை, ஆம்லெட் சாப்பிடலாம்.





கேரட், தக்காளி, வெங்காயம், வெள்ளரி ஆகியவை அடங்கிய வெஜ் சாண்ட்விச் செய்து சாப்பிடலாம்.

இளம் வயதினர், பச்சை இலைக் காய்கறிகள், வேரில் விளையக்கூடிய கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம், கிழங்குகள், சிறுதானியங்கள், நார்ச்சத்து மிகுத்த வெள்ளரி, பீன்ஸ், பயறு வகைகள், முளைகட்டிய பயறு வகைகளைச் சாப்பிடலாம்.

வயதானவர்களுக்கு... கேழ்வரகு இட்லி, இட்லி, தோசை - சாம்பார், ஆப்பம், சாம்பாருடன் இடியாப்பம், தக்காளி-பட்டாணி சாதம், வரகரிசி-தக்காளி சாதம், கேழ்வரகு ஸ்டஃப்டு இட்லி, வெங்காயப் பொடி தோசை, உளுந்து கஞ்சி, ஓட்ஸ் உப்புமா, ராகி உப்புமா, கேழ்வரகுக் கூழ் போன்ற எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளாக இருக்க வேண்டும்.







சரியான நேரத்தில் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டால்...

* நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்படத் தேவையான சக்தி கிடைக்கும்.

* மூளை மற்றும் தசைகளுக்குத் தேவையான ஊட்டத்தை காலை உணவு அளிக்கும்.

* இதயம், செரிமான மண்டலம், எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

* அல்சர் மற்றும் வயிற்று எரிச்சல் வராமல் தடுக்கும்.

ஆக, என்ன அவசரமானாலும், காலை உணவை ஆற, அமர மென்று, நிதானமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்காதீர்கள். என்றென்றும் ஆரோக்கியம்... நிச்சயம்!


- ச.மோகனப்பிரியா

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா? சாப்பிட, தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்..! #FoodAlert


சிலருக்குக் காலையில் எழுந்ததுமே வயிற்றைக் கிள்ளுவது மாதிரி இருக்கும். கிடைக்கிற எதையாவது எடுத்துச் சாப்பிட்டு, பசி போக்குவது அவர்கள் வழக்கமாகவும் இருக்கும். பசி எடுக்காமலேயே எதையாவது சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். வெறும் வயிற்றில் இப்படிக் கண்டதையும் சாப்பிடுபவர்கள் கவனிக்க..! இப்படிச் சாப்பிடும் உணவுகள் ஒருவேளை நமக்கு நன்மை அளிக்கலாம். மாறாக, வேறு பிரச்னைகளையும்கூட ஏற்படுத்திவிடலாம். வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை.... கூடாதவை என்னென்ன உணவுகள் என்று பார்க்கலாம்!







எதைச் சாப்பிடலாம்?

கோதுமையில் தயாரான உணவு... சிறப்பு!

காலைக் கடன்களை முடித்து, உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி எல்லாம் செய்த பிறகு, டிஃபனுக்கு நல்ல தேர்வு கோதுமையில் செய்யப்பட்ட சப்பாத்தி, பூரி, தோசை முதலியன. சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள பாசிப் பருப்பில் செய்த `தால்’ கூடுதல் சிறப்பு. நம் உடலுக்கு நாள் முழுக்கத் தேவையான புரோட்டீன், வைட்டமின்கள், இரும்புச்சத்து அத்தனையும் கிடைக்கும்.





கேழ்வரகு கூழ்... கேடு தராது!

`ராகி’ என சொல்லப்படும் கேழ்வரகின் சிறப்பைச் சொல்லிக்கொண்டே போகலாம். எடைக் குறைப்புக்கு உதவும்; சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். கொழுப்பைக் குறைக்கும். கேழ்வரகில் புரோட்டீன்களும் அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. ரத்தசோகை தீர்க்க உதவும். செரிமானத்துக்கு நல்லது. பிறகென்ன... கேழ்வரகு கூழை மருத்துவர் ஆலோசனையுடன் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.





முட்டைக்குச் சொல்லலாம் வெல்கம்!

வேக வைத்த முட்டையை, காலை டிஃபனோடு சாப்பிடுவது அவ்வளவு நல்லது. முட்டையின் வெள்ளைப்பகுதியில் உள்ள அதிகமான புரதச்சத்து, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைத் தூண்டும். அதோடு, அன்றைய தினத்துக்கு நமக்குத் தேவையான கலோரிகளும் கிடைத்துவிடுவதால், மேலும் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தை வரவழைக்காது.



தர்பூசணிக்கு தலை வணங்கலாம்!


வெறும் வயிற்றில் தாராளமாகச் சாப்பிடலாம். நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நச்சுக்களை அழிக்கும் தன்மையுள்ளது; வைட்டமின் ஏ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எல்லாம் இதில் இருக்கின்றன. நம் ஆரோக்கியம் காக்கக்கூடிய நீர்ச்சத்துள்ளது தர்பூசணி. எல்லா நாட்களிலும் தர்பூசணி கிடைப்பதில்லை என்பதால், கிடைக்கும் நாட்களில் வாங்கிப் பயன்படுத்தலாம்.




கோதுமை பிரெட்டுக்கு `ஓ’ போடலாம்!


கிரீன் டீ, கோதுமை பிரெட் ஸ்லைஸ் இரண்டு... காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட அருமையான காம்பினேஷன். கோதுமை பிரெட்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்களும், குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட்டும் நம் உடலுக்கு சக்தி தருபவை. நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்கச் செய்பவை.


எதைச் சாப்பிடக் கூடாது!

பேக்கரி ஐட்டங்கள் வேண்டாமே!

முதல் நாள், `ஈவினிங்க் ஸ்நாக்ஸுக்கு ஆகும்’ என வெஜிடபுள் பஃப்ஸ், எக் பஃப்ஸ் போன்ற எதையாவது வாங்கிவைத்திருப்போம். அவற்றில் ஒரு பகுதி சாப்பிடாமல் மீதமாகியிருக்கும். பார்ப்பதற்கு அழகாகவும், உண்ண வேண்டும் என்கிற வேட்கையைத் தூண்டுவிதத்திலும்கூட அவை இருக்கலாம். சிலருக்கு, முக்கியமாக இல்லத்தரசிகளுக்கு, `இவை வீணாகிப் போய்விடுமே’ என்கிற கவலை வரும். அதனாலேயே, காலையில் அதை வெறும் வயிற்றில் உள்ளே தள்ளுவதற்குத் தயாராக இருப்பார்கள். பேக்கரியில் தயாராகும் இதுபோன்ற மாவுப் பண்டங்களில் `ஈஸ்ட்’ சேர்ப்பார்கள். அது, நம் வயிற்று ஒழுங்கை பாதிக்கும்; எரிச்சலை ஏற்படுத்தும்; வாயுத்தொல்லையை ஏற்படுத்திவிடும். எனவே, இவற்றைத் தவிர்க்கவும்.



ஸ்வீட்ஸுக்குச் சொல்லலாம் 'நோ’!
சிலருக்கும் இனிப்போடு அன்றைய நாளைத் தொடங்குவது பிடிக்கும். அதற்காக, லட்டில் தொடங்கி ராஜஸ்தான் ஹல்வா வரை, விதவிதமாகப் பொளந்துகட்டுவார்கள். உண்மையில், வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிடாமல் நாளைத் தொடங்குவதே, அன்றைய தினத்தை இனிமையாக்கும் என்பதை மனதில் கொள்க. சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், வெறும் வயிற்றில் நாம் எடுத்துக்கொள்ளும் இனிப்புகளில் இருக்கும் சர்க்கரை, உடலின் இன்சுலின் சுரப்பைக் கடுமையாகப் பாதிக்கும்; அது கணையத்துக்கு மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி, சர்க்கரைநோய் தொடங்கி பெரிய உடல்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எச்சரிக்கை.



தயிர், யோகர்ட்... தவிர்க்கவும்!
`முதல் நாள் ராத்திரியே உறைக்கு ஊற்றி, காலையில் தயிரில் லேசாக சர்க்கரை தூவி, ஜில்லுனு சாப்பிடுற சுகம் இருக்கே. அது அலாதியானது’ என்கிற ரகமா நீங்கள்? தயிரோ, யோகர்ட்டோ தவிர்த்துவிடுங்கள் பாஸ்... குறிப்பாக டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரைநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள். ஏனென்றால், இதில் கொழுப்பைக் கூட்டும், சர்க்கரையை சேர்க்கும் காரணிகள் உள்ளன. நல்ல குணங்கள் சில இருந்தாலுமே, டயட்டில் இருப்பவர்களுக்கு யோகர்ட், தயிர் வெறும் வயிற்றில் வேண்டவே வேண்டாம்.





தக்காளிக்குத் தடை போடலாம்!
`சமையலறைக்குப் போனோமா, ஒரு தக்காளியை நறுக்கித் துண்டுகளைச் சாப்பிடுவோமா...’ என வெறும் வயிற்றில் அமிலம் கரைப்பவர்களும் நம்மில் உண்டு. ஆம்... இது உண்மையும்கூட. தக்காளி நல்லதுதான். அது வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பல கூட்டுப்பொருட்கள் (Ingredients) நிறைந்தது, மறுப்பதற்கில்லை. ஆனால், வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, வயிற்றில் அசிடிட்டியை ஏற்படுத்திவிடும். இது தொடர்ந்தால், கேஸ்ட்ரிக் அல்சர் வரை வந்து அவதிப்பட நேரிடும்.



வாழைப்பழம்
காலையில் ஒரு வாழைப்பழத்தைப் பிய்த்துப்போட்டு, தண்ணீர் குடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அவர்களுக்காக ஒரு செய்தி... வாழைப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம் உள்ளது. வெறும் வயிற்றில் வாழைப்பழத்தைச் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் சேரும். ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரிக்கும். ஆக, ரத்தத்தில் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு சமநிலையில் இருக்காது. இது, இதயத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்; இதய நோய்களை வரவழைத்துவிடும்.


- பாலு சத்யா

இரைச்சல்... செல்லாக்காசாகும் செவித்திறன்! நலம் நல்லது-50 #DailyHealthDose


உரக்கப் பேசும் இனக் குழுக்களில் இருந்து வந்தவர்கள் நாம்! சத்தமாக வசனம் பேசுவது; காதலைக்கூட உறக்கச் சொல்வது; தேர்தல் சமயங்களில் மைக்கில் விளாசுவது; திருமணம், பண்டிகைகளில் பட்டாசு கொளுத்துவது; கோஷம் போடுவது... என நம்மிடம் சத்தங்கள் ஏராளம்! இது இருக்கட்டும். இந்தியாவில், ஒலி மாசைக் கட்டுப்படுத்த சட்டங்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் எழும் சிக்கல்களால் செவித்திறன் குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதுதான் கவலைக்குரிய செய்தி.



பார்வைக் குறைபாடுகளுக்காக கண்ணாடி அணிபவர்களை ஏற்றுக்கொள்கிற இந்தச் சமூகம், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களை ஏற்றுக்கொள்வது இல்லை. அவர்கள் தங்கள் மன உணர்வுகளை மழலை வார்த்தைகளால் வெளிப்படுத்தும்போது, சிரித்து அவமானப்படுத்துகிறோம்.

செவித்திறன் குறைபாடு... காரணங்கள்!

* இதற்குப் பல காரணங்கள் உள்ளன. வெளியே தெரியும் வெளிக்காதைத் தாண்டி, நடு காது, உள் காது ஆகியவையும், ஒலியைக் கடத்தும் மிக நுண்ணிய குழலும் இருக்கின்றன. உள் காது முழுக்க நரம்பு இழைகளால் இருக்கும். இதில் எங்கு நோய்வாய்ப்பட்டாலும் செவித்திறன் குறையும் அல்லது முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.

* நாள்பட்ட சளி, காது-தொண்டை இணைப்புக் குழாயில் வரும் நீடித்த சளி, நடு காதில் தங்கும் சளி... என எளிதில் குணப்படுத்தக்கூடிய தொந்தரவை அலட்சியமாகக் கண்டுகொள்ளாமல் இருப்பதுகூட பின்னாளில் செவித்திறனில் பாதிப்பை உண்டாக்கும்.

* காதுக்குள் ரீங்கார ஒலிபோல கேட்டுக்கொண்டே இருப்பது மினியர்ஸ் நோயாக, வெர்டிகோவுடன்கூடிய காது நோயாக இருக்கக்கூடும். இன்றைக்கு முழுமையாகக் குணப்படுத்தக்கூடியவை இவை.

* அம்மை முதலான வைரஸ் நோயாலும் உள் காதின் நரம்பிழைகள் பாதிக்கப்படக்கூடும். பிறப்பிலேயே வரும் `ஓட்டோஸ்கிளெரோசிஸ்’ (Otosclerosis) எனும் நோயில், சத்தம் கடத்தும் ஒலியில் அதிரவேண்டிய நுண்ணிய எலும்புகள் சரியாக அதிராததால் செவித்திறன் குறையும். இந்த இரண்டு குறைபாடுகளைக் களைய உபகரண உதவி தேவைப்படும்.



* முதுமையில் எந்தக் காரணமும் இன்றி மெள்ள மெள்ள செவித்திறன் குறைவதும் இயல்பு: இது நோய் அல்ல.

* பெரிய உபகரணங்களைக்கொண்டு பூமியைக் குடைவது, கட்டடங்களை உடைப்பது போன்ற பணியில் ஈடுபடுபவர், விமானங்கள் இறங்கும் விமான நிலையத்துக்கு அருகே வசிப்பவர், டிஸ்கொதேயில் காது கிழியும் சத்தத்தில் ஆடும் இளைஞர்கள், அங்கு பணிபுரியும் உழைக்கும் வர்க்கத்தினர்... என இரைச்சல்களுக்கு நடுவே வாழ்பவர்களுக்கு மேற்சொன்ன எந்தக் காரணமும் இல்லாமல் செவித்திறன் பாதிக்கப்படும்.

* அதிகபட்ச சத்தத்தால் காதுக்குள் உள்ள ஸ்டீரியோசெல்லா எனும் 1,013 மைக்ரோ மீட்டர் அளவுள்ள மிக நுண்ணிய மயிரிழைகள் சிதைவதாலேயே செவித்திறன் குறைபாடு ஏற்படுகிறது. இது, உயர் ரத்த அழுத்தம், மன உளைச்சல் பிரச்னைகளையும் உண்டாக்கும். சமயத்தில் மாரடைப்பையும் ஏற்படுத்திவிடும்.



தவிர்க்க...

* பேனா, பென்சில், துடைப்பக் குச்சி வரை கையில் கிடைத்ததை வைத்து காது குடைவதும், சுத்தப்படுத்துகிறேன் என கடுஞ்சிரத்தையுடன் சுத்தம் செய்வதும் தவறு. காதினுள் மெழுகு போன்ற பொருள் உருவாவது நோய் அல்ல; நோய்க் கிருமிகளைத் தடுக்கத்தான் உருவாகிறது. அது அளவில் அதிகமானால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும்.

* சிலர் காதில் சீழ் வந்தால், எண்ணெய் காய்ச்சி காதுக்குள்விடுவார்கள். அது ஆபத்து. சுக்குத் தைலம் போன்ற சித்த மருந்துகளை தலைக்குத் தேய்த்துக் குளித்தாலே போதும், காது சீழ் முதலான நோய்கள் தீரும்.

* அன்று, காது நோய்களுக்கும், கேட்கும்திறனை கூட்டவும் மருள், கணவாய் ஓடு, தைவேளை முதலான மூலிகை மருந்துகள் தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இருந்தாலும், காதுக்குள் போடும் மருந்துகளை மருத்துவர் ஆலோசனை இன்றிப் போடுதல் கூடாது.

* தினமும் தலைக்குக் குளிப்பது, வாரத்துக்கு இரண்டு நாள் எண்ணெய்க் குளியல் போடுவது செவித்திறன் பாதுகாக்கும் தடுப்பு முறைகள்.

காதுகளில் கவனம் செலுத்தவேண்டியது இன்றைய அவசியத் தேவை. கூடுமான வரை இரைச்சல் தவிர்ப்போம்... செவித்திறன் பாதுகாப்போம்!

பெருங்காயம்... கடவுளின் அமிர்தம்! நலம் நல்லது-56 #DailyHealthDose


விளையாட்டில் ஆகட்டும்... வாழ்க்கையில் ஆகட்டும்... தோற்றுப்போனவர்களை, `காலிப் பெருங்காய டப்பா’ என சிலர் சொல்வதை நாம் கேட்டிருப்போம். பெருங்காயம் அப்படி குறைத்து மதிப்பிடக்கூடியது அல்ல. பன்றிக் காய்ச்சல் முதற்கொண்டு புற்றுநோய் வரை தடுக்கும் ஆற்றல்கொண்டது.



பெருங்காயத்தின் மணத்தை முகர்ந்து முகம் சுளித்த அமெரிக்கர்கள், ஒரு காலத்தில் அதை, `பிசாசு மலம்’ என்று ஏளனப்படுத்திய வரலாறும் உண்டு. சமீப காலத்தில் நம்மைப் பயமுறுத்திவரும் பன்றிக்காய்ச்சலைப்போல, 1910-ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ (Spanish Flu) பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்தது. பெருங்காயம் அந்த வைரஸுக்கு எதிராகச் செயல்படுவதைக் கண்டு, அதை தங்கள் கழுத்தில் தாயத்து மாதிரி அமெரிக்கர்கள் கட்டித் திரிந்தார்கள்; அதற்கு `கடவுளின் அமிர்தம்’ எனப் பெயரிட்டார்கள்; இது வரலாறு.

பெருங்காயம் தரும் பெரிய பலன்கள்...

* தைவானில் உள்ள ஆய்வாளர்கள் பெருங்காயம், பன்றிக்காய்ச்சலுக்குப் பயன் தரும் அமாண்டடின்/சைமடின் (Amandatine/Symadine) வைரஸ் மருந்துகளைப்போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது எனக் கண்டறிந்தார்கள். தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும். கால்சியமும் பெருகும். லாக்டோ பாசில்லஸ் என்னும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் வாலைச்சுருட்டிக்கொண்டு ஓடும்.

* நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுத்திருந்தால் வாங்கக் கூடாது. கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்க்கப்பட்டு பெருங்காயம் சந்தையில் உலா வருகிறது. அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும். பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம்.



* பெண்களுக்கு இது சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராத பிரச்னையையும், அதிக ரத்தப் போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்னையையும் இது சீர் செய்யும். மாதவிடாய் தள்ளித் தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது.

* குறித்த நாளில் மாதவிடாய் வராமல் தவிக்கும் பெண்கள், வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவுக்கு உருட்டிச் சாப்பிட்டால் மாதவிடாய் வந்து, அந்த சூதகக் கட்டும் அகலும்.

* குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பப்பையில் இருந்து ஒருவகையான திரவம் (லோசியா - Lochia) வெளிப்படும். அது முழுமையாக வெளியேற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்களுக்குக் காலையில் கொடுப்பது நல்லது.

* அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. புலால் சமைக்கும்போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது.

* சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இரண்டரை கிராம் பெருங்காயத்தை எடுத்துச் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையாகச் சாப்பிடவும். பிறகு சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண் (Gastric Oesophagal Reflex Disease-GERD) முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும்.



* நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத்தும். அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொள்ளவும். இதை காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டால் வாயுக்குத்து முழுமையாக நீங்கும். ஆனால், அதற்கு முன்னர் வந்திருப்பது ஜீரணம் தொடர்பான வலியா அல்லது ஒருவகையான நெஞ்சு வலியா (Unstable Angina) என உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம்.

* இர்ரிடபுள் பௌல் சிண்ட்ரோம் எனும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி நீர் மலமாகப் போகும் குடல் அழற்சி நோய்களுக்கும் பெருங்காயம் பலன் தரக்கூடியது.

* குழந்தைகளுக்குக் கொஞ்சம் ஓம நீரில், துளியூண்டு பெருங்காயப்பொடியைக் கலந்து கொடுத்தால் மாந்தக் கழிச்சலை நீக்கி பசியைக் கொடுக்கும்.

* புற்றுநோயிலும்கூட வெந்தயத்தின் தாவர ரெசின் பயனளிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல்புற்றுநோய் செல் வளர்ச்சியை 50 சதவிகிதத்துக்கும் மேலாகக் கட்டுப்படுத்துவதை ஆரம்பகட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆக, இது `கடவுளின் அமிர்தம்’ என்றே சொல்லாம்...

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...