Thursday, February 9, 2017

போயஸ் தோட்ட வீட்டு முன்பு சங்கு ஊதிய தொண்டர்கள்: சசிகலா நேரில் பார்த்து அதிர்ச்சி


அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற் கும், தற்போது முதல்வராக அவரை தேர்வு செய்ததற்கும் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் போரூரைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் சுமார் 10 பேர் சசிகலாவை புகழ்ந்து பாடியபடி போயஸ் தோட்டத்துக்கு வந்தனர். அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், புகழ்ந்துதானே பாடுகிறார்கள் என்று நினைத்து சசிகலா வசிக்கும் வீட்டு முன்பு வரை அனுமதித்து விட்டனர்.

வீட்டு முன்பு சென்ற தொண்டர்கள், மறைத்து வைத்திருந்த சங்கை எடுத்து திடீரென ஊத ஆரம்பித்து விட்டனர். இரவில் 10 பேர் சேர்ந்து சங்கு ஊதியதால் அந்த இடமே பரபரப்பாகி விட்டது. அப்போது வீட்டுக்குள் இருந்த சசிகலா, சங்கு சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து பால்கனியில் வந்து நின்று பார்த்தார்.

இதை சற்றும் எதிர்பாராத போலீஸார், உடனடியாக 10 பேரையும் பிடித்து ராயப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

சட்டப்படியான பணிகளைக்கூட செய்ய முடியாத நிலையில் அரசு இயந்திரம்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை


விதிமீறல் கட்டிடத்துக்கு சீல் வைக்க முடியாமல் சட்டப்படியான பணிகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலையில் அரசு இயந்திரம் உள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலரான ஏ.கார்த்திக் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது:
சென்னை கொண்டித்தோப்பு சர்க்கரைத் தெருவில் வசிக்கும் கதீஜா உம்மாள் தன்னுடைய வீட்டை சட்டத்துக்கு புறம்பாக விதிமுறைகளை மீறி கட்டி யிருந்தார். இதையடுத்து அந்த வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அவரது வீட்டுக்கு வைத்த சீலை அகற்ற வேண்டும் என்றும். மனுதாரர் தனது விதிமீறலை சரி செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு சரிசெய்யவில்லை என்றால் மீண்டும் அந்த வீட்டுக்கு சீல் வைக்கலாம் என்றும் கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதன்படி சீல் அகற்றப்பட்டது.
இதன் பின்னர், சிஎம்டிஏ அதிகாரிகள் அந்த கட்டிடத்தை மீண்டும் ஆய்வு செய்தபோது விதிமீறல் பகுதி சரி செய்யப்படவில்லை. இதை யடுத்து போலீஸ் உதவியுடன் கடந்த 2015 ஜூலை 14-ல் அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கச் சென்ற போது, கதீஜா உம்மாளும் அவரது தரப்பினரும் அதிகாரிகளை சீல் வைக்க விடாமல் தடுத்து அனுப்பிவிட்டனர்.
எனவே உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவிடாமல் தடுத்த சுபத்கான், கதீஜா உம்மாள் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அதன் பிறகு நீதிபதிகள், ‘‘விதிமீறல் கட்டிடத்துக்கு சீல் வைக்க முடியாமல் சிஎம்டிஏ அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருப்பது வேதனைக்குரியது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சரியாக புரிந்துகொண்டு அதிகாரிகள் அந்த வீட்டுக்கு சீல் வைக்க முயன்றும் அவர்களால் முடியவில்லை.

இதை பார்க்கும்போது சட்டப் படியான பணிகளைக்கூட அதிகாரி கள் மேற்கொள்ள முடியாத நிலையில் அரசு இயந்திரம் உள்ளது என்பது தெளிவாகிறது. போலீஸ் பாதுகாப்புடன் சென்று சிஎம்டிஏ அதிகாரிகள் அந்த வீட்டுக்கு சீல் வைக்க வேண்டும். இது அதிகாரிகளின் வேலை. இதற்காக நீதிமன்றத்தை நாடக் கூடாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

நிரந்தர குடியுரிமை பெறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையை10 ஆண்டுகளில் பாதியாகக் குறைக்க அமெரிக்கா திட்டம்

பிடிஐ

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையை அடுத்த 10 ஆண்டுகளில் பாதியாகக் குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சட்ட முன்வடிவை இரண்டு அமெரிக்க செனடர் உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த முன்வடிவு அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற நினைக்கும் இந்தியர்கள் மற்றும் குடியேற்ற உரிமை (கிரீன் கார்டு) பெற விரும்புவோருக்கு பெரும் பின்னடைவாக அமையும் எனத் தெரிகிறது.

அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்ற நோக்கில் குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர் டாம் காட்டன் மற்றும் ஜனநாயகக் கட்சியின் டேவிட் பெர்டியூ ஆகியோர் பரிந்துரை செய்துள்ளனர். அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவது குறையும். அத்துடன் வேலை திறன் இல்லாதவர்களுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்ற நிலை உருவாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு கிரீன் கார்டு அளிக்கப் படுகிறது. அதேபோல 5 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை அமெரிக்காவில் அளிக்கப்படு கிறது. புதிய பரிந்துரை அமலுக்கு வந்தால் இந்த எண்ணிக்கை பாதியாகக் குறையும்.

இந்த பரிந்துரை ட்ரம்ப் நிர்வாகம் எளிதில் அமல்படுத்தும் வகையில் அவரது கொள்கைக்கு ஏற்புடையதாக இருப்பதால் இது சட்டமாகக் கொண்டு வரப்படுவதில் எந்த சிரமமும் இருக்காது என்றே தோன்றுகிறது. அதேசமயம் அமெரிக்காவில் கிரீன் கார்டு மூலம் வேலை பார்த்து வரும் இந்திய அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற விரும்புவோருக்கு பெரும் பிரச்சினையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியர்கள் கிரீன் கார்டு எனப்படும் குடியுரிமை பெறுவதற்கு அவரவர் பணி அடிப்படையில் 10 ஆண்டாக உள்ளது. இந்த சட்டம் அமலானால் குடியுரிமை பெறுவதற்கு 35 ஆண்டு களாகும். நிரந்தர குடியுரிமை பற்றி பரிந்துரைத்துள்ள இந்த மசோதா ஹெச் 1 பி விசா குறித்து எவ்வித பரிந்துரையையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் சட்டரீதியான குடியுரிமை பெறுவோரின் எண் ணிக்கை கடுமையாகக் குறைந் துள்ளது. இதனால் அமெரிக்க மக்களின் வேலை வாய்ப்பு மற்றும் ஊதியம் குறைந்துள்ளது. இதைத் தடுக்க ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் உள்ளது போல திறமை மிகுந்தவர்களுக்கு வேலை மற்றும் ஊதியம் என்ற அடிப்படையில் குடியுரிமை அளிக்க வேண்டும் என காட்டன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க குடிமக்களின் வேலை வாய்ப்பைப் பாதுகாக்கும் வகையில் குடியேற்றச் சட்டங் கள் இருப்பது அவசியம். வேலை யளிக்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டிய ஊதியத் தொகையை உயர்த்தியதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாச மடையும் என்றும், அதிபராக பொறுப்பேற்றபோது நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை நிறைவேற்ற இத்தகைய பரிந்துரை உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

`ரெய்ஸ்’ சட்டத்தின்படி முதல் ஆண்டில் 6,37,960 பேருக்கு அளிக்கப்படும் குடியுரிமை அனுமதி அடுத்த 10 ஆண்டுகளில் 5,39,958 ஆகக் குறையும். 2015-ம் ஆண்டில் குடியுரிமை பெற்றவர்களில் 10,51,031 பேரில் பாதிக்கும் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது பாரம்பரிய முறையி லான குடியுரிமை சட்ட அனுமதி வழங்குவதன் மூலம் அமெரிக்கர் களின் வேலை வாய்ப்பு பெருகுவ தோடு ஊதியமும் உயரும் என்று பெர்டியு குறிப்பிட்டுள்ளார்.
டைவர்சிடி விசா லாட்டரி எனும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய் துள்ளது. இந்த முறையில் பல்வேறு முறைகேடு நடக்க வழியுள்ளது. மேலும் இதில் எவ்வித பொருளா தார பயன் கிடைப்பதில்லை. விசா கோரும் விண்ணப்பத்தில் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் இந்த லாட்டரி முறைக்கு அனுப்பப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களும் விலங்குகளும்

By சா. கந்தசாமி  |   Published on : 09th February 2017 01:21 AM  | 
kandasamy
உலகத்தில் வாழும் விலங்குகளில் ஒருவகைதான் மனிதர்கள். அவர்கள்தான் இளைய விலங்குகள். அதாவது பரிணாம வளர்ச்சியில் கடைசியில் இருக்கிறார்கள். ஆனால் மற்ற எந்த விலங்கிற்கும் இல்லாத அறிவு பெற்று இருக்கிறார்கள். சிந்திக்கவும், செயல்படுத்தவும், பேசவும், எழுதவும், நடந்ததையெல்லாம் நினைவு கூர்ந்து சொல்லவும் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆயுதங்கள் கொண்டு வேட்டையாடவும், நிலத்தில் நீர் பாய்ச்சி தானியங்கள் பயிரிடவும் அறிந்திருக்கிறார்கள். விலங்குகள், பறவைகளின் வாழ்விடமான வனங்களை அழித்து விவசாய நிலங்களாக்கி விட்டார்கள். அதனால் விலங்குகள் உணவு தேடி, தண்ணீர் குடிக்க ஊருக்குள் வருகின்றன. எங்கள் விளைநிலங்களை விலங்குகள் நாசப்படுத்திவிட்டன, அவற்றின் அட்டகாசம் பொறுக்க முடியவில்லை என்று புலம்புகிறார்கள்.
உண்மையில் வன விலங்குகளின் இருப்பிடத்திற்குள் புகுந்து அட்டகாசம் புரிவது மனிதர்கள்தான். எல்லா விலங்குகளும் தங்களது பல், கால், வால்களால்தான் வேட்டையாடுகின்றன. ஆனால் மனிதர்கள்தான் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போய் வேட்டையாடுகிறார்கள். வலை வீசி பறவைகளையும் விலங்குகளையும் பிடிக்கிறார்கள்.
மனிதர்கள் தானியங்கள், ஊண் உண்டு பசியாற்றிக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் உடல் உறுப்புகள் எதைத் தின்றாலும் ஜீரணிக்கக் கூடியதாக இருக்கின்றன. எனவேதான் பலவிதமான விலங்குகளையும் பறவைகளையும், மீன்களையும் பிடித்துத் தின்று கொழுத்துப் போயிருக்கிறார்கள்.
கறியின் சுவையும், எலும்புகள் கடிப்பதில் உள்ள இன்பமும், கவிச்சி நாற்றமும் கறி தின்ன வைத்துக் கொண்டே இருக்கின்றன. எனவேதான் பறவைகளின் முட்டைகளில் இருந்து, ஆட்டின் தலை வரை எல்லாவற்றையும் தின்று வருகிறார்கள்.
நஞ்சு கொண்ட பாம்புகளைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. பாம்பின் நஞ்சு கொண்ட பையை வெட்டியெறிந்து விட்டு தோலை உறித்து சதையைத் தீயில் நெய் சொட்டச் சொட்ட சுட்டுத் தின்கிறார்கள்.
மனிதர்கள் தின்னத் தகாதது என்று ஒதுக்கிய விலங்குகோ, பறவையோ ஒன்றுகூட இல்லை. உடன் வாழும் சகோதர மனிதர்களைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சீனா சென்று வந்த மார்கோ போலோ அங்கே மனிதக் கறி விற்கப்பட்டதாக எழுதி வைத்து இருக்கிறார்.
அன்பு, பாசம், இரக்கம், கருணை கொண்டவர்கள் மனிதர்கள் என்று எத்தனைதான் சொன்னாலும், அவர்களிடம் ஆதி குணங்களான கொடூரமான செயற்பாடுகள், வேட்டையாடுதல், பறவைகளைச் சுட்டுக் கொல்வது போன்ற குணங்கள் மாறவே இல்லை.
உணவிற்காக விலங்குகள், பறவைகள் கொல்லப்படுவது போல வே அவற்றின் நிறம், இறகுகளின் வனப்பு, பல், நகம், முடி ஆகியவற்றுக்காகவும், மருத்துவத்திற்கென்றும் மந்திர சக்தி பெற்றவை என்பதற்காகவும் வேட்டையாடப்பட்டு வருகின்றன. அது நெடுங்காலமாக நடந்து வரும் நிகழ்வாகவே இருந்து வருகிறது.
பூமி என்பது பல்லுயிர்களும் இணை ந்து வாழும் இடம். அது ஒற்றை உயிராகிய மனிதர்கள் மட்டுமே வாழத்தக்கது இல்லை. மனிதர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் விலங்குகள், பறவைகள், மீன்களைப் பசியாற்றிக் கொள்ளவும், ஆடம்பர வாழ்க்கைக்கு வேண்டியது என்றும் கொன்றுவிட்டால் வாழ்க்கை என்பதே தரமற்றதாகிவிடும்.
அகவும் மயிலும், கூவும் குயிலும் பல வண்ணங்கள் கொண்ட பறவைகளும், வண்ணத்துப்பூச்சிகளும், அழகிய நிறங் கொண்ட பாயும் புலியும், பனி பிரதேசத்து வெண் முடி கொண்ட கரடியும், பெரிய யானைகளும், வேகமாக ஓடும் குதிரைகளும் பால் கொடுக்கும் பசுக்களும், ஏர் உழும் காளைகளும் வீடு காக்கும் உற்ற நண்பனாகிய நாய்களும் இல்லாவிட்டால் மனித வாழ்க்கை என்பதே அர்த்தமற்றதாகிவிடும். பல்லுயிர் வாழ்க்கை என்ற சமன்பாடுதான் வாழ்க்கையென்பதை அர்த்தமுள்ளதாக்குகிறது.
உலகத்தில் பல விலங்குகள், பறவை இனங்கள், மீன் வகைகள் இப்போது இல்லை. மனிதர்களால் கொல்லப்பட்டுவிட்டன. தன் தேவை என்பதுதான் மனிதர்களின் சித்தாந்தம். பல்லுயிர் வாழ்க்கை என்பது மனிதர்கள் அனுமதிக்கும் வரையில்தான்.
மனிதர்கள், மாடுகள், நாய்கள், பூனைகள், கிளிகள், யானைகள் என்று பலவற்றையும் பிடித்து செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகிறார்கள். மாடுகள் பாலுக்கும், உழவிற்கும், வண்டிக்கும் பயன்படுத்தப்பட்டன. நாய்கள் நல்ல தோழனாக இருக்கின்றன. குதிரைகள் வேகமாக ஓடுவதால் போர்களுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன.
மகா அலெக்சாண்டர் முப்பதாயிரம் பேர் கொண்ட குதிரைப் படையுடன் உலகம் முழுவதையும் வென்று ஆட்சி செய்யப் புறப்பட்டான். அக்பர் பெரும் யானைப் படை வைத்துக் கொண்டிருந்தார்.
நவீன காலத்தில் விலங்குகளுக்கு போரில் இடம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் விளையாட்டில் விலங்குகள், பறவைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. இது காட்டுமிராண்டித்தனம். நாகரிக மனிதன் செய்யக்கூடிய காரியம் இல்லை.
"அவற்றுக்குப் பேச வாய் இல்லை என்பதால் வதைக்க முடியாது. அவற்றின் சார்பாகப் பேச நாங்கள் இருக்கிறோம்' என்று சொல்லிக் கொண்டு உலகம் முழுவதிலும் பல தன்னார்வ நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவை இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இருந்து பெரும் பணம் வாங்குகின்றன.
1980-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இன்கிரிடு என்ற பெண்மணி அலெக்ஸ் பச்சிகோ என்பவரோடு இணைந்து, People for the Ethical Treatment of Animal  - என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதுதான் பீட்டா. விலங்குகள் தின்பதற்கு இல்லை. அதன் மென் முடிகள், தோல்கள் அணிவதற்கு இல்லை. பரிசோதனைகள், விளையாட்டிற்கு இல்லை என்று கூறினார்.
இவையெல்லாம் இந்தியர்கள் நெடுங்காலமாக அறிந்ததுதான். ஊண் உண்பதை அடிப்படையிலேயே மகாவீரரின் சமண சமயம் எதிர்த்து வருகிறது. அது சமண சமயத்தின் வளர்ச்சியைப் பாதித்து விடவில்லை.
பகவான் புத்தர் உயிர்ப் பலி என்பதற்கும், ஊண் உண்பது என்பதற்கும் எதிராகவே இருந்தார். அசோக சக்ரவர்த்தி, எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்று கல்வெட்டுக்களில் பொறித்து வைத்தார்.
திருவள்ளுவர் ஊண் உண்பதையும், கள் குடிப்பதையும் கடுமையாக எதிர்த்து வந்தார். திருக்குறளில் புலால் மறுத்தல் பற்றி எழுதி வைத்து இருக்கிறார்.
ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் கலாக்ஷேத்ராவை நிறுவிய ருக்மிணி தேவி அருண்டேல் விலங்குகளின் நலம் காக்க, மருத்துவம் பார்க்க "புளுகிராஸ்' என்னும் காப்பகத்தை திருவான்மியூரில் நிறுவினார். தெருவில் திரியும் மாடுகள், விபத்துக்கு ஆளான நாய்கள், பூனைகளை புளுகிராஸ் எடுத்து வந்து பாதுகாத்தது.
இந்தியாவில் விலங்குகளின் நலம் காக்க சட்டபூர்வமான ஒரு நலவாரியம் அவசியம் என்று மத்திய அரசுக்குத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.
1962-ஆம் ஆண்டில் மத்திய அரசு விலங்குகள் நல வாரியம் அமைத்தது. ருக்மிணி தேவி அருண்டேல் அதன் முதல் தலைவியானார். அவர் விலங்குகள் நலத்தோடு இறைச்சி உண்பதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வந்தார். 24 ஆண்டுகள் விலங்குகள் நல வாரியத்தின் தலைவியாக இருந்தார்.
விலங்குகள் நல வாரியம் சுற்றுப்புறச் சூழல், வன அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சமூகத்தின் பல நிலைகளிலும் இருக்கு 21 பேர் உறுப்பினர்கள். தலைவர் கால்நடை மருத்துவர்.
2000-ஆம் ஆண்டில் அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட தன்னார்வ அமைப்பான பீட்டா இந்தியாவில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்தியாவில் 31 லட்சம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பீட்டா ஒன்று. ஆனால் பீட்டா, விளம்பரத்தின் மூலமாகவும் - பரிசுகள், பாராட்டு விழாக்கள் நடத்தி தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டது.
ஐரோப்பிய காளை மாட்டு சண்டையோடு தமிழக ஜல்லிக்கட்டை சேர்த்து கொண்டுவிட்டது. அதற்காக உச்சநீதிமன்றம் சென்று ஜல்லிக்கட்டு மிருகங்களை வதைக்கிறது. அது நாகரிக சமூகத்தின் விளையாட்டு கிடையாது. எனவே ஜல்லிக்கட்டை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடுத்தது.
உச்சநீதிமன்றம் இந்தியா முழுவதும் காளை மாடுகள், எருமை மாடுகள் வைத்து விளையாடும் எல்லா பாரம்பரிய விளையாட்டுகளையும் தடை செய்து விட்டது. மேல்முறையீடு தீர்ப்பு வராமல் இருந்தது.
தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் எங்களின் பாரம்பரிய ஏறு தழுவுதல் விளையாட்டை நாங்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பெரும் போராட்டம் நடத்தினர். மாநில அரசு ஆதரவு அளித்தது.
ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்கள் பீட்டாவையும் தடை செய்ய வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
விலங்குகள் மனிதர்களின் உற்றத் தோழனாகவும், உதவி செய்யும் பணியாளனுமாகவும், பசியாற்றும் ஜீவனுமாகவும் இருக்கின்றன. பசுவை "கோமாதா' என்று கொண்டாடுவது மரபு.
மனிதர்கள் விலங்குகளை வைத்துக் கொண்டு விளையாடுவதால் அவற்றை வதைக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே ஊண் உண்கிறவர்கள் கெட்டவர்கள், உண்ணாதவர்கள் நல்லவர்கள் என்பதும் இல்லை. ஒரே குடும்பத்தில் எல்லோரும் நன்றாகவே வாழ்கிறார்கள். அதுதான் குடும்பம்.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் பகவான் புத்தர் சொன்னார்: "தின்னும் உணவால் யாரும் புனிதமடைய மாட்டார்கள்'.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
சா. கந்தசாமி

ஆளுநர் மாளிகை அரசியல்!

By ஆசிரியர்  |   Published on : 09th February 2017 01:22 AM  |  
மாநில ஆளுநர் பதவியை தீயணைப்பு வாகனத்துடன் ஒப்பிட்டு, மூதறிஞர் ராஜாஜி கருத்துத் தெரிவித்திருக்கிறார். "எங்கேயாவது தீப்பிடித்தால் மட்டுமே தீயணைப்பு வாகனம் செயல்படும். மீதி நேரங்களில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான நேரங்களில் செயல்படாமல் இருக்கிறதே என்பதற்காகத் தீயணைப்பு வாகனம் தேவையில்லை என்று கூறிவிட முடியாது. ஆளுநர் பதவியும் அப்படித்தான். பிரச்னை ஏற்பட்டால்தான் ஆளுநர் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்காக ஆளுநர் பதவி தேவையில்லை என்று முடிவெடுத்துவிட முடியாது' என்பதுதான் ராஜாஜி தந்த விளக்கம்.
இங்கே தமிழகமே அசாதாரண அரசியல் குழப்பத்தில் சிக்கித் தீப்பற்றி எரிகிறது. தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் சாவகாசமாக தில்லியில் முக்கியஸ்தர்களைக் கலந்தாலோசித்துவிட்டு, சென்னைக்கே வராமல் மும்பையில் கவலையே படாமல் தங்கி இருக்கிறார். ராஜாஜி கூறியதுபோல, தீப்பிடித்தால் விரைந்து வருகிற தீயணைப்பு வாகனமாக இல்லாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற வாகனமாகக் காட்சி அளிக்கிறது பொறுப்பு ஆளுநரின் செயல்பாடு.
தமிழகத்துக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர்கூட இல்லை. ஏழு கோடிக்கும் அதிகமான மக்களை உடைய தமிழகத்திற்குக் கடந்த ஐந்து மாதமாக ஒரு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்கிற நினைப்பாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. முழுநேர ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால் தமிழகத்தின் நிர்வாகம் இப்படி ஸ்தம்பிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது. முந்தைய ஆளுநர் ரோசய்யா ஓய்வு பெறுகிறார் என்று தெரிந்தும் வேறு ஆளுநரை நியமிக்காததற்கு காரணம் அசிரத்தையா அல்லது தமிழகத்தின் மீதான அக்கறையின்மையா?
தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்புகிறார். ஆளுநர் அதைப் பெற்றுக்கொண்டு அடுத்த ஏற்பாடு செய்யப்படும்வரை தொடரும்படி சொல்லிவிட்டு, எந்தவொரு பரபரப்பும் இல்லாமல் மும்பையில் தங்கியிருக்கிறார். அவர் எப்போது சென்னை வருவார் என்பதுகூட அறிவிக்கப்படவில்லை. ஆளுநரின் இந்தப் போக்கு வேடிக்கையாகவும், வினோதமாகவும் இருக்கிறது.
முதல்வர் ஒருவர் பதவி விலகினால், உடனடியாக அடுத்த அமைச்சரவை அமைகிற சாத்தியம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, பொறுப்பை அடுத்த முதல்வரிடம் ஒப்படைப்பதுதான் ஆளுநரின் மிகவும் முக்கியமான கடமை. அதைச் செய்யாமல் ஆளுநர் காலம் தாழ்த்தும்போது இதற்குப் பின்னால் இருப்பது பொறுப்பற்றதனம் அல்ல, அரசியலும்கூட என்று தோன்றுகிறது.
சசிகலா நல்லவரா, கெட்டவரா, தகுதியானவரா, தகுதி இல்லாதவரா என்பதெல்லாம் ஓர் ஆளுநரின் அடிப்படைக் கேள்வியாக இருக்க முடியாது. அவர் மீது நம்பிக்கையில்லாவிட்டால் சட்டப்பேரவை கட்சி உறுப்பினர்களை வேறு ஒரு நபரை தேர்வு செய்யக் கோரலாம், அவ்வளவே.
பெரும்பாலான சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு ஒருவருக்கு இருக்கிறதா என்பதுதான், அமைச்சரவை அமைக்க ஒருவரை அழைக்கும்போது ஆளுநர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய அடிப்படைத் தகுதி. அவரது பெரும்பான்மையை உடனடியாக சட்டப்பேரவையில் நிரூபிக்கச் சொல்வதுதான் வழக்கம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவும் இருக்கிறார் என்பது உண்மை. உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம் என்பதும் உண்மை. அதற்கும் சட்டப்பேரவை அ.தி.மு.க. உறுப்பினர்களால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் ஒருவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கும் தொடர்பு ஏற்படுத்துவது சரியாகப் படவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டுத் தீர்ப்பு வரும்வரை சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறுவாரென்றால், எந்த அடிப்
படையில் கடந்த மே மாதம் முந்தைய ஆளுநர் ரோசய்யா முதல்வராக ஜெயலலிதாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? அந்த வழக்கில் முதல் குற்றவாளியே ஜெயலலிதாதானே!
உச்சநீதிமன்றத்தில் இருப்பது மேல்முறையீட்டு வழக்குதான். ஆனால், 2001-இல் ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு மட்டுமல்ல, ஏனைய பல வழக்குகளும் நடைபெற்று வந்தன.
அந்த நிலையில்கூட, சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக அன்றைய ஆளுநர் பாத்திமா பீவீயால் அவர் முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறார்.
ஓ. பன்னீர்செல்வத்தின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட கையோடு ஆளுநர் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைத்திருந்தால் இன்றைய அரசியல் நிலையற்றதன்மை ஏற்பட்டிருக்காது. ஆனால், ஆளுநர் எதிர்பார்ப்பது அதுவல்ல என்று தோன்றுகிறது. உத்தரகாண்டிலும், அருணாசலப் பிரதேசத்திலும் அந்தந்த மாநிலத்தின் ஆளுநர்களாக மத்திய பா.ஜ.க. அரசு நியமித்திருப்பவர்கள் நடந்து கொள்வதைப் போலவே, தமிழகத்திலும் ஆளுநர் மாளிகை அரசியல் நடத்துவது என்கிற முயற்சியில் மத்திய ஆளும்கட்சி இறங்கி இருக்கிறதோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது.
சசிகலாவோ, ஓ. பன்னீர்செல்வமோ யார் முதல்வர் என்பதல்ல பிரச்னை. யாராக இருந்தாலும் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதற்கு ஆளுநர் வழிகோல வேண்டும். முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறாமல் நிர்வாகம் ஸ்தம்பித்து கிடப்பதற்கு ஆளுநரே துணை போவது விசித்திரமாக இருக்கிறது. ஆளுநர் மாளிகையில் இருந்து அரசியல் நடத்துவது ஏற்புடையதல்ல!

வீட்டிலிருந்து புறப்படும் முன் இதெல்லாம் செய்ய மறக்காதீர்கள் பெண்களே!


"எங்காவது புறப்படுவதுபோதெல்லாம் கடிகாரம் வேகமாக சுற்றுவதுபோல இருக்கும். என்னது ஒன்பது மணியாடுச்சா" என மைண்ட் வாய்ஸில் அல்ல... சத்தமாகவே சொல்லிக்கொண்டு, அவசர அவசரமாக டிபனைச் சாப்பிட்டுவிட்டு, வீட்டை விட்டுகிளம்பி பஸ் ஸ்டாப்புக்கு கிட்டத்தட்ட ஓடிவோம். நெருக்கியடித்து பஸ்ஸில் ஏறி, டிக்கெட் எடுக்கும்போதுதான் 'வீட்டை ஒழுங்காக பூட்டினோமா' என்கிற சந்தேகம் வரும். பிறகு, சந்தேகங்கள் ஒவ்வொன்றாக அதிகரித்துவிடும். அது மெல்ல பதட்டத்தை அதிகரிக்கச் செய்து, அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கி, வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்துவிடுவோம். இது அடிக்கடி நடந்தால் அலுவகலமோ வெளியிலோ செல்லும்போதெல்லாம் டென்ஷன் தான். அதனால் வீட்டிலிருந்து புறப்படும் முன் சிலவற்றை மறக்காமல் செய்யப் பழகலாமே பெண்களே! (அது சரி வீடு என்றதுமே பெண்களுக்குத்தான் டிப்ஸ் சொல்வீர்களா என்று கோபப்பட வேண்டாம்.)



கேஸில் கவனம்:

சிலிண்டரிலிருந்து கேஸ் அடுப்புக்குச் செல்லும் ரெகுலேட்டரை ஆஃப் பண்ண வேண்டும். வழக்கமாக எல்லோரும் சொல்வதுதான். ஆனால் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால், சேதமும் அதிகமாகும் அல்லவா. அதனால் சமையல் வேலைகள் முடிந்ததும் மறக்காமல் ரெகுலேட்டரை ஆஃப் செய்துவிடுங்கள். ஒருவேளை அப்படியே செய்தாலும் வீட்டிலிருந்து புறப்படும் முன் அவசியம் அதை செக் பண்ணத் தவறாதீர்கள்.

சொட்டுச் சொட்டாக:

பாத்ரூம், கழிவறை, சமையலறை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் தண்ணீர் டேப்களை நீர் சொட்டாமல் மூடப் பட்டிருக்கிறதா எனப் பாருங்கள். ஏனெனில் ஒவ்வொரு சொட்டாக சொட்டினால் நீங்கள் திரும்ப வருவதற்குள் வாளிக் கணக்கில் நீர் விரயமாயிருக்கும். நீரைச் சேமிப்பது நமது கடமையும் அல்லவா.



மூடி முக்கியம்:

சமையல் செய்யும்போது சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பாத்திரங்களை அவசரத்தில் மூடாமல் மறந்திருப்பீர்கள். அதனால் சமையல் முடிந்த பிறகோ, வீட்டிலிருந்து புறப்படும் முன்போ மறக்காமல் செக் பண்ணாவிட்டால், எறும்பு, பூச்சிகள் புகுந்து பொருட்கள் கெட்டுவிடும்.

வாசம் வீசட்டும் ப்ரிட்ஜ்: பலரின் வீட்டில் குடும்ப உறுப்பினர் போல ஆகி விட்டது ப்ரிட்ஜ். ஆனால், அது கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது என்பதற்காக சில பொருட்களை, பல நாட்களாக அதிலே வைத்திருப்பீர்கள். அதிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியிருக்கும். அதை குப்பையில் எறிய வேண்டும் என நினைத்து மறந்திருப்பீர்கள். ஆனால் வெளியே சென்று வர பல மணிநேரமாகும் எனில் அதை ப்ரிட்ஜைத் திறந்து ஒருமுறை செக் பண்ணிவிடுவதே நல்லது.

சாவி:

பீரோவைத் திறந்திருப்போம் ஏதோ நினைவில் சாவியை பீரோவிலேயே வைத்திருப்பீர்கள். பிறகு மற்ற வேலைகளில் மூழ்கியிருப்பீர்கள். அது இயல்புதான். ஆனால், வெளியே புறப்படும்போது, அப்படி இருப்பது நல்லதல்ல. அதனால் மறக்காமல் அதைப் பத்திரப்படுத்துங்கள்.

துணிகள் பத்திரம்:

புறப்படும் முன் வீட்டுக்குள் ஏதேனும் மறந்துவிட்டோமா என்று சுற்றிப் பார்ப்பதுடன் வெளியே வந்துவிடுவீர்கள். ஆனால் வீட்டின் வேறு பகுதியில் துணியைக் காயப்போட்டிருந்தால், அதுவும் வெளியிருந்து யாரேனும் எடுக்கும் வசதியில் இருந்தால் அவசியம் அதை எடுத்துவிடுங்கள். அது, உங்களுக்கோ வீட்டினருக்கோ மிக விருப்பமான உடைகளாக கூடவே இருக்கக்கூடும்.



ஸிவிட்ச்:

அயர்ன் பண்ணும்போதோ, மிக்ஸியில், கிரைண்டரில் அரைக்கும்போதோ, மின்சாரம் போயிருக்கும் ஏதோ நினைவில் ஸ்விட்சை ஆஃப் பண்ண மறந்திருப்பீர்கள். வீட்டிலிருந்து புறப்படும் வரை மின்சாரம் வந்திருக்காது. அதனால் அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுவீர்கள். அதனால் புறப்படும் முன் ஸ்விட்ச் போர்டு அனைத்தையும் செக் பண்ண மறக்காதீர்கள். இது போன்ற மின் சாதனப் பொருட்களில் நீர் பட்டு அல்லது நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாமல் திரும்பவும் பயன்படுத்தும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

பூட்டு:

கடைசியாக, வாசல்கதவைப் பூட்டும்போது, பதட்டத்தில் சரியாக பூட்டாமல் விடுவோர் அதிகம். அதனால், அந்த பத்து நொடிகளை மிகவும் நிதானமாக இருப்பது பெரும் நிம்மதியைக் கொடுக்கும். அதோடு சாவியை உங்களின் ஹேண்ட் பேக்கில் பத்திரப்படுத்தவும் மறக்காதீர்கள்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

- வி.எஸ்.சரவணன்.

சுவாதி கொலை முதல் ஓ.பன்னீீர்செல்வம் ராஜினாமா வரை... கதறும் தமிழன்!


2016 சட்டமன்றத் தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த சமயம் அது. அதிமுக அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைப்பது உறுதியான சூழ்நிலையில், அத்தனை பொருளாதார அறிஞர்களும் இப்படிச் சொன்னார்கள் "எம்.ஜி.ஆருக்கு பிறகு ஒரு ஆட்சி, இரண்டாவது முறையாக தொடர்கிறது, சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மையும் இருக்கிறது, அரசு தைரியமாக கொள்கை முடிவுகளை எடுக்க முடியும், வேலைவாய்ப்புகளை பெருக்கலாம், முதலீடுகளை குவிக்கலாம்" எனப் பாசிட்டிவாக பேசினார்கள். முந்தைய ஆட்சிக் காலத்தைப் போல எதற்கெடுத்தாலும் திமுகவை காரணம் காட்டி பிரச்னையில் இருந்து தப்பிக்க முடியாது என்பதால் அதிமுகவுக்கு, தொடர் வெற்றியே ஒரு மறைமுக நெருக்கடி தரும். இதனால், இம்முறை வளர்ச்சி இருக்கும், கொலை, கொள்ளை சம்பவங்கள் குறையும் என நம்பினான் தமிழன். இதோ ஒன்பது மாதங்கள் முடிந்துவிட்டது, ஜெ முதல் ஓ.பன்னீீர்செல்வம் ஆட்சி வரை என்ன நடந்தது தமிழகத்தில்?



ஜெயலலிதா பதவியேற்றதில் இருந்து இதோ இந்த நொடி வரை, இருபது வருடங்களில் இல்லாத அளவுக்கு பிரேக்கிங் நியூஸ்களால் திக்கித் திணறிக்கொண்டிருக்கிறது தமிழகம். எந்த நொடி, என்ன நடக்கும், யார் எந்த குண்டைத் தூக்கி போடுவார்கள் என தெரியாமல் ஆடிப்போயிருக்கிறார்கள் நம் மக்கள். அரசியல்வாதிகளோடு சேர்ந்து மத்திய, மாநில அரசுகளும் மக்களின் நிம்மதியை குலைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சுய லாபத்துக்காக சிலர் ஆடும் ஆட்டத்தால் உரிமையை வேண்டி போராட வேண்டிய மக்கள், அன்றைய பொழுது நிம்மதியாய் கழிந்தால் போதும் சாமி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன?

மக்களை கொதிநிலையிலேயே வைத்திருந்த சம்பவங்கள் என்னென்ன?

மே இறுதியில், ஜெயலலிதா பதவியேற்க, ஒரே மாதத்தில் மக்களிடம் பெரும் வெறுப்பைச் சம்பாதித்தது அரசு. கடந்த ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சென்னையில் நடந்த அந்தக் கொடூர கொலை தமிழத்தையே உறைய வைத்தது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் காலை வேளையில் ஒரு பெண்ணின் வாயில் வெட்டி, கழுத்தை அறுத்து பதறவைக்கும் ஒரு கொலையைச் செய்து விட்டு எவர் கண்ணிலும் படாமல் ஓடுகிறார் ஒரு மர்ம கொலை காரன். இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என கெத்து காண்பித்த சென்னை, அன்றைக்கு தலைகுனிந்தது. முறையான சி.சி.டி வி கேமரா பதிவு கூட இல்லாமல் சுவாதி கொலையில் குற்றவாளியை பிடிக்கத் திணறியது தமிழக போலீஸ்.



நாட்கள் மூன்று நகர்ந்தன, "தமிழகத்தில் இப்படியொரு கொலையா? அதுவும் காலை வேளையிலேயே, மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில், ஒரு பெண்ணை கொன்று, கூறு போட்டிருக்கிறார்கள், ஒரு பெண் ஆளும் மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கே இந்த கதியா" என புலம்பிக் கொண்டிருந்த மக்கள், போலீஸ் இன்னமும் கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என அறிந்ததும் சினம் கொண்டார்கள். சமூக வலைதளங்களில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதை அறிந்த ஜெ, கொலையாளியை கண்டுபிடிக்க காவல்துறையை முடுக்கிவிட்டார்.

சம்பவம் நடந்து ஏழு நாட்களுக்கு பிறகு, அதாவது ஜூலை ஒன்றாம் தேதி இரவு பத்து மணியளவில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மீனாட்சிபுரத்தில் ராம் குமார் என்பவரை பிடித்ததாகவும், அவர் தான் கொலை செய்த குற்றவாளி என்றும், போலீஸ் வருவதை அறிந்த ராம்குமார் பிளேடால் தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் தகவல் சொன்னது தமிழ்நாடு போலீஸ். ராம்குமார் கழுத்து அறுக்கப்பட்ட புகைப்படங்களையும் போலீஸே கசிய விட்டது.



அதன் பிறகு ஆன்லைனிலும் சரி, ஆஃப்லைனிலும் சரி சுவாதி கொலை வழக்கில் தொடர்புடைய ராம்குமார் பற்றியப் பேச்சு தான். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், ஒருவேளை ராம்குமார் தான் கொலை செய்த குற்றவாளி என்றால் அதனை போலீசார் நிரூபிக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன. ராம் குமார் பற்றிய பரபரப்புகள் லேசாக குறைந்த சமயத்தில் காவேரி பிரச்னை தமிழகத்தில் தலைவிரித்தாடியது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காமல், தண்ணீர் தராமல் தமிழகத்தை வஞ்சித்தது கர்நாடகா. சமூக வலைதளத்தில் ஒரு மீமுக்காக, கர்நாடகாவில் ஒரு தமிழன் அடிக்கப்பட, இரண்டு மாநிலமும் கொதி நிலைக்கு வந்தது. செப்டம்பர் 12 ஆம் தேதி கர்நாடகத்தில் சில அமைப்பினர் செய்த அராஜகங்களால் தமிழகத்தை சேர்ந்த ஒரு தனியார் பஸ் உரிமையாளரின் 41 பஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டன, ஒரு சில இடங்களில் தமிழக ஓட்டுனர்களை, கன்னட அமைப்பினர் சூழ்ந்து கொண்டு அவமானப்படுத்திய நிகழ்வு நடந்தது.



இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த பதற்ற நிலையால், தேசிய ஊடகங்கள் தமிழகம் கவனத்தை திருப்பின, தமிழக இளைஞர்கள் இங்கே வாழும் கன்னட மக்களுக்கு பாதுகாப்பாக நின்றனர், ஆங்காங்கே நடந்த வெகு சில சம்பவங்களைத் தவிர கன்னடர்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகவே இருந்தது தமிழகம். காவேரி பிரச்னை முழு வீரியம் எடுக்க ஆரம்பித்திருந்த சமயம் அது, செப்டம்பர் 18 ஆம் தேதி ராம்குமார், சிறையில் மின்சார கம்பியை கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் அறிவித்தனர். நீதிமன்றத்தில் கொலை செய்த குற்றவாளி ராம்குமார் தான் என போலீசார் நிரூபிக்கும் முன்பே நடந்த தற்கொலை பல சந்தேகங்களை கிளப்பியது, நிறைய பேர் அது போலீசாரின் நாடகம் என விமர்சித்தார்கள். ராம் குமார் தற்கொலை செய்யவில்லை என கண்ணீர் விட்டார் அவரது அப்பா, போலீஸ் தற்கொலை என ஜோடிப்பதாக குற்றம் சாட்டினார்

உடனே காவேரி பிரச்னையை மறந்து ராம் குமார் பக்கம் திரும்பினான் தமிழன். இதெல்லாம் வெறும் நான்கு நாட்களுக்குத்தான். பின்னர் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராம் குமாரையும் மறந்துவிட்டார்கள்.

செப்டம்பர் 22 ஆம் தேதி இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கோவையில் கொலை செய்யப்பட, கோவையே பதற்றமானது. அதே தினம், இரவு பத்து மணியளவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட, ஒட்டுமொத்தத் தமிழகமும் அதிர்ந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மறுநாள் கோவையில் பயங்கர கலவரம் நடத்தியது இந்து முன்னணி. இஸ்லாமியர்கள் கடைகள், வாகனங்கள் மீது குறிவைத்து தாக்கியது இந்து முன்னணி. மசூதிகள், தேவலையங்கள் தாக்கப்பட்டன, கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது . பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் மீது கல்வீச்சு நடந்தது. போலீசார் வாகனம் எரிக்கப்பட்டது. வெறியாட்டம் நடத்திய கலவர காரர்களை தமிழக போலீஸ் லேசான தடியடி நடத்தி கலைக்க முற்பட்டது. 1998 கலவரம் போல மீண்டும் ஏதேனும் நடக்குமோ என கோவை மக்கள் கடும் அச்சத்தில் இருக்க, கார்டன் கண்ணசைவுக்கு பின்னர் கலவரம் தீவிரமாவதை தடுத்து நிறுத்தியது கோவை போலீஸ். சசிகுமாரை கொலை செய்த கொலை யாளிகளை கண்டுபிடிப்பதாக உறுதி தந்தது போலீஸ்



கோவை கலவரம் கோவையைத் தவிர மற்ற இடங்களில் பெரியளவில் பேசப்படுவதற்கு பதிலாக, ஜெயலலிதா உடல்நிலை பரபரப்புகளால் தொடர்ந்து இரண்டு வாரங்கள் ஒருவித இறுக்கமான சூழ்நிலையில் இருந்தது தமிழகம். விநாயகர் சதுர்த்தி, தீபாவளி என அடுத்த மூன்று வாரங்கள் பண்டிகை கொண்டாட்ட மனநிலையில் நகர, நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி இரவு சுமார் 8.15 மணிக்கு தோன்றி ஒரு பெரிய ஷாக் தந்தார். ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, அதே சமயம் வேறு பணமும் வங்கிக் கிளைகளில் கிடைக்காது, ஏ.டி.எம்மிலும் பணம் இல்லை, உள்ளூரிலும் சில்லறை தட்டுப்பாடு என நிலைமை மோசமாக நரக வேதனை அனுபவித்தார்கள் இந்தியர்கள். இதில் தமிழர்களும் தப்பவில்லை. மோசமான இத்தகைய தருணங்களில் நாளொரு அறிவிப்பை வெளியிட்டு, மக்களை குழப்பி நோகடித்தது மத்திய அரசு.



டீமானிட்டைசேஷன் எனச் சொல்லப்படும் பண மதிப்பு நீக்க முறையால் மக்கள் சிரமப்பட, பி.ஜே.பியைச் சேந்த பலரிடமும், சில தொழிலதிபர்களிடமும் கத்தை கத்தையாக, கோடி கோடியாக இரண்டாயிரம் நோட்டுகள் பளபளத்தன. மத்திய அரசின் மீது மக்கள் கடுப்பில் இருந்த சமயத்தில், டிசம்பர் ஒன்றாம் தேதி கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவர திமுக தொண்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு மாபெரும் ஆளுமைகளும் ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது தமிழகத்துக்கு புதுசு. இந்நிலையில் டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அர்ரெஸ்ட் எனச் சொல்லப்படும் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டு உடல் நிலை மோசமானது என அப்போலோ அறிக்கை தந்தது. தமிழகமே பதறியது. மறுநாள் ஜெயலலிதா பற்றிய வதந்திகள் பரவ, முழு நாளும் பதற்றத்தின் உச்சத்திலேயே இருந்தனர் மக்கள். இரவு பதினோரு மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்தார் என மருத்துவர் குழு அறிவிக்க ஒட்டுமொத்த தமிழக மக்களும் சோகத்தில் மூழ்கினார்கள். அன்றைய இரவே புதிதாக பதவியேற்றது ஓ.பன்னீீர் செல்வம் அமைச்சரவை.



இந்தியாவிலேயே ஒரு தலைவர் இறந்த அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பதவியேற்ற கூத்து தமிழகத்தில் நடந்தது. இந்த நிகழ்வுகளால் மக்கள் குழப்பம் அடைந்தார்கள்.

மறுநாள் மெரினாவில் நடந்த ஜெ. அடக்கத்துக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். ஓ.பன்னீீர் செல்வம் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தார். அந்தச் சூழ்நிலையில் ஜெ உடலுக்கு அரண் அமைத்து நின்ற மன்னார்குடி குடும்பத்தால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்தார்கள். ஜெயலலிதாவுக்கு கால்களை எடுத்து விட்டார்கள், எம்பால்மிங் செய்து விட்டார்கள் என பல சர்ச்சைகள் கிளம்பின. சமூக வலைத்தளங்களில் ஜெயலலிதா மரணத்துக்கு உண்மை காரணம் தெரிய வேண்டும் என பலர் பதிவிட்டார்கள். ஜெ மரணம் குறித்த சர்ச்சை ஓய்வதற்குள் டிசம்பர் 11, 12 தினங்களில் வர்தா புயல் சென்னையை காலி செய்தது.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையை வைத்துச் செய்தது இந்த புயல். பண மதிப்பு நீக்கம், மின்சார துண்டிப்பு, வர்தா புயல் பாதிப்பு என அத்தனையும் ஒன்று சேர கண்ணீர் சிந்தினர் சென்னை மக்கள். ஓ.பன்னீீர் செல்வம் தலைமையிலான அரசின் சுறுசுறுப்பான நடவடிக்கைகளால் சற்று விரைவாகவே இயல்புக்கு திரும்பிக் கொண்டிருந்தது சென்னை. டிசம்பர் 21 ஆண்டு காலையில் ராம் மோகன ராவ் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தியது வருமான வரித்துறை. அரசின் தலைமை செயலாளர் ஒருவரது வீட்டில் ரெய்டு நடத்தியதும், தலைமை செயலகத்துக்குள்ளேயே வருமான வரித்துறை நுழைந்ததும் அகில இந்திய அளவில் ஓ.பன்னீீர் செல்வம் தலைமையிலான தமிழக அரசின் மான மரியாதை சரிந்தது. இந்த பிரச்னை முடிவதற்குள்ளாகவே திடீரென டிசம்பர் 29 ஆம் தேதி அதிமுக பொது குழு கூடி சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது.

சசிகலாவின் வரவு மக்களிடைய பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய சூழ்நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி திடுமென பதவியேற்றார் சசிகலா. அதுவரை சசிகலாவின் குரல் எந்த மீடியவிலும் வெளியானது இல்லை, 25 வருடங்களுக்கும் மேலாக சசிகலாவின் குரலை கேட்டிராத தமிழர்கள் அன்றைய தினம் அவரின் குரலை கேட்டனர். சசிகலாவின் தலைமை , ஜெயாவின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் இரண்டையும் மக்கள் கூர்ந்து கவனித்தனர், நெட்டிஸன்கள் மீம்ஸாக தெறிக்க விட்டனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்க ஜல்லிக்கட்டு விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கின.

ஜனவரி 12 ஆம் தேதி முதல்வராக பதவியேற்க நேரம் குறித்த சசிகலா பின்னர் ஜகா வாங்கினார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையும், அங்கு போராட்டம் செய்தவர்களை போலீசார் கையாண்ட விதமும் மாணவர்களுக்கு கோபம் கிளப்ப, மெரினாவில் கூடினார்கள் மாணவர்கள். மோடி, ஓ.பன்னீீர் செல்வம் ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



ஒவ்வொரு நாளும் கூட்டமும், ஆதரவும் பெருகியது. தேசிய ஊடகங்கள் இங்கேயே வந்து லைவ் செய்ய ஆரம்பித்தன. இந்தியா முழுமைக்கும் ஜல்லிக்கட்டு பிரச்னை பரவியது. பீட்டாவை தடை செய்ய கோரியும், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற கோரியும் போராடினர் பொதுமக்கள். இந்தியாவிலேயே இப்படியொரு ஜனநாயக போராட்டம் நடந்ததில்லை என தேசமே நெகிழ்ந்தது. போராட்டக்களம், மக்கள் திரளால் விழா கோலம் பூண்டது. அரசுக்கு எதிராக அதிருப்தி அதிகரிப்பதை உணர ஆரம்பித்தன அரசு. ஓ.பன்னீீர் செல்வம் பிரதமரை நேரில் பார்த்து தீர்வு கண்டார். "மாநில அரசு , மத்திய அரசின் வழிகாட்டுதலோடு சட்டம் இயற்றும்" என தெரிவித்தார் ஓ.பன்னீீர்செல்வம். ஆனால் போராட்ட களத்தில் இருந்து கலைந்து செல்ல பொதுமக்களும், மாணவர்களும் மறுத்தனர். "எங்களுக்கு கால அவகாசம் வேண்டும், நிரந்தர சட்டம் இயற்றிய நகல் வேண்டும்" என்றனர். ஆனால் காக்கி கூடாரம், கறை படிந்த இரும்பு கைகள் கொண்டு அடக்கியது. பல இடங்களில் காவலர்களே சமூக விரோதிகள் போல கல் வீச்சில் ஈடுபட்டதும், வாகனங்களுக்கு தீ வைத்ததும் சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோக்கள் வழியாக மக்களுக்குத் தெரிந்தது. இதையடுத்து காவலர்கள் மீது பெரும் அதிருப்தியில் இருந்தனர் பொதுமக்கள்.

இதோ ஜனவரி 28 ஆம் தேதி சென்னை எண்ணூர் துறைமுகத்தருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மொத, கச்சா எண்ணெய் பல டன் அளவுக்கு கடலில் கலந்தது. வட சென்னை இளைஞர்கள் துணிந்து இறங்கி வாளியில் எண்ணையை அள்ளினர். சமூக வலைதளங்களில் ஏற்பட்ட விழிப்புணர்வால் பின்னர் அரசாங்கமும் கை கோர்த்தது, இந்நிலையில் எம்.எம்.ஆர் தடுப்பூசி குறித்த வாட்ஸ் அப் பிரச்சாரங்களும் மக்களை பீதியூட்டின. இது குறித்து பல்வேறு மருத்துவ நிபுணர்களும் தங்களது நிலைப்பாடுகளை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த பிரச்னை ஓய்வதற்குள் கடந்த ஞாயிறு அன்று சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாக மீண்டும் இன்னொரு முதல்வரா என நொந்தனர் தமிழக மக்கள்.



இந்நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க் கிழமை) இரவு ஜெயலலிதா சமாதி அருகே தியானம் செய்து, அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பதவியை விட்டு விலகிய காரணத்தைச் சொன்னார். ஓ.பன்னீீர்செல்வம் கொடுத்த அந்த ஒரு பேட்டி இந்திய அளவில் வைரலானது. அவருக்கு ஏகோபித்த ஆதரவு குவிந்தது, சில மணிநேரங்களிலேயே முதன் முறையாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த சசிகலா அவர்கள், ஓ.பி.எஸ்க்கு பின்னால் திமுக இருப்பதாக குற்றம் சாட்டினார். அவருக்கு நள்ளிரவிலேயே பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் சொன்னார் ஓ.பன்னீீர் செல்வம்

நேற்றைய தினம் முதல் சசிகலாவும், ஓ.பன்னீீர்செல்வமும் தங்கள் நிலைப்பாடுகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றார்கள். இதனால் தமிழக அரசியல் சூழலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என திக் திக் சஸ்பென்ஸ் நிலவுகிறது.

இந்த சஸ்பென்ஸ்கள், த்ரில்லர் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படி பதற்றத்திலேயே எந்நேரமும் இருப்பதற்காகவா மக்கள் ஒட்டுப் போட்டார்கள்? விவசாயிகள் தற்கொலை , வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி அதிகரிப்பு, தண்ணீர் தட்டுப்பாடு, இந்த ஆண்டு வர இருக்கும் வறட்சி, நீட் தேர்வு, நந்தினி கொலை.. இதோ நேற்று ஹாசினி கொலை என நாம் இந்தச் சூழ்நிலையில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கின்றன. ஆனால் வாழ்வாதாரப் பிரச்னைகளையும், சமூக அச்சுறுத்தல்களையும் பற்றிப் பேச வாய்ப்பே இல்லாமல் கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு பிரச்சனைகள் மக்களை சூழ்ந்துள்ளன. ஒரு இரவை நிம்மதியாக தூங்கி எழ முடியமா, தூங்கி எழுந்தால் என்ன மாற்றம் நடந்திருக்கும் என சந்தேகக் கண்ணோடு தான் பொதுமக்கள் உழைத்துக் களைத்து கண்ணயரச் செல்கிறார்கள். வளர்ச்சி என்பதை விட அத்தியாவசிய தேவைகள் என்பது அதிமுக்கியமானது. இப்போது அதற்கே மக்கள் அல்லாடுகிறார்கள். ஒரு பிரச்னையை பற்றி மக்கள் பேசுவதை தடுக்க வேண்டுமா இன்னொரு பிரச்னையை கிளப்பிவிடு என்ற யுக்தியை ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் தொடர்ந்து கடைபிடித்தால் ஒருநாள் சாமானியன் எனும் சாதுவும் மிரள்வான்!

- பு.விவேக் ஆனந்த்

NEWS TODAY 15.08.2026