Thursday, February 9, 2017

விசாரணை கமிஷன் பற்றி கவலையில்லை; முதல்வராக பதவியேற்பேன்: சசிகலா

விசாரணை கமிஷன் அமைப்பது பற்றி எந்தக் கவலையும் இல்லை. தமிழக முதல்வராக நிச்சயம் பதவியேற்பேன் என அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சி சேனலுக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த 5-ம் தேதி மதியம் 2 மணிக்கு எங்கள் கட்சி அலுவல கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டேன். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் அன்றைய தினம் ஊட்டியில் இருக்கிறார் என அறிந்தோம். அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நான் தேர்வு செய்யப் பட்டது தொடர்பான கடிதத்தின் நகலை ஃபேக்ஸ் மூலம் ஊட்டியில் உள்ள ஆளுநரின் முகாம் அலுவலகத்துக்கு அனுப்பினோம்.

அதன்பிறகு ஆளுநர் மும்பைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றையும் அனுப்பினோம். இது வரை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்தத் தகவலும் இல்லை. எனினும், என்னை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்வ தற்கு ஏதேனும் அரசியல் பின்னணி இருக்கும் என நான் நினைக்க வில்லை. அரசியலமைப்புச் சட்டப் படியும், ஜனநாயக மரபுகளை பாதுகாக்கும் வகையிலும் ஆளுநர் செயல்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
அதிமுகவின் பெரும்பான்மை யான சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்னை கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்திருக்கிறார்கள். ஆகவே, எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

திமுக எதிரிக் கட்சி

சட்டப்பேரவையில் உங்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் இருக்கி றோம் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைப் பார்த்து திமுக உறுப்பினர்கள் பேசினர். அப் போது, ‘‘நாங்கள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கி றோம். உங்கள் தயவு தேவை யில்லை’’ என்று பன்னீர்செல்வம் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்.
அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பன்னீர்செல்வம் அதிமுகவைச் சேர்ந்த முதல்வர் என்றே திமுகவி னர் நினைக்கவில்லை. உங்களை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று கூறியதிலிருந்தே திமுகதான் பன்னீர்செல்வத்தின் பின்னால் இருக்கிறது என்பது தெளி வாகிவிட்டது. அதற்குப் பிறகுதான் என்னை முதல்வராக்க வேண்டும் என்ற தீவிரமான முடிவுக்கு எங்கள் கட்சி உறுப்பினர்கள் வந்தார்கள்.
திமுகவின் நிலைப்பாடு எப்போ துமே அதிமுகவை எதிர்ப்பதுதான். ஜெயலலிதாவை சேலையைப் பிடித்து இழுத்தவர்கள். அவர்கள் எங்களின் எதிரிக் கட்சி. திமுக விஷயத்தில் ஜெயலலிதா எப்படி செயல்பட்டாரோ, அப்படித்தான் நானும் செயல்படுவேன்.

பொய்ப் பிரச்சாரம்

மருத்துவமனையில் ஜெய லலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி திமுகவினர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான கருத்தை பரப்பி வருகின்றனர். 75 நாட்கள் மருத்துவ மனையில் ஜெயலலிதாவை நான் எப்படி பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதை அங்குள்ள டாக்டர்கள் அறிவார்கள். வெளியில் பலர் சொல்வதைக் கேட்டு வருத்தப் படவில்லை. மனசாட்சிப்படி செயல் படுகிறேன். ஜெயலலிதாவைப் பிரிந்து வாடும் வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும்.

ஆனால், இவ்வளவு நாட்கள் எங்களுடன் இருந்த ஓ.பன்னீர் செல்வம், விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூறுவதைக் கேட்டுதான் வருத்தப் படுகிறேன். பச்சைத் துரோகியாக இருந்திருக்கிறாரே என நினைத்து வருத்தப்படுகிறேன்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப் பட்ட சிகிச்சை என்பது ஒரு திறந்த புத்தகம். எய்ம்ஸ் டாக்டர்கள் வந்தனர். லண்டன் டாக்டர் வந்தார். சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி நிபுணர்கள் வந்தார்கள். மாரடைப்பு ஏற்பட்ட அந்த நாளில்கூட பிசியோதெரபி செய்யப்பட்டது. அன்றைய தினத்தில் அவர் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். டிசம்பர் 29-ம் தேதி வீட்டுக்கு அழைத்து வரலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதற்குள் ஏதேதோ நடந்துவிட்டது. விசாரணைக் கமிஷன் அமைப்பேன் என பன்னீர்செல்வம் கூறுவது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவர் ஜெயலலிதாவுக்கு செய்யும் பச்சைத் துரோகம் பற்றிதான் வருத்தப்படுகிறோம்.
தமிழகத்தின் முதல்வராக நிச்சயமாக பதவி ஏற்பேன் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். ஜெயலலிதாவின் ஆசியோடு, அவர் தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து செயல்பட்டாரோ, அதே வழியில் நானும் தொடர்ந்து செயல்படுவேன்.

இவ்வாறு சசிகலா கூறினார்.

‘‘உங்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்னும் ஒரு வார காலத்தில் தீர்ப்பு அளிக்க உள்ளது. இதற்கும், உங்களின் பதவி ஏற்பு விழா தாமதம் ஆவதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளது என கருதுகிறீர் களா?’’ என்று கேட்டபோது, “நீதிமன்றங்களை மதிக்கிறேன். ஒரு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதுபற்றி கருத்து கூறுவது சரியில்லை’’ என்று பதிலளித்தார் சசிகலா.

கார்டனில் ஒருமையில் அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார் ஓ.பி.எஸ்.: ஆதங்கத்தைக் கொட்டும் ஆதரவாளர்கள்

குள.சண்முகசுந்தரம்

போயஸ் கார்டனில் ஓ.பன்னீர் செல்வத்தை ஒருமையில் அழைத்து அவமானப்படுத்தியதாக அவரது நெருக்கமான ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

அமைதி வடிவமாக இருந்த ஓ.பி.எஸ்., கடந்த இரண்டு நாட்களாக மீடியாக்களிடம் மனம் திறந்து அதிரடியாய் சொல்லும் கருத்துக்கள் தமிழக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. தான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டது பற்றி பேசி வரும் ஓ.பன்னீர்செல்வம், ‘‘சொன்னது 10 சதவீதம் தான்; சொல்லாதது 90 சதவீதம் இருக்கிறது’’ என சஸ்பென்ஸ் வைக்கிறார்.
ஜெயலலிதா இல்லாத போயஸ் தோட்டத்தில் ஓ.பி.எஸ். நடத்தப்பட்ட விதம் குறித்தும் கடந்த சில தினங்களாக அவர் எத்தகைய கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டு வந்தார் என்பது குறித்தும் அவருக்கு நெருக்கமான வட்டத்தினர் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் கூறியதில் இருந்து…

‘‘முதலமைச்சர் பதவி தனக்கு நிரந்தரம் இல்லை என்பதும், சசிகலா அந்த இடத்துக்கு வருவார் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். ஜல்லிக்கட்டு, கிருஷ்ணா நதி நீர் விவகாரம் உள்ளிட்டவைகளை திறம்பட அவர் சாதித்ததை போயஸ் தோட்டத்தில் இருப்பவர்கள் ரசிக்கவில்லை.

இதற்கிடையில், எப்படியாவது அதிமுக-வுக்குள் குழப்பத்தை விளைவிக்க நினைத்துக் கொண்டி ருந்தது திமுக. இதற்காகவே, சட்டமன்றத்துக்குள் ஓ.பி.எஸ். நுழைந்த போது, ஸ்டாலின் உள் ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்தினார் கள். ஓ.பி.எஸ். காருக்கு வழிவிட்டு தனது காரை ஓரம் கட்டினார் ஸ்டாலின். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘‘தேவைப்பட்டால் ஓ.பி.எஸ்-ஸுக்கு நாங்கள் சக்தியளிப் போம்’’ என்றார் துரைமுருகன்.

இவை எல்லாமுமே, போயஸ் தோட்டத்தில் இருப்பவர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, ஓ.பி.எஸ்-ஸை வேண்டுமென்றே சிறுமைப்படுத்த ஆரம்பித்தார்கள். 66 வயதான ஓ.பி.எஸ்-ஸை போயஸ் தோட்டத்தில் இருக்கும் சிலர், ’நீ.. வா.. போ..,’ என ஒருமையில் அழைத்து அவமானப்படுத்தினர்.

திமுக-வுக்கும் அவருக்கும் மறைமுக தொடர்புகள் இருப்பதாக சந்தேகித்தார்கள். இதையடுத்து, ஓ.பி.எஸ்-ஸை யார் யாரெல்லாம் சந்திக்க வருகிறார்கள், அவரது அசைவுகள் என்ன என்பதை தனியார் ஏஜென்ஸி மூலமாக உளவு பார்த்தனர்.

கடந்த 5-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் பற்றிய தகவல்கூட ஓ.பி.எஸ்-ஸுக்கு முறையாக சொல்லப்பட வில்லை. கூட்டம் குறித்த விவரம் முறையாக தனக்கு தெரிவிக்கப்படாததால் கடலில் கச்சா எண்ணெய் அள்ளப்படும் இடத்தை பார்வையிடுவதற்காக ஓ.பி.எஸ். மணலி சென்றுவிட்டார். அங்கிருந்து கோட்டைக்கு துறை முக பொறுப்புக்கழக அதிகாரி களுடனான சந்திப்புக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்கு அலை பேசியில் அழைப்பு வர, கோட்டைக்குப் போகாமல் கார்டனுக்கு போயிருக்கிறார். அங்கு போன பிறகுதான் சசிகலா அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எம்.எல்.ஏ-க்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் விஷயத்தை அவருக்கு தெரிவித்துள்ளனர்.
‘‘சசிகலா முதலமைச்சராக வருவதை இப்போதைக்கு கட்சித் தொண்டனும் தமிழக மக்களும் ஏற்கும் மனநிலையில் இல்லை. அந்த மனநிலைக்கு அவர்களை தயார்படுத்தும் வரை இந்த முடிவை ஒத்திப்போடலாம்’’ என்று அவர் சொன்னதை அங்கிருந்த மூத்த அமைச்சர்களும் சசிகலாவின் உறவுகளும் ஏற்கவில்லை. ‘‘அதையெல்லாம் நாங்க பார்த்துக் கொள்வோம். நீ ராஜினாமா எழுதிக்கொடு’’ என்று நெருக்கடி கொடுத்து ராஜினாமா கடிதத்தை வாங்கி உள்ளனர்.
கடந்த 7-ம் தேதி காலை 8.45 மணிக்கு சசிகலா தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பது என முடிவு செய்யப்பட்டது. புதிதாக அமைச்சர்கள் பட்டியலில் கடந்த காலங்களில் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட சிலரது பெயர்கள் இருந்துள்ளன. இதுகுறித்து ஓ.பி.எஸ்.ஸிடம் ஒப்புக்குக்கூட கலந் தாலோசிக்கவில்லை. கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஓ.பி.எஸ். தன் மனக்குமுறலை கொட்டியுள்ளார். அடுத்த சில நாட்களில் மிச்சத்தையும் அவர் கொட்டுவார்’’ என்று ஓ.பி.எஸ்-ஸுக்கு நெருக்கமான வட்டத்தினர் தெரிவித்தனர்.

ஓபிஎஸ் அணியில் 6 எம்எல்ஏக்கள்: சசிகலாவுக்கு ஆதரவு கரைகிறதா?


அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக் கள் ஒவ்வொருவராக தற்போது ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வருவதால் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வரை பன்னீர் செல்வத்தையும் சேர்த்து அவரது அணியில் 6 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்தாண்டு மே மாதம் நடைபெற்ற 232 தொகுதிகளுக்கான தேர்தலில் 134 தொகுதிகளை அதிமுக கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. இதில், 131 பேர் அதிமுக வேட்பாளர்கள்; மற்ற மூவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத் தில் போட்டியிட்டவர்கள். இதில், மதுரை மாவட்டம் திருப்பரங் குன்றம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த சீனிவேலு மரணமடைந் தார். இதையடுத்து, அதிமுகவின் பலம் 133 ஆக குறைந்தது.
அதன்பின் கடந்தாண்டு நவம்பர் மாதம் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சை மற்றும் காலியாக இருந்த திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மூன்று தொகுதிகளையும் ஆளும் அதிமுக கைப்பற்றியது. இதனால் அதிமுகவின் பலம் 136 ஆக உயர்ந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதால், அதிமுகவின் பலம் 135 ஆக குறைந்தது.

இதில் பி.தனபால் பேரவைத் தலைவராக இருப்பதால் கட்சியில் எழும் பிரச்சினைகளுக்கு வாக்களிக்க இயலாது. எனவே, அவர் எண்ணிக்கையில் வர மாட்டார். இதனடிப்படையில், அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் உட்பட 134 எம்எல்ஏக்கள் இருந்தனர். தற்போது ஓபிஎஸ் வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு கே.மாணிக்கம் (சோழவந்தான்), வி.சி. ஆறுகுட்டி (கவுண்டம்பாளையம்), மனோரஞ்சிதம் நாகராஜ் (ஊத்தங் கரை), ஏ. மனோகரன் (வாசுதேவ நல்லூர்), எஸ்.பி.சண்முகநாதன் (வைகுண்டம்) ஆகிய 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பதவியேற்பதில் சிக்கல்

இதன் காரணமாக சசிகலாவுக்கான ஆதரவு குறைந்து வருகிறது. பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 117 எம்எல்ஏக்கள் தேவை. இந்நிலையில் இன்னும் 20 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்தாலும் கூட, சசிகலா பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டு விடும். இதை தவிர்க்கவே, இருக்கும் எம்எல்ஏக்களை தக்கவைக்க சசிகலா தரப்பு முயற்சி எடுத்து வருகிறது.

பிப்.9-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

செய்தித் தொகுப்பு: இந்து குணசேகர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமை சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் இன்றும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அவற்றின் நிகழ்நேரத் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)
4.00 pm: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ராஜ்பவன் வந்தடைந்தார்.
3.40pm: சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

3.30 pm: "அதிமுக எம்எல்ஏக்கள் அவர்களது விருப்பத்தில்தான் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்களை யாரும் கட்டுப்படுத்தவில்லை. 10 முக்கிய அமைச்சர்களுடன் ஆளுநரை இரவு 7.30 மணிக்கு சந்திக்க இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா. விரைவில் சசிகலா தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் பன்னீர்செல்வம்" என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
3.24 pm: வில்லிவாக்கம் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்தார்.

3.20 pm: அதிமுகவின் முன்னாள் எம்பி கே. பழனிசாமி முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு.
3.17 pm: அதிமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதி முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை இல்லத்தில் சந்தித்தார்.

3.15 pm: இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கிறார் ஓபிஎஸ். சசிகலா 7.30 மணிக்கு சந்திக்கிறார்.

3.03 pm: "சசிகலா அணியினரால் கடத்திச் செல்லப்பட்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விடுதிகளிலும், புதுச்சேரியிலும் கட்டாய சிறை வைக்கப்பட்டுள்ள 120-க்கும் மேற்பட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விவரம்: சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை மீட்க வேண்டும்: அன்புமணி

2.58 pm: "சசிகலாவை ஆதரித்தவர் பன்னீர்செல்வம். தற்போது நாடகமாடுகிறார். பன்னீர் செல்வமும், மதுசூதனனும் துரோகிகள். அதிமுகவின் சொத்துகளை அபகரிக்க முயற்சி நடக்கிறது" என்று அதிமுகவின் கோகுல இந்திரா கூறியுள்ளார்.

2.42 pm: ஆளுநரை வரவேற்க விமான நிலையம் செல்கிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
2.33 pm: தமிழக ஆளுநரை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

2. 30 pm: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று இரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார்.

1.49 pm: மதுசூதனன் வருகை தங்களுக்கு வலிமையைக் கூட்டியுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விவரம்: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேரில் ஆதரவு: ஓ.பன்னீர்செல்வம் நெகிழ்ச்சியுடன் உற்சாகம்

1.47 pm: சசிகலாவை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும். அதிமுக காப்பாற்றப்பட வேண்டும்மதுசூதனன்.

1.38 pm: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

1.22 pm: முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வருகை.

1.17 pm: "அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அவர்களது விடுதியில் சுதந்திரமாக உள்ளனர். தமிழ்நாட்டின் முதல்வராக சசிகலா விரைவில் பதவியேற்பார்" என்று அதிமுகாவின் பா. வளர்மதி கூறியுள்ளார்.

12. 55 pm: நெல்லித்தோப்பு முன்னாள் எம்எல்ஏ ஒம்சக்தி சேகரை சசிகலா நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி நெல்லித்தோப்பு அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
12. 50 pm: முன்னாள் மாவட்ட செயலாளர், கோயம்பத்தூர் மேயருமான பி. ராஜ்குமார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு.

12.50 pm : முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் வீணை காயத்ரி சந்திப்பு
12.30 pm: மும்பையிலிருந்து சென்னை புறப்பட்டார் ஆளுநர் வித்தியாசாகர் ராவ். இன்று ( வியாழக்கிழமை) பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
12.20 pm: "எங்களை யாரும் கடத்தவில்லை. சுதந்திரமாகவே இருக்கிறோம். ஆளுநர் சென்னை வந்தவுடன் சசிகலாவுக்கு எங்களது ஆதரவை தெரிவிப்போம்" என்று குன்னம் தொகுதி எம்ஏல்ஏ ராமசந்திரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
12.15 pm: "அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் திமுக தலையிடவில்லை. அதிமுகவில் நடக்கும் பிரச்சினைகள் மோசமாகவும், வருத்தமளிப்பதாகவும் உள்ளது" என்று திமுக நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லியில் கூறியுள்ளார்.

12.08 pm: 'அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 130-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை; அவர்களைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' எனக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அரசினர் விடுதியில்தான் 130 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
11.55 am: சென்னை போயஸ் கார்டனில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

11.15 am: 'ஜெயலலிதா சிகிச்சை மர்மங்களை மறைத்தது ஏன்?' என்பன உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், 'சசிகலா குழுவினருக்கு துணையாக இருந்துவிட்டு, இப்போது பிரிந்து வந்த பிறகு உத்தமர் வேடம் போட பன்னீர்செல்வம் முயல்கிறார். ஆனால், அவரது நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்' என்று கூறியுள்ளார். | முழு விவரம் > உத்தமர் வேடத்தில் ஓபிஎஸ் நாடகம்: பல கேள்விகளை அடுக்கி ராமதாஸ் கருத்து
11.00 am: நாடாளுமன்றத்தில் அதிமுக எம்எல்ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. தமிழக முதல்வராக சசிகலா உடனடியாக பதவியேற்க வேண்டும் என்பது அவர்களது விருப்பக் குரலாக இருந்தது
.
10.55 am: பிணைக் கைதிகள் போல சிறை வைக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களின் மன விருப்பத்தை ஆய்ந்து அறிந்து ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், "சுதந்திர ஜனநாயக நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் இப்படி 'பிணைக் கைதி'கள் போல சிறைப்படுத்தப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பை சிதைக்கின்ற செயலாக இருக்கிறது" என்று அவர் காட்டமாக கூறியுள்ளார். | விவரம் > பிணைக் கைதிகள் போல அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறைவைப்பு: ஸ்டாலின் காட்டம்

10.50 am: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைந்தியநாதன் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

10.45 am: "உச்ச நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்றாலும், அதிமுக சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளது. ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக முடியாது. அவர் இரு வழிகளையும் இழந்துவிட்டார்" என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
10.42 am: அதிமுக புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர், அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

10.40 am: தமிழக டிஜிபி ராஜேந்திரன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார்.
10.35 am: குற்றவாளிகளைப் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துவதற்கு இந்தப் பெண்ணுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். | முழு விவரம் > குற்றவாளிகளைப் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துவதா?- குஷ்பு சாடல்

முந்தைய முக்கியச் செய்திகள்:

* மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதன் விவரம்: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

* எதிர்தரப்புக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. விவரம்: ஓபிஎஸ் அணிக்கு தாவுவதை தடுக்க ரகசிய இடத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைப்பு: ஆளுநர் இன்று வருவதால் டெல்லி செல்லும் திட்டம் ரத்து
*தமிழக அரசியலில் அசாதாரணமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.விவரம்: ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார்: ஆளுநர் மாளிகை தகவல்

* முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் திரள வாய்ப்புள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். விவரம்: முதல்வருக்கு ஆதரவாக இளைஞர்கள் திரள வாய்ப்பு: மெரினா கடற்கரையில் போலீஸார் குவிப்பு

* அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக் கள் ஒவ்வொருவராக தற்போது ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வருவதால் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வரை பன்னீர் செல்வத்தையும் சேர்த்து அவரது அணியில் 6 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. விவரம்: ஓபிஎஸ் அணியில் 6 எம்எல்ஏக்கள்: சசிகலாவுக்கு ஆதரவு கரைகிறதா?
* போயஸ் கார்டனில் ஓ.பன்னீர் செல்வத்தை ஒருமையில் அழைத்து அவமானப்படுத்தியதாக அவரது நெருக்கமான ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகின்றனர். விவரம்: கார்டனில் ஒருமையில் அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார் ஓ.பி.எஸ்.: ஆதங்கத்தைக் கொட்டும் ஆதரவாளர்கள்
* திமுகவுடன் எங்களுக்கு உறவு கிடையாது. சசிகலா தான் திமுகவுடன் உறவு வைத் திருந்தார். அதற்கு உதாரணம் மிடாஸ் நிறுவனம். திமுக ஆட்சிக் காலத்தில் மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து மது வாங்கினார்கள். ஜெயலலிதாவுக்கு மிடாஸ் நிறுவனம் பிடிக்காது. ஆனால், சசிகலா அந்த மிடாஸ் நிறுவனம் மூலம் பணம் சம்பாதித்தார். விவரம்: மிடாஸ் நிறுவனம் மூலம் சசிகலாதான் திமுகவுடன் உறவு வைத்திருந்தார்: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு

“அரசியலின் அசத்தல் சாணக்கியர் ஓ.பன்னீர்செல்வம்!” சிலாகிக்கிறார் எஸ்.வி.சேகர்


பிப்ரவரி 7-ம் தேதி இரவில் இருந்தே தமிழக அரசியல் களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. சசிகலா vs ஓ.பி.எஸ். என்று எதிரெதிர் துருவங்களாகப் பிரிந்துநின்று முஷ்டி முறுக்கிவரும் சூழலில், அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வும் பி.ஜே.பி மூத்த தலைவருமான எஸ்.வி.சேகரிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசினோம்....

''தமிழக அரசியல் நிலவரம் அடுத்தகட்டமாக எப்படி நகரும் என நினைக்கிறீர்கள்?''

''ஓ.பி.எஸ் உறுதியான முடிவை எடுத்து அறிவித்துவிட்டார். அதனால், அடுத்தகட்டமாக சட்டசபையில், நடைபெறும் ஓட்டெடுப்புத்தான் இனிவரும் தமிழக அரசியலைத் தீர்மானிக்கப்போகிறது. அந்தவகையில், தற்போது அ.தி.மு.க-வில் மெஜாரிட்டி எனப்படும் எம்.எல்.ஏ-க்களின் வித்தியாச எண்ணிக்கை என்பது 20-தான். இந்த எண்ணிக்கை சட்டசபை ஓட்டெடுப்பின்போது மாறி வாக்களிப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அப்படி ஒரு சூழ்நிலை நேர்ந்தால் மறுபடியும் சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு மூன்று வார இடைவெளி கொடுக்க முடியும். அமைச்சர்கள் 30 பேரைத் தவிர, மற்ற எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் நல்லதொரு வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பவர்கள்தான்.

அ.தி.மு.க-வில் இருந்தவன் என்ற முறையில் அந்தக் கட்சியின் ராணுவக் கட்டுப்பாடு பற்றி எனக்குத் தெரியும். எந்த ஒரு விஷயம் என்றாலும், தலைமை ஏற்பதற்கு அவ்வளவு எளிதில் யாரும் வரமாட்டார்கள். 'நீங்கள் தலைமை ஏற்று நில்லுங்கள்; உங்களுக்குப் பக்கபலமாக நாங்கள் அணிவகுக்கிறோம்' என்று சொல்லக்கூடிய எம்.எல்.ஏ-க்கள்தான் அங்கே அதிகம். அதனால், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள் ஓட்டளிக்கும் வாய்ப்புப் பிரகாசமாக உள்ளது.

இதற்கிடையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு வேறு ஒரு வழியில் போராடிக் கொண்டிருக்கிறார் சசிகலா புஷ்பா. இப்படி தமிழக அரசியல் சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இதில் எங்கேனும் கரணம் தப்பினால் மரணம் கதையாக தவறு ஏற்பட்டால் மட்டுமே, அது தி.மு.க-வுக்கான வாய்ப்பாக அமையும் என்று நினைக்கிறேன்.''

''ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஆதரவு அலை இருக்கிறது?''

''அரசியலைப் பொறுத்தவரை எப்போதுமே எதிர்ப்பு அரசியலுக்குத்தான் சக்தி அதிகம். அந்த வகையில், சசிகலாவுக்கு எதிரான மனநிலைதான் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மக்கள் மத்தியில் இருக்கிறது. இது தானாகவே ஓ.பி.எஸ்ஸுக்கான ஆதரவாக மாறிவிடும்.

ஜெ. சமாதியில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, 'இதுவரை நடந்தவை' என்று ஓ.பி.எஸ் அறிவித்தது எல்லாமே அரசியலின் உச்சபட்ச சாணக்கியத்தனம். இனிமேல் இதற்கு எதிராக யார் எந்த அஸ்திரத்தை வீசினாலும் அது முனை மழுங்கிப்போன விஷயமாகத்தான் பார்க்கப்படும். ஏனெனில், 'அப்படியெல்லாம் இல்லை, இப்படியெல்லாம் இல்லை' என்பது மாதிரி விளக்கங்கள் கொடுப்பது, தற்காப்பாகத்தான் இருக்கமுடியுமே தவிர... அது எதிர்த் தாக்குதலாக இருக்காது.''



''சசிகலா மீது எந்த மாதிரியான எதிர்ப்பு அலை இருக்கிறது?''

''ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது யாரை எல்லாம் விலக்கி வைத்தாரோ, அவர்கள் எல்லோருமே அவர் இறந்தபிறகு உள்ளே வந்துவிட்டார்கள். பொதுவாக, இறந்துபோனவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால், அவர்களது விருப்பங்களை நிறைவேற்றத்தான் குடும்பத்தினர் ஆசைப்படுவார்கள். நியாயமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களைச் சொல்கிறேன். ஆனால், இங்கே எல்லாமே ஏறுக்கு மாறாக நடந்திருக்கிறது. இதுதான் அந்தக் குடும்பத்தில் இருக்கிறவர்கள் மீதான சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது என்று மக்கள் நினைக்கிறார்கள்.''

''ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைக்கிறார்களா...?''

''மர்மங்கள் குறித்த விஷயங்களுக்குள் போக நான் விரும்பவில்லை. ஆனால், 'ஜெ. மரணத்தில் எதையோ மறைத்துவிட்டார்கள்' என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாகவே பதிந்துவிட்டது. 'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி' என்பார்கள். அதேபோல், இன்றைக்குத் திடுதிப்பென டாக்டர்கள் ஒன்றுகூடி பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்கள். 'வெள்ளைக்காரன் பொய்சொல்ல மாட்டான்' என்பதுபோல யாரையோ கூட்டிவந்து பிரஸ்மீட் வைக்கிறார்கள். அதில், ஒரு டாக்டர் 'நோ என்று சொல்லுங்கள்' என்று எடுத்துக் கொடுக்கிறார். அதைக் கேட்டு அவரும் 'நோ' சொல்கிறார். 'இந்தச் சந்திப்பே, தற்செயலானதுதான்' என்கிறார்கள். அதற்கு முந்தைய நாளில்தான் ம.நடராசனும் அப்போலோவில் அட்மிட் ஆகிறார். அதுவும் தற்செயல்தானாம். எப்படி இவ்வளவு தற்செயல்கள் ஒன்றுபோல நடக்கின்றன என்று மக்கள் ஆச்சர்யப்படுகின்றனர். இதுமாதிரியான காட்சிகள் சினிமாவில் வந்தாலே, 'என்னப்பா இது பழைய சீனாக இருக்கிறதே' என்று எழுந்துபோய்விடுவார்கள்.

ஜெ.-வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த ஆவணங்களை எடுத்துக் காட்டினாலே போதுமானது. நான்கூட 3 டாக்டர் பட்டம் வாங்கி வைத்திருக்கிறேன்.... இந்த மாதிரி டாக்டர்களிடம் அல்லாமல், உண்மையாகவே டாக்டருக்குப் படித்து அரசியலில் இருக்கிற மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தமிழிசை சவுந்தர்ராஜன் மாதிரியானவர்களிடம் அந்த ஆவணங்களைக் காட்டலாமே....?

ஜெ. மரண விஷயத்தில் இனிமேல் எத்தனை ஆவணங்களை எடுத்துக் காட்டினாலும் மக்கள் அதனை நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை. ஏனெனில், சாதாரணமாக ஓர் இழவு வீட்டில், 16-ம் நாள் கழித்துத்தான் எந்தவொரு விஷயத்தையுமே யோசிக்கவே ஆரம்பிப்பார்கள். ஆனால், கோடிக்கணக்கிலான சொத்து, வாரிசு இல்லை, இருக்கும் வாரிசுகளையும் உள்ளே விடவில்லை என்று எவ்வளவோ பிரச்னைகள் இருந்த சூழ்நிலையிலும் உடனடியாக இரவோடு இரவாக மந்திரி சபை பதவி ஏற்கவைத்ததை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை.''



''முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

'' 'வர்தா' புயலின்போது எல்லோருமே கதவு, ஜன்னல்களைச் சாத்திவிட்டு வீட்டுக்குள் பத்திரமாக இருந்துகொண்டோம். ஆனால், ஒரு முதல்வராக அவர் கோட்டையில் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்; களத்தில் இறங்கி, பணிகளை விரைவுப்படுத்தினார்; கடலில் எண்ணெய் கொட்டிய இடத்தைப் பார்வையிட்டார்; சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து தமிழகத்துக்கு தண்ணீர் கேட்டுப் பெறுகிறார். ஜல்லிக்கட்டுக்காக சும்மா கடிதம் எழுதிக் கொண்டிருக்காமல், டெல்லிக்கே நேரடியாகப் போய் பிரதமரோடு உட்கார்ந்து பேசி, சட்டம் கொண்டுவருகிறார்.

'உங்களை மிக்சர் என்று கிண்டல் செய்கிறார்களே...?' என்று நிருபர்கள் கேட்டபோதுகூட, 'பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால், இதெல்லாம் வரத்தான் செய்யும்' என்று பக்குவமாகப் பதில் அளிக்கிறார். அடடா இவ்வளவு எளிமையான முதல்வரா என்ற ஆச்சர்யம் மேலிட மக்கள் அவரைப் பார்க்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம்.... எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தபோதே அ.தி.மு.க-வின் வாரிசாக, செங்கோல் கொடுத்து அடையாளப்படுத்தப்பட்டவர் ஜெயலலிதா. அதேபோல், ஜெயலலிதாவும் தான் இருந்த காலத்திலேயே தனக்கு அடுத்தபடியாக இரண்டு முறை முதல்வர் பதவியை ஓ.பி.எஸ்ஸுக்குக் கொடுத்து அடையாளப்படுத்திவிட்டார்.''

''தி.மு.க-தான் ஓ.பன்னீர்செல்வத்தைத் தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறதே...?''

''எதிர்க்கட்சிக்காரனைப் பார்த்து சிரிக்கக் கூடாது. எழுந்து நின்று வணக்கம் செலுத்தக் கூடாது என்றெல்லாம் கடந்த 40 வருடங்களாக தமிழக அரசியலில் வெறுக்கப்பட்ட விஷயங்களை எல்லாம் மாற்றி புது நாகரிகத்தைக் கொண்டுவந்தவர் ஓ.பி.எஸ். அவ்வளவுதான். ஆனால், இது அந்தக் கட்சித் தலைமைக்குப் பிடிக்கவில்லை என்றால், மறுபடியும் ஒரு நாகரிகமற்ற கலாசாரத்தைக் கொண்டுவரத்தான் அந்தக் கட்சி நினைக்கிறது என்றே அர்த்தம். இது மக்களுக்குப் பிடிக்காது. மாற்றங்களை ஏற்பதுதான் நல்லது. 20 வருடங்களுக்கு முன்பு பெற்றோரே, 'என் பையனை அடிச்சுப் படிக்க வையுங்கள்' என்று வாத்தியாரிடம் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு வாத்தியார் ஸ்கேலை தூக்கினாலே, பெற்றோர் போலீஸைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வந்துவிடுவார்கள். காலம் மாறிவிட்டது சார்...''

- த.கதிரவன்

இனோவா கார், ஆச்சர்ய பரிசுகள்...! எம்.எல்.ஏக்களுக்கு குதிரை பேரம் ஆரம்பம் #OPSvsSasikala, #VikatanExclusive


அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கார், நிலம், பணம் எனப் பரிசுகளை அள்ளிக் கொடுக்க கட்சியில் ஏற்பட்டுள்ள இரண்டு அதிகார மையங்கள் தரப்பிலிருந்து தூது விடப்பட்டுள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மீது பகிரங்கமான குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து கட்சியில் இரண்டு அதிகார மையங்கள் ஏற்பட்டுள்ளன. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக மாணிக்கம், சண்முகநாதன், மனோ ரஞ்சிதம், ஆறுக்குட்டி, மனோகரன், மைத்ரேயன் எம்.பி ஆகியோர் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இதற்கிடையில் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, நடிகர் பாக்யராஜ் என ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவு பட்டியல் நீள்கிறது.



அதே நேரத்தில் சசிகலாவுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அடுத்து கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் சொகுசு வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மட்டும் சசிகலாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் சென்னைக்கு வர உள்ளார். இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநரின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பினர் சந்திக்க உள்ளனர். இந்தச் சூழ்நிலையில் சொகுசு வேனில் அழைத்துச் செல்லப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் காட்டில் அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது.

இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், "எம்.எல்.ஏ.க்களுக்கு நெருக்கமானவர்களிடம் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய இரண்டு தரப்பிலிருந்தும் பேரம் பேசும் படலம் தொடங்கியிருக்கிறது. தென்மாவட்ட அ.தி.மு.க.வில் ஒருகாலத்தில் கோலோச்சிய வி.வி.ஐ.பி. ஒருவர் மூலம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு கார், நிலம், பணம் எனப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக இனோவா கிரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு இதுவரை 42 எம்.எல்.ஏ.க்கள் கிரீன் சிக்னல் காட்டிவிட்டனர்.



சசிகலா தரப்பு கட்டுப்பாட்டில் அவர்கள் இருந்தாலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர். இதுபோல சசிகலா தரப்பிலும் எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சொகுசு பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விரும்புவதை கட்சித் தலைமை செய்து கொடுத்துள்ளது. அங்கேயும் விட்டமின் 'சி' தாராளமாக கொடுப்பதாகவும் சசிகலா தரப்பு உறுதி அளித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சின்னம்மாவுக்கு ஆதரவு கொடுக்கும்படி எம்.எல்.ஏ.க்களிடம் வாக்குறுதி பெற்ற சசிகலா தரப்பு, ஆளுநரை சந்திக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய இரண்டு தரப்பிடமிருந்தும் குதிரை பேரத்துக்கான தூதுகள் வரத் தொடங்கி இருப்பதால் எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்" என்றனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில் அதை சசிகலா தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சுதந்திரமாக அங்கு இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பேசியவர்கள், "மக்களின் ஆதரவும், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் எந்த எம்.எல்.ஏ.க்களிடமும் பேரம் பேசவில்லை. கட்சித் தலைமை எம்.எல்.ஏ.க்களை ரகசிய இடத்தில் மறைத்து வைத்துள்ளது. எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக செயல்படவிட்டால் நிச்சயம் அவர்களது ஆதரவு எங்களுக்குக் கிடைக்கும். சிறை வைக்கப்பட்டாலும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. தற்போது ஆளுநரை சந்திப்பது, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது" என்றனர்.

மதில் மேல் பூனையாக எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு இருப்பதாக உள்விவரம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

-எஸ்.மகேஷ்

பிணைக் கைதிகளாக எம்.எல்.ஏ.க்கள்! ஆளுநருக்கு, மு.க.ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்!


பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை நிலவுகிறது என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர், மாநிலத்தில் சட்டபூர்வமான ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமைப் பொறுப்பில் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் அரசியல் சூழல் நிலையற்ற தன்மையுடனும் ஜனநாயக மாண்புகளுக்கு எதிராகவும் உள்ள நிலையில், பொறுப்பு ஆளுநரின் வருகையும் அவர் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகளும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கின்றன.

காபந்து முதலமைச்சராக நீடிக்கும் ஓ.பன்னீர்செல்வம், தன்னிடம் கட்டாயப்படுத்தி ராஜினாமாக் கடிதம் வாங்கினார்கள் என தனது கட்சித்தலைமையின் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனார். ஆனால் அவர் ராஜினாமா ஆளுநரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. இந்நிலையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது எந்தத் தலைமையின் கீழ் இருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர்களை சொகுசு பேருந்துகளில் ஏற்றிச் சென்று, நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுதந்திர ஜனநாயக நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் இப்படி ‘பிணைக் கைதி’கள் போல சிறைப்படுத்தப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பை சிதைக்கின்ற செயலாக இருக்கிறது. ஆளுங்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன், பின்னர் காபந்து முதலமைச்சரை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அப்படியானால், உண்மையாகவே இவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. பிணைக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை நிலவுகிறது.

இத்தகைய சூழலில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் மாநிலத்தில் நிலையான-சுதந்திரமான-சட்டபூர்வமான வழியில் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமைப் பொறுப்பில் இருக்கிறார். மக்களின் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டத்திற்குப் புறம்பான நிர்பந்தங்களாலும் மிரட்டல்களாலும் ஏதேனும் ஒரு பக்கத்திற்கு செல்கிறார்களா, இதற்கான பலன்கள்-வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. ஆகவே ஆளுநர், அரசியல் சட்டம் மற்றும் எஸ்.ஆர் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் வழிகாட்டுதல் அடிப்படையிலும் உரிய முடிவுகளை எடுத்து சுதந்திரமான சட்டமன்ற வாக்கெடுப்பை உறுதி செய்து ஜனநாயக மாண்புகளைக் காத்திடுமாறு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...