Monday, February 13, 2017

வெளிநாடு செல்ல கனிமொழிக்கு அனுமதி

புதுடில்லி: துணை ஜனாதிபதியுடனான வெளிநாட்டு பயணத்தில் பங்கேற்க, '2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, தி.மு.க., - எம்.பி.,யான கனிமொழிக்கு, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த மோசடி குறித்த வழக்கில், தி.மு.க., - எம்.பி.,யான கனிமொழி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 'துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, வரும், 19 முதல் 24 வரை, ருவாண்டா, உகாண்டா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பயணக் குழுவில் இடம்பெற்றுள்ளதால் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், கனிமொழி மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த சிறப்பு கோர்ட் நீதிபதி, ஓ.பி.சைனி, பல்வேறு நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்ல அனுமதி அளித்தார்.
சகோதரியின் வாரிசாக சகோதரன் ஆக முடியாது'


புதுடில்லி: திருமணமான பெண், அவரது கணவர் வீட்டின் மூலம் சம்பாதித்த சொத்துகளுக்கு, அந்த பெண்ணின் சகோதரன் வாரிசாக உரிமை கோர முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு: ஹிந்து வாரிசு சட்டத்தின் படி, யார் யார், ஒருவரது வாரிசு என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. திருமணமான பெண்ணுக்கு, அவரது சகோதரன் வாரிசாக முடியாது. அதிலும், தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் சம்பாதித்த சொத்து, அந்த பெண்ணின் பெயருக்கு மாற்றப்பட்டாலும், அதில் அந்த பெண்ணின் சகோதரன் எந்த உரிமையும் கோர முடியாது.மகன், மகள் இல்லாத நிலையில், திருமணமான பெண்ணின் சொத்துகளுக்கு, அவரது கணவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே உரிமை கோர முடியும்.
கூவத்தூரில் சசி ஆட்கள் அட்டகாசம் : பத்திரிகையாளர்கள் சாலை மறியல்

கூவத்துார்: கூவத்துார் சொகுசு விடுதிக்கு சசிகலா சென்ற போது, பத்திரிகையாளர்களை, அவரது குண்டர்கள் தடுத்து, ரகளை செய்ததால், மறியலில் ஈடுபட்டனர்.சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், கூவத்துார் சொகுசு விடுதியில், தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இரண்டாவது நாளாக, நேற்று மாலை, 4.50 மணிக்கு, சசிகலா அங்கு சென்றார். பத்திரிகையாளர்கள் அங்கு சென்ற போது, அவர்களை குண்டர்கள் தடுத்து நிறுத்தினர்; மிரட்டினர். அவர்களுடன், பத்திரிகையாளர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் வேடிக்கை பார்த்தனர். பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக, உள்ளூர் மக்கள் திரண்டதும், குண்டர்கள் தப்பினர். அப்போது, ஒருவர், பத்திரிகையாளரின் மொபைல் போனை பறித்து சென்றார். இதை கண்டித்து, பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அவர்களை சமாதானம் செய்த, அ.தி.மு.க., பிரமுகர்கள், மொபைல் போனை திரும்ப ஒப்படைத்தனர்; பின், மறியல் கைவிடப்பட்டது.

இதுகுறித்து, தமிழக, டி.ஜி.பி., அலுவலகத்தில், சட்டம் - ஒழுங்கு கூடுதல், ஐ.ஜி., திருநாவுக்கரசிடம், பத்திரிகையாளர்கள் புகார் கூறினர். அப்போது, 'குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
பன்னீரைத் தேடி எம்.பி.,க்கள் செல்வது ஏன்? மத்திய அரசில் அமைச்சர் பதவி பெற திட்டம்

வெறும் எம்.பி.,க்களாக உங்கள் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனரே, அதை வைத்து இப்போதைய நிலையில் என்ன செய்ய முடியும்? தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால், எம்.எல்.ஏ.,க்கள்தானே தேவை என்று பன்னீர்செல்வத்தின் பக்கம் உள்ள, அ.தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம்.

அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், எம்.எல்.ஏ.,க்களை அடைத்த் வைத்துள்ளனர். அவர்களை சுதந்திரமாக வெளியே விட்டால், அவர்கள் அனைவரும், பன்னீர்செல்வத்தைத் தேடி வந்துவிடுவர். சட்டசபையில், ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை ஓட்டெடுப்பில், தனது ஆதரவை நிரூபிப்பார். அதனால், அதற்காக காத்திருக்கிறோம்.
இதற்கிடையில், எம்.பி.,க்கள் ஆதரவை திரட்டி வருகிறோம். எப்படியும் 25க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், பன்னீர்செல்வம் பக்கம் வந்து விடுவர். அதை வைத்து, விரைவில், மத்திய பா.ஜ., அரசுக்கு ஆதரவளிப்போம். அப்படி செய்வதன் மூலம், பிரதமர் மோடி, பா.ஜ., அரசில், பன்னீர்செல்வம் எம்.பி.,க்களையும் சேர்த்துக் கொள்வார். அமைச்சரவையில், இரண்டு கேபினட் ரேங்கில் அமைச்சர்கள், ஒரு இணையமைச்சர் பொறுப்பும் வழங்க, தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படியொரு நிலை ஏற்பட்டால், தமிழகத்துக்கு கூடுதல் நன்மை கிடைக்கும். அதனாலேயே, சசிகலா பக்கம் இருந்த எம்.பி.,க்கள் அனைவரும், பன்னீர்செல்வத்தை தேடி வந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்பு எல்லைக்கு அப்பால் எம்.எல்.ஏ.,க்கள்! - சமூக வலைதளங்களை நாடும் வாக்காளர்கள்

கோவை : எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொள்ள முடியாத விரக்தியில் உள்ள தொகுதி மக்கள், 'வாட்ஸ்அப்', 'பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், தங்கள் எச்சரிக்கை எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், ஒன்பது தொகுதிகள் அ.தி.மு.க., கைவசம் உள்ளது. இதில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

'சுவிட்ச்ஆப்'

மற்ற தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் எங்கு உள்ளனர் என மக்கள் தேடி வருகின்றனர். எம்.எல்.ஏ.,க்களின் மொபைல்போன்கள் எண்கள், 'சுவிட்ச்ஆப்' செய்யப்பட்டுள்ளதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

சமூக வலைதளத்தில் கருத்து

தொகுதி மக்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ள எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்தினரும், வேறு பகுதிகளில் உள்ள தங்களது உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். எம்.எல்.ஏ.,க்களை தேடி வரும் மக்கள், அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், விரக்தி அடைந்துள்ளனர். இதனால், தற்போது 'பேஸ்புக்', 'வாட்ஸ்அப்' மூலம் எம்.எல்.ஏ.,க்களுக்கு தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

சூடு சொரணை இருந்தால் ராஜினாமா செய்யுங்கள்

அதில்,'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக தான் உங்களுக்கு வாக்களித்தோம். தற்போது நீங்கள், அம்மாவை கொலை செய்த கும்பலுக்கு துணையாக நின்று கொண்டிருக்கிறீர்கள். அதனால், எம்.எல்.ஏ., வாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டீர்கள். நாங்கள் அளித்த ஓட்டுக்களை திரும்ப பெறுகிறோம். உடனே, சூடு சொரணை இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் போட்டியிடுங்கள்' என, தெரிவித்துள்ளனர்.

சூலுார், கிணத்துக்கடவு தொகுதி மக்கள், 'நீங்க யாருன்னு தெரியாமலே நாங்க ஓட்டு போட்டு ஜெயிச்சதுக்கு, ஜெயலலிதாதான் காரணம். நீங்க கொலைகார கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டீங்கனு நம்புறோம். அப்படி செஞ்சீங்கன்னா நாங்க அடுத்த தேர்தலில் உங்கள சும்மா விடமாட்டோம்' என, தங்கள் எம்.எல்.ஏ.,க்களை எச்சரித்துள்ளனர்.
எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன்: சசிகலா

சென்னை: ‛யாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன்' என சசிகலா எம்.எல்.ஏ.,க்களிடம் பேசினார்.

கூவத்துாரில் இன்று (பிப்.,12) எம்.எல்.ஏ.,க்களிடையே சசிகலா பேசியதாவது:

குட்டி சிங்கம்!

ஓ. பன்னீர் செல்வத்தையும் என்னையும் ஒப்பிட்டு பார்க்கின்றனர். அவர் அமைதியானவர் போல் தோற்றம் அளிப்பதாக கூறுகிறார்கள். ஆனால், நான் சிங்கத்துடனேயே இருந்தவள். இந்த குட்டி சிங்கத்தை பார்த்து சிலருக்கு பயம் உருவாகி உள்ளது. என்னுடன் இருக்கும் நீங்களும் சிங்கங்கள் தான்.

அ.தி.மு.க., ஆட்சியை எப்படியாது கலைத்து விடலாம் என சில எட்டப்பர்கள் உருவாகி உள்ளனர். ஆட்சியை கைப்பற்ற எதிரிகள் சதி வலை பின்னுகிறார்கள். அந்த வலையில் சிக்கவிடக் கூடாது.

எந்த கொம்பனாலும் முடியாது

ஆட்சி நம் கைக்கு வந்த பின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களும் உங்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களை எடுத்து கூறுங்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். டில்லி வரை சென்று வெற்றி பெறுவோம். இந்த இயக்கத்தை ஆட்சியையும் உயிர் உள்ள வரை காப்பாற்றி கொள்வேன் என உறுதி எடுத்து தான் பொறுப்பேற்றுள்ளேன். இயக்கத்தையும் ஆட்சியையும் எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.

பின்வாங்க மாட்டேன்

வசதி வாய்ப்புடன் ஒரு அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் கட்சியை இரண்டாக பிரிக்க பார்க்கிறார். நானும் விவசாயி குடும்பத்திலிருந்து வந்தவள். நீங்கள் எனக்கு துணையாக இருந்தால் எதையும் நான் சாதிப்பேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன்.

ஜெயிலை பார்த்திருக்கிறோம்

எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ எடுப்பேன். ஜெயலலிதாவும் நானும் சென்னை ஜெயிலையும் பார்த்திருக்கிறோம். பெங்களூரு ஜெயிலையும் பார்த்திருக்கிறோம். பின்னர், ஆட்சியில் சாதித்தும் இருக்கிறோம்.

சட்டசபை ஜெ., படம்

ஆட்சி அமைத்து ஜெயலலிதா சமாதிக்கு போவோம். அங்கு கேபினட் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுப்போம். ஜெயலலிதாவின் ஆசி பெற்று கோட்டைக்கு செல்வோம். ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் வைப்போம். அதற்கு தி.மு.க., வினர் தடை போட முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.
சசியை அழைக்காதீர்: கவர்னருக்கு மக்கள் மனு




சென்னை: 'சசிகலாவுக்கு, நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை' என, கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு, பொதுமக்கள் மனு அனுப்பி வருகின்றனர்.

ஆதரவு:

அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமனம் செய்யப்பட்ட சசிகலாவை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், சசிகலாவுக்கு எதிராக, முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

முயற்சி:

எனினும் கடும் எதிர்ப்பை மீறி, எம்.எல்.ஏ.,க்கள் உதவியோடு, முதல்வராக சசிகலா முயற்சித்து வருகிறார். தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி, கவர்னரை வற்புறுத்தி வருகிறார். அவர் வசமுள்ள, எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, பொது மக்கள் திரண்டுள்ளனர். 'சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது' என, தங்கள் தொகுதி, எம்.எல்.ஏ.,க் களை, வலியுறுத்தி வருகின்றனர்.

'பேக்ஸ்':

அடுத்த கட்டமாக, 'ஜனநாயகம் கடத்தப்பட்டுள்ளது; நாங்கள் சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. எனவே, அவரை ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது' என, கையெழுத்திட்ட மனுவை, கவர்னர் அலுவலகத்திற்கு, பொதுமக்கள், 'பேக்ஸ்' அனுப்பி வருகின்றனர். அதன் நகலை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, '044 - 2230 1300 என்ற எண்ணுக்கு பேக்ஸ் அனுப்புங்கள்' என, வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று மட்டும், கவர்னர் மாளிகைக்கு, ஆயிரக்கணக்கானோர் பேக்ஸ் அனுப்பி உள்ளனர்.

Self-financing medical, dental college fee details released

Self-financing medical, dental college fee details released The Hindu Bureau Chennai. 16.08.2026 Tamil Nadu’s Selection Committee has put up...