Monday, February 13, 2017

குழந்தைகள் உணர்வை மதிப்போம்!

By கே.ஜி. ராஜேந்திரபாபு  |   Published on : 13th February 2017 10:59 AM  |   
பூக்களைக் கிள்ளாதீர், அது குழந்தையின் தலையைத் துண்டிப்பதுபோல்' என்று புகன்றார் ஜார்ஜ் பெர்னாட்ஷா.
குழந்தைகள் பூக்களைப் போன்றவர்கள். அன்பு - ஆரோக்கியம் என்ற பெயரில் இந்தக் குழந்தைகள் படும் அவதியைப் பார்த்தால் நமக்கு அழுகையே வந்து
விடும்.
உதாரணமாக, குழந்தைக்குச் சோறூட்டும் காட்சி. பல நேரங்களில் குழந்தை அதன் பசிக்குச் சோறுண்ணுவதில்லை. அம்மாவின் ஆசைக்காகத்தான் உண்ணுகிறது. குழந்தைக்குப் பசிக்கிறதோ இல்லையோ, சோற்றை அதன் வாயில் வற்புறுத்தித் திணிக்கிறார் தாய்.
குழந்தை அழும். "பிரம்பு எடுக்கவா' என்று அச்சுறுத்திக் கொண்டே அழ அழ சோறூட்டுவாள் தாய். காணச் சகிக்காது. "சாப்பிடுடா எதிர்வீட்டுப் பையன் உன்வயசு தானே எப்படி இருக்கிறான். நீயும் இருக்கிறீயே புடலங்காய் மாதிரி எலும்பும் தோலுமா' என்று அர்ச்சனை செய்வாள். புடலங்காய் மாதிரி இருப்பதென்றால் என்னவென்று இரண்டு வயது மூன்று வயது குழந்தைக்குத் தெரியுமா?
ஆனாலும், இப்படி ஒப்பிடுவாள் தாய். குழந்தை நன்றாகச் சாப்பிடும் அன்று பூரிப்படையும் தாய், சாப்பிடாத அன்று செய்கின்ற அமர்க்களத்தில் குழந்தை படும் அவதியைப் பார்த்தால் நமக்குப் பரிதாபமாக இருக்கும்.
பல நேரங்களில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களோ, உறவினர்களோ குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு "அழகாக இருக்கிறது' என்று சொல்லிக் கொண்டே அக்குழந்தையின் கன்னத்தைக் கிள்ளுவார்கள்.
இவர்கள் ஆசைக்குக் கிள்ளுவார்கள். ஆனால், அதுபடும் அவஸ்தை. அய்யோ பாவம், வலியைச் சொல்லவும் தெரியாமல் வீறிட்டழும். அழுகை நின்றவுடன் மீண்டும் யாராவது கொஞ்சலாகக் கிள்ளுவார்கள். மறுபடியும் அழும்.
எதிர்த்து எதையும் செய்ய முடியாத குழந்தை தூக்கிவைத்திருப்பவர் மீது சிறுநீர் கழித்துவிடும். ஒருவேளை அதுதான் அக்குழந்தை காட்டும் எதிர்ப்போ என்று கற்பனை செய்து கொள்ளலாம்.
இரண்டு மூன்று வயதுள்ள குழந்தைகளின் விரல்களுக்குப் பென்சிலையோ - பலப்பத்தையோ - சாக்பீசையோ பிடித்து எழுதும் பலம் இருக்குமா? ஆனால், பெற்றோர்கள் அவன் ஏ, பி, சி, டி எழுதவேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
"அ, ஆ, இ, ஈ' எழுத வேண்டும் என்று விரும்பமாட்டார்கள். ஏ, பி, சி, டிதான் எழுத வேண்டும் என்பார்கள். அக்குழந்தை எழுத முடியாமல் விழித்தால் எதிர்வீட்டுப் பையன் "எல்' வரை எழுதுகிறான். இவன் "சி'யைக்கூடத் தாண்டமாட்டேன் என்கிறானே என்று குறைபட்டுக் கொள்வார்கள்.
நன்றாக ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தையை - சுதந்திரமாக இருக்க வேண்டிய குழந்தையை இப்படி முடக்குகிறோமே என்று கருதமாட்டார்கள்.
மூன்று வயது குழந்தை வீட்டிலே போட்டுக் கொள்ள அவனுக்குப் பிடித்த ஆடையை அவனே பீரோவிலிருந்து கொண்டு வருவான். போட்டுக் கொள்ளட்டும் என்று விடவேண்டியதுதானே. "டேய் அது நல்லா இல்லடா' என்று அவன் கையில் இருந்து தாய் பிடுங்கிவிடுவாள். அவன் அலறி அழுவான். ஒரே போராட்டமாக இருக்கும். அந்த ஆடைதான் வேண்டுமென அடம்பிடிப்பான். தேவையில்லாத இந்த இழுபறி போராட்டம் தேவையா?
பெரியவர்களுக்குப் பிடித்த ஆடையைத் தான் அணிவிப்பார்கள். அது அழகாகத்தான் இருக்கும். ஆனால், அக் குழந்தை மகிழ்ச்சியை இழந்துவிட்டு அன்று பூராவும் சோகமாக இருக்கும்.
"முகத்தை ஏண்டா உம்முன்னு வெச்சிக்கிணு இருக்கே. சந்தோஷமா இருடா' என்ற அறிவுரை வேறு. மகிழ்ச்சி என்பது அவனுள் இருந்து வருவதல்லவா?
ஒரு குடும்பம் கோயிலுக்கருகில் காரைவிட்டு இறங்கியது. அவர்களின் குழந்தை விறுவிறுவென ஓடிப்போய் ஒரு கடையில் இருந்த கார் பொம்மையை எடுத்து வைத்துக் கொண்டது.
வாங்கும் வசதி படைத்த அந்தத் தாய் அப்புறம் வாங்கிக்கலாம் என்று சொல்லிக்கொண்டே குழந்தையின் கையிலிருந்த கார் பொம்மையை வெடுக்கெனப் பறித்து வைத்து விட்டாள். அக்குழந்தை அழுதுகொண்டே சென்றது.
குழந்தையின் கையிலிருந்து ஒரு பொருளை வெடுக்கெனப் பிடுங்குவதுகூட அந்தக் குழந்தையை அவமானப் படுத்துகிற மாதிரிதான். பறிக்காமல் பக்குவமாய் வாங்கி வைக்க வேண்டும். அப்போதுதான் பிறர் கையிலிருந்து எந்தப் பொருளையும் குழந்தையும் பறிக்காது.
குழந்தைகள் விருப்பத்திற்கேற்ப பெற்றோர் நடக்க வேண்டுமென சொல்லவில்லை. தன்னுடைய விருப்பத்தையும் - சுதந்திரத்தையும் பெற்றோர் மதிக்கிறார்கள் என்ற உணர்வை குழந்தை பெறுமாறு பெற்றோரின் அணுகுமுறை அமைய வேண்டும்.
விருப்பம், சுதந்திரம் என்பன போன்ற பெரிய பெரிய வார்த்தைகளைக் குழந்தையறியாது. ஆனால் அவற்றை உணரும். குழந்தைகள் உணர்வுகளை பெரியவர்கள் மதிக்கும்போதுதான் - பிறரின் உணர்வை மதிக்க வேண்டும் என்ற உணர்வை குழந்தை பெறும். மதிக்கப்படும்போது குழந்தையின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி! அது அலாதியானது; அழகானது.

ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா இருவரின் கார் என்ன... எவ்வளவு விலை வித்தியாசம் தெரியுமா? #OPSvsSasikala #VikatanExclusive

இப்போதைக்கு ஓபிஎஸ்-ஸும், விகேஎஸ்-ஸும்தான் (அதாங்க.. வி.கே. சசிகலா) ட்ரெண்ட்! இந்த நேரத்தில் ரஜினியின் ‘எந்திரன் 2.0’ படம் டீஸர் ரிலீஸானால்கூட நெட்டில் வைரல் ஆகாதுபோல!





சிரித்துக் கொண்டே இருக்கிறார்; பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்; எளிமையாக இருக்கிறார் என்று முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தைப் பற்றி பாஸிட்டிவ் கமென்ட்கள் வருவதுபோல், கார் விஷயத்திலும் எளிமையாகவே இருக்கிறார் ஓபிஎஸ். சாதாரண கவுன்சிலர்களெல்லாம் படா படா ஃபார்ச்சூனர், எண்டேவர் கார்களில் வரும்போது, இனோவா கிரிஸ்டாவைப் பயன்படுத்துகிறார் ஓ. பன்னீர் செல்வம்.

இந்த இனோவா, ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராக இருந்தபோது வாங்கியது. ஜெயலலிதா ஆவடிக்கு வருகிறார் என்றால், அடையாறில் இருந்தே கான்வாய் கார்கள் ஊர்வலமாக வர ஆரம்பித்துவிடும். ஓ. பன்னீர் செல்வத்தின் இனோவாவைச் சுற்றி, சொற்பமான கார்கள் மட்டுமே கான்வாயாக வர, ஆளுநரைச் சந்தித்து விட்டு வந்தார்.





அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, இதற்கு நேர்மாறு; தாறுமாறு! ஜெயலலிதா போலவே கைகூப்பி, ஜெ. போலவே சேலை உடுத்தி, ஜெ.போலவே கையசைத்து என்று முழுசாக ஜெயலலிதாவாகவே மாறிவிட்ட சசிகலாவின் நடவடிக்கைகள் நாமறிந்ததே! ஜெ. இறந்த பிறகு போயஸ் கார்டனில் ஆஃப் ஆகிக் கிடந்த அவரின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிரேடோ கார், இப்போது மீண்டும் உயிர்த்தெழுந்து ‘வ்வ்ர்ர்ரூம்’ என மெரீனா பீச் போகிறது; ஆளுநரைச் சந்தித்துவிட்டு வருகிறது; மன்னார்குடி செல்கிறது.

7 சீட்டர் காரான இதில், தனது தோழி உயிருடன் இருந்தபோது பின் பக்க சீட்டில் பவ்யமாக அமர்ந்து வந்த சசிகலா, இப்போது ஜெயலலிதா அமர்ந்த அதே முன் சீட்டில், மக்களுக்கு... ஸாரி.. தொண்டர்களுக்கு... ஸாரி... அமைச்சர்களுக்குக் கைகாட்டியபடி முழு சந்திரமுகியாகவே மாறிவிட்டார். ஜெ.வின் பொதுச் செயலாளர் பதவி, முதல்வர் பதவி, போயஸ் கார்டன், கொடநாடு என்று எல்லாம் தனக்குத்தான் என்று இருக்கும் சசிகலா வசம்தான்... ஜெ.வின் பிரேடோ காரும்!

இரவு 7.30 மணிக்கு ஜெ.வின் அதே லேண்ட்க்ரூஸர் பிரேடோவில் ஆளுநரைச் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் சசிகலா. இனிமேல் பொதுப் பிரச்சாரங்கள் மற்றும் கட்சிப் பணிகளுக்கும் (!?) இதே பிராடோதான் பலிகடா! சரி; இந்த காரின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு சின்ன ட்ரெய்லர்!

* கம்பீரம்தான் இந்த லேண்ட்க்ரூஸர் பிரேடோ காரின் ப்ளஸ். சண்டைக்குத் தயாராகும் WWF வீரனைப்போல் புஜபல பராக்கிரமசாலி போலவே இருக்கும் இந்த டிஸைன் ஜெயலலிதாவுக்கு ரொம்பவும் பிடித்துப்போய் விட்டதாம். ‘கொழுக் மொழுக்’ டிஸைனில் இருக்கும் செடான் கார்களைவிட, ரஃப் அண்ட் டஃப்பான எஸ்யூவிக்கள்தான் ஜெ.வின் ஃபேவரைட். அவரின் கம்பீரமான தோற்றத்துக்காகவே இந்த கம்பீரமான கார் செலெக்ட் செய்யப்பட்டதாம்.







* இதன் கட்டுமானம், நிச்சயம் வேறு எந்த கார்களிலும் இல்லாதது. ஹோட்டல்களில் உயர்தர சைவம்/அசைவம் எப்படியோ, அதேபோல் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது அனைத்தும் உயர்தர உலோகம். ஹம்மர் போன்ற கார்களில் இருப்பதுபோன்ற கட்டுறுதியான லேடர் சேஸி ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கிறது பிராடோ. கிட்டத்தட்ட 2990 கிலோ (கிராஸ்) எடை கொண்ட இதை வைத்து, லாரியையே நெட்டித் தள்ளும் அளவுக்கு இதன் பில்டு குவாலிட்டி அத்தனை ஸ்ட்ராங்.

* ஏற்கெனவே இந்த காரில் மிக்ஸி, கிரைண்டர் தவிர அத்தனை வசதிகளும் உண்டு. இது முதல்வரின் கார் என்பதால், எக்ஸ்ட்ராவாக புல்லட் புரூஃப் கண்ணாடியும் பாடி பேனலும் பொருத்தப்பட்டு பீரங்கிபோல் வடிவமைத்திருக்கிறார்கள். மேலும் இந்த காரில் அடிப்படைப் பாதுகாப்பு வசதிகளான ABS, டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், (மலை ஏற்றத்தில் கார் கீழே இறங்காமல் அப்படியே நிற்கும்) 7 காற்றுப் பைகள், ESP போன்றவை கொண்ட இது, 4 வீல் டிரைவ் கார். 4 வீல்களுக்கும் பவர் கொப்புளிக்கும் இந்த காரில் மலையேறுவது, சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆவது மாதிரி ரொம்ப ஈஸி.

* 3000 சிசியும், 4 சிலிண்டரும் கொண்ட காரான இதில் 171bhp பவர், 41kgm டார்க், 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ், (காரின் அடிப்பாகத்துக்கும் தரைக்கும் உண்டான இடைவெளி) 220 மிமீ. மேடு பள்ளங்கள், ஸ்பீடு பிரேக்கர்களில் கார் தட்டுவதெல்லாம்... சான்ஸே இல்லை!

* எஸ்யூவிக்கள் உயரமாக இருக்கும் என்பதால், ஏறி இறங்க வசதியாக காரின் பக்கவாட்டில் ஃபுட் கிளாடிங் இருக்கும். இது முன்னாள் முதலமைச்சர் காராச்சே! பல பவுன்சர்கள் ஏறி நின்றாலும் தாங்கும் வண்ணம் ரயிலில் இருப்பதுபோல் ஸ்ட்ராங்கான ஃபுட் கிளாடிங் இதில் இருக்கிறது. இதில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி ஏந்தி நின்று கொண்டே பயணிக்கும் வண்ணம் அகலமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஃபுட் கிளாடிங்ஸ்.

* இந்த காரின் டீசல் டேங்க் கொள்ளளவு 87 லிட்டர் . இதன் மைலேஜ், லிட்டருக்கு கிட்டத்தட்ட 3.5 முதல் 4 கி.மீதான்.

* வாயை மூடிக் கேட்கவும். இந்த காரின் ஆன்ரோடு விலை 1.25 கோடி ரூபாய். பாதுகாப்புச் செலவுகளுக்காக கூடுதலாக ஜஸ்ட் 1 கோடி ஆகியிருக்கும். ஆக மொத்தம் தோராயமாக ரெண்டே கால் கோடியைத் தொட்டிருக்கும். சரி... இந்நேரம் ஓ. பன்னீர்செல்வத்தின் இனோவா கிரிஸ்டா விலையை கூகுள் பண்ணியிருப்பீர்கள். 27 லட்சம்!

ரிசார்ட்டுக்குள் விரைந்து சென்றது ஆம்புலன்ஸ்.. அதிகரிக்கும் பதற்றம்!

vikatan.com
Golden Bay Resort,Ambulance


கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் அதிவேகமாக சென்றது. ஆம்புலன்ஸ் வருவதற்கு, 20 நிமிடங்களுக்கு முன்பாக மருத்துவக் குழுவும் சென்றது. ரிசார்ட் உள்ளே செல்ல செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இரண்டு முறை எம்.எல்.ஏக்களை சந்தித்துப் பேசினார். அவர்கள் சுதந்திரமாக உள்ளார்கள் என்றும் தெரிவித்தார். ஆனால் அவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் அங்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழு சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள எம்.எல்.ஏக்களின் உண்மை நிலை குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

படம்: ஜெயவேல்
vikatan.com

எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கும் சொகுசு விடுதிக்கு போன் செய்தால், என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
தமிழக அரசியல் தற்போது மையம் கொண்டிருப்பது கூவத்தூரில்தான். சசிகலா அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் ஓ.பி.எஸ் அணிக்குப் போய்விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறது சசிகலா குடும்பம். இதற்காக அவர்கள் எடுத்த பல அஸ்திரத்தில் ஒரு அஸ்திரம்தான், எம்.எல்.ஏ-கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டாக, நினைத்த காரியம் கைகூடும் வரை வைத்திருப்பது.



அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்கணும். அதுவும் கூப்பிட்டதும் ஓடி வரும் தூரத்தில் இருக்கணும். சென்னை சிட்டிக்குள்ளேயும் இருக்கக் கூடாது. அதே சமயம் பத்திரிகையாளர்களும் சுலபமாக எம்.எல்.ஏ-களைப் பார்த்துவிடக் கூடாது. இப்படி ஏகப்பட்ட செக் லிஸ்ட் வைத்து கடைசியில் டிக் அடித்த இடம்தான்.. கூவத்தூரில் உள்ள இந்த 'கோல்டன் பே ரிசார்ட்’. சென்னையில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும், போயஸ் கார்டனில் இருந்து சரியாக 77.5 கி.மீ தொலைவிலும் உள்ளது.

இந்த 'கோல்டன் பே’ ரிசார்டில் 34 ரூம்கள் இருப்பதாகவும், 'ஸ்பா', 'நீச்சல் குளம்' உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளதாகவும், இந்த ரிசார்டின் வலைதளம் தெரிவிக்கிறது. இங்குதான் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க - எம்.எல்.ஏ-கள் கடந்த சில நாட்களாக தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஓ.பி.எஸ் மெரினாவில் அமர்ந்த நள்ளிரவே, அனைத்து எம்.எல்.ஏ-களையும் போயஸ் இல்லத்துக்கு அழைத்தவர்கள். 'நீங்க அனைவரும் சின்ன அம்மா. முதல்வாரகும்வரை கூட்டாக இருக்கணும். ஒற்றுமையாக இருக்கணும். சின்னம்மாவுக்கு துரோகம் செய்ய நினைத்தால். அது அம்மாவுக்கு செய்யும் துரோகம்.' என எம்.எல்.ஏ-களுக்கு கிளாஸ் எடுத்துதான் இந்த ரிசார்டிற்கு அனுப்பி இருக்கிறார்கள். முதலில், எம்.எல்.ஏ-வின் உதவியாளர்களுக்கும் தடை போட்டவர்கள். அப்புறம் அவர்களை மட்டும் வைத்துக்கொள்ள அனுமதி தந்திருக்கிறார்கள். இந்த ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-கள் மட்டும் தங்கி இருக்க... இதன் அருகில் உள்ள சில ரிசார்ட்களில்தான் அமைச்சர்கள் தங்கி இருக்கிறார்கள்.

'கோல்டன் பே' ரிசார்ட்டின் ரூம் வாடகை நாலாயிரம் ரூபாயில் இருந்து ஒன்பதாயிரம் வரையிலும் உள்ளது. முதலில் சென்ற எம்.எல்.ஏ-களுக்கு விலை உயர்ந்த ரூம்கள் கொடுக்கப்பட, அதன்பின் வந்தவர்களுக்கு குறைந்த விலை ரூம்களை கொடுத்திருக்கிறார்கள். இதில் அப்செட் ஆன சில எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும்தான் அருகில் உள்ள வேறு சில இடங்களில் ரூம் எடுத்திருக்கிறார்கள். மொத்தத்தில் மகாபலிபுரம் கடற்கரையில் இருந்து கூவத்தூர் வரை பல ரிசார்ட்களிலும் தற்போது ரூம் எடுத்து தங்கி இருப்பது இந்த சசி அணியின் கரைவேட்டிகள் தானாம்.



கடந்த 10-ம் தேதி முதலே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ-கள் கருத்து தெரிவித்து அவருடன் இணைந்தார்கள். இந்த ஆதரவு நாளுக்கு நாள் அதிகாரிக்கலாம் என்று எண்ணியவர்கள். இதைத் தடுக்க சசிகலாவை எம்.எல்.ஏ-கள் மத்தியில் உரையாற்ற வைக்கலாம் என திட்டம்போட்டார்கள். அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கடந்த 11-ம் தேதி மதியம் போயஸ் இல்லத்தில் இருந்து கிளம்பி கூவத்தூர் சென்றார் சென்றார் சசிகலா. தொடர்ச்சியாக அடுத்தநாளும் அங்கு சென்றவர், 'நாங்கள் யாரையும் அடைத்து வைக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாகத்தான் உள்ளார்கள். நீங்களே பாருங்கள்.' என பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் உணர்ச்சி பொங்க பேசினார் சசி.

எம்.எல்.ஏ-க்கள் இந்த ரிசார்ட்டில் சுதந்திரமாக உலாவலாம். இதைத் தாண்டி வெளியில் சென்று சுதந்திரமாக சுற்ற முடியுமா என்பதுதான் கேள்வியே. இதற்கு இடையில், 'கோல்டன் பே' ரிசார்ட் நம்பரை பரப்பி... 'இந்த சொகுசு விடுதியின் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அவரவர் தொகுதி எம்.எல்.ஏ-வின் பெயரைச் சொல்லி, அவருடன் பேச வேண்டும் எனக் கூறி, அவர் தங்கி இருக்கும் அறைக்கு இணைப்பு கொடுக்கச் சொல்லுங்கள். இணைப்பு கிடைத்தவுடன் அவருடன் கனிவுடன் பேசுங்கள். சசிகலா மீது உள்ள கோபத்தைக் காட்ட வேண்டாம். நண்பர்களே...' என வைரலாக்கிவிட்டனர்.



நாமும் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டோம். மூன்று எம்.எல்.ஏ-கள் பெயர் சொல்லி அவர்கள் தங்கி இருந்த அறைக்கு இணைப்பைக் கொடுக்கச் சொன்னோம். இணைப்பைத் தர மறுத்தவர்கள். "சார், நீங்க எதுவாக இருந்தாலும். அவர்கள் தனிப்பட்ட நம்பரைத் தொடர்பு கொள்ளுங்கள். எங்களுக்கு எம்.எல்.ஏ-கள் பெயர் எல்லாம் தெரியாது. இங்க யார் வர்றா... யார் போறா போன்ற எந்த தகவல்களும் எங்களுக்குத் தெரியாது. இதைக் காண்காணிக்கவே கட்சிக்காரங்க சிலர் இருக்காங்க." என்றார்.

"யார் அவங்க?" என்ற கேள்விக்கும் பதில் சொல்ல மறுத்தவர்களிடம். "சரி, கடைசியாக கரூர் எம்.எல்.ஏ விஜய் பாஸ்கர் தங்கி இருக்கும் அறைக்கு லைனை கொடுங்க' என்றோம். "சார், சில முக்கிய அமைச்சர்களும், அதிகாரிகளும். எங்களுக்கு அருகில் உள்ள வேறு ரிசார்ட்டில் தங்கி இருக்கிறார்கள். அந்த ரிசார்டுக்கு போன் போடுங்க.' என போனை துண்டித்துவிட்டார். அந்த ரிசார்ட்டுக்கு பல முறை போன் செய்தும் யாருமே எடுக்கவில்லை. சரி, விஜய் பாஸ்கர் தனிப்பட்ட எண்ணுக்குக் கூப்பிட்டபோதும் அது 'சுவிட்ச் ஆப்' என்றே வந்தது. ஒட்டுமொத்த எம்.எல்.ஏ-களும் நிலையும் இதுதான்.

மொத்தத்தில் சசிகலாவுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ-களின் நிலைமைதான்... கடந்த மூன்று நாட்களாக.. தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது, விரைவில் தொடர்பு எல்லைக்குள் வருவார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

'ஆயிரம் பன்னீர்செல்வத்தை பார்த்திருக்கிறேன்'- சசிகலா பரபரப்பு பேச்சு
VIKATAN



தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ள நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா போயஸ் கார்டனில் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.



'நான் நினைத்திருந்தால் எப்போதோ முதலமைச்சர் ஆகி இருக்கலாம். ஆனால், அந்த நினைப்பு ஒரு நொடி கூட எனக்கு எழவில்லை. எம்.ஜி.ஆர் இறந்த போது அவர் இறுதி ஊர்வல வண்டியில் ஏற விடாமல் ஜெயலலிதாவைத் தடுத்து தள்ளிவிட்டபோது, அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். அரசியலை விட்டே ஜெயலலிதா விலகலாம் என்று நினைத்தார். அதை பலமுறை என்னிடம் ஜெயலலிதா கூறியுள்ளார். நான்தான் அவருக்கு ஊக்கம் கொடுத்து அரசியலில் தொடர வைத்தேன். ஒரு பன்னீர்செல்வம் அல்ல, ஆயிரம் பன்னீர் செல்வத்தை நான் பார்த்திருக்கிறேன். இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. 33 ஆண்டுகளாக நான் ஜெயலலிதாவுடன் இருந்ததால் பயமே இல்லாமல் போனது. தி.மு.க.வுடன் பன்னீர்செல்வம் மிகவும் இணக்கமாக சென்றது தவறாக தோன்றியது. அந்த காரணத்தினாலேயே நான் முதல்வராக முடிவு செய்தேன்' என்று கூறினார்.



மேலும்,’தொண்டர்கள் இருக்கும்வரை அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. அதிமுகவை பிரிக்க முடியாது. அன்று முதல் இன்று வரை பல சோதனைகளைக் கடந்துதான் வந்திருக்கிறோம். எதிரிகளை சமாளிக்கும் திறன் நம்மிடம் உள்ளது’ என்று பேசினார்.

படங்கள் : காளிமுத்து




வீட்டுக்கு போனா... என் ரஞ்சிதம் இல்லையே’ - பிரிவுத் துயரில் தோழர் நல்லக்கண்ணு!
vikatan.com




இந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு. இந்திய அளவில் அரசியல் தளத்தில் இயங்குபவர்களில் நல்லக்கண்ணுவைத் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். மக்களுக்கு எதிரானவற்றிற்கு எதிரான போராட்டங்களில், காத்திரமாகவும் உறுதியாகவும் போராடும் இவர், நட்போடு பழகுவதற்கு இனிமையானவர். கட்சிப் பணிக்காக கன்னியாக்குமரிக்கு வந்திருந்த தோழர் நல்லகண்ணுவைச் சந்தித்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த அவரது மனைவி ரஞ்சிதம் அம்மாளின் பிரிவு அவரை எந்தளவுக்கு உருக்குகிறது என்பதை கண்களைத் தளர்த்தியபடி பகிர்ந்துகொண்டார்.

"என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் பாத்தோம். ஆனாலும் காப்பாத்த முடியல. மாசங்கள் உருண்டோடுனாலும் அவளோட இழப்பை என்னால ஜீரணிக்க முடியல. போராட்டம், பொதுக்கூட்டம்னு என் உடல் எங்கெங்கயோ அலஞ்சுட்டு இருந்தாலும், மனசு அவளை நினைச்சுட்டேதான் இருக்கு. அந்த வேதனையைச் சுமந்துட்டேதான் திரியுறேன்.

என்னை, என்னைவிட முழுசா புரிஞ்சிகிட்டவ என் மனைவி. என் வாழ்க்கையில எல்லா வகையிலும் அவளோட பங்களிப்பு இருந்துச்சு. அவ அப்பாவும் கம்யூனிஸ்ட் கட்சிகாரர்தான். அதனால என்னை ஏத்துக்கிறது அவளுக்கு சுலபமா இருந்திச்சி. டீச்சரா வேலை பாத்தா. காசி பாரதி, ஆண்டாள்னு எங்களோட ரெண்டு பொம்பளப் புள்ளைகள வளர்த்து படிக்க வெச்சது, ஆளாக்குனது அவங்களோட எல்லா தேவைகளையும் என்னை எதிர்பார்க்காம அவளே செஞ்சிருவா.

அரசியல் வாழ்க்கை, போராட்டம், காசு பணம் சேர்க்கத் துடிக்காத மனசுனு என் போக்குக்கு என்னை விட்டவ என் மனைவி. கட்சி வேலைகள்ல திரிஞ்சிட்டு வீட்டுக்குப் போகும்போது, கூடடைஞ்ச திருப்தி கிடைக்குற விதமா அந்த வீட்டை எனக்கானதா வெச்சிருப்பா. இப்போ வீட்டுக்குப் போனா, அவ இல்லாத அந்த வெறுமையும் தனிமையும் ரொம்ப கொல்லுது. தாங்கவே முடியாம வருது. சுத்தி எத்தனையோ பேர் இருந்தாலும், எனக்குனு யாரும் இல்லைங்கிறதை உணரவெச்சிட்டே இருக்கு அவளோட பிரிவு.

எந்த ராத்திரி வீட்டைக் விட்டுக் கிளம்புவேன், எந்த ராத்திரி வீடு திரும்புவேன்னு தெரியாத ஒரு வாழ்க்கை என்னோடது. உண்ணாவிரதம் இருக்கக் கெளம்புனாலும், ஜெயில்ல இருக்க வேண்டி வந்தாலும் ஒரு வார்த்தை வருத்தமாவோ, மறுப்பாவோ சொல்லாம அனுப்பிவைப்பா. என் புள்ளைங்க, 'அப்பா உங்களுக்கு வயசாயிருச்சு... அரசியல் வேலைகளையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கோங்கங்க'னு சொன்னப்போகூட, என் மனைவி அப்படி ஒருநாளும் எங்கிட்ட சொன்னதே கிடையாது. ஏன்னா, கட்சிப் பணிகள் இல்லாம என்னால இருக்க முடியாதுனு அவளுக்குத் தெரியும். ஆனா, 'நான் இல்லாமயும் உங்களால இருக்க முடியாது'ங்கிறதை இப்படிப் பிரிவுல உணர்த்திட்டுப் போயிட்டா.



எங்க கிளம்பினாலும், 'போய் சேந்துட்டீங்களா?'னு ஒரு போன் பண்ணுவா. 'சாப்புட்டீங்களா?'னு கேட்பா. 'எங்க இருக்கீங்க?'னு ஒரு போன் வரும். இப்போ எதுவுமே இல்ல. கண்ண மூடுனா முழுக்க ரஞ்சிதம் நெனப்பாதான் இருக்கு.

முன்னாடி நான் அசைவம் சாப்பிடுவேன். இப்ப அஞ்சு வருசமா சைவம்தான். அவ வைக்கிற மீன் குழம்புல சோத்தை ஒரு பிடி பிடிப்பேன். அவ வைக்கிற ரசம் ரொம்ப நல்லா இருக்கும். எனக்குப் பிடிக்கும்னு அடிக்கடி ராவா லட்டு செய்வா. 'என்னை நீ எதிர்பார்த்து இருக்கக் கூடாது, உனக்கு பசிச்சா சாப்பிடு'னு என் கல்யாணத்தை ஒட்டியே சொல்லிட்டேன். அதனால நாங்க சேர்ந்து சாப்பிடுவதே குறைவுதான். ஆனாலும் நான் சாப்பிடும்போது கூட உட்கார்ந்து பேசிட்டு இருப்பா.

ஒரு சுவாரசியம் என்னனா நான் ஜெயில்ல இருந்து வந்த பிறகுதான் எங்களுக்கு கல்யாணமே நடந்திச்சி. புதுமணத் தம்பதியா நாங்க பேசிக்கிட்ட விஷயங்கள்லாம், என்னோட ஜெயில் அனுபவங்களாதான் இருந்துச்சு. நிறைய கல்யாணத்தை தலைமை தாங்கி நடத்திருக்கேன். அப்போவெல்லாம், 'மனைவியை அதிகாரமா மிரட்டக் கூடாது. அன்பா இருக்கணும், சமமா நடத்தணும்'னு சொல்லித்தான் ஆசிர்வதிப்பேன். என் வாழ்க்கையில ரஞ்சிதத்துக்கு அப்படி ஒரு சமத்துவத்தை நான் கொடுத்தாலும், அவ எனக்காக ரொம்ப விட்டுக்கொடுத்து போயிருக்கா. என்னைத் தேடி வர்றவங்களைப் பத்தி அவளுக்குத் தெரியும். என் மனசு நினைக்கிற மாதிரியே அவங்களை உபசரிப்பா.

ரஞ்சிதம் நிறைய புத்தகங்க படிப்பா, பேப்பர் படிப்பா. ஜெயகாந்தன் சிறுகதைகள் பத்தி பேசுவா. நான் எதையாவது படிக்காம விட்டுட்டாலும், 'இதப் படிக்கலையா நீங்க?'னு கேட்பா. திடீர்னு எதாவது செய்தியைக் காட்டி, 'இதப் பாத்தியளா?'னு கேட்பா. 'இல்லையே...'னு சொன்னா, 'இதக்கூடப் பாக்காம என்ன படிக்கிய?'னு கேட்பா. இப்போவெல்லாம் பேப்பர், புத்தகம் படிக்கும்போது, 'எதையாச்சும் படிக்காம விட்டுட்டா அதை எடுத்துக் காட்ட அவ இல்லையே'னு ரஞ்சிதத்தோட நினைவுகள் நான் படிக்கிற ஒவ்வொரு எழுத்துலயும் பின்னிக்குது.

நான் சம்பாதிச்சுது என்னனு எல்லாருக்கும் தெரியும். வெளியே போகும்போது செலவுக்கு அவகிட்டதான் காசு வாங்கிட்டுப் போவேன். கொஞ்சம் நிலம் இருந்து அதுல அரிசி வரும். மத்தபடி 'அது இல்ல இது இல்ல'னு எதுவும் எங்கிட்ட சொல்லாம, அவளே சமாளிச்சு குடும்பத்தக் கொண்டு போனா. என் பிறந்தநாளுக்கு துணிமணி எடுத்துக் கொடுப்பா. அவளுக்கு, நான் வீட்டுல இருந்தாலே பரிசுதான்னு சொல்லுவா. எப்பவாச்சும் டெல்லிக்குப் போனா அவளுக்கு சேலை எடுத்துட்டு வருவேன். ரொம்ப சந்தோசப்படுவா. வெளிய போயிட்டு நேரடியா வீட்டுக்கு வர்றதா இருந்தா எதாவது பண்டம் வாங்கிட்டு வந்து கொடுப்பேன். எங்க அப்பா, என் கூடப் பொறந்தவங்களுக்கு எல்லாம் அவங்கவங்க பேருல வீட்டை எழுதிவெச்சாரு. என் பங்கு வீட்டை மட்டும் என் மனைவி பேருலதான் எழுதி வெச்சிருக்காரு. பொது வாழ்க்கையில இருக்கேன், வீட்டையும் வித்து செலவு பண்ணிடுவேனோனு பயம் அவருக்கு என்கிறார் நல்லக்கண்ணு. சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு தொடர்ந்தார்.

ரஞ்சிதம் கிறிஸ்டியன். அதனால பைபிள் கதைகளை அடிக்கடி சொல்லுவா. எல்லார்கிட்டயும் அன்பா இருக்கணும், எல்லாரையும் சமமா நடத்தணும்னு சொல்லுவா. 'நான் செத்துப் போயிட்டேன்னா, நம்ம சொந்த ஊருலதான் அடக்கம் பண்ணனும்னு'னு சொன்னா. அவ ஆசைப்படியே செய்தேன். அவ இறக்குறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே, அவ இனி நாள்கணக்குலதான் என்கூட இருக்கப்போறானு தெரிஞ்சுபோச்சு. அந்த நாட்கள்ல ஆஸ்பத்திரியும் வீடுமாதான் இருந்தேன். அவ இறந்த அன்னைக்கு, என்னுல இருந்து பாதி உசுரு கழண்டுபோன மாதிரி இருந்துச்சு. இப்பக்கூட அப்படியேதான் இருக்கேன்.

வயசான காலத்துல, பொண்டாட்டி போனதுக்கு அப்புறம் புருஷன் இருக்குறது கொடுமையினு சொல்லுவாங்க. இப்பதான் எனக்கும் புரியுது இந்தப் பிரிவு எவ்வளவு துயரமானதுனு. என் மனசு அவளுக்குத் தெரியும்னாலும், 'எனக்கு எல்லாமே நீதான்'ங்கிறதை இருக்கும்போது அவகிட்ட எத்தனை தடவை வார்த்தையில சொல்லியிருக்கேன்னு தெரியல. வருசா வருசம் காதலர் தினக் கொண்டாட்டங்களை செய்தியாதான் பேப்பர்ல படிப்பேன். இந்த வருஷம் படிக்கும்போது, ரஞ்சிதம் முகம்தான் வந்துபோகுது. அவ நெனப்பை என்ன செய்ய?!''

இளமை.நெட்: காதலர் தினத்துக்கு இளையராஜாவின் பரிசு!

சைபர் சிம்மன்

இசைப் பிரியர்களையும், இளையராஜா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியாக, இளையராஜா இசைக்கான பிரத்யேகச் செயலி அறிமுகம் ஆகியுள்ளது. 'மேஸ்ட்ரோஸ் மியூசிக்' எனும் இந்தச் செயலி இளையராஜாவின் அதிகாரபூர்வச் செயலி என்பதுதான் இன்னும் விசேஷமானது. இந்தப் பிரத்யேகச் செயலிக்கான அறிவிப்பை இளையராஜாவே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

காதலர் தினத்துக்கு இதைவிடச் சிறந்த பரிசு வேறு என்ன வேண்டும்..?

இசைஞானி, ராகதேவன், மேஸ்ட்ரோ எனப் பலவாறாகப் போற்றப்படும் இளையராஜாவின் இசை மீது ரசிகர்களுக்கு இருக்கும் அளவில்லா ஈடுபாடு பற்றி அனைவரும் அறிந்ததுதான். ராஜாவின் இசை ஊக்கமளிக்கும் தாலாட்டாக, சோகங்களிலிருந்து ஆறுதல் அளிக்கும் மருந்தாக, உள்ளத்தை உற்சாகத்தில் ஆழ்த்தும் உத்வேக இசையாக எனப் பலவிதங்களில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. மணிக்கணக்கில் இளையராஜா பாடல்களைக் கேட்டு மெய் மறந்திருக்கும் ரசிகர்கள் அநேகம் பேர்.

யூடியூப் தளத்தில் அதிகம் கேட்டுப் பகிரப்படும் பாடல்களாக இளையராஜா இசையமைத்த பாடல்கள் அமைந்துள்ளன. ‘சவுண்ட் கிளவுட்' உள்ளிட்ட தளங்களிலும் அவரது பாடல்களைக் கேட்டு ரசிக்கலாம். ஸ்மார்ட்போனில் கேட்டு ரசிக்கும் வகையில் இளையராஜா பாடல்களுக்காக என்று பல செயலிகளும் இருக்கின்றன.

இந்நிலையில், இளையராஜா தனது ரசிர்களுக்காக என்று பிரத்யேகச் செயலியை உருவாக்கி அறிமுகம் செய்திருக்கிறார். "என்னுடைய முதல் அதிகாரபூர்வச் செயலிக்கு வரவேற்கிறேன்” என்று திங்கள்கிழமை அன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இளையராஜா, அறிவித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார். "இனி உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்கள், இசைத்திருட்டு இல்லாமல் எனது இசையை உள்ளங்கையில் அணுகலாம்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தச் செயலி மூலம் த‌ன்னுடன் தொடர்புகொள்ளலாம் என்றும் இசை உருவாக்கம் பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியான சில மணி நேரங்களில், ரசிகர்கள் உற்சாகமாகி ஆயிரக்கணக்கில் ‘லைக்' இட்டிருந்தனர். எண்ணற்றவர்கள் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொள்ளவும் செய்தனர். பல ரசிகர்கள், இது போன்ற ஒரு செயலியைத்தான் எதிர்பார்த்திருந்தோம் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தனர்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கான வடிவங்களில் வெளியாகியுள்ள இந்தச் செயலி தொடர்பானத் தகவல்களை அளிக்கத் தனி இணையதளமும் (http://www.maestrosmusic.net/) உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ஆண்ட்ராய்டு போனுக்கான செயலியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இளையராஜா ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்கும் வகையில் செயலி அமைந்துள்ளது. எளிமையான வடிவமைப்பு கொண்டுள்ள செயலியில் ராஜாவின் இசையைப் பல்வேறு தலைப்புகளின் கீழ் அணுக முடிகிறது. இந்தச் செயலியை முழுமையாகப் பயன்படுத்த இதில் உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஃபேஸ்புக் அல்லது கூகுள் கணக்கு மூலம் உள்நுழைந்து உறுப்பினராகலாம். அல்லது மொபைல் எண் மூலம் உறுப்பினராகலாம்.
இளையராஜா இசையில் உருவான தனிப் பாடல்கள், கர்நாடக இசை, பக்தி இசை, நாட்டுப்புற இசை, வாத்திய இசை, காதல், துடிப்பான பாடல்கள், சோகப் பாடல்கள், மேற்கத்திய பாணி மற்றும் மெல்லிசைப் பாடல்கள் ஆகிய தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் தேவையான பகுதியை கிளிக் செய்து பாடல்களைக் கேட்கலாம். பாடல்களைக் கேட்கவும், தரவிறக்கம் செய்யவும் வசதி இருக்கிறது. பாடல்களை நண்பர்களுடன் பகிரவும் முடியும்.

இவை தவிர, மேஸ்ட்ரோஸ் வழங்குவது, முன்னணியில் உள்ள பாடல்கள், வாரத்தின் சிறந்த பாடல், மாதத்தின் இனிமையான குரல் ஆகிய தலைப்புகளின் கீழும் தேர்வுகள் இருக்கின்றன. செயலி அறிமுகமான இந்த நேரத்தில், மாதத்தின் இனிய குரலாக சின்னக்குயில் சித்ரா ஈர்க்கிறார். வாரத்தின் சிறந்த பாடலாக 'நான் மகான் அல்ல' படத்தின் 'மாலை சூடும் வேளை’ பாடல் அமைந்துள்ளது. மேலும் கமல் விருப்பங்கள், தனுஷ் விருப்பங்கள் உள்ளிட்ட பிரபலமான தேர்வுகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

இளையராஜா இசையமைத்த படங்களிலிருந்து எளிதாகப் பாடல்களைத் தேர்வு செய்ய விரும்பும் ரசிகர்கள் கவலைப்படவே வேண்டாம். இதற்காக என்றே ‘நூல‌கம்' பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அவரது இசையில் உருவான படங்கள் அனைத்தும் அகர வரிசைப்படி வரவேற்கின்றன. விரும்பிய படத்தைத் தேர்வு செய்து அதில் உள்ள பாடல்களைக் கேட்டு மகிழலாம். திரைப்படங்களின் பாடல் ஆல்பத்தின் முகப்புப் படங்கள் திரை நினைவுகளில் மூழ்க வைக்கின்றன.
முகப்புப் பக்கத்தின் மேல் பகுதியிலேயே இளையராஜாவின் இணைய வானொலியையும் கேட்டு ரசிக்கலாம். பாடல்களைக் குறிப்பிட்டுத் தேடும் வசதியும் இருக்கிறது. இதில் விருப்பத் தேர்வுகளைக் கொண்ட பாடல்கள் பட்டியலையும் உருவாக்கிக்கொள்ளலாம்.

தீவிர இளையராஜா ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தக்கூடிய வ‌கையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் செயலி நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதுடன், ரசிகர்கள் உற்சாகமான‌ கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். பலரும் இந்தச் செயலிக்காக நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

செயலியின் வடிவமைப்பு பரவலாகப் பாராட்டப்பட்டாலும், ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பு தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். இன்னும் பிரத்யேகமான தேடல் வசதி தேவை என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அறிவிக்கை வசதி தேவை என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். வேற்று மொழிப் பாடல்களையும் எளிதாக அணுகும் வசதி தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மொத்த‌த்தில் இளையராஜா ரசிகர்களை இந்தச் செயலி உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தச் செயலியில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு மேலும் மெருகேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: 
http://www.maestrosmusic.net/
http://bit.ly/2jXHQSi

NEWS TODAY 17.08.2026