Sunday, March 12, 2017


''90 வயசுதான்... சாதிக்க வேண்டியது இன்னும் நிறையதான்!'' - நெகிழ்கிறார் டாக்டர் சாந்தா #CelebrateWomen #VikatanExclusive

அவர் முகத்தில் இருக்கும் முதுமைக் கோடுகள் ஒவ்வொன்றும், புற்றுநோய் மருத்துவ வரலாற்றின் முக்கிய அத்தியாயங்கள்!




புற்றுநோய் மருத்துவத் துறைக்குத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர், அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா. 'மகசேசே' விருது, 'பத்மஸ்ரீ', 'பத்ம பூஷண்', 'பத்ம விபூஷண்' என இந்தியாவின் உயரிய பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர். நம் சம காலத்தின் சாதனைப் பெண்மணிகளில் முக்கியமான முன்னோடி.

"90 வயசுதான் ஆகுது... சாதிக்க வேண்டியது இன்னும் நிறையதான் இருக்கு" என்று எளிமையான அணுகுமுறையுடனும், புன்னகையுடனும் பேச ஆரம்பித்தார் டாக்டர் சாந்தா.

''பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். ஓலைக் கூரையால் வேயப்பட்ட, அடிப்படை வசதிகள்கூட இல்லாத, மயிலாப்பூர், தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில படிச்சேன். அப்போ எல்லோரையும்போல, எனக்கும் சுதந்திர உணர்வு நிறையவே இருந்துச்சு. எங்க பள்ளியின் முதல்வர் செல்லம். அவங்ககிட்டதான் நிறைய நல் ஒழுக்கங்களைக் கத்துக்கிட்டேன். அந்தக் காலகட்டத்துல பெண்களுக்கு கல்வி கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம். கல்வி கற்ற பெண்கள் பலரும் அதை பயன்படுத்திக்காம, கல்யாணம், குடும்பம், குழந்தைகள்னு இருந்துட்டாங்க. அதனால பெண்கள் படிச்ச படிப்புக்கு அர்த்தம் இல்லாமப் போயிடுச்சேன்னு, அப்போ நான் பல நாட்கள் வேதனைப்பட்டதுண்டு. அப்போதான் தீர்க்கமான ஒரு முடிவெடுத்தேன்" என மருத்துவராக ஆவதற்குத் தன்னை தயார்படுத்திக்கொண்ட தருணத்தை நினைவுகூர்கிறார்.

"நாம படிச்சு மக்களுக்கு சேவை செய்யணும், இந்தப் பிறவியில் ஆக்கப்பூர்வமான சில காரியங்களைச் செய்யணும் என்ற உறுதி வந்தது. டாக்டராகணும்னு முடிவெடுத்தேன். சென்னை மருத்துவக் கல்லூரியில படிச்சு, 1949-ல் டாக்டர் பட்டம் வாங்கினேன். அடுத்து, சென்னை எழும்பூர், பெண்கள், குழந்தைகள் நல மருத்துவக் கல்லூரியில பி.ஜி.ஓ மற்றும் எம்.டினு ரெண்டு முதுநிலைப் பட்டங்கள் வாங்கினேன். பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமாக தேர்வுசெய்யப்பட்டு, அதே மருத்துவமனையில் சில காலம் மருத்துவராகப் பணிபுரிந்தேன்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மா பல கஷ்டமான சூழ்நிலைகளைக் கடந்து 'விமன்'ஸ் இந்தியன் அசோஸியேஷன் கேன்சர் ரிலீஃப் பண்ட்' வாயிலாக நிதி திரட்டி, அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டை ஆரம்பிச்சாங்க. அப்போ அமெரிக்காவுல இருந்த அவரது மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை வரவழைச்சு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் தலைமைப் பொறுப்பை கவனிக்க வெச்சதோடு, புதிதாக மருத்துவர்கள் வேணும்னு சொல்லியிருந்தாங்க. அந்த 1955-ம் ஆண்டுதான் இந்த நிறுவனத்துல நானும் ஒரு அங்கமாகச் சேர்ந்தேன். அப்போ டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, நான், ரெண்டு செவிலியர்கள், ஒரு டெக்னீஷியன் உள்ளிட்ட 10 பேர்தான் வேலை செஞ்சோம். நோயாளிகளுக்கு முத்துலட்சுமி அம்மா வீட்டுல இருந்துதான் சாப்பாடு வரும்.

அந்தக் காலகட்டத்துல, கேன்சரைக் குணப்படுத்தவே முடியாது, இந்நோய் வந்தவங்க இறந்து போயிடுவாங்கங்கிற மாதிரியான அச்சம் மக்கள்கிட்ட இருந்துச்சு. அதையெல்லாம் போக்கி, இந்நோயைக் குணப்படுத்தி, கேன்சர் நோயாளிகள் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கழிக்க முடியும்னு நிரூபித்துக் காட்டினோம். அதுக்காக அப்போ நாங்க எடுத்துக்கிட்ட முயற்சிகளும், கஷ்டங்களும் ரொம்பவே அதிகம். இப்போ மருத்துவமனை, ஆராய்ச்சியகம், கல்லூரி என அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் விருட்சமா வளர்ந்திருக்கு. ஏழைகளுக்கு இலவச மருத்துவம் என்ற எங்க மருத்துவமனையின் நோக்கத்தோட, அரை நூற்றாண்டுக்கும் மேலாக புற்றுநோயாளிகளை குணப்படுத்திட்டு வர்றோம்'' எனும் டாக்டர் சாந்தா, 62 வருடங்களாக இம்மருத்துவமனையில் தன்னை அர்ப்பணித்து வருகிறார்.



"1984-ல் எனக்கு கிடைச்ச அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் தலைமைப் பொறுப்பை, அனைத்து ஊழியர்களின் ஒத்துழைப்போட இன்னைக்கு வரைக்கும் கண்ணும் கருத்துமா கவனுச்சுட்டு வர்றேன். என்னோட 62 வருடப் பங்களிப்பு என்பது சிறியதுதான். நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாள்ல இருந்து இப்போ வரைக்கும் இங்க வேலை செய்த, வேலை செய்துட்டு இருக்குற அனைவரின் கூட்டு முயற்சிதான் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் காரணம். அதனால, இந்த சாதனைக்கு என்னைக் காரணமா யார் சொன்னாலும் ஏத்துக்கவே மாட்டேன். தனி ஒருவர் இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணமா இருக்குறது என்பது, எனக்குத் தெரிஞ்சு சாத்தியமில்லை. நானும் ஒரு ஊழியர்தான். என்னைப் போல இங்க நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தன்னலம் பார்க்காம, மருத்துவம்ங்கிற வார்த்தைக்கு உண்மையான பொருள்படும் படியாக சேவை செய்றாங்க. அந்த சேவைக்குதான் மக்கள் இந்த நிறுவனத்தை மதிக்குறாங்க'' என்றவர்....

''நாங்க நிறுவனம் தொடங்கினப்போ புற்றுநோய் மரணங்களைத் தடுக்கிறது சவாலாத்தான் இருந்தது. இப்போ புற்றுநோய் பாதிப்புள்ள 65 சதவிகிதக் குழந்தைகள் உள்ளிட்ட பெரியவர்கள் பெரும்பாலானோர் முழுமையா குணமடைஞ்சு போறாங்க. மேலும், இப்போ புற்றுநோயையும் மற்றுமொரு நோயா அச்சமின்றி எதிர்கொண்டு, லட்சக்கணக்கானோர் முறையான சிகிச்சையைப் பெற்று, வாழ்க்கையை இனிதே கழிக்குறதைப் பார்த்து மகிழ்ச்சியடைஞ்சுட்டு இருக்கேன்.

அதே சமயம், வேலைப்பளுவால் உடல் நிலையைக் கவனிச்சுக்காம, இயற்கை உணவுகளைத் தவிர்த்து, துரித உணவுகள் பக்கம் திரும்பி பலரும் இன்னைக்கு புற்றுநோய்க்கு ஆட்படுவதை நினைச்சும், குடும்பத்தைக் கவனிச்சுட்டு பெண்கள் பலரும் தங்களோட உடல்நிலைக்குப் போதிய முக்கியத்துவம் கொடுக்காம உடல்நிலைப் பாதிப்புகளுக்கு உள்ளாகுறதை நினைச்சும் தினம் தினம் வருத்தப்படுறேன். அதனால எல்லோரும் தங்களோட உணவு, உடல்நிலை மேல போதிய அக்கறை செலுத்தணும். புற்றுநோய் உள்ளிட்ட எந்த நோயையும் வரவிடாமலும், வந்தால் ஆரம்பக் கட்டத்துலயே அதை குணப்படுத்தியும் மகிழ்ச்சியா வாழணும் என்பதே என்னோட ஆசை" என்பவர், வயோதிகத்திலும் இளமைத் துடிப்புடன் வேலை செய்யும் ரகசியத்தைக் கேட்டதும் புன்னகைக்கிறார்.

"நாம நினைச்சதுல எவ்வளவோ விஷயங்களைச் செய்ய முடியலையே, இன்னும் செய்யவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கேன்னுதான் நினைச்சுட்டு இருக்கேன். எல்லாம் கடவுள் அருள். என்னை எவ்ளோ நாள் இந்த பூமியில் மக்களுக்குச் சேவை செய்யணும்னு கடவுள் பணிக்கிறாரோ, அதுவரைக்கும் என்னோட மருத்துவச் சேவை தடையின்றி தொடரும். எனக்குப் பிறகும், இந்த இன்ஸ்டிட்யூட்டை இன்னொருத்தர் தலைமை ஏற்று சிறப்பா செய்யத்தான் போறாங்க. அதனால இந்த நிறுவனத்தின் நோக்கப்படி, இனி வரும் எல்லாக் காலங்கள்லயும் எங்கள் பணி தொடரும்!"

அவர் முகத்தில் இருக்கும் முதுமைக் கோடுகள் ஒவ்வொன்றும், புற்றுநோய் மருத்துவ வரலாற்றின் முக்கிய அத்தியாயங்கள்!

ஜியோ, வோடஃபோன், ஏர்டெல்... டேட்டா ரேஸில் முந்துவது யார்? #TariffComparison #VikatanExclusive
vikatan

பெரிய ஏற்ற இறக்கங்கள் ஏதும் இல்லாமல் இருந்த இந்திய டெலிகாம் மார்க்கெட்டில் கடந்த வருடம் பெரும் அதிர்வையே ஏற்படுத்திவிட்டது ஜியோ. முதல் மூன்று மாதம் இலவச வாய்ஸ்கால், அன்லிமிடெட் டேட்டா என சலுகைகளை அள்ளிவீச தடதடவென உயர்ந்தனர் ஜியோ வாடிக்கையாளர்கள். இதை சமாளிக்க ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட நிறுவனங்கள் புதுப்புது கட்டண விவரங்களை அறிவித்தனர். ஜியோவும் தொடர்ந்து வாடிக்கையாளர்களை சம்பாதிக்க, தனது 'வெல்கம் ஆஃபரை' ஹேப்பி நியூ இயர் ஆஃபர் என மாற்றி மார்ச் 31 வரை தனது இலவச சேவைகளை நீட்டித்தது. இதனைத் தொடர்ந்து 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற இலக்கையும் தொட்டது. மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு ஜியோவின் இலவச சேவைகள் நீட்டிக்கப்படுமா அல்லது கட்டண சேவைகள் துவங்குமா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ ப்ரைம் சேவையைப் பற்றி அறிவித்தார். தற்போது ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்களும் புதிய கட்டண விவரங்களை அறிவித்துள்ளன. இவற்றில் எது நமக்கு லாபம்?



ஜியோ ப்ரைம் சேவையானது, 99 ரூபாய் பணம் செலுத்தி இந்த மாத இறுதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என முகேஷ் அம்பானி அறிவித்திருந்தார். அத்துடன் தற்போது இலவசமாக கிடைக்கும் ஹேப்பி நியூ இயர் ஆஃபரைத் தொடர்ந்து பெற, மாதந்தோறும் 303 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்தார்.

இதன்படி ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ஜியோ ப்ரைம் உறுப்பினராக 99 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பின்பு நீங்கள் ப்ரைம் உறுப்பினராக மாறியவுடன் 28 நாட்களுக்கு ஒருமுறை 303 ரூபாய்க்கு கட்டணம் செலுத்த வேண்டும். ப்ரைம் உறுப்பினர் மற்றும் 303 ரூபாய் கட்டணம் செலுத்துவதன் மூலம் 28 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 1 GBடேட்டா வீதம் 28 GB 4Gடேட்டா, இலவச வாய்ஸ்கால், இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை கிடைக்கும். ஜியோவில் அன்லிமிடெட் டேட்டா என்றாலும் கூட, ஒரு நாளைக்கு 1 GB டேட்டா மட்டும்தான் 4G டேட்டா. அதன்பிறகு இணைய வேகம் 128 Kbps ஆகக் குறைந்துவிடும்.

ப்ரைம் உறுப்பினராக (ஒரே ஒரு முறை மட்டும்) - ரூ.99

பிறகு 28 நாட்களுக்கு - ரூ. 303 (அன்லிமிடெட் டேட்டா, இலவச வாய்ஸ்கால், இலவச எஸ்.எம்.எஸ், இலவச ஜியோ சேவைகள்)
வேலிடிட்டி 28 நாட்கள்தான் என்பதால், ஒரு வருடத்துக்கு 13 முறை ரீசார்ஜ் செய்வீர்கள். ஒரு வருடத்திற்கு மொத்த தொகை - ரூ. 4038

ப்ரைம் உறுப்பினராக 99 ரூபாய் கட்டணம் செலுத்தி நீங்கள் பதிவு செய்யவில்லை என்றாலும் கூட, நீங்கள் ஜியோ சேவைகளை அனுபவிக்க முடியும். அதாவது நீங்கள் ப்ரைம் உறுப்பினராக பதிவு செய்யாமல், 303 ரூபாய் செலுத்தினால் உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா கிடையாது. 28 நாட்களுக்கு 2.5 GB டேட்டா மட்டுமே! அதே சமயம் இலவச வாய்ஸ்கால், இலவச எஸ்.எம்.எஸ் ஆப்ஷன்கள் உங்களுக்கும் உண்டு.

ப்ரைம் உறுப்பினர் இல்லாமல் 28 நாட்களுக்கு - ரூ. 303 (2.5 GB டேட்டா. இலவச வாய்ஸ்கால், இலவச எஸ்.எம்.எஸ், இலவச ஜியோ சேவைகள்)

ஒரு வருடத்திற்கு - ரூ. 3939

இவை இரண்டும் போக 28 நாட்கள் வேலிடிட்டிக்கு ரூ.499 திட்டமும் உண்டு. இதன்படி 4G டேட்டாவின் அளவு இருமடங்காக வழங்கப்படும். இத்துடன் மார்ச் 31-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற ஒரு சலுகையையும் அறிவித்துள்ளது ஜியோ. இதன்படி இந்த மாத இறுதிக்குள் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 5 GB மற்றும் 499 ரூபாய் அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால் 10 GB-யும் 4G டேட்டா கூடுதலாகக் கிடைக்கும்.

ஜியோ திட்டங்களை நீங்கள் கவனித்தாலே ஒன்று புரியும். உங்களுடைய ஆசையை எளிதாகத் தூண்டும்படிதான் இருக்கிறது இவை. உதாரணமாக 303 ரூபாய்க்கு ப்ரைம் உறுப்பினருக்கு கிடைக்கும் சலுகையையும், அதே 303 ரூபாய்க்கு ப்ரைம் உறுப்பினர் அல்லாதவருக்கு கிடைக்கும் டேட்டா அளவையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டையும் ஒப்பிட்டு நிச்சயம் ப்ரைம் உறுப்பினர் ஆகிவிடுவீர்கள். ஜியோவின் முதல் இலக்கு அதுதான்.

அடுத்தது 303 ரூபாய் மற்றும் 499 ரூபாய் திட்டங்கள். 303 ரூபாய் உடன் கூடுதலாக 196 ரூபாய் செலுத்தினால், உங்களுக்கு மேலும் 28 GB-க்கு 4G டேட்டா கிடைக்கும். அதேபோல மார்ச் 31-க்குள் ரீசார்ஜ் செய்தால் 10 GB-க்கு 4G டேட்டா கிடைக்கும். இந்த இரண்டையும் ஒப்பிட்டு பலர் ரூ. 499 ஆப்ஷனை தேர்வு செய்வார்கள். இது இரண்டாவது இலக்கு.

ஜியோவை சமாளிக்கும் வகையில் வோடஃபோன் நிறுவனமும் புதிய ஆஃபர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ரூ.346-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு தினமும் 1GB அளவுக்கு 3G / 4G டேட்டாவுடன், அன்லிமிடெட் வாய்ஸ்கால் வசதியும் கிடைக்கும். அதுவும் முதல்முறை வோடஃபோன் பயன்படுத்துபவர் என்றால் இதே சலுகைகள் இருமடங்காக கிடைக்கும். அதாவது 56 GB டேட்டா, 56 நாட்களுக்கு கிடைக்கும். ஒருமுறை நீங்கள் 346 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துவிட்டால், இதே வசதியை அடுத்த ஒரு வருடத்திற்கு நீங்கள் பெறலாம். இதன்படி பார்த்தால் வருடத்திற்கு ரூ. 4,498.


And one more Super Surprise : On First Recharge Users will get Double Data (56GB) + UL Free Calls and Double Validity (56Days) #Vodafonehttps://t.co/797OQVJf3v— SANJAY BAFNA (@sanjaybafna) March 3, 2017

அடுத்து ஏர்டெல் பக்கம் வருவோம். ஏர்டெல் நிறுவனம் ரூ.145 மற்றும் ரூ.349 ஆகிய விலையில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலமாக 28 நாட்களுக்கு, நாளொன்றுக்கு 1 GB வீதம் 28 GB-க்கு 4G டேட்டா கிடைக்கும். ஒரு நாளைக்கு 1 GB என்றாலும் அனைத்தையும் நாம் பயன்படுத்த முடியாது. காரணம் இதில் 500 MB டேட்டாவை பகல் நேரத்திலும், மீதி 500 MB டேட்டாவை அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள்ளும்தான் பயன்படுத்த முடியும். இத்துடன் எல்லா நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் இலவசம். ஒரு வருடத்திற்கு = ரூ.4,537

இதில் ஏர்டெல் நிறுவனத்தின் ப்ளானில்தான் சிக்கல் இருக்கிறது. காரணம் 1 GB டேட்டாவை முழுமையாக அனுபவிக்க முடியாது. மற்றபடி கட்டணத்தின் படி பார்த்தால் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் இடையே கட்டண ரீதியாகப் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. ஜியோ என்னும் ஜீ-பூம்பா மந்திரம் இன்னும் என்னவெல்லாம் செய்யும் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பழைய பன்னீர்செல்வம் டூ புதிய ஓ.பி.எஸ்!, ஓ.பன்னீர் செல்வம் உத்தமரா? அத்தியாயம் - 7


பன்னீர்செல்வத்தின் அரசியல்வாழ்வை அறிமுகப் படலம், அனுதாபப் படலம், அதிகாரப் படலம் என்று பிரிக்கலாம். நாம் இதுவரை பார்த்தது அவர் பெரியகுளம் டீ கடைக்காரர் பன்னீர்செல்வமாக இருந்தது முதல் முதல்முறை முதல்வர் நாற்காலியில் அமர்ந்தது வரையிலான அறிமுகப் படலம். முதல்முறை முதல் அமைச்சர் ஆனபோது பன்னீர்செல்வத்துக்கு அதிகாரப் படலம் வாய்த்துவிடவில்லை. அவர் அதற்கிடையில் அனுதாபப் படலம் ஒன்றையும் கடக்க வேண்டி இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் போட்ட அந்த அஸ்திவாரம்தான், இன்றைய தேதிவரை அவர் அரசியல் நடத்துவதற்கு ஆதாரமாக உள்ளது. அந்த அஸ்திவாரம்தான் 2001-2006 காலகட்டத்தில் கிள்ளி எடுத்துக் கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை, 2011-2016 காலகட்டத்தில் அள்ளி எடுக்க வைத்தது.

அறிமுகப் படலம் டூ அனுதாபப்படலம்!

2001 செப்டம்பர் 21-ல் முதல்முறை முதலமைச்சர் பதவிக்கு வந்த பன்னீர்செல்வத்தை பொதுஜனம் கேலியாகத்தான் பார்த்தது. எதிர்கட்சிகள் ‘பொம்மை’ முதலமைச்சர் என்றனர். ஆனால் நாளடைவில் அதுவே பன்னீரின் பலமாக மாறியது. ஆரம்பத்தில் பன்னீரைக் கேலியாகப் பார்த்த பொதுஜனங்களிடம் இனம்புரியாத அனுதாபம் ஒன்று உருவானது. எதிர்கட்சிக்காரர்களிடம் மானசீகமான மரியாதை ஏற்பட்டது. பன்னீரும் அந்தக் கெத்தைவிடாமல், வாய்ப்புக் கிடைக்கும்போது எல்லாம், “தான் பொம்மை அல்ல... உண்மை!” என்று நிரூபித்துக்கொண்டே இருந்தார்.

திருப்பரங்குன்றத்தில் பத்திரிகையாளர்களைத் தவிர்க்க முடியாமல் சந்தித்த பன்னீர்செல்வம் “என்னை செயல்பட முடியாத முதலமைச்சர் என்று கருணாநிதி விமர்சிக்கிறார். நான் எப்படிச் செயல்படுகிறேன் என்று என்னை உருவாக்கிய மாண்புமிகு இதயதெய்வம் அம்மாவுக்குத் தெரியும். நாட்டு மக்கள் அதைப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் கருணாநிதி என்னை விமரிசிப்பதை விட்டுவிட்டு உருப்படியான வேறு வேலைகளைப் பார்க்கலாம்” என்று பதில் கொடுத்தார். கருணாநிதிக்கு பதில் கொடுத்த கையோடு, ““நான் தற்காலிக முதல்வர்தான்; அம்மாதான் நிரந்தர முதல்வர்; இடையில் அம்மாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையால் அவர் இந்தப் பதவியை என்னிடம் ஒப்படைத்துள்ளார்; அம்மாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை அம்மா விரைவில் தகர்த்துவிடுவார்; அப்போது நான் இந்தப் பதவியை அவரிடம் பத்திரமாக ஒப்படைத்துவிடுவேன்” என்று விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

2001-2011 : பத்தாண்டு அக்னீப் பரீட்சை!

தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் 5 மாதங்கள் அமர்ந்திருந்தார் பன்னீர்செல்வம். அந்த 5 மாதங்கள்தான் அவருடைய அரசியல் வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக அமைந்த அனுதாபப்படலம் அரங்கேறிய காலம். போயஸ் கார்டனில் ஜெயலலிதா, சசிகலா... மன்னார்குடி குடும்பத்தில் திவாகரன், பாஸ்கரன், தினகரன் என்று ஏகப்பட்ட கரன்கள், கோட்டைக்குள் அதிகாரிகள், கட்சிக்குள் பழம்தின்று கொட்டை போட்ட சீனியர்கள், சக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று ஏகப்பட்ட உள்ளடிகள்.... இத்தனை அக்னிப் பரிட்சைகளையும் வென்று அ.தி.மு.க-வில் அதிகாரத்தை அடைவது எவ்வளவு பெரிய காரியம் என்பது கோட்டையில் இருக்கும் அமைச்சர்கள் முதல் கடைக்கோடியில் கட்சி வளர்க்கும் பகுதிச் செயலாளர்வரை அனைவரும் அறிந்தது. அந்த அக்னிப் பரிட்சைதான் பன்னீருக்கு 2001 முதல் 2011 வரை நடந்தது.



பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்கிய ஜெயலலிதா, ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்தத் தேர்தல் முடிவுகள் 2002 பிப்ரவரி 24-ம் தேதி வெளியானது. தேர்தல் முடிவுகள் எப்போது வரும் என்று ஜெயலலிதாவைவிட பன்னீர்செல்வமே அதிகமாகக் காத்திருந்தார். ஜெயலலிதா வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டதுமே, தயாராக வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை எடுத்துக் கொண்டு கவர்னரை நோக்கிப் போனார். ‘முதலில் கடிதத்தைப் பிடியுங்கள்’ என்று அவர் கையில் திணித்துவிட்டு வெளியில் வந்தார். தகவல் கேள்விப்பட்ட ஜெயலலிதா நெகிழ்ந்து போனார். ஆண்டிப்பட்டித் தேர்தல் வெற்றிச் செய்தி வந்து கொண்டிருந்த நேரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா “பன்னீர்செல்வத்தைத் தொண்டனாகப் பெற்றது, நான் செய்த பாக்கியம்” என்றார். அன்றுமுதல் 2011 வரை கட்சிக்குள் பன்னீருக்கு ஏறுமுகம்தான்.

பழைய பன்னீர்செல்வம் டூ புதிய ஓ.பி.எஸ்!

2001-ல் ஜெயலலிதா அமைச்சரவையில் பத்தாவது அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், 2002-ல் இரண்டாவது இடத்துக்கு வந்தார். பொதுப்பணித்துறையை ஜெயலலிதா பன்னீர் செல்வத்துக்குக் கொடுத்தார். 5 மாதம் முதல் அமைச்சராக இருந்தவர், பொதுப்பணித்துறை அமைச்சராகி ஜெயலலிதா பக்கத்தில் அடக்கமாக அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில்தான் பொதுப்பணித்துறை என்பது ‘அள்ள அள்ளக் குறையாத’ தங்கச் சுரங்கம் என்பது பன்னீருக்குப் புரிந்தது. ஆனாலும்கூட பன்னீர்செல்வம் அந்த நேரத்தில் அள்ளி எடுக்கவில்லை; தன்னால் முடிந்தவரை கிள்ளிமட்டுமே எடுத்துக் கொண்டார். அதன்பிறகு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. 2006-ம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

 அப்போது பன்னீர்செல்வத்தைத்தான் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக ஜெயலலிதா நியமித்தார்; அந்த நேரத்தில் பன்னீர்செல்வத்தின் பணிவுக்கு தி.மு.க எம்.எல்.ஏ-க்களிலேயே ரசிகர்கள் உருவானார்கள். எதிர்கட்சிக்காரர்கள் மத்தியிலும் பன்னீர்செல்வத்தின் மீது மானசீகமான மதிப்பு உண்டானது. அ.தி.மு.க தலைமைக் கழகத்தின் பொருளாளராகவும் பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா நியமித்தார். பதவிக்காகவும் பொறுப்புக்காகவும் பன்னீர்செல்வத்தை நாடிவரும் கட்சிக்காரர்களின் எண்ணிக்கை அதிகமானது. பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு வேட்பாளர் பட்டியலில் அவருடைய அனுதாபிகள் அதிகளவில் இடம்பிடிக்கும் அளவுக்குப்போனது. மீண்டும் 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அதுதான் பன்னீர்செல்வத்தின் அதிகாரப்படலம் ஆரம்பமான இடம். 2011-ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது ஓ.பன்னீர் செல்வத்துக்கு இரண்டாவது முறை முதல்வராகும் வாய்ப்பும், பொதுப்பணித்துறை மற்றும் நிதி அவரது கைக்கு வந்தது. 

அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்கும் சீனியர்களான பலர் எட்ட முடியாத உயரத்தை பன்னீர் எட்டினார். கட்சியில், சட்டமன்றத்தில், ஆட்சி நிர்வாகத்தில் பன்னீர்செல்வத்தின் கை ஓங்கத் தொடங்கியது. அமைச்சர்களையும் கட்சிக்காரர்களையும் கண்காணிக்க ஜெயலலிதா நியமித்த நால்வர் அணி, ஐவர் அணி என அனைத்து அணியிலும் பன்னீர்செல்வம் முதலாமவராக தொடர்ந்து இருந்தார். பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா, மகன் ரவீந்திரநாத் லாபி உருவானது. நத்தம் விஸ்வநாதனோடு நட்பு பலப்பட்டது. இவை எல்லாம் சேர்ந்து பழைய பன்னீர்செல்வத்தை அடியோடு மாற்றி புதிய பன்னீர் செல்வமாக்கியது.

பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடினார் தமிழிசை!



உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றதைக் நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மேலும் கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களிலும் கணிசமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக தமிழகத்தில் சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்.

அவருடன் பாஜக தொண்டர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்களுக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் இனிப்பு வழங்கினார்.



அதேபோல் நாகர்கோவிலில் குமரி மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் முன்பு, பாஜகவினர் பட்டாசுகள் வெடித்து வெற்றியை கொண்டாடினர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் பாஜகவினர் வெடிவெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். கரூர் பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து காெண்டாடினர்.

கட்சியை கலைத்துவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்த தலைவர்!



முற்போக்கு முஸ்லிம் லீக் கட்சியை கலைத்து விட்டு முக்கிய நிர்வாகிகளுடன் அதன் தலைவர் செங்கம் ஜப்பார் இன்று அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில், தலைமைக் கழகத்தில் இன்று (11.3.2017), திருச்சி மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் ஜெ. சீனிவாசன் ஏற்பாட்டின் பேரில், திருச்சி குட்செட் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் (இணைப்பு CITU) தலைவர் ஆர்.சண்முகம், துணைத் தலைவர்கள் சிக்கந்தர், பூமிநாதன், பொருளாளர் சுரேஷ், ஆலோசகர் ஆர்.சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் வசந்த், பாலு, அருள்சாமி உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் 84 பேர்களும்;
திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க துணைச் செயலாளர் சந்திரன், திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.க-வைச் சேர்ந்த 26வது கிளைச் செயலாளர் சி.விமல்ராஜ், 26-வது வட்ட இளைஞர் அணிச் செயலாளர் அப்தாகீர், வட்டப் பிரதிநிதி பூபாலன் மற்றும் ராஜன் உள்ளிட்ட 19 பேர்களும்; ஆக மொத்தம் 104 பேர் தங்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.



இதேபோல், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளரும், கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான அ.தமிழ்மகன் உசேன் ஏற்பாட்டின் பேரில், முற்போக்கு முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவரும், முன்னாள் பால்வள வாரியத் தலைவருமான செங்கம் ஜப்பார், அக்கட்சியை கலைத்துவிட்டு கட்சியின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.முதாசீர், எம்.முகமது சமீம்,அயாஸ் அகமது, பீர் சாகிப், ஜாகி, ரியாஸ், மொகிதீன், சேக் அகமது, கலீல் பாட்சா, ரபீக் அகமது, அமருல்லா, சாதிக், ரஷீத் பாஷா மற்றும் ரகுமான் ஆகிய 15 பேர்களும் தங்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

சோழவந்தான் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.கருப்பையா ஏற்பாட்டின் பேரில், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த, 2016ல் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், மதுரை புறநகர் மாவட்டம், உசிலம்பட்டி ஒன்றியம், தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான சி. பெரியகருப்பன் தன்னை கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

மோடிக்கு வாழ்த்து சொன்ன ராகுல்... ரீ-ட்வீட் செய்த மோடி!

rahul Gandhi and Modi

ஐந்த மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கின்றன. இந்நிலையில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் வெற்றி பெற்றதற்கு பா.ஜ.க மற்றும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்' என்று பதிவு செய்துள்ளார்.

ராகுல் காந்தி மேலும், 'காங்கிரஸை வெற்றி பெற வைத்தமைக்கு பஞ்சாபில் இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். பஞ்சாபின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு வாக்கு அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் இதயம் மற்றும் மனதை வெல்லும் வரையில் எங்களின் போராட்டம் முடிவு பெறாது' என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி, வாழ்த்தி ட்வீட் செய்ததற்கு பதில் ட்வீட்டாக பிரதமர் நரேந்திர மோடி, 'வாழ்த்துக்கு நன்றி. வாழ்க ஜனநாயகம்' என்று ரீ-ட்வீட் செய்துள்ளார்.
இரோம் ஷர்மிளாவுக்கு வெறும் 90 ஓட்டு

இம்பால், :மணிப்பூரில், தொடர்ந்து, 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து, உலகின் கவனத்தை ஈர்த்த, இரோம் ஷர்மிளா, 43, அங்கு நடந்த சட்டசபை
தேர்தலில், வெறும், 90ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட, இரோம் ஷர்மிளா, சமீபத்தில் போராட்டத்தை முடித்துக் கொண்டார்; உலகில், நீண்டகாலம் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் என்ற பெருமையை பெற்றார். 

இதை தொடர்ந்து, மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணி என்ற கட்சியை துவக்கினார். மணிப்பூரில் நடந்த சட்டசபை தேர்தலில், அவரது கட்சியும் போட்டியிட்டது.

அங்கு ஆளுங்கட்சியாக இருந்த, காங்., முதல்வர் ஒக்ராம் இபோபி சிங்கை எதிர்த்து, தொபல் சட்டசபை தொகுதி யில், அவர் போட்டியிட்டார்.
இபோபி சிங்கிற்கு எதிராக கடுமையான பிரசாரம் செய்தார்; ஆளும் காங்கிரசுக்கு பெரும் சவாலாக இருப்பார் என, கருதப்பட்டது. இந்நிலையில், அங்கு நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில், அவர் படுதோல்வி அடைந்தார். 
தி யில், இபோபி சிங், 18,649 ஓட்டுகள் பெற்றார்; இரண்டாவது இடத்தை பிடித்து தோல்வியடைந்த, பா.ஜ., வேட்பாளர் பசண்டா, 8,179 ஓட்டுகள் பெற்றார். ஆனால், இரோம் ஷர்மிளாவுக்கு, வெறும், 90 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. அவரது கட்சி சார்பில், மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களும், படுதோல்வியை சந்தித்தனர்.

NEWS TODAY 21.12.2025