Monday, March 13, 2017

நீலகிரிக்கு வந்த வெளியூர்க் கழுகுகள்!

Published on : 06th March 2017 11:12 AM  
a1
இந்தியாவில் 9 வகையான கழுகு இனங்கள் வாழ்கின்றன. இவற்றில் தென்னிந்தியாவில் 7 வகைகள் உள்ளன. இதில் தமிழகத்தில் வெண்முதுகு பாறு கழுகு, கருங்கழுத்து பாறு கழுகு, செந்தலை பாறு கழுகு மற்றும் மஞ்சள் முக பாறு  கழுகு ஆகிய 4 வகையான கழுகுகள் உள்ளன.
இந்நிலையில் கடந்தாண்டில் நீலகிரிக்கு சிறப்பு விருந்தாளிகளாக இமாலயன் கிரிபான் கழுகும், எகிப்தியன் கழுகும் வந்திருந்தன. இவற்றைத் தொடர்ந்து அண்மையில் சினேரியஸ் வகையான கழுகு ஒன்றும் மாயார் வனப்பகுதிக்கு வந்திருந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீலகிரியில் கழுகுகளைக் குறித்து ஆய்வு நடத்தி வரும் அருளகம் அமைப்பின் செயலர் எஸ்.பாரதிதாசன் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களாவன:
"இமயமலைப் பகுதியில் சுமார் 10,000 அடிக்கும் மேலான உயரத்தில் ஊசி இலை மரங்களில் கூடமைத்து இனப்பெருக்கம் செய்து சுற்றித் திரியும் சினேரியஸ் வகை கழுகு நடப்பாண்டில் நீலகிரி மாவட்டத்தில் மாயார் வனப்பகுதிக்கு வந்தது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கழுகு கருப்பு நிறத்தில் இருந்தாலும் அதன் கழுத்து மற்றும் கால் ஆகியவை கருநீலத்தில் இருக்கும். அதனால் இவை கருங்கழுகு எனவும் அழைக்கப்படும். கழுகுகளிலேயே பெரிய உடல்வாகு கொண்டது இந்த கழுகு இனம்தான் என்றால் மிகையாகாது.
இந்த வகை கழுகுகள் உயரே பறக்கும்போது ஏற்படும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில் அதன் ரத்தத்தில் சிறப்பு வகையான ஹீமோகுளோபினை உருவாக்கிக் கொள்ளும் இயல்புடையதாகும். அழிவின் விளிம்பிலுள்ள இப்பறவை வட இந்தியாவில் பரவலாகவும், தென்னிந்தியாவில் அவ்வப்போதும் தென்படுகிறது. 
மேலும் இப்பறவை பெரிய உடல்வாகைக் கொண்டிருப்பதால் தனியாகவே இரை தேடும் இயல்புடையதெனவும், இறந்த விலங்குகளையும், செத்த மீன்களையும் உண்ணும் இப்பறவை சில சமயங்களில் எலி உள்ளிட்ட சிறு கொறி விலங்குகளையும், ஆமை மற்றும் முயல் உள்ளிட்ட சிறு விலங்குகளையும் கூட வேட்டையாடி உண்ணும் திறன் படைத்ததாகவும் இருக்கிறது'' என்றார். 
கழுகுகள் குறித்து நீலகிரியில் ஆராய்ச்சி நடத்திவரும் உதகை அரசு கலைக்கல்லூரி மாணவரான சாம்சன், ""கடந்த ஆண்டில் இமாலயன் கிரிபான் ரக கழுகும், எகிப்தியன் கழுகும் மாயார் வனப்பகுதிக்கு வந்திருந்த சூழலில் நடப்பாண்டில் சினேரியஸ் வகை கழுகும் வந்திருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கழுகுகள் 37 வயது வரையிலும் உயிர்வாழக் கூடியவை என்பது அண்மைக்கால ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. இதில் 5 வயதிற்கு மேற்பட்ட கழுகுகளே வளர்ந்த கழுகுகள் என அழைக்கப்படும். ஓரிடத்திலிருந்து வேறு புதிய இடத்திற்கு வளர்ந்த கழுகுகள் வருவதில்லை. இளம் கழுகுகளே வந்து செல்கின்றன. முதலில் இவை அந்த பகுதிக்கு தனியாக வந்து தங்களது வாழ்க்கைச் சூழலுக்கு அந்த இடம் ஏற்றதா? என்பதை உறுதி செய்து விட்டு திரும்பிச் சென்ற பின்னர் அடுத்த முறை வரும்போது கூட்டத்தோடு வந்து செல்லும் இயல்புடையவையாகும்.
தற்போது நீலகிரியில் காணப்பட்ட சினேரியஸ் கழுகு இங்கு வருவது இதுவே முதன்முறை எனலாம். இதற்கு முன்னர் இந்த வகை கழுகுகள் கடந்த 2008 - ஆம் ஆண்டு கோடியக்கரையிலும், 1987 - ஆம் ஆண்டு புதுவையிலும் மட்டும்தான் பார்த்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உணவு, வாழ்விடச் சுருக்கம், பொதுமக்களால் இடையூறு மற்றும் இனப்பெருக்கம் ஆகியவையே கழுகுகள் இடம் மாறி செல்வதற்கான காரணங்களாகும். தற்போதைய சூழலில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமும், உணவுத் தட்டுப்பாடும்கூட இவை வந்து செல்வதற்கான காரணமாக இருக்கலாம்'' என்றார்.
ஓரிடத்தில் கழுகுகள் அதிக அளவில் உள்ளது என்றால், அங்கு அவற்றிற்கான உணவுச் சங்கிலி சிறப்பாக இருப்பதாகவே பொருள் கொள்ளலாம். புலிகள் அதிக அளவில் இருக்க வேண்டுமெனில் அவற்றின் உணவுத் தேவையைத் தீர்க்கும் வகையில் மான்களும் அதிக அளவில் இருக்க வேண்டும். அதன் எச்சங்கள்தாம் இக்கழுகுகளுக்கு உணவாகும். அதனால் அத்தகைய கணக்கின்படி பிணந்தின்னிக் கழுகுகள் நீலகிரி வனப்பகுதிகளுக்கு அதிக அளவில் வந்து செல்வது இப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கையும் திடகாத்திரமாகவே இருப்பதாகக் கொள்ளலாம். 
- ஏ.பேட்ரிக்

இன்று ஹோலி கொண்டாட்டம்! பாதுகாப்புப் பணியில் 25,000 போலீஸார்

By தில்லி  |   Published on : 13th March 2017 07:58 AM  
holi
ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்களையொட்டி, தில்லியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகர் முழுவதும் சுமார் 25 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தில்லியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொண்டாட்டங்களின்போது, அசம்பாதவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க சுமார் 25 ஆயிரம் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதக் கலவரம், பாலியல் சீண்டல், சமூக விரோத நடவடிக்கைகள் தொடர்பாக வரும் புகார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி, காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகரின் முக்கியப் பகுதிகளில் அதிரடிப் படையினரும், ரிசர்வ் போலீஸாரும் பணியில் ஈடுபடவிருக்கின்றனர். நகர் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபவதற்காக சுமார் 1,000 ரோந்து வாகனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சந்தைப் பகுதிகள், விமான நிலையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு படையினரும், குற்றத் தடுப்பு பிரிவினரும் உச்சகட்ட எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பார்வை குறித்த பார்வை!

By ஆசிரியர்  |   Published on : 11th March 2017 02:12 AM  | 
அண்மையில் நடந்து முடிந்திருக்கும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், மகாராஷ்டிரத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போதும், சில இடங்களில் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள் சிலர், தங்களது வருத்தத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறார்கள். தேர்தல் அதிகாரியின் உதவி இல்லாமல் தங்களால் வாக்களிக்க முடியவில்லை என்கிற அவர்களது குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமல் இல்லை. தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் நிலையில் குரல் மூலம் வாக்களிக்க வகை செய்யப்படவில்லை என்கிற அவர்களின் ஆதங்கம் ஏற்புடையதுதான்.
பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக எல்லாவிதமான மாற்றுத்திறனாளிகளுக்கும் போதுமான அளவு வசதிகள் செய்து தரப்படுவதில்லை என்பதை மறுக்க முடியாது. மிகவும் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் செய்து தரப்படும் வசதிகளும் அளிக்கப்படும் வாய்ப்புகளும்கூட இந்திய மாற்றுத்திறனாளிகளுக்குத் தரப்படுவதில்லை என்பதுதான் உண்மை. மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளில் மிகவும் பாதிப்புக்கும், பரிதாபத்திற்கும் உள்ளவர்கள் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள்தான். இவர்களால் மற்றவர்கள் உதவி இல்லாமல் இயங்க முடியாது என்பது மிகப்பெரிய வேதனை.
உலகில் உள்ள 3.7 கோடி பார்வைக் குறைவுள்ளவர்களில் 1.5 கோடி பேர் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். இவர்களில் ஏறத்தாழ 5 லட்சம் பேர் தமிழகத்தில் இருக்கிறார்கள். எண்ணிக்கை அளவில் இத்தனை பேர் இருந்தும்கூட அவர்கள் குறித்த புரிதலும், அவர்களுக்குப் போதிய வாய்ப்பும், உதவியும் அளிக்கப்படுகிறதா என்றால் இல்லை. இன்னும்கூட பல மாநிலங்களில் கண் மருத்துவமனைகள், இலவச கண் சிகிச்சை முகாம்கள் போன்றவை அடித்தட்டு மக்கள் மத்தியில் சென்றடையவில்லை.
பார்வைக் குறைவு என்பது மூன்று தளங்களில் எதிர்கொள்ளப்பட வேண்டும். பார்வைக் குறைவுள்ளவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு ஏற்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அவர்களது வசதிக்காக இயற்றப்பட்டிருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது, பொது இடங்களில் அவர்களுக்குத் தேவையான வசதிகளை உறுதிப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும். அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடுச் சலுகைகள்கூட நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பது கசப்பான உண்மை.
இரண்டாவதாக, அவர்கள் அனைவரும் கல்வியறிவு பெற்று, தங்களது சொந்தக் காலில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு வழிகோலப்பட வேண்டும். பிரெய்லி முறை கண்டுபிடிக்கப்பட்டதால், பார்வைக் குறைவு உள்ளவர்கள் கல்வி கற்கவும், கல்வியின் மூலம் பாடத்தைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. ஆனால் அந்த வசதி எத்தனை குழந்தைகளுக்குக் கிடைக்கிறது என்று பார்த்தால், மிகவும் குறைவானவர்கள் மட்டுமே பயன்பெறுகிறார்கள்.
இந்தியாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைக் குறைவுள்ள குழந்தைகள் இருந்தும், அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளின் எண்ணிக்கை வெறும் 350 மட்டுமே. ஏறத்தாழ 5 லட்சம் பார்வைக் குறைவுள்ள குழந்தைகளுள்ள தமிழகத்தில் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகள் வெறும் 15 மட்டுமே. பார்வைக் குறைவுள்ள பெரும்பாலான குழந்தைகளுக்குக் கல்வி கற்கவும், பிரெய்லி பயிற்சி பெறவும் வாய்ப்பு இல்லாததால் அவர்கள் இரந்து வாழும் ஈன வாழ்க்கைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பது குறித்து அரசும் சமூகமும் எப்போதாவது கவலைப்பட்டதுண்டா?
பார்வையற்றோருக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதுகூட இல்லை. சமூகப் பாதுகாப்பில்லை. அதுவும் பெண்களாக இருந்தால், அது குறித்து எழுதாமல் விடுவதுதான் மேல். சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை ரயில் மார்க்கத்தில் மட்டும் பொருள்கள் விற்று அன்றாடம் வயிற்றைக் கழுவும் பார்வையற்றோர் எண்ணிக்கை 650. சென்னை கடற்கரை - தாம்பரம் மின்தொடர் வண்டியில், படித்துப்பட்டம் பெற்றோர் உள்பட 350 பார்வையற்றோர் பொருள்களை விற்றும் பாட்டுப்பாடிப் பிழைத்தும் வாழ்க்கை நடத்துகிறார்கள்.
மூன்றாவது இன்றியமையாத தேவை, பார்வைக் குறைவு ஏற்படாமல் தடுப்பதும், அப்படி குறைவு ஏற்பட்டவர்களுக்குப் பார்வை கிடைக்க உதவுவதும். இந்தியாவில் உள்ள 75% பார்வைக் குறைவுப் பிரச்னைகளும் தீர்வு காணப்படக் கூடியவைதான். அதற்கு மருந்துகளும் உண்டு. ஆனால் மருத்துவ வசதிதான் இல்லை. போதுமான கண் மருத்துவர்களும் இல்லை.
பார்வைக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களில் 25% பேர் விழிவெண் படலத்தில் ஏற்படும் குறைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள். கண் தானம் மூலம் இந்த விழிவெண் படலம் பெறப்படுகிறது. புற்றுநோய், மஞ்சள் காமாலை, நாய்க்கடி இவை மூன்றும் பாதிக்கப்படாதவர்களின் விழிவெளிப் படலத்தை மாற்று சிகிச்சைக்கு பயன்படுத்திக் கண்ணொளி வழங்க முடியும். அதிகரித்த கண் தானமும், விழிவெண் படல மாற்று சிகிச்சையும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக முடியும். இதுகுறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பலர் பார்வை இழந்து தவிக்கிறார்கள்.
நாம் ஒருசில வினாடிகள் கண்ணை மூடிக்கொண்டு இருந்துபார்த்தால், பார்வைக் குறைவானவர்களின் இருண்ட உலகம் எப்படிப்பட்டது என்பது நமக்குப் புரியும். அது புரிந்தால் மட்டும் போதாது, கண்தானம் செய்ய வேண்டும் என்கிற புரிதல் நமக்கெல்லாம் ஏற்பட வேண்டும். பார்வையற்றவர்கள் குறித்து நமது மனக்கண் சற்று திறக்கட்டும்!

உத்தரப் பிரதேசம் சொல்லும் செய்தி கேட்கிறதா?

By மாலன்  |   Published on : 13th March 2017 01:53 AM  |  
தமிழ்நாடும் உத்தரப் பிரதேசமும் வெவ்வேறான அரசியல், கலாசாரக் கட்டமைப்புகளைக் கொண்டவை என்ற போதிலும் உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவுகளில் தமிழ்நாட்டிற்குச் சில செய்திகள் உள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில், பா.ஜ.க. முக்கால் பங்கு இடங்களை (312) வென்றிருக்கிறது. அதனோடு கூட்டணி வைத்துக் கொண்ட சிறிய கட்சிகளின் வெற்றியையும் கணக்கில் கொண்டால், பா.ஜ.க. கூட்டணி பெற்றுள்ள இடங்கள் 325.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, மின்னணுப் பணப்பரிமாற்றத்திற்கு ஊக்கம் என்ற அன்றாட வாழ்க்கையைச் சிரமமாக்கிய நடவடிக்கைகளுக்குப் பிறகும் இத்தகைய வெற்றியை பா.ஜ.க. பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
இதன் பின்னுள்ள அரசியல் என்ன?
ஒருவகையில் இந்த வெற்றி உலகம் எந்தத் திசையில் நடக்கிறதோ அதைப் பிரதிபலிக்கும் வெற்றி. எல்லா நாடுகளிலும் மக்கள்தொகையில் ஏதோ சில மக்கள் பெரும்பான்மையினராக வாழ்கிறார்கள். அமெரிக்காவில் வெள்ளை இன மக்கள். சிங்கப்பூரில் சீனர்கள். இலங்கையில் சிங்களர்கள். மலேசியாவில் மலாய்க்காரர்கள். ஒரு தேசத்தின் குடிமக்கள் என்ற பொது அடையாளத்திற்குள் நிறத்தாலோ, மொழியாலோ, கலாசாரத்தாலோ, மதத்தாலோ அவர்கள் தனியான அடையாளம் சூட்டப்பட்டு அல்லது அதை விரும்பி ஏற்று, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது சரியா தவறா என்பது அறிவார்ந்த தளத்தில் நடக்கும் விவாதம். ஆனால் அத்தகைய அடையாளங்கள் இருக்கின்றன என்பதும் அவற்றை மக்கள் நிராகரிக்கவில்லை என்பதும் யதார்த்தம்.
இந்த யதார்த்தத்தை அரசியல் கட்சிகள் அரசியல் அதிகாரம் பெறுவதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. இன்னும் சொல்லப்போனால் அவற்றை ஊக்குவிக்கின்றன. ஊக்குவிப்பதற்காக முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றன அல்லது கூர்மைப்படுத்துகின்றன. அப்படிச் செய்வதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைகின்றன.
பெரும்பானமையராக உள்ள மக்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற முடியாது என்ற கள யதார்த்தத்தின் காரணமாக அவை சிறுபான்மையராக உள்ளவர்களைத் தங்கள் பால் கவர்ந்திழுக்கும் செயல்களை மேற்கொள்கின்றன. அந்தச் செயல்கள் சில நேரங்களில் பெரும்பான்மையினரின் வாய்ப்புக்களைப் பாதிக்க நேர்ந்தாலும் அரசியல் கட்சிகள் அதைக் குறித்துக் கவலை கொள்வதில்லை. ஏனெனில் அவர்கள்தான் பிரிந்து கிடக்கிறார்களே, ஒட்டு மொத்தமாக ஒரு கட்சிக்கு வாக்களிக்கப் போவதில்லையே. இதுதான் வாக்கு வங்கி அரசியல்.
அண்மைக்காலமாக உலகில் பல நாடுகளில் உள்ள மக்கள் இந்த வாக்கு வங்கி அரசியலை நிராகரித்துப் பெரும்பான்மையிசத்தை மீட்டெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அமெரிக்காவில் டிரம்ப் பெற்ற வெற்றி இதன் ஓர் அடையாளம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற இங்கிலாந்து மக்கள் வாக்களித்தது இன்னுமொரு உதாரணம்.
ஒபாமாவின் சில கொள்கை முடிவுகளால் வெள்ளையினத் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். அது டிரம்பின் வெற்றிக்கு விதையானது. பிற நாடுகளிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை ஐக்கிய ராஜ்யத்தின் பொருளாதாரத்தைப் பாதித்தது. அதன் எதிரொலி பிரக்சிட்.
இந்தியாவில், குறிப்பாக மொழியால் வேறுபடாத இந்தி பேசும் மாநிலங்களில், பெரும்பான்மையினரின் பொது அடையாளம் இந்துக்கள் என்ற மத ரீதியான அடையாளம்.
இந்து மதத்தின் சாபக்கேடு, பலவீனம் அதன் உட்பிரிவான ஜாதி அமைப்பு முறை. உத்தரப் பிரதேசத்தில் சில கட்சிகள் இந்த பலவீனத்தைத் தங்களுக்கு சாதகமாகக் கொண்டு வாக்கு வங்கி அரசியலைக் கட்டமைத்தன. சமாஜவாதி யாதவர்களையும் பகுஜன் சமாஜ் கட்சி பட்டியலின மக்களையும் அடித்தளமாகக் கொண்டிருந்தன. இந்த அடித்தளத்தைத் தக்க வைத்துக் கொள்ள இந்து என்ற பொது அடையாளத்தைப் பலவீனப்படுத்தி வெற்றிகளைப் பெற்று வந்தன. சிறுபான்மையினரைக் கவர்ந்திழுப்பதில் கவனம் செலுத்தின. இந்தப் பிரித்தாளும் உத்தி, நம்மை ஆண்ட காலனி ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற அரசியல். வெள்ளைக்காரர்கள் விடை பெற்ற பிறகு நம் அரசியல் கட்சிகள் அதைக் கையில் எடுத்துக் கொண்டன.
இந்தத் தேர்தலில் உத்தரப் பிரதேச மக்கள் அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்கள். உலகில் பல நாடுகளில் உள்ள மக்களைப் போன்றே, சிறுபான்மையினரைக் கவர்ந்திழுக்கப் பெரும்பான்மையினரின் உணர்வுகளைப் புறந்தள்ளுவதன் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜாதிப் பிளவுகளை ஒருங்கிணைத்து மத அடையாளத்திற்குட்பட்டு, கூட்டணி அமைத்தது பா.ஜ.க.வின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணம். ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல.
ஜனநாயக நடைமுறையை ஏற்றுக் கொண்டுவிட்ட நாடுகளில் உள்ள மக்கள், குறிப்பாகச் சிறுபான்மையினர், உரிமைகளை விட பொருளியல் வளர்ச்சியை முதன்மையாகக் கருதுகிற காலம் இது. சட்டப் புத்தகங்களில் உள்ள சமத்துவங்களை விட நடைமுறையில் காணும் பொருளாதார வளர்ச்சி பாதுகாப்பளிக்கிறது என்ற எண்ணம் இதற்குக் காரணமாக இருக்கலாம். இனக்குழு அல்லது சமூகம் என ஒரு திரளாக முக்கியத்துவம் பெறும் உரிமைகள், தனிநபர்களாகத் தளர்வுற்றுள்ள நிலையில் முக்கியத்துவம் இழந்து பொருளியல் முன்னேற்றம் முதன்மை பெறுவது காரணமாக இருக்கலாம்.
இது சரியா தவறா என்ற வாதங்களுக்கு அப்பால், இது மனித குலத்தின் இயல்பாக இருந்து வந்திருக்கிறது என்பதை மறுக்கவியலாது. ஆயுதங்களால் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும் என்ற நிலையிலிருந்து "அறிவு அற்றம் காக்கும் கருவி' என்ற நிலைக்கு மாறிப் பின் அரசியல் அமைப்புக்கள், தலைவர்கள் தங்களைப் பாதுக்காப்பர் என்ற எண்ணம் கொண்டு இன்று "பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்ற நிலைக்கு வந்திருக்கிறது மனித குலம்.
இந்த இயல்பை அனுபவ ரீதியாக முதலில் புரிந்து கொண்டவர்கள் எந்தச் சமூகத்திலும் சிறுபான்மையினரே. பெரும்பான்மைச் சமூகத்தோடு உரிமைகள், சமத்துவம் என்ற உணர்வுநிலைக் கருத்துக்களுக்காக முரணிக் கொண்டும் போராடிக் கொண்டும் இருப்பதைவிட சில விட்டுக் கொடுத்தலோடு இயைந்து வாழ்வது நடைமுறையில் பலனளிக்கும் என்ற எண்ணம் மெல்லப் படர்ந்து வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம்கள், அவர்கள் நலனின் பாதுகாவலன் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட சமாஜவாதியை ஒதுக்கிவிட்டு, ஓர் இஸ்லாமிய வேட்பாளரைக்கூட நிறுத்தாத பா.ஜ.க.விற்கு வாக்களித்திருப்பது இதன் காரணமாகத்தான்.
சிங்கப்பூரில் தமிழர்கள் சிறுபான்மையினர்தான். மக்கள் தொகையில் ஏழு சதவீதத்திற்கு அதிகமாக அவர்கள் இருந்ததில்லை. சிங்கப்பூர் குடியரசாவதற்கு முன்பே சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக தமிழ் இருந்தது. திடீரெனத் தன் மீது சுதந்திரம் திணிக்கப்பட்ட நிலையில், இயற்கை வளங்கள் அதிகம் இல்லாத சிங்கப்பூர், பொருளியில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, தனித்துத் தாக்குப் பிடிப்பதற்கேகூட, மனிதவளத்தைத்தான் சார்ந்திருந்தது. பணியிடங்களில் திறனை மேம்படுத்த, அது கல்வியில் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதன் விளைவு, இன்று பெரும்பான்மையான தமிழ்க் குடும்பங்களில் வீட்டு மொழி ஆங்கிலமாக இருக்கிறது. அரசியல் அடையாளங்களுக்காகவும்,சமூக ரீதியாகப் பலன் பெறவும் தமிழ் அடையாளம் தேவை எனக் கருதும் மூத்த தலைமுறையினர் இது குறித்துக் கவலை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மாற்றம் தங்கள் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து விடவில்லை என்பதால் பல குடும்பங்களில், குறிப்பாக இளைஞர்களிடத்தில் இது குறித்த வருத்தம் இருப்பதாக உணரமுடியவில்லை. பொருளியல் முன்னேற்றம் தந்த வாழ்க்கையை அவர்கள் மகிழ்ச்சியாகவே உணர்கின்றனர்.
இது ஒரு சமரசம்தான். பெருமபான்மைச் சமூகத்தோடு இணைந்து முன்னேறுவதற்காகச் சிறுபான்மைத் தமிழர்கள் ஏற்றுக் கொண்ட சமரசம். தனி இன அடையாளங்களைவிட நாட்டின் முன்னேற்றம் என்ற பொது இலக்கு முக்கியம் எனக் கருதி மேற்கொண்ட சமரசம்.
இதன் மறுபக்கம் இலங்கை. இலங்கையர் என்ற பொது அடையாளத்தைவிட இன உரிமைகள் முக்கியம் எனக் கருதி நடந்த ஆயுதப் போரட்டத்தின் வடுக்கள் இன்னமும் வலிக்கின்றன.
இந்த இரு தீவுகள் சொல்லும் பாடங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள ஏதேனும் இருக்கிறதா? இது அவரவர் சிந்தித்து விடைகாண வேண்டிய கேள்வி.
தனி அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்ள உரிமைப் போர்கள் நடத்தித் தனித்துப் போய் வாழ்வியல் முன்னேற்றங்களில் பின் தங்கிவிடப் போகிறோமா அல்லது ஒரு பொது லட்சியத்திற்காக பெரும்பான்மையோடு இணங்கிச் செல்லும் சமரசங்களை ஏற்று பொருளியல் முன்னேற்றங்களைக் காணப் போகிறோமா? "தமிழன் என்று சொல்லடாவா' "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வா?'
இதில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அது நூறு சதவீதம் மனநிறைவளிக்காது. இன்றையத் தேவை என்னவென்று எண்ணித் தேர்வதே அறிவுடைமை.
ஆனால், உலகைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று தெரியும். 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் முகிழ்த்த தத்துவங்கள், இந்தப் புத்தாயிரத்தில் வடிவமிழந்து வாசமிழந்து கொண்டிருக்கின்றன. காலனி ஆட்சிக் கால அரசியல் முறைகளான பிரித்தாளுதல், அதன் நீட்சியாக அடையாள அரசியல், அதன் தொடர்ச்சியான வாக்கு வங்கி அரசியல் ஆகியவை பலவீனமுற்று வருகின்றன.
இது இந்தியாவிலும் தொடங்கிவிட்டது என்பதன் அடையாளம்தான், உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள். சமத்துவம் என்பது சமவாய்ப்பு என்பதாக மாற்றம் கொண்டு வருகிறது. சலுகைகள் சம வாய்ப்புக்கு முரணானவை என்ற வாதம் வலுப்பெற்று வருகிறது. ஜனநாயகம் என்பது சமூகத்தின் எல்லாத் தரப்பின் பங்கேற்பு என்பதிலிருந்து சிறுபான்மையினரின் சம்மதத்தோடு பெரும்பான்மையினரின் ஆட்சி என வடிவம் கொள்கிறது. தேசியம் என்ற கருத்தாக்கம் உலகமாயமாதல் என்ற நகர்வில் கரைந்து போகிறது. ஜனநாயகம், சமத்துவம், தேசியம் என்ற தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட மத்திய வர்க்கம், பொருளியல் வளர்ச்சி என்ற தனிமனித இலக்கின்பால் தன்னை இழந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது? உலகோடு ஒட்ட ஒழுகுமா? ஒதுங்கித் தனித்துப் போகுமா?

அச்சமூட்டும் தனியார் வங்கிகள்

By வாதூலன்  |   Published on : 13th March 2017 01:54 AM  |  
அண்மையில் எல்லா நாளேடுகளிலும் வெளியான ஓர் அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. ஆக்ஸிஸ், எச்.டி.எப்.சி. போன்ற தனியார் வங்கிகளில் மாதம் நான்கு முறைக்கு மேல் தொகையைப் பணமாகச் செலுத்தினால் அதற்கு தனியாக ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும் என்பதே அச்செய்தி.
மேற்கத்திய, குறிப்பாக அமெரிக்க கலாசாரம் இந்தியாவில் மெல்ல மெல்ல பரவி வருகிறது என்பதற்கான அடையாளங்கள்தான் இத்தகைய விதிமுறைகள். வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே இவற்றை ஓரளவுக்கு அனுபவித்து வருகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, முன்பெல்லாம் மூன்று வருடத்துக்கும் மேலாக ஒரு தொகையை அரசு வங்கியில் வைப்புத் தொகையாக போட்டால், வட்டி கூடுதலாக கிடைக்கும். இப்போது நிலைமை தலைகீழ். அதிகமான காலக்கெடுவில் வைப்பு செய்தால் வட்டி குறைவு.
இதேமாதிரி பற்று அட்டைகளை இலவசமென்று சொல்லி பல வங்கிகள் வாடிக்கையாளர்களை ஈர்த்தன. இப்போது அதற்கும் வருடாந்திரக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடன் அட்டை வாங்கினால் பரிசுகள் உண்டு என்று பொத்தாம் பொதுவாக தெரிவித்து பலரை அந்த வலையில் சிக்க வைக்கிறார்கள்.
பண மதிப்புக் குறைவால் வங்கிகளில் வைப்புகள் குவியத் தொடங்கி விட்டன. அதனால் வட்டிக்கு செலவு (வட்டி சுமை) கூடுதலாகிவிடட்து. சிறு, குறு, பெரிய தொழிலதிபரை தேர்ந்தெடுத்து கோடிக்கணக்கில் கடன் வழங்கினால் நல்ல லாபம் ஈட்ட இயலும்.
ஆனால் அதற்கேற்ப தொழில்நுட்ப அதிகாரிகள் இல்லை. எனவே எளிதாக தரக்கூடிய வாகனக்கடன், வீட்டுக்கடன் போன்றவற்றையே வழங்குகிறார்கள். இதன்மூலம் கிடைக்கற வருமானமும் குறைவுதான்.
மேற்சொன்ன நடவடிக்கைகளினால் பல நடுத்தர - உயர் மட்டக் குடும்பத்தினர் கடனாளி ஆகிவிட்டார்கள் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது.
நல்ல காலமாக தனிநபர் வருமானமும் ஓரளவு உயர்வதால், கடனைத் திருப்பிச் செலுத்துகிறார்கள். அரிதாக கடன் தவணை செலுத்த இயலாதவர் சிலர் வீட்டையோ வாகனத்தையோ விற்று, கடனை முடித்து விடுகிறார்கள். எப்போதாவது சில தருணங்களில் தனியார் வங்கிகள் குண்டர்களை அனுப்பி வாடிக்கையாளரிடம் கடன் அட்டைக்குத் தர வேண்டிய தொகையை வசூல் செய்கிறார்கள். இதுதான் இங்குள்ள நிலைமை.
ஆனால் மேலை நாட்டில்? பிரபல எழுத்தாளர் ஒருவர் அங்கு நிலவும் நிலைமையை விவரித்திருக்கிறார். "அந்த நாடு (யு.எஸ்.ஏ.) உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ் அல்லது மலைப்பாம்பின் இறுக்கம்போல உங்களை விடாது.
அதன் கிரெடிட் கார்ட் சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது'.
இந்தியாவில் நிலைமை வேறு. இங்கு 40 சதவீதத்துக்கு மேல் எழுத்தறிவு இல்லாதவர்கள். பண மதிப்பு குறைவினால், ஓரளவுக்கு பற்று அட்டையை பயன்படுத்தினாலும், பெரும்பாலோர் ரொக்க பரிவர்த்தனைக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள். மேலும், இங்கு அவ்வப்போது அந்தக் கருவிகள் வேலை செய்வதில்லை.
மேலை நாடுகள்போல, "சம்பாதி, செலவழி' என்ற மனோபாவம் இங்கு நுழையவில்லை. சேமிக்கும் பழக்கம் மக்களின் ரத்தத்தில் இயற்கையிலேயே ஊறியிருக்கிறது. பள்ளிக் கட்டணம் (இரண்டாம் வகுப்புக்கு வருடம் ரூ.40,000-க்கு மேல்), பயணம், திடீரென்று வரும் விசேஷங்கள், எதிர்பாராத மருத்துவச் செலவு - இவை யாவையும் ஈடுகட்ட சேமிப்புக் கணக்குத்தான் உதவுகிறது.
மாதா மாதம் கட்டுகிற ஆர்.டி-யோ, பிரபல சீட்டு நிறுவனத்தில் சேர்ந்து செலுத்துகிற தொகையோ நம் அவசரத்துக்கு உதவாது.
தபால் அலுவலகத்தில் சேமிப்பிலிருந்து பணம் எடுப்பதில் சிக்கல் உள்ளது. வாடிக்கையாளர் நேரில் போக வேண்டும். மேலும், கையெழுத்தில் ஒரு சின்ன வித்தியாசம் இருந்தாலும் திருப்பி விடுவார்கள். வங்கியில், பல்வேறு காரணங்களுக்காக செல்ல வேண்டிய சந்தர்ப்பம் நேருவதால் கையெழுத்து வெகுவாக மாறுபட்டாலன்றி ஏதும் கூறமாட்டார்கள்.
எனவேதான் கிராமப்புறத்திலும் சரி, நகரங்களிலும் சரி, அவ்வப்போது கிடைக்கிற உபரித் தொகையை சேமிப்புக் கணக்கில் போடுகிறார்கள். இதற்கு வேட்டு வைக்கிறார்போல் தனியார் வங்கிகள் செயல்படுவது எந்தவிதத்தில் நியாயம்?
"வேறு வழியில்லை சார்! காலம் மாறி வருகிறது. பாதுகாப்பு பெட்டகத்துக்கு கட்டணம் செலுத்துவதுபோல், வங்கியில் செலுத்துகிற டெபாஸிட்டுக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய காலம் வரத்தான் போகிறது' என்று சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
ஆனால், அதுபோல் நடக்க வாய்ப்பு இல்லை. நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பே மக்களின் சேமிப்புதான். அதற்கு உலை வைக்கும் வழிமுறைகளில் மத்திய அரசு இயங்காது என நம்பலாம்.
இப்போதெல்லாம் மக்களைப் பாதிக்கும் எந்த நிகழ்வுக்கும் அவர்கள் தெருவில் நின்று போராட வேண்டியிருக்கிறது. ஆனால், வங்கி வாடிக்கையாளர்களின் நிலைமை "கையறு நிலை'தான்.
1969-க்கு முன் எல்லா வங்கிகளும் தனியார் துறையில் இருந்தபோதும், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு மேலோங்கியிருந்தது. இப்போது தனியார் வங்கிகள் தன்னிச்சையாக பல முடிவுகள் எடுக்கின்றன. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வாய் மூடி இருக்கின்றன. இந்த நிலைமை மாற வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பு போலிருக்கும் வாடிக்கையாளருக்கு இன்னல் தரக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
மின் தடை புகார் மையம் துரிதமாக செயல்படுமா?

கோடை துவங்கியதால், மின் தடை புகார்கள் மீது, துரித நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை, காஞ்சி, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், சேலம், வேலுார், கரூர், திருப்பூரில், மின் வாரியம் சார்பில், கணினிமய மின் தடை நீக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன

. இந்நகரங்களில் வசிக்கும் நுகர்வோர், மின் தடை ஏற்பட்டால், '1912' என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அந்த புகார், மின் தடை நீக்க பிரிவு அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். மழை மற்றும் கோடை காலங்களில், மின் சாதன பழுது காரணமாக, அடிக்கடி மின் தடை ஏற்படும். சமீபகாலமாக, கணினிமய மையத்தில் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இந்நிலையில், வெயில் கடுமையாக உள்ளதால், மின் தடை புகார் மீது, கணினி மையம் துரித கதியில் நடவடிக்கை எடுக்குமா என்ற சந்தேகம், நுகர்வோரிடம் எழுந்துள்ளது. 

இதுகுறித்து, மின் நுகர்வோர்கள் கூறுகையில், 'கணினி மையத்துக்கு புகார் தெரிவிக்க போன் செய்தால், எப்போதும், 'பிசி'யாக இருப்பதாக தகவல் வருகிறது; பொறியாளர்களும் போனை எடுப்பதில்லை' என்றனர்.
இதுகுறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது: கணினிமய புகார் மையத்தில், ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள், குறைந்த சம்பளம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்; ஓய்வும் கொடுப்பதில்லை. மேலும், அவர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்காமல், சில மின் ஊழியர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, கோடை காலத்தை முன்னிட்டு, கணினிமய புகார் மையங்களில் கூடுதல் ஊழியர்களை நியமித்து, புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
பா.ஜ., வெற்றியால் தமிழக அரசு கலக்கம் :
'நீட்' மசோதாவுக்கு கூடுதல் அழுத்தம் தருமா?



உ.பி., மற்றும் உத்தரகண்ட் சட்டசபை தேர்தல் களில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவுக்கு, தமிழக அரசு கூடுதல் அழுத்தம் தர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.




உ.பி., மற்றும் உத்தரகண்ட் சட்டசபை தேர்தல் களில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளதால், ஜூனில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், மாநில கட்சிகளை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 'ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களின் ஓட்டுகள் தேவை. எனவே, மத்திய அரசை, தங்கள் கோரிக்கைகளுக்கு பணிய வைக்கலாம்' என, முதல்வர் பழனிசாமி தலைமையிலான, தற்போதைய தமிழக அரசு கணக்கு போட்டிருந்தது. ஆனால், பா.ஜ.,வின் சமீபத்திய வெற்றி, நிலைமையை தலைகீழாக மாற்றி விட்டது.

உத்தரவு :

அதாவது, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' என்ற, தேசிய நுழைவு தேர்வு கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு தமிழக மாணவர்களை பாதிக்கும் என்பதால், நீட் தேர்வி லிருந்து மாநில மாணவர்களுக்கு விலக்கு அளிக் கும் வகையில், சட்டசபையில் மசோதா நிறை வேற்றப்பட்டு, அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த மசோதா தொடர்பாக, மத்திய அரசிடம் விளக்கம் கேட்ட பிறகே, அதற்கு ஜனாதிபதி ஒப்பு தல் அளிப்பார். தற்போதைய அரசியல் சூழல், பா.ஜ., வுக்கு மிக சாதகமாக மாறியுள்ளதால், முன்னர் போல, அ.தி.மு.க., அரசின் கோரிக்கை களுக்கு, பா.ஜ., பெரிய அளவில் ஆதரவு தெரிவிக் குமா, உடனடியாக செவி சாய்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சந்தேகம் :

மேலும், இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., உச்சநீதிமன்றத்தை அணுகினால், தமிழகத்துக்கு சாதகமான உத்தரவு கிடைக்குமா என்பது சந்தேகமே. எனவே, நீட் தேர்வு விலக்கு

விஷயத்தில், மத்திய அரசின் ஒப்புதலை பெற, தமிழக அரசு, வழக்கத்தை விட, கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசுடன் மோதல் போக்கை வளர்க்கா மல், ஆக்கப்பூர்வமாக இணைந்து செயல்படு வதும் அவசியம். அப்போது தான், மசோதாவுக் கான ஜனாதிபதியின் ஒப்புதலை விரைவில் பெற முடியும். இந்தப் பிரச்னை களால், தற்போது, பிளஸ் 2 தேர்வு எழுதும், அறிவியல் பிரிவு மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

'நீட்' தேர்வுக்கான விண்ணப்ப பதிவும் முடிந்து விட்டதால், மருத்துவ கனவில், பிளஸ் 2வில் சேர்ந்த மாணவர்கள், அடுத்து என்ன செய்வது என தெரியாமல், கவலை அடைந்துள்ளனர்.

NEWS TODAY 21.12.2025