Tuesday, March 14, 2017

ராமேஸ்வரம் ரயில் ரத்து

மதுரை: மானாமதுரை -- ராமேஸ்வரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால் மார்ச் 15 முதல் மே 3 வரை பகுதி பகுதியாக சில ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.வண்டி எண் 56829 திருச்சி - -- ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் மானாமதுரை -- - ராமேஸ்வரம் இடையே மார்ச் 15 முதல் 22 வரை ரத்து செய்யப்படுகிறது.ராமேஸ்வரம் --- திருச்சி பாசஞ்சர் ரயில்(56830), ராமேஸ்வரம் - -- மானாமதுரை இடையே மார்ச் 29, ஏப்.,5 மற்றும் ஏப்.,12ல் ரத்து செய்யப்படுகிறது.மதுரை - -- ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில்(56821), மானாமதுரை - -- ராமேஸ்வரம் இடையே ஏப்.,19, 26ல் ரத்து செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் - -- மதுரை பாசஞ்சர் ரயில்(56822), ராமேஸ்வரம் - -- மானாமதுரை இடையே மே 3ல் ரத்து செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் - -- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக திருச்சி
சென்றடையும்.
இன்று முதல் கொண்டாடுவோம், 'ஹேப்பி பை டே!'


கோவை, 'பை' என்றால் பொருட்கள் எடுத்துச் செல்லும் பை தான், அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஆனால் கணித நிபுணர்களிடம் கேட்டால், 'பை என்றால் கணிதத்தில் ஒரு முக்கிய எண் (π)' என்று, சரியாக சொல்லி விடுவார்கள்!

''எங்கெல்லாம் வட்ட வடிவம் தோன்றுகிறதோ, அங்கெல்லாம் 'π ' என்கிற இந்த முக்கிய எண் தோன்றுகிறது. இதன் மதிப்பு, 3.14. பெரும்பாலான பொருட்கள், வட்ட வடிவத்தில் காணப்படுவதால், இயற்கையோடு, பை பின்னிப் பிணைந்துள்ளது,'' என்கிறார், கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் உமாதாணு.

'கணிதம் இனிக்கும்' எனும், தனது சமீபத்திய புதிய கண்டுபிடிப்பின் வாயிலாக, பரவலாக அறியப்படுபவர் இவர். கணிதத்தில் மிக முக்கிய எண்ணாக, π விளங்குவதாலும், அதன் மதிப்பு தோராயமாக, 3.14 என வருவதாலும், மார்ச் 14 என்ற தேதி வாயிலாக, πயை அமெரிக்கர்கள் நினைவுகூர்கின்றனர்.
இது குறித்து உமாதாணு கூறியதாவது:

கன வடிவங்களான கோளம், கூம்பு, உருளை போன்றவற்றின், மேற்பரப்பு, கொள்ளளவு ஆகியவற்றை கணக்கிட, பை பயன்படுத்தப்படுகிறது. ஒரு கோளத்தின் சுற்றளவை, விட்டத்தால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பே π. இதை கண்டு பிடித்த கிரேக்க கணித மேதை ஆர்க்கிமிடீஸ், அவரது மொழியில், π என அடையாளப்படுத்திக் கொண்டார். இந்த அடையாளத்துக்கு தோராயமாக, 3.14 என்ற எண்ணை பயன்படுத்தினார்.

π-ன் மதிப்பு, கோள்களின் சுழற்சிக் காலம் போன்ற எண்ணற்ற முக்கிய விஷயங்களுக்கு பயன்படுகிறது.

வில்லியம் ஜோன்ஸ் என்ற கணித அறிஞர், 1706-ல் π என்ற எண்ணுக்கு இன்று நாம் பயன்படுத்தும் குறியீட்டை அறிமுகப்படுத்தினார்.
அன்றாட வாழ்வில் இதன் முக்கியத்துவத்தை, உலகுக்கு உணர்த்த, 1988 முதல் லேரி ஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர், பை தினத்தை முதலில் கொண்டாடினார். அமெரிக்காவில் சில மாகாணங்களில், π தினத்தைக் கொண்டாட, விடுமுறையே அளிக்கப்படுகிறது. πக்கு வட்டத்துடன் நேரடிதொடர்புள்ளதால், வட்ட வடிவில் கேக்குகள் மற்றும் இனிப்பு வகைகளை தயார் செய்து, விழா நிறைவு பெற்றதும் உண்டு மகிழ்வார்கள்.
இதன் மதிப்பை, பாபிலோனியர்கள் 25/8 என்றும், எகிப்தியர்கள் 256/81 என்றும், டாலமி என்ற அறிஞர் 377/120 என்றும், கிரேக்கக் கணித மேதை ஆர்க்கிமிடிஸ் 22/7 என்றும், சீனர்கள் 355/113 என்றும், இந்தியாவின் ஆர்யபட்டர் 62832/20000 என்றும் பின்பற்றினர்.

கணினியின் துணை கொண்டு பல அறிஞர்கள் π-ன் மதிப்பை இன்று, 13 டிரில்லியன் தசம இலக்கங்களுக்கு மேல் கண்டறிந்துள்ளனர். ஒரு கணினி, முறையாக வேலைசெய்கிறதா எனத் தெரிந்துகொள்வதற்கு, π-ன் தசம இலக்க கணக்கீடுகள் பயன்படுகின்றன.

தமிழகத்தில், வேலுார் பல்கலை மாணவர் ராஜ்வீர் மீனா, 2015 மார்ச் 21ல், π-ன் உண்மை மதிப்பை, கண்களை மூடிக்கொண்டு சரியாக ஒப்பித்து, புதிய கின்னஸ் சாதனை படைத்தார்.

கணிதத்தில் மிகவும் முக்கியமான π என்ற எண் குறித்து, நம் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பை பிறந்த நாளை, நம் பள்ளிகளிலும் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினால், இது போல் பல புதிய கணித கண்டுபிடிப்புகள், நம் மாணவர்களிடம் இருந்தும் உருவாகலாம்.
இவ்வாறு, உமாதாணு கூறினார்.

காதலர் தினம் போன்ற பயனற்ற நாட்களை கொண்டாடுவதை விட்டு, விட்டு, இன்று முதல் பள்ளிகள்தோறும், 'பை தினம்' கொண்டாடுவோம். எங்கே சொல்லுங்கள்... ஹேப்பி
பை டே!
பிரட்டும், கேக்கும் வாங்க இனி ஜெயிலுக்கு போங்க!

மதுரை: மதுரை மத்திய சிறையில், தண்டனை கைதிகளால், தயாரிக்கப்படும், பிரட், கேக் ஆகியவற்றை வெளிமார்க்கெட்டில் விற்க, அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இச்சிறையில், 1,500 கைதிகள் உள்ளனர். இதில், 600க்கும் மேற்பட்டோர் தண்டனை கைதிகள். இவர்கள் தண்டனை முடித்து வெளியில் சென்று, சுய தொழில் புரியும் வகையில், பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதில் அவர்களுக்கு, கணிசமான தொகை மாத வருவாயாக கிடைக்கிறது. சிறையில் அலுவலக கவர்கள், மழை கோட், இனிப்பு வகைகள், உற்பத்தி செய்யப்பட்டு, அரசு நிறுவனங்கள் மற்றும், 'பிரிசன் பஜார்' மூலம் விற்கப்படுகிறது.

இந்நிலையில் பேக்கிரி யுனிட் அமைத்து பிரட், கேக் தயாரித்து, அரசு மருத்துவமனை மற்றும் வெளிமார்க்கெட்டில் விற்க, ஜெயில் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: பேக்கிரி யுனிட் அமைக்க, 20 லட்சம் ரூபாயாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு ஒதுக்கீடு திட்டத்தின் கீழ், அரசிடம் கேட்டுள்ளோம். நிதி பெற்றதும் பணி துவங்கும். இது தவிர, பெண்கள் சிறைச்சாலையில், பெண் கைதிகளால், பல் பொடி தயாரிக்கப்பட உள்ளது.

சிவகங்கை மாவட்டம், புரசடை உடைப்பில், 100 ஏக்கரில், திறந்தவெளி சிறைச்சாலை செயல்படுகிறது. இங்கு, 10 கைதிகள் மட்டுமே உள்ளனர். இவர்கள் நாட்டுக்கோழி வளர்ப்பு, தர்ப்பூசணி, வெள்ளரி சாகுபடி செய்கின்றனர்.

சிறை கட்டடம் நீங்கலாக, 84 ஏக்கர் உள்ளது. இதில் சிறிய பரப்பில் மட்டும், கீரை மற்றும் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. மற்ற நிலங்களிலும், கரும்பு, மா, தென்னை போன்றவை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

தமிழகத்தின் பல இடங்களில், வெப்ப நிலை இயல்பை விட, 5 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.
வெப்பம் உயர்வு:

மார்ச் முதல் கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், வெப்ப நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரம், ஒரு வாரமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழையும் பெய்கிறது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, கரூர் மாவட்டம் பரமத்தியில், அதிகபட்சமாக, 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தமிழகத்தில், இயல்பை விட சராசரி வெப்ப நிலை, 5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.

மழை தொடரும் :

நேற்று காலையுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தேனி, கந்தர்வகோட்டை, சேத்தியாதோப்பு ஆகிய இடங்களில், 3; மதுரை தெற்கு, பேரையூர், புதுக்கோட்டை பெருங்களூர், சிவகிரியில், 2; பண்ருட்டி, வானுாரில் தலா, 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

'அடுத்த இரண்டு நாட்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களின் சில பகுதிகளில், இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

- நமது நிருபர் -

Monday, March 13, 2017


ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமிக்கு இஸ்லாமியர்கள் வரவேற்பு
March 13, 2017





கடலூர் மாவட்டம் கிள்ளையில் தீர்த்தவாரியில் பங்கேற்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமிக்கு இஸ்லாமியர்கள் வரவேற்பு அளித்தது மத நல்லிணக்கத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராகசுவாமி கோவில் மாசிமகத் திருவிழாவையொட்டி சுவாமி தீர்த்தவாரிக்காகத் தங்கக் கருட சேவையிலும் பின்பு யானை வாகனத்திலும் ஊர்வலம் வந்தார்.

கிள்ளையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தெரு வழியாக வந்தபோது, கிள்ளை தைக்கல் இஸ்லாமியர்கள் சுவாமிக்குப் பட்டுத் துண்டு அளித்து தர்காவில் தொழுகை செய்து வரவேற்றனர். பின்பு கிள்ளை கடற்கரையில் பொதுமக்கள் சார்பிலும் பூவராகசுவாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்து கோவில் திருவிழாவில் சுவாமிக்கு இஸ்லாமியர்கள் வரவேற்பு அளித்தது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

திருப்பதி கோவிலில் வரும் 28-ஆம் தேதி 6 மணி நேரத்துக்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து

March 13, 2017




திருப்பதி கோவிலில் வரும் 28-ஆம் தேதி 6 மணி நேரத்துக்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் வரும் மார்ச் 29-ஆம் தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்று உற்சவ மூர்த்திகளை தங்க வாசல் அருகில் எழுந்தருளச் செய்து ஆஸ்தானம், பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதனால் அதற்கு முந்தைய நாளான மார்ச் 28-ம் தேதி அன்று கோவில் முழுவதையும் சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அன்றைய தினம் சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள், ஏழுமலையானுக்கு தனியே நடத்த உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்ததுள்ளது.
நடப்பு நிதியாண்டின் (2016-2017) ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான முதல் 9 மாதங்களில் வங்களில் நடந்த மோசடிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது ரிசர்வ வங்கி. இதில் ஐசிஐசிஐ வங்கி முதலிடத்திலும் பாரத ஸ்டேட் வங்கி இரண்டாம் இடத்திலும் உள்ளது.


மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு  கிட்டதட்ட  2,400 தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிக் கிளைகளில் சந்தேகத்திற்குரிய வகையில் பணப்பரிவர்தனை நடந்துள்ளதாக சமீபத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.  இந்நிலை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள, வங்களில் நடந்த மோசடி பட்டியலில்  455 மோசடி வழக்குகளைக் கொண்டு தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி முதலிடத்தில் உள்ளது. 429 மோசடி வழக்குகளைக்கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இரண்டாமிடத்திலும்,  ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி 244 வழக்குகளும், ஹெச்டிஎப்சி வங்கி 237 வழக்குகளைக்கொண்டு முறையே 4 மற்றும் 5 வது இடத்தில் உள்ளது.

ரிசர்வ் வங்கி அளித்துள்ள இத்தகவலின்படி எஸ்பிஐ வங்கியில் மட்டும் ரூ.2,236.81 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளன. அடுத்ததாக பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.2,250.34 கோடிக்கும், ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.1998.49 கோடிக்கும் மோசடிகள் நடந்துள்ளன.

மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் பொறுத்தவரை எஸ்பிஐ வங்கியில் 64 அதிகாரிகளும், ஹெச்டிஎப்சி வங்கியில் 49 அதிகாரிகளும் ,ஆக்ஸிஸ் வங்கியில் 35 அதிகாரிகளும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த பட்டியல்கள் அனைத்தையும் நிதி அமைச்சகத்திடம்  ஒப்படைத்துள்ளது ரிசர்வ் வங்கி.

இதன்படி பார்த்தால் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தனியார்  மற்றும் பொதுத்துறை வங்கிகளில் மொத்தம் 3,870 மோசடிகள்  நடைபெற்றுள்ளன. இந்த மோசடிகளின் மொத்த மதிப்பு ரூ. 17,750.27 கோடி என்றும் தெரியவந்துள்ளது. நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்கு பின் மட்டும் இதுவரை 400 வங்கி அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
Categories : இந்தியா : இந்தியா

NEWS TODAY 21.12.2025