
Thursday, March 16, 2017
பாம்புகளின் அன்பன் பூனம் சந்த்... பாதியில் மரித்த பரிதாபம்!

கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த பூனம் சந்த் ஜெயின் சமூகத்தைச் சார்ந்தவர். 40 வயதுகளைக் கடந்து கொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயது இளைஞர். புதுவை தமிழ்நாடு எல்லை அருகே பாவூர் என்ற ஊரில் துணி வர்த்தகம் செய்ய புலம் பெயர்ந்து வந்த அவரது பெற்றோரோடு இவரது வாழ்க்கையும் அந்தப் பகுதியிலேயே தொடங்கியது. மனைவி, குழந்தைகள் என குடும்பத்தோடு வாழ்ந்தாலும்கூட விலங்கினங்களின் மீதான இவரது அக்கறை முக்கியமானது. நாய்கள் வளர்ப்பது, இனப்பெருக்கம் செய்து விற்பது என்பதையே பகுதி நேரத் தொழிலாக மாற்றிக்கொள்ளும் அளவுக்கு மாற்றிவிட்டது, அது வருவாய்க்கான வழி வகை என்றாலும் குடியிருப்புப் பகுதிகளில் உலவும் பாம்புகளைப் பிடித்துக் கொண்டு காப்புக் காடுகளில் விடுவது என்பதை முழு நேர சேவையாக மாற்றிக்கொண்டுவிட்டார்.
கடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பாம்புகள் குடியிருப்புப் பகுதிகள், அலுவலகங்களுக்குள் நுழைந்து விட்டாலும் உடனே இவரை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம்.
உடனடியாகச் சென்று அதைப்பிடித்து வந்து துணிப்பைகளில் கட்டி காலி அறை ஒன்றில் வைத்துக்கொள்வார். பின்னர், ஏதாவது வாகனம் கிடைக்கும்போது அவற்றைக் கொண்டுபோய் காடுகளில் விட்டுவிடுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார்.
மாவட்ட ஆட்சியர்கள் ஒன்றிரண்டு பேர் இவருக்கு வாகனங்கள் கொடுத்து உதவுவது, ஊக்கப்படுத்துவது என்று இருந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு வரும் பாம்புகள் தொடர்பான அழைப்புகளுக்குக்கூட முகம் சுளிக்காமல் சென்று பாம்புகளைப் பிடித்துகொண்டு பாதுகாப்பது பூனத்தின் ஒரு கிரேசி சேவையாகவே இருந்தது.
இதற்காக அவர் பணம் பெற்றுக் கொள்வது கிடையாது. இவரது பாம்புப் பிடிச் சேவையின்போது கட்டுவிரியன் ஒருமுறையும், நாகங்கள் இரண்டு முறையும் கடித்துள்ளன. எனினும், காப்பாற்றப்பட்ட நிலையில் அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தொடர்ந்து பாம்புகளைப் பிடித்து காடுகளில் விடும் பணியைச் செய்து வந்தார்.
இத்தகைய சூழலில்தான் கடந்த புதன் கிழமை வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவர், மயக்கம் வருவதாகக் கூறியபடியே சரிந்தார். உயிர் பிரிந்து விட்டது. மாரடைப்பே இறப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஜெயின் சமூகத்தைச் சார்ந்த சைவ உணவை மட்டுமே உண்ணும் வழக்கமுடைய, 45 வயதைக்கூட இன்னமும் கடக்காத பூனத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பதுதான் அவரைப் பற்றி அறிந்தோருக்கு அதிர்ச்சி அளித்த செய்தி.
பூனத்தின் சேவையில் எந்தவித குறையும் கிடையாது, ஆனால் அவர் முறையான பாதுகாப்பின்றி பாம்புகளைக் கையாண்டதால் பாம்புகள் கடித்த நிலையில் அவரது உடலில் விஷத்தின் தன்மை இருந்திருக்க வேண்டும் என்றும் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்தபோது சிறிது சிறிதாக அந்த விஷம் ரத்தத்தை உறைய வைத்து மாரடைப்பை உருவாக்கியிருக்கவேண்டும் என்றும் அச்சம் கொள்கின்றனர் அவரது நண்பர்கள்.
பூனம், பாம்புகளை மட்டுமல்ல, ஆமைகள், மாடுகளையும் பாதுகாத்து வந்தார். தானே, வர்தா புயல்களின்போது சரிந்து விழுந்த மரங்களில் வாழ்ந்த பறவைகள் உள்பட பல உயிரினங்களைக் காப்பாற்றி உள்ளார்.
பூனத்தைப் போன்றவர்கள் இல்லை எனில், பாம்புகளை மிருகக்காட்சி சாலையில்தான் பார்க்கவேண்டும் என்பதுதான் நிதர்சனம். ஆனால், அதே சமயம் பாம்புகளைப் பாதுகாக்கும் பூனம் போன்ற இளைஞர்களைப் பாதுகாக்கவேண்டிய கடமை அரசுக்கும், வனத்துறைக்கும் மட்டுமல்ல சமூகத்திற்கும் உண்டு.
#Liveupdates தமிழக பட்ஜெட் : 2017-18-ல் பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் இல்லை

நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் உரையில் இருந்து.....
* முதலமைச்சர் மருத்துவ சிகிச்சைகளுக்கான காப்பீடு ரூ.2 லட்சம் உயர்வு.
* முதல் தலைமுறை பட்டதாரி திட்டத்துக்கு ரூ.680 கோடி ஒதுக்கீடு.
* தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ரூ22,815 கோடி கடனை அரசு ஏற்றுள்ளது.
* சட்டப்பேரவையை வருகின்ற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.
* பட்ஜெட் உரை முடிந்தது. 2 மணி நேரம் 50 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார் நிதி அமைச்சர் ஜெயக்குமார்.
* ஜி.எஸ்.டி முறை அமலுக்கு வர உள்ளதால் வரிச் சலுகைகள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.
* ஓய்வூதியம் திட்டத்துக்கு ரூ.22,394 கோடி.
* பிற மாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு வாடகை குடியிருப்புகள் அமைக்கப்படும்.
* ஜி.எஸ்.டி வரியை நடைமுறைப்படுத்தும் போது, தமிழகம் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும்.
* தமிழ்நாடு நகர்ப்பு மருத்துவ திட்டத்துக்கு ரூ.126 கோடி ஒதுக்கீடு.
* பிறந்த குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை கண்டறிய சென்னை, சிவகங்கையில் முன்னோடித் திட்டம்.
* மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 1,000-ல் இருந்து 2,000 ஆக உயர்வு.
* 10 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5 கோடி செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி.
* சமூக பாதுகாப்பு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.3,790 கோடி.
* 4,778 ஏரிகள், 47 அணைக்கட்டுகள் புனரமைக்கப்படும்.
* உழைக்கும் மகளிருக்கு ரூ.20,000 மிகாமல் இரு சக்கர வாகனம் வாங்க 50% மானியம் வழங்கப்படும்.
* அனைத்து திருமண உதவித் திட்டத்துக்கு ரு.723 கோடி ஒதுக்கீடு.
* ஜவ்வாது மலையில் 2 உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும்.

* முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் மேலும், 312 சிகிச்சைகள் சேர்ப்பு.
* பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி 755-ல் இருந்து 900 ஆக உயர்வு.
* கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி 875-ல் இருந்து 1000 ஆக உயர்வு.
* உயர்கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு ரூ.1,580 கோடி ஒதுக்கீடு.
* இலவச மடிக்கணினி திட்டத்துக்கு ரூ.758 கோடி ஒதுக்கீடு.
* 2017-18-ல் பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் இல்லை.
* பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச திட்டங்களுக்கு ரூ.1,503 கோடி ஒதுக்கீடு.
* வெள்ளத்தடுப்பு, நீர் ஆதார திட்டங்களுக்கு ரூ.445.19கோடி ஒதுக்கீடு.
* 150 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
* 100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
* பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 352 கோடி ஒதுக்கீடு.
* 1 லட்சம் மகளிர் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்குவதற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ. 1,348 கோடி ஒதுக்கீடு.
* குடிசை மாற்று வாரிய பழைய குடியிருப்புகள், மறு கட்டுமானம் செய்யப்படும்.
* மருத்துவக் கல்வி பட்டமேற்படிப்பு இடங்கள் 1,188-ல் இருந்து 1,362 ஆக உயர்வு.
* 12 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.
* பசுமைகள் வீடுகள் திட்டத்தில் ரூ.420 கோடியில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.
* ரூ.43. 76 கோடியில் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
* பிரதம மந்திரி வீட்டு, வசதி திட்டத்தில் 1.70 லட்சம் மதிப்பில் 1.76 லட்சம் வீடுகள்.
* குறைந்த விலையிலான பொது மருந்து கடைகள் அமைக்கப்படும்.
* சிறு,குறு,நடுத்தர தொழில்துறைக்கு ரூ.532 கோடி ஒதுக்கீடு.
* தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 24.28 லட்சம் கழிவறைகள் கட்டப்படும்.
* தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 50 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்படும்.
* நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு.
* சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்துக்கு ரூ.61 கோடி ஒதுக்கீடு.
* முதலீடு ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ.1,295 கோடி.
* வறட்சியை சமாளிக்க புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும். ஏற்கெனவே உள்ள ஆழ்துளை கிணறுகள் புனரமைக்கப்படும்.
* மகப்பேறு உதவித் திட்டத்துக்கு ரூ,1,001 கோடி ஒதுக்கீடு.
* சுற்றுலாத்துறை மேம்படுத்த ரூ.403 கோடி ஒதுக்கீடு.
* ஊரக வளர்ச்சிக்கு ரூ. 16,665 கோடி ஒதுக்கீடு.
* தமிழக மக்கள் தொகையில் 48% பேர் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர்.
* அட்டல் நகர்ப்புற புத்துணர்வு திட்டத்துக்கு ரூ. 1,400 கோடி நிதி.
* இலவச, வேட்டி சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ.490 கோடி
* உதகையில் ரூ. 5 கோடி செலவில் நகரக விற்பனை கண்காட்சித் திடல்.
* பிரதம மந்திரி கிராமப்புற சாலைத்திட்டத்திற்கு ரூ.758 கோடி ஒதுக்கீடு.
* தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி ரூ.1,00,300 கோடியை எட்டும்.
* திறன்மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ.1,200 கோடி.
* கைத்தறி துறைக்கு ரூ. 1,230 கோடி, கதர் துறைக்கு ரூ.194 கோடி
* உபரி காற்றாலை மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு கொண்ட செல்ல சிறப்பு வழித் தடம்.
* தருமபுரியில் ஒரு உணவுப் பொருள் குழுமம் வழங்கப்படும்.
* மூலதன மானியம் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்க தொழில்துறைக்கு ரூ.1,950 கோடி ஒதுக்கீடு.
* காஞ்சிபுரம் மற்றும் கரூரில் தலா ஒரு ஜவுளி குழுமம் அமைக்கப்படும்.
* ராமேஸ்வரத்தில் கடல் உணவுப் பொருள்கள் குழுமம் அமைக்கப்படும்.

* இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த 18 மீனவ படகுகளுக்கு தலா ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு.
* சோழிங்கநல்லூரில் புதிய தொழில்நுட்ப பூங்கா.
* தொழில் துவங்குவதற்கான ஒற்றைச் சாளர முறை மேலும் வலுப்படுத்தப்படும்.
* கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் திட்டம் தொடர்ந்து வழங்கப்படும்.
* காஞ்சிபுரத்தில் ரூ.130 கோடி செலவில் 330 ஏக்கர் பரப்பளவில் மருத்துவப் பூங்கா அமைக்கப்படும்
* 1,000 கிராமப்புற கோயில்களை புதுப்பிக்க ரூ 1 லட்சம் செலவில் கிராம கோயில் புதுப்பிக்கப்படும்.
* நீர்வளத்துறைக்கு ரூ.4,971 கோடி ஒதுக்கீடு.
* அவினாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு.
* மெட்ரோ ரயில் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வரை விரிவு.
* நிதிப்பற்றாக்குறை ரூ.2.79 சதவிகிதமாக இருக்கும்.
* 107.5 கி.மீ தொலைவுக்கு 3 புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்க நடவடிக்கை.
* உதய் மின் திட்டத்தில் இணைந்ததால் கடன் வட்டி குறைந்து ரூ. 1,335 கோடி சேமிக்கப்படும்.
* உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்தாண்டு நடத்த ரூ.75 கோடி ஒதுக்கீடு.
* சாலைகள் அகலப்படுத்த மற்றும் புதிய பாலங்கள் கட்ட ரூ.3,100 கோடி ஒதுக்கீடு.

* 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்.
* ஆண்டுதோறும் தனிநபர் மின்சார பயனீட்டு அளவு அதிகரித்து வருகிறது.
* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.10,067 கோடி.
* சென்னை, புறநகர் சாலைத் திட்டங்களுக்கு ரூ.744 கோடி.
* ராமநாதபுரம் மூக்கையூரில் புதிய மீன்பிடி துறைமுகம்.
* குடிமராமத்து பணிகளுக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* சாலை பாதுகாப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* நீர்வள ஆதராங்களுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு.
* தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவை, 34 லட்சம் ஏக்கரில் இருந்து 39 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.
* உலகவங்கி உதவியுடன் ரூ. 3,042 கோடியில் நீர், நில வளத்துக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* தாமிரபரணி, நம்பியாறு அணைகளை இணைப்புக்கு ரு.300 கோடி
* ரேஷன் கடையில் பருப்புகள் தொடர்ந்து மானிய விலையில் வழங்கப்படும்.
* உணவுப் பொருள் மானியத்துக்காக ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.
* அரசின் சார்பில் விலைக் கட்டுப்பாடுக்கு புதிய பொருள்கள் விற்கப்படும்.
* ஏழைகளுக்கு 12,000 பசுகள், 6,000 ஆடுகள் வழங்கப்படும்.
* கடல் அரிப்பை தடுக்க ரூ.20 கோடியில் புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தப்படும்.
* 25 கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
* சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.3,790 கோடி
* மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி ஒதுக்கீடு.
* தொழிலாளர் நலத்துறைக்கு 1,010 கோடி
* மீனவர்களுக்கு ரூ. 85 கோடி செலவில் 5,000 வீடுகள்.
* மீன்பிடி தடைக்காலத்தில் ரூ.5,000 உதவித்தொகை.
* படகு, டீசல் அளவு 15,000 லிட்டரில் இருந்து 18,000 லிட்டராக உயர்வு.
* விதை உற்பத்தியை வலுப்படுத்த ரூ.50 கோடியில் திட்டம்.
* ஆவின் பால் பொருள்களை பிரபலப்படுத்த 200 புதிய பாலகங்கள்.
* நாட்டு மாடு இனப்பெருக்கத்துக்கு புதிய திட்டம்.

* வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட கூடுதலாக 590 மையங்கள் அமைக்கப்படும்.
* உழவர் உற்பத்திக் குழுவுக்கு ரூ.100 கோடி.
* கோழிப்பண்ணை வளர்ச்சிக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு
* 2 லட்சம் விவசாயிகள் பயன்படும் வகையில் உழவர் உற்பத்திக் குழு அமைக்கப்படும்.
* உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் நிவாரண உதவி ரு.20,000 ஆக உயர்வு.
* பயிர் காப்பீடு மானியத்திற்கு ரூ. 522 கோடி நிதி ஒதுக்கீடு
* பள்ளிக் கல்வித்துறைக்கு ரு.26,932 கோடி
* உயர்க் கல்வித்துறைக்கு ரூ. 3,680 கோடி
* பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ரூ.988 கோடி நிதி
* 2017-18-ல் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை தயாரிக்க திட்டம்.
* அகதிகள் நலனுக்கு ரூ.116 கோடி.
* காவல்துறை வீட்டு வசதிக்கு ரூ.450 கோடி
* குறைந்த நீரில், நீடித்த நவீன கரும்பு சாகுபடிக்கு ஊக்குவிக்கப்படும்.
* பழங்குடியினர் துறைக்கு ரூ.265 கோடி
* நீதித்துறை மேம்பாட்டுக்கு ரூ.983 கோடி
* ஏழைக்குடும்பங்களுக்கு 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
* 10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
* தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி
* இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.165 கோடி.
* ஆதி திராவிடர் நலன்துறைக்கு ரூ.3,009 கோடி
* இ- சேவை மையங்கள் மூலம் 500 விதமான சேவைகள்

* மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2-ம் கட்ட பணிக்கான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
* அவினாசி அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியை, மாநில அரசு எதிர்நோக்கியுள்ளது.
* சுகாதாரத்துறைக்கு ரூ.10, 158 கோடி
* சிறைத்துறைக்கு ரூ.282 கோடி
* காவல்துறைக்கு ரூ 6,483 கோடி
* உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி.
* மின்சாரம் எரிசக்தி துறைக்கு ரூ.16,998 கோடி
* கோவை, திருச்சி, மதுரையில் 1 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி
* நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ. 13,996 கோடி
* தமிழ்வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு
* தமிழ்பல்கலைக்கழகத்துக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு
* தொழில்துறைக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கீடு
* 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி
* கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,161 கோடி
* தமிழக அரசின் மொத்த கடன் ரூ 3,14,166 கோடி
* உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு.
* மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
* ஊரகப்பகுதிகளில் 135 இடங்களில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* ஐடி துறைக்கு ரூ.116 கோடி
* போக்குவரத்துறைக்கு ரூ.2,191 கோடி
* வணிகவரி மூலம் ரூ.77,234 கோடி வருவாய் கிடைக்கும்.
* நெடுஞ்சாலை துறைக்கு 10,067 கோடி ஒதுக்கீடு
* குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி.
* அரசின் மொத்த செலவு ரூ. 1,75,351 கோடி.
* 2017-18-ல் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும்
* ஜெயலலிதா அளித்துள்ள 164 வாக்குறுதிகளில் 60 வாக்குறுதிகள் நிறைவேற்றம்.
* கூட்டுறவுத்துறைக்கு ரூ.1,830.50 கோடி.
* மகப்பேறு உதவி ரூ.12,000 முதல் 18,000 ஆக உயர்வு
* கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி புதிய கடன் வழங்க நடவடிக்கை.
* மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி
* மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி.
* மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 99,590 கோடி.
* தமிழகத்தில் ரூ. 3, 14, 366 கோடி கடன்.
* தமிழகத்தில் ரூ. 41,977 கோடி நிதிப்பற்றாக்குறை.
* 2017-18-ல் ரூ.15,930 கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்று ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தபோது கூறினார்.
* எதிர்க்கட்சிகள் அமைதி காக்க பேரவைத் தலைவர் வலியுறுத்தல்
* சசிகலா பெயரை குறிப்பிட்டதை அவை குறிப்பில் இருந்து நீக்க எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்.
* சட்டசபையில் மாண்புமிகு சின்னம்மா என்று ஜெயக்குமார் சொன்னதால், எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு. அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
* சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழாரம்.
* சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது.
* முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் சட்டசபைக்கு வருகை.
* சட்டசபைக்குள் நுழைந்த போது, காவல்துறை அதிகாரிகளின் பெயரைக் கேட்டார் மு.க.ஸ்டாலின்

படம்: கே.ஜெரோம்
* தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வருகை.
* எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டசபைக்கு வருகை.
*ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்
* ஜெயலலிதா நினைவிடத்தில் நிதிநிலை அறிக்கையை வைத்து, நிதி அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலிசெலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், ’மக்களுக்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்’, என்றார்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. பேரவைக் கூட்டத்தில் காலை 10.30 மணிக்கு, 2017-2018 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல்செய்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க அரசு தாக்கல்செய்யப்போகும் பட்ஜெட் இது. அதுமட்டுமின்றி, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்.

படம்: கே.ஜெரோம்
இன்று, பட்ஜெட் தாக்கல்செய்யப்பட உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கோட்டை நுழைவுவாயில் மற்றும் தலைமைச் செயலக வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
''அழகு என்பது முகம் மட்டுமல்ல!''- ஆசிட் வீச்சில் மீண்டெழுந்த லெட்சுமி #AcidAttackSurvivor

ஆணாதிக்கத்தால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி தன் கோலத்தை இழந்தவர் டெல்லியைச் சேர்ந்த லெட்சுமி அகர்வால். திருமணம் செய்ய வற்புறுத்திய 32 வயது ஆணை மறுத்து, தன் உரிமையை வெளிப்படுத்தியது மட்டுமே லெட்சுமி செய்த குற்றம். அதற்காகச் சமூகத்தால் குற்றவாளி போல ஒதுக்கப்பட்டு, மறைவு வாழ்க்கை வாழ்ந்தார். வலிகளைத் தாண்டிய வலிமையில் போராடியவர். இன்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்’ அமைப்பு மூலம் நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக திகழ்கிறார்.
லெட்சுமியின் நெடிய போராட்டத்தின் விளைவாக, ஆசிட் வீச்சைத் தடுக்க பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த விதத்திலும் வெறுக்கத்தக்கவர்கள் இல்லை என்பதை உலகுக்கு வலியுறுத்தும் விதமாக, ஆசிட் வீச்சுக்குள்ளனவர்களுக்கான பேஷன் ஷோ நடத்தி வெற்றி கண்டவர் லெட்சுமி. பாதிக்கப்பட்டவர்களை மாடல்களாக முன்னிறுத்தி காலண்டர் வெளியீடு உட்பட பல்வேறு வழிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரது போராட்டத்தில் உறுதுணையாக இருந்த அலோக் திக்ஷித்துடன் ‘லிவிங் டு கேதர்’ வாழ்க்கையில் இருக்கிறார். இவர்களுக்கு ‘பிக்கு’ என்ற இரண்டு வயது பெண் குழந்தை உண்டு. லெட்சுமியின் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் அங்கீகரிக்கும் வகையில், அமெரிக்க அரசு ‘உலகின் தைரியமான பெண்’ என்ற விருதை வழங்கிக் கௌரவித்துள்ளது. ‘விவா அண்டு திவா’ தனது நிறுவன மாடலாக இவரை அங்கீகரித்துள்ளது. ஒருபுறம் ‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்’ இயக்கம். மறுபுறம் பொறுப்பான அம்மா என சுறுசுறு தேனீயாக இருந்தவருடன் போன் டாக் செய்தோம்.

'‘பள்ளிப் பருவத்தில் எனக்குள் ஆயிரம் கனவுகள் இருந்தது. அந்தக் கனவுகளைச் சிதைப்பது போல இந்தக் கோர சம்பவம் நடந்தது. அம்மா இல்லை. அந்தச் சமயத்தில் அப்பா மட்டும் உடன் இருந்தார். மருத்துவச் செலவுக்கே வழியில்லை. என் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக வீட்டுக்குள் முடங்கினேன். வறுமை என்னைத் துரத்தியது. எந்தத் தவறும் செய்யாத நான் குற்றவாளியைப் போல வீட்டுச் சிறையில் முடங்கினேன். தவறு செய்தவனோ, சுதந்திரமாக வெளியுலகில் உலாவினான். ஒரு கட்டத்தில் நீதி கேட்டு நீதிமன்ற படிகளில் ஏறினேன். அந்தச் சமயத்தில் சட்டரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலர் உதவிக்கு வந்தனர். பத்திரிகை நண்பராக அலோக் திக்ஷித் அறிமுகமானார். ஸ்டேஷன், கோர்ட் என போராட்டமான வாழ்வில் தோள் கொடுத்த தோழரானார். அவலட்சணமான என் முகத்தைப் பார்ப்பதே பாவம் என ஒதுங்கியவர்கள் மத்தியில், என் மன அழகை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு என்னுடைய சுகதுக்கங்களில் பங்கெடுத்தார். எங்களுக்குள்ளான புரிதல், காதலாக மலர்ந்தது. திருமண பந்தத்தில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. எந்த நிபந்தனையும் இல்லாத ‘லிவிங் டு கேதர் லைப்’ னூலம் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். எங்கள் அன்பின் சாட்சியாக மகள் ‘பிக்கு’ இருக்கிறாள்'' என்கிறவர் குரலில் மலர்ச்சி.
‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்’ இயக்கப் பணிகள் பற்றி எனக் கேட்டதும், '‘எங்கள் அமைப்பில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட முப்பது பெண்கள் உள்ளனர். நாங்கள் ஒன்றிணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்துவருகிறோம். பெண்கள் எந்தச் சூழலிலும் வன்முறைக்கு உள்ளாகக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். சமீபத்தில், எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்தோம். ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்கள் தங்கள் அழகை இழப்பதோடு, வீச்சின் தன்மைக்கேற்ப கண், மூச்சுக்குழல் எனப் பல்வேறு உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. அதனால், தற்கொலை எண்ணம் மேலோங்கி இருக்கும். அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி, தேவையான உதவிகள் செய்து, கவுன்சிலிங் அளிக்கிறோம். அமைப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் நீதி கேட்டு சட்டப் போராட்டம் செய்துவருகிறோம். எங்களின் தொடர்ந்த முயற்சியின் விளைவாக சில விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், நாங்கள் அடைய வேண்டிய தூரம் வெகு தூரத்தில் உள்ளது.''

''உங்கள் குழந்தை ‘பிக்கு’ பற்றிச் சொல்லுங்களேன்'' என்றதும், '‘க்யூட் சுட்டி. அவள் அப்பாவின் பயங்கர செல்லம். எந்த நேரமும் அவளைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். துறுதுறுவென ஓடிக்கொண்டிருப்பாள். எங்கள் வாழ்வின் வசந்தம் அவள். அவள் விரும்பும் வாழ்க்கை அவள் வாழ வேண்டும். குழந்தையைக் கவனிப்பது என்பது, அவ்வளவு எளிதான காரியமல்ல. என் பெரும்பாலான நேரத்தை அவளிடம்தான் செலவழிக்கிறேன். குழந்தையைக் கவனிக்கவேண்டிய சூழல் இருப்பதால், ‘மாடல்’ வாய்ப்பைத் தேடவில்லை. அழகு என்பது முகத்தில் மட்டுமல்ல. வேறு வடிவங்களிலும் உணர்த்த முடியும்... உணர முடியும்’ - கம்பீரமாகவும் பளீர் எனவும் ஒலிக்கிறது லெட்சுயின் குரல்!
- ஆர். ஜெயலெட்சுமி
யார் இந்த மருதுகணேஷ்? வேட்பாளராக தேர்வான ருசிகர தகவல் #VikatanExclusive
ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டதுக்குப் பின்னணியில் பல்வேறு ருசிகர தகவல்கள் உள்ளன. நேர்காணலின்போது ஸ்டாலின் மருதுகணேஷ் அளித்த பதில் அடிப்படையில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மருதுகணேஷின் மனம் திறந்த பதில்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் களைகட்டத்தொடங்கி விட்டது. அ.தி.மு.க.வின் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரன் களமிறங்குகிறார். தி.மு.க. சார்பில் யாருமே எதிர்பார்க்காத வழக்கறிஞர் மருதுகணேஷ், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், தினகரன் நாளிதழின் பகுதி நேர நிருபர். இவரது பாரம்பர்யமிக்க குடும்பம் தி.மு.க.வை சேர்ந்தது. ஸ்டாலினின் தீவிர விசுவாசி என்ற அடிப்படையில் மருதுகணேஷ் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கட்சியினர் சொல்கின்றனர். இருப்பினும் நேர்காணலின் போது மருதுகணேஷ் அளித்த பதிலே அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட காரணம் என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க. சார்பில் 17 பேர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணலில் மருதுகணேஷும் பங்கேற்றார். அப்போது, தொகுதி நிலவரங்களைப் புள்ளி விவரமாக மருதுகணேஷ் சொல்லியுள்ளார். மேலும், தி.மு.க.வுக்கு உள்ள வெற்றி வாய்ப்புகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார். இதெல்லாம் ஸ்டாலின் உள்பட வேட்பாளர் தேர்வுக் குழுவினருக்கும் ஆர்வத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நம்பிக்கை வைத்த ஸ்டாலின்
அடுத்து, ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு மருதுகணேஷ் அளித்த பதில் அனைவரையும் ஒரு நிமிடம் திக்குமுக்காட வைத்துள்ளது. தேர்தலில் நீங்கள் போட்டியிட்டால் உங்களால் எவ்வளவு செலவழிக்க முடியும் என்ற கேள்விக்கு மருதுகணேஷ், எனக்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் இருக்கிறது. இதனால் அதிகளவில் பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை என்று பதில் அளித்துள்ளார்.
இதன்பிறகு ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கேட்டுள்ளார். அப்போது சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்போது குறுக்கீட்ட ஸ்டாலின், மருதுகணேஷ் பெயரை முன்மொழிந்துள்ளார். அதற்கு ஒருசிலர் அவரால் எதிர்கட்சிகளின் போட்டிகளை சமாளிக்க முடியுமா, அதற்கான தகுதி இருக்கிறதா என்ற கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். தொகுதியில் அறிமுகம் உள்ள நபராக மருதுகணேஷ் இருக்கிறார் என்று ஸ்டாலின் சிபாரிசு செய்துள்ளார். இதன்பிறகே அன்பழகன், சம்மதம் தெரிவித்தாக சொல்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.
தி.மு.க.வின் பலே திட்டம்
முன்னாள் அமைச்சர் சற்குணப்பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் நேர்காணலில் பங்கேற்றபின்னர், தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார். அதுபோல இன்னும் சிலரும் அதே நம்பிக்கையில் இருந்தனர். இந்நிலையில், தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில், ஆர்.கே.நகர் வேட்பாளர் மருதுகணேஷ் என்ற பெயர் இடம் பெற்று இருந்தததைப்பார்த்த மருதுகணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர். உடனடியாக அன்பழகனையும், ஸ்டாலினையும் மருதுகணேஷ் சந்தித்து ஆசி பெற்றார். அடுத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரையும் சந்தித்தார். நிருபர், வழக்கறிஞர் என்று வலம் வந்த மருதுகணேஷ், முதல்முறையாக வேட்பாளராக ஆர்.கே.நகரில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் உள்கட்சிப் பூசலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றிக்கனியைப் பறிக்க தி.மு.க. தரப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காகத்தான் மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியினர் தெரிவிக்கின்றனர். மாவட்டச் செயலாளர் சேகர்பாபுவின் ஆசியும் மருதுகணேஷுக்கு இருந்ததால் அவரை வேட்பாளராக அறிவிக்க எந்தவித தடையும் ஏற்படவில்லை.
ஏரியா ரிப்போர்ட்டர் டு எம்.எல்.ஏ?
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா போட்டியிட்டார். இதனால் தி.மு.க. சார்பில் சிம்லா முத்துச்சோழன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பா.ம.க. சார்பில் சமூக சேவகர் ஆக்னஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் திருநங்கை தேவி ஆகியோர் போட்டியிட்டனர். பெண்கள் ஓட்டுக்களைக் கவர அனைத்து கட்சிகளிலும் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிம்லாவுக்கு தொகுதி மக்களிடையே போதிய அறிமுகம் இல்லாதததால் கடந்த முறை தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்ததாக, கட்சியினர் தலைமைக் கழகத்தில் காரணம் கூறினர். இதனால்தான் இந்தமுறை தொகுதிக்கு நன்றாக அறிமுகமான மருதுகணேஷ் மீது நம்பிக்கை வைத்து ஸ்டாலின் அவரைக் களமிறக்கி உள்ளார்.
தினகரன் நாளிதழின் ஏரியா நிருபராக பணியாற்றிய மருதுகணேஷ், ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றிப் பெற்றால் எம்.எல்.ஏ.வாகிவிடுவார். அ.தி.மு.க. கட்சியினரே சசிகலா குடும்பத்தினர் மீது அதிருப்தியில் உள்ள சூழ்நிலையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது, தங்களுக்கு சாதகமாக அமையும் என தி.மு.க.வினர் கருதுகின்றனர். அதே நேரத்தில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி உள்ளனர். இதில் ஏற்படும் சிக்கலும் தி.மு.க.வுக்கு பலமாக அமையும். ஓ.பன்னீர்செல்வம் அணி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோரால் ஓட்டுக்கள் சிதறவும் வாய்ப்புக்கள் உள்ளன. இதுவும் தங்களுக்கே சாதகமாக அமையும் என்று கணக்குப் போட்டுள்ளது தி.மு.க.
- எஸ்.மகேஷ்
Subscribe to:
Comments (Atom)
Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges
Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025, Faculty crunch sends salaries soari...
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
NBEMS launches official WhatsApp channel for real-time updates The platform will offer timely updates on examinations, accreditation, and tr...





