Monday, March 20, 2017

ரூ.10 லட்சம் 'டிபாசிட்':100 பேருக்கு 'நோட்டீஸ்'

வேலுார்;வேலுார் மாவட்டத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கியில் டிபாசிட் செய்த, 100 பேருக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.'உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, கடந்தாண்டு நவ., 8ல் பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் பொதுமக்கள், தங்களிடமிருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் செலுத்தி, புதிய நோட்டுகளை பெற்றனர். 

இந்நிலையில், வங்கிகளில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தவர்களின் பட்டியல், வங்கிகள் சார்பில், வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வருமான வரித்துறையினர், 18ம் தேதி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

வேலுார் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:வேலுார் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தவர்கள் விபரம் பெறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 100 பேருக்கு, இந்த பணம் எப்படி வந்தது என, விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அவர்களிடம் இருந்து உரிய பதில் வராத பட்சத்தில், அவர்கள் டிபாசிட் செய்த பணத்திற்கு, வருமான வரி கட்ட வேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பி.எஸ்.என்.எல்., புதிய சலுகை

சென்னை;பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 'பிரீ பெய்டு' வாடிக்கையாளர்களுக்கு, புதிய சலுகையை அறிவித்துள்ளது.'ஜியோ' நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. அதை சமாளிக்கும் வகையில், பி.எஸ்.என்.எல்., நிறுவனமும், பிரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து உள்ளது. அதாவது, 339 ரூபாய்க்கு, 'ரீசார்ஜ்' செய்தால், 28 நாட்களுக்கு, பி.எஸ்.என்.எல்., எண்ணிற்கு, இலவசமாக பேசிக் கொள்ளலாம். மேலும், தினசரி, 2, 'ஜிபி' அளவிற்கு, 'இன்டர்நெட் டேட்டா' இலவசம். மார்ச், 16ல் துவங்கி, மூன்று மாதங்களுக்கு, இந்த சலுகை அமலில் இருக்கும் என, பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது.
தொலைநிலை கல்வியில் பிஎச்.டி.,யா? இனி பேராசிரியர் வேலை கிடைக்காது

தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தவர்களை, கல்லுாரி பேராசிரியர்களாக நியமிக்க முடியாது' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துஉள்ளது. 

பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு, முதுநிலை கல்வியுடன், பிஎச்.டி., என்ற, ஆராய்ச்சி படிப்பு பட்டம் அல்லது, 'நெட், செட்' என்ற இரண்டு தேர்வுகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பல இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், நெட், செட் முடிக்காதோர் மற்றும் பிஎச்.டி., பட்டம் பெறாதோர், ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளனர். அவர்களை பணி நீக்கம் செய்யும்படி, யு.ஜி.சி., ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், சில கல்லுாரிகள், தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தோரை, குறைந்த சம்பளத்தில் பேராசிரியர் பணிக்கு அமர்த்தியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து, யு.ஜி.சி., புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், 'கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ, பிஎச்.டி., படித்து பட்டம் பெற்றவர்கள், 'ரெகுலர்' என்ற வகையில் சேர்க்கப்படுவர். 

'ஆனால், தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தோருக்கு, ரெகுலர் சான்றிதழ் கிடைக்காது. எனவே, அவர்களை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பேராசிரியர்களாக நியமிப்பதை ஏற்க முடியாது' என, தெரிவித்துள்ளது. - நமது நிருபர் -
சரியாக செயல்படாத கல்லூரி: பல்கலைகளை மூட திட்டம்

புதுடில்லி;சரியாக செயல்படாத, கல்லுாரி, பல்கலைகளை மூட அல்லது மற்றொரு கல்லுாரி, பல்கலையுடன் இணைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள கல்லுாரி, பல்கலைகளின் தரத்தை ஆராய, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் மூன்று பிரிவுகளாக தரம் பிரிக்கப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு பல்கலை மற்றும் கல்லுாரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். மிகச் சிறந்தவை, மேம்படுத்த வாய்ப்புள்ளவை, மிக மோசமானவை என, மூன்று வகைகளாக தரம் பிரிக்கப்படும்.மிகச் சிறந்த கல்லுாரிகளுக்கு கூடுதல் வசதிகள், மானியங்கள் வழங்கப்படும். மேம்படுத்த வாய்ப்புள்ள கல்லுாரி அல்லது பல்கலைக்கு, என்னென்ன முன்னேற்றங்கள் மேற்கொள்ள முடியும் என்ற ஆலோசனை வழங்கப்படும்.

மிக மோசமானவை பிரிவில் உள்ள கல்லுாரி, பல்கலைக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். யு.ஜி.சி.,யின் கட்டுப்பாட்டில் இவற்றை மேம்படுத்த வாய்ப்பு அளிக்கப்படும். அதன்பின்னும், முன்னேற்றம் ஏற்படாதபட்சத்தில், அவை மூடப்படும் அல்லது மற்றொரு கல்லுாரியுடன் இணைக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெற்றோரை கொடுமைப்படுத்தும் மகனை வீட்டை விட்டு வெளியேற்றலாம்'

புதுடில்லி :வயதான பெற்றோரை கவனிக்காமல், அவர்களை கொடுமைப்படுத்தும் மகனை, வீட்டில் இருந்து வெளியேற்றலாம் என, டில்லி ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

முதியோர் நலனுக்கான சட்டத்தில், அந்தந்த மாநில அரசு கள் தங்கள் மாநிலத்துக்கு ஏற்ற பிரிவுகளை சேர்த்து கொள்ளலாம். அதன்படி, டில்லி அரசு சட்டத்தில், தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டில் தங்கியிருந்து, தன்னை கொடுமைப்படுத்தும் மகனை வெளியேற்ற, பெற்றோருக்கு உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையில், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, டில்லியில் போலீஸ் வேலையை இழந்தவர் மற்றும் அவருடைய சகோதரர் மீது, அவர்களுடைய பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். தங்களை கவனிக்காததுடன், தங்களை கொடுமைப்படுத்தும் மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், அந்த மகன்களை வீட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, அந்த சகோதரர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு:பெற்றோரை கவனிக்காத மகன்கள், அவர்களை உடல் ரீதியாகவோ, வார்த்தைகளாலோ கொடுமைப்படுத்தினால், அந்த மகன்களை வீட்டை விட்டு வெளியேற்ற பெற்றோருக்கு உரிமை உள்ளது. 

சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு என்ற கட்டுப்பாட்டை விலக்கும் வகையில், டில்லி அரசு தகுந்த சட்டதிருத்தத்தை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு டில்லி ஐகோர்ட் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், 1967 வரை காங்கிரஸ் கட்சிதான் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தது.

மார்ச் 20, 03:00 AM

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், 1967 வரை காங்கிரஸ் கட்சிதான் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சியில் ஊழல் இல்லை, அன்றைய அமைச்சர்கள் எல்லாம் மிகஎளிமையான வாழ்க்கையை நடத்தி வந்தனர். அணைகள் கட்டி, கல்விக்கூடங்களைத் திறந்து, தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், சாலைவசதி, போக்குவரத்து வசதி என்று எத்தனையோ வளர்ச்சித்திட்டங்களை அவர்கள் நிறைவேற்றினாலும், காங்கிரஸ் கட்சி தோற்றதன் காரணம், மக்களின் உயிர்மூச்சான நாடித்துடிப்பு அதாவது அரிசி பிரச்சினை, மொழிப்பிரச்சினையில் சரியான கையாளுதலை மேற்கொள்ளாததுதான். இந்தி திணிப்பு போராட்டம் மாணவர்களைத் தட்டி எழுப்பியது. கடுமையாக நிலவிய அரிசிப் பஞ்சம் மற்ற முன்னேற்றங்களை எல்லாம் மக்களை மறக்க வைத்து, காங்கிரஸ் மீது கோபம் கொள்ள வைத்தது. அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. இந்த இரண்டு பிரச்சினைகளையும் தங்களுடைய ஆயுதங்களாக எடுத்துக் கொண்டு, தேர்தல் நேரத்தில் பிரசாரத்தை முடுக்கிவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘‘ஒரு ரூபாய்க்கு 3 படி லட்சியம், 1 படி நிச்சயம்’’ என்று தேர்தல் முழக்கங்களை வெளியிட்டவுடன், மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, அப்படியே தி.மு.க. பக்கம் சென்றது. யாரும் எதிர்பார்க்காதவகையில் தி.மு.க. வெற்றிபெற்றது.

அண்ணாவும் 6.3.1967–ல் ஆட்சிக்கு வந்தவுடன், முதல் வேலையாக அரிசி பஞ்சத்தைத் தடுக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ‘‘தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் அரிசி கடத்தலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரள எல்லையில் 24 மணிநேரமும் தீவிரக் கண்காணிப்புக்கு உத்தரவிட்டுள்ளேன். தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு அரிசி கடத்தலை முழுமையாக தடுக்கும் வகையில், எல்லைப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரளா மட்டுமல்லாமல், மைசூர், ஆந்திரா மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக எல்லையிலும் அரிசி கடத்தலைத் தடுக்க கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்’’ என்று கூறினார்.

அதேபோன்ற ஒரு நடவடிக்கையாக மணல்கொள்ளையை தடுக்க தமிழக அரசு உடனடியாக எடுக்கவேண்டும் என்ற கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் 45–க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்கின்றன. அனைத்தும் வளம்கொழிக்கும் ஆறுகள். அங்குள்ள மணலைப் பார்த்தால், கடற்கரை மணலைவிட அதிகளவில் இருக்கிறது. ஏனெனில், அங்கு ஆறுகளில் ஒரு கரண்டி மணலைக்கூட எடுக்கமுடியாத அளவுக்கு கடுமையான சட்டம் அமலில் இருக்கிறது.

இவ்வளவுக்கும் கேரளாவில், கட்டிடத் தொழில் ஜரூராக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அங்குள்ள ஒரு குக்கிராமத்துக்கு சென்றால்கூட புதிது புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு எல்லாம் மணல் எங்கே இருந்து வருகிறது என்று கேட்டால், தமிழ்நாட்டிலிருந்துதான் வருகிறது. அந்த மணலை வைத்துத்தான் கட்டிடம் கட்டுகிறோம் என்கிறார்கள். அங்கு மணல் விற்கும் இடங்களுக்குச் சென்றால், இது தாமிரபரணி ஆற்று மணல், பாலாற்று மணல், வைகை ஆற்றுமணல் என்பதுபோல நமது ஆற்று மணல் பெயர்கள் போர்டுகளில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு வழிகள் மூலம் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. ஏற்கனவே 2013–ம்ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.மணிக்குமார், தமிழக எல்லையைத்தாண்டி மணல் செல்லக்கூடாது என்று தடைவிதித்து ஒரு உத்தரவை பிறப்பித்தார். 

அந்த உத்தரவு அப்படியே காற்றில் கலந்த கீதமாகிவிட்டது. இப்போது திராவிட இயக்கத்தின் 50 ஆண்டுகாலம் கொண்டாடப்படும்வேளையில், அண்ணா எப்படி தமிழக அரிசி தமிழ்நாடு எல்லையைத்தாண்டி கேரளா உள்பட அண்டை மாநிலங்களுக்குச் செல்லாமல் தடை விதித்தாரோ அதேபோன்று, இப்போது மணலுக்கும் தடைவிதித்து கடுமையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது இன்றைய சூழ்நிலையில் உடனடியாக செய்யவேண்டிய அவசர அவசியமாகும்.

Sunday, March 19, 2017


'முதல்வர் எடப்பாடி அணியிலிருந்து வெளியேறுவேன்' : சூலூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ பகீர்

சூலூர் வெடி விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து வெளியேறி விடுவேன் என்று அ.தி.மு.க-வின் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் கூறியுள்ளார்.



கோவை சூலூர் தாலுகா பெரியகுயிலி எனும் ஊரில் நடந்த கல் குவாரி வெடி விபத்து சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவை செட்டிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வெடி விபத்து ஏற்பட்ட அந்த கல் குவாரியை சூலூர் எம்.எல்.ஏ.கனகராஜ் ஆய்வு செய்தார்.

இதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இது ஒரு விபத்தே இல்லை. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காததால்தான் அவர்கள் உயிரிழந்தனர். ஆனால், லஞ்சம் பெற்றுக் கொண்டு போலீசார், இதை விபத்து வழக்காக பதிவு செய்துள்ளனர். இந்த குவாரியின் உரிமையாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இது தொடர்பாக நான் சட்டசபையில் குரல் கொடுப்பேன். அந்த கல் குவாரியில் விபத்து நடக்க காரணமானவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்து வெளியேறி வேறு அணிக்கு சென்று விடுவேன். உரிய நடவடிக்கை எடுக்காவிடின் எனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்வேன். மூன்று மாதத்திற்கு ஒரு முதல்வர் வருவதால் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை" என்றார்.

தி.விஜய்

NEWS TODAY 23.12.2025