Thursday, March 23, 2017

தமிழகத்தில் ஆசிரியர்களின் தரம் மிகமோசமாக உள்ளதால், 5-ம் வகுப்பு மாணவர்களில் பலருக்கு தங்களது பெயரைக்கூட எழுத தெரியவில்லை என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் வேதனை தெரிவித்தார்.

மார்ச் 23, 04:30 AM

சென்னை,

திருச்சி எஸ்.வி.ஐ. கல்வியியல் கல்லூரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘2007-ம் ஆண்டு 50 மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி பெற்று எங்கள் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கூடுதல் மாணவர்களை சேர்க்க அனுமதிகேட்டபோது, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தென்மண்டல இயக்குனர் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

காளான் போல...

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் எந்திரத்தனமாக பி.எட், எம்.எட். படிப்புகளை நடத்துவதற்கு பல கல்வியியல் கல்லூரிகளுக்கு நாடு முழுவதும் அனுமதி வழங்கி வருவது உண்மை. இதனால் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள்கூட இல்லாமல், இதுபோன்ற கல்லூரிகள் நாடு முழுவதும் காளான்போல வளர்ந்து வருகின்றன.

இதில் மிகப்பெரிய கசப்பான உண்மை என்வென்றால், உள்கட்டமைப்பு வசதிகளே இல்லாத கல்லூரிகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் வழங்குவது குறித்து தமிழக அரசு எந்த கவலையும் கொள்வதில்லை.

எழுத தெரியவில்லை

அதனால் தமிழகத்தில் ஆசிரியர்களின் தரம் மிகமோசமாக உள்ளது. 5-ம் வகுப்பு மாணவர்களில் பலருக்கு தங்களது பெயரைக்கூட எழுத தெரியவில்லை. முறையான வகுப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத ‘லெட்டர் பேட்’ கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். பட்டத்தை ஆசிரியர்கள் பெறுவதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

திறமையான, பண்பாற்றல் மிக்க ஆசிரியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகக்குறைவாக உள்ளது. பாடத்தை தெளிவாக மாணவர்களுக்கு நடத்தக்கூடிய தகுதிகூட ஆசிரியர்களிடம் இல்லை. அதனால் பிற மாநில மாணவர்களுடன், தமிழக மாணவர்களால் கல்வியில் போட்டிபோட முடியவில்லை. கல்வி என்பது வணிக மயமாகிவிட்டது.

பொதுநலன்

எனவே, பொதுநலன் கருதி இந்த வழக்கில் டெல்லியில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் இயக்குனர், தமிழக உயர் கல்வித்துறை செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக பதிவாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் ஆகியோரை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன். அவர்கள் பின்வரும் கேள்விகளுக்கு விரிவான பதிலை மனுவாக தாக்கல் செய்யவேண்டும்.

நாடு முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி, பி.எட்., எம்.எட்., ஆகிய படிப்புகளை நடத்தும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், கல்வியியல் கல்லூரிகள் எத்தனை உள்ளன? தமிழகத்தில் எத்தனை உள்ளன? கடந்த 10 ஆண்டுகளில் இந்த பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்? தமிழகத்தில் எத்தனை பேர் பட்டம் பெற்றுள்ளனர்?

27-ந் தேதிக்குள் பதில்

இதில் எத்தனை பேர் ஆசிரியர் வேலை கிடைக்காமல் காத்துக்கிடக்கின்றனர்? இந்தியாவிலும், தமிழகத்திலும் இதுபோன்ற கல்லூரிகள், பள்ளிகளில் இருந்து ஆண்டுக்கு எத்தனை மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்? இந்தியாவிலும், தமிழகத்திலும் இந்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதா?

நாடு முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் தேவை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஏதாவது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதா? ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாமல், ஆசிரியர் பள்ளிகள், கல்வியியல் கல்லூரிகளை தொடங்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனுமதி வழங்கி வருகிறதா? தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மற்றும் தமிழக கல்வித்துறையில் போதுமான ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளனரா?

இந்தியாவிலும், தமிழகத்திலும் கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் எத்தனை இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் எத்தனை தேவை? தற்போது போதுமான எண்ணிக்கையில் உள்ளதா? இந்த கேள்விகளுக்கு 27-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
மார்ச் 22, 02:00 AM

திசையன்விளை, 

திசையன்விளை மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.1–க்கு விற்பனை விலை சரிந்ததால் ஆடு, மாடுகளுக்கு தீவனமான அவலம்

திசையன்விளை மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.1–க்கு விற்பனை விலை சரிந்ததால் ஆடு, மாடுகளுக்கு தீவனமான அவலம்

திசையன்விளை பகுதியில் அதிக அளவில் விளைச்சல் ஆகியிருப்பதால், அங்குள்ள மார்க்கெட்டில் விலை அடியோடு சரிந்து ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.1–க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் முருங்கை காய்களை ஆடு, மாடுகளுக்கு தீவனமாக போட்டு வருகின்றனர்.முருங்கை காய் விளைச்சல்

நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அழகிவிளை, மருதநாச்சி விளை, அச்சம்பாடு, நாடார் அச்சம்பாடு, முதுமத்தான் மொழி, நடுவக்குறிச்சி, ஆணைகுடி, இடையன்குடி, உவரி உள்ளிட்ட பகுதிகளில் முன்பு தென்னந் தோப்புகள் அதிக அளவில் இருந்தன.

மழை குறைந்த நிலையில், பெரும்பாலான விவசாயிகள் முருங்கைக்காய் விவசாயத்தில் இறங்கினர். இந்த பகுதியில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் முருங்கைக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அழகி, குரூஸ், பிஏ தானியல், கோபால்துரை போன்ற பல ரக செடி மற்றும் மர முருங்கைக்காய்கள் விளைச்சல் செய்யப்படுகின்றன.வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

இதில், கோபால்துரை ரக முருங்கைக்காய்கள் அதிக அளவில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், திசையன்விளை முருங்கைக்காய் மார்க்கெட்டுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து முருங்கைக்காய்களை வாங்கி செல்வது வழக்கம். கோடை காலங்களில் முருங்கைக்காய் விளைச்சல் குறைவாக இருக்கும். இதனால், மார்ச் மாதம் முதல் கோடை காலம் முடியும் வரை ஒரு கிலோ முருங்கைக்காய் விலை ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படும்.

மற்ற நாட்களிலும் இந்த மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.30–க்கு அதிகமான விலையில் விற்கப்படும். கடந்த வாரம் வரை திசையன்விளை மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.40–க்கு விற்கப்பட்டது.ரூ.1–க்கு விற்பனை

கடந்த சில நாட்களாக, திசையன்விளை மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வரத்து அதிகரித்தது. இதனால், முருங்கைக்காய் விலையில் கடும் சரிவு ஏற்பட்டது. ஒரு கிலோ முருங்கைக்காய் விலை படிப்படியாக சரிந்து நேற்று ரூ.1–க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகினர்.

வியாபாரிகள குவிந்திருந்து முருங்கைக்காய்களை வாங்கி சென்றனர். மேலும், விவசாயிகள் பலரும் வைக்கோலுக்கு பதிலாக முருங்கைக்காய்களை வாங்கி, ஆடு, மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வருகின்றனர். இது முருங்கைக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.காரணம் என்ன?

இதுகுறித்து முருங்கைக்காய் விவசாயி ஒருவர் கூறுகையில்,‘ பல ஆண்டுகளாக இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் முருங்கை தோட்டம் வைத்து பராமரித்து வருகிறோம். மழை காலங்களில் ஓரளவு முருங்கைக்காய் விளைச்சல் கிடைக்கும். கோடை காலத்தில் முருங்கைக்காய் விளைச்சல் வெகுவாக குறையும். இந்த கால கட்டத்தில், முருங்கை செடிகளில் மராமத்து பணிகள் செய்வோம். இதனால், முருங்கைக்காய் விளைச்சலும் குறைவாக இருக்கும். மார்க்கெட்டில் விலையும் அதிகரித்து விற்கப்படும்.

இந்த ஆண்டு கோடை மழை பெய்யாததால், செடிகளில் மராமத்து பணிகள் செய்யவில்லை. இதனால், செடிகளில் பூத்திருந்த பூக்கள் முழுமையாக காய்த்து கொத்து கொத்தாக காய்கள் விளைச்சலாகி உள்ளன. எந்த ஆண்டும் இல்லாத வகையில் பல மடங்கு முருங்கைக்காய் விளைச்சல் ஆகியிருப்பதால் மார்க்கெட்டுக்கு நூற்றுக்கணக்கான மூடைகளில் வரத்து உள்ளது.

இதனால், முருங்கைக்காய் கிலோ ரூ.1–க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோபால்துரை ரக முருங்கைக்காய் மட்டும் கிலோ ரூ.4–க்கு விற்பனை ஆகிறது, என்றார்.
தலையங்கம்
ரியல் எஸ்டேட்டின் மறுவாழ்வு

மார்ச் 23, 03:00 AM

எந்த ஒரு மாநிலத்திற்கும் அந்த அரசு செலவழிக்கும் செலவை விட, வருவாய் அதிகமாக இருந்தால், உபரி பட்ஜெட்டாக இருக்கும். அத்தகைய நிலையில் தான், பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை மக்களின் நன்மைக்காக அரசுகள் நிறைவேற்றமுடியும். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் நிதிநிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக கர்நாடக மாநில பட்ஜெட்டை எடுத்துக்கொண்டால் ரூ.137 கோடி வருவாய் உபரியாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ, ரூ.15 ஆயிரத்து 930 கோடி வருவாய் பற்றாக்குறையில் இருக்கிறது. நிதிப்பற்றாக்குறையை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டில் தான் அதிகம். ஆக, தமிழக பட்ஜெட்டில் காட்டப்பட்டுள்ள கணக்குகளைப் பார்த்தால் உடனடியாக மாநிலத்தின் வருவாயை பெருக்கவேண்டியது மிக, மிக அவசியமாக இருக்கிறது.

தமிழகத்தின் வரவு–செலவு திட்ட மதிப்பீடுகளில், மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 363 கோடியாகும். செலவோ, ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 293 கோடியாகும். அரசு ஊழியர்கள் சம்பளத்திற்காக ரூ.46 ஆயிரத்து 332 கோடி, அரசு ஊழியர்களின் ஓய்வு ஊதியத்திற்காக ரூ.20 ஆயிரத்து 577 கோடி என அரசு ஊழியர்களின் சம்பளம், பென்சனுக்காக மட்டும் ரூ.66 ஆயிரத்து 909 கோடி போய்விடுகிறது. இதுதவிர மானியம் மற்றும் உதவி தொகைகளுக்காக ரூ.72 ஆயிரத்து 616 கோடி ஒதுக்கப்பட்டுவிடுகிறது. ஊதியம் அல்லாத செயல்முறை மற்றும் பராமரிப்பு செலவுகள் ரூ.9 ஆயிரத்து 764 கோடியாகும். ஏற்கனவே அரசு வாங்கிய கடனுக்கு வட்டியாக ஆண்டுக்கு, ரூ.25 ஆயிரத்து 982 கோடி போய்விடுகிறது. ஆக, அரசின் வருவாயே ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 363 கோடி என்றநிலையில், இந்த இனங்களுக்கு மட்டுமே வரவுக்குமேல் மொத்தம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 271 கோடி செலவானால், மேற்கொண்டு வளர்ச்சித்திட்டங்கள் இருக்கிறது. அதனால்தான் அரசு கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது. தற்போது இந்த ஆண்டு அரசாங்கத்தின் கடன் ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடியாக இருக்கும். எனவே உடனடியாக அரசு தனது வருவாயைப் பெருக்கவேண்டியதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும். மாநிலத்தில் வருவாய் வரவுகளில் மிகமுக்கிய ஆதாரமாக விளங்குவது சொந்தவரி வருவாயாகும். இதில் பத்திரப்பதிவுத் துறையின் வருமானம் மிக, மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால், இந்த நிதியாண்டில் பத்திரப்பதிவின் வருமானம் 24 சதவீதம் சரிந்துள்ளது. இதற்கு முக்கியகாரணம் கடந்த செப்டம்பர் மாதம் அங்கீகாரமற்ற நிலங்களை பதிவு செய்வதற்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த தடை உத்தரவுதான்.

சென்னை ஐகோர்ட்டு அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்யவும், வேளாண்நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றவும் தடைவிதித்துள்ளது. இதுபோன்று விற்பனை செய்யப்பட்ட, விற்பனை செய்யப்படும் நிலங்களை வரைமுறைப்படுத்த அரசு எத்தகைய நடவடிக்கைகளை அதாவது எத்தகைய வரன்முறைகளை மேற்கொள்ளப்போகிறது? என்பதை விளக்கி, யாரையும் பாதிக்காத வகையில் தமிழக அரசு ஒரு முழுமையான கொள்கையைக் கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இப்போது ஒருதிட்டம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. வேளாண் நிலங்களை வீட்டுமனைகளாக்க பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனைகள், கருத்துக்களை பெறுவது முதல்நடவடிக்கையாகவும், வேளாண்மைத்துறையிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெறுவது அதைத்தொடர்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கையாகவும், உள்ளூர் தாசில்தாரிடமிருந்து தடையில்லா சான்றிதழை வாங்குவது மூன்றாவது நடவடிக்கையாகவும் மேற்கொள்ள அனுமதி வழங்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எந்த முடிவை அரசு எடுத்தாலும் உடனடியாக அது மிக எளிதான நடவடிக்கையாகவும், ரியல்எஸ்டேட் தொழிலுக்கு மறு வாழ்வு கொடுத்து வளர வைப்பதாகவும், சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் வீட்டுமனைகள் வாங்குவதற்கு வழிவகை செய்யும் வகையிலும் இருக்கவேண்டும்.
இனி பல்கலைக்கழகங்கள் வழங்குகிற சான்றிதழ்களில் மாணவர்கள் புகைப்படம், ஆதார் எண்




மார்ச் 23, 05:00 AM

புதுடெல்லி

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் ஜே.எஸ்.சந்து, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி உள்ள உத்தரவில், ‘‘பட்டப்படிப்பு சான்றிதழ்களிலும், மதிப்பெண் சான்றிதழ்களிலும் மாணவ, மாணவியரின் புகைப்படத்தையும், ஆதார் எண்ணையும் இடம் பெறச்செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ‘‘மாணவ, மாணவியர் படித்த கல்வி நிறுவனத்தின் பெயரையும் சான்றிதழ்களில் வெளியிடவேண்டும்’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ்களில் இப்படி பாதுகாப்பு அடையாள அம்சங்களை ஏற்படுத்துவது போலிகளை தடுக்கவும், பரிசோதனையை எளிதாக்கவும் உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக மானியக்குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.

மார்ச் 23, 05:45 AM

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்றும், அந்த சின்னம் முடக்கப்படுவதாகவும் தலைமை தேர்தல் கமிஷன் நேற்று இரவு அறிவித்தது.

புதுடெல்லி

முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் அ.தி.மு.க. செயல் பட்டு வருகிறது.

தேர்தல் கமிஷன் விசாரணை

இந்த நிலையில் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்று இரண்டு அணியினரும் டெல்லி சென்று தலைமை தேர்தல் கமிஷனரிடம் மனு அளித்தனர்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தேர்தல் கமிஷன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரையும், சசிகலா தரப்பினரையும் நேற்று நேரில் அழைத்து விசாரணை நடத்தியது. தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி மற்றும் தேர்தல் கமிஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது.

இரட்டை இலை சின்னம் முடக்கம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் கமிஷன், அவர்கள் தெரிவித்த கருத்துகள் பற்றி நீண்ட நேரம் ஆலோசித்தது.

பின்னர், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கோ ஒதுக்குவது இல்லை என்றும், அந்த சின்னத்தை முடக்கி வைப்பது என்றும் முடிவு செய்தது.

இந்த தகவல் நேற்று இரவு 11 மணிக்கு இரு அணியினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

கட்சி பெயரை பயன்படுத்த தடை

அத்துடன் அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயரை இரு அணியினரும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது.

இரு அணியினரும் தாங்கள் எந்த பெயரால் அழைக்கப்படவேண்டும் என்பதை இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், சுயேச்சை சின்னங்களில் இருந்து ஏதாவது மூன்றை குறிப்பிட்டு அதில் ஒரு சின்னத்தை இன்று காலை பெற்றுக்கொள்ள்லாம் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இரு கட்சியினரும் தங்களிடம் உள்ள மற்ற ஆதாரங்களை தேர்தல் கமிஷனிடம் ஏப்ரல் 17-ந் தேதி கொடுத்து முறையிடலாம் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது.

தேர்தல் கமிஷனின் இந்த முடிவு பற்றி தெரிய வந்ததும், இரு தரப்பினரும் தங்கள் அடுத்து கட்ட நடவடிக்கை குறித்து தனித்தனியாக அவசர ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியின் வாதம்

முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன், பாலாஜி சீனிவாசன் ஆகியோர் தேர்தல் கமிஷன் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்தனர்.


ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

சட்ட விதிமுறைகளின் அடிப்படையில், சசிகலா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார். அ.தி.மு.க.வின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவர் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படவில்லை. அவருடைய நியமனமே தவறு என்ற நிலையில் அவரால் பரிந்துரைக்கப்படும் நபரை எப்படி வேட்பாளராக அங்கீகரிக்க முடியும்? அந்த வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரும் படிவத்தில் சசிகலா எப்படி கையெழுத்திட முடியும்?

மேலும், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலாவுக்கு தேர்தலில் நிற்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஒருவர் தேர்தலில் நிற்பதற்கே தடை விதித்து உள்ள போது அவரால் முன்னிறுத்தப்படும் நபர் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்? அவரால் எப்படி சின்னத்தை ஒதுக்குவதற்கான படிவங்களில் கையெழுத்திட முடியும்? அதற்கு சட்டரீதியான முகாந்திரம் கிடையாது.

மதுசூதனன்

இவை தவிர, கடந்த 2014-ம் ஆண்டில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் முடிவடைந்ததும் அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். அந்த பட்டியலில் பொதுச்செயலாளர் பதவிக்கு ஜெயலலிதா பெயர் உள்ளது. அதைத்தொடர்ந்து இரண்டாவதாக கட்சியின் மூத்த தலைவர் மதுசூதனன் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் உள்ளது.

எனவே, ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து கட்சியின் அடுத்த, மூத்த தலைவர் என்ற அடிப்படையில் மதுசூதனனுக்கே இரட்டை இலை சின்னத்தை கோருவதற்கு முழுமையான அதிகாரம் உள்ளது. மேலும் அவரே ஆர்.கே.நகர் தொகுதியின் வேட்பாளர் என்பதால் அவருக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்.

உறுப்பினர்களின் ஆதரவு

தற்போது நாங்கள் 5,706 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து இருக்கிறோம். இதன் மூலம் 43 லட்சம் அ.தி.மு.க. உறுப்பினர்களின் ஆதரவையும் தேர்தல் கமிஷன் முன்பு கொடுத்து இருக்கிறோம். எனவே எங்கள் தரப்புக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

சசிகலா தரப்பினர் வாதம்

பின்னர் சசிகலா தரப்பில் மூத்த வக்கீல்கள் சல்மான் குர்ஷித், அரிமா சுந்தரம், மோகன் பராசரன், வீரப்ப மொய்லி ஆகியோர் ஆஜரானார்கள். உதவிக்கு வக்கீல்கள் எஸ்.செந்தில், பி.வி.செல்வகுமார், திவாகர் ஆகியோரும் ஆஜராகி இருந்தனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட எம்.பி.க்களும் விசாரணையின் போது உடன் இருந்தனர்.

சசிகலா அணியினர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

பிளவு கிடையாது

அ.தி.மு.க.வில் பிளவு எதுவும் கிடையாது. கருத்து வேற்றுமைகள் உள்ளன. அதே நேரத்தில் எங்கள் தரப்புக்குத்தான் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. அவர்களிடம் பெரும்பான்மை கிடையாது. பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுக்குத்தான் ஆதரவு அளிக்கின்றனர். சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோருவதற்கு எந்த உரிமையும் கிடையாது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூறுவது போல 43 லட்சம் உறுப்பினர்களின் ஆதரவு அவர்களுக்கு இருப்பதாக ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டாலும், அ.தி.மு.க. கட்சியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை கோடி ஆகும். ஓ.பன்னீர்செல்வம் தரப்பே தங்கள் தரப்புக்கு 43 லட்சம் உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்றால், எங்களுக்கு ஒரு கோடி உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். எனவே, எங்களுக்குத்தான் 1,912 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவும், 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும், 37 எம்.பி.க்களின் ஆதரவும் இருக்கிறது.

முகாந்திரம் இல்லை

ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் மனுவை ஏற்றுக்கொள்ள முகாந்திரம் ஏதும் இல்லை. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது பதிவு செய்யப்பட்ட 6 வீடியோ சி.டி.க்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் நியமனத்துக்கு சசிகலாவின் பெயரை முன்மொழிந்ததே இவர்கள்தான். முன்மொழிந்தவர்களே புகார் அளித்துள்ள நிலையில் அந்த புகாரை ஏற்றுக்கொள்ள எந்த முகாந்திரமும் கிடையாது.

டி.டி.வி.தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்றும், அவர் அ.தி.மு.க. உறுப்பினரே அல்ல என்ற வகையிலும் பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் அமைந்து இருந்தன. அவர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இணைந்து பல ஆண்டுகளாக சீரிய முறையில் கட்சிக்கு பணி புரிந்து, கட்சியின் எம்.பி.யாக இருந்து உள்ளார். தற்போது துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவ்வாறு சசிகலா தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

Wednesday, March 22, 2017

ரயில் பயணம்: எக்ஸ்பிரஸ் இல்லாட்டி சதாப்தி
புதுடில்லி: விரைவு ரயிலில் பயணிக்கு முன்பதிவு செய்தும் டிக்கெட் கிடைக்காமல் போனால், அதே வழியில் செல்லும் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயிலில் பயணிக்கும் வகையிலான திட்டம் வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதே கட்டணத்தில் பயணம் செய்யலாம். சலுகை: ரயிலில் பயணம் செய்வதற்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள் சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயிலில் இடமிருந்தால், அங்கு தங்களது டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம். ராஜ்தானி, சதாப்தி ரயில்கள் காலியாகவே செல்வதால், இந்த திட்டத்தை அமல்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் முதற்கட்டமாக 6 செக்டாரில் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
அங்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து வரும் ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார். வருமானம்: இந்த திட்டம் தொடர்பாக ரயில்வே பவன் வட்டாரங்கள் கூறுகையில், டிக்கெட் ரத்து மற்றும் சேவை கிடைக்காததற்காக வருடந்தோறும் ரயில்வே ரூ. 3,500 கோடி அளவுக்கு பணம் திருப்பி தருகிறது.

புதுதிட்டம் மூலம், காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு தெரிவித்தன.
Dailyhunt

மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை

புதுடில்லி : மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். கட்டண சலுகை : ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு பயண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. 60 வயது நிரம்பிய ஆண்களும், 58 வயது நிரம்பிய பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுகிறார்கள். மூத்த குடிமக்களில் ஆண்களுக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையைப் பெற மூத்த குடிமக்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட்டில் சலுகை பெற ஆதார் எண் கட்டாயம் என ரயில்வே துறை அறிவித்தது.

ஆதார் கட்டாயமில்லை : இந்நிலையில், ரயிலில் சலுகை பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பார்லியில் இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுரேஷ் பிரபு கூறுகையில், ரயில் டிக்கெட்டில் சலுகை பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை. ஜனவரி 1 முதல் மூத்த குடிமக்கள் குறித்த தகவல்களை ஆதார் அடிப்படையில் ரயில்வே துறை சேகரித்து வருகிறது. எந்தவித முறைகேடுகளும் நடைபெறக்கூடாது என்பதற்காக இதனை சேகரித்து வருகிறோம்.

மிண்ணனு பரிவர்த்தனையில் டிக்கெட் பதிவு செய்வதே எங்களது இலக்கு. எனினும் பணப்பரிவர்த்தனையை குறைக்கும் முயற்சிக்கு தற்போது முன்னுரிமை கொடுத்து வருகிறோம் என்றார்.
தினமலர்
Dailyhunt

NEWS TODAY 25.12.2025