Wednesday, April 5, 2017

 ஸ்மார்ட்' ரேஷன் கார்டில் இனி பெண்கள் 'ராஜ்யம்'

சிவகங்கை: பெரும்பாலான 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகளில் கணவர் இருந்தும் மனைவிகளே குடும்பத் தலைவராக இடம்பெற்றுள்ளனர். மேலும் பெயர், முகவரி என, அனைத்திலும் குளறுபடியாக உள்ளது.இதில் ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைத்து 'ஸ்மார்ட்' கார்டு ஏப்., 1 முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான 'ஸ்மார்ட்' கார்டுகளில் கணவர் இருந்தும் மனைவிகளே குடும்பத் தலைவராக இடம் பெற்றுள்ளனர்.மேலும் ஆதாரில் உள்ள விபரங்களே பதியப்பட்டுள்ளதால், பல குளறுபடிகளும் அரங்கேறியுள்ளன. குடும்பத் தலைவராக இடம்பெற்ற பெண்களுக்கு அவரது தந்தை ஊரின் முகவரியே உள்ளது. இதனால் பலரது கார்டுகளில் பெயர், மாவட்டம், தாலுகாக்கள் மாறியுள்ளன. ஏராளமான எழுத்து பிழைகளும் உள்ளன.

இதுகுறித்து கேட்ட கார்டுதாரர்களிடம் வழக்கம்போல் 'எங்களுக்கு ஒன்றும் தெரியாது,' என கூலாக, வழங்கல்துறை அலுவலர்கள் பதிலளித்து வருகின்றனர்.

கார்டுதாரர்கள் கூறுகையில், ' கணவர் வெளிநாட்டில் இருந்தால் (அ) இறந்தால் தான் குடும்பத் தலைவராக மனைவி இடம் பெறுவர். ஆனால் கணவர் ஊரில் இருந்தும் 'ஸ்மார்ட்' கார்டில் குடும்பத் தலைவராக பெண்கள் புகைப்படத்தை பதிவு செய்துள்ளனர்,' என்றனர்.

வழங்கல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஸ்மார்ட்' கார்டுகள் தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டதால் ஏராளமான தவறுகள் உள்ளன. ரேஷன்கார்டுகள் வழங்கும் பணி முழுவதும் கணினிமயமாகி விட்டது. இதனால் நாங்கள் திருத்தம் செய்ய முடியாது. 'ஆன்லைன்' மூலம் தான் 'ஸ்மார்ட்' கார்டில் திருத்தம் செய்ய முடியும். விரைவில் அதற்கான உத்தரவு வரும் என, எதிர்பார்க்கிறோம், என்றார்.
 ரூ.2 லட்சத்துக்கு மேல் பரிமாற்றம்: அதிகாரி விளக்கம்

வங்கிகளில், 2 லட்சத்துக்கு மேல் ரொக்கம் பரிமாற்றம் செய்தால், 100 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்ற, மத்திய அரசின் விதிமுறை, தபால் துறை, கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது' என, அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்க, இரண்டு லட்சத்துக்கும் மேல் பண பரிமாற்றம் செய்ய தடை விதித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பட்ஜெட்டில் அறிவித்தார்.

ஏப்., 1 முதல் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இவ்விதிமுறை, அனைத்து வங்கிகளுக்கும் பொருந்துமா என, குழப்பம் நிலவியது.இது குறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் உதவி மைய தலைவர் வணங்காமுடி கூறியதாவது: பொதுத்துறை வங்கியான, 'ஸ்டேட் பேங்க் ஆப்
இந்தியா'வில் மட்டுமே, இவ்விதிமுறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதிலும், தனிப்பட்ட டிபாசிட் கணக்காளர்களுக்கு மட்டுமே பொருந்தும். சம்பள கணக்காளர்கள், பேங்கிங் கம்பெனி, கூட்டுறவு வங்கி, தபால் துறையின் சேமிப்பு வங்கி மற்றும் அரசுத்துறை சார்ந்த பண பரிமாற்றங்களுக்கு நிச்சயம் பொருந்தாது. இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன்(ஏப்.,5) முடிகிறது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, மே, 7ல், நடக்கிறது. இதற்கான, 'ஆன் லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்ரல், 1ல் முடிந்தது. இந்தத் தேர்வில், 25 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்க, தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டது. அதனால், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், இன்று(ஏப்.,5) வரை நீட்டிக்கப்பட்டது. இன்று நள்ளிரவு, 11:59 மணி வரை விண்ணப்பிக்கலாம். அதன்பின், ஆன் லைன் பதிவுகள் நிறுத்தப்படும்.

'தமிழக அரசு பள்ளி மாணவர்கள், இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தி, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தால், வரும் கல்வி ஆண்டில், மருத்துவச் சேர்க்கையில் சிக்கலை தவிர்க்கலாம்' என, கல்வியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- நமது நிருபர் -
ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் ரிசார்ட்டுகள் 'ஹவுஸ்புல்'

ஏற்காடு: பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை விடப்பட்டதையடுத்து, ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்குள்ள ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகளுக்கான, 'புக்கிங்' முடிந்து விட்டது.
சேலம் மாவட்டத்திலுள்ள, சுற்றுலா தலமான ஏற்காடுக்கு, ஏப்ரல், மே மாதங்களில், பிற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணியர் படையெடுப்பது வழக்கம். நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது, ௧௦ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து விட்டன. இந்நிலையில், ஏற்காடுக்கு வரும் சுற்றுலாப் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.

 இங்கு அரசின் அனுமதி பெற்ற ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் என, 105 மட்டுமே உள்ளன. அனுமதி பெறாத ரிசார்ட்டுகள், 450. இவை தவிர ரிசார்ட்டுகளாக மாற்றப்பட்டுள்ள வீடுகள், 500க்கும் மேற்பட்டவை உள்ளன. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், வரும் சனி, ஞாயிற்றுகிழமைகளுக்கு, அனைத்து ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. ரிசார்ட்டுகள் பெயரில் இயங்கி வரும் வீடுகளுக்கு, தற்போது புக்கிங் நடந்து வருகிறது. ஏப்.,14 சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு, ஏப்.,13 - 16 வரை, அனைத்து ரிசார்ட்டுகளின் முன்பதிவும் முடிந்து விட்டது.

Tuesday, April 4, 2017

சொல்லத் தோணுது 44 - கொண்டாட்டம் யாருக்கு?

தங்கர் பச்சான்

Published: July 26, 2015 09:36 IST
இன்னும் மூன்று வாரங்களில் நாம் விடுதலை பெற்றதற்கான 68-ம் ஆண்டு கொண்டாட்டத்தைக் கொண்டாடி மகிழப் போகிறோம். நாம் எல்லோருமே இந்நாட்டு மன்னர்கள்தான். ஆனால், 56 சதவீத மன்னர்களுக்கு (மக்களுக்கு) சொந்த வீடுகூட இல்லை. குருவிகளுக்காவது தங்கிக்கொள்ள கூடுகள் இருக்கின்றன. மனித இனம் காட்டுமிராண்டிகளாக இருந்து, மனிதர் களாகப் பரிணமித்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆன பின்னும்கூட இன்னும் வீடுகள் இல்லாமல் வீதிகளிலும், மரத் தடிகளிலும் வாழ்வதைப் பற்றி இங்கே யாருக்கும் கவலையில்லை. இந்நிலை யில் ‘இந்தியா ஏழைநாடு’ என சொல் லிக் கொள்ளவும் மறுக்கிறது. அத்துடன் வெட்கமே இல்லாமல் பணக்கார நாடு களில் ஒன்றாகக் காட்டிக் கொள்ளவும், வல்லரசு நாடாகத் தன்னை பறைசாற்றிக் கொள்ளவும் படாதபாடுபடுகிறது.

இப்போதே இந்தக் குடிமகன்களின் நிலை இதுவென்றால், எதிர்காலத்தில் பிறக்கப் போகும் தலைமுறை எப்படி வாழப் போகிறதோ?

ஒருபக்கம், நாள் முழுக்க உழைத்து நமக்கெல்லாம் உணவளித்து, சுகமாக வாழ்வதற்கு வீடுகளை கட்டிக் கொடுத்து, விரைந்து செல்ல சாலைகளை அமைத் துக் கொடுத்துவிட்டு வீதியோரம் படுத்துக் கொள்ளும் மக்களும்; உழைத்த பணத்தில் பாதி பணத்தை வீட்டு வாடகைக்குக் கொடுத்துவிட்டு, வாழ்க்கைத் தேவைகளை சுருக்கிக் கொண்டு தினம்தினம் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் மக்களும் மிகுதியாக இருக்கும் நாடு இது.
மற்றொரு பக்கம், ஆட்களே இல்லாத ஆண்டுக்கொரு முறையோ, இரண்டு முறையோ சில நாட்கள் மட்டும் தங்கும் பல ஆயிரம் சதுர அடிகளைக் கொண்ட அரண்மனை வீடுகள்; இரண்டுபேர் மட்டுமே வாழ்வதற்கு பலமாடி வீடுகள்; ஆட்களே இல்லாமல் அடைத்து மூடி வைத்திருக்கும் வீடுகளும் இருக்கின்றன.

ஒரு குடும்பத்துக்கு ஒரு வீடு இல்லாத நிலையில், ஒரே குடும்பத்துக்கு 10 வீடுகள் இங்கே வைத்துக்கொள்ளலாம். பணம் இருந்தால் எந்த வீட்டையும், எத்தனை வீட்டையும் வாங்கி பூட்டி வைத்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ் நாளில் ஒரு சொந்தவீடு என்பதுதான் பெருங்கனவு. சிலருக்கு மட்டுமே பலப் போராட்டங்களுக்கு இடையில் அது நிறைவேறிவிடுகிறது. ஆனால், அதற்காக அவர்கள் கொடுக்கிற விலையும், நிம்மதி இழப்பும் வாழ் நாள் முழுக்க அவர்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. வாழ் நாளின் இறுதிவரை வாடகை வீட்டி லேயே வாழ்பவர்களின் நிலை எல்லா வற்றையும்விடக் கொடியது. பல லட்சங்கள் செலவழித்து இடம் வாங்கி, அதேபோல் இன்னும் பல லட்சங்கள் செலவழித்து வீட்டை உருவாக்கி, அந்த வீட்டை சில ஆயிரத்துக்கு வாடகைக்குத் தருபவர்களின் நிலை இன்னும் மோசம். சொந்த வீட்டுக்கு ஆசைப்பட்டு கடன்பட்டு ஒவ்வொரு நாளும் உறக்கத்தை இழந்தவர்களும் கணக்கிலடங்காதவர்கள்.

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் நம்மவர்கள் இரவும் பகலும் அரும்பாடுபட்டு உழைத்து, உறவுகளைப் பிரிந்து சேமித்தப் பணத்தில் மற்றவர் களுக்குத் தெரிய வேண்டும் என்பதற் காகவே கொண்டுவந்த பணத்தையெல் லாம் செலவழித்து, மாடி வீட்டைக் கட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்.

எழுத்துப் பணிக்காக அண்மையில் இரண்டு வாரங்கள் கொடைக்கானல் சென்று தங்கினேன். அமைதியான இடம் தேடி அலைந்தபோது எல்லா திசைகளிலும், எல்லா மலைகளிலும் திரும்பிய பக்கமெல்லாம் வீடுகள். நகரமே பரவாயில்லை என்றிருந்தது. புதுமையாக இருக்க வேண்டும் என்பதற் காக பாறைகளை உடைத்து அதில் வீட்டை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழர்களின் தொழில்நுட்ப அறிவை அங்கேதான் பார்க்க முடிகிறது. எப்படிப்பட்ட மலைக்கும் சாலை கள் அமைத்து கார்களை வீட் டுக்கு முன் நிறுத்தும் வசதியை உருவாக்கிவிடுகிறார்கள்.
ஆயிரக்கணக்கான வீடுகள் மலை களின் சரிவில் தொங்கிக் கொண்டி ருக்கின்றன. எங்கு திரும்பினாலும் வீடு கட்டும் பணிகளும், சாலை அமைக் கும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இவற்றை அமைப்பதற்கான ஒவ்வொரு மூலப் பொருளும், கட்டுமான பொருட் களும் கீழேயிருந்துதான் கொடைக் கானலுக்குக் கொண்டு வர வேண்டும். இதற்காக நூற்றுக்கணக்கான லாரிகள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன.

நாள்தோறும் வேளாண்மை செய்து கொண்டிருக்கும் நிலங்கள் பத்திரப் பதிவு செய்யப்பட்டு வீட்டுமனை களாக வேறொரு கைக்கு மாறிக் கொண்டே இருக்கின்றன. சிறுசிறு துண்டு நிலங்களை அதிக விலைக்குக் கொடுத்துவிட்டு அம்மண்ணின் மைந் தர்கள் ஆளுக்கொரு கார் வாங்கி ஊர்ச் சுற்றிவிட்டு ஆறே மாதத்தில் அனைத்தையையும் இழந்து, மதுக்கடை வாசலில் மதியிழந்து கிடக்கிறார்கள்.

தன்னைப் பண வசதி படைத்தவன் எனக் காட்டிக்கொள்வதற்காகவும், பேரப் பிள்ளைகள் மலைக் குளிர்ப் பிரதேசங்களில் தங்களுக்கு ஒரு வீடு இல்லையா என கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் மட்டுமே ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் இப்படிப்பட்ட வீடுகள் கட்டப்படுகின்றன. நூற்றுக்குத் தொண் ணூத்தைந்து வீடுகளில் ஒரே ஒரு வீட்டில் கூட உரிமையாளர் தங்குவது இல்லை. ஆண்டுக்கு இரண்டு முறை ஒரு வார காலம் வந்து குடும்பத்துடன் தங்கினாலே பெரிய காரியம். மற்ற நாட்களில் ஆண்டு முழுக்க வீடுகள் பூட்டியே கிடக்கின்றன.

இங்கே அரசியல் தொடர்புடைய, அதிகாரங்களில் இருக்கக்கூடிய, பிற துறைகளில் அங்கம் வகிக்கக்கூடிய அனைத்துப் பணக்காரர்கள் மற்றும் பெரும் வணிகர்கள் என அனைவருக் குமே அங்கே இடமும், வீடும் உண்டு.

நம் நாட்டின் பெருங்கொடைகளாக இருக்கிற இவைபோன்ற மலைப் பிரதேசங்களின் இயற்கை வளங்களும், இயற்கை அமைப்பும் விதி மீறப் பட்டு ஒவ்வொரு மணி நேரமும் அழிந்துகொண்டே இருக்கிறது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் வருமானம் வருகிறது என்பதற்காக இப்படிப்பட்ட இடங்கள் வணிகமயமாக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, இயற்கைக்கு மாறாக அழிந்துகொண்டே இருக்கின்றன. கொடைக்கானலில் இருந்து 6 கி.மீ. தள்ளி யிருந்த சிற்றூரில்தான் நான் தங்கியிருந் தேன். ஆழ்துளை கிணறுகளை அமைக் கக்கூடாது என விதியிருந்தும் கிராம நிர்வாக அதிகாரிகளின் துணையுடன் நகர வளர்ச்சித் துறையின் ஒப்புதலுடன் நாள்தோறும் மலைகள் குடையப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை வந்து தங்கப் போகும் செல்வந்தர்களுக்காக ஆழ் துளை கிணறு உருவாகிக்கொண்டே இருக்கிறது.

இயற்கையின் அழுகை யாருக்குமே தெரியவில்லை. யார் யாரெல்லாம் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மேசையைத் தட்டித் தட்டி சட்டத்தை உருவாக்கினார்களோ… அவர்களா லேயே, அவர்களின் துணையுடனேயே கண்முன் இயற்கை அழிக்கப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளிலேயே கோயம் புத்தூர் போலவே ஊட்டியும், திண்டுக்கல் போலவே கொடைக்கானலும், சேலம் போலவே ஏற்காடும் மாறிவிடும். காலம் முழுக்க உழைப்பவனுக்கு இங்கே வீடும் இல்லை; உழைத்து வாழ நிலமும் இல்லை. ஆனால், பணத்தை என்ன செய்வதென்று தெரியாதவர்களுக்கு கணக்கில்லாத வீடுகளும்; உல்லாசத் துக்காகப் பொழுதைக் கழிப்பவர் களுக்கு நூற்றுக்கணக்கில் ஏக்கர் தோட் டங்களும் உள்ள நாடுதான் நம் நாடு.

‘ஒருவர் பெயரில் ஒரு வீடுதான், அதற்குமேல் இருந்தால் அது அரசுக்கு சொந்தம்’ எனும் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து அனைவருக்கும் வீடு கிடைக்க வழிவகை செய்யும் அன்றைக்குத்தான் இது சுதந்திர இந்தியா. அப்போதுதான் வீடு இல்லாத இம்மக்களுக்கும் சுதந்திரக் கொண்டாட்டம். அதுவரை, எம்மக்களுக்கு ‘ஆகஸ்ட் 15’ ஒரு விடுமுறை நாள்தான்!

- சொல்லத் தோணுது...

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

வாடிக்கையாளர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை அளிக்கப்போகும் எஸ்பிஐ!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டுமென்ற புதிய விதி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது, எஸ்பிஐ துணை வங்கிகளுக்கு இந்த விதி, ஏப்ரல் 24-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.




எஸ்பிஐ வங்கியுடன் இணைப்பதற்கான செயல்முறைகளில் ஐந்து துணை வங்கிகள் உள்ளன. எஸ்பிஐ என்னும் பாரத ஸ்டேட் வங்கியுடன் ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அண்டு ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய ஐந்து துணை வங்கிகள் இணைந்து செயல்படத் துவங்க உள்ளன.

இந்தத் துணை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ விதிக்கும் மினிமம் பேலன்ஸ் தொகை வைப்பு, தவறும் பட்சத்தில் விதிக்கப்படும் அபராதத்தொகை எனப் புதிய விதிகள் அனைத்தும் ஏப்ரல் 24-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் படி, எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகளின் வாடிக்கையாளர்கள், மெட்ரோ பகுதியில் 5000 ரூபாய், புறநகர்ப் பகுதிகளில் 3000 ரூபாய், நகர்ப்புறங்களில் 2000 ரூபாய், கிராமப் பகுதிகளில் 1000 ரூபாய் என, குறைந்த வைப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ்போர்ட் சிறப்பு மேளா முன்பதிவு இன்று தொடக்கம்!

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், ஏப்ரல் 8-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளாவை நடத்துகிறது. இதற்கான முன்பதிவு, 4-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
 சென்னை சாலிகிராமம், தாம்பரம் மற்றும் அமைந்தகரை (நெல்சன் மாணிக்கம் சாலை) ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையம்,  ஏப்ரல் 8-ம் தேதி சனிக்கிழமை அன்று இயங்கும். பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் விண்ணப்பங்கள் வழக்கம் போல பெற்றுக்கொள்ளப்படும். இந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கேற்க, விண்ணப்பதாரர்கள் அனைவரும், பாஸ்போர்ட் அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.passportindia.gov.in மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பப் பதிவு எண்ணை (ஏ.ஆர்.என்.) பெற்றுக்கொண்டு, ஆன்லைனிலேயே விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, சந்திப்பு முன்பதிவு நேரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், தங்களது சந்திப்பு முன்பதிவு விவரம்கொண்ட ஏ.ஆர்.என் பதிவு எண் தாளை, அச்சிட்டு எடுத்து வரவேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களையும் அசலுடன், சுய சான்றளிக்கப்பட்ட ஒரு நகலுடன் கொண்டு வரவேண்டும். புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும். தத்கல்  என்ற உடனடி பாஸ்போர்ட் விண்ணப்பங்கள், காவல்துறை தடையின்மை சான்றிதழ் (பி.சி.சி.) விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 'சுமார் 2,500 விண்ணப்பதாரர்கள் இந்த சிறப்பு மேளாவின்மூலம் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

NEWS TODAY 14.02.2026