Thursday, April 6, 2017

எஸ்.பி.ஐ., கணக்கு வேண்டாம்: ரூ.575 அபராதம்


பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள கணக்கை முடித்துக் கொள்ள, 575 ரூபாய் அபராதம்
வசூலிக்கப்படுவது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.

பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளர்களின், குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பை சமீபத்தில் உயர்த்தியது.இதன்படி, மாநகரங்களில், 5,000; நகரங்களில், 3,000; சிறிய நகரங்களில், 2,000, கிராமங்களில், 1,000 ரூபாய் என, இருப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறையும்பட்சத்தில், தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இதனால், இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர், தங்கள் வங்கிக் கணக்கை மூட விரும்புகின்றனர். இதற்காக, வங்கியை அணுகினால், 575 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோல், நடப்புக் கணக்கை மூடுவதாக இருந்தால், 1,000 ரூபாய்க்கு மேல், கட்டணம் செலுத்த வேண்டும். இது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த, எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரு மாணவி, சில ஆண்டுகளுக்கு முன், 500 ரூபாய் செலுத்தி இருந்தார். அந்த கணக்கை அவர் முடிக்க வந்த போது, அபராதத் தொகையை கழித்து விட்டு, 20 ரூபாய் மட்டும் கொடுத்த போது மனதுக்கு கஷ்டமாக இருந்தது' என்றார்.

- நமது நிருபர் -
 இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு ஆதார் கட்டாயமாகிறது

அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு இந்த ஆண்டு முதல், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களில், இன்ஜினியரிங் படிக்க விரும்புவோர், அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 550க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேருவர். இதற்கு, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்படும்

இந்த ஆண்டுக்கான, இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு தேதி, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மாணவர் சேர்க்கை செயலர், பேராசிரியர், இந்துமதி தலைமையிலான குழுவினர், அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.'ஆன்லைனில்' குழப்பம் இன்றி, மாணவர்களின் விபரங்களை பதிவு செய்ய, 'சாப்ட்வேர்' தயார் செய்யப்பட்டுள்ளது. இதை, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், செயலர் சுனில் பாலிவால், பல்கலை பதிவாளர் கணேசன் ஆகியோர், மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்ஜி., கவுன்சிலிங்கில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், ஆதார் எண் கட்டாயமாகிறது. இதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன.மத்திய அரசின், தேசியக் கல்வி சான்றிதழ் களஞ்சியம் என்ற, டிஜிட்டல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு இன்ஜி., மாணவரின் சான்றிதழ் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்ய, அண்ணா பல்கலையை, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.மேலும், கல்வி உதவித்தொகை பெறவும், ஆதார் எண் சேகரிக்கப்படுகிறது. கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விபரங்கள் உண்மையா என ஆய்வு செய்ய, ஆதார் எண் தேவை.இதன்படி, இன்ஜி., படிப்பில் சேரும் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 ரூ.2,000 நோட்டு செல்லாதா?

புதுடில்லி: ரூ 2,000 நோட்டும் செல்லாமல் போகுமா என்ற கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார்.

இது குறித்து ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், ''புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 2,000 ரூபாய் நோட்டை, செல்லாததாக அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை. இது தொடர்பாக, சிலர் வீணான புரளியை பரப்பி வருகின்றனர். இந்த, 2,000 ரூபாய் நோட்டில் புழக்கத்தில் விடப்படும் கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க, பல்வேறு அமைப்புகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன,'' என கூறினார்.
  வருமான வரி கணக்கு தாக்கலின்போது ‘ஆதார்’ எண் குறிப்பிடுவது யாருக்கு கட்டாயம்?
 
வருமான வரி கணக்கு தாக்கலின் போது, ‘ஆதார்’ எண்ணை குறிப்பிடுவதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது.
 
புதுடெல்லி,

வருமான வரி கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்’ எண்ணை குறிப்பிடுவதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இந்நிலையில், இது யாருக்கு கட்டாயம் என்று வருமான வரித்துறை நேற்று விளக்கம் அளித்தது.
‘ஆதார்’ எண் பெற தகுதியானவர்களுக்கு மட்டுமே அது கட்டாயம் என்று கூறியுள்ளது.

‘ஆதார்’ எண் பதிவுக்கு விண்ணப்பித்த தேதிக்கு முந்தைய 12 மாதங்களில், 182 நாட்களுக்கு குறையாமல், இந்தியாவில் வசித்த தனிநபர்கள் மட்டுமே இந்தியாவில் வசிப்பவர்களாக கருதப்பட்டு, ‘ஆதார்’ எண் பெற தகுதி உடையவர்கள் என்று ஆதார் சட்டம் கூறுகிறது. எனவே, இவர்களுக்கு மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்’ எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆகும்.
சொத்து குவிப்பு வழக்கில் விடுவிப்பு ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை

சொத்து குவிப்பு வழக்கில் விடுவிப்பு
ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை
 
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. 
 
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக எழுந்த குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனிக்கோர்ட்டு தீர்ப்பு

இந்த வழக்கில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு 2014-ம் ஆண்டு, செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விசாரித்து, அவர்களை விடுதலை செய்து 2015-ம் ஆண்டு, மே மாதம் 11-ந் தேதி தீர்ப்பு வழங்கினார்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசும், தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் விசாரித்து ஜெயலலிதா மரணம் அடைந்து விட்ட நிலையில், அவர் மீதான அப்பீல் வழக்கு அற்றுப்போய் விடுகிறது என கூறி கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தீர்ப்பு கூறினர்.

ஆனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர். மூவரும், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டது தெரிய வந்து இருப்பதாக கூறிய நீதிபதிகள், அவர்கள் பெங்களூரு தனிக்கோர்ட்டில் உடனடியாக சரண் அடைய உத்தரவிட்டனர். அவர்களும் சரண் அடைந்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கர்நாடக அரசு மறுஆய்வு மனு

ஆனால் ஜெயலலிதா மீதான தீர்ப்பில் மாற்றம் செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் கடந்த மாதம் 21-ந் தேதி மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருந்த முக்கிய அம்சங்கள்:-

* ஒரு குற்ற வழக்கில் வாதங்கள் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைத்த பின்னர் ஒருவர் இறந்து விட்டால், அப்பீல் வழக்கு இல்லாமல் போய்விடும் என்ற கேள்விக்கே இடம் இல்லை. வழங்கப்படுகிற தீர்ப்பு, அந்த நபர் உயிரோடு இருந்து வழங்கப்பட்டிருந்தால் என்ன வலிமையுடன் இருக்குமோ, அதே வலிமையுடன் இருக்க வேண்டும்.

* ஒரு நபர் இறந்து விட்டால் அப்பீல் அற்றுப்போவதற்கு அரசியல் சாசனத்தில் எந்த சட்டப்பிரிவும் வகை செய்யவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் 2013-ம் ஆண்டு விதிகளும் இதுபற்றி கூறவில்லை.

* இந்த வழக்கில் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், சிறை தண்டனை அனுபவிக்கும் நிலை இல்லை. ஆனால் அபராதம் செலுத்த வேண்டும் என்பது சட்டப்படி நிலைத்து நிற்கத்தக்கது. அதை அவரது சொத்துகள் மூலம் வசூலிக்க வேண்டும்.

* ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்குவது பலனற்றது; இருப்பினும் அபராதம் விதிப்பது, சட்டவிரோதமாக சேர்த்த சொத்தை பறிமுதல் செய்வது கோர்ட்டின் பரிசீலனைக்கு உரியது.

* பிப்ரவரி 14-ந் தேதி வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு மாற்றி அமைக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு எதிராக தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மறு ஆய்வு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் பரிசீலனை

சுப்ரீம் கோர்ட்டில், மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணை, திறந்த அமர்வுகளில் நடைபெறுவது இல்லை. நீதிபதிகளின் அறையில் நடைபெறுவது தான் வழக்கமான நடைமுறை. மேலும், வழக்கில் தொடர்புடைய இரு தரப்பு வக்கீல்களும் அனுமதிக்கப்படாமல், நீதிபதிகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வார்கள்.

அதன்படி கர்நாடக அரசின் மறுஆய்வு மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தள்ளுபடி

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், கர்நாடக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனுக்களை தனிப்பட்ட முறையில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

கர்நாடக அரசின் மறு ஆய்வு மனுவை நாங்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலனை செய்தோம். நாங்கள் ஏற்கனவே பிப்ரவரி 14-ந் தேதி பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைப்பதற்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்று கருதுகிறோம். அதன் அடிப்படையில் மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அபராதம் இல்லை

எனவே இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு அபராதம் கிடையாது. அவரது சொத்துகளை விற்று ரூ.100 கோடி அபராதம் வசூலிக்கும் சூழல் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 5, 2017

மௌனம் சம்மதமாகிவிடும்!

By ஆசிரியர்  |   Published on : 05th April 2017 01:28 AM  |  
|  
கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, பல பிரசார மேடைகளில் லஞ்ச ஊழலையும் முறைகேடுகளையும் ஒழிப்பதற்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் பயன்படும் என்பதை வலியுறுத்திப் பேசியிருக்கிறார். அரசாங்கத்திலும், நிர்வாகத்திலும் காணப்படும் தவறுகளை வெளிக்கொணரத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தும்படி கட்சித் தொண்டர்களை வலியுறுத்தினார். கடந்த ஆண்டு நீதிபதிகள் மாநாட்டில்கூட, அரசியல்வாதிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஒரு பயனுள்ள ஆயுதம் என்று எடுத்துரைத்ததை அவர் மறந்திருக்கலாம், நாம் மறக்கவில்லை.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்பது, அரசின் செயல்பாட்டின் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புடைமையையும் உறுதிப்படுத்துவதற்காகக் குடிமை நல உணர்வாளர்கள் (சிவில் சொசைட்டி) நீண்டகாலம் போராடிப் பெற்ற ஆயுதம். 2002-இல் கொண்டு வரப்பட்ட தகவல் சுதந்திரச் சட்டத்தில் பல மாற்றங்கள் இணைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அக்டோபர் 12, 2005-இல் தகவல் பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. பல சமூக ஆர்வலர்களும், குடிமை நல உணர்வாளர்களும், ஊடகவியலாளர்களும், எதிர்க்கட்சியினரும் இந்தச் சட்டத்தை பயன்படுத்தி அரசில் நடைபெறும் பல ஊழல்களையும் முறைகேடுகளையும் வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். வெளிக் கொணர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

முந்தைய மன்மோகன்சிங் அரசால் தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்றாலும், இந்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளும் உடனடியாகவே தொடங்கிவிட்டன. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகுதான் மத்தியிலும் மாநிலங்களிலும் தகவல் ஆணையங்கள் அமைக்கப்பட்டு, எல்லா துறைகளிலும் தகவல் அதிகாரிகள் செயல்படத் தொடங்கினார்கள்.

நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்தபோது, நிலைமையில் மாற்றம் ஏற்படும் என்று குடிமை நல உணர்வாளர்கள் நிஜமாகவே எதிர்பார்த்தார்கள். தேர்தல் பிரசாரத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசியவர் பிரதமராகிறார் என்கிறபோது அப்படியொரு எதிர்பார்ப்பு உருவானதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு இப்போதைய தேசிய ஜனநாயகக் கட்சி அரசும், முந்தைய அரசைப்போலவே தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை எப்படியெல்லாம் வலுவிழக்கச் செய்வது என்பதில் முனைப்பாக இருப்பதுதான் வருத்தமளிக்கிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்ட விதிகள் 2017 என்று ஒரு வரைவை தகவல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பான கருத்துகளைப் பொதுமக்களிடம் இருந்து வரவேற்றிருக்கிறது. அந்த வரைவில் முறையீட்டைத் திரும்பிப் பெறுதல், தள்ளுபடி செய்தல் என்கிற தலைப்பிலான பகுதி 2, விதி 12 விசித்திரமான ஒரு புதிய விதியை முன் வைக்கிறது. அதன்படி, முறையீடு செய்திருக்கும் நபர் இறந்துவிட்டால், அந்த முறையீடு தொடர்பான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு விடும்.
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், ஒருவரின் மரணத்துடன் அந்த முறையீடு முடிக்கப்பட்டு விட வேண்டும்தானே என்று கேட்கலாம். தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான வழக்குகளையும், முறையீடுகளையும் ஏனைய நடைமுறை நீதிமன்ற வழக்குகளைப் போலவோ, அரசாங்க முறையீடுகள் போலவோ பார்க்கக் கூடாது. லஞ்ச ஊழலையும் முறைகேடுகளையும் வெளிக் கொணர்வதற்காக இடித்துரைப்பாளர்களாலும், சமூக ஆர்வலர்களாலும், ஊடகவியலாளர்களாலும் செய்யப்படும் முறையீடுகள் இவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கடந்த ஆண்டு தில்லியில் உள்ளத் தன்னார்வ நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையின்படி, 2005 முதல் 2016 வரையிலான இடைவெளியில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரிய 56 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இவர்களில் 51 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 5 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல. தாக்கப்பட்டவர்கள், அச்சுறுத்தப்பட்டவர்கள், தொல்லைக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாக்கப்பட்டவர்கள் 157க்கும் அதிகமானவர்கள். இந்தப் புள்ளிவிவரம் வெளியில் தெரிந்தது. தெரியாதது எத்தனை என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். 2017-இல் மட்டும் இதுவரை தகவல் கேட்டு விண்ணப்பித்த 375 பேர் தாக்கப்பட்டிருப்பதாக, இன்னொரு தன்னார்வ நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்தப் பிரிவு இணைக்கப்பட்டால், தங்களுக்கு எதிராகத் தகவல் கேட்கும், அல்லது, பிடிவாதமாக மேல் முறையீடு செய்யும் நபர்கள் கொலை செய்யப்பட்டு, தகவல் வெளிவராமல் தடுக்கப்படும் என்பதுதான் நடைமுறை நிதர்சனம். அதேபோல, முறையீடு செய்தவர்கள் தங்களது முறையீட்டைத் திரும்பப் பெறலாம் என்கிற புதிய விதியும் இந்த வரைவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது நடைமுறைப்படுத்தப்பட்டால், குற்றம் சாட்டப்படுபவரால் தாக்கப்பட்டோ, எச்சரிக்கப்பட்டோ, அழுத்தம் தரப்பட்டோ முறையீடுகள் பல திரும்பப் பெறப்படும்.

இவையெல்லாம், அதிகார வர்க்கத்தின் அழுத்தத்தின் பேரில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அரசு செய்ய நினைக்கும் மாற்றங்கள் என்பது தெரிகிறது. வரைவுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பதும், இந்த மாற்றங்கள் சேர்க்கப்படாமல் தடுப்பதும் இடித்துரைப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என்று அனைவருக்குமான கடமை. வாக்குரிமை மட்டுமே சுதந்திரத்திற்கான அடையாளம் அல்ல!

அமெரிக்காவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் திருட்டு

By DIN  |   Published on : 04th April 2017 10:31 PM  |  
 spb

அமெரிக்காவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற பாடகர் எஸ்பிபி உலகம் முழுவதும் பயணித்து இசை நிகழச்சிகளை நடத்திவருகிறார். அதில் ஒரு பகுதியாக தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எஸ்பிபியின் பேக் ஒன்று திருடுபோயுள்ளது.

அதில் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, ஐபேடு ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹவுஸ்டனி்ல் உள்ள தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

அதன்பின்னர் புதிய பாஸ்போர்ட் பெற்று இந்தியா திரும்பியதாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.

NEWS TODAY 14.02.2026