Monday, April 10, 2017


ஜெ., கைரேகை பெற டாக்டருக்கு ரூ.5 லட்சம்?





தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, 2016 நவம்பரில், தேர்தல் நடந்தது. அப்போது, அ.தி.மு.க., பொதுச்செயலரான ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, சின்னம் ஒதுக்கக் கோரும் ஆவணத்தில், ஜெ.,


கையெழுத்துக்கு பதிலாக, அவரது கைரேகை வைக்கப்பட்டது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி முன்னிலையில், கைரேகை பெறப்பட்டதாக, அ.தி.மு.க., விளக்கம் அளித்திருந் தது.

இந்நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில், வருமான வரிதுறையினர் நடத்திய சோதனையில்,

பல ஆவணங்கள் சிக்கின. அதில், ஜெ., கைரேகை வைத்தார்.என்பதை உறுதி செய்த,



டாக்டர் பாலாஜிக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வழங்கியதற்கான, ஆவணமும் சிக்கியதாக பரவிய தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரியாணி, வஞ்சிரம் வறுவலுடன்  தினகரன் மெகா விருந்து 

:


ஆர்.கே.நகரில், வாக்காளர்களை கவரும் வகையில், தினகரன் தரப்பினர், மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவலுடன், மெகா விருந்து வைத்துள்ளனர். பிரசாரம் இன்று நிறைவு பெறுவதால் கவனிப்பு அதிகரித்து உள்ளது.




சென்னை, ஆர்.கே.நகரில், வரும், 12ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷ்; அ.தி.மு.க., சசிகலா அணியில் தினகரன்; அ.தி.மு.க., பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தினகரன் தரப்பு, வாக்காளர்களுக்கு, பணம், பரிசுகள் உள்ளிட்டவற்றை வாரி இறைக்கிறது.

மேலும், வாக்காளர்களுக்கு, மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவலுடன் விருந்து வைத்தும்   வருகின்றனர். நேற்று, செரியன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் விருந்து நடந்தது. விருந்தின் முடிவில், பண பட்டுவாடாவும் நடந்து உள்ளது. அதேபோல, இன்றும் பல இடங்களில் விருந்து நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பண மழை :

ஆர்.கே.நகரில், இன்று மாலை, 5:00 மணியுடன், பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதனால், அரசியல் கட்சிகள், நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. தினகரன் அணி சார்பில், ஓட்டுக்கு தலா, 4,000 ரூபாய்; தி.மு.க., சார்பில், 2,000 ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும், தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும் போது, ஆரத்தி எடுக்க, 300 ரூபாய்; பூக்களை துாவ, 500 ரூபாய் வழங்குவது தொடர்கிறது.

அதிகாரிகள் அலட்சியம் :

தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்பாளர்கள், போஸ்டர் ஒட்டக்கூடாது; சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. ஆனால், ஆர்.கே.நகரில், சில கட்சிகள் ஓட்டு கேட்டு, போஸ்டர்கள் ஒட்டியுள்ளன. பல இடங்களில், அலங்கார வளைவு அமைக்கப் பட்டு உள்ளது. பண பட்டுவாடா, தடபுடல் விருந்து உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்காமல், தேர்தல் பார்வையாளர்கள் அலட்சியமாக உள்ளனர்.


தொகுதிக்குள் நுழையும் வாகனங்களையும், பெயருக்கு தான் சோதனை செய்கின்றனர்.

மாணவர்களுக்கு பயிற்சி :

இதற்கிடையில், சென்னை மாவட்ட துணை தேர்தல் அலுவலர் கந்தசாமி கூறியதாவது: ஆர்.கே.நகரில், அனைத்து ஓட்டுச்சாவடி களி லும், 'வெப்' கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம்,ஓட்டுப்பதிவு, இணையதளங் களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஓட்டுச் சாவடிக்கு வெளியே, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அவற்றை இயக்க, கல்லுாரி மாணவர்கள், 306 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
3 ஆண்டு சாதனைகளை சொல்லுங்க!
அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு

புதுடில்லி: மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்று, மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ளதையொட்டி, அனைத்து அமைச்சர்களையும், தங்கள் துறை களில் நிகழ்த்தப்பட்ட, ஐந்து முக்கிய சாதனை களை பட்டியலிட்டு சமர்ப்பிக்கும்படி,
பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு உள்ளார்.




கடந்த, 2014ல், நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றது; அந்த ஆண்டில், மே, 26ல், நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி
அமைந்தது.

மோடி தலைமையிலான ஆட்சி, அடுத்த மாதம், மூன்றாண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.

இதையொட்டி, அனைத்து அமைச்சர்களும்,தங்கள் துறைகளில் நிகழ்த்தப்பட்ட ஐந்து முக்கிய சாதனை களை பட்டியலிட்டு, அறிக்கை சமர்ப்பிக்கும்படி, பிரதமர் மோடி உத்தரவிட்டுள் ளார். இந்த சாதனை கள் தொகுக்கப்பட்டு, மூன்றாண்டு நிறைவு விழாவின் போது, புத்தகமாக வெளியிடப்பட உள்ளது.

பிரதமர் மோடி, ஐந்து முக்கிய அம்சங்கள் குறித்து, சாதனைப் பட்டியல் தயாரிக்கும்படி, அமைச்சர் களுக்கு உத்தரவிட்டுள்ளார். அவை வருமாறு:

* மக்களுக்கு பயன் விளைவித்த, அனைவராலும் பாராட்டப்பட்ட ஐந்து முக்கிய அம்சங்கள்

* ஒவ்வொரு அமைச்சரவையின் முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகள் பற்றிய குறியீடுகள்

* ஆட்சி அமைத்த,2014ல் இருந்த நிலவரம், தற்போது வரை, நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள்

* செயல்பாடு, கொள்கை, திட்டம் போன்றவற்றில், செயல்படுத்தப்பட்ட மூன்று முக்கிய சீர்திருத்தங்கள்

* முக்கியமான இரண்டு சாதனைகள் பற்றிய குறிப்புகள் இந்த ஐந்து அம்சங்கள் குறித்த குறிப்புகளை பட்டியலிட்டு, அனுப்பும்படி மோடி உத்தரவிட்டுள்ளார்.
'நீட்' பாடத்திட்டம் தெரியாமல் திணறல்
மவுனம் கலைக்குமா கல்வித்துறை!

மாநில பாடத்திட்ட புத்தகங்களை மட்டும் நம்பி, 'நீட்' தேர்வுக்கு தயாராகும், தமிழ்வழி அரசுப் பள்ளி மாணவர்கள், தேர்ச்சி அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.




'நீட்' எனும், மருத்துவ படிப்பு களுக்கான தேசிய நுழைவுத் தேர்வு, சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட, ஏழு மாவட்டங்களில், மே 7ல் நடக்கிறது. இதில் பங்கேற்க, 11.35 லட்சத்துக் கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இத்தேர்வு நடப்பாண்டில், ஆங்கிலம்,

இந்தி தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட, எட்டு மாநில மொழிகளில் எழுதலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

என்.சி.இ.ஆர்.டி., என்ற தேசிய கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாடத்திட்ட அடிப்படையில், நீட் தேர்வில், வினாக்கள் இடம் பெறும். இப்புத்தகங்கள், ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே கிடைக்கின்றன. இணையதளத்திலும், இப்புத்தகங்களின் மொழி பெயர்ப்பு பிரதி கிடைக்கவில்லை. இதனால், தமிழ் வழியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள், பெரிதும் சிரமப்படுகின்றனர்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில், மேல்நிலை வகுப்புகளுக்கு, 15 ஆண்டுகளுக்கும் முன், பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.

2005ல், சில முக்கிய பகுதிகள் சேர்க்கப்பட்டு, கடின பகுதிகள் எடுக்கப்பட்டு, திருத்தங்கள்    மேற்கொள்ளப்பட்டன. என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்துடன், மாநில பாடத்திட்டத்தை ஒப்பிட்டால், 60 சதவீத அளவுக்கு மட்டுமே, இணையாக இருக்கும்.

எனவே, பள்ளி கல்வித் துறை சார்பில், நீட் தேர்வுக்கு, பிரத்யேக சிறப்பு கையேடு, இணையதளத்தில் வெளியிட்டால், தமிழ் வழி மாணவர்கள் பலனடைவர். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
போலி ஜாதி சான்றிதழில் அட்மிஷன் இன்ஜி., கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

பதிவு செய்த நாள் 10 ஏப்
2017
07:15



இன்ஜினியரிங் கல்லுாரிகளில், போலி ஜாதி சான்றிதழ் மூலம், இட ஒதுக்கீடு பெறுவதால், சான்றிதழ்களை ஆய்வு செய்யும்படி, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, விடைத்தாள் திருத்தம் நடந்து வருகிறது. மே 12ல், தேர்வு முடிவு வெளியாகிறது.

இதையடுத்து, அண்ணா பல்கலை நடத்தும் கவுன்சிலிங் மூலமாக, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., - அண்ணா பல்கலை உட்பட, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: போலி ஜாதி சான்றிதழ் அடிப்படையில், இட ஒதுக்கீடு பெற்று, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்வதாக புகார்கள் வந்துள்ளன.
எனவே, இன்ஜினியரிங் படிப்பிற்கான சேர்க்கையின் போது, பல்கலைகளும், இன்ஜி., கல்லுாரிகளும், மாணவர்கள் தரும் ஜாதி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும். அவை உண்மையானவையா என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான், போலி ஜாதி சான்றிதழ்கள் அடிப்படையில், மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பில் சேருவது தடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
மாதம் ரூ.2.50 லட்சம் சம்பாதிக்கும் 14 வயது சிறுவன் பிரபல கம்பெனியில் சி.இ.ஓ.,வாக பணிபுரிய அழைப்பு!




கடலுார்:கடலுார் அருகே, புதிய மொபைல், 'ஆப்'களை உருவாக்கி அசத்தும், 14 வயது சிறுவனுக்கு, பிரபல கம்பெனியில், சி.இ.ஓ.,வாக பணியாற்ற அழைப்பு வந்துள்ளது.

கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் அனில்குமார்; தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி பெட்டா, போலீஸ் எஸ்.ஐ.,யாக இருக்கிறார். இவர்களது மகன் ரிஷிகுமார், 14, தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் சுட்டியான இவர், 'மொபைல் ஆப்' உருவாக்குவதிலும் வல்லவர்.

'ரோபோ' உருவாக்கம்:

சமீபத்தில், பாலி கார்பனேட் பிளாஸ்டிக் மூலம் இவர் உருவாக்கிய, 'ரோபோ' அனைவரையும் அசத்தி வருகிறது. நான்கு அடி உயரமுள்ள இந்த ரோபோ, 1,118 பாகங்களுடன், 128 எம்.பி., பதிவுத்திறன் கொண்டது. 39 ஆயிரம் ரூபாய் செலவில் உருவாக்கிய இந்த ரோபோ, உரிமையாளர் குரலை கேட்டதும், தானாக செயல்பட துவங்குகிறது. பிரத்யேக, 'ஆப்' மூலம் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, அதன் முன் நிற்பவரின் முகம் பார்த்து, அவரை பற்றிய விபரங்களை கூ வியக்க வைக்கிறது.

புதிய 'ஆப்'கள்:

மாணவர் ரிஷிகுமார், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் பயன்படுத்தும் வகையில், 'மோஷன் டிரேடர்' எனும், 'ஆப்' ஒன்றை உருவாக்கி உள்ளார். இதன் மூலம், சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகும் முகங்களை, அவரவர் மொபைல் போனில் பதிவு செய்யவும்; மொபைல் போன்களில் கேமராவை ஆன் செய்யாமல், சென்சார் மூலம் முகங்களை பதிவு செய்யும் வசதி உள்ளது. 72க்கும் மேற்பட்ட கேம்ஸ் ஆப் உருவாக்கி, 30 ஆப்களை, கம்பெனிகளிடம் விற்பனை செய்துள்ளார்.

பேஸ்புக், கூகுள் போன்ற சமூக வலைதளங்களில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்தும் தருகிறார். மேலும், 4.3 வோல்ட்டில் செயல்படக் கூடிய வகையில், 'ஜார்விஸ் மினி' என்ற கம்ப்யூட்டர் சி.பி.யு.,வை, 50 கிராம் எடையில் உருவாக்கி அசத்தி உள்ளார். இதில், 4 யு.எஸ்.பி., இன்டர்நெட் கனெக்டர், ஹெட்போன் உட்பட, ஏழு வகை ஸ்லாட்கள், வைபை, ப்ளூடூத் வசதிகள் உள்ளன. இன்டெலுக்கு அடுத்ததாக, ப்ராட்காம் சாப்ட்வேரில் செயல்படுகிறது. இதில் கேம்ஸ், இன்டர்நெட், மொழிகள், பில்லிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இவரது, https:/robotrishi2020.wixsite.com/robonautics என்ற இணையதளத்தில், தான் உருவாக்கிய ஆப் மற்றும் செயல்பாடுகளை பதிவு செய்து வருகிறார்.'ரோபோனாட்டிக்ஸ்' என்ற கம்பெனியை உருவாக்கி, நடத்தி வரும் மாணவர் ரிஷிகுமார் கூறியதாவது:

'இன்டர்நெட் மூலம் ஆப்களை உருவாக்கவும், ரோபோக்களை செயல்படுத்தும் புரோகிராம்களை உருவாக்கவும் கற்றேன். 'மோஷன் ட்ரேடர்' ஆப் முதலில் உருவாக்கி, அதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவு செய்து, செயல்படுத்தினேன்.
நான் உருவாக்கி உள்ள ஜார்விஸ் மினி சி.பி.யு.,வை, குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் மாதம், 2.50 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறேன். இதில், 50 சதவீத தொகையை என் கண்டுபிடிப்புகளுக்கும், 30 சதவீதத்தை ஆதரவற்றோர், ஏழை மாணவர்கள் கல்வி செலவுக்கும் உதவி வருகிறேன்.
நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, கென்விதானே படேல் கம்பெனியில், சி.இ.ஓ.,வாக பணியாற்ற, எனக்கு அழைப்பு வந்துள்ளது. மேலும், பல கம்பெனிகளில் வேலை வாய்ப்புகள் தேடி வருகின்றன, என்றார்.
நர்சிங் கல்லூரிகள் அங்கீகாரம்: ஆக.31ல் பட்டியல் வெளியீடு

பதிவு செய்த நாள் 09 ஏப்  2017   23:48


கோவை: 'நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ள, நர்சிங் கல்லுாரிகளின் பட்டியல், ஆக., 31ல் வெளியிடப் படும்' என, இந்திய நர்சிங் கவுன்சில் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், பி.எஸ்சி., - எம்.எஸ்சி., உள்ளிட்ட நர்சிங் சார்ந்த துறையை நடத்த, நடப்பு கல்வியாண்டில், 257 கல்லுாரிகளுக்கு மட்டுமே, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.நர்சிங் கல்லுாரிகளை துவக்கவும், புதுப்பிக்கவும், தமிழக அரசு, இந்திய நர்சிங் கவுன்சில், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் என, மூன்று தரப்பால் அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், பல்வேறு கல்லுாரிகள், ஒரு பாடப் பிரிவுக்கு அனுமதி பெற்று, பல்வேறு பாடப் பிரிவுகளை நடத்தி வருவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனால், அங்கீகாரம் சார்ந்த செயல்பாடுகளை விரைவுபடுத்த, 'ஆன்லைன்' முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அங்கீகாரம் புதுப்பிக்க, கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், ஏப்., 21 வரை கால அவகாசம் நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஆன்லைன்' தவிர்த்து, வேறு முறைகளில், பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லுாரிகளின் பெயர், பாடப்பிரிவு பட்டியல் ஆக., 31ல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்து, நர்சிங் கல்லுாரியில் சேர விரும்பும் மாணவர்கள், இப்பட்டியலை சரிபார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NEWS TODAY 14.02.2026