Wednesday, July 5, 2017

செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டம் பெண் குழந்தைகளுக்கு எதிர்காலம்

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:49

ஊட்டி : பெண் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு 'செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டத்தை' துவக்க அஞ்சல் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கை:பெண் குழந்தைகளின் நலனையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, பிரதமர் மோடி, அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக 'செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்' துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் படி, பெண் குழந்தைகள் பிறந்த நாளில் இருந்து, 10 வயது அடையும் வரை இக்கணக்குகளை துவக்கலாம்; குறைந்தபட்ச முதலீடாக 1,000 ரூபாய் மற்றும் அதிகபட்ச முதலீடாக, 1.50 லட்சம் ரூபாய் வரை ஒரு நிதியாண்டில் சேமிக்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும், 100 ரூபாய் மடங்குகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். கணக்கு துவங்கியதில் இருந்து, 14 வருடங்கள் பணம் செலுத்தலாம். விருப்பத்தின் பேரில் மாதாந்திர வட்டி பெறும் வசதியும் உள்ளது. மேலும், பெண் குழந்தைகளின், 18 வயதில் இருந்து, 50 சதவீதம் வைப்பு தொகையினை குழந்தைகளின் உயர் கல்விக்காகவும், திருமணத்திற்காகவும் கணக்கில் இருந்து பெற்று கொள்ளலாம். 21 ஆண்டுகள் முடிந்த பின், கணக்கு முதிர்வு பெறும் திருமணம் முடிந்த பின்பும் கணக்கை எவ்வித வட்டி இழப்புமின்றி முடித்து கொள்ளலாம்.மேற்படி 'செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டத்தில்' தங்களின் பெண் குழந்தைகளையும் சேர்த்து, குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதப்படுத்த வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆக.19 முதல் 31 வரை ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:46

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் எம்.ஜி.ஆர்., ஸ்டேடியத்தில் ஆக., 19 முதல் 31 வரை கோவை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் சார்பில் ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரிமாவட்டத்தை சேர்ந்த கல்வி, உடல் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பணி, தொழில்நுட்பம், தொழில்நுட்பம் தேர்வாளர், செவிலியர் உதவியாளர், குமாஸ்தா, ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் சிப்பாய் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் பகுதிகளை சேர்ந்த ஏற்கனவே ஹவில்தார் பிரிவுக்கு விண்ணப்பித்தவர்களும் இம்முகாமில் பங்கேற்கலாம்.

விண்ணப்பங்களை www.joinindianarmy.nic.in இணையதளத்தில் ஜூலை 5 முதல் ஆக., 3 வரை விண்ணப்பிக்கலாம். ஆக., 3க்கு பிறகு ஆன்லைனில் அனுமதி சீட்டு வழங்கப்படும். முகாமிற்கு வரும்போது இந்த அனுமதி சீட்டை கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு மதுரை முன்னாள் ராணுவத்தினர் நல அலுவலகத்தை 0452 --230 8216 ல் தொடர்பு கொள்ளலாம்.
விரைவு தபால் சேவை: 18 சதவீத ஜி.எஸ்.டி.,

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:20

கோவை: தபால் போக்குவரத்து மற்றும் பார்சல் சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி., வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, தபால் துறை அறிவித்துள்ளது. இதன்படி, ஸ்பீடு போஸ்ட், எக்ஸ்பிரஸ் பார்சல், பிசினஸ் பார்சல், கேஷ் ஆன் டெலிவரி, லாஜிஸ்டிக்ஸ் போஸ்ட், பிசினஸ் போஸ்ட், பில் மெயில் சர்வீஸ், டைரக்ட் போஸ்ட், மீடியா போஸ்ட் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும், 18 சதவீத வரியை, மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

கோவை முதுநிலை, தலைமை தபால் அதிகாரி சக்திவேல் முருகன் கூறியதாவது:

முன்பு, ஒரு ஸ்பீடு போஸ்ட் அனுப்ப, கட்டணம், 35 ரூபாய், சேவை வரி, ஐந்து ரூபாய் சேர்த்து, 40 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது, 18 சதவீத, ஜி.எஸ்.டி., நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், சேவை வரி, ஆறு ரூபாய் சேர்த்து, 41 ரூபாய் வசூலிக்கப்படும். அதே சமயம், தபால் துறையின் முக்கிய சேவைகளான, பதிவு தபால், பார்சல், இ - மணியார்டர், இ - போஸ்ட் மற்றும் சாதாரண மணியார்டர் சேவைக்கு இவ்வரி பொருந்தாது.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து விபரங்களும் 'கரெக்ட்' : இ - சேவையில் 'ஸ்மார்ட்' கார்டு

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:03

அனைத்து விபரங்களும் சரியாக வழங்கியும், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு கிடைக்காதவர்கள், அதை, அரசு இ - சேவை மையங்களில் பெற்று கொள்ளும் வசதியை, உணவு துறை துவக்க உள்ளது. தமிழகத்தில், 'ஆதார்' விபரங்களின் அடிப்படையில், உணவு வழங்கல் துறை, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கி வருகிறது. பலரின் ஆதார் அட்டையில் பிழைகள் இருந்ததுடன், குடும்ப தலைவரின் புகைப்படமும் தெளிவாக இல்லை. இதனால், பிழை திருத்தங்களை சரிசெய்யும் பணிகள், ரேஷன் கடைகளில் நடந்து வருகின்றன. அதில், சரியான விபரங்களை வழங்கிய பலருக்கு, இதுவரை, ஸ்மார்ட் கார்டு கிடைக்கவில்லை.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிழை திருத்தம் உள்ள கார்டுதாரர்களின் பட்டியல், ரேஷன் ஊழியர்களிடம் வழங்கப்பட்டன. அவர்கள், சம்பந்தப்பட்ட நபரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, திருத்த பணிகளை மேற்கொள்கின்றனர். அப்படி இருந்தும், பலர் சரியான விபரங்களை வழங்காமல் அலட்சியமாக உள்ளனர்.
தற்போது, 1.10 கோடி பேருக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு உள்ளது. பிழை திருத்த பணி முடிந்ததும், எஞ்சிய அனைவருக்கும், இம்மாத இறுதிக்குள் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, அனைத்து விபரங்களும் சரியாக வழங்கியவர்கள், தங்களுக்கு உடனே ஸ்மார்ட் கார்டு தேவைப்பட்டால், அரசு இ - சேவை மையங்களில், 30 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். இதற்காக, அங்கு கேட்கப்படும் கேள்விக்கு சரியான விபரங்களை, கார்டுதாரர்கள் வழங்க வேண்டும். அவர்களுக்கு, ரேஷன் கடையில், அந்த கார்டு வழங்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
மெட்ரோ ரயில் பயணியர் காரிலும் பயணிக்க வசதி


பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:03

பயணியர் போக்குவரத்தை அதிகரிக்க, மெட்ரோ ரயில் நிறுவனம், 'ஓலா' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மெட்ரோ ரயில் பயணியர், ஓலா காரிலும் செல்லலாம்.

சென்னை மெட்ரோ ரயிலில், பயணியர் போக்குவரத்தை அதிகரிக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பயணியர், ரயில் நிலையத்தில் இருந்து அலுவலகம் சென்று வர, ஏற்கனவே சைக்கிள் வசதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது, கார் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, சின்னமலை, கிண்டி, அசோக்நகர், வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், நேரு பூங்கா, ஆலந்துார், பரங்கிமலை ரயில் நிலையங்களில், ஓலா கார் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ரயிலில் இருந்து இறங்கும் பயணியர், இம்மையத்தில் உடனடியாக முன்பதிவு செய்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு, தாமதமின்றி செல்லலாம். இதனால், மெட்ரோ ரயிலில் பயணிப்போர்எண்ணிக்கை அதிகரிக்கும் என, மெட்ரோ ரயில் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

- நமது நிருபர் -
மயிலின் 1 மணி நேர 'ஆட்டம்' : விருத்தாசலம் அருகே அதிசயம்

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
22:09



விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே, தினசரி, காலையில் ஒரு மணி நேரம், மயில் தோகை விரித்து ஆடுவதை, அப்பகுதி மக்கள் பார்த்து மகிழ்கின்றனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி பகுதியில், அதிக மயில்கள் சுற்றித் திரிகின்றன. இவை, அங்குள்ள விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் வலம் வந்து தானியங்களை உண்கின்றன. இந்த கூட்டத்தில் உள்ள, ஒரு மயில், தினசரி, காலை, 6:00 முதல், 7:00 மணி வரை, குடியிருப்புகளுக்கு நடுவே, தோகை விரித்து ஆடுவதை வழக்கமாக கொண்டுஉள்ளது.மழை மேகங்கள் திரண்டு, மழை வரும் போது மட்டுமே, மயில்கள் தோகையை விரித்து ஆடும்.

ஆனால், விருத்தாசலம் அருகே, அதிசய மயில், தினசரி ஒரு மணி நேரம் ஆடுவதை, அப்பகுதி மக்கள் பார்த்து மகிழ்கின்றனர். மக்கள் கும்பலாக திரண்டு நின்று பார்த்தாலும், அந்த மயில் பறந்து செல்லாமல், வழக்கமான ஆட்டத்தை முடித்து விட்டே செல்கிறது.
மருத்துவ படிப்பில் 5 சதவீதம் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கீடு

பதிவு செய்த நாள் 05 ஜூலை
2017
02:47



சென்னை: மருத்துவ படிப்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, 5 சதவீதமாக உயர்த்தி, அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருத்தப்பட்ட புதிய அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், 'மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். 50 முதல், 70 சதவீத மாற்றுத்திறனாளிகள் கிடைக்காத பட்சத்தில், 40 முதல், 50 சதவீத மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கு, இதற்கு முன், 3 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. மேலும், விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

NEWS TODAY 14.06.2026