Saturday, July 8, 2017

 வேண்டும் இஸ்ரேல் தொழில்நுட்பம்!
 
பிரதமர் நரேந்திரமோடி பொறுப்பேற்றதில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார். ஒவ்வொரு சுற்றுப்பயணமும் ஏதாவது ஒருவகையில் சிறப்பு மிகுந்ததாக இருக்கிறது. 
 
பிரதமர் நரேந்திரமோடி பொறுப்பேற்றதில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார். ஒவ்வொரு சுற்றுப்பயணமும் ஏதாவது ஒருவகையில் சிறப்பு மிகுந்ததாக இருக்கிறது. அந்தவகையில், இதுவரையில் எந்த இந்திய பிரதமரும் சென்றிராத இஸ்ரேல் நாட்டிற்கு 3 நாட்கள் சுற்றுப் பயணம் சென்று உலகத்தின் கவனத்தை ஈர்த்துவிட்டார். இஸ்ரேல் நாடு சுதந்திரம் அடைந்து

70 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரையில், இந்தியாவிலிருந்து எந்த பிரதமரும் சென்றதில்லை என்றவகையில், நரேந்திர மோடியை வரவேற்ற இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன் யாஹூ 70 ஆண்டுகளாக இந்திய பிரதமரின் வருகைக்காக இஸ்ரேல் காத்துக் கொண்டிருந்தது என்று கூறினார். இந்தியாவுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் 1992–ம் ஆண்டு முதல் தூதரக உறவுகள் இருந்தாலும், அந்த உறவுகள் எல்லாம் இதுவரையில் இப்போதுபோல் வலுப் பட்டது இல்லை. இவ்வளவுக்கும் நமது ராணுவ தளவாடங் களை பெருமளவில் இஸ்ரேல் நாட்டிலிருந்துதான் வாங்கு கிறோம்.

இந்த சுற்றுப்பயணத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. குறிப்பாக நீர்வளம், வேளாண்மை, விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் போன்ற பல துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நிச்சயமாக இந்தியாவுக்கு நன்மை பயக்கும். இந்த பயணத்தில் நரேந்திரமோடி, இஸ்ரேல் நாட்டு மக்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்டு போய்விட்டார் என்றே கூறலாம். ‘பெர்சனல் டச்’ என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஒவ்வொரு உள்ளத்தையும் தொடுவதுபோல 41 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு விமான கடத்தலை தடுக்க முயன்ற போது உயிர் இழந்த இஸ்ரேல் நாட்டு பிரதமர் நேதன் யாஹூவின் சகோதரர் யோனத்தான் பற்றி தன்பேச்சில் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் படையால் 15 லட்சம் குழந்தைகள் உள்பட 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட பேரழிவு நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார். 2008–ம் ஆண்டு நவம்பர் மாதம் 26–ந்தேதி மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்த மதகுருவான தன் தந்தையையும், தாயையும் இழந்து தான் மட்டும் உயிர்தப்பி, தற்போது இஸ்ரேலில் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வரும் 11 வயது சிறுவன் மோஷேயை வரவழைத்து அவனிடம் அன்புடன் பேசினார். மேலும் அவனும், அவனது குடும்பத்தினரும் எந்த நேரத் திலும் இந்தியாவுக்கு வரலாம் என்ற வகையில், ‘நீண்டகால விசா’ வழங்கியது மிகவும் உருக்கமாக இருந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் நரேந்திரமோடியும், நேதன் யாஹூவும் நெருங்கிய நண்பர்களைப்போல பழகினர்.

இஸ்ரேல் நாடு தண்ணீர் பஞ்சம் உள்ள நாடு. அங்கு கடல்நீரை நன்னீராக்கும் திட்டங்கள் மூலமாகத்தான் பெரும்பாலான விவசாயம், குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், குறைந்தளவு பெய்யும் மழை நீரையும் முறையாக சேமிக்கும் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துபவர்கள் இஸ்ரேல் நாட்டினர். அங்கு கடல்நீர் அல்லது மாசு கலந்த தண்ணீரிலிருந்து சுவைமிக்க குடிநீரை தயாரிப்பதற்கான அதிநவீன நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்பு வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் உள்ள ஓல்கா கடற்கரைக்கு நரேந்திரமோடி அந்த நாட்டு பிரதமருடன் சென்றபோது, இந்த வாகனத்தில் இருந்து கடல்நீரை குடிநீராக மாற்றி கிடைத்த தண்ணீரை இருவரும் பருகினர். இந்த வாகனம் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் லிட்டர் கடல் நீரை சுத்திகரிக்கும். அதுபோல, 80 ஆயிரம் லிட்டர் சகதி, மாசு கலந்த ஆற்றுநீரை அல்லது குளத்து நீரை சுத்திகரிக்க முடியும். கடல்நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்கி லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் வழங்குவோம் என்று நேதன் யாஹூ குறிப்பிட்டி ருக்கிறார். இஸ்ரேல் நாட்டின் இந்த தொழில்நுட்பங்களை உடனடியாக வாங்கி தமிழ்நாடு போன்ற தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும். தமிழக அரசும் இந்த கோரிக்கையை பிரதமருக்கு வைக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களின் படிகள் குறித்த 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு அரசிதழில் வெளியீடு





மத்திய அரசு ஊழியர்களின் படிகள் குறித்த 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு, அரசிதழில் வெளியிடப்பட்டது.

ஜூலை 08, 2017, 03:45 AM

புதுடெல்லி,


மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க 7-வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமிஷன், 197 படிகளை ஆய்வு செய்தது. அவற்றில் 53 படிகளை கைவிடுமாறு சிபாரிசு செய்தது. 37 படிகளை மற்ற படிகளுடன் இணைக்குமாறு கூறியது.


சம்பள கமிஷன் கைவிடுமாறு கூறிய 53 படிகளில், 12 படிகளை கைவிடுவது இல்லை என்று மத்திய அரசு முடிவு செய்தது. மேலும், படிகள் குறித்த சிபாரிசுகளில், 34 திருத்தங்கள் செய்தது.

அரசிதழில் வெளியீடு

இந்த திருத்தங்களுடன் கூடிய 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுக்கு மத்திய மந்திரிசபை கடந்த மாதம் 28-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

இந்த சிபாரிசுகள், நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டன. இதனால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் அடைவார்கள்.

7-வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்த படிகளால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.29 ஆயிரத்து 300 கோடி செலவாகி இருக்கும். ஆனால், படிகளில் திருத்தங்களும் செய்யப்பட்டதால், ரூ.1,448 கோடி சுமை அதிகரித்து, மொத்தம் ரூ.30 ஆயிரத்து 748 கோடி கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாத சம்பளத்தில் கிடைக்கும்

உயர்த்தப்பட்ட படிகளை, ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது. எனவே, இந்த மாத சம்பள ரசீதிலேயே உயர்த்தப்பட்ட படிகள் இடம்பெறும் வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் உரிய ஆணையை பிறப்பிக்குமாறு மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நகரங்களைப் பொறுத்து, 8 சதவீதம் (ரூ.1,800), 16 சதவீதம் (ரூ.3,600), 24 சதவீதம் (ரூ.5,400) என்ற விகிதங்களில் வீட்டு வாடகைப்படி வழங்கப்பட உள்ளது.

வீட்டு வாடகைப்படி

அகவிலைப்படி 50 சதவீதம் மற்றும் 100 சதவீதத்தை எட்டும்போது, வீட்டு வாடகைப்படியை மாற்றி அமைக்க வேண்டும் என்று சம்பள கமிஷன் சிபாரிசு செய்தது. ஆனால், 25 சதவீதம் மற்றும் 50 சதவீதத்தை எட்டும்போதே வீட்டு வாடகைப்படியை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நர்சுகளுக்கு மாதந்தோறும் உடை படி என்ற புதிய படி அறிமுகப்படுத்தப்படுகிறது.
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் 14-ந் தேதி வெளியிடப்படுகிறது




மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் 14-ந் தேதி வெளியிடப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க இன்றே கடைசி நாள்.

ஜூலை 08, 2017, 03:45 AM

சென்னை,

தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்க 2,900 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள்போக, மாநில ஒதுக்கீட்டுக்கு 2,445 இடங்கள் உள்ளன. இதில் 85 சதவீத இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும், 15 சதவீதம் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய கல்வி வாரியத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கப்படும்.

ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியும், 10 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. இதில் மொத்தம் 1,800 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.

மருத்துவ கல்விக்கான தரவரிசை பட்டியல் 14-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. மருத்துவ கல்விக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையா? பிளஸ்-2 தேர்வு அடிப்படையில் சேர்க்கையா? என்று இன்னும் தெரியாமல் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர். இதுபற்றி தமிழக அரசு இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை.

கடந்த மாதம் 27-ந் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன. நேற்று விண்ணப்பங்கள் வழங்க கடைசி நாள். மொத்தம் 43 ஆயிரம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 26 ஆயிரம் பேர் தான் விண்ணப்பங்கள் பெற்றனர்.

நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு என்ற முகவரிக்கு இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் வந்துசேர வேண்டும். மருத்துவ தேர்வுக்குழு அலுவலகத்தில் நேற்றே ஏராளமான மாணவ-மாணவிகள் பெற்றோருடன் வந்து நிரப்பப்பட்ட படிவங்களை சமர்ப்பித்தனர். நேற்றைய நிலவரப்படி 32 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

மருத்துவ கலந்தாய்வு நடத்தும் அதிகாரி கூறியதாவது:-

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மசோதாவில் ஜனாதிபதி கையெழுத்திட்டு வந்தால், பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும். அவ்வாறு வரவில்லை என்றால் நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும்.

இப்போதைய நிலவரப்படி 14-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 17-ந் தேதி கலந்தாய்வு தொடங்கும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
சென்னை நகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காலிகுடங்களுடன் வீதி, வீதியாக அலையும் மக்கள்



சென்னை நகரில் குடிநீருக்காக காலி குடங்களுடன் மக்கள் வீதி, வீதியாக அலையும் நிலை காணப்படுகிறது.

ஜூலை 08, 2017, 05:30 AM

சென்னை,

தமிழகத்தின் தலைநகரான சென்னை கடந்த 1947, 1954, 1968, 1972, 1975, 1982, 1983, 2001 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் குடிநீர் பஞ்சத்தில் சிக்கியது. தற்போது பருவமழை பொய்ப்பு, வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் 14 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை நகரம் மீண்டும் குடிநீர் பஞ்சத்தில் சிக்கி உள்ளது.

சென்னை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக திகழும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் கோடையை சமாளிப்பதற்கு கைகொடுக்கவில்லை. கடல் போன்று காட்சி அளித்த இந்த ஏரிகள் அனைத்தும் இன்று வறண்ட பாலைவனம் போன்று காட்சி அளிக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது.

இதனால் சென்னை நகரின் குடிநீர் தேவை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, நாள் ஒன்றுக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் தேவை இருக்கும் நிலையில், அதில் பாதி அளவு கூட தண்ணீர் கிடைப்பது இல்லை.

ஏரிகள் ஏமாற்றினாலும் நெம்மேலி, மீஞ்சூர் கடல்நீர் சுத்திகரிக்கும் நிலையங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 20 கோடி லிட்டர் தண்ணீரும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து 6 கோடி லிட்டர் தண்ணீரும், 22 கல்குவாரிகளில் இருந்து 3 கோடி லிட்டர் தண்ணீரும் பெறப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

இது ‘யானைப்பசிக்கு சோளப்பொரி’ என்பதற்கு உதாரணம் போன்று இருக்கிறது. வீடுகளில் நாள்தோறும் குழாய்களில் பொங்கி வழிந்த தண்ணீர் இன்று சிறுதுளிகளாக விழுகின்றன. பல இடங்களில் குடிநீர் குழாய்களை திறந்தால் தண்ணீருக்கு பதிலாக காற்று வீசும் நிலைதான் காணப்படுகிறது.

குடிநீர் வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட பெரும்பாலான குடிநீர் குழாய்களும் காட்சி பொருளாக மாறி விட்டன. தண்ணீர் வரும் குழாய்களிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் தண்ணீர் வருகிறது. இதனால் மக்கள் தண்ணீருக்காக பரிதவிக்கும் நிலை உள்ளது.

குடிநீர் எங்கே வருகிறது, குடிநீர் லாரி எப்போது வரும்? என்ற மனநிலையே மக்களிடம் காணப்படுகிறது. காலிகுடங்களுடன் மக்கள் வீதி, வீதியாக தண்ணீரை தேடி அலைவது அன்றாட காட்சியாகி விட்டது. தண்ணீர் கிடைக்கும்போது, அதை சேமித்து வைக்கவேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடம் அதிகரித்து உள்ளது. இதனால் பிளாஸ்டிக் குடங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

கடந்த 2001-ம் ஆண்டு சென்னை நகரம் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கி தவித்த போது, ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் சரக்கு ரெயில் மூலம் எடுத்து வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது.

ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் இந்த ஆண்டு சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு மற்ற மாவட்டங்களால் கைகொடுக்க முடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, July 7, 2017

இனி டில்லி தெருக்களில் குப்பை கொட்டினால் அபராதம்

புதுடில்லி: யூனியன் பிரதேசங்களின் நகர்புற வளர்ச்சி துறையினரை மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு சந்தித்து பேசினார். இக்கூட்டத்தில் டில்லி சார்பில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் துணைநிலை கவர்னர் அனில் பைஜால் பங்கேற்றனர்.அப்போது டில்லியின் தூய்மையை காக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து வெங்கைய்யாவிடம் விரிவாக விளக்கப்பட்டது. இதில், டில்லியின் தூய்மையை காப்பதற்காக இனி தெருக்களில் குப்பை கொட்டுவோருக்கு பார்த்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும். குப்பைகள் இரவு நேரங்களிலேயே அப்புறப்படுத்தப்படும். பகல் பொழுதில் வீடு வீடாக சென்று துப்புரவு பணியாளர்கள் மற்றும் மற்ற ஏஜன்சிகளை சேர்ந்தவர்களும் சேகரிப்பர்.அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். அனைத்து பகுதிகளுக்கும் முழுமையான குடிநீர் வசதி செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வெங்கைய்யா, இது தொடர்பான வரைவு அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றை நடைமுறை படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் மத்திய அரசு உதவ தயாராக உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் டில்லியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகராக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
குழந்தைகள் தோல்வியும் பழக வேண்டும்... ஏன் தெரியுமா?#GoodParenting




அது ஒரு கல்யாண வீடு. உறவுகளின் கேலி கிண்டல்ளுக்கு மத்தியில் குழந்தைகளின் ரகளையும் கலகலப்பு சேர்ந்தது. சொந்தங்கள் புதுப்புது விளையாட்டுகளில் களம் இறங்கினர். வெற்றிபெற்றால் பரிசு என்று சொல்லப்பட்டது. போட்டியும் கமெண்டுமாக சுட்டிகள் கூட்டம் களம் இறங்கியது. கல்யாணப் பெண்ணின் அம்மா சாந்தி, விசேஷத்துக்கு வந்த ஒரு குழந்தைகூட மனம் வருத்தப்படக் கூடாது என்பதில் கவனமாகச் செயல்பட்டார். மியூசிக்கல் சேர் போட்டியின் ஒவ்வொரு ரவுண்டிலும் வெளியேறிய குழந்தைகளுக்கும் பரிசு கொடுத்து புன்னகைக்கச் செய்தார். இது சரியா?

அது ஒரு பூங்கா... அங்கு சற்றுமுன்பு அறிமுகமான குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். சந்துருவுக்கு திடீரென கீழே விழுந்து முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் பதறியடித்து உதவ முன்வந்தனர். சந்துருவை அள்ளிக்கொண்ட அவன் அம்மாவோ, ''நான் உன்கூட இருக்கேன் சந்துரு. உனக்கு எதுவுமில்லை. சரியாகிடும்'' என அன்பு வார்த்தைகளால், அவன் விழுந்ததை மறக்கவைக்க முயற்சி செய்தார். இப்படி வலியே அறியாமல் நம் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டுமா?

ஷாப்பிங் செல்லும்போதெல்லாம் பார்க்கும் பொருள்களில் எதையாவது வாங்கித் தரச்சொல்லி அடம்பிடிப்பாள் மித்ரா. தராவிட்டால் முகம் சோர்ந்துவிடும். அவள் கேட்பதற்கும் மேலாக வாங்கித் தந்துவிட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் அம்மா சித்ரா. ஆனாலும், மித்ரா எதிலும் திருப்தியடையாமல் எல்லாவற்றையும் கேட்டு சித்ராவை திகைக்கவைப்பாள். குழந்தைகள் எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிட வேண்டுமா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தருகிறார் மனநல ஆலோசகர் பாபு ரங்கராஜன், ''ஒற்றைக் குழந்தைகள் மட்டுமே உள்ள நியூக்ளியர் குடும்பங்களில், குடும்பத்தின் மொத்த கவனமும் குழந்தை மீதே குவிகிறது. அவர்கள் பசியை உணரும் முன்பே உணவூட்டப்படுகிறது. விளையாட்டுப் பொம்மைகள் வாங்கிக் குவிக்கப்படுகிறது. குழந்தை தனக்கு எது தேவை என்று யோசிப்பதற்கான வாய்ப்பே கொடுக்கப்படுவதில்லை. பெற்றோரின் அதீத கவனிப்பு, அவர்களின் வாழ்விலிருந்து அனுபவம் வழியாகக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது.



நாம் எதிர்பார்க்கும் எல்லாம் உடனே கிடைத்துவிடாது. சிலவற்றுக்குக் காத்திருக்க வேண்டும். தோல்விகளையும் சந்திக்க வேண்டி வரும் என்பதைக் குழந்தைகள் உணராமல் வளர்க்கப்படுகின்றனர். சிறு வயதில் தான் நினைத்தது கிடைக்காவிட்டால், அந்தக் குழந்தை அழுகையாகவும் அடம்பிடித்தலாகவும் வெளிப்படுத்தும். அதன் அழுகையை நிறுத்துவதற்காகவும் மனம் வருந்தக்கூடாது என்ற நோக்கத்திலும் கேட்பதை வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர். இது தவறான நடைமுறை. குழந்தை வளர்ப்பில் பெற்றோர் திருத்திக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன. ஒரு குழந்தை நல்ல விஷயங்களைச் செய்யும்போது, பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும். அவர்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே குழந்தை தவறு செய்யும்போது தண்டிப்பதால், குழந்தை கோபம்கொள்கிறது. இங்கே தண்டிப்பதற்குப் பதிலாக, 'நீ செய்தது தவறு' எனப் புரியவைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.

குழந்தைகளின் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் தோல்வியில் முடியும்போது, சமாதானப்படுத்துவது தவறு. மாறாக, 'நடந்தது நடந்துவிட்டது அடுத்து என்ன செய்யலாம்?' என்று உங்கள் குழந்தையிடமே கேளுங்கள். தோல்விக்கான காரணங்களை குழந்தைகளிடம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கலந்துரையாடுங்கள். எதையெல்லாம் தவிர்த்திருக்கலாம் என்று ஆலோசித்து தன்னை மதிப்பிட்டுக்கொள்ளும் வாய்ப்பை குழந்தைக்குக் கொடுங்கள். தன்னிடம் மாற்ற வேண்டிய குறைகள் இவைதான் என்று குழந்தைகள் மனம் பட்டியலிட்டுக்கொள்ளும். அவற்றை மாற்றவும் முயற்சி செய்யும். இதுபோன்ற விஷயங்கள் குழந்தைக்குள் தானாகவே நடக்கும். தோல்வியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, அந்தக் குழந்தைக்குள் பிராப்ளம் சால்விங் திறன் வளரும்.

வாழ்வில் எப்போதும் ஏதாவது ஒரு தோல்வி அல்லது ஏமாற்றத்தை நாம் சந்தித்தாக வேண்டும் என்ற இயல்பை குழந்தைகள் புரிந்துகொள்ளட்டும். கீழே விழுந்து அடிபடுவதும் வலிப்பதும் இயல்பு என்பதைப் புரிந்துகொள்ளட்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் இது பொதுவானதே. அப்போதுதான் பிரச்னைகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று குழந்தைகள் யோசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதற்கு வாய்ப்பற்ற குழந்தைகள்தான் தேர்வில் மதிப்பெண் குறைந்ததற்காகவோ, கல்லூரியில் எதிர்பார்த்த படிப்பு கிடைக்காமல் போனதற்காகவும் தற்கொலை வரை போகின்றனர். வாழ்வின் இன்பதுன்பங்கள் இரண்டையும் குழந்தைகள் தெரிந்துகொள்ளும் வகையில் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. இதற்கான சந்தர்ப்பங்கள் வரும்போது அவர்கள் வலியிலிருந்து வெளியில் வர நாம் உதவலாம். ஆனால், வலியே தெரியாத மாதிரி வளர்க்கக் கூடாது'' என்கிறார் பாபு ரங்கராஜன்.

Dailyhunt
"மூன்றுநாள் ரயில் பயணம்... பிளாட்பாரத்தில் தூக்கம்!" - மகன் வீட்டுக்குச் சென்ற வேலூர் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்


சென்னையில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்ற வேலூர் பெண், முகவரியை மறந்து மூன்று நாள்கள் ரயிலிலேயே பயணித்துள்ளார். ஒரு வாரத்துக்குப்பிறகு அவரை மீட்டு மகனிடம் ஒப்படைத்துள்ளனர் மனிதநேயமுள்ளவர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், அன்னனூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் மூதாட்டி ஒருவர், சில தினங்களாக படுத்திருந்தார். பயணிகள் கொடுக்கும் உணவை மட்டும் சாப்பிட்ட அவர், யாரிடமும் உதவி கேட்கவில்லை. யார் இவர்? என்ற கேள்வி பயணிகளில் பலருக்கு எழுந்தாலும் மூதாட்டிக்கு உதவ முன்வரவில்லை. அந்தவழியாகச் ரயிலை இயக்கும் டிரைவர் அச்சுதன், கண்ணில் அந்த மூதாட்டி தென்பட்டார். உடனடியாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்களை இயக்கும் டிரைவர்கள் நடத்தும் 'நல்ல சமாரியன் மீட்பர் குழு'வுக்கு அச்சுதன் தகவல் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் அன்னனூர் ரயில் நிலையத்துக்கு மீட்பு குழுவினரும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர் சங்கரநாரயணனும் சென்றனர். அவர்கள், மூதாட்டிக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர். பிறகு மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது, மூதாட்டி தன்னுடைய பெயர் சேஷம்மாள், மகன் சென்னையில் இருப்பதாகவும் மகள் வேலூர் காட்பாடியில் வசிப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், அவர்களுடைய முகவரி மட்டும் தனக்குத் தெரியவில்லை என்று பரிதாபமாக மூதாட்டி சேஷம்மாள் தெரிவித்தார். மேலும், சேஷம்மாள், நடக்க முடியாதளவுக்கு காலில் காயங்களும் இருந்தன. அதுகுறித்து கேட்டபோது பிளாட்பாரத்திலிருந்து தவறி விழுந்துவிட்டதாகக் கண்ணீர்மல்க தெரிவித்தார்.




இதனால் சமூக சேகவரும், சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் வெங்கடேஷுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வெங்கடேஷும், சமூக சேவகி வசந்தி மற்றும் பாலாஜி ஆகியோர் அன்னனூர் ரயில் நிலையத்துக்குச் சென்றனர். சேஷம்மாளை மீட்டு சென்னை போரூரில் உள்ள முதியோர் காப்பகத்தில் சேர்த்ததோடு சிகிச்சையை அளிக்கவும் நடவடிக்கை எடுத்தனர். மறுநாள் வெங்கடேஷ், தன்னுடைய அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார். அப்போது காலைப்பத்திரிகையில் சேஷம்மாளைக் காணவில்லை என்ற விளம்பரம் வெங்கடேஷ், கண்ணில் தென்பட்டது. உடனடியாக விளம்பரத்திலிருந்த போன் நம்பரில் பேசினார். அவர், தெரிவித்த தகவல் கேட்டு எதிர்முனையிலிருந்த சேஷம்மாளின் மகன் கிஷோர்பாபுவிற்கு மகிழ்ச்சியடைந்தார். பிறகு, போரூர் முதியோர் இல்லத்துக்குச் காரில் சென்ற கிஷோர்பாபு, சேஷம்மாளைப் பார்த்துக் கண்கலங்கினார். அங்கிருந்து அவரை அழைத்துக்கொண்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சேஷம்மாளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து வெங்கடேஷ் கூறுகையில், "அன்னனூர் ரயில் நிலையத்தில் நடக்க முடியாமல் சேஷம்மாள் படுத்திருக்கும் தகவல் எங்களுக்கு தெரிந்ததும், உடனடியாக அங்குச் சென்றோம். அங்கு சேஷம்மாள், முழு விவரத்தையும் எங்களிடம் சொன்னார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் சேஷம்மாள் குடியிருந்து வந்தார்.

சேஷம்மாளின் மகன் கிஷோர்பாபு, சென்னையில் வசிக்கிறார். அங்கு செல்ல தனியாக ரயிலில் வந்துள்ளார் சேஷம்மாள். முதுமை காரணமாக மகனின் முகவரியை மறந்துவிட்டார். இதன்பிறகு, அந்த ரயிலிலேயே மூன்று நாள்கள் பசியுடன் பயணித்துள்ளார். அவரிடம் செல்போனும் இல்லை. இதனால், யாரையும் தொடர்பு கொள்ளமுடியாமல் சிரமப்பட்டுள்ளார். அன்னனூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது இறங்கிய சேஷம்மாள் பிளாட்பாரத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், எங்கும் செல்ல முடியாமல் பிளாட்பாரத்திலேயே படுத்துறங்கினார். யாரிடமும் உதவியும் கேட்காமல் அங்கு தங்கியிருந்த சேஷம்மாள் குறித்து எங்களுக்குத் தகவல் கொடுத்தனர். சேஷம்மாளுக்கு 'டிமென்ஷியா' என்ற முதுமை மறதி நோயும் இருப்பது தெரிந்தது. இதனால்தான் அவர் தன்னுடைய மகனின் முகவரியை மறந்துவிட்டு ரயிலில் பயணித்துள்ளார். பிளாட்பாரத்தில் படுத்துறங்கியுள்ளார்" என்றனர். சேஷம்மாளைக் காணாமல் அந்தக்குடும்பம் பரிதவித்துள்ளது. நான், விளம்பரத்தைப் பார்த்து கிஷோர்பாபுவிற்கு போன் செய்ததும் அவரால் மகிழ்ச்சியில் பேச முடியவில்லை" என்றார்.

ஒரு வாரத்துக்குப்பிறகு போரூர் காப்பகத்தில் சேஷம்மாளும் கிஷோர்பாபு மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சந்தித்தபோது கண்ணீர்மல்க கட்டித்தழுவிக் கொண்டனர். தாய், மகன் பாசத்தைக் கண்டு முதியோர்களும் ஆனந்தத்தில் பேச முடியாமல் அமைதியாகினர்.
Dailyhunt

NEWS TODAY 20.08.2026