Monday, July 10, 2017

பிளஸ் 2 மதிப்பெண் சான்று இன்று முதல் வினியோகம்

பிளஸ் 2 மதிப்பெண் சான்று இன்று முதல் வினியோகம்: சென்னை: தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, முதலில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிந்த நிலையில், இன்று முதல், அசல் ...

இணையத்தில் நாளிதழ்: போலீசார் எச்சரிக்கை

இணையத்தில் நாளிதழ்: போலீசார் எச்சரிக்கை: செய்தித்தாள், வார இதழ்களை மர்ம நபர்கள் இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்து குறைந்த கட்டணம் என சந்தா வசூலித்து வருகின்றனர். 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் ...

திருப்பதியில் விடுதிக்கட்டணம் உயர்ந்தது

திருப்பதியில் விடுதிக்கட்டணம் உயர்ந்தது: திருப்பதி: ஜி.எஸ்.டி வரி விதிப்பை தொடர்ந்து திருப்பதியில் பயணிகள் தங்கும் விடுதிக் கட்டணம், திருமண மண்டபத்திற்குரிய கட்டணம், மற்றும் கோவிலில் விற்கப்படும் தங்க டாலர் விலை ...

Sunday, July 9, 2017

கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு: மருத்துவ உதவியாளர் தலைமறைவு

By DIN  |   Published on : 09th July 2017 03:39 AM  |  

தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர் கருக்கலைப்பு செய்ததால் பெண் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பான புகாரை அடுத்து மருத்துவ உதவியாளர் மீது வழக்குப் பதிவு செய்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அந்த மருத்துவ உதவியாளர் தலைமறைவாகிவிட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் டி.வி. என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன்பாக நவசக்தி(34) என்ற ஐந்து மாத கர்ப்பிணி கருக்கலைப்பு செய்வதற்காக வந்தார். இவருக்கு ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ளன.
மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவ உதவியாளர் வனிதா என்பவர் அந்தக் கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார்.

கருக்கலைப்புக்குப் பின்பு வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண்ணுக்கு சில தினங்களுக்கு பின்பு வலிப்பு வந்துள்ளது. இதனையடுத்து அவர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு ரத்தத்தில் நச்சேற்றம் இருப்பதும் (செப்ஸிஸ்), மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. அவர் சுயநினைவை இழந்ததையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பயனளிக்காமல் அவர் ஜூலை 1}ஆம் தேதி உயிரிழந்துள்ளார். முறையாக கருக்கலைப்பு செய்யாததால் கர்ப்பப் பையில் தொற்று ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான தகவலின் பேரில், ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் பி.பானு, விசாரணைக் குழுவை நியமித்தார். இந்தக் குழுவினர் சோதனை மேற்கொண்டதில் அந்த மருத்துவமனையில் ஸ்கேன் கருவி, பிற உபகரணங்கள், கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த மருத்துவமனையில் 2016}ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பின்னர் மருத்துவர்கள் வருவதில்லை என்பதும், அதற்கு பின்னர் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களே பல கருக்கலைப்புகளை செய்துள்ளதுனர் என்பதும் கண்டறியப்பட்டது.

உயிரிழந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த வனிதா என்ற மருத்துவ உதவியாளர், மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் பிற ஊழியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமலையில் வாடகை அறையை முன்பதிவு செய்ய புதிய முறை: இனி இடித்துக் கொள்ளாமல் சுவாமி தரிசனம் செய்யலாம்

Published on : 08th July 2017 02:29 PM  | 
tirupathi
திருமலையில் வாடகை அறையை முன்பதிவு செய்ய தேவஸ்தானம் புதியமுறையை அறிமுகப்படுத்த உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

திருமலை அன்னமய்ய பவனில் வெள்ளிக்கிழமை தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பலர் தங்கள் குறைகள் மற்றும் ஆலோசனைகளை தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்காலிடம் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

பக்தர்கள் பலர் கூட்ட நெரிசல் சமயத்தில் வாடகை அறை பெற திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகத்தில் பல மணிநேரம் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதனால் வாடகை அறை முன்பதிவை எளிதாக்க தேவஸ்தானம் மத்திய விசாரணை அலுவலகத்தில் தனியாக இயங்கும் 10 கவுன்ட்டர்களில் வாடகை அறை தேவைப்படும் பக்தர்கள் தங்கள் பெயர், ஆதார் எண் மற்றும் கைபேசி எண்ணை அளித்து பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்தவர்களின் வரிசைப் படி, காலி செய்யப்படும் வாடகை அறைகள் உடனடியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு அதுகுறித்த தகவல் கைபேசி மூலம் தெரிவிக்கப்படும். பின்னர் அவர்கள் சென்று தங்கள் அறைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய நடைமுறை ஜூலை 12- ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

4000 பேருக்கு வாய்ப்பு: வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் திருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 1,500 பேருக்கு காலை 10 மணி, மதியம் 3 மணி என தேவஸ்தானம் இருமுறை இலவச தரிசனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் அவர்கள் தங்கள் கோட்டாவை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததால், மாதத்தில் இருமுறை மட்டும், 4000 பேர் ஒரு நாளில் தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி இம்மாதம் ஜூலை 18 மற்றும் 25- ஆம் தேதிகளில் காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2000 பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என இவ்விரு நாட்களில் மட்டும் 4000 பேர் ஏழுமலையானைத் தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

5 வயது வரை அனுமதி: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் போல் 0- 1 வயது வரை உள்ள கைக்குழந்தைகளின் பெற்றோர் ஏழுமலையான் தரிசனத்திற்கு சுபதம் வழியாக காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணிவரை அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளுடன் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி மாதம் இருமுறை 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி இம்மாதம் ஜூலை 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மட்டும் காலை 9 மணிமுதல் மதியம் 1.30 வரை 0- 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் சுபதம் வழியாக ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

லட்டுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது

பக்தர்களுக்கு வழங்கும் லட்டு பிரசாதத்திற்கு ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட மாட்டாது. ஆனால் தங்க டாலர் விற்பனை, வாடகை அறை, கல்யாண மண்டபம் உள்ளிட்டவை மட்டும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் வருகிறது. அதன்படி தங்க டாலர்களுக்கு 3 சதவீதமும், ரூ.1,000- ம் முதல் 10 ஆயிரம் வரை வாடகை உள்ள அறைகளுக்கு 12 சதவீதமும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் வாடகை உள்ள அறைகள் மற்றும் தேவஸ்தான கல்யாண மண்டபங்களுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.

ஆனால் திருமலையில் 86 சதவீதம் வாடகை அறைகள் ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ளதால் சாதாரண பக்தர்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு உள்ளது. மேலும் ஜி.எஸ்.டி வரி விதிப்பின்படி பக்தர்களின் சேவைக்காக கொள்முதல் செய்யும் ரூ.32 கோடி மதிப்புள்ள பொருள்களுக்கு ஓராண்டிற்கு ரூ. 19 கோடி வரி செலுத்த வேண்டிய நிலைக்கு தேவஸ்தானம் தள்ளப்பட்டுள்ளது.

திருப்பி அளிப்பு

திருமலையில் வாடகை அறை முன்பதிவு செய்யும் பக்தர்கள் தங்கள் சொந்தக் காரணங்களால் இரண்டு நாட்களுக்கு முன் வாடகை அறையை ரத்து செய்தால் முழு பணம் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும். இம்முறை வரும் 15- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தரிசன வரிசை மாற்றம்
ஏழுமலையான் கோயிலுக்குள் வெள்ளி வாசல் அருகிலிருந்து தங்க வாசல் செல்லும் தரிசன வரிசையில், கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் சிரமப்படுகின்றனர். அதனால் வெள்ளி வாசலிலிருந்து தங்க வாசல் செல்லவும், மீண்டும் திரும்பி வரவும் இரு தரிசன வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் ஏழுமலையானை தரிசனம் செய்து மீண்டும் கோயிலை விட்டு வெளியேற முடியும். தீர்த்தம் வழங்கும் இடத்திலும் கூட்டமாக செல்வதைத் தடுக்க 2 தரிசன வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆக்சஸ் கார்டு: தர்ம தரிசன காத்திருப்பு அறை வழியாக தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் லட்டு டோக்கன்கள் பெற்றவுடன் வெளியில் சென்று மீண்டும் காத்திருப்பு அறைக்கு திரும்ப அவர்களுக்கு ஜூன் 30- ஆம் தேதி முதல் ஆக்சஸ் கார்டு வழங்கப்படுகிறது.

அந்த கார்டில் அவர்கள் பெயர், வெளியே செல்லும் நேரம், மீண்டும் தரிசனத்துக்கு வரும் நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரிசன நேரத்திற்கு அவர்கள் காத்திருப்பு அறைக்கு சென்றால் 2 மணி நேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்து விடலாம். அதன்படி பல மணிநேரம் அறையில் காத்திருப்பது தவிர்க்கப்படும். அதுபோல் தற்போது திவ்யதரிசன பக்தர்களுக்கும் ஆக்சஸ் கார்டு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என்றார்.

பெருமாளே... மனசு வலிக்குது! 



பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகம் செய்வதால் 150 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் சொல்வது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.

பிசினஸ் செய்பவர்கள்தான் நஷ்டம் என்னும் வார்த்தையை உபயோகிப்பார்கள்.

நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் காணிக்கையாய் வரும் செல்வச் செழிப்பான தெய்வீக திருத்தலம் திருப்பதி. தரிசனக் கட்டணம் 500, 1000 என்றாலும் பக்தர்கள் டிக்கெட் எடுக்க அலைமோதுகிறார்கள்.

பேங்குகளில் டெபாசிட் செய்யப் பட்டுள்ள கோயில் பணத்திற்கு வட்டி கோடிக் கணக்கில் வருகிறது. தலைமுடி விற்பனயில் மட்டும் வருடந்தோறும் 200 கோடி ரூபாய் கிடைப்பதாக செய்தி.

இப்படி எல்லா வகையிலும் கோயிலுக்கு வருமானம் வரும் போது நஷ்டம் என்று சொல்லலாமா?

ஏதாவது பிசினஸில் பணத்தை முதலீடு செய்பவர்கள்தான் லாப நஷ்ட கணக்கு

பார்ப்பார்கள். தேவஸ்தான நிர்வாகிகள் யாராவது தங்களுடைய சொந்தப் பணத்தை கோயிலுக்காக முதலீடு செய்துள்ளார்களா?

அறிய ஆவல்.

திருப்பதி தேவஸ்தானம் 'நஷ்டம்' என்னும் வார்த்தையை பயன்படுத்தியது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

- ராஜேஷ்குமார்

எழுத்தாளர்

source: oneindia.com
 
Dailyhunt

திருப்பதியில், வார இறுதி நாட்களில் மலை பாதை தரிசனம் இனி இல்லை!


திருமலை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திவ்ய தரிசனம் எனப்படும் மலைப்பாதை பக்தர்களுக்கான தரிசனம் வார இறுதிகளில் ரத்து செய்யப்படும் திட்டத்தை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்த பெற்ற கோயிலாகும். இங்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

அதிக வருவாயைத் தரும் பணக்கார கடவுளாக கருதப்படும் வெங்கடாஜலபதி, ஏழைகளின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை மக்களிடையே காணப்படுகிறது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பொதுவாக அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினம் என்பதால் வெள்ளிக்கிழமை மாலை முதல் திருப்பதியில் ஞாயிற்றுக்கிழமை வரை கூட்டம் அதிகமாகவே காணப்படும். இதிலும் வார இறுதி நாள்களுக்கு முன்போ, பின்போ அதாவது வெள்ளி மற்றும் திங்கள் ஆகிய நாள்களில் விடுமுறை வந்தால் கேட்கவே வேண்டாம். கூட்டம் அலைமோதும்.

இதேபோல் கோடை விடுமுறையின்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வைகுண்டம் காம்ப்ளக்ஸ்களில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வெளியே 1 கி.மீ. தூரத்துக்கு கூட்டம் அலைமோதும். இதனால் பக்தர்களின் தரிசனம் நேரமும் அதிகரிக்கும். தற்போது விஐபி தரிசனம், ரூ.50 கட்டண தரிசனம் (தேவஸ்தான மையங்களில் மட்டுமே கிடைக்கும்), ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் ஆகிய வகைகளில் ஏழுமலையானை மக்கள் தரிசித்து வருகின்றனர்.


திவ்ய தரிசனம் என்பது மலை பாதை வழியாக நடந்தே சென்று சுவாமியை தரிசிப்பதாகும். இதில் இரு வழிகள் உள்ளன. ஒன்று அலிபிரி வழியாக திருமலை சென்றடைவது, மற்றொன்று ஸ்ரீ வாரி மெட்டு வழியாக செல்வதாகும். இதில் அலிபிரி என்பது 3550 படிக்கட்டுகளை கொண்டது. இங்கிருந்து மேலே செல்ல 11 கி.மீ. தூரம் ஆகும். மற்றொன்று, திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து 19 கீ.மீ. தூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாரி மெட்டு. 3 கி.மீ. தூரம் கொண்ட ஸ்ரீ வாரி மெட்டில் வழியாக திருமலை செல்ல 2384 படிக்கட்டுகள் மட்டுமே உள்ளன.
இந்த இரு வழியாகவும் நடந்து செல்லும் பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கில் பிரத்யேக தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இதன் மூலம் திருமலையில் கூட்டத்துக்கு தகுந்தபடி மற்றவர் தரிசன முறைகளைக் காட்டிலும் இதில் விரைந்து சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம். இதனால் பெரும்பாலானோர் இந்த வழியை தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் ஸ்ரீவாரி மெட்டு குறைந்த தூரம் கொண்டதால் அதிகபட்சம் திருமலையை அடைய ஒரு மணிநேரம் மட்டுமே ஆகும் என்பதால் இந்த பாதையில் மக்கள் பயணம் செய்கின்றனர். மேலும் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்ட ஏழுமலையான் இப்பாதை வழியாக திருமலையை சென்றடைந்தார் என்பது ஐதீகம்.


வார இறுதி நாள்களில் பெரும்பாலானோர் திவ்ய தரிசனத்தை தேர்ந்தெடுப்பதால் மற்ற தரிசன முறைகளின் நேரம் அதிகரிக்கிறது. மேலும் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இதனால் சோதனை ஓட்டமாக ஜூலை 7-ஆம் தேதி முதல் வார இறுதி நாள்களில் திவ்ய தரிசன நேரத்தை ரத்து செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.

அதன்படி நேற்று நள்ளிரவு முதல் இனி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் மலை பாதை தரிசனத்தை ரத்து செய்தது. எனினும் மற்ற நாள்களில் இந்த வழியாக தரிசனம் செய்வதற்கு அனுமதி உண்டு. இதன் மூலம் ரூ.300 தரிசனம், குறிப்பாக சர்வ தரிசனம் என சொல்லப்படும் இலவச தரிசனத்தில் வருவோர் விரைந்து சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும்
 என்று நம்பப்படுகிறது.

NEWS TODAY 22.08.2026