Saturday, August 5, 2017

ரேஷனில் பாமாயில் இல்லை மாத கடைசியில் கிடைக்குமாம்

பதிவு செய்த நாள்05ஆக
2017
00:02




இருப்பு இல்லாததால், இந்த மாதமும், ரேஷனில் பாமாயில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இம்மாதம் வழங்குவதற்கான பாமாயிலை, நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த வாரம் தான் கொள்முதல் செய்ய உள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், 1 லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெளிச்சந்தையை விட, ரேஷனில் பாமாயில் விலை குறைவாக இருப்பதால், பலரும் வாங்குகின்றனர். ஆனால், நுகர்பொருள் வாணிப கழகம், குறித்த காலத்தில் பாமாயில் வாங்காததால், தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. இம்மாதம், ரேஷனில் வழங்க, 79 கோடி ரூபாய்க்கு பாமாயில் வாங்க, வாணிப கழகம், ஜூலையில், 'டெண்டர்' கோரியது.
டெண்டர் திறப்பு, ௧ம் தேதி, சென்னையில் நடந்தது. இதில், பங்கேற்ற நிறுவனங்கள், தங்களுக்குள் கூட்டணி அமைத்து, விலையை குறிப்பிடாமல் டெண்டர் சமர்ப்பித்திருந்தன. அதை, அதிகாரிகள் ரத்து செய்தனர்.

இது குறித்து, வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: முந்தைய டெண்டர் முடிவை, உயர் அதிகாரிகள் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். தற்போது, குறுகிய கால அடிப்படையில், 56 கோடி ரூபாய்க்கு பாமாயில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர், ஆக., 9ல் திறக்கப் பட உள்ளது. தற்போது, கிடங்கு களிலும், பாமாயில் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், வழக்கம் போல், இம்மாதமும், ரேஷனில் பாமாயில் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது; மாத கடைசியில் தான், பாமாயில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

பதிவு செய்த நாள்05ஆக
2017
00:20


மருத்துவப் படிப்பில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, 85 சதவீத உள்ஒதுக்கீடுக்கு, சென்னை ஐகோர்ட் விதித்துள்ள தடையை எதிர்த்து, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. மருத்துவப் படிப்புகளில், தமிழகத்தில் உள்ள, மொத்த இடங்களில், 15 சதவீத இடங்கள், தேசிய அளவில் நிரப்புவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில், 85 சதவீத இடங்களை, மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும், 15 சதவீத இடங்களை, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் உட்பட பிற பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும்ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்த உள்ஒதுக்கீட்டுக்கு, சென்னை ஐகோர்ட் சமீபத்தில் தடை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
மருத்துவமனையில் 'மட்டை'யான டாக்டர்
பதிவு செய்த நாள்  05ஆக
2017
00:57




பல்லடம்: திருப்பூர் அருகே, அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர், பணி நேரத்தில் மது போதையில், விழுந்து கிடந்தது, பலரையும் அதிர்ச்சியடைய செய்து உள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம், வாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சந்திராபுரத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த, நுாற்றுக்கணக்கானோர், இதனால் பயனடைந்து வருகின்றனர். இங்கு, பொள்ளாச்சியைச் சேர்ந்த ராமசாமி, 46, டாக்டராக உள்ளார். இவர், பணி நேரத்தில் மது போதை யில் இருப்பதாக, நோயாளிகள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:அரசு மருத்துவர் ராமசாமி, கடந்த, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, இங்கு பணியாற்றி வருகிறார். இரவு பணியின்போது, பெரும்பாலும் மது போதையில் இருப்பது வழக்கம். கடந்த, 2ம் தேதி, வழக்கம் போல், போதையில் பணிக்கு வந்தார்.
அதிக போதையால், தள்ளாடியபடி வந்த அவர், மருத்துவமனை வளாகத்திலேயே விழுந்து கிடந்தார்.போதையில் இருக்கும் போது, இவரால் எப்படி சரிவர சிகிச்சை அளிக்க முடியும். மதுவுக்கு அடிமையான டாக்டரை நம்பித்தான், எங்களின் உயிர் உள்ளது. இதற்கு, அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மருத்துவமனையைச் சேர்ந்த பிற டாக்டர்களிடம் விசாரித்த போது, 'இது குறித்து எதுவும் தெரியாது' என்றனர்.
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் : காப்பாற்றிய அரசு மருத்துவமனை


பதிவு செய்த நாள்05ஆக
2017
01:05


நாகர்கோவில்: ஒரே பிரசவத்தில், எடை குறைவாக பிறந்த மூன்று குழந்தைகளை, கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை டாக்டர்கள், முறையாக
பராமரித்து காப்பாற்றினர். தக்கலை அருகே, காரவிளையைச் சேர்ந்தவர், ராஜகுமார். இவரது மனைவி, மீனா, 30. ஒரு மகன் உள்ளார். இரண்டாவது பிரசவத்துக்காக, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை, 5ல், ஒரு ஆண், இரண்டு பெண்கள் என, மூ ன்று குழந்தைகள் பிறந்தன. அவை, முறையே, 1.5, 1.8, 1.3 கிலோ எடை இருந்தன.இதனால், பச்சிளம் குழந்தைகள் தீவிர நல சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு மாதமாக அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையால், குழந்தைகளின் எடை அதிகரித்து, நலமாக உள்ளனர். நேற்று அவர்கள், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். டீன், டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''மூன்று குழந்தைகளுக்கும், முதல்வரின் காப்பீடு திட்டத்தில், விலை உயர்ந்த ஊசி மருந்துகள் செலுத்தப்பட்டன. இந்த சிகிச்சையை, தனியார் மருத்துவமனைகளில் செய்திருந்தால், குறைந்தபட்சம், 10 லட்சம் ரூபாய் செலவாகிஇருக்கும்,'' என்றார்.
ஆடி விழாவில் கையால் சுட்ட வடை ரூ.18,300 க்கு ஏலம் எடுத்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்05ஆக
2017
00:25




கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே அம்மன் கோவிலில் ஆடி விழாவை ஒட்டி, வெறும் கையால் சுட்ட ஒன்பது வடைகள், 18 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அருகே கன்னிகாபுரம் கிராமத்தில், சாந்தமாரி, நவசக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடி பெருக்கு விழா, இரண்டு நாட்களாக நடந்தது. நேற்று அம்மனுக்கு பூங்கரகம், பால் குடம் எடுத்தல், கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து, கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையுடன் வடை சுடும் நிகழ்ச்சி நடந்தது. 

இந்த வடைகளை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன்படி, வெறும் கையால் சுட்ட ஒன்பது வடைகள் ஏலம் விடப்பட்டன. 

முதல் வடை, 4,600 ரூபாய்; இரண்டாவது வடை, 4,500 ரூபாய; மூன்றாவது வடை, 3,200 ரூபாய் உட்பட ஒன்பது வடைகள், 18 ஆயிரத்து, 300 ரூபாய்க்கு ஏலம் போனது.

இறப்பை பதிவு செய்ய 'ஆதார்' கட்டாயம்

பதிவு செய்த நாள்04ஆக
2017
23:37


புதுடில்லி: 'அக்டோபர், 1 முதல், இறப்பை பதிவு செய்ய, ஆதார் எண் அவசியம்' என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற, ஆதார் எண் அவசியம் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சமையல் காஸ் மானியம், ரேஷன் பொருட்கள், முதியோர் உதவித் தொகை என அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பான் கார்டு, வங்கி கணக்கு ஆகியவற்றுடன், ஆதார் எண்ணை இணைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இறப்பை பதிவு செய்ய, அக்., 1 முதல், ஆதார் எண் கட்டாயம் என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது பற்றி, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இறப்பை பதிவு செய்ய, அக்., 1 முதல், ஆதார் எண் கட்டாயமாக்கப்படுகிறது. இந்த உத்தரவு, ஜம்மு - காஷ்மீர், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தாது. 

இந்த மாநிலங்களுக்கான அறிவிப்பு, பின் வெளியிடப்படும்.இறந்தவர் பற்றி அவரது குடும்பத்தினர் அளிக்கும் தகவல்களை உறுதி செய்யவே, ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மோசடிகள் நடப்பது தடுக்கப்படும்.இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அவசர சிகிச்சை பிரிவில் நடிகர் திலீப்குமார்
பதிவு செய்த நாள்05ஆக
2017
05:44




மும்பை: உடல்நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார்,95, கிட்னியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஐ.சி.யூ.,விற்கு மாற்றப்பட்டுள்ளார்.

1944-களில் இந்தி திரை உலகில் கொடிகட்டி பறந்தவர் பாலிவுட் நடிகர் திலீப் குமார், 95,வயது முதுமை காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நோய்வாய்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட கிட்னியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

NEWS TODAY 25.01.2026