Tuesday, August 29, 2017

குறைந்தது 'ஏசி' பயன்பாடு : மின் உற்பத்தி திடீர் சரிவு

பதிவு செய்த நாள்28ஆக
2017
22:14

மழை காரணமாக, வீடுகளில், 'ஏசி' குளிர்சாதனங்களின் பயன்பாடு குறைந்ததால், மின் வாரியம், மின் உற்பத்தி அளவை குறைத்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, அனல், நீர், எரிவாயு மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், தினசரி மின் தேவையை பூர்த்தி செய்வதில், அனல் மின் நிலையங்களின் பங்கு அதிகம். கோடை காலத்தில், தினசரி மின் தேவை, 15 ஆயிரம் மெகாவாட் என்றளவில் இருந்தது. அப்போது மொத்தம், 4,320 மெகாவாட் திறன் உள்ள, அனல் மின் நிலையங்களில், 4,000 மெகாவாட் வரை, மின் உற்பத்தி செய்யப்பட்டது. பின், தென்மேற்கு பருவ மழையால், மின் தேவை குறைந்தது. அனல் மின் உற்பத்தி, 3,000 மெகாவாட் என்றளவில் இருந்தது. கடந்த வாரம் முதல், சென்னை உட்பட, பல மாவட்டங்களில், இரவில் மழை பெய்து வருவதால், வீடுகளில், 'ஏசி' பயன்பாடு குறைந்துள்ளது. இதையடுத்து, மின் தேவை, 12 ஆயிரம் மெகாவாட் கீழ் உள்ளதால், அனல் மின் நிலையங்களில், 1,800 மெகாவாட் அளவுக்கு மட்டுமே, மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

- நமது நிருபர் -




Advertisement
ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துறே : தனியார் ஆம்புலன்ஸ்கள் அடாவடி தாங்கலை

பதிவு செய்த நாள்28ஆக
2017
20:46




'ஆளே இல்லாத கடையில், யாருக்கு டீ ஆத்துறே' என்ற சினிமா காமெடி போல், நோயாளிகளே இல்லாமல், அசுர வேகத்தில் பறக்கும், தனியார் ஆம்புலன்ஸ்களின் அடாவடி செயல்கள் அதிகரித்து வருவதாக போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் குவிகின்றன.

தமிழக அரசின் போக்குவரத்து துறையின் கணக்கின் படி தமிழகத்தில், 9,603 ஆம்புலன்ஸ்கள் இயக்கத்தில் உள்ளன. இதில், 108 அவசரகால ஆம்புலன்ஸ்கள், 782, அரசு மருத்துவமனை, தீ அணைப்புத்துறை, போலீஸ் உள்ளிட்ட பிற அரசு துறைகளின் கட்டுப்பாட்டில், 1,210 ஆம்புலன்ஸ்கள் உள்ளன.

சலுகைகள் : உயிர்காக்கும் பணிகளில் ஈடுபடும் ஆம்புலன்ஸ்களுக்கு, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சாலைகளில் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரிந்தாலும் செல்லலாம், ஒரு வழிப்பாதையில் செல்ல அனுமதி, வாகனங்களை முந்திச் செல்ல தாராள அனுமதி, பிற வாகனங்கள் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட வேண்டும் என்பன, உட்பட சாலை விதிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள், தனியாரின் பராமரிப்பில் உள்ள ஆம்புலன்ஸ்கள், நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு இடையே சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது, சிவப்பு விளக்கை எரிய விடுகின்றனர்.
மேலும், சைரன் சப்தம் கேட்கும் போது, வாகன ஓட்டிகள் யாராக இருந்தாலும், அவற்றுக்கு வழி விட்டுச் செல்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், நோயாளிகள் இல்லாத நிலையில், ஊழியர்களை ஏற்றிச் செல்லும் போதும், மருந்து, மாத்திரைகள், மருத்துவமனைக்கு தேவையான பொருட்களை ஆம்புலன்ஸ்களில் ஏற்றி வரும் போதும், தேவை இல்லாமல், சைரனை ஒலிக்க விட்டு, செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

புகார் : இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, போலீசாரின் உழைப்பும் வீணடிக்கப்படுகிறது. இது குறித்து, போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 'நோயாளிகள் இல்லாத நேரங்களில், ஆம்புலன்ஸ்களில் சைரன் எழுப்புவதற்கு தடை விதிக்க, மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்' என, போக்குவரத்து பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர்கள் கூறியதாவது: மாநகருக்குள், ஆம்புலன்ஸ் ஒன்று, ஒலி எழுப்பிய படி வரும் போது, போலீஸ் மைக்கில், நாங்களே தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கிறோம். இதில், சில நேரங்களில், சில சிக்னல்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. ஆம்புலன்சில் உள்ள நோயாளிகளின் உயிருக்கு மதிப்பளித்து, மனிதாபிமான அடிப்படையில், இந்த பணிகளை செய்கிறோம். இதை தனியார் ஆம்புலன்ஸ்கள் தவறாக பயன்படுத்துகின்றன. நோயாளிகள் இல்லாத வாகனங்களை, சோதனை செய்யவும், அவர்கள் நோயாளிகள் இல்லாமல் சைரன் ஒலி எழுப்பி சென்றால், அவற்றை பறிமுதல் செய்யவும், மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
தினகரன் டூ பழனிசாமி : தாவும் தளவாய் சுந்தரம்

பதிவு செய்த நாள்28ஆக
2017
20:18




தினகரனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அணி மாற தயாராகிறார். அ.தி.மு.க., அமைப்பு செயலர்களில் ஒருவர், தளவாய் சுந்தரம். 2001 சட்டசபை தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் வென்று அமைச்சரானார்.
கடந்த, 2006ல், தோல்வி அடைந்தார். 2011ல், 'சீட்' கிடைக்கவில்லை. 2016 தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், சசிகலா உதவியால், அமைப்பு செயலர் பதவி கிடைத்தது.

சமரசம் : ஜெயலலிதா மறைவுக்கு பின், நாஞ்சில் சம்பத், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த போது, சசிகலாவை சந்திக்க வைத்து, சமரசம் செய்து வைத்தார். 

முதல்வராக பழனிசாமி பதவியேற்ற பின், தினகரன் சிபாரிசில், தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். தற்போது, தினகரன்- - தளவாய் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. பழனிசாமி - பன்னீர் இணைப்புக்கு பின், தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை கவர்னரிடம் அழைத்துச் செல்லும்படி, தளவாய் சுந்தரத்திடம் தினகரன் கூறியுள்ளார்.
'அரசு பதவியில் இருந்து, அவ்வாறு செய்ய முடியாது' என, தளவாய் சுந்தரம் மறுத்த நிலையில், 'நாங்கள் தந்த பதவி தானே; ராஜினாமா செய்து விடுங்கள்' என, தினகரன் தரப்பு ஆவேசம் காட்டிஉள்ளது.

மகள் திருமணம் : இதனால், ராஜினாமா கடிதத்துடன், முதல்வர் பழனிசாமியை சந்தித்துள்ளார். கடிதத்தை வாங்க மறுத்த முதல்வர், 'மகளின் திருமண வேலையை பாருங்கள். பின், பார்த்துக் கொள்ளலாம்' என, திருப்பி அனுப்பி உள்ளார். செப்., 8-ல், திருச்சியில் திருமணமும், செப்., 10ல், சென்னையில் வரவேற்பும் நடக்கிறது. 'இவை முடிந்த பின், அணி மாறுவார்' என, தளவாயின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -
சேலம் லாரி அதிபரின் வீட்டில் 20 சவரன், ரூ.6 லட்சம் கொள்ளை

பதிவு செய்த நாள்28ஆக
2017
20:54

சேலம்: லாரி அதிபர் வீட்டில், 20 சவரன் நகை, 6 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் மூடி மறைக்க முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம், அரிசிபாளையத்தைச் சேர்ந்தவர், சம்பத், 59; லாரி உரிமையாளர். மனைவியுடன், திருப்பதி சென்றவர், நேற்று காலை, சேலம் திரும்பினார்.
அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 20 சவரன் நகை, 6 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரிந்தது. பள்ளப்பட்டி போலீசாருக்கு, சம்பத் தகவல் கொடுத்தார். 

போலீசார், வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர். பின், 'கொள்ளை குறித்து, பத்திரிகைகளுக்கு தெரிவிக்க வேண்டாம்; பொருட்களை மீட்டு தருகிறோம்' என, உறுதி அளித்தனர்.

இதை நம்பி, பத்திரிகைகளுக்கு கொள்ளை குறித்த தகவல் தெரிவித்திருந்த சம்பத்தின் உறவினர்கள், பின், 'கொள்ளை நடக்கவில்லை' என, தெரிவித்தனர். ஆனால், கொள்ளை நடக்காத வீட்டில், பல மணி நேரம், போலீசார் சோதனையிட்டனர்.

கடந்த, 26ம் தேதி, அம்மாபேட்டை, நகைக்கடை கொள்ளை சம்பவத்தில், இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. 

இரண்டு நாளில், அடுத்த கொள்ளை நடந்துள்ளதால், அதை மறைக்க போலீசார் முயற்சிப்பதாக கூறப்படுகிறது
லண்டனில் இறந்தவர்கள் உடலை காஞ்சி கொண்டு வர வேண்டுகோள்

பதிவு செய்த நாள்28ஆக
2017
22:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், பன்னீர்செல்வம், 61, அவரது மனைவி, வள்ளி, 58, தங்கை தமிழ்மணி, 50, மைத்துனர் அறச்செல்வம், 59, ஆகியோர், கடந்த வாரம் லண்டன் சென்றனர். அங்கு, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும், பன்னீர் செல்வம் - வள்ளி தம்பதியின் மகன், மனோரஞ்சிதத்தை பார்க்க அனைவரும் சென்றுள்ளனர். இவர்களுடன், தமிழகத்தைச் சேர்ந்த, மேலும் நான்கு பேர் சென்றுள்ளனர்.

கடந்த, 26ல், காரில் சென்ற போது, கார் மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில், பன்னீர்செல்வம், தமிழ்மணி, அறச்செல்வம் உட்பட ஏழு பேர் பலியாகினர்.

இந்நிலையில், பன்னீர் செல்வம் தம்பி சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம், நேற்று மனு அளித்தார். அதில், 'என் சகோதரர், தங்கை, மைத்துனர் ஆகிய மூவரும், லண்டன் விபத்தில் பலியாகி விட்டனர். அவர்கள் உடல்களை, காஞ்சிபுரம் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்' என, குறிப்பிட்டு உள்ளார்.
எம்.எஸ்சி., நர்சிங் படிக்க வாய்ப்பு

பதிவு செய்த நாள்28ஆக
2017
19:19

சென்னை: எம்.எஸ்சி., நர்சிங் போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, செப்., 8க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், எம்.எஸ்சி., நர்சிங் மற்றும் எம்.எஸ்சி., மாலிகுலர் வைராலஜி படிப்புகளுக்கான, விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது. விண்ணப்பங்களை, www.tnhealth.org / www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில், செப்., 7 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், செப்., 8ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு வந்து சேர வேண்டும். மாணவர் சேர்க்கை, செப்., மாத இறுதியில் நடைபெறும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

புதிய 200 , 50 ரூபாய் நோட்டுகள் : வரிசையில் நின்று வாங்கிய மக்கள்
பதிவு செய்த நாள்28ஆக
2017
19:14


புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட, 200 மற்றும், 50 ரூபாய் நோட்டுகளை, சென்னை, ரிசர்வ் வங்கியில், நேற்று நீண்ட நேரம் காத்திருந்து, பொது மக்கள் வாங்கி சென்றனர்.

புதிய, 50 ரூபாய் நோட்டு, கடந்த வாரம் புழக்கத்திற்கு வந்தது. அதேபோல், முதல் முறையாக, இந்திய ரிசர்வ் வங்கி, 200 ரூபாய் நோட்டை, 24ம் தேதி அறிமுகம் செய்தது. இதுவரை, 200 ரூபாய் நோட்டை, பார்த்ததே இல்லை என்பதால், அதை வாங்க மக்களிடையே ஆர்வம் ஏற்பட்டது.
அதேபோல, 50 ரூபாய் நோட்டும், பச்சை நிறத்தில் வித்தியாசமாக இருந்ததால், அதற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆக., 25, 26ம் தேதிகள், வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், அந்நோட்டுகள் கிடைக்கவில்லை. புதிய நோட்டுகள், வங்கிகளுக்கு இன்னும் முழுமையாக சென்று சேரவில்லை. அதனால், சென்னை, பாரிமுனையில் உள்ள, ரிசர்வ் வங்கி அலுவலகம் திறப்பதற்கு முன், நேற்று காலை, 9:00 மணியில் இருந்து, பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும், புதிய நோட்டுகள் வழங்கப்பட்டன.

புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிய, தேனாம்பேட்டையை சேர்ந்த வியாபாரி ரமேஷ் கூறியதாவது: நான், 10 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தேன். 5,000 ரூபாய்க்கு, புதிய 200 ரூபாய்; 5,000 ரூபாய்க்கு, புதிய, 50 ரூபாய் நோட்டுகளை வாங்கியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

NEWS TODAY 11.07.2026