Wednesday, August 30, 2017

இலவச, 'லேப் - டாப்' திட்டம்.  தமிழகத்தில் மீண்டும் துவக்கம்
தமிழகத்தில், நிறுத்தப்பட்டிருந்த இலவச, 'லேப் - டாப்' வழங்கும் திட்டம், மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் , பயிலும், மாணவ மாணவியருக்கு, இலவசமாக 'லேப் -- டாப்' வழங்கப்படுகிறது. 2016 வரை, 40 லட்சம், 'லேப் - டாப்'கள் வழங்கப்பட்டன. கடந்த, 2016ல், இந்த வினியோகம்,திடீரென நிறுத்தப்பட்ட தால், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட, மாணவ மாணவியர் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, இந்த பணி மீண்டும் துவக்கப்பட்டுஉள்ளது.

இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: டெண்டரில் பங்கேற்ற நிறுவனம் ஒன்று, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் ததால், 2016ல், மாணவ மாணவியருக்கு, 'லேப் - டாப்' வழங்க முடியாமல் போனது. தற்போது, அந்த வழக்கு முடிந்துவிட்டது. அதனால், 'லேப் - டாப்' வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு  வழங்குவதற்கான, 'லேப் - டாப்' விரைவில் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். -- நமது நிருபர் -
நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் மழையால் இன்று ரத்து

பதிவு செய்த நாள்29ஆக
2017
21:23

சென்னை: பலத்த மழையால், சென்னை சென்ட்ரல் - நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் ரயில், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பலத்த மழையால், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் ரயில் பாதைகளில், வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனால், சென்னை சென்ட்ரலில் இருந்து, மேற்கு வங்க மாநிலம், நியூ ஜல்பைகுரிக்கு, இன்று காலை, 11:00 மணிக்கு இயக்கப்பட வேண்டிய, எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
'குரூப் - 4' பதவி: செப்., 4ல் கவுன்சிலிங்

பதிவு செய்த நாள்29ஆக
2017
21:23

சென்னை: 'குரூப் - 4 தேர்வில், தட்டச்சர் பதவிக்கு, செப்., 4 முதல், கவுன்சிலிங் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரசு துறைகளில், குரூப் - ௪-ல் அடங்கிய, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, 2016 நவ., 6ல், எழுத்துத் தேர்வு நடந்தது. இதன் முடிவு, பிப்., 21ல் வெளியானது. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, செப்., 4 - 6 வரை, கவுன்சிலிங் நடத்தப்படும்.

செப்., 4ல், ஓணம் பண்டிகைக்காக, சென்னை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், திட்டமிட்டப்படி அன்று கவுன்சிலிங் நடக்கும். கவுன்சிலிங்குக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டு உள்ளது. கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'ஆதார் - பான்' இணைக்க நாளை கடைசி நாள்

பதிவு செய்த நாள்29ஆக
2017
21:15

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோர், 'ஆதார்' எண்ணை, 'பான் கார்டு' எண்ணுடன் இணைப்பதற்கான, அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. நடப்பு ஆண்டில், ஜூலை, 1 முதல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், 'பான்' எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. வருமான வரி இணையதளத்தில், அதற்கான வசதிகள் செய்யப்பட்டன. ஒரே நேரத்தில், ஏராளமானோர் இணைக்க முயன்றபோது, இணையதளம் முடங்கியது. அதனால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான, ஜூலை, 31க்குள், பலர் அதை செய்ய முடியவில்லை. 

அதைத் தொடர்ந்து, இரு எண்களையும் இணைப்பதற்கான அவகாசம், ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டது. அது, நாளையுடன் நிறைவடைகிறது. அதன்பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.

என்ன செய்யலாம்? : இதுவரை இணைக்காதோர், 'income taxindiaefiling.gov.in' என்ற இணையதளத்தில், 'linkaadhaar' என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், 'கிளிக்' செய்து, அதில் கூறப்பட்டுள்ள வகையில், இரு எண்களை இணைக்க முடியும்.
இதுபோல், மொபைல் போனில், UIDPAN என முதலில், 'டைப்' செய்து, சிறிது இடைவெளி விட்டு, ஆதார் எண், மீண்டும் இடை வெளிவிட்டு, பான் எண் ஆகியவற்றை, 'டைப்' செய்து, 567678 அல்லது, 56161 ஆகிய எண்களுக்கு அனுப்பினால், இணைக்க முடியும்.

- நமது நிருபர் -
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு : 50 லட்சம் பேருக்கு தாமதம்

பதிவு செய்த நாள்29ஆக
2017
21:12




ரேஷன் ஊழியர்கள் அலட்சியத்தால், 50 லட்சம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்குவது தாமதமாகி வருகிறது. தமிழகத்தில், 1.92 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. மத்திய அரசின், 'ஆதார்' எண் விபர அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்க, அரசு முடிவு செய்தது. 

அதன்படி, ஏப்ரல் முதல், காகித ரேஷன் கார்டுக்கு பதில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று வரை, 1.42 கோடி குடும்பங்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் வாங்கிய ஆதார் விபரங்களில், புகைப்படம் தெளிவாக இல்லாததுடன், பிழைகளும் இருந்தன. அந்த கார்டுகளின் விபரம், ரேஷன் கடைகளில் உள்ளது. 

கடை ஊழியர்கள், அந்த கார்டுதாரர்களை அழைத்து, சரியான விபரங்களை பெறுமாறு, உணவு துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், பல ஊழியர்கள், அந்த பணியை செய்யவில்லை. 

இதனால், 50 லட்சம் பேருக்கு, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து விபரங்களையும் சரியாக வழங்கி விட்டதால், கார்டு வந்து விடும் என, யாரும் காத்திருக்க வேண்டாம். ஸ்மார்ட் கார்டு கிடைக்காதவர்கள், தாங்கள் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும்; அங்கு, பிழை திருத்த பட்டியலில், தங்களின் பெயர் இருக்கிறதா என்பதை பார்த்து, சரியான விபரங்களை வழங்க வேண்டும். அங்கு பெயர் இல்லை என்றால், கடை ஊழியரிடம் முகவரி கேட்டு, உணவு வழங்கல் உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு, தன் கார்டின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். சரியான பதில் கிடைக்கவில்லை எனில், சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
எம்.பி.பி.எஸ்., சேர்க்கை தாமதம் : கூடுதல் வகுப்புகள் தேவையா?

பதிவு செய்த நாள்29ஆக
2017
20:39

கோவை: ''எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கூடுதல் வகுப்புகளை நடத்த தேவை இருக்காது,'' என, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ தெரிவித்தார்.

'நீட்' தேர்வு குழப்பத்தால், தமிழகத்தில் மருத்துவ சேர்க்கைக்கான, கலந்தாய்வு நடவடிக்கைகள் இந்தாண்டு தாமதமாகின. வழக்கமாக, மருத்துவ மாணவர்களுக்கு, ஆக., முதல் வாரத்தில், முதலாமாண்டு வகுப்புகள் துவங்கும். ஆனால், தற்போது வரை மாணவர் சேர்க்கை முடியவில்லை. இதனால், நடப்பாண்டில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதில் சிரமம் ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது: கலந்தாய்வு நடந்து, உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும். உச்ச நீதிமன்றம், 31க்குள் கவுன்சிலிங்கை முடித்து, செப்., 1 முதல் வகுப்புகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டில் முதலாம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு உடற்கூறியல், தலை மற்றும் கழுத்து, நரம்பு மண்டலம் ஆகிய பாடங்களுக்கு செய்முறை மற்றும், 'தியரி' வகுப்புகளுக்கு, 650 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோர்ட் உத்தரவால், வகுப்புகள், 4ம் தேதி முதல் துவங்கும். இதை ஒப்பிட்டு பார்க்கும்போது, கூடுதல் வகுப்புகளுக்கு தேவையிருக்காது. மாணவர்களுக்கான வகுப்புகளுக்கு போதுமான அளவு கால அவகாசம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ கவுன்சிலிங் செப்., 7 வரை நீட்டிப்பு

பதிவு செய்த நாள்29ஆக
2017
23:02

புதுடில்லி: தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வின் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தும் அவகாசத்தை செப்., 7 வரை நீட்டித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்காக, நீட் நுழைவுத் தேர்வுநடத்தப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இதில், தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், ஆக., 31 வரை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தன்னாட்சி அந்தஸ்து பல்கலைகளில், 5,500 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, இதுவரை எந்த கல்லுாரி அல்லது பல்கலையில் சேருவதற்கும் வாய்ப்பு கிடைக்காதவர்களை, தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கான கவுன்சிலிங் நடத்துவதற்கான காலக்கெடு, செப்., 7 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த கால நீட்டிப்பு, தன்னாட்சி பல்கலைகளுக்கு மட்டுமே; மற்றவர்களுக்கு கால நீட்டிப்பு கிடையாது.

தகுதியுள்ள மாணவர்களின் பட்டியலை, கவுன்சிலிங்கை நடத்தும் மருத்துவ சேவைகளுக்கான டைரக்டர் ஜெனரல் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அந்தத் தகவல்களை, தன்னாட்சி பல்கலைகளுக்கு, இ - மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

இதன் மூலம், இதுவரை கல்லுாரிகளில் சேருவதற்கு வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு, மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

NEWS TODAY 11.07.2026