Tuesday, September 5, 2017

நவோதயா பள்ளிகளில் படித்த 11,875 பேர், 'நீட்' தேர்வில் தகுதி
பதிவு செய்த நாள்04செப்
2017
23:51

மதுரை: 'நவோதயா பள்ளிகளில் படித்தவர்களில், 11 ஆயிரத்து 875 பேர், 'நீட்' தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்' என, மத்திய அரசுத் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.

குமரி மகாசபா செயலர் ஜெயகுமார் தாமஸ் தாக்கல் செய்த பொதுநல மனு: 

கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை மத்திய அரசு நடத்துகிறது. தமிழகத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே உள்ளன. ஜவஹர் நவோதயா வித்யாலயா என்பது உண்டு, உறைவிடப் பள்ளி. 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை கற்பிக்கப்படுகிறது. பிராந்திய மொழி, ஆங்கிலம், ஹிந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில், மாவட்டந்தோறும் ஜவஹர் நவோதயா பள்ளிகளை துவக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு ஜெயகுமார் தாமஸ் மனு செய்திருந்தார்.

தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 'தமிழ்நாடு தமிழ்வழி கற்பித்தல் - 2006 சட்டத்தின்படி, தமிழ், ஆங்கிலம் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது.

'நவோதயா பள்ளியானது பிராந்திய மொழி, ஆங்கிலம், ஹிந்தி மும்மொழிக் கொள்கையுடையது. தமிழுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்' என குறிப்பிட்டு இருந்தது.

மத்திய அரசின் பதில் மனுவில், 'நவோதயாவில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் கட்டாயப் பாடம். ஆங்கிலம், கணிதம் உட்பட இதர பாடங்கள் உள்ளன.

'பிளஸ் 1 முதல், பிளஸ் 2 வரை, தமிழ் கூடுதல் மொழி. நவோதயாவில் தங்குமிடம், உணவு, கட்டணம் இலவசம். கிராமப்புற மாணவர்களுக்கு, 75 சதவீதம் முன்னுரிமை உண்டு. தமிழக அரசு அனுமதித்தால், நவோதயா பள்ளி துவக்கத் தயார்' என, குறிப்பிட்டு இருந்தது.

நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.
தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கமளிக்கையில், 'இது மிக முக்கியமான, உணர்வுப்பூர்வ விவகாரம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், அரசிடம் விபரங்கள் பெற மேலும் அவகாசம் தேவை' என்றார். புதுச்சேரி ஜவஹர் நவோதயா வித்யாலயா முதல்வர், வெங்கடேஸ்வரன் ஆஜராகி, 'இந்தியா முழுவதும், 598 நவோதாயா பள்ளிகள் உள்ளன. இவற்றில் படித்தவர்களில், 14 ஆயிரத்து 183 பேர் மருத்துவப் படிப்பிற்கான, 'நீட்' தேர்வில் பங்கேற்றனர். 'இதில், 11 ஆயிரத்து 875 பேர், தகுதி பெற்றனர். 7,000 பேர் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்து விட்டனர்' என்றார். விவாதத்துக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இதை நவோதயா சமிதி சார்பில் எழுத்துப்பூர்வமாக, செப்., 11ல் தாக்கல் செய்ய வேண்டும்; தமிழக அரசுத் தரப்பில் விபரம் பெற்றுத் தெரிவிக்க வேண்டும்' என்றனர்.
நாளை முதல் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் : தடையை நீட்டிக்க ஐகோர்ட் மறுப்பு
பதிவு செய்த நாள்04செப்
2017
23:37

சென்னை: 'வாகன ஓட்டுனர்கள், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதை, ௫ம் தேதி வரை கட்டாயமாக்கக் கூடாது' என, தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவை நீட்டிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. அதனால், வாகன ஓட்டிகள், நாளை முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

'தமிழகத்தில், வாகன ஓட்டுனர்கள், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்து இருப்பது, செப்., ௧ முதல் கட்டாயமாகிறது' என, மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டது.

உத்தரவாதம் : 'அசல் உரிமம் வைத்திருக்கும்படி, ஓட்டுனர்களை வற்புறுத்தக் கூடாது' என, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர், சுகுமார் தாக்கல் செய்த மனு, நீதிபதி துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு, டிவிஷன் பெஞ்ச் முன் உள்ளதாகவும், இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதாகவும், அட்வகேட் ஜெனரல் கூறினார். அத்துடன், 'செப்., 4 வரை, அசல் உரிமம் உத்தரவை அமல்படுத்த மாட்டோம்' என்றும், நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தார்.
இதையடுத்து, 'செப்., 5 வரை, அசல் உரிமம் உத்தரவை அமல்படுத்தக் கூடாது' என, நீதிபதி துரைசாமி உத்தரவிட்டார். இதற்கிடையே, அரசின் உத்தரவை எதிர்த்து, 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த பொது நல வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது.
வழக்கு குறித்து, ராமசாமியின் வழக்கறிஞர் முறையிடவே, பிற்பகலில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண், வாதாடினார். 

அப்போது, லாரி உரிமை யாளர்கள் சம்மேளனம் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் கோவிந்தராமன், ''நாங்கள் தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை; ஏற்கனவே, அசல் உரிமம் தொடர்பாக, அட்வகேட் ஜெனரல், உத்தரவாதம் அளித்துள்ளார்,'' என்றார்.

என்ன பிரச்னை : தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ''அசல் உரிமம் வைத்திருப்பதில், உங்களுக்கு என்ன பிரச்னை உள்ளது; அதை வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க கோரியதை, 'முதல் பெஞ்ச்' ஏற்கவில்லை. மேலும், வழக்கை, ௮ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தது. இதனால், வாகன ஓட்டிகள், நாளை முதல், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

'ஸ்டிரைக்' அறிவிப்பு : தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர், முனிரத்னம் கூறியதாவது:ஓட்டுனர்கள், எந்நேரமும் அசல் உரிமம் வைத்திருப்பது சாத்தியமற்றது. இதனால், விபத்துகளை ஏற்படுத்தும் ஓட்டுனர்கள், தப்பி விடுவர். இந்த உத்தரவு, போலீஸ் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு, லஞ்சம் வாங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
வரும், 14ல், மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில், சேலத்தில், இந்த உத்தரவு குறித்து விவாதிக்கப்படுகிறது. அதன்பின், மாநிலம் முழுவதும், 'ஸ்டிரைக்' நடத்த உள்ளோம்; ஸ்டிரைக் தேதி, 14ல் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ கல்லூரி பூமி பூஜை கலெக்டர் பங்கேற்காமல் தவிர்ப்பு
பதிவு செய்த நாள்05செப்
2017
01:02

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி பூமி பூஜையில், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்காமல் தவிர்த்தனர்.

நீண்ட இழுபறிக்கு பின், கரூர், சணப்பிரட்டியில் மருத்துவ கல்லுாரி அமைக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று சணப்பிரட்டியில், பூமி பூஜை நடந்து. இதில், கலெக்டர் கோவிந்தராஜ் உட்பட, அரசு அதிகாரிகள் பங்கேற்கவில்லை. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று கரூரில் இருந்த போதும், அவரும் பூஜையில் பங்கேற்றவில்லை.

கரூர், எம்.பி.,யும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரையிடம் கேட்டபோது, “நகரின் மையப் பகுதியாக இருக்க வேண்டும் என்பதால், சணப்பிரட்டிக்கு இடம் மாற்றப்பட்டது. இதற்கு அரசு ஆணை வெளியிட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. அவசர வேலை காரண மாக, அமைச்சர் விஜயபாஸ்கர் சென்று விட்டார். ஒப்பந்ததாரர் மற்றும் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சி என்பதால், அதிகாரிகள் பங்கேற்கவில்லை,” என்றார்.
'ப்ளூ வேல்' கேள்விகளால் அதிர்ச்சி : 104 சேவை மைய அதிகாரிகள் திணறல்
பதிவு செய்த நாள்05செப்
2017
00:50

விபரீத விளைவுகளை ஏற்படுத்தும், 'ப்ளூவேல் கேம்' குறித்த ஆலோசனை வழங்கும், 104 இலவச சேவை மையத்துக்கு, தினமும் ஏராளமான கேள்விகளுடன் போன் அழைப்புகள் வருகின்றன. 'நான் ஏன் ப்ளூவேல் விளையாடக்கூடாது' என்பது போன்ற கேள்விகள், அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைக்கிறது.

ஆலோசனை : உயிரை குடிக்கும், 'ப்ளூவேல் வீடியோ கேம்' தொடர்பாக, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக சுகாதாரத் துறை, '104' என்ற இலவச போன் எண் மூலம் பயன்பெறும் வகையில், ஆலோசனை வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளது. 'ப்ளூவேல்' தொடர்பான சேவை துவங்கியதும், தினமும் ஏராளமான கேள்விகள், சேவை மையத்துக்கு வருகின்றன. குறிப்பாக, 'இந்த விளையாட்டை ஏன் விளையாடக்கூடாது; இதனால் என்ன பாதிப்பு வந்து விடப் போகிறது' என்ற ரீதியில், பலரும் கேள்விகளை துளைத்தெடுக்க, மனநல ஆலோசனை வழங்கும் அதிகாரிகள், திணறிப் போயுள்ளனர்.

ஆர்வம் மிகுதி : இது குறித்து, 104 சேவை மையத்தின் நிர்வாக மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:

எதிர்முனையில் பேசுபவரின் மனநிலையை கண்டறிய, அழைப்புகளை, மூன்று விதமாக பிரிந்து வைக்கிறோம். ஏற்கனவே, ப்ளூவேல் விளையாடி, மீண்டு, வெளியே வர நினைப்பவர்; 'ப்ளூவேல்' விளையாடுபவர், அல்லது அவரது கையில் உள்ள குறியீட்டை பார்த்து, ஆலோசனை மையத்துக்கு தகவல் தெரிவிப்பவர். இதுமட்டுமின்றி, 'நான் ஏன் ப்ளூவேல் விளையாடக்கூடாது' என,ஆர்வ மிகுதியில் கேள்வி கேட்பவர் என, வகைப்படுத்தி வைக்கிறோம்.

இதில், 70 சதவீத அழைப்புகள், 'ப்ளூவேல் விளையாடினால் என்ன தவறு' என்ற ரீதியில் கேட்கப்படுகின்றன. இவ்வாறு கேட்பவர்களிடம், 'ப்ளூவேல்' விளையாட்டால் ஏற்படும் விபரீதங்களை விளக்கி, அந்த விளையாட்டு மீதான அவர்களின் ஆர்வத்தை திசை திருப்பி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
நாளைக்குள் முடிவு; இல்லையேல், 'ஸ்டிரைக்'

பதிவு செய்த நாள்05செப்
2017
00:03

'நாளைக்குள் அரசிடமிருந்து சாதகமான பதில் வராவிட்டால், வரும், ௭ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்' என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, எட்டாவது ஊதிய மாற்றத்தை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ, பல கட்ட போராட்டங்களை அறிவித்தது. ஜூலை, 18ல், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆக., 5ல், சென்னையில், கோட்டையை நோக்கி பேரணி, 22ல், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக, வரும், 7ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், நேற்று பகல், 12:30 மணிக்கு, சென்னை, தலைமை செயலகத்தில், ஜாக்டோ - ஜியோ அமைப்புடன், அரசு தரப்பில், பேச்சு நடத்தப்பட்டது. இதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், உதயகுமார், நிதித்துறை செயலர் சண்முகம் பங்கேற்றனர். ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், இளங்கோ தலைமையில், கூட்டமைப்பு நிர்வாகிகள், 35 பேர் பங்கேற்றனர். மாலை, 3:30 மணிக்கு, பேச்சு நிறைவடைந்தது. பேச்சு விபரத்தை, முதல்வரிடம் தெரிவிக்க உள்ளதாக, அமைச்சர்கள் கூறினர். ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளோ, 'நாளைக்குள் சாதகமான முடிவு வராவிட்டால், வரும், 7ம் தேதி முதல், திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கும்' என, அறிவித்துள்ளனர்.

போராட்டத்தை கைவிட முதல்வர் வேண்டுகோள்

முதல்வர் பழனிசாமி, நேற்று விடுத்த அறிக்கை: ஜாக்டோ - ஜியோ பிரதிநிதிகளோடு, அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை, நவம்பர், இறுதிக்குள் கிடைக்கும். அதன்படி, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். ஊதிய விகிதத்தை திருத்தி அமைத்தல், இடைக்கால நிவாரணம் வழங்குதல், முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை, இதற்கென அமைக்கப்பட்ட, ஊதியக்குழு பரிசீலித்து வருகிறது. அந்தக் குழு, இம்மாத இறுதிக்குள் அறிக்கையை சமர்பிக்கும். அதன் மீது, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அவசியம் ஏற்பட்டால், இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பு, உரிய நேரத்தில் வெளியிடப்படும். பொதுமக்கள் நலன் கருதி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு, காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு, தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
பெற்றோருக்கு புளூவேல் விழிப்புணர்வு: போலீசார் முடிவு

பதிவு செய்த நாள்05செப்
2017
01:26

திண்டுக்கல்: மதுரை, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த இளைஞர் 'புளூவேல்' இணைய விளையாட்டில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பள்ளிகளில் உள்ள பெற்றோர்-, ஆசிரியர் கழகம் மூலம் பெற்றோரை போலீசார் வரவழைப்பர். பின்னர் குழந்தைகளை கணினி, அலைபேசி விளையாட்டுகளில் ஈடுபட அனுமதிக்க கூடாது. அவர்களை தனிமையில் அமர வைக்காமல், முடிந்தவரை நண்பர்களுடன் தெருக்களில் விளையாட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை பெற்றோருக்கு போலீசார் வழங்குவர். திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் கூறியதாவது: 'புளூவேல்' விளையாட்டின் விபரீதம் குறித்து மாணவர்களை விட, அவர்களின் பெற்றோரிடம் கூறினால்தான் தீர்வு காண முடியும். போலீசாரின் தற்போதைய நடவடிக்கையால், புரோசிங் மையங்களில் இருந்து இந்த விளையாட்டை டவுன்லோடு செய்ய முடியாது என்றார்.
மருத்துவ பல்கலையில் நாளை பட்டமளிப்பு விழா
பதிவு செய்த நாள்04செப்
2017
23:52

சென்னை: தமிழ்நாடு, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 29வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில், நாளை நடைபெற உள்ளது. காலை, 11:00 மணிக்கு நடைபெறும் விழாவிற்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ் தலைமை தாங்குகிறார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக தலைமை இயக்குனர், சவுமியா சாமிநாதன் உட்பட, பலர் பங்கேற்கின்றனர். விழாவில், 2,925 மாணவ மாணவியருக்கு, நேரடியாக பட்டம் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள, 16 ஆயிரத்து, 270 மாணவ மாணவியருக்கு, கல்லுாரிகள் வாயிலாக பட்டம் தரப்படும். அதிக மதிப்பெண்கள் பெற்ற, 139 மாணவ மாணவியருக்கு, 166 தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை, கவர்னர் வழங்கி சிறப்பிக்க உள்ளார். துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் பல்கலை நிர்வாகிகள், விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.



NEWS TODAY 13.07.2026