Wednesday, September 6, 2017

'ப்ளு வேல்' பற்றி எஸ்.எம்.எஸ்., : தமிழக அரசு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்05செப்
2017
23:41

சென்னை: 'ப்ளு வேல் விளையாட்டு குறித்து, எஸ்.எம்.எஸ்., அனுப்புவோர், சட்டப்படி தண்டிக்கப்படுவர்' என, அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 'நீலத் திமிங்கல சவால்' என, அழைக்கப்படும், ஆன் - லைன் விளையாட்டு, 'ப்ளு வேல்' என்ற பெயரில், இணையதளத்தில் பரவி வருகிறது. இதை விளையாடுவோர், சவால்கள் என்ற பெயரில் துாண்டி விடப்பட்டு, தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 'ஓர் அமைதியான இல்லம்; ஒரு திமிங்கலக்கடல்; அதிகாலை, 4:20 மணிக்கு என்னை எழுப்பு' என, பல்வேறு பெயர்களில், இவ்விளையாட்டு புழக்கத்தில் உள்ளது. இவற்றை பெரும்பாலும், 'ஸ்மார்ட் போன்' அல்லது அதுபோன்ற சாதனங்களை பயன்படுத்தியே விளையாட முடியும். 'இவற்றால், 12 வயது முதல், 19 வயதிற்குட்பட்டோர் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர். 'இதை விளையாடுவோர் தனிமையை விரும்புவர்; குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுவதை நிறுத்துவர்; வீட்டில் இருந்து வெளியே ஓடிவிடுவது குறித்தும், மரணம் குறித்தும் அதிகம் விவாதிப்பவர்களாக இருப்பர்' என, மனோ தத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

உணவு சாப்பிடும் முறையிலும், துாங்கும் பழக்கத்திலும், மாறுபாடுகள் தென்படும். எனவே, பெற்றோரும், ஆசிரியர்களும், சிறுவர்கள் நடத்தையை கூர்ந்து கவனிக்க வேண்டும். இவ்விளையாட்டுக்களை சிறுவர்கள் விளையாடுவது தெரிந்தால், அவர்கள், இணையதளம் மற்றும் மொபைல் போன்ற சாதனங்களை பயன்படுத்தாமல், தடுக்க வேண்டும்.உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனை அல்லது அலுவல் சாரா அமைப்புகள் மூலம், உளவியல் ரீதியாக அறிவுரைகள் வழங்க வேண்டும். 'ப்ளூ வேல்' விளையாட்டு தொடர்பான, நேரடி இணைப்புகளை, வேறு பிற நேரலை இணைப்புகளுக்கு, அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

இந்திய சட்டப்படி, இவ்விளையாட்டு வழியே பிறரை தற்கொலைக்கு துாண்டுவது, சட்டத்திற்கு புறம்பான செயல். தண்டனைக்குரிய குற்றம். நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாமல், இவ்விளையாட்டு குறித்து கலந்தாலோசிக்கும் வகையில், எஸ்.எம்.எஸ்., எதையும் பிறருக்கு அனுப்பினால், சட்டப்படி தண்டிக்கப்படுவர்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர், ஊழியர்கள் நாளை முதல், 'ஸ்டிரைக்' : பள்ளிகள், அலுவலகங்கள் முடங்கும் அபாயம்

பதிவு செய்த நாள்05செப்
2017
22:48

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்க உள்ளது. இதனால், ௩௦ ஆயிரம் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், ௭௩ சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பை உருவாக்கி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. 

நாளை முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை கைவிடக்கோரி, தமிழக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சில், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், அறிவித்தபடி போராட்டம் துவங்குவது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து, ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலருமான, பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்ற, தமிழகத்திற்கு மட்டும் சாதகமான நிலை உள்ளது. ஏனென்றால், தமிழகம் மட்டுமே, இந்த திட்டத்தில் வசூலித்த பங்களிப்பு நிதியை, இன்னும் மத்திய அரசிடம் செலுத்தவில்லை. அதனால், எப்போது வேண்டுமானாலும், தமிழக அரசு சுதந்திரமான முடிவு எடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தலாம்.

இதற்காக, இரண்டு முறை நிபுணர் குழு அமைத்தும், இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் கருத்து கேட்ட பிறகும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பரிந்துரை செய்யாமல், நிபுணர் குழு தாமதம் செய்கிறது. 

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வை அறிவிப்பதில் தாமதம் செய்யக்கூடாது. ஊதிய உயர்வு அமலாகும் தேதியை, அரசு அறிவிக்க வேண்டும். அதுவரை, போராட்டத்தை வாபஸ் பெற வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.ஆசிரியர்களின் போராட்டத்தால், நாளை முதல், 30 ஆயிரம் அரசு பள்ளிகளில் வகுப்புகள் நடத்தாமல், ௭௫ லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் குதிப்பதால், வருவாய் துறை உட்பட அரசுத்துறை அலுவலகங்களில், நிர்வாக பணிகள் மொத்தமாக முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி இன்று பேச்சு : அரசியல் ரீதியாக, தமிழக அரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ள நிலையில், ஜாக்டோ - ஜியோ போராட்டம் மேலும், நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதை சமாளிக்கும் வகையில், கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த, முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார்.இதற்காக, ஈரோட்டில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழுவினரை சந்தித்து பேச, அழைப்பு விடுத்துள்ளார். கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினர், ஈரோடு சென்று இன்று காலை, 10 மணிக்கு, முதல்வரை சந்தித்து பேசுகின்றனர். இதில், உடன்பாடு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

9ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளா


பதிவு செய்த நாள்05செப்
2017
22:01

சென்னை: வேலுார் மக்களுக்காக, சிறப்பு பாஸ்போர்ட் மேளா, வரும், 9ம் தேதி நடத்தப்படுகிறது.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலுாரில் உள்ள, அஞ்சலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா, வரும், 9ல், சிறப்பு பாஸ்போர்ட் மேளாவை நடத்த உள்ளது. இதில், பங்கேற்க விரும்புவோர், www.passportindia.gov.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்து, விண்ணப்ப பதிவு எண் பெற வேண்டும். ஆன் - லைனிலேயே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, சந்திப்பு முன்பதிவு நேரத்தை பெற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராகிங்' புகார் பெட்டி: கல்லூரிகளில் கட்டாயம்
பதிவு செய்த நாள்06செப்
2017
03:40




'ராகிங்கை தடுக்க, அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், புகார் பெட்டி வைக்க வேண்டும்' என, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜினியரிங், மருத்துவம், ஆர்க்கிடெக்ட் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை முழுமையாக முடிந்துள்ளது. நேற்று முதல், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கி உள்ளன.

இந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும், 'ராகிங்' பிரச்னைகள் ஏற்படும் என்பதால், மாணவர்களுக்குள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

'ராகிங்' தடுப்பு நடவடிக்கையில், முக்கிய அம்சமாக, அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், புகார் பெட்டியும், முதல்வர் மற்றும் துணைவேந்தர் அலுவலகம் முன், 'ராகிங்' புகார் புத்தகமும் கட்டாயம் வைக்க வேண்டும் என, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது. இதற்காக, கல்லுாரி முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கூட்டத்தை, மாவட்ட கலெக்டர்களும், போலீசாரும் நடத்தி, உரிய மேல் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

விண்ணப்பிக்காதவர்களும் பி.டி.எஸ்., படிக்க வாய்ப்பு

பதிவு செய்த நாள்06செப்
2017
01:54




சென்னை: சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்களும், இன்று நேரடியாக கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பு: சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளின், நிர்வாக ஒதுக்கீட்டில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 681 இடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து, இடம் கிடைக்காத, 'நீட்' தேர்வில் தகுதி பெற்றுள்ள மாணவர்கள், இன்று நடைபெறும் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

மேலும், மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்காதவர்களும் பங்கேற்கலாம். அவர்கள், இன்று பிற்பகல், 2:00 மணிக்குள், சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் நடைபெறும் கவுன்சிலிங் வளாகத்துக்கு, அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியால் பஞ்சாப் முதல்வரின் சம்பளம் நிறுத்தம்

பதிவு செய்த நாள்06செப்
2017
04:16




சண்டிகர்: கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு இம்மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது.

கஜானா காலி :

பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர், அமரிந்தர் சிங் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலம் முழுவதும், அரசு அலுவலகங்களில், 4.50 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, இம்மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை நிறுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

சம்பளம் ‛கட்':

மாநில நிதி அமைச்சர், மன்பிரீத் பாதல் கூறியதாவது: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும், ஜி.எஸ்.டி., அமலாக்கத்திற்குப் பின், வசூலான வரிப் பணம், மாநில கஜானாவுக்கு இன்னும் வந்து சேரவில்லை. இதனால், மாநிலத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், இம்மாதம், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் இன்னும் ஒரு வாரத்தில், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும். பின், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் பரவலாக மழை

பதிவு செய்த நாள்
செப் 05,2017 19:38



தேனி: தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது.தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்துவரும் நாட்களில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் அல்லிநகரம், பெரியகுளம், லட்சுமிபுரம் , வடுகபட்டி உட்பட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்கிறது.

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சுற்றி உள்ள கள்ளிமந்தையம், சத்திரப்பட்டி பகுதிகளில் மழை பெய்தது.

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டம் மோகனுாரில், காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், 20க்கும் மேற்பட்ட கிராமத்தில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. பரமத்தி வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்கிறது.

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்கிறது.

துாத்துக்குடி மாவட்டம்

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், பேச்சிப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் மழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி , நடுகுப்பம் தெளச்ளார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு, கனகமாசத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது.

NEWS TODAY 27.07.2026