Wednesday, September 6, 2017

ஒரிஜினல் லைசென்ஸ் இன்று முதல் கட்டாயம்
பதிவு செய்த நாள்05செப்
2017
23:57


'சட்டைப்பையில், ஏ.டி.எம்., கார்டு வைத்திருப்பது போல, அசல் ஓட்டுனர் உரிமத்தையும் வைத்திருந்தால், மூன்று மாத சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்' என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'வாகன ஓட்டுனர்கள், செப்., 1 முதல், அசல் ஓட்டுனர் உரிமத்துடன் செல்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது' என, மாநில போக்குவரத்து துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதை எதிர்த்து, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி உள்ளிட்டோர், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தள்ளி வைப்பு : வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, 'அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதில், என்ன பிரச்னை உள்ளது; அதை வைத்திருக்க வேண்டும்' எனக்கூறி, 8ம் தேதிக்கு, விசாரணையை தள்ளி வைத்தது.

நீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடு முடிந்ததால், இன்று முதல், வாகன ஓட்டுனர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்துடன் செல்வது கட்டாயமாகி உள்ளது. அதனால், அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோர், மூன்று மாத சிறை தண்டனை மற்றும், 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தப்பலாம்

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'சட்டைப்பையில், ஏ.டி.எம்., கார்டு வைத்திருப்பது போல, அசல் ஓட்டுனர் உரிமத்தையும் வைத்திருந்தால், மூன்று மாத சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்' என்றனர்.

- நமது நிருபர் -

பித்ருக்களின் ஆசி கிடைக்கும் : மகாளய பட்சம் இன்று துவக்கம்

பதிவு செய்த நாள்05செப்
2017
23:49




முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி கிடைக்க உகந்த காலமான, மகாளய பட்சம் இன்று துவங்குகிறது. மகாளய பட்சம் என்பது, முன்னோர்கள் வழிபாட்டிற்கு உகந்த காலமாக கருதப்படுகிறது. மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம், அமாவாசை திதி கொடுக்க மறந்தவர்கள், மகாளய பட்சத்தில் திதி கொடுப்பதால், 12 மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதுகுறித்து, காஞ்சி சங்கரமட ஆஸ்தான வித்வான், சுந்தரராம வாஜ்பாய் கூறியதாவது:புரட்டாசி மாதத்தில் வரும், மகாளய அமாவாசை, முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய, 15 நாட்களும் மகாளய பட்ச காலம். இந்த புண்ணிய தினங்களில், பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்தது. 

மகாளய பட்ச காலத்தில், நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில், தர்ப்பணம் செய்வதும் அவசியம்.மற்ற அமாவாசையில், நம் உறவினர்கள், 12 பேருக்கு மட்டுமே தர்ப்பணம் செய்கிறோம். இந்த மகாளய பட்சத்தில்தான் அனைத்து உறவினருக்கும் தர்ப்பணம் செய்யப்படுகிறது. மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரம், மஹாபரணி என்றும், அஷ்டமி திதி, மத்பாஷ்டமி என்றும், திரயோதசி, கஜச்சாயை என்றும் அழைக்கப்படுகிறது.

கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற, தெய்வீக நுால்களில், மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. மகாளய கால நாட்களில், நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே, பிதுர் லோகத்தில் இருந்து, அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகம் வருவதாக நம்பப்படுகிறது.மகாளய பட்சம் இன்று துவங்குகிறது. இதில், வரும், 10ம் தேதி மகா பரணி; ௧3ம் தேதி, மத்தியாஷ்டமி; 19ம் தேதி மகாளய அமாவாசையும் தர்ப்பணம் செய்ய விசேஷ நாட்கள். மகாளய பட்சம் துவங்கும் நாள், யசூர்வேதிகளுக்கு ஆவணி அவிட்டம் வருகிறது. எனவே, முதலில் ஆவணி அவிட்டத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக தர்ப்பணம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
'ப்ளு வேல்' பற்றி எஸ்.எம்.எஸ்., : தமிழக அரசு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்05செப்
2017
23:41

சென்னை: 'ப்ளு வேல் விளையாட்டு குறித்து, எஸ்.எம்.எஸ்., அனுப்புவோர், சட்டப்படி தண்டிக்கப்படுவர்' என, அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 'நீலத் திமிங்கல சவால்' என, அழைக்கப்படும், ஆன் - லைன் விளையாட்டு, 'ப்ளு வேல்' என்ற பெயரில், இணையதளத்தில் பரவி வருகிறது. இதை விளையாடுவோர், சவால்கள் என்ற பெயரில் துாண்டி விடப்பட்டு, தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 'ஓர் அமைதியான இல்லம்; ஒரு திமிங்கலக்கடல்; அதிகாலை, 4:20 மணிக்கு என்னை எழுப்பு' என, பல்வேறு பெயர்களில், இவ்விளையாட்டு புழக்கத்தில் உள்ளது. இவற்றை பெரும்பாலும், 'ஸ்மார்ட் போன்' அல்லது அதுபோன்ற சாதனங்களை பயன்படுத்தியே விளையாட முடியும். 'இவற்றால், 12 வயது முதல், 19 வயதிற்குட்பட்டோர் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர். 'இதை விளையாடுவோர் தனிமையை விரும்புவர்; குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுவதை நிறுத்துவர்; வீட்டில் இருந்து வெளியே ஓடிவிடுவது குறித்தும், மரணம் குறித்தும் அதிகம் விவாதிப்பவர்களாக இருப்பர்' என, மனோ தத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

உணவு சாப்பிடும் முறையிலும், துாங்கும் பழக்கத்திலும், மாறுபாடுகள் தென்படும். எனவே, பெற்றோரும், ஆசிரியர்களும், சிறுவர்கள் நடத்தையை கூர்ந்து கவனிக்க வேண்டும். இவ்விளையாட்டுக்களை சிறுவர்கள் விளையாடுவது தெரிந்தால், அவர்கள், இணையதளம் மற்றும் மொபைல் போன்ற சாதனங்களை பயன்படுத்தாமல், தடுக்க வேண்டும்.உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனை அல்லது அலுவல் சாரா அமைப்புகள் மூலம், உளவியல் ரீதியாக அறிவுரைகள் வழங்க வேண்டும். 'ப்ளூ வேல்' விளையாட்டு தொடர்பான, நேரடி இணைப்புகளை, வேறு பிற நேரலை இணைப்புகளுக்கு, அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

இந்திய சட்டப்படி, இவ்விளையாட்டு வழியே பிறரை தற்கொலைக்கு துாண்டுவது, சட்டத்திற்கு புறம்பான செயல். தண்டனைக்குரிய குற்றம். நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாமல், இவ்விளையாட்டு குறித்து கலந்தாலோசிக்கும் வகையில், எஸ்.எம்.எஸ்., எதையும் பிறருக்கு அனுப்பினால், சட்டப்படி தண்டிக்கப்படுவர்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர், ஊழியர்கள் நாளை முதல், 'ஸ்டிரைக்' : பள்ளிகள், அலுவலகங்கள் முடங்கும் அபாயம்

பதிவு செய்த நாள்05செப்
2017
22:48

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்க உள்ளது. இதனால், ௩௦ ஆயிரம் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், ௭௩ சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பை உருவாக்கி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. 

நாளை முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை கைவிடக்கோரி, தமிழக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சில், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், அறிவித்தபடி போராட்டம் துவங்குவது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து, ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலருமான, பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்ற, தமிழகத்திற்கு மட்டும் சாதகமான நிலை உள்ளது. ஏனென்றால், தமிழகம் மட்டுமே, இந்த திட்டத்தில் வசூலித்த பங்களிப்பு நிதியை, இன்னும் மத்திய அரசிடம் செலுத்தவில்லை. அதனால், எப்போது வேண்டுமானாலும், தமிழக அரசு சுதந்திரமான முடிவு எடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தலாம்.

இதற்காக, இரண்டு முறை நிபுணர் குழு அமைத்தும், இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் கருத்து கேட்ட பிறகும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பரிந்துரை செய்யாமல், நிபுணர் குழு தாமதம் செய்கிறது. 

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வை அறிவிப்பதில் தாமதம் செய்யக்கூடாது. ஊதிய உயர்வு அமலாகும் தேதியை, அரசு அறிவிக்க வேண்டும். அதுவரை, போராட்டத்தை வாபஸ் பெற வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.ஆசிரியர்களின் போராட்டத்தால், நாளை முதல், 30 ஆயிரம் அரசு பள்ளிகளில் வகுப்புகள் நடத்தாமல், ௭௫ லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் குதிப்பதால், வருவாய் துறை உட்பட அரசுத்துறை அலுவலகங்களில், நிர்வாக பணிகள் மொத்தமாக முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி இன்று பேச்சு : அரசியல் ரீதியாக, தமிழக அரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ள நிலையில், ஜாக்டோ - ஜியோ போராட்டம் மேலும், நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதை சமாளிக்கும் வகையில், கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த, முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார்.இதற்காக, ஈரோட்டில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழுவினரை சந்தித்து பேச, அழைப்பு விடுத்துள்ளார். கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினர், ஈரோடு சென்று இன்று காலை, 10 மணிக்கு, முதல்வரை சந்தித்து பேசுகின்றனர். இதில், உடன்பாடு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

9ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளா


பதிவு செய்த நாள்05செப்
2017
22:01

சென்னை: வேலுார் மக்களுக்காக, சிறப்பு பாஸ்போர்ட் மேளா, வரும், 9ம் தேதி நடத்தப்படுகிறது.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலுாரில் உள்ள, அஞ்சலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா, வரும், 9ல், சிறப்பு பாஸ்போர்ட் மேளாவை நடத்த உள்ளது. இதில், பங்கேற்க விரும்புவோர், www.passportindia.gov.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்து, விண்ணப்ப பதிவு எண் பெற வேண்டும். ஆன் - லைனிலேயே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, சந்திப்பு முன்பதிவு நேரத்தை பெற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராகிங்' புகார் பெட்டி: கல்லூரிகளில் கட்டாயம்
பதிவு செய்த நாள்06செப்
2017
03:40




'ராகிங்கை தடுக்க, அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், புகார் பெட்டி வைக்க வேண்டும்' என, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜினியரிங், மருத்துவம், ஆர்க்கிடெக்ட் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை முழுமையாக முடிந்துள்ளது. நேற்று முதல், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கி உள்ளன.

இந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும், 'ராகிங்' பிரச்னைகள் ஏற்படும் என்பதால், மாணவர்களுக்குள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

'ராகிங்' தடுப்பு நடவடிக்கையில், முக்கிய அம்சமாக, அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், புகார் பெட்டியும், முதல்வர் மற்றும் துணைவேந்தர் அலுவலகம் முன், 'ராகிங்' புகார் புத்தகமும் கட்டாயம் வைக்க வேண்டும் என, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது. இதற்காக, கல்லுாரி முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கூட்டத்தை, மாவட்ட கலெக்டர்களும், போலீசாரும் நடத்தி, உரிய மேல் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

விண்ணப்பிக்காதவர்களும் பி.டி.எஸ்., படிக்க வாய்ப்பு

பதிவு செய்த நாள்06செப்
2017
01:54




சென்னை: சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்களும், இன்று நேரடியாக கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பு: சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளின், நிர்வாக ஒதுக்கீட்டில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 681 இடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து, இடம் கிடைக்காத, 'நீட்' தேர்வில் தகுதி பெற்றுள்ள மாணவர்கள், இன்று நடைபெறும் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

மேலும், மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்காதவர்களும் பங்கேற்கலாம். அவர்கள், இன்று பிற்பகல், 2:00 மணிக்குள், சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் நடைபெறும் கவுன்சிலிங் வளாகத்துக்கு, அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

NEWS TODAY 13.07.2026